Google   www kalachuvadu.com

தலையங்கம்

பொய் பரப்பும் கொசுக்கள்

n வாக்காளர்களைப் புறக்கணித்த
    தேர்தல்

n பொய் பரப்பும் கொசுக்கள

சிக்குன்குன்யா இப்போது தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு என்ற 'பெருமை' இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. அக்டோ பர் 4 நிலவரப்படி 10 மாநிலங்களில் 13 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 'ஆளை முடக்கிப் போடுதல்' என்று பொருள்படும் இந்தப் பெயர் 'மகொண்டெ' என்ற ஆப்பிரிக்க மொழியின் சொல்லிலிருந்து உருவானது. 1952ஆம் ஆண்டு மொஸாம்பிக் பகுதியில் தோன்றிய இந்நோய் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கொள்ளை நோயாக இப்போது உருவெடுத்துள்ளது.

இதனால் யாரும் இறக்க மாட்டார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சர் சொல்லிவந்தாலும், தமிழக அரசும் 'கூட்டாளி தர்ம'த்துக்காக அவரது வாதத்தை எதிரொலித்து வந்தாலும் முதியவர்கள், பலவீனமானவர்கள் இதனால் இறந்துபோவார்கள் என்பதே உண்மை. 2005ஆம் ஆண்டு ரியூனியன் தீவில் இந்தக் காய்ச்சல் தாக்கியபோது அங்கு ஆயிரத்தில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவிலும் நூற்றுக்கு மேற்பட்டோ ர் இறந்திருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். ஆந்திராவில் சாவு எண்ணிக்கை 500க்கு மேல் இருக்கும். அ.தி.மு.க. கூறுகிற அளவுக்குத் தமிழ்நாட்டில் சாவு எண்ணிக்கை இல்லாவிட்டாலும் எவருமே இறக்கவில்லை என்று தமிழக அரசு சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

சிக்குன்குன்யா பரவக்கூடிய ஆபத்து பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்திருந்தும் இந்திய அரசு எந்த விதத் தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்னிந்தியாவில் மட்டும் இப்போது சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் ஆகஸ்டு மாதத்தில் நடந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஐந்தாயிரம் மக்களுக்கு ஒருவர் என சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரினர். தமிழ்நாட்டுக்கு 12 ஆயிரம் பணியாளர்கள் தேவையென்று கேட்கப்பட்டது. ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் அதை இன்னும் நடை முறைப்படுத்தவில்லை.

சிக்குன்குன்யா உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பிரச்சார ஆயுதமாகப் பயன்பட்டது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு மாதத்துக்கு முன்பே நக்கீரன் இதழ் (16.09.2006) செய்தி வெளியிட்டிருந்தது. அது மட்டுமின்றி அந்த நோய் தாக்கிச் சென்னையில் இறந்தவர்கள் பற்றியும் அது குறிப்பிட்டிருந்தது.

சிக்குன்குன்யா நோயைப் பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுக்கள் மழைக் காலத்தில்தான் அதிகமாக உற்பத்தியாகும். டெங்கு காய்ச்சலையும் இந்தக் கொசுக்கள்தான் பரப்புகின்றன. டெங்குவுக்கும் சிக்குன்குன்யாவுக்கும் அறிகுறிகள் ஒரே விதமாயிருப்பதால் சரியான மருந்து கொடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்துள்ளது. மழைக் காலம் ஆரம்பமாவதற்கு முன்பே இந்த அளவு பாதிப்பென்றால் மழைக் காலத்தில் இதன் பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்று யூகிக்கலாம்.

கேரள அரசு உண்மை நிலவரத்தைச் சொல்லிக் குரலெழுப்பியதால் இப்போது அந்த மாநிலத்துக்கு மத்திய அரசின் உதவிகள் செல்கின்றன. தமிழக அரசோ தான் கூறிய பொய்யைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கிறது. பாவம் தமிழர்கள்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google