2003 ஜனவரியில் தில்லி இந்தியா இண்டர்நேஷனல்
சென்டரில் IICஇல் நடைபெற்ற 'கதா' கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
முதல் முறையாகப் பிரசுரம் பெறுகிறது.
கதா நிறுவனத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய கீதா தர்மராஜன் அவர்கள், 'குழந்தைகள்
பெண்கள் ஆண்கள்' என்ற தலைப்பில் நான் இன்று பேசவேண்டும் என்று
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தலைப்பைத் திட்டவட்டமாக அவர் யோசித்துத் தேர்வு
செய்தது என்றே நாம் எடுத்துக்கொள்ள முடியும். ஏனெனில் நான் எழுதியுள்ள நாவலின் பெயர்
இது.
நாவலின் சாராம்சத்தை, ஏகதேசமாக மனித உறவுகளை, காலங்கள் முன்பும் காலமாற்றங்கள்
முன்பும் வைத்து ஆராயும் ஒரு எளிய முயற்சி என்று சொல்லலாம். நாவலின் பக்கங்களில்
நான் ஆராய்ந்துள்ள உறவுகள் சார்ந்து என் முடிவுகள் என்னென்ன? அம் முடிவுகளை நான்
நாவலுக்கு வெளியே கொண்டுவந்து, நான் வாழ்ந்த காலத்தின் மீதும் எதிர்கொள்ளும்
காலத்தின் மீதும் போட்டுப் பார்த்தால் என்னென்ன விடைகளை அவை கொண்டுவந்து சேர்க்கும்?
இந்த இரண்டு நோக்கங்களும் அவர்கள் எதிர்பார்ப்பில் இருந்திருக்கக்கூடும்.
தான் படைத்த நாவல் சார்ந்து யோசிப்பதும் தான் வாழ்கிற காலம் சார்ந்து யோசிப்பதும்
படைப்பாளிக்கு ஆர்வத்தைத் தூண்டும் காரியங்களே. அதனால் அவரது தலைப்பு நமக்கு
உருவாக்கும் சிந்தனைகளுக்குள் நாம் ஆயாசம் இல்லாமலும் பதற்றம் இல்லாமலும் போகலாம்
என்று நினைக்கிறேன்.
'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவல் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும்
கோட்டயத்தில் 1937, 38, 39இல் நடந்த கதையாகும். இந்த நாவலில் ஐந்து குடும்பங்கள்
வருகின்றன. எந்தக் குடும்பத்தைப் பற்றியும் முழுமையாக இந்த நாவல் சொல்லவில்லை. எதைப்
பற்றியும் முழுமையாகச் சொல்வது என்பது நாவல்களின் குறிக்கோள்களில் ஒன்றல்ல. ஒரு
நாவலில் எறும்புகளைப் பற்றி முழுமையாகச் சொல்லத் தொடங்கினால் ஆயிரம் பக்கங்கள்
முடிந்த பின்பும் அந்த நாவல் வளர்ந்துகொண்டே இருக்கும். வானம் விரிந்தது என்றும்
எறும்பு சிறியது என்றும் எண்ணுகிறோம். உலகத்தில் உய்ய அந்தக் கற்பனை தேவைதான். ஆனால்
எறும்புக்குள் பல வானங்கள் இருக்கின்றன. கண்டு பிடிக்கச் சில வானங்கள் இன்னும்
மிச்சமும் இருக்கின்றன. இவ்வாறு இருக்கிறது இந்தப் பிரபஞ்சத்தின் கோலம்.
நாவலில் எஸ்.ஆர்.எஸ். குடும்பத்தைப் பற்றதத்தான் சற்று அதிகமான விவரங்கள்
தரப்பட்டிருக்கின்றன. மற்ற குடும்பங்களைப் பற்றித் தந்திருக்கும் விவரங்கள்
குறைவானவைதான். மனித உறவுகள் பற்றிய கவலை இந்த நாவலில் வெளிப்படுகிறது. வாழ்க்கை
ஆதாரங்களில் முக்கியமாக நிற்பது உறவு என்ற நம்பிக்கை கொண்ட ஒரு படைப்பாளியால்
உருவாக்கப்பட்டது இந்நாவல் என்பதை மேலோட்டமான வாசகர்கள்கூடக் கண்டுகொள்ள முடியும்.
எப்போது மனித உறவுகளைப் பற்றி சற்று விரிவாக, தீர்க்கமாக ஆராய ஆசைப்படுகிறோமோ
அப்போது பலவிதமான மனிதர்களை நாவலுக்குள் கடத்துவது தவிர்க்க முடியாத
காரியமாகிவிடுகிறது. ஆண்களும், ஆண்களைவிட அதிகமாகப் பெண்களும், பெண்களைவிட அதிகமாகக்
குழந்தைகளும் இந்த நாவலில் வருகிறார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்குமான உறவு,
பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு, ஆண்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு,
எல்லாக் குடும்பத்தினர்களும் பிற குடும்பத்தினர்களிடம் கொண்டிருக்கும் உறவு,
உதிரியானவர்களிடமும் அன்னியமானவர்களிடமும் குடும்பங்கள் கொண்டிருக்கும் உறவு,
வளர்ப்பு மிருகங்கள்மீது கொண்டிருக்கும் உறவுகள், கோயிலுடன், மழையுடன், வெயிலுடன்,
மண்ணுடன், தாவரங்களுடன் கொண்டிருக்கும் உறவுகள் எல்லாவற்றையும் விசாரிக்கும் போக்கு
இந்நாவலை ஆட்கொண்டிருக்கிறது.
இப்போது இந்நாவலின் குறிக்கோள் பற்றிச் சொன்னேன். குறிக்கோள் உயர்வானதாக
இருந்துவிட்டால் மட்டும் போதுமா? குறிக்கோள் உயர்வாக இருந்ததனாலேயே நாவல்
உயர்வானதாகப் பரிணமித்துவிடுமா? ஊர் சார்ந்தும் மனிதர்கள் சார்ந்தும் அவர்கள்
உறவுகள் சார்ந்தும் இயற்கை சார்ந்தும் இதில் தரப்பட்டிருக்கும் விவரணைகள் அளவில்
சற்று அதிகமானவை. அந்த விவரணைகள் உணர்த்தும் அர்த்தங்களை அறிகிற ஒரு வாசகனுக்கு அவை
வெறும் விவரணைகள் மட்டுமல்ல. மனிதர்களின் தோற்றங்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை
முடுக்கும் அந்தரங்கமான ஊடு பாவுகளை அந்த மனிதர்களும்கூட அறியாதிருக்கும் நிலையில்,
நாம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவது நாவல் என்ற தனித்தன்மை கொண்ட, முடிவை
நோக்கி நகர அவசரம் காட்டாத, படைப்பு வடிவத்தின் அனுகூலமாக இருக்கிறது.
நான் எழுதியிருக்கும் மூன்று நாவல்களை எடுத்துக்கொண்டாலும் சரி, தமிழில்
எழுதப்பட்டிருக்கும் மொத்த நாவல்களை எடுத்துக்கொண்டாலும் சரி, இந்நாவல் மிக
முக்கியமான ஒன்றாகத்தான் எனக்குப்படுகிறது. நாவலைப் பற்றிய நாவலாசிரியரின் கருத்து
இது. நாவலாசிரியன் தன் நாவலைப் புறநிலையில் நின்று பார்க்கத் தெம்பு கொண்டிருந்தால்
நடுநிலை சார்ந்த ஒரு அபிப்பிராயத்தைச் சொல்வதில் வெற்றி அடைவான். இல்லை, தன்
நாவல்மீது பந்தபாசம் கொண்டிருந்தான் என்றால் அதன் அடிப்படையில் அந்த நாவலை நெஞ்சோடு
தழுவிக்கொண்டு நிற்பான். நான் எந்த வகையைச் சேர்ந்தவன் என்பதைத் தீர்மானிக்க
வேண்டியவர்கள் வாசகர்கள்தான். எல்லாத் தளங்களிலும் எல்லாத் துறைகளிலும் நான்தான்
உயர்ந்தவன் என்று சொல்லவோ, அடக்கமாக, உயர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லவோ
எனக்கு விருப்பம் இருக்குமென்றால்கூட அதை வாசகன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.
இச்சகம் பேசும் வாசகன் மூலம் அல்ல, சுதந்திரமான வாசகன் மூலம்தான் படைப்பாளி கௌரவம்
பெறுகிறான்.
இந்நாவல் சார்ந்த என் ஆசையை என்னுடைய மொழியைச் சேர்ந்த வாசகர்களோ எழுத்தாளர்களோ
பெருமளவில் இன்று வரையிலும் ஏற்றுக்கொண்டுவிடவில்லை என்பது எனக்குத் தெளிவாகத்
தெரிகிறது. இன்று ஏற்றுக்கொள்ளாத படைப்புக்களை நாளை வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்
என்று சொல்வது படைப்பாளியின் பழக்கம். அது தீர்க்கதரிசனம் என்று அவன் கற்பனை
செய்துகொள்ள விரும்புகிறான். ஆனால் பல சமயங்களில் அது வெறும் கனவாக
முடிந்துவிடுகிறது.
இந்த நாவலை என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, நுட்பமாகப் பார்த்து மதிப்பிட்ட சுமார்
இருபது இலக்கிய அன்பர்களை நான் மறக்கவே முடியாது. இதற்கு மேல் ஒரு சிலர் என்
நாவலைப் பாராட்டி எழுதியிருந்தாலும்கூட அவர்களது பாராட்டுக்களை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. அவர்களுக்கு உமியும் பிடிக்கும், தானியங்களும்
பிடிக்கும் என்றால் தானியங்களைப் பிறருக்காக அவர்கள் மிச்சப்படுத்தட்டும் என்றுதான்
நான் சொல்வேன். என் நாவலைப் பாராட்டினார்கள் என்பதற்காக நான் அவர்களுடைய பார்வையை
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.
நான் ஏற்றுக்கொள்ளத் தகுந்த மதிப்பீடுகளை முன்வைத்தவர்களை இப்போது நான்
நினைவுகூர்ந்துகொள்கிறேன். என் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்
லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், நாவலாசிரியரும் கட்டுரையாளருமான என் நண்பர் பி.ஏ. கிருஷ்ணன்,
தமிழ் நாவலாசிரியரான காசியபன், தலித் இலக்கியங்களையும் விமர்சனங்களையும்
படைத்துவரும் ராஜ் கௌதமன், 'கோவேறு கழுதைகள்' என்ற சிறந்த நாவலை உருவாக்கிய இமையம்,
இளங்கவிஞர்களில் முன்னணியில் நிற்கும் ஒருவரான மனுஷ்ய புத்திரன், பெண் கவிதைக்கு
ஒரு உத்வேகத்தை ஊட்டிய சல்மா, நேர்மையான விமர்சனங்கள் எழுதிவரும் ராஜமார்த்தாண்டன்,
தன் முதல் தொகுப்பு மூலம் வாசகர்களைக் கவர்ந்திருக்கும் உமாமஹேஸ்வரி, புலமையும்
படைப்பாற்றலும் ரசனையும் நிறைவான கலவையாகக் கொண்டிருக்கும் பிரபஞ்சன், இளம்
எழுத்தாளரும் வாசகியுமான அருண்மொழி நங்கை, புதிய சிந்தனைகளில் ஈடுபாடுகொண்ட
பேராசிரியர் பஞ்சாங்கம் ஆகியோர் இப்போது என் நினைவுக்கு வருகிறார்கள். ஒரு சிலரைப்
பற்றிச் சொல்ல எனக்கு விட்டுப் போயிருக்கக்கூடும்.
என் நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் பொதுவாகப் பார்க்கிறபோது ஒன்று தெரிகிறது.
அவர்களில் ஒருவர்கூட வாழ்க்கையை மனநிறைவோடு எதிர்கொள்பவர்கள் அல்ல. அவர்கள்
வெளிக்குத் தங்களை எப்படிக் காட்டிக்கொள்கிறார்கள் என்பது முக்கியம்தான். உலக
அரங்கில் நிகழும் நாடகம், நடிப்பைத் தவிர்க்கும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால்
அதைவிட முக்கியமானது அவர்கள் உள் மனங்களில் வெளிக்குத் தெரியாமல்
வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். தொலைவில் மட்டுமே நின்று பார்க்கும்போது அவர்கள்
எல்லோருமே சில அதிர்ஷ்டங்களுக்கு ஆளானவர்கள்தான். அது பொய்யான தோற்றமும் அல்ல.
ஆனால் அதைவிடவும் முக்கியமானது வெளிக்குத் தெரியாத அவர்களுடைய கேவல். விம்மல்.
திணறல். இவை சார்ந்த ஊடுருவலை உணரச் சாத்தியப்படும் ஒரு வாசக மனம் இந்நாவலை
விரும்பிப் படிக்கக்கூடும். அவர்களுக்கு இந்நாவல் முக்கியமான ஒன்றாகத் தோன்றலாம்.
அல்லது முக்கியமான நாவல் ஒன்றை எழுத முற்பட்டு அதில் வெற்றிபெற முடியாத என்
தோல்வியை இந்நாவல் உணர்த்தலாம். புறக்கணிப்புக்கோ அலட்சியத்துக்கோ ஆட்பட வேண்டிய
துரதிருஷ்டம் அந்த நாவலுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.
இப்போது நாவலுக்குள்ளே சென்று உறவுகளைப் பார்ப்போம். எஸ்.ஆர்.எஸ். தன் மகன், மனைவி
காரணமாக சந்தோஷமாக இல்லை. மகன் பாலு தன் தந்தையின் கெடுபிடி காரணமாகவும் நோயுற்ற
தன் தாய் காரணமாகவும் மகிழ்வுடன் இல்லை. இளம் விதவையான ஆனந்தத்திற்கு எதிர்கால
வாழ்க்கையே ஒரு புதிராக நிற்கிறது. அவள் நிறைய சிரிக்கிறாள். கலகலப்பாகப்
பேசுகிறாள். கலகலப்பாக அவள் தன்னைக் காட்டிக்கொள்ளட்டும். தன் வாழ்க்கையில் எதுவும்
நிகழாததுபோல் அவள் நடிக்கட்டும். ஆனால் அவள் மனத்தில் துக்கத்தின் வற்றாத நதி சதா
ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்ப்பதற்கு ஒருவருக்குப் பார்வை இல்லையென்றால்,
ஒருவரின் தோற்றமே அவரிடம் மனப்பதிவின் இறுதியாக இருக்குமென்றால், வாழ்க்கைப் புதிர்
சார்ந்த சங்கடங்களில் அவருக்குக் கவனம் இல்லை என்றுதான் ஆகும்.
வள்ளிக்குப் புதிய வாழ்க்கையின் மொக்கு ஒன்று முகரக் கிடைக்கிறது. ஆனால் அதைப்
பறித்து அவள் தன் தலையில் சூடிக்கொள்ள முடியுமா? சாமுவும் சீதாவும் லச்சமும்
கோமுவும் இல்லாமையில் தத்தளிக்கிறார்கள். தரித்திரம் பிடுங்குகிறபோது உறவுகளும்
தரித்திர உறவுகளாகத் தேய்ந்துவிடும். பசி எந்த நல்லுணர்வுகளையும் நிலைபெறச்
செய்வதில்லை. சுகன்யா அவளுடைய பின்னணியில் அவளுடைய ஆளுமையை, தான் விரும்பும்
அளவுக்குச் செழுமைப்படுத்திக்கொள்ள இயலுமா என்று சந்தேகப்படுகிறாள். ஸ்ரீதரன் சதா
மனதில் ஜ்வாலையுடன் இருக்கிறான். அவனுக்குத் தியாகத்தீயில் தன்னைப் பொசுக்கிக்கொள்ள
வேண்டும். அதற்கான நெருப்பு எங்கே இருக்கிறது? எந்த நெருப்பில் விழுந்தால் அச்செயல்
அவனுக்கு அர்த்தபூர்வமானதாக இருக்கும். வெறும் சாம்பலாவது அவன் நோக்கமல்ல.
பிரம்மச்சாரியான செல்லப்பாவுக்கு இளம் விதவையான ஆனந்தத்தின் மீது ஏகப்பட்ட ஆசை.
அதில் என்ன தவறு? அவளுக்கும் அவர் மீது விருப்பம்தான். காந்தி
காத்துக்கொண்டிருக்கிறார் அவர்களை ஆசீர்வதிக்க. அதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால்
சுற்றம் சொந்தம், சுற்றமும் சொந்தமும் அற்ற அன்னியர், அவள் ஒரு விதவை என்பதை
மட்டுமே தெரிந்துகொண்டவர்கள், அதற்குமேல் அவள்மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்,
இவர்கள் எல்லோரையும் அவள் காந்தியைவிடவும் அதிகம் கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் சொல்லிக்கொண்டே போகலாம். மனித மனங்களில்
தேங்கியிருக்கும் துக்கத்தைச் சொல்லத் தொடங்கினால் அதற்கு முடிவு என்பதே இல்லை.
எவ்வளவோ வெற்றிகளை நாம் கொண்டிருக் கிறோம். பரிணாமத்தில் நாம் அடைந்திருக்கும்
வெற்றிகள் கொஞ்ச நஞ்சமல்ல. என் கவிதை ஒன்று இவ்வாறு சொல்கிறது:
கல்லும் பிராணன் இழுத்து
மேலெழுந்து பறந்தது.
அலைகள் பாதம் முளைத்துக்
கரையேறி வந்தன.
திசுக்கள் பரிணமித்து
வேதங்கள் கோஷித்தனர்.
மூளைச்சுடரின் அங்குசம் பட்டு
பிளிறி எழுந்தன யானைகள்.
மின்னலும் மழையும்
பின்பக்கம் நின்றன.
அத்தனையும் முடிந்து
ஒரு விசும்பல் எழுந்தது.
ஏன் என்றது வானம்
நான் யார் என்று கேட்டது
மண்ணில் ஒரு குரல்
கடல் சிரித்தது.
வெற்றிகளுக்குப் பின்னால் அந்த விசும்பல். வெற்றிகளைப் பற்றி அறிவியல்
பேசிக்கொண்டிருக்கிறது. விசும்பலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது இலக்கியம்.
இன்னும் மனிதனுக்கு அவன் கனவு காணும் வாழ்க்கை வந்து சேரவில்லை. இன்னும் அவனுக்குச்
சுதந்திரம் கிடைக்கவில்லை. சமத்துவம் வந்து சேரவில்லை.
மனிதர்கள் சமமாக வாழ வேண்டும் என்ற தத்துவம் ஒருவனை ஊடுருவத் தொடங்கிவிட்டால் அவன்
ஆபத்தானவனாக மாறத் தொடங்குகிறான். அதன்பின் அந்த மனிதனுக்கு வாழ்க்கை ஒரு
சோதனைதான்.
நாவலில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமல்போன துக்கத்தை நாம் பார்ப்போம் என்றால்
நாவலுக்கு வெளியே இந்த பரந்துபட்ட உலகில், வரலாற்றின் மிகப் பெரிய நீட்சியில் மனித
குலத்தையே அழித்துவிட உருக்கொண்டுவரும் சக்திகளை நம்மால் கண் திறந்து பார்க்க
முடியும். இன்று நேற்றல்ல, காலம் காலமாக மனிதர்கள் சக மனிதர்களை அழித்துத்
தங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
போரில் தங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் ஆண்கள். அவர்கள் அழிவதற்கு முன்
பெண்களையும் குழந்தைகளையும் அழிக்கிறார்கள். மனித வாழ்க்கைக்காக நாம் உருவாக்கி
வைத்திருக்கும் கட்டடங்களிலிருந்து நாகரிகம் வரை எல்லாவற்றையுமே அழிக்கிறார்கள்.
வெளி முழுக்கவும் மாசு படியும்படி செய்கிறார்கள். கொடிய நோய்களைப் பரப்புகிறார்கள்.
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இந்தக் கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
பெண்கள் ஆண்களின் அதிகாரத்தால் சமத்துவ நிலையை அடைய முடியாத இழிவுக்கு ஆளாகிக்
கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் ஊட்டச் சத்தின்றி, ஒரு
வேளைச் சோறின்றி இறந்துகொண்டிருக்கின்றன.
எல்லாரையும் பாரபட்சம் இல்லாமல் தாக்கிக் கொண்டிருக்கின்றன எண்ணற்ற நோய்கள். இந்த
நூற்றாண்டில், முன்பிருந்த எல்லா நோய்களையும் சிறுமைக்கு ஆட்படுத்தி வெற்றிவாகை சூட
எய்ட்ஸ் காத்துக்கொண்டிருக்கிறது. வறுமை என்று எடுத்துக்கொண்டாலும் சரி, கலாச்சார
வறுமை என்று எடுத்துக்கொண்டாலும் சரி, சிந்தனை சார்ந்த வறுமையென்றாலும் சரி,
ஆகக்கொடிய சாதி வேற்றுமை என்றாலும் சரி, தீண்டாமையை எடுத்துக்கொண்டாலும் சரி,
கல்வியின் தரங்கெட்ட நிலைகளை எடுத்துக்கொண்டாலும் சரி - இவையெல்லாவற்றையுமே இந்திய
வாழ்க்கையிலிருந்து அகற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்ற எண்ணத்தையே காலம் நமக்கு
உணர்த்திக்கொண்டு வருகிறது. வைத்தியம் பணக்காரனின் உயிரை விலைமதிப்பற்றதாகவும்
ஏழைகளின் உயிரை மலிந்தவையாகவும் கருதுவதிலும் சரி, அரசியல் ஊழல்களிலும் சரி,
லஞ்சத்திலும் சரி, உலக வரை படத்தில் இந்தியா யாராலும் வெல்ல முடியாதபடி கொடிகட்டிப்
பறந்துகொண்டிருக்கிறது.
நாம் பெற்ற சுதந்திரத்திற்கு 56 வயதாகிவிட்டது. ஒரு இந்தியக் குடிமகனின் சராசரி
வாழ்வு அதிகபட்சம் அறுபது அறுபத்தைந்தாக இருக்கலாம். அப்படியென்றால் காலம் இன்னும்
அதிகமில்லை. இனங்களுக்குள் சண்டை மூட்டி, சாதிகளுக்குள் சண்டை மூட்டி, மூளும்
சண்டைகள் எல்லாவற்றுக்கும் நெய் வார்த்து ஜுவாலைகளை எழுப்பிக் குளிர்காய விரும்பும்
அரசியலின் அக்கிரமங்கள் உச்சகட்டங்களை எட்டிவிட்டன. வாழ்க்கையை அழிக்க ஒரு
தேசத்தைக் கடல்கொள்ள வேண்டும் என்பதில்லை. அந்தத் தேசத்தினராலேயே அதைச் செய்து
முடிக்க முடியும்.
பெண்கள் அடைய வேண்டிய சமத்துவத்தை முன்வைத்துப் பெண்களும் ஆண்களும் தீவிரமாகச்
சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் விடுதலை பற்றிய சிந்தனைகள் கடந்த ஒரு
நூற்றாண்டில் மிகப் பெரிய வீச்சை உருவாக்கியிருக்கின்றன. ஆண்களுக்கும்
பெண்களுக்குமான சமத்துவமின்மையின் இடைவெளி குறைந்துகொண்டு வருகிறது. இருந்தாலும்
இன்றைய நிலை என்ன? ஆண்களை விட இன்றும் பெண்களுக்கு ஆயுள் குறைவு. இன்றும் ஆண்களை
விடவும் பெண்களுக்குப் படிப்புக் குறைவு. குடும்பங்களுக்குள் ஆண் குழந்தைகளைச்
சொத்தாகவும் பெண் குழந்தைகளைச் சுமையாகவும் பார்க்கும் போக்கு இன்றும் இருக்கிறது.
பெண் குழந்தைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. வரதட்சிணை சார்ந்த பிரச்சினைகளில்
எப்போதும் ஸ்டவ் அடுப்புக்களால் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் பெண்கள்தான்.
கற்பைச் சூறையாடுவது ஆண்கள் வேலை. கற்பைக் காப்பாற்றுவது பெண்கள் வேலை. இதுதான் நம்
நம்பிக்கை. இவ்வாறு நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இருந்தாலும் பெண்கள் தங்களது
சமத்துவத்தை வென்றெடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்குக் கால அவகாசம் அரை
நூற்றாண்டாக இருக்கலாம். அல்லது ஒரு நூற்றாண்டாகக்கூட இருக்கலாம்.
குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். உயர்ந்த பள்ளி, உயர்ந்த மருத்துவமனை, சமூகக்
கௌரவத்தைத் தரும் விளையாட்டுக்கள், உல்லாசப் பயணங்கள், வானத்தில் பறப்பதற்கான
வாய்ப்பு போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களுமே வசதியான குழந்தைகளைத் தேடித் தான்
வருகின்றன. இவை ஒன்றும் ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. வளர்ந்து வருபவர்கள்
அல்ல குழந்தைகள், உருவாக்கப்படுபவர்கள்தான் குழந்தைகள் என்ற எண்ணம் சமூகத்தில்
ஊடுருவிவிட்டது. இருபது வயதிலிருந்து இருபத்தைந்து வயதிற்குள்ளாக அமெரிக்காவுக்கு
ஏற்றுமதி செய்யப்படுவதற்கான கச்சாப் பொருளாகத்தான் குழந்தைகள் பார்க்கப்படுகின்றன.
உயர்வோ தாழ்வோ மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்களின் பழக்கவழக்கங்களை நகல் செய்வதுதான்
நடுத்தர வர்க்கத்தினரின் மயக்கமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினரை அவர்கள் கீழே
இருப்பவர்கள் எல்லோருமே நகல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இப்போது குழந்தைகளுக்குப் பொது அறிவு தேவையில்லை. தத்துவம், வரலாறு, இலக்கியம்,
அறிவியல், இசை, ஓவியம், நாடகம் எதுவுமே தேவையில்லை. கணினியில் அவர்கள் தேர்ச்சி
பெற்றிருந்தால் மட்டுமே போதுமானது. கணினியில் மிக ஆழமான தேர்ச்சி பெற்றவர்கள்
கணினிக்கு அப்பால் வாழ்க்கை தரும் சாதாரண விஷயங்களைக்கூட கிரகித்துக்கொள்ள
முடியாதவர்களாக இருக்கிறார்கள். அல்லது தங்கள் தேர்ச்சிக்கு அப்பாற்பட்ட
விஷயங்களின் மீது அலட்சியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெகு சமீபத்தில்கூட
நம்மால் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத வருமானங்களைக் கணினித்
தேர்ச்சியாளர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேற்பட்ட அறிவுகள் எவையும்
தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நினைப்பைக் குடும்பம்
ஆமோதிக்கிறது. சமூகம் போற்றுகிறது.
குடும்பத்தின் ஆரோக்கியம்தான் சமூக ஆரோக்கியத்தின் அடிப்படை. அலுவலகங்களின்
ஆரோக்கியம் முற்றாகச் சீரழிந்துபோய்விட்டது. என் சிறுவயதில் என் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் ஒரு சம்பவத்தைச் சொல்வார்கள். எங்கள் உறவுகளில் ஒருவருக்கு அரசாங்கப்
பணி கிடைத்தது. அவர் பணிக்குப் போவதற்கு முன் தந்தையை வணங்கியபோது, அவர் தந்தை தன்
மகனிடம் அவன் பணியில் காலணாகூட லஞ்சம் வாங்கமாட்டேன் என்று தன் முன்னால் சபதம்
எடுத்துக்கொள்ளச் சொன்னாராம். அவர் விருப்பத்திற்கு ஏற்ப சபதம் எடுத்துக்கொண்டுபோன
மகன் தன் வாழ்நாளில் லஞ்சம் வாங்கினாரா அல்லது வாங்கவில்லையா என்பது தெரியவில்லை.
இன்று இந்தியாவில் எந்தத் தந்தைக்காவது தன் மகனிடம் அவன் பணிக்குச் செல்லும் அன்று
லஞ்சம் வாங்கமாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு போகும்படி கூறத் தைரியம்
இருக்குமா என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.
உலகத்தை ஒரு குடும்பமாகப் பார்த்தவர்கள் நம் மரபில் இருந்திருக்கிறார்கள். இன்று
நேற்றல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கிறார்கள். நம் தேசத்தில்
மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இவ்வாறு சிந்தித்தவர்கள் இருக்கிறார்கள். மேலான
மனிதனின் தவிர்க்க முடியாத தாகம் அது. ஆழச் சிந்திப்பவர்களுக்கு மனிதகுலம் ஒன்றே
என்று தோன்றியதில் வியப்பில்லை. சமயங்களைத் தாண்டி, நிறங்களைத் தாண்டி, பட்டப்
படிப்புகளைத் தாண்டி, கலாச்சார வேற்றுமைகளைத் தாண்டி மனிதனை ஒன்றுபடுத்தும் கூறுகள்
இன்றும் இருக்கின்றன. இந்தக் கூறுகள் இன்று அழுத்தம் பெறுவதில்லை. ஒரு
சமயத்தினருக்கும் மற்றொரு சமயத்தினருக்கும் சண்டை. ஒரு இனத்திற்கும் மற்றொரு
இனத்திற்கும் இடையே தாங்க முடியாத வெறுப்பு. பணக்கார தேசங்கள் ஏழை தேசங்களைச்
சுரண்டுவதற்கும் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொள்வதற்கும் ஆடுகிற அரசியல்
நாடகங்களை இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறோம். போர்களிலும் பகையிலும்
மோதல்களிலும் இறந்து போகும் உயிர்களின் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க இடம்
தருவதல்ல. உலகத்தையே அழிப்பதற்கான தயாரிப்புகளை யார் யார் கொண்டிருக்கிறார்கள்
என்பதையே தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 'எனக்கு அணு ஆயுதங்கள் உற்பத்தி
செய்வதில் நம் பிக்கையில்லை. ஆனால் என்னை விடவும் பெரிய தேசம் என்னை அழித்துவிடக்
கூடாது என்பதற்காகத்தான் நான் அணு ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்' என்று
ஒவ்வொரு நாடுமே கூறுகிறது. உலகத்தை அழிக்கும் இந்த விளையாட்டில் ஈடுபடவே எல்லோரும்
விரும்புகிறார்கள். ஒரு சிலரால் ஈடுபட முடியவில்லையென்றால் அவர்களுக்குப் பொருளாதார
பலம் இல்லை என்று அர்த்தம். பொருளாதார பலம் இருந்தால் பேரழிவுக்கு இட்டுச் செல்லும்
எல்லா அறிவுகளையும் அவர்களாலும் பெற முடியும். அறிவை அழிவுக்குப் பயன்படுத்தத்
துணிந்துவிட்ட விஞ்ஞானிகள் எல்லாத் தேசங்களிலும் உருவாகியிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் இவர்கள்தான்.
அழிந்து போகும் மிருகங்களின் இனங்கள், தாவரங்களின் இனங்கள், புழு பூச்சிகளின்
இனங்கள் நாள்தோறும் நம்மை ஏழையாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டிலேனும்
இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இக்கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படுவதும்
எழுத்தாளர்களின் தவிர்க்க முடியாத பணியாகும். இங்கு கூடியிருக்கும் எழுத்தாளர்கள்
இக்கொடுமைகள் பற்றி மேலும் சிந்தித்து ஆக்கபூர்வமான எதிர்ப்புணர்வையும்
விழிப்புணர்வையும் மக்களிடையே உருவாக்குவார்கள் என்று நம்ப நான் ஆசைப்படுகிறேன்.