பரவலான வன்முறையும் முறைகேடுகளும் நிரம்பியதாக
நடந்து முடிந்திருக்கிறது தமிழக உள்ளாட்சித் தேர்தல். தமது ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றும் முனைப்போடு வாக்குச் சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள்
அச்சுறுத்தப்பட்டுத் தேர்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார்கள்.
சென்னையின் பல வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முற்பகல் 10 மணிக்கே 'முடிந்துவிட்ட'தாகத்
தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆயுதமேந்திய தாதாக்களும் ரவுடிகளும் வாக்குச்
சாவடிகளைக் கைப்பற்றி சரமாரியாகக் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். வாக்குச்
சாவடிகளுக்கு வந்த செய்தியாளர்களில் பலரைத்தாக்கி ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது
அந்தக் கும்பல். பலருடைய காமிராக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமது
கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு
கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களை மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறது போலீஸ். வாக்குச்
சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்காணிப்பது போலீஸின் வேலையல்ல எனச் சப்பைக்
கட்டுக் கட்டியதோடு தேர்தல் அமைதியாக நடந்ததாக மாநகரக் காவல் துறை ஆணையர்
பெருமைப்பட்டுக்கொண்டது குரூரமான ஒரு பரிகாசம்.
இரு கூட்டணிகளைச் சேர்ந்த கட்சிகளும் இந்தத் தேர்தலை மற்றுமொரு அரசியல் பலப்
பரீட்சையாகக் கருதிச் செயல்பட்டதே இந்த முறைகேடுகளுக்கும் வன்முறைக்கும் முக்கியக்
காரணம் என்பது வெளிப்படை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப்
பங்கு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் சாமானிய மனிதனுக்கு அதிகாரத்தில்
பங்குபெறுவதற்கான வாய்ப்பினையும் வழங்குகின்றன. ஜனநாயகத்தின் அடிப்படை அலகாகக்
கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரத்தின் பலன்களை மக்களுக்குக் கொண்டு
சேர்ப்பதையே முக்கியமான நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று அவை சுயநல
அரசியல் சக்திகளின் வேட்டைக் காடாகியிருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளை
நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் நிதியைச் சுருட்டுவதற்கு
அச்சக்திகளுக்கு அரசியல் பின்னணியும் அதிகாரவர்க்கத்தின் ஒத்துழைப்பும் அடியாள்
பலமும் தேவைப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தமிழகத்தின்
எல்லா அரசியல் கட்சிகளும் வெறித்தனமான போட்டியில் ஈடுபட்டதற்கு இதைத் தவிர வேறு
காரணம் இருக்க முடியாது. அதனால்தான் முன்னெப்போதும் இருந்திராத வகையில்
முறைகேடுகளும் வன்முறையும் நிரம்பியதாக நடந்து முடிந்திருக்கிறது இத்தேர்தல்.
மிக எளிய சேவையாகக் கருதப்படும் ஊராட்சித் தலைவருக்கான போட்டியில் வேட்பாளர்கள்
பணத்தைத் தண்ணீராகச் செலவழித்திருக்கிறார்கள். முதலமைச்சரும் மத்திய, மாநில
அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மேற்கொண்ட சூறாவளி சுற்றுப் பயணங்களைப்
பார்த்தவர்களுக்கு இது மற்றுமொரு பொதுத் தேர்தலாகத்தான் தென்பட்டது. நடந்திருக்கும்
வன்முறையைப் பார்க்கும்பொழுது, சென்ற சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலின்போது
கருணாநிதியும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் ஜெயலலிதா ஆட்சியின்
அராஜகத்தை எதிர்த்தும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாய்ப்பளிக்கவும் கோரித் தமிழக
மக்களிடம் வாக்குக் கேட்டு வலம் வந்த காட்சிகள் நினைவுக்கு வந்தன. தி.மு.க.
ஆட்சியின் இத்தகைய செயல்பாடுகள் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை நினைவூட்டுகின்றன.
அரசின் இலவசத் திட்டங்கள் தொடர வேண்டுமானால் தம்முடைய கூட்டணிக்கே வாக்களிக்குமாறு
கோரினார்களாம் அமைச்சர்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இணக்கமான உள்ளாட்சி அமைப்பு
உருவாகத் தங்களுடைய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார் மைய
நிதியமைச்சர். உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையான நோக்கங்களுக்கெதிராக ஒரு நாட்டின்
நிதியமைச்சரே பேசும்பொழுது அவற்றின் எதிர் காலத்தைக் குறித்து என்ன சொல்ல முடியும்?
ஆளும் கூட்டணியின் ஓர் அங்கமாக இருப்பதன் காரணமாகவே அதன் அனைத்து அராஜக
நடவடிக்கைகளுக்கும் துணைபோவதே கூட்டணிக் கட்சிகளுக்கு 'தர்ம'மாக இருந்துவரும் ஒரு
சூழலில் மார்க்சிஸ்ட் கட்சி இந்த அராஜகங்களுக்கெதிராக உறுதியுடன் போராட
முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. தார்மீக மதிப்பீடுகள் வேகமாகச் சரிந்துவரும்
சூழலில் சிறிதளவாவது நம்பிக்கையை ஊட்டும் செயல் இது. இது குறித்த வழக்கை
விசாரிக்கும் உயர் நீதிமன்றம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடம் எழுப்பிய கேள்விகள்
உருவாக்கிய நம்பிக்கையை நவம்பர் 6ஆம் தேதி வழங்கவிருக்கும் இறுதித் தீர்ப்பு
உறுதிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசும் மாநிலத்
தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்திடம் அளித்திருக்கும் வாக்குறுதிகள் போதுமானவையல்ல.
வாக்குப் பெட்டிகளுக்குள் நிரப்பப்பட்டிருக்கும் கள்ள ஓட்டுகளை எண்ணி முடிக்கும்
அவசரத்தின் விளைவாகச் செய்துகொண்டுள்ள சமரச முயற்சியாகவே தென்படுகிறது அரசின்
நடவடிக்கை.
இது போன்ற கண்துடைப்பு வேலைகளை விட்டுவிட்டு வன்முறையையும் முறைகேடுகளையும் குறித்து
நியாயமானதொரு விசாரணையை நடத்திக் குற்றம் இழைத்தவர்கள்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டியதே அரசின் முன்புள்ள உடனடிக் கடமை. அதை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே
தி.மு.க., தன்னை ஆட்சியில் அமரச் செய்த மக்களுக்கு நியாயம் செய்ய முடியும்.