Google   www kalachuvadu.com

அஞ்சலி: கான்ஷி ராம் (15.03.1934 - 09.10.2006)

அதிகாரத்தை நோக்கிய பயணம்

ரவிக்குமார்

n அஞ்சலி: கான்ஷி ராம்

n அஞ்சலி: ஏ.ஜே. கனகரட்னா

"அரசியல் அதிகாரம் தாழ்த்தப்பட்ட மக்கள் கைகளில் வர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருந்து ஓர் அரசியல் மதிப்பைப் பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை நாம் கையிலெடுக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது" என்றார் அம்பேத்கர். தலித் மக்களுக்கு அதிகாரம் தானே வந்துவிடாது. "அதிகாரமும் கௌரவமும் போராட்டத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அளவிலான தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில் 1930களுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. வேறு எப்போதைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டோ ர் பிரச்சினை முதன்மை பெற்றிருந்த நேரமது. வட்டமேசை மாநாடுகளில் அம்பேத்கர் ஆற்றிய உரைகள்; தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதி உரிமை, காந்தியின் உண்ணாவிரதத்தால் எழுந்த அரசியல் பதற்றம், அதன் பிறகு ஏற்பட்ட பூனா ஒப்பந்தம் எனத் தொடர்ந்து தலித் அரசியல் ஒரு கொதி நிலையில் இருந்த காலம். அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவிலேயே தலித் மக்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தில், மதம் மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படும் ரவி தாஸி சீக்கியக் குடும்பத்தில் 1934 மார்ச் 15ஆம் நாள் கான்ஷி ராம் பிறந்தார். நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகளுக்கு மத்தியில் கான்ஷி ராமுக்கு மட்டும்தான் பட்டப் படிப்புவரை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் அவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட 'இட ஒதுக்கீடு' அவருக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத் தந்தது. நில அளவைத் துறையில் சேர்ந்து பின்னர் பூனாவில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு மாற்றலானார். அந்த இடமாற்றம்தான் பின்னர் அவருக்கு மன மாற்றம் ஏற்படக் காரணமாயிற்று.

சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP), ஷெட்யூல்டு வகுப்புகளின் கூட்டமைப்பு (SLF), இந்திய குடியரசுக் கட்சி (RPI) என அம்பேத்கரின் அரசியல் இயக்கங்கள் தழைத்துச் செழித்த மகாராஷ்டிரா மண் அதுவரை அரசியல் வாசனையே அறியாதிருந்த கான்ஷி ராமுக்கு 'ஞானோதய'த்தைத் தந்தது. 1965ஆம் ஆண்டு அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு விடுமுறை அறிவிக்க மகாராஷ்டிர அரசு மறுத்தபோது எழுந்த போராட்ட அலை கான்ஷி ராமையும் இழுத்துச் சென்றது. அம்பேத்கரைப் பற்றி அவருக்கு அறிமுகப்படுத்திய டி.கே. கபார்டே என்பவர் கான்ஷி ராமிடம் அம்பேத்கரின் 'சாதி ஒழிப்பு' நூலைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். ஒரே இரவில் அதை மூன்று முறை வாசித்தாராம் கான்ஷி ராம்.

"பணமும் பொருளும் மட்டுமே அதிகாரத்தின் ஆதாரம் ஆகிவிடாது. மதமும் சமூக அந்தஸ்தும்கூடப் பல சமயங்களில் அதிகாரத்தை உற்பத்தி செய்யும்" என்று அம்பேத்கர் கூறியதையும் "இந்தியாவுக்குப் பொருளாதாரப் புரட்சியைவிட சமூகப் புரட்சியே உடனடித் தேவை" என்று அவர் வலியுறுத்தியதையும் படித்தால் கான்ஷி ராமுக்கு எப்படித் தூக்கம் வரும்?

தனது உரிமைக்காக மட்டுமின்றித் தனது மக்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும் என்ற எண்ணம் கான்ஷி ராமுக்குள் அம்பேத்கரின் எழுத்துகளால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். தனது சக ஊழியர் ஒருவருக்குச் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டபோது கான்ஷி ராம் அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தார். மக்கள் ஊழியத்தில் மனதைச் செலுத்திய பிறகு மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைபார்ப்பது பிடிக்காமல் போனது. 1971இல் வேலையைத் துறந்தார். அதே வருடத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக் கெனச் சங்கமொன்றை உருவாக்கினார். 1973இல் அது, 'பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பு (BAMCEF)' என்ற அமைப்பு உருவாக வழிவகுத்தது. பஞ்சாபில் பிறந்து மகாராஷ்டிராவில் அரசியல் பணியைத் துவக்கிய கான்ஷி ராம் ஹரியானா, உத்தரப் பிரதேசம் எனத் தனது செயல்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தினார்.

படிப்பறிவில்லாத கிராமத்து மக்களை நோக்கிச் செல்ல வேண்டியதன் தேவையை உணர்ந்த அவர், அதற்கென வடிவமைத்த 'அம்பேத்கர் மேளா' என்ற ஊர்திப் பயணமும் அந்தப் பயணத்தின்போது வன்கொடுமைகளுக்கு எதிராக அவர் ஆற்றிய உரைகளும் எதிர்பார்த்ததைவிடப் பெரும் தாக்கத்தை உண்டாக்கின.

அரசாங்க ஊழியர்களது பிரச்சினைகளையும் இட ஒதுக்கீட்டு அரசியலையும்விட முதன்மையானது கிராமங்களில் வாழும் மக்களுடைய பிரச்சினைதான் என்பதை உணர்ந்த கான்ஷி ராம், 'தலித் சோஹித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி' என்ற அமைப்பைத் துவக்கினார். DS4 எனப் பிரபலமாக அறியப்பட்ட அந்த அமைப்பே 198இல் 'பகுஜன் சமாஜ் கட்சி'யைத் துவக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது.

அம்பேத்கரைப் போல் சிறந்த பேச்சாளராகவோ சிந்தனையாளராகவோ இல்லாமல் தலித் மக்களை அவரால் திரட்ட முடிந்ததை ஒரு சாதனையென்றே கூறலாம். அவரது கரடுமுரடான சுபாவமும் கச்சாவான மொழியும் அவர் 'தங்களில் ஒருவர்' என தலித் மக்கள் எண்ணுவதற்குக் காரணமாயின. "பிராமின், பனியா, தாக்கூர் சோர்; பாக்கி சாப்ஹே டி.எஸ். ஃபோர்" என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் புகழ் பெற்ற முழக்கங்களில் ஒன்று. பெரிய அரசியல் உள்ளடக்கம் எதுவுமற்ற ஒரு வசை எப்படியொரு அரசியல் முழக்கமாக மாற முடியும் என்று நமக்கு வியப்பு ஏற்படலாம். ஆனால், ஆதிக்கம் செய்பவர்களுக்கு எதிராக வெளிப்படும் வசைக்குப் பின்னால் இருப்பதும் அரசியல் உணர்வுதான் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு செல்வாக்குடன் திகழ்ந்துவந்த இந்தியக் குடியரசுக் கட்சி அறுபதுகளின் இறுதியில் சரியத் தொடங்கியது. அதனால் ஏற்பட்ட வெற்றிடம் கான்ஷி ராமின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஓர் அவசியத்தை ஏற்படுத்தியது. பகு ஜன் சமாஜ் கட்சி துவக்கப்படுவதற்கான நியாயத்தை இந்தப் பின்னணியில் நாம் புரிந்துகொள்ளலாம். அம்பேத்கரின் தொடர்ச்சியாகப் பல்வேறு கூறுகளைக் கான்ஷி ராமிடம் நாம் பார்க்கலாம் எனினும் அம்பேத்கரிடமிருந்து வேறுபட்ட அம்சங்களும் அவரிடம் உண்டு. தாழ்த்தப்பட்டவர்களின் தனித்துவத்தை நிறுவுவதே அம்பேத்கரது அரசியல் செயல்பாடுகளின் மையம். கான்ஷி ராமோ சமூகக் கூட்டணிகளை உருவாக்குவதையே முதன்மையான பணியாகக் கொண்டார். "எந்தவொரு அரசியல் புரட்சிக்கும் முன்னதாக ஒரு சமூகப் புரட்சி நிகழ்ந்தது. சிவாஜியின் அரசியல் புரட்சிக்கு முன்பு மகாராஷ்டிராவில் பல சமூக, சமய சீர்திருத்தங்களைத் துறவிகள் செய்திருந்தனர். சீக்கியர்களின் அரசியல் புரட்சிக்கு முன் குருநானக்கின் சமய, சமூகப் புரட்சி நடந்திருந்தது" என அம்பேத்கர் சுட்டிக்காட்டுவார். அதன்படி பார்த்தால் கான்ஷி ராமின் அரசியல் புரட்சிக்கு முன்னதாக அம்பேத்கரின் சமூகப் புரட்சி நடந்திருந்ததை நாம் அவதானிக்கலாம். அம்பேத்கரின் அரசியல் இயக்கங்களிலிருந்து கான்ஷி ராம் தனது கூட்டணிக்கான சூத்திரத்தைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அது, பெரிதும் ஜோதிராவ் புலேயால் 1875இல் உருவாக்கப்பட்ட 'சத்யஷோதக் சமாஜ்' அமைப்பின் சாயலையே கொண்டிருந்தது. பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாதார் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கூட்டணியை புலே வலியுறுத்தினார்.

புலேயிடமிருந்து கான்ஷி ராம் ஏன் இந்தக் கருத்தாக்கத்தை எடுத்தாள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளப் பிற்படுத்தப்பட்டோ ரின் அரசியல் திரட்சியையும், குறிப்பாக கலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோ ர் கமிஷனுக்கும் (1953-56) மண்டல் தலைமையிலான இரண்டாம் பிற்படுத்தப்பட்டோ ர் கமிஷனுக்கும் (1978-80) இடையில் நடந்தவற்றையும் நாம் தெரிந்துகொண்டாக வேண்டும்.

சாதி அரசியலில் எண்ணிக்கை என்பது முக்கியப் பங்கு வகிப்பதை நாம் அறிவோம். பிற்படுத்தப்பட்டோ ர் அரசியலிலும் அது வெளிப்படக் காணலாம். 1951இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது முன்னேறிய சாதிகள், அவை தவிர மற்ற சாதிகள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் எனத் தகவல் சேகரிக்கப்பட்டு எஸ்சி/எஸ்டிகளின் மக்கள் தொகை விவரம் மட்டும் வெளியிடப்பட்டது. முன்னேறிய சாதிகளல்லாத பிற சாதிகளின் மக்கள் தொகை விவரங்கள் கலேல்கர் கமிஷனிடம் தரப்பட்டன. அது மொத்த மக்கள் தொகையில் 19.9% ஆகும். அத்துடன் கலேல்கர் கமிஷனின் பட்டியலில் இடம்பெற்று சென்சஸில் எடுக்கப்படாத சாதிகளின் மக்கள் தொகை விவரங்கள் 1911-1931 சென்சஸ் விவரங்களின் அடிப்படையில் யூகிக்கப்பட்டு மொத்தத்தில் 20.5% என உத்தேசமாக முடிவுசெய்யப்பட்டது. அதற்குப் பிறகும் சிலவற்றைக் கூட்டிப் பிற்படுத்தப்பட்டோ ர் மக்கள் தொகை 32.28% என கலேல்கர் கமிஷன் கூறியது. இந்தக் குளறுபடிகள் அப்படியே மண்டல் கமிஷனாலும் வழிமொழியப்பட்டன என்கிறார் பி.கே. ராய் பர்மன் (பார்க்க: In search of that faultless figure, The Little Magazine, Vol: VI, issue 4 & 5, பக்கம் 49-54).

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புப் போராட்டங்கள் அரசியல் தளத்தில் பிராமண எதிர்ப்புக்குப் புத்துயிரூட்டின. பிராமணர்களைப் புறத்தில் வைத்துப் பிற்படுத்தப்பட்ட ர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையைக் கட்டுகிற முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் கான்ஷி ராமின் பகுஜன் அரசியல் புதிய வேகம் பெற்றது.

1989க்குப் பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையும் அதனால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஏற்பட்ட அணிசேர்க்கைகளின் மாற்றமும் கான்ஷி ராமுக்குக் கை கொடுத்தன. பலவீனமான அரசே சிறுபான்மை மக்களுக்கு நல்லது என்ற முடிவுக்கு அனுபவ ரீதியாக கான்ஷி ராம் வந்து சேர்ந்தார். அரசியல் ஸ்திரத்தன்மையும் வலிமையான அரசும்தான் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் என்ற எண்ணம் அம்பேத்கரின் எழுத்துகள் சிலவற்றில் இழையோடக் காணலாம். அந்தக் கருத்துக்கு மாறாக "ஸ்திரமற்ற அரசியலும் பலவீனமான மைய அரசும்தான்" தலித் மக்களுக்கு வசதியானவை என்ற கான்ஷி ராமின் முடிவு அரசியல் ரீதியாக ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கான்ஷி ராம் ஒரு சிந்தனையாளர் இல்லையென்பதால் அரசியல் கோட்பாடு எதையும் உருவாக்கவில்லை. ஆனால் 'பலவீனமான அரசு' பற்றிய அவரது கூற்றுகள் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கும் அளவுக்கு முக்கியமானவை. சர்வாதிகாரத்தைக் கடைபிடிக்காமல் சோஷலிசத்தைக் கொண்டுவர நாடாளுமன்ற ஜனநாயகத்தை எப்படிப் பயன்படுத்தலாமென்பதை விவரித்திருக்கும் அம்பேத்கர், ஜனநாயகம் என்பதன் அடிப்படையாக உள்ள 'பெரும்பான்மை' என்ற கருத்தாக்கம் இந்தியச் சூழலில் எப்படிப் பொருள்படும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். பெரும்பான்மை என்பதை நாம் அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திவிட முடியாது. ஏனென்றால் இங்கு இருப்பது மேலைநாடுகளில் உள்ளது போன்ற அரசியல் பெரும்பான்மை (political majority) அல்ல; இது வகுப்புவாதப் பெரும்பான்மை (communal majority) என்று அவர் வேறுபடுத்திக் காட்டினார். அரசியல் பெரும்பான்மை என்பது மாறக்கூடியது; அது ஒருவரின் விருப்பத் தேர்வின் (choice) அடிப்படையில் உருவாவது. ஆனால் வகுப்புவாதப் பெரும்பான்மையோ ஒருவரது பிறப்பால் உருவாவது; எனவே மாறாத தன்மைகொண்டது. அரசியல் பெரும்பான்மையின் கதவுகள் திறந்திருக்கும்; வகுப்புவாதப் பெரும்பான்மையின் கதவுகளோ இறுக மூடப்பட்டிருக்கும் என்று அம்பேத்கர் விளக்கினார். அரசியல் பெரும்பான்மையின் அதிகாரத்தை வகுப்புவாதப் பெரும்பான்மையின் கையில் கொடுப்பது கொடுங்கோன்மைக்கே வழி வகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

சமூகத் தளத்தில் விடுதலைக்கு 'பௌத்தம் ஏற்ப'தைத் தீர்வாகக் கண்டதுபோல அரசியல் தளத்தில் விடுதலைக்கு என்ன வழி என்பது பற்றியே அம்பேத்கரின் சிந்தனை சுற்றிச் சுழன்றது. அவரது பிற்கால எழுத்துகளில் அரசியல் பெரும்பான்மை வூ வகுப்புவாதப் பெரும்பான்மை என்னும் விஷயம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம். மொழிவாரி மாநிலங்கள் குறித்து 1955 டிசம்பர் மாதத்தில் எழுதியபோது வகுப்புவாதப் பெரும்பான்மையைக் கட்டுக்குள் வைப்பதற்கு இரண்டு பாதுகாப்பு வழிகளை அம்பேத்கர் முன்வைத்தார். சிறிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்பது ஒன்று. ஒரு மாநிலம் எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சிறுபான்மை மக்களின் மக்கள் தொகை விகிதம் சிறிதாக இருக்கும். மகாராஷ்டிரா முழுமையும் எடுத்துக் கொண்டால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான விகிதம் 14:1 என இருக்கும்; மகாவிதர்பா பகுதி மட்டும் தனி மாநிலமாக அமையும் பட்சத்தில் அந்த விகிதம் 4:1 என ஆகிவிடும் என்பதை அம்பேத்கர் உதாரணமாகக் காட்டினார். பெரும்பான்மையின் அதிகாரத் திரட்சியாகவே அரசாங்கத்தை அவர் கண்டார். அவர் முன்வைத்த மற்றொரு வழி, தற்போதுள்ள ரிசர்வ் தொகுதி முறைக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று உறுப்பினர் தொகுதி (plural member constituency) முறையைக் கொண்டு வருதல், comulative voting முறையைக் கொண்டுவருதல் என்பவையாகும். இது பற்றி அம்பேத்கர் அதிகம் விவாதிப்பதற்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இன்றைய நாடாளுமன்ற அரசியல் பற்றிய விவாதத்துக்கு அடிப்படையாக அம்பேத்கரின் மேற்சொன்ன சிந்தனைகள் அமைந்துள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்துடன் சேர்த்து கான்ஷி ராமின் 'ஸ்திரமற்ற அரசியல் சூழல்', 'பலவீனமான அரசு' என்ற கருத்துகளையும் நாம் பரிசீலித்தாக வேண்டும்.

தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதையே ஒற்றைச் செயல்திட்டமாகக் கொண்டு செயல்பட்டவர் என கான்ஷி ராமை விமர்சிப்பவர்கள் உண்டு. சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட தலித் மக்களை அரசியல் பேர சக்தி உள்ளவர்களாக மாற்றுவதற்கு கான்ஷி ராம் எப்படி உழைத்தார் எனப் பார்ப்பது மிகவும் முக்கியம். வகுப்புவாதப் பெரும்பான்மைக்குள் மதவாதிகளுக்கும் சாதிவாதிகளுக்கும் இடையே இருக்கும் நுட்பமான முரண்பாடுகளை கான்ஷி ராம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அந்த உதாரணத்தைப் பிற மாநிலங்களில் அப்படியே கையாண்டுவிட முடியாது எனினும் அந்தப் படிப்பினை நமக்கு உதவக்கூடியதாகும். அரசியல் தளத்தில் கூட்டணி அமைத்த நிலையிலும் வெளிப்படையாக அவமானப்படுத்துவதன் மூலம் வகுப்புவாதப் பெரும்பான்மையை பலவீனப்படுத்தியவர் கான்ஷி ராம். அதற்கிருந்த தார்மீக பலத்தை அவமானப்படுத்துவதன் மூலம் அவர் உடைத்தெறிந்தார். அவரோடு கூட்டணி அமைத்த பிறகு சமாஜ்வாதிக் கட்சியோ பாரதீய ஜனதாவோ பழைய மிடுக்கோடு பேச முடியாத நிலை உண்டானதைக் கவனிக்க வேண்டும்.

நம் நாட்டு முற்போக்கு விமர்சகர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏற்பட்ட சேதத்தை மட்டுமே ஆய்வு செய்து கான்ஷி ராமை மட்டுமே குற்றம் சொல்வார்கள். அவர்கள் சாமர்த்தியமாக வகுப்புவாதப் பெரும்பான்மையைப் பாதுகாக்கிறார்கள். நமது 'முற்போக்காளர்'களின் கற்பனைக்குள் இருக்கும் தலித் என்ற உருவகத்துக்குப் பொருந்தாத யாரையும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. கான்ஷி ராம் மீதான விமர்சனங்களில் பெரும்பாலானவை அப்படியான சகிப்புத்தன்மையற்ற மனப்பாங்கின் வெளிப்பாடுகளேயாகும்.

1965ஆம் ஆண்டு முதன்முதலாக கான்ஷி ராமுக்கு அரசியல் எண்ணம் முளைவிட்டபோது அவர் மனதில் தோன்றிய சமூகக் கூட்டணி பற்றிய கருத்து 1995இல் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டு அது கவிழ்க்கப்பட்ட பிறகு மாறிப்போனது. மத இந்துக்களுக்கும் சாதி இந்துக்களுக்குமிடையேயான முரண்பாடுகளை மட்டுமே அதுவரை முதன்மைப்படுத்திவந்த அவரது அரசியல், அவர்களுக்கிடையிலான ஒற்றுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததில் வியப்பில்லை. அதற்குப் பிறகான பத்தாண்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சி மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் ஆழமான ஆய்வுக்குரியவை. அவற்றில் தமிழக தலித்துகள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

கான்ஷி ராமின் அரசியலை மதவாத அரசியலின் பின்னணியில் மட்டுமல்லாமல் மண்டலுக்குப் பிறகான சாதிவாத எழுச்சியின் பின்னணியிலும் வைத்து ஆராய வேண்டும். சாதி இந்துக்களும் மத இந்துக்களும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள வகுப்புவாதப் பெரும்பான்மையைப் பலவீனப்படுத்தி இங்கே அரசியல் பெரும்பான்மையின் அதிகாரத்தை ஏற்படுத்தவே கான்ஷி ராம் பாடுபட்டார்.

தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற முழக்கத்தை "அவர்கள் சுயமரியாதை பெற வேண்டும்" என்பதிலிருந்தும் "அவர்கள் பணிய மறுக்க வேண்டும்" என்பதிலிருந்தும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிகாரத்தை நோக்கிய கான்ஷி ராமின் பயணம், விடுதலையை நோக்கிய பயணத்தின் துவக்கம்தான். பொது வாழ்வில் அதிகாரம் குறித்தே பேசிவந்த அவர், திருமணம்கூடச் செய்துகொள்ளாமல், தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு துறவியாகவே வாழ்ந்திருக்கிறார்.

'மான்யாவார்' (ஐயா) என அன்போடு அழைக்கப்பட்ட கான்ஷி ராமின் பொது வாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் பகுத்துப் பார்க்க முடியாதவை. அவற்றைக் கூர்ந்து கவனித்தால் 'அதிகாரம்' என்பதற்கு அவர் கொண்டிருந்த பொருள் எதுவென்று நமக்குப் புரியும். அவர் விரும்பியிருந்தால் முதலமைச்சராக மட்டுமல்ல, மேலும் பல பதவிகளை வகித்திருக்க முடியும். ஆனால் ஒரு துறவியாக அவற்றை ஒதுக்கித் தள்ளியவர் அவர். 'அதிகாரத் துறவு' குறித்தும் 'துறவின் அதிகாரம்' குறித்தும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

l

கட்டுரையாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சட்டமன்ற உறுப்பினர்

உள்ளடக்கம்

Google Ads.....


Google