Google   www kalachuvadu.com

மதிப்புரை

சுள்ளிக்காடும் செம்பொடையனும்
ஒரு இலையின் மரணம்

மஜீத்

1. சுள்ளிக்காடும் செம்பொடையனும்
(வடிவங்களை மீறிய கட்டுடைப்பு):
மஜீத்;
பக். 64;
ரூ. 40;
அடையாளம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் - 621310,
தமிழ்நாடு.

 

2. ஒரு இலையின் மரணம்
(கவிதைகள்):
மஜீத்;
பக். 46;
விலை குறிப்பிடப்படவில்லை;
பெருவெளி பதிப்பகம்,
107, மாவடி ஜங்சன்,
அக்கரைப்பற்று - 06,
சிறிலங்கா.

ராஜமார்த்தாண்டன்

தேசியம் என்பது மொழிவழிச் சமூகமா, மதவழிச் சமூகமா என்கிற பிரச்சினைக்குள் நுழையாமல், இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தினூடான சகோதரச் 'சிறு சமூக'த்தின் முரண்பாடுகளின் காரணிகள் எவையெனப் பார்த்தாலும் கூட அவை இங்குள்ள பெரும்பான்மைத் தமிழர்களும் தெளிவாக அறியாதவையே. தமிழீழப் பிரச்சினையும்கூட இங்குள்ள தமிழர்கள் பெரும்பாலோரும் போதிய அளவில் புரிந்துகொள்ளாத ஒன்றுதான் என்றும் சொல்லலாம். இவை குறித்தான புரிதல்களின் போதாமையினால் இன்றைய ஈழத் தமிழ்ப் படைப்புகளை முழுமையாக நம்மால் உள்வாங்கிக்கொள்ள இயலாத சூழ்நிலை இங்கு உள்ளது. இந்த இயலாமையை ஒப்புக்கொண்ட நிலையிலேயே மஜீத்தின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் - அவரது பார்வையில் பிரதிகள் - பற்றிய இந்த மதிப்பீடு.

மஜீத்தின் முதல் தொகுப்பின் 'ஏறுவெயில்' (1997) கவிதைகளுடன் மேலும் சில கவிதைகளடங்கிய 'வாழ்வின் மீதான எளிய பாடல்கள்' (2000) தொகுப்பின் மூலம் ஈழத்திலிருந்து மேலுமொரு காத்திரமான கவிதைக் குரலின் வெளிப்பாட்டை உணர்ந்துகொள்ள முடிந்தது (ந. பிச்சமூர்த்தி தொடங்கி இன்றுவரையிலான கவிஞர்களில் தேர்ந்தெடுத்த 93 கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளடங்கிய 'பெருந்தொகை'யான 'கொங்குதேர் வாழ்க்கை-2' இல் மஜீத்தின் நான஢கு கவிதைகள் சேர்க்கப்பட்டன என்பது ஒரு தகவலுக்காக இங்குக் கூறப்படுகிறது). அதைத் தொடர்ந்து மஜீத்தின் 'சுள்ளிக்காடும் செம்பொடையனும்', 'ஒரு இலையின் மரணம்' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. 'வடிவங்களை மீறிய கட்டுடைப்பு' என்ற முன்னறிவிப்புடன் 'சுள்ளிக்காடும் செம்பொடையனும்' வெளிவந்துள்ளபோதிலும், கவிதை வடிவத்தின் கட்டுடைப்பாகவே -கவிதை சார்ந்தவொரு 'மாற்றுப் படைப்பாகவே' - கொள்வதற்கான காரணங்கள் சில உண்டு.

கடந்த நூற்றாண்டின் முப்பதுகளில் ந. பிச்சமூர்த்தியின் சோதனை முயற்சியால் தமிழில் யாப்பை மீறிய புதிய கவிதை தோன்றியது. அதன் மறுமலர்ச்சிக் காலத்தில் - அறுபதுகளில் - இன்றைய எழுத்து நடையான வசனத்திலேயே புதுக்கவிதை எழுதப்பட வேண்டுமென்ற இயல்பான கோட்பாடு முக்கியத்துவம் பெற்றது. அதுவே பெருமளவில் இன்றும் தொடர்கிறது. 'சுள்ளிக்காடும் செம்பொடையனும்' பிரதியின் புற அமைப்பும் 'நவீன கவிதை + செறிவான வசன'க் கலவையில் இருப்பதனாலேயே நவீனக் கவிதையின் கட்டுடைப்பாகக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்தொகுப்பை அவருடைய 'கதை ஆண்டி'யுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்பார்வை வலுவடையவே செய்யும்.

முதலில் 'சுள்ளிக்காடும் செம்பொடையனும்' தொகுப்பைப் பார்க்கலாம். நெருக்கடியான சூழ்நிலைகளில் கவிஞர் எதிர்கொண்ட பிரச்சினைகள், நிகழ்வுகள் குறித்த சொல்லாடல்களை - நம்பிக்கைகள், நம்பிக்கை சிதறும் தருணங்கள், கடந்த கால நிகழ்வுகள் மீதான பரிசீலனைகள் - திட்டமிட்ட வடிவப் பிரக்ஞையோ கவித்துவப் பிரச்சினையோ குறுக்கிடாமல் அமைக்கிறார். அவ்வுணர்வுகளை, நினைவுகளை அத்தன்மையினவாகவே வெளிப்படுத்தும் புதிய கவிதை முயற்சி இது. அதே சமயம் அச்சொல்லாடல்களை வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையிலான சில குறிப்புகளும் இடையிடையே கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, 'நடுக் காட்டில் நின்று திசைகளில்லாதபோது' பிரதியில் வரும் ஒரு பகுதி:

'இங்கு வரும் காக்கிச்சட்டை பேரினவாத அரச இயந்திரத்தின் இலகுவான பொருளாகும் சாதாரண நிகழ்வுகளையே கலங்கச் செய்யும் சமிக்ஞை தனிப்பட்ட நபர்கள் அல்ல. நீயென்பது சிங்கள தமிழ் முஸ்லிம்களின் கடந்த, நிகழ்கால செயற்பாடுகளின் சித்தரிப்புகளேயன்றி வேறில்லை' என்னும் குறிப்புடன் பின்வரும் பகுதி தொடர்கிறது:

'காக்கிச் சட்டைகளுக்குள்ளிருந்த பார்வைகள்
இடைவெளிகளை நிறைக்க
வீரக்கைகளையும் கால்களையும்
சிலுப்பிஇணைத்து நீட்டி சவட்டிமிதித்து
தலைமுடியை சாய்த்து
துளிரும் அரும்புகளை நசுக்கி விரல்மடித்துப் போயின...' (ப. 41)

இவ்வாறு இத்தொகுதி முழுக்க முன்னும் பின்னுமாகச் சில தகவல் குறிப்புகளுடன் கவிஞரின் கருத்தாடல்கள் விரிவுகொள்கின்றன. தெருக்கூத்தில் முக்கியக் கதாபாத்திரங்கள் தோன்று முன் கட்டியக்காரன் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதை ஒத்தது இது. இவ்வுத்தி, கருத்தாடல்களுக்குள் நுழையும் வாசகர்களுக்குப் புரிதலை ஏற்படுத்துவதுடன், நாட்டார் மரபின் மீள் உருவாக்கம்போலவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'ஒரு செம்பொடையன் கழற்றியெறிந்த சட்டைகளின் மீதான இறுதிக் கட்டுடைப்பு' பகுதியில், 'மெல்லத் தடவிச் செல்லும் காற்றும், தொடுகையோடு உணர, இடவெளிகளை நிரப்பும் வன்மங்களோடும், வானமும் பூமியும் கிளறதக் குமுற தூர இடவெளிகள் ஆர்ப்பாட்டக் குரலெடுத்து உரக்க அதிர்வூட்டி தாழ்வாய்ப் பறக்கும் கண் சிவந்து, இறகுகள் முதிர்ந்த கழுகு இது. காலத்தைக் கனவாக்கிச் செல்கின்றன. கழுகு என்ற சொல் குறியீடாக குறிப்பிடுவதே இங்கு படைப்பாகிறது' (ப. 61) என்னும் குறிப்புடன்,

'இந்த கழுகுக்கு உணவாக
நகயிடுக்குகளில் பாம்புகளிருந்தன' (ப. 61)

என்று தொடங்கி,

எல்லாப் பாம்புகளும் மரணப் பயமடைந்தன
தொடர்ந்து போராட முடியாதும் போயிற்று.
நகயிடுக்கிலிருந்து ஒன்றுமட்டும்
அதி நம்பிக்கையோடு சீறியெழுகிறது
கழுகின் . . .
கழுத்தை கண்களை கொத்தி தப்பிக்க முயன்றது' (ப. 61)
என்று தொடரும் அப்பகுதி பின்வருமாறு முடிகிறது:
'இதில் நான்மேல் சொன்ன சொற்கூட்டம் மட்டும்
சீறியெழுகிறது
எதிர்க்க அதட்ட கண்கொத்த.' (ப. 62)

இந்தப் பகுதி, கருத்தாடல் என்னும் நிலைப்பாட்டையும் மீறிய சிறந்தவொரு கவிதைக்கான பண்புகளுடனேயே அமைந்துள்ளது. இது போன்ற பல பகுதிகளை இத்தொகுப்பில் சுட்டிக்காட்ட முடியும்.

சுள்ளிக்காடு, செம்பொடையன், சட்டையுரிப்பு என்பவற்றை மஜீத்தின் படைப்பு வெளிப்பாடு சார்ந்த புதிய பார்வைக்கு - அவரது பார்வையில் கட்டுடைப்புக்கு - வலுவூட்டும் குறியீடுகளாகக் கொள்ளலாம். மேலும், பிரதேச அடையாளம், சமகால நிகழ்வுகளுக்கான குறியீடுகளாகவும் அவற்றைக் கொள்ளவியலும். தொடர்ந்து தன்னை மறுபரிசீலனை செய்து - சட்டையுரித்து - புதுப்பித்துக்கொண்டிருப்பவன்தானே புதுமையான படைப்புகளை உருவாக்க முடியும்; ஒரு படைப்பாளியாகத் தொடர்ந்து செயல்பட முடியும். மஜீத்தின் உத்தேசமும் அதை நோக்கியதாகவே அமைகிறது.

'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்பது தமிழ் மரபிலுள்ள ஒன்றுதான். இத்தொகுப்பிலுள்ள பிரதிகளின் புற அமைப்பு அந்த மரபின் புத்துருவாக்கம் எனவும் கொள்ளலாம். அதே சமயம் பிரதிகளின் உள்கட்டமைப்பு, வெளியீட்டு முறை, கருத்துருவாக்கம், சொல்லாக்கத் திறன் ஆகியவை புதுமையானவை. அவ்வகையில் இன்னும் மேலான படைப்பாக்கத்துக்கு வகை செய்யும் இப்புதிய முயற்சி தொடரப்பட வேண்டிய தேவை உள்ளது.

அடுத்து, 'ஒரு இலையின் மரணம்'. 'வாழ்வின் மீதான எளிய பாடல்கள்' தொகுப்பிலுள்ளவற்றை விடவும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் கவித்துவச் செறிவுடன் வெளிப்பட்டுக் கலைத்துவமான அதிர்வினை ஏற்படுத்துகின்றன. கவிதை வரிகளினூடே உறைந்திருக்கும் மௌன இடைவெளிகள் வாசகர்களைப் பல கோணங்களில் யோசிக்க வைக்கின்றன.

'ஓநாய்களை வரவழைத்தல்', 'நிலா எரித்து குடில்கள் சாம்பலாகின' கவிதைகளினூடே இருவேறு மனநிலைகளின் நூலிழைத் தொடர்பினைக் காணவியலும். 'வாழ்வின் மீதான எளிய பாடல்கள்' தொகுப்பிலுள்ள 'அவன் போராளியாக இருக்கக் கூடாது' கவிதையின் மறுபரிசீலனைபோல அமைந்துள்ளது 'அறியப்பட்ட போராட்டமும் அறியப்படாத போராளியும்' கவிதை. இந்தக் கவிதைகளில் சகல விதமான வன்முறைகளுக்கும் எதிரான கவிதைக் குரல் - ஆத்மாவைப் போல உரத்து வெளிப்படாமல் - அடங்கிய தொனியில், அதே சமயம் மிக அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை 'ஒரு இலையின் மரணம்'. ஒரு மரத்தடியில் கவிஞன் அமர்ந்திருக்கிறான். வயதைக் கணிக்க முடியாத அந்த மரத்திலிருந்து ஓர் இலை நிலத்தில் விழுகிறது. கிளையில் ஒட்டியிருந்தபோது கவனத்தைக் கவராத அந்த இலை இப்போது கவிஞனின் முழுக்கவனத்தையும் கவர்கிறது. கீழே விழுந்த இலை காற்றில் நகர்ந்து, வெயிலில் உலர்கிறது. அந்த இலையைக் கிளையுடன் இணைக்கும் சாத்தியங்களை நினைவில் கொள்கிறான் கவிஞன். அவ்வேளையில் அந்த இலையை எடுத்துக் குப்பையில் போட்டுவிட்டுச் செல்கிறாள் அவன் மனைவி. இன்னுமொரு இலை அவன் நெஞ்சில் விழுகிறது. நெஞ்சில் விழுந்த அந்த இலை உதிராமலிருப்பதை மறுநாள் காலையில் பார்க்கிறான் கவிஞன். இப்போது இலையைக் கிளையுடன் இணைப்பது பற்றிய சாத்தியங்கள் அவனுக்கு மறந்து போயிருந்தன.

'இன்னுமொரு இலை என் நெஞ்சில் விழுகிறது
மறு நாள் காலையில் பார்க்கிறேன்
நெஞ்சில் விழுந்த அவ்விலை
இன்னும் உதிரவில்லை
இலையைக் கிளையுடன் இணைப்பது
பற்றிய சாத்தியங்கள்
மறந்து போயிமிருந்தன' (ப. 34)

என்னும் அந்தக் கவிதையின் கடைசி வரிகள், முதலில் விழுந்த இலை குப்பையில் சேர்ந்துவிட, நெஞ்சில் விழுந்த இலையே நினைவில் தங்கிவிடுவதால், உதிர்ந்த இலையைக் கிளையுடன் இணைப்பது பற்றிய சாத்தியங்களும் கவிஞனுக்கு மறந்து போய்விட்டதான (தேவையற்றதாகி விடுகிறது எனவும் கொள்ளலாம்) புரிதலைத் தருகின்றன.

மேலும், 'வயதைக் கணிக்க முடியாத' மரம், 'கிளையில் ஒட்டியிருந்தபோது உற்றுக் கவனிக்காத இலை' போன்ற வரிகள், மரம், உதிரும் என்பவற்றுக்கு மேலதிகப் பரிமாணங்களையும் அளிக்கின்றன. வாசகர்களின் பார்வைகளுக்கேற்ப - வாசிப்பனுபவத்துக் கேற்ப - பன்முகத்தன்மை கொள்ளும் இது போன்ற வேறு சில கவிதைகளும் (இரு உதாரணங்கள்: 'எறும்பின் தொடர் நடையின் காட்சி', 'ஒரு ஊரின் நடுவழியில் காணாமல் போனயெனது கவிதை') இத்தொகுப்பில் உள்ளன.

' . . . மிகப் பல்லாண்டுகளாய், கவிதை, சிறுகதை, நாவல் என்கின்ற எல்லைகள் மீறப்படாது அதற்குள் சுருங்கிய பிரதியாக்க மனம் அல்லது சிந்தனை மிகப் பலமானதும் உறுதியானதுமான வன்முறையாகும்' என்கிறார் மஜீத் (சுள்ளிக்காடும் செம்பொடையனும், பக். 8). வன்கொடுமைச் சூழலில் வாழ்ந்துவரும் அவருக்கு இலக்கிய வடிவ வரையறைகளும் வன் முறையாகவே தோற்றம் தருகின்றன. ஆனால் இலக்கிய யதார்த்தம் வேறு வகையானது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் போன்ற வடிவ வரையறைகள் அவற்றின் வெளிப்பாடு, தன்மை, இலக்கியக் கட்டமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்டவை. ஒன்றின் கூறு இன்னொன்றிலும் ஊடாடியே நிற்கும். பொருளம்சத்தின் தன்மை சார்ந்து உருவாவதுதானே வடிவ வேறுபாடு. மேலும், இந்தப் பாகுபாடுகள் வரையறைகளுக்குள்பட்ட திட்டவட்டமான எல்லைகள் கொண்டவையுமல்ல; படைப்பாளியின் சுதந்திரத்திற்கேற்ப விரிவு கொள்பவையே.

இங்கு, நகுலன் தனது 'மூன்று' கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் கூறுவது கவனிப்புக்குரியது: "அடிப்படையாக இரு விஷயங்கள் - அனுபவம் - உருவம் (வெளிப்பாடு மூலம் எழுவது). எங்கு அனுபவம் - வெளிப்பாடு - மூர்த்தண஢யம் அடைகிறதோ அங்கு இலக்கியம் பிறக்கிறது - அது கவிதையாக, நாவலாக, அ-நாவலாக, சிறுகதையாக, நாடகமாக எதுவுமாக இருக்கலாம்." வீரியமற்ற பிரதிகளே பெயரிடல்களுக்குள் குறுகிச் சிதைவுற்றுக் கிடக்கும். கலைத்துவம் மிக்க படைப்புகளுக்குப் பெயரென்ன முக்கியம். மஜீத்தின் படைப்புகள் காத்திரமானவையே - அவர் அவற்றுக்கு என்ன பெயரிட்டு அழைத்துக்கொண்டாலும்.

அச்சாக்கம் குறித்து: எழுத்துப் பிழைகளிலும் ஒருமை-பன்மை மயக்கத்திலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google