ஒவ்வொரு வருடமும் அக்டோ பர் 10ஆம் தேதி உலக மனநல
தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்கொலைகளைத் தடுப்பதுதான் மனநல தினத்தின் நோக்கம்
என்று இந்த வருடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் மாரடைப்புக்குப் பிறகு
மரணத்துக்கு முக்கியக் காரணம் தற்கொலை என்பதால்தான் இந்தக் கூடுதல் கவனம். ஒரு
வருடத்தில் உலகம் முழுவதும் சற்றேறக் குறையப் பத்து லட்சம் பேர் தற்கொலையால்
இறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் தினமும் 250இலிருந்து 300 பேர்வரை தற்கொலையால்
உயிரிழக்கிறார்கள். அதைவிடப் பத்திலிருந்து பதினைந்து மடங்கு அதிகம் பேர்
தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்கொலைக்கென்று ஒரு வரலாறு உண்டு. இந்தியாவின் பிற இடங்களைப் போலவே
இங்கும் பெண்கள் உடன்கட்டை ஏறுவது பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.
அவர்கள் தெய்வமாகக் கொண்டாடப்பட்டார்கள். மன்னருக்காக உயிரை விடுவது தமிழ்க்
கலாச்சாரத்தில் தியாகமாகக் கருதப்பட்டது. பெரும்பாலான தாய்மார்கள் அன்று தங்கள்
குழந்தைகளைத் தியாகிகளாகவே வளர்த்தார்கள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
வீரர்கள் தங்களது ராஜ விசுவாசத்தைக் காட்ட ஆறு விதமான தற்கொலை முறைகளைக்
கையாண்டார்கள் என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தொல்காப்பியத்தில்கூட
வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது பற்றிய குறிப்பு இருக்கிறது. போர்களில் தோற்றுப்போன
வீரர்கள் கொற்றவை கோயிலில் தங்கள் தலை முடியாலேயே கழுத்தை இறுக்கித் தற்கொலை
செய்துகொள்வது தமிழ்நாட்டில் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. தங்களது தளபதியின்
வெற்றிக்காகவும் பல வீரர்கள் கொற்றவை கோயிலில் நேர்ந்துகொண்டு உயிரை
மாய்த்துக்கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்கொலைகள் புனிதப்படுத்தப்பட்டதன்
உதாரணங்கள் இவை.
இன்றைய சூழலில் தலைவர் இறக்கும்போதோ தேர்தலில் தோற்கும்போதோ கட்சியைவிட்டு
நீக்கப்படும்போதோ தொண்டர்கள் தீக்குளிப்பதை இதன் தொடர்ச்சியாகத்தான் பார்க்க
வேண்டியிருக்கிறது. கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வைகோ, மூப்பனார் என்று பல
உதாரணங்களை இதற்குச் சொல்லலாம். இந்தத் தலைவர்களுக்காகத் தீக்குளித்து இறந்தவர்கள்
தியாகிகளாகச் சித்தரிக்கப்பட்டு நஷ்ட ஈடு மூலமாக கௌரவிக்கவும்பட்டார்கள்.
இம்மாதிரியான நிகழ்வுகளின் மீது ஊடகங்கள் விமர்சனபூர்வமான பார்வையை வைக்காமல்
அவற்றை விசுவாசத்தின் குறியீடாகவும் குறிப்பிட்ட தலைவரின் புகழின் அடையாளமாகவும்
சித்தரித்துவருவது இத்தகைய தற்கொலைகளைத் தூண்டுவதாகவே அமைகிறது. தலைவர்களுக்காகத்
தொண்டர்கள் தீக்குளிப்பதைத் தலைவர்களும் ஊடகங்களும் மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாகவே
நாம் கருத வேண்டியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளில் தற்கொலைப் படைகள் இருப்பதையும் நாம்
இந்தப் பின்னணியில் பொருத்திப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட தீவிரவாத
அமைப்புகளில் தற்கொலைப் படையில் சேர்வது பெரிய கௌரவமாகவும் தியாகமாகவும்
கருதப்படுகிறது.
இன்று தற்கொலைகள் வேகமாகப் பெருகிவருவதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்கு இருப்பதாகவே
தோன்றுகிறது. பொதுவாகவே மனநலன் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள்
பொறுப்பில்லாமலேயே நடந்துகொள்கின்றன. தற்கொலைகளை, குறிப்பாகப் பிரபலங்களின்
தற்கொலைகளை ஊடகங்கள் ஒருவித கொண்டாட்ட மனநிலையுடனேயே அணுகுகின்றன என்பது வேதனையான
விஷயம். பிரபலமாக இருக்கும் யாரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறக்கும்போது அதை
வைத்துச் செய்தித் தாள்களும் செய்தித் தொலைக்காட்சிகளும் பரபரப்பை உருவாக்குவதில்
மிகவும் குரூரமாக செயல்படுகின்றன. தற்கொலையை ஊடகங்கள் ஒரு கவர்ச்சிகரமான நிகழ்வாகச்
சித்தரிக்கின்றன. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்துகொண்டபோது ஒரு
குறிப்பிட்ட தமிழ் செய்தித் தாள் அவர் எப்படித் தூக்கில் தொங்கினார் என்று வரைபடம்
வரைந்து வெளியிட்டது. தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று கிட்டத்தட்ட ஒரு
கையேட்டையே அந்த வரைபடத்தின் மூலம் வெளியிட்டது. தற்கொலை மனநிலையில்
ஊசலாடிக்கொண்டிக்கும் ஒருவர் இதைப் பார்த்தால் அது அவரைத் தற்கொலையை நோக்கித்
தள்ளக்கூடும். பிரபலங்கள் தற்கொலை செய்துகொள் ளும்போது ஊடகங்கள் பிரச்சினையின்
ஆழத்துக்குப் போகாமல் ஒருவித கிளுகிளுப்புத் தன்மையை ஏற்படுத்த முயல்கின்றன.
அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது குறித்த 'கதை'களை வாசகர்களுடன்
பகிர்ந்துகொள்ள ஊடகங்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கின்றன.
தற்கொலைகளை ரிப்போர்ட் செய்யும்போது விரிவான விவரணைகள் தருவது, அவை பற்றித்
தொடர்ந்து புதிய தகவல்களை வெளியிடுவது ஆகியவை சமூகத்தில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை
ஏற்படுத்தும். தற்கொலைகளைத் தடுப்பதில் முனைந்திருக்கும் சர்வதேசச் சங்கம் ஒன்று
தற்கொலை பற்றிச் செய்தி வெளியிடும்போது தோல்வி என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக்
கூடாது என்கிறது. வெற்றிகரமான தற்கொலை என்பதும் தற்கொலை முயற்சி தோல்வியடைந்தது
என்பதும் படிப்பவர்களிடம் எதிர்மறையான பாதிப்பையே ஏற்படுத்தும். உலக சுகாதார
நிறுவனத்தின் பரிந்துரைகள் தற்கொலை பற்றிய செய்தி வெளியிடும்போது மொட்டையான
விளக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறது. அதாவது, தற்கொலைக்கான காரணங்களை மிகவும்
எளிய வார்த்தைகளில் வெளியிட்டுப் பிரச்சினையின் தீவிரத் தன்மையைக் குறைக்கக்
கூடாது. ஆனால் நமது ஊடகங்களுக்குத் தெரிந்த தற்கொலைக்கான சில காரணங்கள்: காதல்
தோல்வி, குடும்பத் தகராறு. ஒருவர் மிக ஆழமாகவும் நீண்ட காலமாகவும் மனநலம்
பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்தாலொழியத் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு
வரமாட்டார்கள் என்கிறார்கள் மனநல வல்லுனர்கள். இந்நிலையில் ஊடகங்கள் மேலோட்டமான
காரணங்களைச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும் முயற்சி. கவலைக்குரிய
ஒரு பிரச்சினையைப் பரபரப்பான கதையாக மாற்றும் முயற்சி.
தற்கொலைகள் பற்றிய செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றுகூட மனநல
வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் நமது ஊடகங்கள் அதற்கு நேர்மாறாகச்
செயல்படுகின்றன. பிரபலங்கள் தற்கொலை செய்துகொண்டால் சம்பந்தப்பட்டவர்களின்
அந்தரங்கத்துக்குள் அத்துமீறி நுழைவதை ஊடகங்கள் தொடர்ந்து செய்துவருகின்றன. இது
மனிதாபிமானமற்ற செயல்.
செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல, திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும்கூடத் தற்கொலை பற்றிய
தவறான பிம்பங்களையே ஏற்படுத்துகின்றன. திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர்
சொன்னதுபோல, திரைப்படங்கள் தற்கொலைகளை மிகவும் ருசிகரமாகக் காட்டுகின்றன.
திரைப்படங்களில் காதலை எதிர்க்கும் பெற்றோர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறோம்
என்று பல இளங்காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் தவறான முன்னுதாரணங்களை
ஏற்படுத்தும். அம்மாதிரியான படங்கள் வெற்றி பெறும்போது நாம் பெரும்
பதற்றத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முடிவதில்லை. சமீபத்தில் வந்த 'யுகா' என்னும்
திரைப்படத்திலும் தற்கொலை கிட்டத்தட்ட மேன்மைப்படுத்தப்பட்டது. தீவிரமான ஒரு
ஆசையுடன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த ஆசை நிறைவேறும் என்கிற அபத்தமான,
ஆபத்தான கருத்து படத்தின் முதல் பாதியில் முன்வைக்கப்பட்டது. நல்ல வேளையாகப் படம்
வந்த சுவடே தெரியவில்லை.
உண்மையில் தற்கொலைகளைத் தடுப்பதில் ஊடகங்கள் ஆக்கபூர்வமாகப் பங்காற்ற முடியும்.
தற்கொலை பற்றிய தவறான கருத்தியல்களை உடைப்பதில் ஊடகங்கள் ஆற்றக்கூடிய பங்கு
மகத்தானது. தற்கொலை வீரத்தின் அடையாளமோ வேட்கையைத் தீர்த்துக்கொள்ளும் தீர்வோ இல்லை
என்பதை ஊடகங்கள் தெளிவுபடுத்தலாம். தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்குக்
கிடைக்கக்கூடிய உதவிகள் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பல
சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியான அல்லது சமூக ரீதியான உதவிகள்
இல்லாதாலேயே தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தற்கொலை செய்ய முயன்று முடியாமல் போனவர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் அவர்களுக்கு
உரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு
குற்றமாகக் கருதப்படுவதே அபத்தமான விஷயம். தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களைத்
தண்டிக்கும் சட்டம் (இ.பி.கோ. செக்ஷன் 309) உலக அளவில் நான்கைந்து நாடுகளில்
மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்தால்கூட
அதைக் கருணையுடன் அணுகும் இந்தியச் சட்டம், மனநல பாதிப்பால் ஒருவர் தற்கொலைக்கு
முயன்றால் அதற்குத் தண்டனை தருவது கேலிக்கூத்தான முரண்பாடு. தற்கொலை முயற்சி
செய்பவர்கள் அடிப்படையில் உதவி கேட்டுக் கதறுபவர்கள்; அவர்களைச் சட்டத்தின் மூலம்
தண்டிப்பது மனிதாபிமானமற்ற செயல்.
309ஆம் சட்டப் பிரிவை நீக்குவதற்கு ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பது ஊடகங்கள்
செய்யக்கூடிய ஆக்கபூர்வமான ஒரு பணி. ரிப்போர்ட் செய்யும்போது ஊடகங்கள்
பொறுப்புணர்வுடன் செயல்பட்டாலே தற்கொலைகளைப் பெருமளவில் குறைக்க முடியும்.
தற்கொலை என்பது தீர்வு அல்ல, வேதனையான முடிவுதான்; நமக்கிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை
என்று வாசகர்களை / பார்வையாளர்களை உணரவைப்பதே ஊடகங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய
பங்களிப்பு. நாம் நாகரீகமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று
நம்பிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும்கூட நம்மைச் சுற்றியுள்ள சக
மனிதர்களில் ஒருவர் தற்கொலை மூலம் தன் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது மனித
இனத்துக்கே ஏற்படக்கூடிய சோகம் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் நாம் சந்திக்க நேரும்
மிகப் பெரிய அவமானமும் ஆகும்.