Google   www kalachuvadu.com

கடிதங்கள்

சு.ரா. அவர்களின் நினைவினைப் போற்றும் விதமாக அமைந்த இதழ் சிறப்புக்குரியதாக இருந்தது. சு.ரா.வின் சிறுகதை எழுத்துலகம் குறித்த அரவிந்தனின் மதிப்பீட்டுக் கட்டுரை அவரது பல்வேறு எழுத்துப் பரிமாணங்களை விளக்கியது. ஒரு படைப்பாளி தனது படைப்புலகத்தினை விடுத்துப் புறத்தில் பெயர் பெறுவது எளிதல்ல. அத்தகைய செயல்பாட்டில் சு.ரா. அவர்கள் வெற்றி பெற்றுள்ளதை அஞ்சலிக் கடிதங்கள் பறைசாற்றுகின்றன. எழுத்துலகில் தனது இறுதிக் காலம்வரையிலும் "உள் நின்றெரியும் சுடராக" சு.ரா. விளங்கினார் என்பதில் ஐயமில்லை.

ஐயப்பப் பணிக்கரின் ஓதொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம்ஔ கட்டுரை கண்டேன். தொல்காப்பிய மீட்டுருவாக்கம் குறித்தும் பொருளதிகாரக் கோட்பாடுகளை நவீன இலக்கியத் தளங்களில் கட்டுடைப்புச் செய்தல் என்பது குறித்தும் ஐயப்பப் பணிக்கர் முன்வைத்த சிந்தனைகள் ஆய்வுக்குரியவை. அன்றைய இலக்கியச் சூழலில் இயற்றப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகாரக் கோட்பாடுகளைத் தற்காலத்திய இலக்கியத்துள் பொருத்திப் பார்ப்பது இலக்கியச் செழுமைக்கு அடிகோலும் என்றே கூறலாம். திணையிணக்கம், திணை மயக்கம் ஆகியவை குறித்த சிந்தனைகள் ஆய்வுக்குரியன. ஐயப்பப் பணிக்கரின் இத்தகைய சிந்தனைகளைத் தமிழ் ஆய்வாளர்கள் தகுந்த முறையில் அணுகிப் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கா. ஆனந்த குமார்
துடுப்பதி, ஈரோடு மாவட்டம்

தமிழ் இலக்கியச் சூழலில் பன் னெடுங்காலம் பங்களிப்புச் செய்தவரும் நூற்றுக்கணக்கான புதிய படைப்பாளிகள் உருவாகக் காரணமாக இருந்தவரும் அவர்களது தீவிர இலக்கிய முயற்சிகளுக்கு உந்துதலாக இருந்தவருமான திரு. சுந்தர ராமசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாகப் பிரசுரிக்கப்பட்ட மதிப்பீடுகள், நினைவுகூரல்கள், கடிதங்கள் ஆகியவற்றை வாசித்தேன். சு.ரா. எனும் ஆளுமையின் மீது தமிழகத்தின் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அபிமானிகள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பினையும் மதிப்பினையும் உணர்ந்துகொள்ள இப்பகுதி உதவியது. ரொம்பவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கோவை ஞானி (கி. பழனிச்சாமி) அவர்களின் கடிதத்தைச் சொல்லலாம். கடிதமென்ற ஒரு கோட்பாட்டுக்குள் அவரது கருத்துகளைச் சட்டமிட்டு வைத்துவிட முடியாது. ஞானியின் வருத்தங்களும் அவர் சு.ரா.வின் ஆளுமையைக் கண்டு வியந்திருந்த விதமும் ஒரு மனசாட்சியின் குரலாக இருந்தன எனச் சொல்லத் தோன்றுகிறது.

சு.ரா.வின் பழைய புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சூழலும் சம்பவங்களும் அபூர்வமானவையாக இருந்தன. அரசியல், இலக்கியம், குடும்பம் என்ற பல பரிமாணங்களைக் காட்டுவதாக இருந்தன.

கே. ரவிச்சந்திரன்
திருச்சி - 620 001

சென்ற இதழின் அட்டையில் ஓமதிப்பீடுகள், நினைவுகூரல்கள், கடிதங்கள்ஔ என்று போடப்பட்டிருக்கிறது. எனக்கொரு சந்தேகம். நினைவு கூரல்களா? நினைவுகூறல்களா? நினைவுகளைப் பற்றிச் சொல்வது நினைவு கூறல்கள், நினைவுகளைப் பகுத்துக் கூர்ந்து நோக்குவது நினைவுகூரல். இந்த இடத்தில் நினைவுகூறல்கள் என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

டாக்டர் ஆர். அனந்தராமன்
பெங்களூர் 32

செப்டம்பர் 2006, இதழில் ஓமுன் தேதியிட்ட அராஜகம்ஔ தலையங்கம் படித்தேன். அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் அரசு அமைப்பு எதிலும் ஆதாயம் தரக்கூடிய வேறு பதவி எதையும் வகிக்கக் கூடாது என்ற சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட மசோதா, முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசியல்வாதிகளும் ஆதாயம் அடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலையங்கத்தில் உள்ளதுபோல் இது மக்களாட்சி முறையின், மக்களாட்சியின் நாயகர்கள் தொடுத்த வன்முறையே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராட, பின் ஜெயலலிதாவின் வீண் பிடிவாதத்தால் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. அரசு இயந்திரங்கள் செயலிழந்துபோயின. அப்போது டெஸ்மா என்னும் அவசரச் சட்டத்தின் மூலம், போராடிய அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெஸ்மா முன்தேதியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும். அவசரச் சட்டங்களுக்கு முன்தேதியிட முடியாது என்றாலும் ஜெயலலிதா முன்தேதியிட்டார். இதன் மூலம் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர் என்று புகழப்பட்டார். தமிழ்நாட்டில் பல பத்திரிகைகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. மக்கள், மக்களாட்சித் தத்துவம் குறித்து விழிப்புணர்வின்றித் தாங்கள் சார்ந்துள்ள அரசியல் இயக்கம் செய்வதெல்லாம் சரி என்னும் ஆட்டு மந்தை மனப்பான்மையோடு இருந்துவருகிறார்கள். மக்கள் சக்தியும் இதழியல் சக்தியும் இந்த வன்முறைகளை வேரறுக்க இணைந்து செயல்பட வேண்டும்.

முனைவர் தி. நெடுஞ்செழியன்
மயிலாடுதுறை (மின்னஞ்சலில்)

ஊடகங்களின் பாலியல் அரசியல்

ஓரின, ஈரின ஈர்ப்புடையோர் மற்றும் அரவாணிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான அல்லது ஆரோக்கியமற்ற ஊடகங்களது சித்தரிப்புகள், அறியத் தராத ஒரு அவலநிலையை அவர்களின்பால் ஏற்றிக்கொண்டேயிருப்பதை அனிருத்தன் வாசுதேவன் சாடியிருப்பது வரவேற்கத்தக்கது.

அரவாணிகளை ஒரு நலிந்த இனமாக, வெறுமனே கிளுகிளுப்பூட்ட அல்லது நகைப்பூட்ட ஏதுவாய்த் திரையுலகத்தினர் மேற்கொண்ட உத்திகள் நேற்று இன்று பிறந்தவை அல்ல. பாடலின் நடுவில் வந்து கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணிச் செல்வது, பெண் புணர்தலில் தீராத வேட்கை கொள்ளும் ஒருவனை அரவாணியைக் கொண்டு திகைக்க வைப்பது எனத் திரை நுகர்வோருக்குச் செறிவற்ற தன்மை கொண்டு வெறுமனே களிப்பூட்ட மட்டும் இத்தகு அரவாணிக் கொள்கைகளை நெடுங்காலமாய்த் திரையுலகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் துறைகளில் மேம்பட்ட நிலையை நோக்கி அவர்கள் நகரும் வேளையிலும் அக்கூறுகளையே அடிப்படையாகக்கொண்டு அது இன்றும் கேலி பேசியபடியே இருக்கிறது. பெண்ணிய, தலித்திய மற்றும் அங்கஹீனத் தாழ்மைகளை அகற்றப் புரட்சியும் விடுதலையும் பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் அங்கங்களை அடிப்படையாகக்கொண்ட இவைகளின் மூலம் அது நகைப்பூட்ட முற்படுவது அநாகரிகமே அன்றி வேறல்ல!

கமலும் கௌதமும் செய்தால் மட்டுமல்ல; யார் செய்தாலும் இது வருத்தத்திற்குரியதே. இதே காலகட்டத்துத் திரைப்படைப்பான 'சில்லுனு ஒரு காத'லில்கூட ஆரோக்கியமற்ற, வெறும் கிளுகிளுப்பூட்டக் கலக்கப்பட்ட காட்சியாகவே இது பரிணமித்திருக்கிறது.

கலைப் படைப்பிற்கு மட்டுமின்றி வெறும் 'களிப்பு தரும்' படைப்பிற்கும்கூட இத்தகு வலிமையற்ற இனங்களின் வாழ்க்கையை அவலமாக்குதல் அவசியமன்று. ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி அரவாணிகளுக்கும் தார்மீக வாழ்க்கை நெறிகள் உள்ளன. எனவே இப்போதைய தேவை அரவாணிகளை நோக்கிய ஒரு முழுமையான புரிதல் மற்றும் கூடி வாழுதல் சார்ந்த ஓர் அறம். இதைக் கேலிக்குள்ளாக்கும் படைப்பு திரைப்படைப்பு மட்டுமின்றி எப்படைப்பாயினும் கண்டிக்கப்பட வேண்டியது.

உடற்குறையுள்ளவர்களை யார் கேலி செய்தாலும் அது தவறுதான்; தலித்துகளை யார் சாதி சொல்லித் திட்டினாலும் தண்டனை உண்டு; பெண்களின் பால் எத்தகு வரம்பு மீறலெனினும் குற்றமே; மிருகங்களை எப்படித் துன்புறுத்தினும் மிருக வதைச் சங்கம் கேட்கும் என்பதைப் போல இதற்கும் தகுந்த சமூக அறிவுறுத்தல்களும் சட்டங்களும் உடனடி அவசரத் தேவை.

எம்.கே. குமார்
சிங்கப்பூர்

அனிருத்தன் வாசுதேவனின் 'வேட்டைக் களமல்ல, விளையாட்டுப் பொருளல்ல' என் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. முற்போக்குவாதியான கமலிடமிருந்து இது போன்ற சமூகப் பிரக்ஞையற்ற வசனத்தை எதிர்பார்க்கவில்லை. வலிமை வாய்ந்த ஊடகம் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ரத்தினச் சுருக்கமாக, அதே சமயத்தில் தெள்ளத் தெளிவாக எழுதிய அனிருத்தன் பாராட்டுக்குரியவர்.

ஸ்ரீசரண் (மின்னஞ்சலில்)
சென்னை

உள்ளடக்கம்

Google Ads.....


Google