தமிழின் மிகச் சிறந்த சிந்தனையாளரும், மாபெரும் எழுத்தாளருமான தங்கள் தந்தை திரு.
சுந்தர ராமசாமி அவர்கள் காலமான செய்தியைப் பத்திரிகை வாயிலாக அறிந்து மிகுந்த
வேதனையும் துயரமும் அடைந்தேன். தமிழ்ச் சிந்தனை உலகிற்கும், தமிழ் வாழ்வின் கதைகளைச்
சொல்லிவந்த ஒரு உலகிற்கும் உங்கள் தந்தையாரின் இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.
தங்களுக்குச் சொந்த முறையில் ஏற்படும் துயரத்தின் அளவு உணர்ந்துகொள்ளக்கூடியதே.
இந்தத் துயரைத் தாங்கிக்கொள்ளும் சக்தியைத் தங்களுக்கும், தங்கள்
குடும்பத்தினருக்கும் இறைவன் தந்தருள்வானாக!
தமிழ் எழுத்துலகம் உள்ளவரை தங்கள் தந்தையின் பணிகள் சிறப்பாக நினைக்கப்படும்
என்பதில் ஐயமில்லை. உங்கள் துயரில் நானும் பங்குகொள்கிறேன். அன்னார் விட்டுச் சென்ற
பணியைத் தொடர்ந்து செய்வதே அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும். அன்னாரின்
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
ரி.ஷி. முஹம்மத் ஷுஐப்
காயல்பட்டினம்
v
நண்பர் சுந்தர ராமசாமியின் அகால மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். தங்கள் துக்கத்தில் எங்களைப்
போன்ற நண்பர்களும் அவரது எண்ணற்ற வாசகர்களும் ரசிகர்களும் பங்கு பெறுகிறோம் என்பது
ஓரளவு உங்களுக்கு ஆறுதலைத் தரக்கூடும்.
சுந்தர ராமசாமியின் அருமையான பல படைப்புகளை நான் 'சரஸ்வதிஒயில் வெளியிட முடிந்தது
எனக்குப் பெருமை அளிக்கிறது. 'சரஸ்வதி'யின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்து 'சரஸ்வதி'யின்
வளர்ச்சியில் பெரும் பங்காற்றி எனக்குப் பக்கபலமாக அவர் இருந்தது என்றென்றும் என்
நினைவில் இருக்கும்.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். தமிழ் இலக்கிய
மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பணி என்றென்றும் தமிழர்களின் நினைவில்
இருக்கும். அவரின் ஆத்மா அமைதி அடையப் பிரார்த்திக்கிறேன்.
வ. விஜயபாஸ்கரன்
சென்னை
v
தங்களது தந்தையும் புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு. சுந்தர ராமசாமி காலமானது கேட்டு
அதிர்ச்சியும் துக்கமும் அடைந்தேன். ரகுநாதனுக்குப் பிறகு என்னைக் கவர்ந்த
எழுத்தாளர்.
'ஒரு புளியமரத்தின் கதை' 'சரஸ்வதி' இதழில் வந்தபோது நான் பரபரப்பாகப் படித்தேன்.
அடக்கமும் நகைச்சுவையும் மனித இயல்புகளைக் கூர்ந்து நோக்கும் எழுத்துத் திறனும்
கொண்டவர் சு.ரா. 'ஜே.ஜே: சில குறிப்புகள்' பற்றி ஜெயகாந்தனிடம்
பேசிக்கொண்டிருந்தபோது, 'அதை அவர்தான் எழுத முடியும்' என்று உறுதிபடக் கூறினார்.
நாகர்கோவில் கடைக்கு வந்திருக்கிறேன். எங்களுக்கு ஜி ஷிலீவீக்ஷீt வியாபாரம் (Kayes
115 T Shirt) என்றாலும் அவரைப் பார்க்க வந்தேன். முடியவில்லை. இனி மறக்கவும்
முடியவில்லை.
கேயெஸ்
திருப்பூர்
v
கிட்டத்தட்ட தகவல் தொடர்புகள் விரைவில் வராத ஒரு கிராமத்தை ஒத்த பகுதியில்
குடியிருக்கிறேன். தங்கள் தந்தையாரின் மறைவுச் செய்தி தாமதமாகத்தான் கிடைத்தது.
நமக்கும் தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. உடன் வந்து தங்களைச் சந்திக்க
முடியாமைக்கு வருந்துகிறேன். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் ஆறுதலும் அமைதியும்
பெற விரும்புகிறேன்.
இன்குலாப்
ஊரப்பாக்கம்
v
தந்தையாரின் மறைவு என்ற மாபெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அனுபவித்த உங்கள்
மனம் இன்னும் மீண்டிருக்காது என்பதை அறிவேன். 'உங்கள் அப்பா எப்படி இருக்கிறார்?'
என்று இனி ஒருபோதும் உங்களைக் கேட்கும் வாய்ப்பு எங்களுக்கும் இனி கிட்டப் போவதில்லை.
மனம் மிகவும் வருந்துகிறது கண்ணன். இம்மாதிரி தருணங்களில் தேற்றுபவருக்கும்
தேற்றப்படுபவருக்கும் வார்த்தைகள் போதுமானவையாக இருப்பதில்லை. தந்தையாருக்கு
நெருக்கமாக இருந்தவர்களின் உணர்வும், ஆதங்கமும் உங்களைக் குறிப்பிட்ட அளவே தேற்ற
முடியும். ஏனென்றால் தந்தையாய், நண்பராய், ஆசானாய், வழிகாட்டியாய் பல்வேறு நிலைகளில்
உங்களுடன் வாழ்ந்தவர் அவர். இருந்தாலும் தாங்கிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே
தேற்றிக்கொள்ளுங்கள். இலக்கியம், எழுத்து, பேச்சு என்ற எல்லைகளுக்கப்பால் ஒரு மனித
நேயம் மிக்க மனிதராய் அடையாளம் கொண்டவர் அவர். சேலம் கருத்தரங்கில் அவர் நலன் பற்றி
விசாரித்தபோது விரைவில் ஊர் திரும்புவார் என்று கூறினீர்கள். அவர் வந்ததும்
நாகர்கோவில் வர இருவரும் எண்ணியிருந்தோம். அப்போது, இப்போது என்று தள்ளிப்போடப்பட்ட
வாய்ப்பு கிட்டாமலேயே போய்விட்டது.
சேலத்திலிருந்து ஊர் திரும்பும்போது அவரைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம். மலரும்
நினைவுகள் போல் அவரைச் சந்தித்து உரையாடிய விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம்.
இனி இது மட்டும்தான் வாய்க்கும். தோற்றம், எழுத்து, லட்சியம், ஆளுமை முதலிய
எல்லாவற்றாலும் எங்களைக் கவர்ந்தவர் அவர். இவற்றின் மூலம் மனதிற்கு நெருக்கமாக
வருபவர்கள் மிகச் சிலரே.
உங்கள் துக்கத்தில் நாங்களும் துயரத்தோடு பங்கு கொள்கிறோம். குடும்பத்தினர்
எல்லோருக்கும் எங்கள் அன்பையும் இரங்கலையும் தெரிவிக்கவும்.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
புதுக்கோட்டை
v
அப்பாவின் மறைவு ஈடு செய்ய இயலாத ஓர் பேரிழப்பு. இலக்கிய உலகம் மட்டுமல்ல, அவரோடு
சில மணி நேரம் பழகியவர்கள்கூட அவருடைய அன்பான அரவணைப்பையும் சம நோக்கையும்
எளிமையையும் மறக்க முடியாது. அக்டோ பர் 2 அன்று சேலத்தில் அப்பா வந்தவுடன் நாகர்
கோவில் வருவதாகச் சொல்லி விடைபெற்றேன். அதற்கான வாய்ப்பே இல்லாமற் போய்விட்டது.
ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலும் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சச்சியின் மூலம் கேள்விப்பட்டுக் கடிதம் எழுதியதோடு 'காகங்கள்' கூட்டத்திற்கும் பேச
அழைத்தார்கள். பிறகு புதுக் கோட்டைக்கு வந்தது, எங்களுடன் இருந்தது, நூலகத்தைப்
பார்த்தது, நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் - எப்படி மறக்க முடியும்?
வயது பாராமல், பட்டம் பதவி பாராமல், எல்லோரையும் சமமாகக் கருதிப் பழகிய அவரது
சான்றாண்மை எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டிய ஓர் உயர் பண்பு. அப்பாவின் கனவை
நனவாக்க வேண்டிய தங்களின் முயற்சிக்கு என்றும் துணை நிற்பதே என் போன்றோர் அவருக்கு
ஆற்றும் நன்றிக் கடன் - உண்மையான அஞ்சலி.
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
புதுக்கோட்டை
v
திரு. சுந்தர ராமசாமி காலமானார் என்ற துக்கச் செய்தியைத் தொலைக்காட்சியின் ப்ளாஷ்
நியூஸில் படித்தேன். மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பலரும் அவரவர் தரப்பில் அவருடனான
உறவைப் பற்றிப் பதிவுசெய்து வருகிறார்கள். அவரது நண்பர்களின் எண்ணிக்கை பிரமிக்க
வைக்கிறது. இவ்வளவு நண்பர்களையும் தனது உயர்வைக் கருதாது அரவணைத்துக்கொண்டு
வந்திருப்பது இன்னும் மிகப் பெரிய பிரமிப்பாக இருக்கிறது. என் அன்பு சு.ரா.வுக்கு
நானும் இரண்டு கடிதங்களை எழுதியிருந்தேன். இரண்டுக்கும் முறையே ஒரு வாரம், பதினான்கு
நாட்கள் இடைவெளியில் மிகுந்த அன்புடன் பதிலெழுதியிருந்தார். இரண்டாவது கடிதத்தில்
எனது வேண்டலுக்கிணங்க அவரது புகைப்படம் ஒன்றை இணைத்து அனுப்பியிருந்தார்.
என்னைப் போன்ற மிகச் சாதாரணமான வாசகன் ஒருவனுக்கு நவீன தமிழ் இலக்கிய உலகில் மிக
முக்கியமானவரான திரு. சு.ரா. கடிதம் மற்றும் புகைப்படம் இவற்றை மிகுந்த சிரத்தை
எடுத்து அனுப்புகிறார். ஆத்மார்த்தமான வாசகன் ஒருவன் தன் படைப்பாளியைக் கொண்டாடும்
விதத்திற்குச் சிறிதும் குறைவில்லாதது சு.ரா. வாசகர்களைக் கொண்டாடிய விதம்.
இரண்டாவது கடிதத்தில் தான் கலிபோர்னியா செல்வதாகவும் திரும்ப ஆறு மாத காலமாகலாம்
எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகளை அக்டோ பர் 15ஆம் தேதி திரும்பத் திரும்பப்
படித்துப் பார்த்தேன். மிகைப்படுத்தாமல் கூறுகிறேன். அவரது கடைசி வரிகளைப் படிக்கப்
படிக்கக் கண்களில் நீர் திரையிட்டது.
கு. இரமேஷ் குமார்
கங்களாஞ்சேரி
v
எத்தனையோ புதியவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டியாக இருந்த முதுபெரும் தமிழ்ப்
படைப்பாளி மதிப்பிற்குரிய சு.ரா. அவர்கள் தன்னுடைய கம்பீரமான தமிழ் எழுத்துகளை
நம்மிடையே நினைவாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டதைப் பத்திரிகைகள் மூலம் அறிந்த பிறகு
எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
அவருடைய எழுத்து ஆகிருதிக்காக மட்டுமே அவரை நான் இப்போது நினைக்கவில்லை. 1999இல்
எனது மரண தண்டனை உச்சநீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வந்த
அச்சுறுத்தலான காலத்திலும் சென்னைக் கூட்டமொன்றில் மரணதண்டனைக்கெதிரான தன்னுடைய
கருத்தினைப் பதிவு செய்தவர் சு.ரா. அவர்கள்.
இன்றைக்குக் குடியரசுத் தலைவர் விடுதலை செய்யத் தயாராக இருக்கிற 50 பேரில் நானும்
ஒருவன். அன்றைக்கு அதாவது 1999இல் தூக்கிலிடப்பட்டிருந்தால் இன்றைக்கு 49ஆக அல்லவா
இருக்கும். இப்போது நான் இருக்கிறேன் என்றால் சு.ரா. அவர்களின் மரண தண்டனைக்கு
எதிரான எதிர்ப்பும் ஒரு காரணம் என்பேன்.
இந்தத் தருணத்தில் - இந்தத் துயரமான சூழலில் தங்களதும் குடும்பத்தினதும்
உணர்வுகளுடன் நானும் . . .
ம.தி. சாந்தன்
வேலூர்
v
தங்களின் அன்புத் தந்தை - அறிவுத் தந்தை அமெரிக்காவில் இறந்த செய்தியைத் 'தினமணி'
நாளிதழ் மூலம் தெரிந்துகொண்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சு.ரா.
அவர்களின் மொழிபெயர்ப்பான 'செம்மீன்' படித்துக் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
அப்போதுதான் திரு. பொ. வேல்சாமி அண்ணாச்சியிடம் சு.ரா. என்றால் யாரு என்று கேட்டேன்.
அவர் ஒரு இலக்கியவாதி, எழுத்தாளர், மிகவும் புரட்சிகரமான சிந்தனைவாதி என்று கூறினார்.
சு.ரா. அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரை, சங்கரராமன் கொலை வழக்குப்
பற்றியும் ஜயேந்திரரின் போலிச் சாமியார் வேசம் பற்றியும் மிகத் தைரியமாகப்
பத்திரிகையில் கூறியது, எழுதியது மிகவும் பாராட்டத்தக்கது.
இலக்கியவாதிகள் நெஞ்சத்தில் சு.ரா. அவர்கள் என்றென்றும் அணையா விளக்காகவே ஜொலிப்பார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
எஸ். நாகராஜ்
பட்டீஸ்வரம்
v
அம்மாவுக்கும் உங்கள் அனைவருக்கும் என் இரங்கல். ஆந்திராவில் யானம் என்னும் ஓர்
இடத்தில் இருந்தேன். சென்னை திரும்பியதும் நேற்று உறவுக்காரர் ஒருவர் சொன்னார்.
'காகங்க'ளில் ஒருவனாக அங்கு வந்துபோய் உங்கள் வீட்டு உணவை உண்டு திரிந்தவன், இன்று
பசுவய்யாவுடைய 'பின்திண்ணைக் காட்சி' கவிதையில் வருகிற காகங்களில் ஒன்றாகவே
உணர்கிறேன்.
என் குருநாதர்களில் ஒருவர். அவரிடமிருந்து எவ்வளவோ கிரகித்திருக்கிறேன்.
மறக்கப்பட்டது எல்லாம் இறந்தது; மறக்க முடியாதது எப்போதும் நிகழ்வுதான் என்று இயலும்
காலக் கணக்கில் சுந்தர ராமசாமி இறக்கவே இல்லை. என்னளவிலும் நான் உயிரோடிக்கிறவரை.
ராஜசுந்தரராஜன்
சென்னை
v
தங்கள் தந்தை சு.ரா. அவர்கள் எனது பேரன் கோபாலகிருஷ்ணன் வாய்மொழி மூலமாகவே என்னைத்
தெரிந்து எனக்குக் கடிதம் ஒன்று எழுதி அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் பல
விசயங்களைத் தெரிவித்ததோடு உங்களுக்கு அன்பளிப்பாக ஒரு பத்திரிகைக்கு சந்தா கட்ட
விரும்புகிறேன். எந்தப் பத்திரிகை உங்களுக்கு விருப்பமானது என்று எழுதியிருந்தார்.
அதற்கு நான் 'உயிர்மை' மாத இதழைக் குறிப்பிட்டு லெட்டர் மூலமாக அவருக்குத்
தெரிவித்தேன். அதன்படியே 'உயிர்மைஒக்கு எனது முகவரிக்கு ஓராண்டுச் சந்தா செலுத்தி
மாதாமாதம் வந்துகொண்டிருந்தது. அதன் பிறகு கோவையில் கிருஷ்ணா சுவீட்ஸ் கலை அரங்கில்
நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவன்று விழா முடிந்த கடைசியில் எனது மகன், மருமகள்,
பேரன் கோபாலகிருஷ்ணன், அவனது தங்கை கவிதா ஆகிய ஐந்து பேருடனும் இணைந்து நின்று
போட்டோ எடுத்துக்கொண்டார். அரசியல், இலக்கியம், சினிமா பற்றி பாரபட்சமின்றி
விமர்சித்துத் தீர்ப்பளிக்கும் மாமேதை சு.ரா.வின் மரணம் தமிழகத்திற்கு ஒரு பெரிய
இழப்பை உண்டாக்கிவிட்டது. இரண்டு வருடத்திற்குள்ளாகவே என்மீது மிகப் பெரிய அன்பும்
ஆதரவும் காட்டிய தங்கள் தந்தையின் மரணச் செய்தி கேட்டு பெரிய அதிர்ச்சிக்கும்
ஏமாற்றத்திற்கும் உள்ளாகிவிட்டேன். எனக்கே இப்படியென்றால் உங்கள் குடும்பத்தினருக்கு
எப்படி இருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரை
இழந்துவாடும் தங்களுக்கும் தங்களின் தாய், சகோதரிகள் மற்றும் உற்றார்
உறவினர்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மு. குருசாமி நாடார்
அரசிப்பாளையம்
v
சிங்கை 'தமிழ் முரசு' ஞாயிறு பதிப்பில் தங்கள் தந்தை காலமான செய்தியைப் படித்து,
நான் மிகவும் வேதனையடைந்தேன். இறுதிவரையில் ஓயாமல் எழுதிக்கொண்டும்,
சிந்தித்துக்கொண்டும் இயங்கிவந்த அவருடைய இலக்கிய வாழ்க்கை நின்றுபோனது
பெருந்துயரமாக இருக்கிறது. மத்திய சாகித்திய அகாதெமி விருது, அவருக்கு
posthumous award-ஆகக் கொடுப்பார்களேயானால் எனக்கு மகிழ்ச்சியாய்
இருக்கும்.
தங்கள் தந்தை சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் தம்
ஆழமிக்க கருத்துக்களை எல்லோருக்கும் புரியும் விதத்தில் எளிமையாகச் சொன்ன முறையும்,
இங்குள்ள இளைய தலைமுறை எழுத்தாளர்களோடு அவர் சுமுகமாகப் பழகிய நேர்த்தியும் இன்னும்
என் மனத்தில் உலவுகின்றன.
திரு. சுந்தர ராமசாமி அவர்களின் பிரிவால் வாடும் தங்களுக்கும், தங்கள் அம்மா மற்றும்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் தொடங்கிவைத்த 'காலச்சுவடு' தொடர்ந்து சுவடுகள் பதிக்கட்டும்.
இராம. கண்ணபிரான்
சிங்கப்பூர்
v
இன்று, தங்கள் தந்தையார் திரு. சுந்தர ராமசாமி அவர்கள் காலமான செய்தியை இங்கே இணையம்
வழி அறிந்து திடுக்கிட்டேன். கடந்த நான்கு மாத காலமாக இங்கே என் மகள் வீட்டில்
இருப்பதால், அங்கே நேரில் வந்து தங்கள் துயரில் பங்குகொள்ள முடியாததற்கு
வருந்துகிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர் சுந்தர ராமசாமியிடம்
உள்ள நட்பின் நல்ல கணங்கள் பல என் நினைவில் மோதி மனதை நெகிழச் செய்கின்றன. தங்கள்
குடும்பத்தின் துயரத்தில் நானும் என் குடும்பமும் பங்கு கொள்வதுடன் அவர் ஆத்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நீல பத்மநாபன்
இங்கிலாந்து
v
இந்தக் கடுமையான நேரத்தில், உள்ளார்ந்த சோகத்துடன் கூடிய நாட்களில் உங்களுக்கு
ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து எவ்வாறு பகிர்ந்துகொள்வது எனவும் கூறயியலாது.
நாங்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.
அன்பும் நேசமும் மிக்க குடும்பத்தில் ஒருவர் போலப் பழகிய கம்பீரமான திரு. சுந்தர
ராமசாமி அவர்கள் 15.10.05 அன்று மறைவு எய்தினார்கள் என்பதைச் செய்தித் தாள்கள்
வழியாக 16.10.05 காலை படித்தபோது, உடனடியாக எங்களைச் சொல்லொணாத் துயரம் சூழ்ந்தது.
'இயற்கை' என அறிவார்ந்த திரு. சுந்தர ராமசாமி அவர்கள் சொல்லக்கூடும். கால
மரத்திலிருந்து ஞானமிக்க ஒரு இலை விழுவது ஏற்கப்பட வேண்டியதுதானே என்றுகூட அவரே
சொல்வது போல ஒரு எண்ணம்.
எப்படியிருப்பினும் அவரில்லாத உலகம் நம்மைப் பொறுத்து மேலும் வெற்றிடமாகியுள்ளது.
அன்பார்வலர்களின், நண்பர்களின், காலச்சுவடு பதித்திருக்கக்கூடிய எழுத்தாளர்களின்
ஏக்கத்தில், இன்னும் பத்தாண்டுகள் இருந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது அவருக்கு
என்ற ஆதங்கத்தில் மற்றும் நினைவுகளில் எங்களையும் பகிர்ந்துகொள்கிறோம். அவரது
அன்பான குரல் எதிரொலிக்கும் நினைவையும் பாங்கினையும் சுமந்தவர்களாய் உங்களுக்கு
நாங்களும் சிறிதேனும் இழப்பினைப் பகிர்ந்துகொள்ளத் தவிக்கும்
பாரவி
கற்பகவல்லி
மற்றும் குடும்பத்தினர்
சென்னை
v
திரு. சுந்தர ராமசாமி அவர்கள் அமெரிக்காவில் 15.10.05 அன்று காலமானார் என்ற
செய்தியைத் 'தினமணி'யில் பார்த்து வருந்தினேன். அன்னாரது மறைவிற்கு எனது இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
1996 ஜூன் மாதம் நாகர்கோவிலில் உள்ள காது கேளாதோர் பள்ளியைப் பார்வையிட்டு கோவையில்
அம்மாதிரி ஒரு பள்ளியை நிறுவ சக்தி அறக்கட்டளை சார்பில் நானும் இரு ஆசிரியர்களும்
நாகர்கோவில் வந்தோம். நாகர்கோவில் வாய்மொழிப் பயிற்சிப் பள்ளியின் தாளாளரைச்
சந்தித்துவிட்டு நேராகக் 'காலச்சுவடு' அலுவலகம் வந்தோம். திரு. சு.ரா. அவர்கள்
சென்னை சென்றுள்ளதாகத் தெரிவித்தார்கள்.
'ஜே.ஜே: சில குறிப்புகள்ஒ, 'ஒரு புளியமரத்தின் கதை' மற்றும் ஓரிரு நூல்களை
வாங்கிக்கொண்டு திரும்பினோம். கோவை திரும்பின சில தினங்களில் சுந்தர ராமசாமி அவர்கள்
ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
சுந்தர ராமசாமி * 151 கே.பி.ரோடு * நாகர்கோவில் 1
29.6.96
அன்புள்ள திரு. சக்திக்கனல் அவர்களுக்கு,
சென்னை சென்றிருந்த நான் நேற்றுதான் ஊர் திரும்பினேன். தாங்கள் வந்த நேரத்தில் நான்
இல்லாமல் போய்விட்டேன். மீண்டும் தாங்கள் நாகர்கோவில் வர நேர்ந்தால் நாம் அவசியம்
சந்திக்கலாம். நான் கோவை வந்தாலும் தங்களுடன் தொடர்புகொள்வேன்.
உங்கள் அன்புக்கு நன்றி.
என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,
சு.ரா.
சக எழுத்தாளர்களை, வாசகர்களை எவ்வாறு அவர் நேசித்தார் என்பதற்கு இக்கடிதம் ஒரு
சான்று. அவரது ஆத்மா சாந்தியடைக.
சக்திக்கனல். பழனிசாமி
கல்வெட்டுப்பாளையம்
v
தமிழ் இலக்கிய உலகில் மாபெருந் தாக்கத்தை ஏற்படுத்திய அன்புக்கும்
போற்றுதலுக்குமுரிய பெரியவர் சுந்தர ராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி நெஞ்சை
உலுக்கியது. அவரோடு தொடர்புகொண்ட சில பழைய நினைவுகள் துயரத்தைப் பெரிதுபடுத்தி என்னை
நிலைகுலையச் செய்தன. அவரை இழந்து வருந்தும் தங்களுக்கும் தங்கள்
குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இராம. சுந்தரம்
மதுரை
v
தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், சிறந்த
மொழிபெயர்ப்பாளரும், நாவலாசிரியருமான நண்பர் சுந்தர ராமசாமி அவர்கள் அயல்புலத்தில்
மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். அவர்கள் என் உற்ற நண்பர். என் இல்லத்
திருமணத்துக்கும் மணிமேகலை மன்ற நிகழ்ச்சிகட்கும் வந்து சிறப்பித்தவர்.
நாகர்கோவிலுக்கு நான் வரும்போதெல்லாம் விருந்தோம்பிய நண்பர். அவரது மறைவு தமிழ்
இலக்கிய உலகுக்கே பேரிழப்பாகும். அன்னாரைப் பிரிந்து துயருறும் தங்களின் துயரில்
பங்குகொள்வதும் அவரது ஆன்மா சாந்தியுற இறைவனை இறைஞ்சுவதுமன்றி வேறென்ன செய வல்லோம்?
அவருடைய நினைவைப் போற்றுவோம். இதயாஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மு.கு. ஜகந்நாத ராஜா
இராஜபாளையம்
v
சுந்தர ராமசாமி அவர்களைச் சந்திக்க நேர்ந்த சில தருணங்களில் அவர் காட்டிய பிரியமும்
இணக்கமும் என் நெஞ்சிற்குள் பெரும் சந்தோஷமாய் நிலைத்திருக்கின்றன.
தமிழ்ச் சூழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் செலுத்திய தாக்கங்கள் பல.
எழுத்தாளர்கள் எல்லா விஷயங்களைக் குறித்தும் எல்லாவிதமான வகைகளிலும் வடிவங்களிலும்
எழுதலாம்; எழுத வேண்டும் என்னும் உணர்வை அவர் உருவாக்கிக்கொண்டேயிருந்தார்.
பதிவுகளில் அவர் காட்டிய கவனம், தமிழ் வரலாற்றிலேயே இல்லாத ஆக்கப்பூர்வமான,
அபூர்வமான குணம். அங்கீகாரம் பெற்றதும் அதற்குக் காரணமான படைப்புகளையே அடுத்தடுத்து
நகலெடுத்துக்கொண்டிருக்காமல், இளைஞருக்குரிய வேகத்தோடு புதுப்புதுத் திசைகளில் தம்
படைப்புப் பயணத்தை நிகழ்த்தியவர். அவர் எழுத்தில் தேக்கம் என்று சொல்வதற்குத்
தடயங்களே இல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்குச் சவாலாக விளங்கும் படைப்புகளை இறுதிவரை
கொடுத்தவர். இலக்கியத் தளத்தில் பல்வேறு விவாதங்கள் அவரை மையப்படுத்தி
நடைபெற்றுள்ளன; ஒதுங்கி நிற்காமல் விவாதங்களுக்குள் தம்மை உட்படுத்திக் கொள்ளுதலும்
அவரது இயல்பு.
எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம், உரிமைகள், பொருளாதார வாய்ப்பு வசதிகள்
ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருந்தவர் என்பது என் மனத்தில் மிக
முக்கியமாய்ப் பதிந்திருக்கும் அவரது சித்திரம்.
சு.ரா.வின் இறப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல, எனக்கும் என்
போன்ற எழுத்தாளர்களுக்கும் நேர்ந்திருக்கும் சுய இழப்பு. சு.ரா. தம்மைக் காலத்தின்
கைகளில் ஒப்புவித்துக்கொண்டுவிட்டார் என்று சமாதானம் அடைகிறேன். நீங்களும் உங்கள்
குடும்பத்தாரும் அடைந்திருக்கும் துக்கத்தில் முழுமையாகப் பங்குபெறுகிறேன்.
பெருமாள்முருகன்
நாமக்கல்
v
சுந்தர ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டுக் கனத்த இதயத்துடன் இக்கடிதம்
எழுதுகிறேன். இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமே இது ஒரு பேரிழப்பு ஆகும்.
எனது நண்பர்களுடன் சேர்ந்து நான் எண்பதுகளில் 'வேர்கள்' இயக்கத்தை ஆரம்பித்தபோது
அவ்வியக்கம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து பல அரிய யோசனைகளை மனமுவந்து
தனது பல்வேறு பணிகளுக்கு இடையே வழங்கினார். வேர்கள் குறித்து நான் அனுப்பிய வரைவுக்
கடிதத்தை (draft letter) நான் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம் 'காலச்சுவடு'
இதழில் முழுவதுமாகப் பிரசுரித்து 'வேர்கள் இயக்கம்' பரவலாக அறியப்பட காரணமாக
இருந்தார். அது மட்டுமல்ல, 'காலச்சுவடு' சந்தாதாரர் பட்டியலை முழுவதுமாக அளித்து 'வேர்கள்'
வளரப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். இது வேறு எந்த இலக்கியவாதியிடமோ, இதழாளரிடமோ
காணக் கிடைக்காத அரிய பண்பு. இத்தனைக்கும் நான் அவருடன் நெருங்கிப் பழகியவனோ,
அடிக்கடி சந்தித்தவனோ அல்ல. வேர்கள் இயக்கம் தற்போது செயலற்று இருந்தாலும் அது
இயங்கிய பத்தாண்டுகளில் சுணக்கம் ஏற்பட்டபோதெல்லாம் சுந்தர ராமசாமி அவர்கள் மிகுந்த
நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் 'வேர்கள்' குறித்து எழுதியவை நினைவுக்கு வர,
மனச்சோர்வு பறந்து போகும். வேர்களின் இயக்கம் ஓரளவேனும் செயல்பட மற்ற எந்தக்
காரணத்தையும்விட சுந்தர ராமசாமி அவர்கள் அளித்த மனப்பூர்வமான ஆதரவும் ஒத்துழைப்புமே
காரணமாக அமைந்தது என்பது மிகையான கூற்று அல்ல. இந்த நேரத்திலாவது இதைப் பதிவு
செய்திட விரும்புகிறேன். மற்ற எல்லோரையும்விட சுந்தர ராமசாமி அளித்த ஆதரவே எனக்குத்
தொடர்ந்து செயல்பட உற்சாகமூட்டும் 'டானிக்'ஆக இருந்தது.
இப்பேர்ப்பட்ட ஒரு ஜாம்பவானின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற பின்னும் 'வேர்கள்'
பெரிதாகச் சாதிக்கவில்லையே என்ற ஆதங்கம் என்றும் எனக்கு உண்டு.
அவரது கனிவான பேச்சு, சாதாரண வாசகனையும் பேசச் சொல்லிக் கேட்கும் தன்மை போன்றவை வேறு
எந்த எழுத்தாளரிடமும் நான் காணாத ஒன்று. அவரது இழப்பு தமிழிலக்கிய உலகுக்குப்
பேரிழப்பு என்பது மட்டுமல்ல, எனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும்.
அவருக்குச் செலுத்தப்படும் சிறந்ததொரு அஞ்சலியாக அவர் தொடங்கிய 'காலச்சுவடு' இதழை
மேன்மேலும் சிறப்புடன் நடத்திச் செல்வதாகவே இருக்கும். மிகச் சிறப்பாக அதனை
நடத்திவரும் தங்களுக்குச் சிறுவகையிலேனும் உதவிட முடியும் என்றால் எனக்குப்
பிராயச்சித்தம் கிடைக்கக்கூடும்.
தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
மு. இராமலிங்கம் (வேர்கள்)
நெய்வேலி
v
சு.ரா.,
நீங்கள் மறைந்துகொண்டீர்கள். உங்கள் நினைவுகள் மறைந்துவிடுமா? உங்களுடன் நான் அதிகம்
பழகினதில்லை. எழுபதுகளில் கோவையில் ஞானி அவர்கள் வீட்டில் வைத்து ஓரிரு முறை
சந்தித்து அளவளாவி இருக்கிறேன். ஊட்டியில் 'நீலமலைப் பனிமலர்' மணிக் கண்ணனின்
அழைப்பினை ஏற்று அங்கோர் உணவு விடுதியில் நீங்கள் தங்கியிருந்தபோது உங்களைச்
சந்திக்க முயன்று அது கைகூடாமற் போயிற்று.
என்னுள் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'ரத்னாபாயின் ஆங்கிலம்' சிறுகதைக்கு,
அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'யாத்ரா' இதழ் ஒன்றில் விமர்சனம் எழுதியிருந்தேன்; அது
வாசிக்க மிகவும் கடினமாக இருந்ததாக நண்பர் ஒருவரிடம் சொன்னீர்களாம்.
மனனம் ஆவதற்கு மரபுக் கவிதைகள்தாம் ஏற்றவை, புதுக்கவிதை அல்ல என்றிருந்த எழுபதுகளில்
உங்கள் 'சவால்' கவிதையை நண்பர்களிடம் தலைகீழாகச் சொல்லிக் கொண்டிருந்தேன் நான்.
இப்போதுகூட நினைவிலிருந்தே, முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும், அந்தக் கவிதையை எழுத
முடியும் என்பதை நீங்கள் நம்புவீர்களா? எவ்வளவு மகத்தான நினைவு அது. 'நோவெடுத்துச்
சிரம் இறங்கும் வேளைஒயை என் கவிதை ஒன்றில் கூட நான் பயன்படுத்தியிருக்கிறேன். ('லயம்'
இதழ் ஒன்றில் 'ஓடுகிறான் தத்துவ புத்திரன்' கவிதை.) 'பல்லக்குத் தூக்கி'களைப்
பிரமிள்கூட ஒதுக்க முடியவில்லையே.
இலக்கியம் இன்பம் தரும் என்றுதான் எல்லோரும் கால் எட்டி அதில் வைக்கிறார்கள்.
இலக்கியம் இன்பம் தந்ததா? எவ்வளவு பெரிய துன்பம் அது? என்ன இன்பம் கண்டுவிட்டோ ம்
இலக்கியத்தில்? என்ன இன்பம் கண்டுவிட்டுப் போனார்கள் பாரதியும் பு.பி.யும்.
துன்பத்தை இன்பமாக எடுத்துக்கொண்டோ ம் என்பதுதான் நிஜம்.
நிஜத்தின் அவலங்களை, பொய்மைகளை, சீரழிவுகளைச் சகியாமல் அவற்றின் ஊடாகச் சுற்றித்
திரிந்தீர்கள், அவற்றைப் பகிரங்கப்படுத்தி விமர்சித்தபடி. சாட்டையால் அடித்து
விளாசியபடி. சமரசங்கள் சாத்தியப்படுத்தும் அனைத்து சௌகரியங்களையும் அவை சரிவுகள்
என்று உதறியபடி. இப்படித்தானே போயிற்று உங்கள் காலம்?
புதுமைப்பித்தன் தரிசனமும் தொ.மு.சி.யின் உறவும் கிருஷ்ணன் நம்பியின் நட்பும்
ஜீவாவின் அன்பும் தகழியின் தோட்டியும் . . . எப்பேர்ப்பட்ட துவக்கம்! நீங்கள்
கொடுத்து வைத்தவர் சு.ரா.!
புதுமைப்பித்தன் என்ற
spring boardலிருந்து எகிறிச் சென்று தனிவழி
கண்ட திறனாளி என்றுதானே பிரமிளும் மதிப்பிட்டார். அது, அந்தத் திறன், உங்கள் 'செம்மீன்'
மொழிபெயர்ப்பில் தெரிந்தது. 'ஒரு புளியமரத்தின் கதைஒயில் தெரிந்தது. 'ஜே.ஜே.'யில்
தெரிந்தது. நூற்றுக்கணக்கான சிறுகதைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், நிகழ்த்திய
உரைகளில் தெரிந்தது - 'பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டபோது' பட்டதாகப்
புதுமைப்பித்தன் சொல்வாரே, அந்த மாதிரி.
உள் மனக் குகைகளின் இருண்ட வழித் தடங்களை, இடறும் சிடுக்குகளை ஓயாமல்
சொல்லிக்கொண்டிருந்தீர்கள். அதில் கலையுள்ளம் கண்ட, காண வேண்டிய வியக்திகளைச்
சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.
வணிக உலகம், நுகர்வியத்தைக் கேவலம் ஓங்கிப் பிடித்து, அனைத்து கலாபூர்வங்களையும்
பண்டங்களாக்கிக்கொண்டிருந்தபோது, மெல்லிய புன்னகையோடு அதை நிராகரித்ததோடு மட்டுமல்ல,
ஒரு சமரசமற்ற போரை அதற்கெதிராக நடத்திக்கொண்டிருந்தீர்கள். இதில் எந்த ஓர்
இடத்திலும் நீங்கள் தளர்ந்துபோனதாக யாரும் சொல்ல மாட்டார்கள். இடையில்
அக்கலையுள்ளத்தின் ஆழ்ந்த சலனங்களை, சிறு அசைவுகளைக் கண்டபோதெல்லாம் மிகுந்த
உற்சாகமும் உருக்கமுமுற்று அதைச் சிலாகித்தீர்கள்.
எங்களூர்க் கலைஞர் ஆர். சண்முகசுந்தரத்தைப் பற்றி நீங்கள் எழுதியது நன்கு நினைவிலேயே
இருக்கிறது. சண்முக சுந்தரத்தின் 'அக்காக்க'ளோடு சிவியார்பாளையம் சந்தைக்குச் சென்று,
'எண்ணெயும் தண்ணியும்' வாங்கிக்கொண்டு அவர்களோடு அவர்கள் 'ஊர் நாயங்களை'ச் செவி
மடுத்தபடி 'இட்டேறித் தடத்தில்' நீங்களும் திரும்பி வந்தீர்களே சு.ரா! 'நாகம்மா'ளைப்
பற்றிச் சொல்கிறபோது நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஓநாகம்மாளைப் பார்த்து, 'ஏனுங்க
இப்படி ஆச்சுது' என்று கேட்டால், 'தெரியலீங்கோ' என்றுதான் பதில் வரும்ஔ என்று
எழுதியிருந்தீர்கள். நியாயங்களுக்குச் செய்யப்படும் நியாயங்கள் எவ்வளவு
நெகிழ்வானதாகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் இருக்கும் என்பதை இந்த வார்த்தைகளைவிட
வேறெந்த வார்த்தைகளும் எடுத்துச் சொல்லிவிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
உணர்ச்சி வேகம், அறிவின் ஆழ்ந்த பணியை வெகு சுலபத்தில் செய்துவிடும் இல்லையா?
'அலைதல் ஒன்றுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. அதையும் தடுத்துவிடாதீர்கள்' என்று
ஒருமுறை எழுதியிருந்தீர்கள்.
அலைந்து முடித்துவிட்டீர்களா சு.ரா.?
சந்திரமூலரசன்
v
சு.ரா. மறைந்த செய்தி கேட்டேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சு.ரா. தற்காலத் தமிழில் உண்மையாகவே மிக முக்கியமான சக்தி. தமிழனின் கற்பனை, அறிவு,
பண்பாட்டுக் கரிசனை போன்ற துறைகளில் செயல்பட்டவர். சம்பிரதாயமாகப் பலரது இறப்புச்
சந்தர்ப்பத்தில் கூறுவதுபோலன்றி, சு.ரா. மரணம், ஆழ்ந்த அர்த்தத்தில், ஈடுசெய்ய
முடியாத இழப்பு.
தமிழவன்
பெங்களூர்
v
தந்தையை இழந்த தங்கள் பெருந்துயரில் நானும் பங்கு கொள்கிறேன். சுந்தர ராமசாமி என்பது
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் அழுத்தமாகப் பதிந்திருக்கும் பெயர்.
புதிய பரிசோதனைகளால் தமிழுக்கு வளம் சேர்த்தவர். திட்டவட்டமான கருத்துகளைத்
தயக்கமின்றித் தெரிவித்து வந்தவர். இறுதி மூச்சுவரை ஓய்வின்றி எழுத்துக்குத் தம்மை
அர்ப்பணித்துக்கொண்டவர். தீர்மானமான முடிவுகளுக்காக வாதிடவும் போரிடவும் உறுதி
பூண்டவர்.
எழுத்துலகில் அனைவருடைய நன்மதிப்புக்கும் உரியவராகத் திகழ்ந்த தங்கள் தந்தையாரின்
மறைவு ஒரு தனிக் குடும்பத்தின் இழப்பல்ல. தமிழ் இலக்கியக் குடும்பத்தின் பேரிழப்பு,
பெருந்துயரம்.
தங்களுக்கும், தங்கள் அன்னையாருக்கும், சகோதரிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
சிற்பி பாலசுப்பிரமணியம்
பொள்ளாச்சி
v
சென்ற சனிக்கிழமை 15ஆம் தேதி திரு. சு.ரா. அவர்களின் மறைவுச் செய்தி
Asianet News சானலில் (மலையாளம்) பார்த்து - லேசான அதிர்வுடன் மனது உள்வாங்கிப் பின்
வெறுமையாகிப் போனது. தமிழின் எந்த ஊடகங்களும் பொதிகை சானல் உள்பட சு.ராவின் மறைவுச்
செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை.
Asianet News சானலில் பின்னர் சு.ரா.வுடன் (ஏற்கனவே எடுத்த) பேட்டியையும்
ஒளிபரப்பினார்கள். அந்த நாள் மலையாளத்தின் முதன்மைப் பத்திரிகைகளான 'மாத்ருபூமி'யும்,
'மலையாள மனோரமா'வும் முதல் பக்கத்திலேயே அவரின் மறைவுச் செய்தியை வெளியிட்டன. 'மாத்ருபூமி'யின்
தலையங்கத்தில் சு.ரா.வுக்கு இரங்கலும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழில் இளைய
தலைமுறை எழுத்தாளர்களுக்கு சு.ரா.வும், 'காலச்சுவ'டும் ஒரு கலங்கரை விளக்கமாகச்
செயல்பட்டதாகக் குறிப்பிட்டது 'மாத்ருபூமி.' அன்னாரின் மறைவு அடுத்த மாநிலமான
தமிழகத்தின் துக்கம் மட்டுமல்ல, சொந்த வீட்டின் துக்கமாகவே கருதுவதாகவும் 'மாத்ருபூமி'
இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது.
கோட்டயத்தில் திரு. சு.ரா. அவர்கள் அவரது இளமைப் பருவ வீட்டைக் காணவந்த நேரத்தில் 'மலையாள
மனோரமா' தினப்பத்திரிகை சு.ரா.வைப் பேட்டி கண்டு அந்தப் பேட்டி சம்பந்தமான பதிவுகளை
ஒரு இணைப்புப் பத்திரிகையாகவே வெளியிட்டிருந்தது. அன்று அவரைக் காணமுடியவில்லையே
என்று ஒரு ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது. என் சித்தப்பாவின் வீடு சு.ரா.வின் இளமைப்
பருவ வீட்டின் அருகாமையில்தான்.
தமிழில் ஊடகங்கள் பொதுவாகவே இலக்கியப் பிதாமகர்களைக் கண்டுகொள்வதில்லை என்று
நினைக்கிறேன். ஒன்று, அவர்கள் ஏதாவது அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அல்லது . . . திரைப்படப் 'பளபளப்பாளர்களாக' இருக்கவேண்டும். எனில் ஊடகங்களின் 'முக்கியச்
செய்தி'களில் இடம் பெறுவார்கள். சு.ரா.வின் மறைவு இலக்கிய உலகின் பேரிழப்பு போன்ற,
சம்பிரதாய வார்த்தைகளையும் மீறி மனதில் 'ஆழமாக ஒரு வெற்றிடம்' தோன்றியதுதான் நிஜம்.
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இழப்புகளை உள்வாங்கித்தான் ஆக வேண்டும். 'மாத்ருபூமி'
குறிப்பிட்டதுபோல, சு.ரா.வின் மறைவு நம் அனைவரின் சொந்த வீட்டின் துக்கம்தான்.
அனுதாபங்களை நமக்குள் பரிமாறிக் கொள்ளலாம்.
ஆர். சுப்பிரமணியம்
ஆலப்புழா
v
திருவாளர் சுந்தர ராமசாமியின் மரணம் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரது மரணம் எனக்குச் சொந்த இழப்பு.
செல்வத்தில் பிறந்தாலும், முறையாகக் கல்வி பயில முடியாத நிலையிலிருந்தும்,
சுயமுயற்சியினால் மார்க்ஸீய சித்தாந்தம் நெஞ்சில் கனலாய் ஒளிரச் சிந்தித்தவர்.
எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து இந்த 35 ஆண்டுகளாய் என் நெஞ்சில் சுடராய் நின்றவர்.
வசித்த இடங்கள்தாம் தூரமே தவிர ஒருவருக்கொருவர் நினைத்து வாழ்ந்தோம்.
அவரது எழுத்துக்களால் தூண்டப்பட்டு, ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தாலும்,
கூர்மைப்படுத்தப்பட்டவன். கைகோர்த்து பேசித் திரிந்த இந்த நாகர்கோவில் தெருக்களும்,
பூங்காவும், குமரிக் கடலோரமும் எங்களை அடையாளம் கண்டு நினைவில் கொள்ளும்.
'ஒரு புளியமரத்தின் கதைஒ, 'ஜே.ஜே: சில குறிப்புகள்ஒ, 'காகங்கள்ஒ, 'நடுநிசி நாய்கள்ஒ,
ஏன், எழுதிய அனைத்துமே வித்தியாசமானவை. இந்த நாடு அவரை முறையாகக் கௌரவிக்கும்
வாய்ப்பினை இழந்துவிட்டது. அவரது மனமும், குணமும், எழுத்துக்களும் இந்த வரையறைகளை
மிஞ்சியவை; வெகுமதிகளைக் கடந்தவை. மனித நேயமிக்க அவரது குழந்தை உள்ளம் சந்திப்போரை
எல்லாம் வசீகரிக்கும்.
அவரது குடும்பம் அன்பாலயம் போன்றது. சிறந்த தெளிவான மனம் கொண்ட அன்புருவம் அவரது
துணைவியார் திருமதி கமலா அவர்கள்.
எனது இனிய நண்பர், சிந்திக்க ஊன்றுகோலானவர். வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
நூறாண்டு காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர். வயது 74 ஆனாலும் இதை அகால மரணம் என்றே
சொல்வேன். படிக்காத என் தாய்-தந்தை (104 வயதும் 109 வயது) இன்னும் இருக்கிறார்கள்.
இவரும் அப்படி வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னைவிட 6 வயது மூத்தவர். 60
மடங்கு இந்த மொழிக்கும் நாட்டிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் தேவையானவர்.
அவரது உடல்தான் இல்லை. உயிர் - எழுத்துக்களாய் இலக்கியமாய் வாழ்கிறது; வாழும் -
தமிழ் உள்ளவரை.
எ. பொன்னுசாமி
பாராளுமன்ற உறுப்பினர்
புதுதில்லி
v
தங்களுடைய அருமைத் தந்தையார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அமெரிக்காவில் உங்கள் சகோதரி
வீட்டில் மரணம் அடைந்த செய்தி கேட்டுத் துயரம் அடைந்தேன்.
சிறந்த தமிழ் எழுத்தாளர். வட்டாரச் சொற்களைக் கையாண்டு கதைகள் எழுதிய படைப்பாளிகளில்
மிகச் சிறந்தவர். அவருடைய படைப்பான 'ஒரு புளியமரத்தின் கதை' நாகர்கோவில் வட்டாரப்
பின்னணியோடு வெளிவந்த, பொறுமையோடு படிக்க வேண்டிய நாவல். உங்களுடைய தந்தையாரால்
துவக்கப்பட்ட 'காலச்சுவடு' பத்திரிகை மிகச் சிறப்பாக வெளிவருவது தமிழ் மொழிக்குக்
கிடைத்திருக்கிற ஒரு பெருமையாகும்.
தந்தையாரை இழந்து வேதனைப்படும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது
அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வழிபடுகிறேன்.
நா. மகாலிங்கம்
கோவை
v
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிரபல எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி
அவர்களின் மறைவு அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவு தமிழ் நாட்டிற்குப்
பேரிழப்பாகும்! அவரது பிரிவால் வருந்தும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
எனது மனமார்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
கல்வி ஸ்தாபனங்கள், பத்திரிகைகளுக்கு முதுகெலும்பு போன்றவர்கள் எழுத்தாளர்கள். ஆனால்
இந்த இரண்டுமே அவர்களை உரிய முறையில் கௌரவப்படுத்துவதில்லை! மூத்த எழுத்தாளரான திரு.
சுந்தர ராமசாமிக்குப் பல்கலைக் கழகங்கள் 'டாக்டர்' பட்டம் கொடுத்து கௌரவித்திருக்கக்
கூடாதா?
இன்று திரு. சுந்தர ராமசாமியின் மறைவு 4ஆம் பக்கத்தில் அடியில் 4 அங்குலத்தில் ஒரு
பத்தியில் வெளியிட்டிருக்கிறது 'தினத்தந்தி.' மனதுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது.
தமிழ்நாடும் மக்களும் என்றுதான் திருந்துவார்களோ?
ஆர்.எம்.ஏ. ராமானுஜம்
அம்பாசமுத்திரம்
v
சு.ரா. அவர்களின் மறைவு என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. சு.ரா. அவர்களை நான்
நேரில் சந்தித்தது இல்லை. கடிதங்கள் மற்றும் தொலைபேசி மூலம் கருத்துக்களைப்
பரிமாறிக்கொள்வோம். எழுதச் சொல்லி ஊக்குவிப்பார். எழுத்தாளர்கள் வளர வேண்டும் என்ற
பேராசை அவரது. நிரம்ப எழுத வேண்டும் என்பார்; தமிழுக்கு அவர் செய்த பணி மகத்தானது.
தமிழை வைத்துப் பிழைப்பு வணிகம் செய்யாதவர் சு.ரா. மாறாகத் தமிழை அதன்
நிலையிலிருந்து யாரும் திரிபுபடுத்திவிடாதபடி கவனமாகப் பார்த்துக் கொண்டவர்.
மார்க்சியச் சிந்தனைகள் அவரைப் பாதித்த அளவு ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளும்
அவரை வெகுவாகப் பாதித்தன. ஜே.கே. மறைந்த இடம் கலிபோர்னியாவில் ஓஹை என்ற இடத்தில்
உள்ளது. அங்கு சென்று வந்திருக்கிறார் சு.ரா. நட்பைப் பெரிதும் மதிப்பவர். க.நா.சு.
அவர்களிடம் பெரிதும் மதிப்பு வைத்திருந்தார்; அவ்வாறே கிருஷ்ணன் நம்பியிடமும்.
அவரிடம் நடுநிலையாகச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. கருத்து வேறுபாடுகளுக்கு
மதிப்பளித்தவர்; தனிமனிதத் தாக்குதல் அவரிடம் கிடையாது. மனிதனை மனிதனாக மதித்தவர்.
அவரது சிந்தனைகளில் 'மனிதம்' உயிர்ப்புடன் விளங்குவதைக் காணமுடியும்.
சாகித்யமும் ஞானமும் நிறைந்த சு.ரா.வை இந்த நாடு மேலும் சிறப்பாகக் கௌரவித்திருக்க
வேண்டும். எனினும் சு.ரா. இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்; விருதுகளை நாடிச் செல்லாதவர்.
நான் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கல்வியியல் சிந்தனைகளை முனைவர் ஆய்வுக்கு
மேற்கொண்டபோது கடிதங்கள், மற்றும் தொலைபேசி வாயிலாக என்னைப் பெரிதும் ஊக்குவித்தார்
சு.ரா. 18.3.1994 தேதியிட்டு அவர் எனக்கெழுதிய கடிதத்தில் ஜே.கே. பற்றி இவ்வாறு
குறிப்பிட்டிருந்தார்:
ஓஅவருடைய (ஜே.கே.) சிந்தனைகள் நுட்பமானவை; அவர் எழுத்து எளிமையான தோற்றம் கொண்டது.
ஆனால் மனம் சார்ந்த சிடுக்கை எப்போதும் கணக்கெடுத்துக்கொள்வதால் புரிந்துகொள்வதற்கு
விவேகத்தைக் கேட்டு நிற்பது.ஔ
ஜே.கே.யின் மொத்தப் பணியின் சாரத்தையும் சு.ரா.வைப்போல இவ்வளவு தெளிவாக யாரும்
சொல்லியிருப்பார்களா என்று தெரியவில்லை. இக்குறிப்பை எனது முனைவர் ஆய்வில்
மேற்கோளாகவும் காட்டியிருந்தேன். சு.ரா.விடம் இதனைத் தெரிவித்தபோது மகிழ்ந்தார்.
இரா. சத்தியமூர்த்தி
பாண்டிச்சேரி
v
எங்கள் விருப்பத்துக்குரிய படைப்பாளியும், உங்கள் தந்தையுமான சுந்தர ராமசாமி ஐயா
அவர்கள் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரின் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திப்பதுடன் அனுதாபத்தையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது
குடும்பம் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சோலைக்கிளி
இலங்கை
v
சு.ரா.வின் மறைவு நம் அனைவருக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி. ஈடுசெய்ய முடியாத
இழப்பில், துன்பத்தில் இருக்கும் உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது. வார்த்தைகளற்ற
மௌனத்தால் எழுத்துகளைத் தேடிக்கொண்டி ருக்கிறேன்.
புதுமைப்பித்தனின் படைப்புகளைப் பற்றிய அவரது கண்ணோட்டம் - விமர்சனங்கள்,
முன்னுரைகள், பேச்சுகள் அனைத்துமே காலத்தால் அழியாதவை. இன்னமும் சொல்லப்போனால்,
பு.பி.யின் மகள் என்ற பெருமையைத் தவிர வேறேதுமற்ற எனக்கும் என் போன்ற பல்லாயிர
வாசகக் கூட்டத்துக்கும் இளம் படைப்பாளிகளுக்கும் பு.பித்தனை இனம்
காட்டிக்கொண்டிருப்பவை அவரது கருத்துக்கள்தாம்.
அவரது படைப்புகள் - அவை நாவலாகட்டும், சிறுகதைகளாகட்டும், கவிதைகளாகட்டும், அவரது
நினைவில் பதிந்து நம் நெஞ்சை நிறைக்கும் நினைவோடைகளாகட்டும் படிக்கின்ற வாசகனின்
கரம் பற்றித் தன்னுடனேயே அழைத்துச் செல்லும் என்றால் மிகையில்லை. பாலுவோடு சேர்ந்து
நாகர்கோவில் தெருக்களை வலம் வராத அவரது ரசிகர்கள் உண்டா!
நானும் என் கணவரும் ஒரு முறை தங்கள் வீட்டிற்கு வந்து அப்பாவோடு நீண்டநேரம்
பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தோம். இன்று, நாளை என்று
எண்ணி எண்ணி இன்று அந்த நாள் இல்லாமலேயே போயிற்று. இந்த வகையில் எனக்கு மிகப் பெரிய
ஏமாற்றமே. இயல்பிலேயே என்னுடைய கூச்ச சுபாவம் நத்தை ஓடாய் என்னைச்
சுருக்கிக்கொள்கிறது. ஒரு நாளாவது அப்பாவுடன் பேசிக்கொள்ளாமல் போய்விட்டோ மே என்ற
நினைவு தோன்றிக்கொண்டே இருக்கிறது.
இலக்கிய உலகிற்குத் தங்கள் அப்பாவின் பிரிவு மிகப் பெரிய இழப்பு என்றாலும் வானுலகில்
ஓவா ரா வா வா . . .ஔ என்று அவரை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து என் அப்பாவுடன்
சேர்ந்து கிருஷ்ணன் நம்பி, ஜீவா, ரகுநாதன் எனப் பலர் வரவேற்றிருப்பார்கள்
என்றாலும்கூட இன்று உண்மையாகவே காற்றில் கலந்த அந்தப் பேரோசையின் இடத்தை யாரால்
நிரப்ப முடியும்!
திருமதி தினகரி சொக்கலிங்கம்
சென்னை
v
திரு. சுந்தர ராமசாமியின் மறைவு அதிர்ச்சியளித்தது. ஏதேனும் ஒரு காலகட்டத்தில்
அவரைப் பார்த்தும் பேசியும் பழகியும் கொள்வேன் என்கிற ஏதோ நம்பிக்கையில் இது வரையில்
அவரைப் பார்த்துவிட யத்தனிக்காமல் இருந்துவிட்டது என் துரதிர்ஷ்டம். அவருடைய சிறந்த
சிறுகதைகளின், நாவல்களின் ஆக நெருக்கமான வாசகத் தோழராக அவர் இருந்திருக்கலாம்;
இருந்திருக்க வேண்டும். அக்கதைகளைப் பற்றிய உரையாடல்களின் ஒரு முனை அவருக்கு
வசப்பட்டிருந்தாற்போல வேறு யாருக்கும் வசப்பட்டிருக்க முடியாது என்கிற உணர்வு இந்த
இழப்பை அடிக்கோடிட்டு எனக்குக் காட்டுகிறது.
தவிரவும் எழுத்தாளராக மட்டுமன்றி தனிப்பட்ட உறவுகளில் அவர் கொண்டிருந்த பொறுப்பையும்
அக்கறையையும் பற்றி நண்பர்கள் நிறைய கூறியிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட ஒருவருடன்
உங்களின் தோழமை எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. உங்களுடையது
பெருந்துயரம்தான்.
இத்துயரத்திலிருந்து நீங்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.
பெருந்தேவி
சென்னை
v
நம் காலத்தில் வாழ்ந்து நம்மோடு அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தீவிர
இலக்கியவாதியாகத் தன் எழுத்துக்களால் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஓர் இலக்கிய
ஆளுமையின் நினைவுக் குறிப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் அஞ்சலி நேரமிது. நாவல், சிறுகதை,
கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழியல் என சுந்தர ராமசாமியின் எழுத்துக்களும்
விரிவானது. எல்லாக் களங்களுக்குள்ளும் அவரால் எளிதாகப் பயணம் செய்ய முடிந்ததை அவரது
படைப்புகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இடதுசாரிச் சிந்தனை மரபுகளோடு தன் ஆரம்பக்
கட்ட இலக்கிய நகர்தலை வைத்துக்கொண்டவர் பின்னர் அதிலிருந்து விலகியும் விலகாமலும்
பின்னர் முற்றாக விலகியும் தம் படைப்புலகை அமைத்துக்கொண்டவர். தன் கருத்துக்களோடு,
தன் படைப்புகளோடு எதிரும் புதிருமான அபிப்பிராயம் உள்ளவர்களோடு அவர் தொடர்ந்து தன்
படைப்புகளின் வழி உரையாடல் நடத்திக்கொண்டே இருந்தார். அரசு அமைப்புகள் வழங்குகின்ற
விருதுகள் எதையும் அவர் பெற்றதில்லை.
ஆனாலும் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் மிகப்
பெரிய ஆளுமையாக இருந்தார். நவீன தமிழ் இலக்கிய உலகில் நுழைகிற எந்தப் படைப்பாளியும்
அவரது ஈர்ப்புக்குள் ஆட்படாமல் இருக்க முடியாது. சுந்தர ராமசாமியின் கருத்துக்களோடு
தீவிரமாக முரண்படுகிறவர்களும் அவரது எழுத்துமுறையோடு உடன்பட்டுப்போனார்கள். அவரது
காலத்தின் எல்லாத் தத்துவங்களுக்குள்ளும், கோட்பாடுகளுக்குள்ளும் உட்புகுந்து
உரையாடுகிற சிந்தனை பலம் அவருக்கு இருந்தது. 'காகங்கள்ஒ, 'காலச்சுவடு' என்ற இலக்கிய
அமைப்புகளின் வழியாகத் தமிழ் இலக்கிய உலகில் அவர் ஓர் அணியை உருவாக்கினார். இவ்வளவு
ஆளுமையை, வலுவான எழுத்து மொழியைத் தன் கையகம் வைத்திருந்த அந்த மாபெரும் படைப்பாளி
இன்று நம்மிடம் இல்லை.
வாழ்வின் உயிர் ஓட்ட மரபில் ஒவ்வொரு மனிதனும் சந்திக்க வேண்டிய இந்த உலகு சார்ந்து
ஒரு முற்றுப்புள்ளியை சுந்தர ராமசாமியும் சந்தித்து இருக்கிறார். சராசரி மனித
மறைவிற்கும் ஒரு படைப்பாளியின் மறைவிற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடு சராசரி
மனிதன் மறைவு அல்லது சராசரி மனிதனுடைய வாழ்வில் அவனது உயிர் நிற்பது என்பது
முடிந்துபோன முற்றுப்புள்ளி. ஆனால் ஒரு படைப்பாளியின் இருப்பை, அவனது உயிரை
மரணத்தால் மொத்தமாக அபகரித்துச் செல்ல முடியாது. அவனது எழுத்துக்களின் வழி, அவன்
தந்து சென்றிருக்கும் சிந்தனைகளின் வழி அவன் மீண்டும் மீண்டும்
உயிர்ப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறான். சுந்தர ராமசாமியும் அதுபோலத்தான். அவர் 'புளியமரத்தின்
கதைஒயாக, 'ஜே.ஜே: சில குறிப்புகஒளாக, 'குழந்தைகள் பெண்கள் ஆண்கஒளாக, 'பசுவய்யா
கவிதைகஒளாக, 'காற்றில் கலந்த பேரோசை'யாக, 'விரிவும் ஆழமும் தேடியஒதாகத் தந்து
சென்றிருக்கும் எழுத்துக்களின் இரகசிய அடுக்குகளில் அவரின் உயிர் பதுங்கி இருக்கிறது.
எந்த மரணமும் அந்த இரகசிய அடுக்குக்குள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது.
எஸ். ஸ்ரீகுமார்
நாகர்கோவில்
v
சுந்தர ராமசாமி அவர்கள் மறைவு எய்திய செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சியும்
வேதனையும் அடைந்தோம். சு.ரா.வின் இழப்பு தங்கள் குடும்பத்திற்கு மட்டும் அல்ல -
தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு என்றே கருதுகிறோம்.
எழுத்தாளராக மட்டும் அல்லாமல் சமூக அக்கறை உள்ள ஒரு இலக்கியவாதியாகவும் விளங்கினார்
என்பதற்கு அவர் வாழ்நாளில் கொண்டிருந்த ஈடுபாடுகள் சான்றாக விளங்கின. தந்தையை இழந்து
தவிக்கும் தாங்களும் தங்கள் குடும்பமும் அடைந்துள்ள சோகத்தை நாங்களும்
பெரும்துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
பேராசிரியர் செ. பாபுராஜேந்திரன்
பேராசிரியர் ஜெ. ஜெனோ பெர்னாண்டோ
பேராசிரியர் ப. இராம்கோபால்
பேராசிரியர் சு. துரை
பேராசிரியர் ரெ. இந்திரா
நாமக்கல்
v
தங்கள் தந்தையும், நாடறிந்த சிறந்த எழுத்தாளருமான சுந்தர ராமசாமியின் மரணம் பற்றிய
செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தேன். எந்த உண்மையான படைப்பாளியின் மரணமும்
தமிழுக்கு இழப்புதான். தந்தையின் மரணம் மகனுக்கு எப்போது நேர்ந்தாலும் இழப்புதான்.
'ஒரு புளியமரத்தின் கதை' பற்றி அப்போதே 'தாமரை'யில் எழுதியவன் நான். உங்கள்
துக்கத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.
ச. செந்தில்நாதன்
சென்னை
v
இக்கடிதத்தை எப்படித் தொடங்குவது என்றே தெரியவில்லை. பயண நெருக்கடிகள் முடிந்து
நேற்றுக் காலைதான் ஊருக்குத் திரும்பினேன். எதையும் தவிர்க்க முடியாதபடி சூழல்கள்
அமைந்துவிட்டன. சு.ரா.வின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கும்
வாய்ப்பற்றவனாகிவிட்டேன். வருத்தத்தின் பாரமும் குற்ற உணர்வின் பாரமும் ஒருசேர
மனத்தை அழுத்துகின்றன.
சு.ரா.வின் மறைவால் உருவான வெறுமையிலிருந்து மீள்வது சிரமமாகவே இருக்கிறது. அடிக்கடி
நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொண்டவர்கள் அல்லரென்றபோதும் நம் நடவடிக்கைகளையெல்லாம்
எங்கோ ஒரு மூலையிலிருந்து அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று நான்
உருவாக்கிக்கொண்டிருந்த எண்ணம் ஒருவித ஆறுதலாக இருந்தது. இன்று அந்த ஆறுதலுக்கு
வழியில்லாமல் போய்விட்டது. அவருடைய இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் போனது
என்னைப் பொருத்தவரையில் மிகப் பெரிய இழப்பு. என்னால் முடிந்ததெல்லாம் கிளம்புவதற்கு
முன்னர் என் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு சிறிய கட்டுரையை எழுதுவது
மட்டும்தான். துரதிருஷ்டவசமாக அதுகூட அரைகுறையாக வெளிவந்திருப்பதை ஊரிலிருந்து
திரும்பியதும் 'தினமணி'யில் பார்த்து வருத்தமுண்டானது. சு.ரா.விடம் செயல்பட்டிருந்த
விழைவு எத்தகையது என்பதைச் சுட்டிக்காட்டி நிறுவியிருந்த பகுதியும் அவர்
எவ்விதத்தில் நம் கலாச்சாரத்துக்கு முக்கியமானவர் என்பதைச் சுட்டிக்காட்டும்
தன்மையுடன் எழுதியிருந்த பகுதியும் வெட்டுக்குள்ளாகிவிட்டன. 'திண்ணை' மட்டுமே
முழுவடிவத்துடன் வெளியிட்டுள்ளது. இது எல்லாமே ஏதோ ஒரு வகையில் நம்மைநாமே மீட்டுக்
கொள்ளும் முயற்சிதானே தவிர சு.ரா.வின் மறைவினால் உருவான இழப்பு ஈடுசெய்ய முடியாத
ஒன்று. அவர் பிரிவால் வாடும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பில்
ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாவண்ணன்
பெங்களூர்
v
தங்கள் தந்தையின் இழப்பு தங்களுக்கு எப்படியோ அப்படியே இலக்கிய உலகிற்கும்.
சீர்செனத்திக்காக வாசல் தேடியவரல்ல அம்மாமனிதர். உலகின் மாபெரும் படைப்பாளிகள்
மரணத்தை அறிந்ததில்லை. சு.ரா.வின் சுவாசமும் அப்படிப்பட்டதுதான். இவ்விழப்பினைக்
கண்டு சோர்வுறமாட்டீர்கள் என நம்புகிறேன்.
நாகரத்தினம் கிருஷ்ணா
பிரான்ஸ்
v
ஆற்றவேயியலாத துக்கத்திற்கு ஆறுதல் கூற எழுதவில்லை. உங்கள் துயரத்தைப்
பகிர்ந்துகொள்வதற்கு எழுதுகிறேன். இதற்கு முன் எழுதுவதற்குக்கூட மிகவும் தயக்கமாக
இருந்தது.
சுந்தர ராமசாமியின் பல நண்பர்களைப் போல் வெகு நாட்கள் அவரைத் தெரிந்தவளல்ல நான்.
அவரை முதலில் சந்தித்ததிலிருந்து ஏழே ஆண்டுகள்தான் ஆகின்றன. தமிழ் இலக்கிய உலகைப்
பற்றியும் எனக்குப் பரந்த பரிச்சயமோ விமர்சனப் பார்வையோ இல்லை. அவரைச் சந்திப்பதற்கு
முன் அவரது இரண்டு நாவல்களையும், அதற்குப் பின் அவரது சில சிறுகதைகளையும்,
கட்டுரைகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால், அவரது நட்பு
என்னைப் பொறுத்தவரை ஆழமானதாக, பொருள் பொதிந்ததாக இருந்தது. 'தமிழகத்தில் கல்வி'
எழுதுவதற்கான அவருடனான உரையாடல் என்னைப் பற்றிய எனது பார்வையையே சீர்படுத்திற்று.
அவரைத் தவிர வேறு எவரும் எனது கல்வி அனுபவங்களையும் சிந்தனைகளையும் அந்த அளவு
வெளிக்கொண்டு வந்திருக்க முடியாது. எனது அனுபவங்களைத் தயக்கமில்லாமல்
பகிர்ந்துகொண்டது எனக்கே வியப்பாக இருக்கிறது. அதற்கு ஒரு காரணம், சந்தித்தவுடனேயே
முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று என்னை உணரவைத்த ஒரு உண்மைத்தன்மை.
அத்துடன், கல்வியைப் பற்றிய அவரது ஆழ்ந்த சிந்தனைகளும் கவலைகளும் முக்கியக் காரணம்
என்று நினைக்கிறேன். கல்வித் துறையைச் சாராத ஒருவருக்குக் கல்வியைப் பற்றி இருந்த
புரிதல் எனக்கு வியப்பூட்டிற்று. அத்துடன், உரையாடுபவர் யாராக இருந்தாலும், அவரைச்
சிந்திக்கவைப்பதும் நேயத்துடனான புரிதலுடன் அவரை அணுகுவதும் மனித மனத்தைப்
புரிந்துகொண்ட, அதன் நுணுக்கமான இயக்கத்தை மதிக்கின்ற ஒரு அறிவாளியால்தான் இயலும்
என்று நினைக்கிறேன். அத்தகைய சிறப்பு அவரிடம் இருந்ததால்தான் அந்தப் புத்தகம்
வெளிவர முடிந்தது. தமிழகத்தின் ஒரு மூலையில் நான் மேற்கொண்டிருந்த சிறிய முயற்சிகளை
வெளி உலகிற்கு அறிமுகம் செய்தது அவர்தான்.
அத்துடன், அவர் என்னிடம் பரிவும் எனது வாழ்விலும் வளர்ச்சியிலும் அக்கறையும் கொண்ட
ஒரு நல்ல நண்பராக இருந்தார். ஒவ்வொரு முறை நான் நாகர்கோவில் வந்தபோதும் அவரும்
குடும்பத்தினரும் என்னிடம் காட்டிய அன்பும் உபசரிப்பும் மறக்க முடியாதவை.
கடைசியில் அவருடன் தொலைபேசியில் பேசியபொழுது, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் எனது
அனுபவங்களை ஒரு உரையாடல் நடத்தி, புத்தக வடிவமாக்க வேண்டுமென்ற தன் விருப்பத்தை
வெளியிட்டார். அமெரிக்காவில் இருக்கும்பொழுது தனக்கு நிறைய நேரம் இருக்குமென்றும்,
பெண்ணியம் பற்றியும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் அப்போது படித்துத்
தெரிந்துகொண்டு, பின் இந்தியா திரும்பிய பின் உரையாடலைத் திட்டமிடலாமென்றும்
கூறியிருந்தார். என்னிடம் பலர் மகளிர் ஆணைய அனுபவங்களை எழுதுமாறு சொன்னபோதெல்லாம்,
சுந்தர ராமசாமி அவர்கள்தான் எனது அனுபவங்களை வெளிக்கொணர முடியும் என்று நான்
சொல்லியிருக்கிறேன். நடக்காமல் போய்விட்டது.
அவரது மறைவு ஏராளமான பலரைப் போல் எனக்கும் பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும்
உங்கள் குடும்பத்தினரும் இந்தப் பேரிழப்பிலிருந்து மீளுவதற்கான மனவலிமையைப்
பெறவேண்டுமென்று வேண்டுகிறேன்.
வே. வசந்திதேவி
சென்னை
v
இன்று காலை தொலைக்காட்சியில் கேட்ட செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சி தருகிறது.
தமிழ் இலக்கியத் துறையில் தன்னிகரற்ற சாதனையாளராகவும் மாபெரும் மனித நேயராகவும்
இருந்த, எங்கள் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய திரு. சுந்தர ராமசாமி
அவர்கள் காலமான செய்தி பெரும் வருத்தம் தருகிறது. அவரைத் தந்தையாகப் பெற்ற
தங்களுக்கும், தங்கள் தாயாருக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்திற்கு சு.ரா. அவர்களின் பங்களிப்பு மகத்தானது
என்பதில் ஐயமில்லை. கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு ஆகிய பல துறைகளிலும் அவர்
தனக்கேயான முத்திரையைப் பதித்தவர். புதுமைப்பித்தனைத் தமிழ் இலக்கிய உணர்வாளர்கள்
நெஞ்சில் பதிப்பதில் அவர் ஆற்றிய பணி வணக்கத்திற்குரியது. தமிழகத்தில் மட்டுமல்லாமல்
உலக அளவில் உள்ள தமிழ் மக்கள், தம் நினைவுள்ளவரையில் அவரை மரியாதையோடு நினைத்துப்
போற்றுவார்கள்.
தமிழ் இலக்கியச் சூழல், எந்த ஒரு மேதையையும் காயப்படுத்தி, களங்கப்படுத்தி
தரைமட்டத்திற்கு அவரை இழுத்துப்போட்டு மிதித்துக் கேவலப்படுத்துவதில் தன்னையும் தரம்
தாழ்த்தி அழித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழல் திரு. சு.ரா. அவர்களையும்
காயப்படுத்தி இருக்கக் கூடும். எனினும் இத்தகைய சூழல் அவரது படைப்பாற்றலையோ, மனித
நேயப் பண்பையோ குறைத்துவிடவில்லை. அந்த அளவுக்கு அவர் மலைபோல் உரத்தோடு நிமிர்ந்து
நின்றார். இறுதியாக அவர் எழுதிய, படைப்புத் திறனை முழு அளவில் வெளிப்படுத்துகிற ஒரு
சிறுகதையை முன் வைத்து அவரை இழிவுபடுத்தும் முயற்சியில் இலக்கிய நண்பர்கள் ஈடுபட்டது
எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம்
என் நிம்மதியை நான் குலைத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்பொழுது உணர்கிறேன். திரு.
சு.ரா. அவர்களின் சார்பில் நானும் பேசியிருக்க வேண்டும். மரியாதைக்குரிய அவரை எவரும்
அசைக்க முடியாது என்பது என் கணிப்பு.
இன்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழ்ப் புதுக்கவிதையில் சிந்தனைத் திறனையும் கலை
நேர்த்தியையும் அற்புதமாகப் பதித்தவர் திரு. சு.ரா. அவர்கள். 'ஒரு புளியமரத்தின் கதை'
கோவை வானொலியில் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டபோது, இன்றைக்கு
மட்டுமல்லாமல் என்றைக்கும் தமிழ் மொழியின் உன்னதமான நடையழகுக்காவும் சமூக
விமர்சனத்திற்காகவும் அந்த நாவல் இலக்கியவாதிகளால் பயிலப்படும் என்ற உணர்வைப்
பெற்றேன். தமிழை இத்தனை வளமாகக் கையாள முடியுமா என்பதற்கு என்றைக்கும் ஒரு சான்றாக
அவரது 'ஜே.ஜே: சில குறிப்புகள்' நாவல் திகழும். அவரது 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்'
என்ற நாவல் என்னைப் பொறுத்தவரை தமிழ் நாவலின் உச்சங்களில் ஒன்று. தமிழகச் சூழலில்
ஒருவரை வேண்டாதவர் என முடிவு கட்டிக்கொண்ட ஒருவரால், அவரால் வெறுக்கப்படும் ஒருவர்
எத்தகைய அற்புதமான படைப்பைச் செய்திருந்தாலும், அந்தப் படைப்பை ஆழமாகவும்,
அக்கறையோடும் படிக்கும் திறனற்றவர் ஆகிறார் என்பதைக் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்'
நாவல் பற்றித் தமிழகத்தில் எழுந்த நண்பர்களின் கருத்துரைகள் வெளிப்படுத்தின.
இறுதிவரை இளைய படைப்பாளிகளின் தரமான படைப்புகள் பற்றி பத்திரிக்கைகளில் விரிவாக
எழுதித் தரமான இலக்கியப் படைப்பாளிகளுக்கு அவர் ஊக்கம் தந்தார்.
70களின் தொடக்கத்தில் திரு. சு.ரா. அவர்களை நாகர்கோவிலில் - அவர் இல்லத்தில் -
சந்தித்து நீண்ட நேரம் அவரோடு உரையாடினேன். கோவைக்குத் திரும்பி வந்தபோது, அவர் ஒரு
மகான் என்று என் நெஞ்சில் - எனக்குள் ஏற்பட்ட அவரைப் பற்றிய பதிவு குறித்து, என்
நெருக்கமான நண்பர்கள் சிலருக்கு எழுதினேன். நண்பர்கள் என் கருத்தைப்
பொருட்படுத்தினார்கள் என்று நான் நம்பவில்லை. 'ஜே.ஜே: சில குறிப்புகஒளை மிகுந்த
வியப்புணர்வோடு படித்த நிலையில் என் பாராட்டையும், அவரிடம் இருந்து நான் எங்கு
வேறுபடுகிறேன் என்பதையும் தெரிவித்து விரிவாக அவருக்கு எழுதினேன். ஜே.ஜே. பற்றி
இன்னொரு முறையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கட்டுரை வெளியிட்டேன். என் கருத்து
அவருக்கு உடன்பாடு இல்லை எனினும் என்னைப் பெரிதும் நேசித்தார். அன்னை தெரசா
பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக் கருத்தரங்கு ஒன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பொழுது,
தலைமை வகித்த அவர் என்னைப் பற்றிக் கூறிய சில கருத்துக்கள், அவர் என்மீது எத்தனை
நேசத்தையும், மரியாதையையும் கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தியது. அவரது
நேசத்திற்குரியவன் என்பது எனக்கு அவர் தந்த பெரும் மரியாதை.
ஒரு சமயம் அவர் எனக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் எழுதும்போது, நீங்களும் எனக்கு
ஆசான் என்று எழுதியதை அவர் ஏற்காமல் எஸ். என். நாகராசன் தான் எனக்கு ஆசான் என்று
எழுதினார். இலக்கியத்தைப் பொறுத்தவரை எனக்கு முதல் ஆசான் திரு. சுந்தர ராமசாமி
அவர்கள்தான். இன்றைக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். மார்க்சியத்தைப்
பொறுத்தவரை தோழர் எஸ். என். நாகராசன் எனக்கு ஆசான் என்பதிலும் ஐயமில்லை.
மார்க்சியத்தின் மீது திரு. சு.ரா. அவர்களுக்கிருந்த கேள்விகளும் மரியாதைக்குரியவை.
கோவைக்கு அவர் கடைசியாக வந்திருந்தபோது என்னை என் வீட்டில் வைத்து சந்திக்க வேண்டும்
என்று பெரிதும் விரும்பினார். வாய்ப்பு நேரவில்லை என்பது இப்பொழுது எனக்குப்
பேரிழப்பாகத் தெரிகிறது. நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை என்று கருதி அவர்
வருத்தப்பட்டிருக்கக்கூடும். அதற்காக நான் இன்று அவரிடம் மன்னிப்புக் கேட்க இயலாது.
கருத்தரங்கின்போது நான் அவரைச் சந்தித்தேன். மிகுந்த உற்சாகத்தோடு உரையாடினார்.
நண்பர் ஒருவர் அவர் வயதைக் கேட்டபோது, எனக்கு வயது 30 என்றார். என்னளவு வேகத்தோடு
உங்களால் நடந்து வர இயலுமா என்று அவரைக் கேட்டார். இன்றுள்ள தமிழ் இலக்கியவாதிகள்
மத்தியில், எட்ட முடியாத அளவுக்கு ஒரு சிகரமென அவர் திகழ்ந்தார். இன்றைய சூழலில்
தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும் உள்ளடங்கிய மிக விரிந்த
ஒரு அமைப்பிற்குத் தலைவராக இருந்து எங்களை நெறிப்படுத்தக் கூடிய தகுதி
அவருக்குத்தான் இருந்தது. தமிழகச் சூழல் இத்தகைய வாய்ப்பை இழந்துவிட்டதற்காக
என்றேனும் வருத்தப்பட நேரும். இன்றைக்கும், என்றைக்கும் ஆற்ற முடியாத வேதனையை
அம்மாவோடும், உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்.
திரு. சு.ரா. அவர்கள் பற்றிய துயரம் எனக்குள் தொடர்வதன் காரணமாக எனது உணர்வுகளை
உங்களோடு பகிர்ந்துகொள்ளும் முறையில் தொடர்ந்து எழுதுகிறேன்.
திரு. சு.ரா. அவர்களுக்கு சாகித்ய அகாதமி கிடைக்கவில்லை, ஞானபீட விருது
கிடைக்கவில்லை என்பது பற்றி எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. காரணம், இவ்வகை
விருதுகளுக்கு எல்லாம் மேற்பட்ட தகுதியுடையவர் சு.ரா. அவர்கள். 'ஒரு புளியமரத்தின்
கதை' என்ற நாவல் வெளிவந்த சந்தர்ப்பத்தில் அவருக்குப் பரிசு கிடைத்திருந்தால் நாம்
மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அதன் பிறகு தகுதிக்கொத்த முறையில் எந்தப் பரிசை, யாரால்
வழங்க முடியும்? பரிசுகள் தீர்மானிக்கப்படும் நடைமுறைகள் குறித்து சு.ரா.
அவர்களுக்கு எந்தக் காலத்திலும் எவ்வகை மரியாதையும் இருக்கவில்லை. இந்த முறையில்தான்
இங்கு இலக்கியத்தின் அரசியல் செயல்படுகிறது. அருவருக்கத்தக்க இந்த அரசியல் நம்மைப்
பாதிக்க வேண்டியதில்லை.
திரு. சு.ரா. அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழியோடும், ஆங்கிலத்தின் மூலமாக
உலக அளவிலான இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், தத்துவம் ஆகியவற்றின் ஆக்கங்களோடும்
நிறைவான உறவுகொண்டிருந்தவர். சு.ரா. அவர்களிடம் எப்பொழுதும் கொந்தளித்து, பொங்கி
வழிந்துகொண்டிருந்த இடையறாத படைப்பியக்கத்திற்கு இதுவே காரணம். இதனால் தமிழ்
இலக்கியம் வளம் பெற்றது. படைப்பிலக்கியவாதியாகவும் அதே சமயத்தில் ஆற்றல் மிகுந்த
திறனாய்வாளராகவும் சு.ரா. அவர்கள் திகழ்ந்தார்.
நெடுங்காலத் தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என வள்ளுவர், இளங்கோ, கம்பர் என்று
தொடங்கி எத்தனையோ பேர்களை நாம் மதிக்கிறோம். நம் காலத்தில் பாரதியார் என்றும்
பாரதிதாசன் என்றும் சொல்லுகிறோம். இந்த வரிசையில் புதுமைப்பித்தனையும்,
ஜெயகாந்தனையும், சு.ரா. அவர்களையும் தயக்கமில்லாமல் நாம் சேர்த்துக்கொள்ள முடியும்.
இன்னும் யாரெல்லாம் இந்தத் தகுதிக்குரியவர் என்று இங்கு பட்டியல் தேவை இல்லை. சு.ரா.
அவர்களால் தமிழ் பெற்ற ஆக்கம் குறித்து நாம் எவ்வளவோ பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் சு.ரா. அவர்களோடு நான் நெருக்கமான உறவு
வைத்துக்கொள்ளாமைக்கு இப்பொழுது பெரிதும் வருந்துகிறேன். 'காலச்சுவடு' இதழும்
இலக்கிய அரசியல் என்ற நெருக்கடிக்குள் இயங்கியது என்பதும்கூட இதற்கு ஒரு காரணம்.
சு.ரா. என்ற மாபெரும் சக்தி இல்லாமல் இனித் தமிழ் இலக்கிய உலகம் வாழவேண்டி இருக்கும்
என்பது பற்றி எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. எனக்குள் இயக்கங்கொண்டுள்ள
எத்தனையோ பார்வைகளுக்கு அவர் ஊற்றாக இருந்திருக்கிறார். அவர் என்றும் என்
மரியாதைக்கு உரியவர் மட்டுமல்ல, என் வணக்கத்திற்கும் உரியவர். அவரது ஆளுமையின்
விரிவை அதிக அளவுக்கு உள்வாங்கிக் கொள்வதன் மூலம் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அவர்
என்றும் ஆசானாகத் திகழ்வார்.
ஞானி - கி. பழனிச்சாமி
கோயம்புத்தூர்
v
கடந்த 16.10.05 அன்று காலை நான் எனது கலைக் கூடத்தைத் திறக்க வருகையில் வெளியில்
கதவுக்குப் பதில் சாத்திக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் தட்டி போர்டில் ஒரு துண்டுச்
சீட்டு வைக்கப்பட்டிருந்தது. என்ன தகவல் என்று எடுத்துப் பார்த்தேன். எழுத்தாளர்
திரு. சுந்தர ராமசாமி அவர்கள் அமெரிக்காவில் மரணம் என்று எழுதியிருந்தது. திகைப்பும்
வேதனையும் துக்கமும் என்னை நிலைகுலையச் செய்தன. சில மணி நேரம் தெளிவான மனநிலைக்கு
இயங்காமல் இருந்தேன். பிறகு சிறிது நேரத்தில் ஒரு தட்டி போர்டைத் தயார் செய்து,
வருந்துகிறோம் என்று தலைப்பிட்டு அஞ்சலிச் செய்தி எழுதி எங்கள் ஊரில் மெயின்
ரோட்டில் கட்டி வைத்தோம். நான்கு நாட்கள் அந்த போர்டு இருந்தது. ஐந்தாவது நாள்
மழையில் கிழிந்துபோனது. அதைப் புகைப்படம் எடுக்கச் சிந்தனை வரவில்லை.
சு.ரா. அவர்களின் தீராத தேடலும் தீவிரமான வாசிப்பும் என்னை அடிக்கடி பிரமிக்கச்
செய்திருக்கின்றன. அவர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் மிக அற்புதமான
மொழிபெயர்ப்பும் ('செம்மீன்ஒ, 'தோட்டியின் மகன்') கடும் உழைப்பிற்குப் பின் தமிழ்
மொழிக்குத் தந்திருப்பதை உணர முடியும். மேலும்தான் வாழும் இடத்தில் தொடர்ந்து கலை
இலக்கியங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு 'காகங்கள்' பெயரில் கூட்டங்கள் நடத்தியது பெரும்
சாதனைதான். அவர் எந்த இயக்கங்களிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தனியாக
இயங்கிவந்திருக்கிறார். என் போன்ற இளைஞர்களுக்கு இது அவநம்பிக்கையாக இருந்தாலும்,
அவர் சலியாமல் படைப்புச் சூழலில் ஓய்வு ஒழிச்சலின்றி தொடர்ந்து எழுதி வந்தது பெரும்
நம்பிக்கையான விஷயமாகும். 'தீராநதி'யில் சு.ரா.விடம் கேளுங்கள் என்ற பகுதியில் மிகச்
சிறப்பான முறையில் பதில் சொல்லிவந்தார்கள். மேலும் 'புதிய பார்வை'யில் சு.ரா.
குறிப்புகள் பகுதியில் மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன் அவர்களின் பங்களிப்பு
பற்றியும் மிகுந்த அக்கறையோடு சிலாகித்து எழுதி இருந்தார். இது புதிதாக தீவிரமாக
வாசித்துவருபவர்களுக்குப் பெரிய அளவில் அறிமுகமாக இருந்திருக்கும் என்பதில் எந்த
மிகையுமில்லை. அதன்பிறகு கே.ஏ. குணசேகரனின் ('வடு') என்ற சுயசரிதை நூலைப் பற்றி
அவர்கள் எழுதியிருந்த விதம் அந்தப் புத்தகத்தைத் தேடி வாசிக்க ஆர்வத்தைத் தூண்டுமளவு
இருந்தது. காந்தியடிகள் பற்றி ஏ.கே. செட்டியாரின் 'அண்ணல் அடிச்சுவட்டில்' என்ற
புத்தகத்தை முன்வைத்து எழுதியதும் அவரின் தேடலையும் தீவிர வாசிப்பையும் புரிந்துணர
முடியும். மேலும், அறிவொளி இயக்கங்களில் தீவிர பங்களிப்புச் செய்த அனுபவங்களைப்
பற்றி ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற தொகுப்பை அவர்கள்
அறிமுகம் செய்திருக்கும் பாணி மிக முக்கியமானதாகும். ஏனென்றால் தமிழ்ச் சூழலில் இது
மாதிரியான புத்தகங்களை அறிமுகம் செய்வது இளம் தலைமுறை வாசகர்களுக்கு நல்லதொரு
அடையாளமாய் இருந்தது. மிகச் சிறந்த வாசிப்பாளரும் தீவிரப் படைப்பாளியுமான சுந்தர
ராமசாமி அவர்கள் வாசித்ததைத் தன் பார்வையில் விமர்சனத்தோடு முன்வைத்து எழுதியது என்
போன்ற வாசகர்களுக்குச் சமகாலத்தில் வந்துகொண்டிருக்கும் மிக முக்கியமான நூல் பற்றித்
தெரிந்து புரிந்து வாசித்துணர முடிகிறது.
கடந்த 1997இல் பருவ மழை அதிகரித்திருந்த வேளையில் எனது தாய் சுமார் பன்னிரண்டு
வருடமாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு, போராடிப் பார்த்து, நம்பிக்கையிழந்து நம்
பிள்ளைகளின் வாழ்வை வீணடித்து விடுவோமோ என்று மாலை இருள் சூழ்ந்த பிறகு தன் உயிர்
இயங்குவதை நிறுத்திக்கொள்ள அவள் எப்படியோ ஆசாரிக் கிணற்றைத் தேர்வு செய்து தன்
இயக்கத்தை நிறுத்திக்கொண்டாள். எப்படி வந்தது அவளுக்கு இவ்வளவு தைரியம் என்று நம்ப
முடியாமல் அதிர்ந்துபோனேன். வேதனையும் துக்கமும் எவ்வளவு நிலைகுலையச் செய்துவிட்டன.
அதன் பிறகு எனக்கு மிகவும் பாதிப்படையச் செய்த விஷயங்கள் இரண்டு. ஒன்று, தான் வாழும்
காலத்தில் இளைய தலைமுறைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி சமகாலக் கலைப் போக்குகள்
பற்றிப் பயிற்சி கொடுத்து ஒரு கலை இயக்கமாக வாழ்ந்த உன்னதமான கலை ஆளுமை சிற்பி
தனபால் அவர்கள் மறைவு. அதன்பின் கவிஞர் கந்தர்வனின் திடீர் இழப்பு. இவைகளுக்கு
அடுத்து சு.ரா. எழுத்தாளுமை கொண்ட இளம் எழுத்தாளர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இயங்கி,
தான் ஒரு எழுத்தாளர் என்று கர்வம் கொள்ளாமல் தனக்கு அடுத்து வந்து கொண்டிருக்கும்
புதிய புதிய இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்ததும் தன் நண்பர்களுக்கு அறிமுகம்
செய்ததும் பெரிதும் ஆரோக்கியமான விஷயமாகும்.
நாங்கள் த.மு.எ.ச. சார்பில் அக்டோ பர் 26ஆம் தேதி நடத்திய இலக்கிச் சந்திப்பு
நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர் - சிறுகதை எழுத்தாளர் ஜே. ஷாஜகான் அவர்கள் முன்னிலையில்
சங்கரன்கோவில் கிளை சார்பில் எங்களின் அஞ்சலியைச் செய்தோம்.
ந. செந்தில்
(தமிழ்க்கலைக்கூடம்)
சங்கரன்கோவில்
v
உங்கள் தந்தையார் திரு. சுந்தர ராமசாமி அவர்களின் மறைவு குறித்த செய்தி எனக்கு
அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. உங்களுக்கும், உங்களது
குடும்பத்தினருக்கும் மற்றும் 'காலச்சுவடு' இதழில் பணியாற்றும் அனைத்து
ஊழியர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று அவரது இறுதிச்
சடங்கில் தமிழகத்தின் எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள் என்பதை
நாளேடுகளில் படித்தேன். பல்வேறு காரணங்களால் என்னால் நேரில் வர இயலவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. 'ஜே.ஜே: சில குறிப்புகள்'
பற்றி நான் அவரிடம் நேரில் தெரிவித்த பல கருத்துகள் அவருக்கு மிகவும்
பிடித்திருந்தன. நான் கோர்வையாகப் பேசுவதைப் பார்த்து, ஓஉங்களிடம் எழுத்தாற்றல்
இருக்கிறது, நீங்கள் கட்டாயம் எழுத வேண்டும்ஔ என்று மீண்டும் மீண்டும் ஊக்குவித்தார்.
தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு எங்களிடையே கடிதப் போக்குவரத்தும் இருந்தது. காந்தி
கிராமத்திலும் சென்னையிலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான்
நாகர்கோவிலில் உள்ள உங்கள் வீட்டில் சில தடவைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
'காலச்சுவ'டின் முதல் இதழில் நான் எழுத வேண்டும் என்று என்னைத் திரு. சுந்தர ராமசாமி
அவர்கள் ஊக்குவித்துப் பெரிதும் வற்புறுத்தியதால் ஹிந்தி மொழி பற்றிய கட்டுரை ஒன்றை
எழுதினேன். அக்கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது. பிற்காலத்தில் வேறு சில
பத்திரிக்கைகளிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பற்றியும் காந்தியப் பொருளாதாரம் பற்றியும் பல
நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதி என்னால் வெளியிட முடிந்தது என்றால்
அதற்கு திரு. சுந்தர ராமசாமி அவர்களின் ஊக்குவிப்புதான் முக்கியக் காரணம். மீண்டும்
அவரை நன்றி உணர்வுடன் நினைவுகூர்ந்து எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஆர். ராஜகோபாலன்
திண்டுக்கல்
v
எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'காலமாகிவிட்டார்' என்கிற செய்தியைப் பேரா. ஸ்டாலின்
ராஜாங்கம் 'செல்'லில் அனுப்பியிருந்தார். அச்சமயம் நான் 'சிதம்பரத்தில் ஒரு
அப்பாசாமி' திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் பார்த்துக்கொண்டிருந்தேன். செய்தியைப்
படித்தவுடன் திரைப்படத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன். மனம் கனத்தது.
எண்பதுகளின் பிற்பகுதியில் அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் நான்
ஆராய்ச்சிப் பட்டம் பயின்றபோது எம்.ஏ. நுஃமான் மொழியியல் துறையில் ஆராய்ச்சி
செய்துகொண்டிருந்தார். இருவரும் ஒரே விடுதியில்தான் தங்கியிருந்தோம். அவ்வப்போது
இருவரும் சந்தித்து உரையாடுவோம். ஈழத்துப் படைப்பாளிகள் குறித்தே நிறையப் பேசுவார்
நுஃமான். ஒரு நாள் நான் அவரைக் கேட்டேன், தமிழ்நாட்டில் உங்களுக்குப் பிடித்த கவிஞர்
யாரென்று பட்டென அவர் பதில் சொன்னார் 'பசுவய்யா.' இன்றைக்குத் தமிழில்
பிரபலமாயிருக்கிற கவிஞர்கள் ஒருவர்கூட அவரை ஈர்க்கவில்லை. 'நடுநிசி நாய்கள்' அவர்
மூலம்தான் எனக்கு அறிமுகமானது. கவிதையில் மாற்று வடிவத்தை முன்மொழிந்த நூலாக அது
எனக்குப்பட்டது. இப்படித்தான் சுந்தர ராமசாமி எனக்கு அறிமுகமானார்.
'காலச்சுவடு' வந்தது. பிறகு சுந்தர ராமசாமியின் எழுத்துக்களைத் தேடிப் பிடித்துப்
படிக்கத் தொடங்கினேன். 'ஜே.ஜே: சில குறிப்புக'ளைத் திருத்துறைப்பூண்டி சென்று
பிரிட்டோ விடம் வாங்கி வந்து படித்தேன். பின்னர் 'ஒரு புளியமரத்தின் கதைஒ, 'குழந்தைகள்
பெண்கள் ஆண்கள்' போன்ற புதினங்களையும் சிறுகதைகள் பலவும் கட்டுரைகள் பலவும்
வாசித்திருக்கிறேன்.
வாழ்வின் அனுபவங்களினூடாக சுந்தர ராமசாமி கதை சொல்லுகிற உத்தி சராசரிக் கதை
சொல்லிகளைவிட வித்தியாசமானது, கவித்துவமானது, செய்நேர்த்தி மிக்கது. ஒவ்வொரு
படைப்பும் அவரது உழைப்பையும் கலைத் தன்மையையும் துல்லியமாக எடைபோடக் கூடியது.
வறட்டுத்தனமில்லாமல் புதிய புதிய சொற்பிரயோகங்களோடு அவர் மொழியைக் கையாளுகிற அழகே
தனி. தமிழை மேன்மைப்படுத்திய படைப்பாளிகளில் ஒருவராக நாம் சுந்தர ராமசாமியைக்
கொண்டாட வேண்டும்.
'தோட்டியின் மகன்' அவரது மொழிபெயர்ப்பில்தான் தமிழில் தலித் இலக்கிய வரவாய்ப்
பதிவானது. ஆனால் அதை வாசிக்கிறபோது ஒரு மூல நூலை வாசிக்கிற உணர்வைத்தான் அது
ஏற்படுத்தியது.
வே. வசந்திதேவியோடு அவர் கல்வி குறித்த கலந்துரையாடலில் அவரது ஆழமான புலமையும்
சமூகம் குறித்தும் கல்வி குறித்தும் அவர்கொண்டிருக்கிற அக்கறையும் தமிழ்ச் சமூகம்
உணரவேண்டிய ஒன்று. கல்வியாளர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல் அது.
கவிஞர் மீரா, தோழர் ரவிக்குமார், திரு. லஷ்மி மணிவண்ணன் போன்றோருடன் உரையாடும்போது
சுந்தர ராமசாமி குறித்து அவர்கள் தெரிவித்த பல கருத்துக்கள் எனக்கு மிகவும் வியப்பை
அளித்தன. அவர் பார்ப்பனராகப் பிறந்தவர், சிறந்த மனிதராக வாழ்ந்தவர் என்பதுதான்
அவர்கள் வாய்மொழி மூலம் அறிந்த ஒன்று. லஷ்மி மணிவண்ணன், நீங்கள் ஒரு முறையாவது
நாகர்கோவில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி அழைப்பார். நான்தான்
தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன்.
சென்னையில் நடந்த 'தமிழ் இனி'யில் அவரைப் பார்க்கவும் அவரது உரையைக் கேட்கவுமான
வாய்ப்பைப் பெற்றேன். அவரது எழுத்தைப் போலவே அவரது உரையும் மிக்க
செறிவுடையதாயிருந்தது. அப்போதும் அவரை நேரில் பார்த்துப் பேச வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. அவர் சிறந்த சனநாயகப் பண்பு மிக்கவர் என்பது 'காலச்சுவடு' இதழில் அவர்
தலித்துக்களுக்கெனத் தனியே களம் அமைத்துக் கொடுத்ததோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரி இயக்கத்தினர் தலித் பிரச்சினைகளை
எதிர்மறையாக அணுகியபோது தலித்துக்களின் நியாயத்தை எடுத்துக் கூறியதில் 'காலச்சுவடு'
ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. அந்தப் பெருமை எழுத்தாளர் சுந்தர ராமசாமியையே
சாரும்.
அவரது தலித் ஆதரவு நிலையைக் காலி செய்யவும் அவர் பார்ப்பனர் என்பதையும் மனதில்
கொண்டுதான் அவரது 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை எதிர்மறையாகப் பார்க்கப்பட்டு
அரசியலாக்கப்பட்டது. தமிழ்ச் சூழலில் இது ஒரு வெட்கக்கேடான விசயம். அது போலவே
ஒவ்வொரு முறை சாகித்ய அகாதமி விருது வழங்கும்போதும் சுந்தர ராமசாமிக்கு
வழங்கவில்லையே என்று நண்பர்கள் ஆதங்கப்படுவண்டு. குப்பைகளுக்குத்தான் சாகித்ய அகாதமி
என்பது அதன் கொள்கை போலும். அதை வாங்காமலிருப்பதுதான் அவர் படைப்புக்கான கௌரவம்.
படைப்புலகில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்து, ஏராளமான படைப்பாளிகளை உருவாக்கி
இந்த மொழியும் இனமும் மேம்பட உழைத்த அந்த மாமனிதர் சுந்தர ராமசாமி அவர்களுக்கு எமது
வீர வணக்கங்கள். தமிழைப் போல் அவர் புகழ் ஓங்குக.
பேரா. அரச. முருகுபாண்டியன்
மாநிலச்செயலர்
விடுதலை கலை இலக்கியப்பேரவை
விடுதலைச் சிறுத்தைகள்
தமிழ்நாடு
v
உங்கள் தந்தை அமரர் சுந்தர ராமசாமிக்குத் தெரிந்த, பழக்கமான எத்தனையோ பேர்களில்
நானும் ஒருவன்.
புதுக்கோட்டையில் 91 இல் 'ஒரு' என்ற பத்திரிகை நடத்திவந்தபோதும், பிறகு
freelance ஆக சென்னையில் பணிபுரிந்தபோதும் எனக்கு சு.ரா.வுடன் கடிதப்
போக்கு வரத்து இருந்தது.
அவரை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும், அவரின் மரணச் செய்தி அறிந்த பிறகு
ஏன் பார்க்காமல் இருந்தோம் என்கிற துக்க உணர்வே அதிகரிக்கின்றது.
சு.ரா. என்றாலே 'ஜே.ஜே' தான் நினைவுக்கு வருகிறான். இக்கடிதம் எழுதுகிற போதுகூட
சு.ரா.வின் மரண சோகம் தாக்காமல், 'ஜே.ஜே: சில குறிப்புக'ளை இன்னொரு முறை படிக்க
வேண்டும் என்றுதான் தோணுகிறது. சு.ரா.வை வென்றவன் ஜே.ஜே.
'ஜே.ஜே: சில குறிப்புகள்' ஆகட்டும், பசுவய்யா கவிதைகள் ஆகட்டும் அல்லது சு.ரா.
என்கிற தனி மனிதனின் ஆளுமை, நேர்மை, இலக்கிய வீரியம் ஆகட்டும் . . . இவற்றில்
எல்லாம் பரந்து கிடக்கும் ஆன்மிகம் என்கிற ஒரு உள்அம்சத்தைப் பலரும் அல்லது அனைவருமே
பார்க்கத் தவறிவிட்டனர். அல்லது எதற்கு வம்பு என்கிற ரீதியில் மௌனமாய்
இருந்திருக்கலாம். சு.ரா. விற்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை,
சு.ரா. வுமே கூட அப்படி ஒரு மௌனியாக இருந்திருக்கலாம்.
சு.ரா. தன்னை ஜாதீய ரீதியில் அடையாளம் காட்டிக் கொள்ளாதவர்; பிறரையும் அவர் அப்படிப்
பார்த்ததில்லை என்பதில் உண்மை இருக்கலாம். ஆனால், சு.ரா.விடம் ஆன்மிகத் தேடல் என்று
எதுவும் இல்லை என்பதை ஏற்பதற்கில்லை. சு.ரா.வின் எழுத்துக்களில் தென்படும் ஆன்மிக
அம்சங்களே அவரது ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தப் போதுமானவை.
இதை நான் தர்க்க ரீதியாகவோ, வாத, பிரதிவாத நோக்கத்திலோ குறிப்பிடவில்லை. அவருடைய
எழுத்துக்களைப் படித்தவன் என்கிற அடிப்படையிலும்கூட அவரது ஆன்மிக அடையாளத்தைக்
குறிப்பிடவில்லை. சு.ரா.வின் எழுத்துக்கள் என்னைப் பாதித்து - அது எந்த மாதிரியான
பாதிப்பு என்று அணுகுகின்றபோது எனக்குக் கிடைக்கும் பதில்: ஆன்மிகம்.
ஜே.ஜே. தனது இயங்குதளத்தில் ஆன்மிக ஒளி கொண்டவனாகவே தெரிகின்றான். ஆன்மிகம் என்றதுமே
காவிக் கலரும், உபன்யாசமும், கீதையும், பஜனையும் தான் என்று முன் தீர்மானிக்கப்பட்ட
ஒரு சமூகத்தில் உள் ஒளியைத் தேடும், நான் அல்லது தான் யார் என்று தேடும், மனித நேயம்
தொடங்கி பிரபஞ்ச உணர்வு வரை ஆழ்மனச் சலனங்களால் ஆக்ரமிக்கப்பட்டு அதன் ஆகர்ஷணத்தால்
வெளிப்படும் எதுவுமே ஆன்மிகம்தான்.
உலகெங்கும் கணந்தோறும் / இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன / . . . . . . . . /
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும் / அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்
என்கிற கவிதை வரிகளை எழுதியவர் வெறும் கவிஞனாக இருக்க முடியாது. பசுவய்யாவின் இந்தப்
பிரபஞ்ச அறிவை அல்ல . . . பிரபஞ்ச உணர்வை ஆன்மிகமாகப் பார்க்காமல் வேறு எப்படியும்
பார்க்க முடியாது என்பதை ஆன்மிகத் தளத்தில் இன்று இயங்குபவன் என்கிற ஆதார அடிப்
படையில் என்னால் மிகத் தீர்மானமாகச் சொல்ல முடியும்.
'ஒரு புளிய மரத்தின் கதை'யில், ஓஎத்தனையோ ஆடி மாதங்களைத் தாண்டி வந்துவிட்ட மரம் அது.
அதன் மேல் அடித்திருக்கும் வெய்யிலுக்கும், கொட்டியிருக்கும் மழைக்கும், வெடவெடக்க
அடித்திருக்கும் வாடைக்கும், ஆடிக் குலைத்திருக்கும் காற்றுக்கும் கணக்கு வழக்கேது?
'என்ன வெயில்!' என்றோ 'என்ன மழை!' என்றோ ஒருபோதும் அலுத்துக்கொண்டதில்லை அதுஔ என்று
எழுதுகின்றார் சு.ரா.
இதைச் சமூகப் பார்வையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. சு.ரா.வின் ஆன்மிக மன
அதிர்வின் வெளிப்பாடு இது. திரும்பவும் சொல்கிறேன். சு.ரா.வே இந்த விஷயத்தில்
மௌனமாக இருந்திருக்கலாம்.
'உயிர்மை' - சு.ரா. நினைவுச் சிறப்பிதழில், ஓவாழ்க்கையைப் பத்தி மிக அதிகமா பேசினவன்
வியாசன். வாழ்க்கையைப் பத்தி ஒண்ணும் முடிவா சொல்ல முடியாதுங்கிற வரிக்குக் கீழ
மட்டும்தான் அவன்ட்ட கையெழுத்து வாங்க முடியும் . . .ஔ
ஓவியாசன் எல்லாத்தையும் விளக்கிடறான். ஆனா, வாழ்க்கையைப் பத்தின சில முக்கியமான
விஷயங்களை விளக்காமலே போறான். அதான் அவன் வாழ்க்கையைப் பத்தி ஆழமா தெரிஞ்சவன்றதுக்கு
ஆதாரம். எல்லா தருமங்களையும் தெரிஞ்ச தருமன் ஏன் சூதாடினான்? குடைஞ்சு குடைஞ்சு
யோசிச்சாலும் சிக்காது. வியாசனுக்கே அது புரிஞ்சதோ என்னமோ. தெரிஞ்சு போய் கடைசியில,
ஓசரி, தெரிஞ்சுதான் இப்ப என்ன?ஔங்கற ஒரு புன்னகைஔ என்று சு.ரா. கூறியதாக ஜெயமோகன்
எழுதியிருக்கின்றார்.
வியாசனுக்கு ஒரு நியாயம்; சு.ரா.விற்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. சு.ரா.
வியாசனைப் பற்றிச் சொன்ன விஷயங்கள் சு.ரா.விற்கும் பொருந்தும். சு.ரா.வின் இந்த
மௌனத்திற்கு அவரது ஆன்மிக நேர்மை மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.
சு.ரா. சிறுபத்திரிகைகளை எப்படி நேசித்தார், உற்சாகப்படுத்தினார் என்பதற்கு நான்
நடத்திய 'ஒரு' - ஒரு சாட்சி. 'ஒரு' தொடங்குவதற்கு முன்பே, முன்பின் தெரியாதநிலையில்
முதல் சந்தாவாக 25 ரூபாய் மணியார்டர் செய்த சு.ரா.வை என்னால் எப்படி மறக்க முடியும்?
'ஒரு' வந்த பிறகும், இதழ் தோறும் சு.ரா.விற்கென 5 பிரதிகள் அனுப்புவது வழக்கம்.
ஒன்றின் விலை நான்கு ரூபாய். அதைக் கணக்கிட்டு இருபது ரூபாய் அனுப்புவதாக சு.ரா.
எழுதிய கடிதத்தை நான் எப்படி மறக்க முடியும்?
சு.ரா.வின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஷீரடி சாயிநாதரைப் பிரார்த்திக்கிறேன்.
எஸ்.எல். நரசிம்மன்
சென்னை
v
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் மறைந்து, ஒரு மாதம் ஆகப் போகிறது. அதனால்
ஏற்பட்ட பாதிப்பும் அதிர்ச்சியும் இன்னமும் முழுமையாகக் குறைந்தபாடில்லை. எத்தனையோ
பேர்களின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகளைக் 'காலச்சுவடு' இதழில்
வாசிக்க நேர்ந்திருக்கின்றது. அப்போதெல்லாம், ஏற்படாத பதற்றமும், துயரமும், 'காலச்சுவடு'
நவம்பர் 2005 இதழில் வெளியான, சு.ரா. அவர்களின் மறைவையொட்டி எழுதப்பட்டிருந்த
கட்டுரைகளையும், தலையங்கத்தையும் காணும்போதும், வாசிக்கும்போதும் எனக்குள் ஏற்பட்டது.
'தீராநதிஒ, 'புதிய பார்வைஒ, 'உயிர்மை' என எல்லா இதழ்களும் சு.ரா. அவர்கள் குறித்து,
தங்களது அஞ்சலியை வெளியிட்டு, என் போன்ற வாசகர்களைத் துயரக் கடலுக்குள் மூழ்கடிக்கச்
செய்துவிட்டன.
1998ஆம் ஆண்டு, ஈரோட்டிலிருந்தபோது தேவிபாரதிதான், 'ஜே.ஜே: சில குறிப்புகள்' நாவலை
எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்நாவல் முதல் வாசிப்பிலேயே நான் சரியென்று
தீர்மானித்திருந்த சில வழித்தடங்களைத் தாறு மாறாகக் கலைத்துப் போட்டுவிட்டது.
தீப்பிடித்து எரியும் காடுகளுக்கு இடையே நடந்து செல்லும்போது, ஏற்படும் தகிப்பினை
அந்நாவல் எனக்குள் ஏற்படுத்தியது. அதற்குப் பிற்பாடுதான் எழுத்தின் மறு உலகம்
கண்களுக்குத் தட்டுப்பட்டது.
விருதுகளால் சு.ரா. அவர்கள் கவுரவிக்கப்படாமல் போயிருக்கலாம். அவரது எழுத்தின் நிழல்
ஒற்றி வளர்ந்த விழுதுகள் அவர் காட்டிய அன்பினையும், நேசத்தினையும் நன்றியுடன்
நினைவுகூர்வர். அந்த உணர்ச்சி எல்லா விருதுகளையும் விஞ்சி, காலத்தால் நிலைபெற்று
நிற்கும்.
அவரது மறைவால் துயறுரும் 'காலச்சுவடு' இதழ், பதிப்பக நண்பர்களுக்கும், அவரது
குடும்பத்தாருக்கும், 'காலச்சுவடு' வாசகன் என்கிற முறையில் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
கே. இரவிச்சந்திரன்
திருச்சி
v
எங்கள் அருமை நண்பரும் தங்கள் தந்தையும் தமிழ் இலக்கிய வானில் ஒளிமிக்க விண்மீனாக
விளங்கியவருமான சுந்தர ராமசாமி அவர்கள், கலிபோர்னியாவில் அக்டோ பர் 15 சனியன்று
காலமானார் என்பதை அறிந்து, மிக்க அதிர்ச்சியும் துயரமும் என்னை வாட்டுகின்றன;
எங்களது 50ஆண்டு நட்புறவு, தோழமை தொடர்பான எத்தனையோ நிகழ்வுகள், என் நெஞ்சில்
நிரம்பி வழிகின்றன . . . இதயம் வலிக்கிறது . . .
தங்களுக்கும், தங்கள் அன்னைக்கும், சகோதரிகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலம்தான், தங்கள் தந்தையின் மறைவினால்
தங்களுக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள இந்தப் பெருந்துயரை ஆற்ற முடியும் . .
. தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, என் உடல்நிலை இடம் தரவில்லை. பொறுத்தருள்க .
. .
தி.க. சிவசங்கரன்
நெல்லை
v
தங்கள் தந்தை திரு. சுந்தர ராமசாமி அமரரான செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் பிரான்ஸிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு
திரும்பியிருந்தேன். அதன்பின் பல அலுவல்கள் /பிரச்சினைகள் காரணமாக இயல்பு நிலைக்குத்
திரும்பவே பல நாட்கள் ஆயின.
சு.ரா.வின் சுற்றம் மிக விரிவானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய
வேண்டியதில்லை. வயது வித்தியாசம் பாராட்டாமல் எல்லாரிடமும் கனிவாகப் பழகுபவர்.
சிறந்த இலக்கியவாதிகளும் உண்மையான நண்பர்களும் மறைந்துவிட்டாலும் மறக்கப்படுவதில்லை.
இருபது வருடங்களுக்கு முன்பு சில நாட்கள் பாரிஸ் நகரத்தில் அவருடன் இருந்தது
நினைவுக்கு வருகிறது. பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ஆழ் மனதின்
உணர்வுகளை முழுமையாக வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியுமா என்று அவரிடம் கேட்டேன்.
'ஓரளவு முடியுமே' என்றார். இந்தத் தருணத்தில் என்னால் முடியவில்லை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் சார்பிலும் என் மனைவியின் சார்பிலும்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
வெ. ஸ்ரீராம்
சென்னை
v
இன்று 15.10.2005 தங்களின் அன்புத் தந்தையும், நவீன தமிழ்ப் படைப்பு எழுத்தாளருமான
சுந்தர ராமசாமி காலமானார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். நவீன
தமிழ் இலக்கியத்தின் மீது அளவற்ற ஈடுபாடும் அக்கறையும்கொண்டவர். முப்பதாண்டுகளுக்கு
மேலாக உள்ள பழக்கம் எப்போதும் தொடர்ந்தது. பழகுவதற்கு மிகவும் எளிய மனிதராகவே
இருந்தார்.
அவரின் மறைவு தங்களுக்கும், தங்களின் தாயார்க்கும், சகோதரிகளுக்கும் துயரம் அளிப்பது
போலவே, தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டவர்களுக்கும் துயரம் அளிப்பதாகும்.
சமரசம் செய்துகொள்ளாத ஓர் சிறந்த படைப்பாளரைத் தமிழ் இலக்கிய உலகம் இழந்துவிட்டது.
ஆனால் நெடுங்காலத்திற்கு அவர் பெயர் தமிழ் இலக்கியத்தில் நிலைபெற்று இருக்கும்.
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
சா. கந்தசாமி
சென்னை