ஏ.ஜே. கனகரட்னா தனது 74 வயதில் அக்டோபர் 11ஆம்
திகதி செவ்வாய்க் கிழமை இரவு கொழும்பு ஆஸ்பத்திரியில் காலமானார். நான் அவரது தலை
முறையைச் சேர்ந்தவனல்ல. நான் பாடசாலையில் படிக்கும் காலங்களில் தரமான ஆங்கிலத்
திரைப்படங்களைப் பார்ப்பதற்குக் கிழமையில் குறைந்தது இரு தடவையேனும் யாழ்ப்பாணம்
றீகல் தியேட்டருக்குச் செல்வேன்.
அப்போது எனக்கு ஆழமான, பிரக்ஞை பூர்வமான ஈடுபாடு
இலக்கியங்களின் மீது ஏற்பட்டிருக்கவில்லை. எனது ஈர்ப்புக்குரிய கவனம் நல்ல தரமான
ஆங்கில மற்றும் தமிழ்த் திரைப்படங்களின் மீது மட்டுமே குவிந்திருந்தது. இதற்குச்
சற்றுக் காலம் பிந்தியே இலக்கியம் வாசிக்கும் ஓரளவு தீவிர வாசகனாக நான் மாறிய
காலகட்டம் வந்தது எனலாம்.
ஏ.ஜே.யுடனான எனது முதல் சந்திப்பு எதேச்சையாக நிகழ்ந்த ஒன்றென்றே கூற வேண்டும்.
எவரும் எம்மிருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் அப்போது றீகல் தியேட்டருக்கு அருகாகச் சிறிய தேநீர்க் கடையொன்று
இருந்தது. திரைப்படங்கள் பார்க்க வந்த காலங்களில் இடையிடையே அந்தத் தேநீர்க்
கடைக்கு நான் செல்வேன். இதனால் அக்கடையின் சொந்தக்காரர் எனக்கு ஓரளவு
அறிமுகமாகியிருந்தார். அவருடன் ஒரு நாள் உரையாடிக்கொண்டிருந்தபோது எனக்கு எதிரே
குறுந்தாடியென்று சொல்ல முடியாது, சற்று நீளமான தாடி வளர்த்த, ஐரோப்பியர்களை ஒத்த
வகையில் செந்நிறங்கொண்ட, உயரங்குறைந்த, ஆனால் பார்த்தோரை ஈர்க்கும் ஆளுமையுடன்
கூடிய நபரொருவர், வாங்கு ஒன்றில் அமர்ந்திருந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார்.
அவரை முழுமையாக நோக்கியபோது எத்தகைய குறு குறுப்பும் அல்லது பயமும் ஏற்படவில்லை.
முன்பின் அறிமுகமின்றித் தெருவோரத்தில் சந்திக்க நேரும் எந்த மனிதருடனும்
அக்கறையுடன் உறவாடக்கூடிய ஒரு மனிதராக அவர் காட்சியளித்தார். அவரைப் பார்த்தபோது
என் மனம் லேசாகியது. வயது வித்தியாசங்கள், பேதங்கள் எவையும் வெளிப்படாது சக
நண்பருடன் உரையாடுவதைப்போன்று மிக இயல்பாக என்னுடன் உரையாடினார். இத்தகையதொரு
சந்திப்பும் உரையாடலும் என்னைப் பொறுத்தவரையில் புதுமை வாய்ந்தது. எனக்குள் ஆழ்ந்த
பரவசத்தை ஏற்படுத்தியது. அந்த முதல் சந்திப்பிலிருந்தே போலித்தனங்களற்ற ஓர்
உரையாடலுக்கு ஏ.ஜே. என்னைத் தயார்படுத்தியிருந்தார் என்றே கூற வேண்டும்.
படித்த, மேம்பட்ட சமூகத்தின் குணாம்சங்கள் எவையும் ஒருவிதத்திலும் தம்மை அணுகாதவாறு
ஏ.ஜே. பார்த்துக்கொண்டார். அவற்றை மனதார வெறுத்தார். மமதை அவரிடம் எள்ளளவும்
இருக்கவில்லை. பரிவுடனும் நேசத்துடனும் சகலரோடும் உறவாடினார். எதிரிகள் என்று
அவருக்கு எவருமில்லை. வெற்றுக் கோஷங்களிலும் கட்சிகளிலும் அகப்படாத தனித்த பார்வை
கொண்ட ஒரு மார்க்சியவாதியாக ஏ.ஜே. திகழ்ந்தார். தெருவோர மனிதனிடமிருந்து அவர்
அந்நியப்பட்டிருக்கவில்லை. வீட்டு மொழியாக ஆங்கிலத்தையே பேசிவந்த ஏ.ஜே.க்கு
ஆரம்பத்தில் தமிழ் மொழி தெரியாது. அப்போது அவர் ஆங்கிலத்திலேயே எழுதிவந்தார். சில
வேளைகளில் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் கருத்துகளைப் பரிமாறுவதற்கு
ஆங்கிலத்தை விடுத்து ஏ.ஜே.யும் அவரது தகப்பனாரும் லத்தீன் மொழியில்கூட
உரையாடியதுண்டு. எவ்விதத்திலும் இது மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடு அல்லவென ஏ.ஜே.யை
நன்கறிந்தோர் உணர்வர். இந்த நிலையில் தமிழ் தெரியாத ஏ.ஜே. பின்னர் தமிழ் படித்துத்
தமிழில் விமர்சனங்களையே எழுதும் நிலையை எய்தியதற்குச் சுவாரசியமான அரசியல்
பின்புலமொன்று காரணமாக இருந்துள்ளது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயகா 1958ஆம்
ஆண்டில் கொண்டு வந்த தனிச் சிங்களச் சட்டமே அதுவாகும். இது அவரைத் தமிழ் படிக்கவும்
தமிழில் எழுதவும் உந்தியது. இதனாலேயே மத்து என்ற நூலை எழுதி வெளியிட்டபோது அந்தப்
படைப்பினை ஆழ்ந்த, கூர்மையான நோக்கில் தனிச் சிங்களச் சட்டத்திற்குச்
சமர்ப்பணமாக்கினார்.
பன்முகத் தன்மை வாய்ந்த ஆளுமைகொண்டவர் ஏ.ஜே. அவர் ஒரு கல்வியாளர், விமர்சகர், மொழி
பெயர்ப்பாளர், பத்திரிகையாளர், மனித உரிமையாளர். சிங்களத் தேசியக் காய்ச்சல்
தொற்றாத மார்க்சியவாதியும் கலை, இலக்கியம், சினிமா, அரசியல் மற்றும் ஊடகங்கள்
தொடர்பாகத் துணிகரமாகவும் காத்திரமாகவும் கருத்துகளையும் விமர்சனங்களையும்
நேர்மையுடன் முன்வைத்த ரெஜி சிறிவர்த்தனா மீது ஆழ்ந்த பற்றும் அபிமானமும் கொண்டவர்
ஏ.ஜே. கலை, இலக்கியங்கள் மற்றும் அரசியல் தொடர்பான ரெஜியின் பெரும்பான்மையான
கருத்துக்களுடனும் உடன்பாடு கொண்ட ஏ.ஜே. அவரை என்றும் மதித்தார். அதிகார
மையங்களுடன் ஒத்து ஓடாத நிறுவன எதிர்ப்புக் கொண்ட ஏ.ஜே., தனது நம்பிக்கைகளிலும்
கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டிருந்ததாலேயே பத்திரிகையாளர் வேலையை
உதறிவிட்டு லேக் ஹவுஸை விட்டு வெளியேறினார்.
தமிழ் இலக்கிய உலகில் ஏ.ஜே.யின் பிரசன்னம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
ஆங்கில, தமிழ்ப் படைப்புகளை இடையறாது வாசிக்கும் முதிர்ச்சி பெற்ற முழுமையான
வாசகனாக அவர் என்றுமிருந்தார். இத்தகைய பொறுப்பும் போக்கும் பலரைச்
சங்கடப்படுத்தியது. மேம்போக்காக எதனையும் உய்த்து உணராது எழுந்தமானமாகக் கருத்துக்
கூறும் அல்லது விமர்சிக்கும் போக்குக் கொண்டோ ரை இது ஒரு வகையில் மறைமுகமாக
அச்சுறுத்தியது. அதே வேளை கலை, இலக்கியம் தொடர்பாக உண்மைத் தேடலில் ஈடுபட்டோ ர்
மத்தியில் ஏ.ஜே.யின் இயல்பான எதிர்வினைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
விளம்பரத்தை நாடாத, தம்மை முன்னிறுத்தி எதையும் செய்யாத கூச்ச சுபாவமும் ஒதுக்கமும்
கொண்டவர் ஏ.ஜே. இதனாலேயே சிறிது 'போதை' ஏறிய ஏ.ஜே. இலக்கிய உலகில் நண்பர்கள்
மத்தியில் பெரிதும் நேசிப்புக்குரியவராகிறார். குடிப்பதனால் பல
இலக்கியவாதிகளுக்கும் மேதைகளுக்கும் வரக்கூடிய குண பேதங்களும் அகங்காரங்களும்
ஏ.ஜே.க்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. தம்மை முன்னிறுத்தாத ஒதுக்கத்திலிருந்து
உடனடியாக விடுபடுவதற்கு மது ஒரு கிரியா ஊக்கியாகச் செயற்பட்டது மட்டுமே. இந்த
வகையில் ஏ.ஜே.யுடன் மது அருந்தியவர்கள் ஒருவிதத்தில் பாக்கியசாலிகள். அவரது
மேதைமையின் கூறுகளை முழுமையாகத் தரிசித்தவர்கள் அவர்கள். குடித்தாலென்ன,
குடிக்காவிட்டாலென்ன, ஏ.ஜே. எப்போதும் தம்மையிழந்து மற்றவர்களுக்கு உதவும்
ஒருவராகவே இறுதிவரை இருந்துவந்திருக்கிறார். இதுவே வழமையாக மேதைகள்
எவருக்குமில்லாத, ஆனால் ஏ.ஜே.யுடன் ஒட்டிப் பிறந்த தாராளப் பண்பு.
ஏ.ஜே. தொழில் சார்ந்த முன்னேற்றங்களை முன்னிறுத்திச் செயற்படாதவர். சில
இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் அவற்றுக்காகத் தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கிய
அரசாங்கங்களுக்குத் துதிபாடி ஒத்தோடிய காலங்களில் தூர விலகி நின்றதுடன், அத்தகைய
அரசாங்கங்களையே விமர்சித்தும் எழுதியவர். இதனாலேயே பேராசிரியர்களுக்கும்
பேராசிரியராகப் பல்கலைக்கழகத்திலிருக்க வேண்டிய ஏ.ஜே. சாதாரண ஆங்கிலப்
போதனாசிரியராகக் கடமையாற்றிவந்தார். இதனால் நட்டமடைந்தது ஏ.ஜே. அல்ல,
பல்கலைக்கழகமே. ஆங்கில இலக்கியம் சார்ந்த புலமையும் அறிவும் ஆய்வு நோக்கும் கொண்ட
ஏ.ஜே., பல்கலைக்கழக அறிவார்ந்த ஆசிரிய, மாணவ சமூகத்தால் பேராசானாகவே
மதிக்கப்பட்டார், போற்றப்பட்டார்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் அத்தகையதொரு மதிப்பே அவருக்குத் தொடர்ந்தும்
இருந்துவந்தது. மக்கள் திரளைக் கவரும் எத்தந்திரத்தையும் அறிந்திராத ஏ.ஜே.க்கு
வடக்கு கிழக்கில் நிறைய நண்பர்களும் அதனால் செல்வாக்கும் இருந்துவந்தது. சில
சந்தர்ப்பங்களில் இதைச் சுட்டும் வகையில், "ஏ.ஜே., நீங்கள் தேர்தலில் நிற்கலாம்"
எனப் பகிடியாக நான் கூறியதுண்டு. ஏ.ஜே.யிடம் மிக முக்கிய குணாம்சங்களில் ஒன்றாக
இறுதிவரை பிரகாசித்தவை அவரது இயல்பான நகைச்சுவையும் எள்ளலுமாகும். பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் ஓய்வெடுக்கும் அறை எப்போதும் ஏ.ஜே.யின் வரவுடனே கலகலப்பாகிக்
களைகட்டும் என அவரது சக விரிவுரையாளர்கள் பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
தமிழ் மக்களது அரசியல் போராட்டங்கள், அவர்கள்மீது திணிக்கப்பட்ட இராணுவ ரீதியிலான
அடக்குமுறைகள், ஒடுக்குமுறை அவலங்கள் போன்றவற்றை வெளிக்கொணர்வதில்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சாட் டர்டே ரிவ்யூ என்ற ஆங்கிலப் பத்திரிகை வகித்த
பாத்திரம் மிகவும் காத்திரமானது. வெறும் பிராந்தியப் பத்திரிகையாக இருந்த ரிவ்யூ
தென்னிலங்கையிலும் வரவேற்புப் பெறத்தக்கதொரு பத்திரிகையாக மாற்றமடைய அதன் துணிவும்
வலிமையும் மிக்க எழுத்தே காரணமாயிருந்தது. இப்பத்திரிகைப் பணியில் ஏ.ஜே.யின் பங்கு
இடையறாதிருந்தது. ஆரம்பத்தில் சிவநாயகத்திற்கும் பின்னர் காமினி நவரட்னாவுக்கும்
உறுதுணையாயிருந்து காத்திரமான பங்களிப்பினைச் செய்தார் ஏ.ஜே. நெருக்கடியான சில
காலகட்டங்களில் அவர்களிருவரும் இல்லாத நிலையில் கூடத் தனியொருவனாகக் குறித்த
தினத்திற்குப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்துமிருக்கிறார். இதனால் அவர் பல்வேறு
நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியும் நேர்ந்திருக்கிறது. இந்த வகையில் அவருக்குக்
கடும் பற்றுறுதியும் பிடிவாத குணமும் இருந்திருக்கிறது.
சிறந்த மொழிபெயர்ப்பாளரான ஏ.ஜே., படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிமாற்றம் செய்யக் கூடிய படைப்பாற்றல்
பெற்றவராயிருந்தார். மொழிபெயர்ப்புத் துறையில் இத்தகைய இருமொழிப் படைப்பாற்றல்
திறன் கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் மிகக் குறைவு. அப்படியிருந்தாலும் படைப்புகளின்
மொழிமாற்றம் செம்மை குன்றியனவாகக் காணப்படும். ஆனால் ஏ.ஜே.யின் மொழிமாற்றங்கள் மிக
அற்புதமாக வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கிய உலகில் இத்தகைய படைப்பாற்றல் கைவரப்பெற்ற
மொழிபெயர்ப்பாளர்கள் அருகிவருகின்றனர். மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்ற
பலருக்கு ஏ.ஜே. ஒரு முன்னோடி வழிகாட்டியாக இருந்துவருகிறார். உதாரணமாக,
ethnicity என்னும் சொல்லுக்கு 'இனத்துவம்' என்னும் சொல்லையும்
commitment என்பதற்குப் 'பற்றுறுதி' என்னும் சொல்லையும் முதலில்
அறிமுகப்படுத்தியவர் அவரே. அர்த்தச் செறிவுடன் கூடிய அவை போன்ற பல சொற்கள் அவரது
பங்களிப்புக் காரணமாகச் சிறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பரவலாக்கம்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஜே. மரணமடைவதற்குச் சற்று முன்னதாக ரெஜி சிறிவர்த்தனாவின் கலை, இலக்கியம் மற்றும்
அரசியல் தொடர்பான எழுத்துகளைத் தொகுத்து இரு தொகுதிகளாக வெளிக்கொணர்ந்தார்.
கொழும்பிலுள்ள சர்வதேச இனத்துவ ஆய்வுகளுக்கான மையத்தின் ஏற்பாட்டிற்கமைய அவர்களின்
சார்பில் இப்பெரும் பணியினை ஏ.ஜே. நிறைவேற்றியிருந்தார். ரெஜிக்கு இணையான
பேராசானாகச் சிங்கள முற்போக்காளர்களும் கலைஞர்களும் ஏ.ஜே.யை மதித்துப் போற்றுவது
கடந்த புதன்கிழமை 11ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கின்போது
மிகத் துல்லியமாக வெளிப்பட்டது.
கலை, இலக்கியம் தொடர்பாகக் கருத்தியல் தளத்தில் ஆழமான பார்வை ஏ.ஜே.க்கு இருந்தது.
மானிட வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் கலை, இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கவோ
வெளிக்கொணரவோ வேண்டுமெனவும் இத்தேர்வில் கலைக்குரிய தீண்டும் பொருளாக அல்லது பேசும்
பொருளாகச் சிலவற்றை மட்டும் அறுதியாக வரையறை செய்து கலைத் தன்மையினை எதுவிதத்திலும்
குறுக்கிவிடவோ அல்லது பங்கப்படுத்திவிடவோ கூடாது எனவும் கண்டிப்பாகக் கருதியவர்
ஏ.ஜே. இந்த வகையில் வறட்டுத் தன்மையற்ற நவீனத்துவப் பிரக்ஞையுடன் கூடிய மார்க்சியக்
கண்ணோட்டம் அவருக்கிருந்தது. கலையின் அபரிமிதமான சக்தியும் செல்வாக்கும்
வாழ்வியலின் பண்பாட்டுத் தளத்திலும் உள்ளோடிச் சுவற வேண்டுமெனக் கூறுபவர் ஏ.ஜே.
இந்த அரிதான அம்சம் எம் மத்தியிலிருக்கும் ஒரு சில எழுத்தாளர், கலைஞர்களிடமேனும்
சுவறியிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். அவ்வாறான சாத்தியம் ஏற்படும்
பட்சத்தில் கலை தனது நோக்கில் வெற்றியடைந்துவிட்டதாக நாம் பெருமிதம்கொள்ள முடியும்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகருமான
எஸ்.வி. ராஜதுரை, 'மிக வேகமாக மறைந்துவரும் அரிதான உயிர்ராசியைச் சேர்ந்தவர் ஏ.ஜே.'
எனக் கூறியது நினைவுக்கு வந்தது. இது ஏ.ஜே.யைப் பொறுத்தவரை முற்றிலும்
பொருத்தமானதே.