Google   www kalachuvadu.com

சிறுகதை

சித்திரச் சாலைகள்

ஜே.பி. சாணக்யா

தில்லையாடி அம்பலத்தில் உள்ள ஏ.ஜி. ராமலிங்கா பல்கலைக்கழகத்தில் 90களில் எனது கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய பின்பு சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அப்பல்கலைக்கழகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று எனக்காக அன்று காத்திருந்தது.

எனது நண்பரும் வரலாறு மற்றும் இலக்கியச் சிந்தனையாளரும் புனைகதை ஆசிரியருமான ஆர்.கே.வை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க நேர்ந்த அக்கோடைகாலத்தில் குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டபடி எனக்கு அந்தச் செய்தியை அவர் சொன்னார்.

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அப்பல்கலைக் கழகத்தையும் பல்வேறு அரசர்கள் வெவ்வேறு காலங்களில் கட்டிய புராதனக் கோயிலான நடராஜர் கோவிலும் ஐந்து சினிமாக் கொட்டகைகளும் கொண்ட தில்லையாடி அம்பலத்தில் எனக்கு முன்னே இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுற்றிலும் உள்ள கிராமங்களைத் தாண்டிய கடற்பகுதியில் உள்ள தங்கக் கடத்தல்காரர்களிலிருந்து கடைசி ரௌடிகள் வரை நெருக்கமாகப் பழகியும் தெரிந்தும் கோவிலின் வரலாறு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான ஆய்வைச் செய்தவரும் அப்பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்ற முறையிலும் அவர் கூறும் அச்செய்தி மிக நம்பகமானது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

நான் ஏ.ஜி. ராமலிங்கா பல்கலைக்கழகத்தில் இசைக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே ஓவியம் பயில வேண்டும் என்று விருப்பம் கொண்டு முயற்சித்தபோது, தில்லையாடி அம்பலத்திலிருந்து ஆறு மணிநேரப் பேருந்துப் பயண தூரத்தில் உள்ள சென்னையும் மூன்றிலிருந்து நான்கு மணிநேரத் தொலைவில் கும்பகோணம் சுவாமிமலை வழியில் உள்ள அவ்வோவியக் கல்லூரியின் தூரமும் என்னைச் சிறிது யோசிக்கவைத்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இவ்விரு நகரங்களுக்கும் நடுவில் உள்ள தில்லையாடி அம்பலத்தில் மருத்துவம், பொறியியல், கணிதம், வேதியியல் எனத் தொடங்கி இசைத் துறை உள்பட அனைத்துக் கல்வித் துறைகளையும் கொண்ட, 10 கிலோமீட்டர் நீளமும் ஏழு கிலோமீட்டர் அகலமும் கொண்ட அப்பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறை ஒன்று இல்லாமல் இருப்பது பெரும் குறை என்று நான் ஓவியம் பயில முயற்சித்தபோது சந்தித்த அனைத்து நண்பர்களிடமும் தெரிவித்திருந்தேன்.

ஆர்.கே.யிடம் இலக்கியம் பற்றிப் பேச்செடுத்துக் கதைகளுக்கு ஓவியம் வரைவது, ஓவியர்கள், ஓவியம் எனப் பேச்சுத் தொடர்ந்தபோது மேற்கூறியவற்றை எதேச்சையாகத்தான் பேச நேர்ந்தது. ஆனால் ஆர்.கே. சொன்னது மறுக்கும்படியும் வியக்கும்படியும் செய்து என்னை உண்மையிலேயே லேசான பரபரப்புக்குள்ளாகியது.

மற்றவர்களுக்கு இச்செய்தி மிக மிகச் சாதாரணமானது. அக்கல்லூரியிலேயே படித்த எனக்கு அப்படியல்ல. ஓவியத் துறை 1965லிருந்து 71வரை இருந்ததாகவும் 71இல் அதை மூடிவிட்டார்கள் என்றும் Dance on Water என்ற உலகப் புகழ் பெற்ற ஓவியத்தை வரைந்த கேரள ஓவியர் கருணாகரன்தான் ஓவியக் கல்லூரியின் முதலும் கடைசியுமான முதல்வர் என்றும் கூறினார். நான் சிறிது நேரம் அந்தச் செய்தியில் வியந்தபடி ஆர்.கே.வைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சிரித்தபடி மேலும் கூறினார். ஏன் மூடினார்கள் என்பது தெரியாது. ஏ.ஜி.ஆருக்கு ஓவியத் துறையை நடத்துவது குறித்து ஒரு பிரச்சினையும் இருந்திருக்க முடியாது. அதை மூடியதற்கு நிச்சயம் பிரத்யேகமான காரணங்கள் மட்டும்தான் இருக்க முடியும் என்றார். வருடத்திற்குப் பல கோடிகள் வெள்ளையும் கறுப்புமாய்ப் புழங்கும் அப்பல்கலைக்கழக வருமானத்தை வைத்துப் பார்க்கும்போது ஆர்.கே. கூறுவது உண்மையாகத்தான் இருக்க முடியும்.

ஏ.ஜி. ராமலிங்கச் செட்டியாரைப் பற்றித் தமிழர்களுக்குப் பிரத்யேகமாக அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. எங்கள் கிராமங்களுக்கு நடுவிலுள்ள சிறு நகரமான தில்லையாடி அம்பலத்தின் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே தெரியும் களிமண் நிறப் பிரதேசத்தில் அவரது பல்கலைக்கழக ராஜ்ஜியம் தொடங்குகிறது. அவரது குடும்பப் பாரம்பரியம், மிகுந்த அரசியல் செல்வாக்குக் கொண்டது என்பது மிகச் சாதாரணமான விஷயமாகத்தான் இருக்க முடியும். இவரது குடும்ப வைபவங்களிலும் கல்லூரித் திறப்பு விழாவிலும் ஆண்டு விழாக்களிலும் ஜவஹர்லால் நேரு, பெரியார், குன்றக்குடி அடிகளார், காமராஜர், அண்ணாதுரை உள்படப் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கருத்த நிழல்கள் வெளிரும் வெயில் இறங்கும் நேரத்தில் நாங்கள் எங்கள் வழியில் உள்ள நகரத்தில் பேசிக்கொண்டு பயணம் செய்தபோது ஆர்.கே. கூறிய அச்சம்பவம் எனக்கு உற்சாகமானதாக இருந்தது. ஏனெனில் அச்சம்பவக் காலத்தோடும் அந்நிகழ்வோடும் எனது பள்ளிக்கூட ஓவிய ஆசிரியர் கலியபெருமாளும் தொடர்புகொண்டிருந்தார். அக்கல்லூரி மூடப்பட்டதற்கான காரணத்தை அறிய என் மனம் விரும்பியது.

விளையாட்டைத் தவிர எதைப் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வமேயில்லாத எனது பள்ளிக்கூடப் பருவத்தில் எனக்கு ஒன்பதாம் வகுப்புவரை ஓவிய ஆசிரியராக இருந்த ஓவியர் கலியபெருமாள், கொந்தளிப்பு நிறைந்தவராகவும் முரடராகவும் சில நேரங்களில் அன்பைப் பொழிபவராகவும் தெரிந்தார். அவரிடம் ஓவிய நோட்டுப் புத்தகங்கள் வாங்காதவர்கள், ஒழுங்காக வரையாதவர்கள் வாங்கிய அடிகள்தான் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு அவரைப் பற்றிய ஞாபகமாக இருக்க முடியும் என்பதற்கு நானும் விதிவிலக்கல்ல.

கலியபெருமாள் நீளமான முடி வைத்து நெளிநெளியாகக் கோணவாக்கில் பிரித்துவிட்டிருந்தார். சாக்பீஸை எடுத்தவுடன் கரும்பலகையில் எழுதியதாகச் சரித்திரம் கிடையாது. டஸ்டர் கட்டையால் அதை உடைப்பார். குறுக்காக உடைக்கப்பட்ட ஒரு துண்டு சாக்பீஸை எடுத்துக் கரும்பலகையில் thick and thinஇல்தான் எழுதுவார்; வரைவார். சில சமயம் உடைத்த துகள்களை விரலால் தொட்டுத் தொட்டு எடுத்து வரைவார். அது கரும்பலகையில் பல மாயங்களை ஏற்படுத்தும்.

இன்று ஓவியத் துறை ஏற்றுக்கொண்ட நவீனப்பாணி ஓவியங்களில் ஒன்றைக்கூடச் செய்திராத அவரை ஓவியர் என்று யாரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வறுமை நிலையில் ஓவியம் பயின்று ஓர் ஓவிய ஆசிரியராகத் தன்னை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொருத்திக்கொண்டு மாணவர்களுக்கு ஓவியங்களை அறிமுகப்படுத்தியதிலும் ஓவியக் கோடுகளைப் புரியவைத்ததிலும் மாணவர்களின் வளர்ச்சித் திறனுக்கேற்பத் தனித்தனியான அக்கறை எடுத்துத் திசைதிருப்பியவர் எனும் முறையிலும் ஓவியக் கல்வியின் ஆரம்பப் பணியை வரவேற்கும், புரிந்துகொள்ளும் நபர்களும் நானும் அவரை நிச்சயமாக ஒரு ஓவியராக ஏற்றுக்கொள்வோம்.

ஓவியத் துறை மூடப்பட்டதற்கான காரணம் வரலாற்றின் பெரும் பாதைகளில் பொருட்படுத்தத்தக்கதல்ல என்று சிலர் கருத நேரலாம். விமான ஓடுதளத்தைத்தன் வீட்டின் மேலேயே வைத்திருக்கும் பல கல்வி ஸ்தாபனங்களின் உரிமையாளராக உள்ள ஒரு பணக்காரர்; அவர் விரும்பிய ஓர் ஓவியனாக இருந்த, ஓவியப் பின்னணியில் வளர்ந்து 'Dance on Water' எனும் ஓவியத்தை வரைந்த ஓவியர் கருணாகரன், வறுமையில் வாழ்ந்த எங்கள் பகுதி மக்களில் சிலர், எங்கள் அருகிலுள்ள சிறு நகரத்தில் திறக்கப்பட்டதாலும் தங்களுக்கு இயல்பாகக் கைவந்த கலையாக ஓவியம் இருந்ததால் வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கையாலும் ஓவியம் பயிலவந்த அடித்தட்டு மக்கள் இந்த மூன்று புள்ளிகளும் சந்தித்துக்கொண்ட சிறு நிகழ்வுகளின் தொகுப்பு என்பதாலும் இதைக் கூறும் நியாயம் கொஞ்சமேனும் எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன்.

ஆர்.கே. குறிப்பிட்டபடி இதில் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு நபர்கள்தாம். பல்கலைக்கழகத்தின் தோன்றுநர் வரிசையில் மூன்றாவது வாரிசான ஏ.ஜி. ராமலிங்கம், ஓவியர் கருணாகரன், எனது ஓவிய ஆசிரியர் கலிய பெருமாள், எனது ஆசிரியரின் நண்பரும் ஓவியக் கல்லூரிமாணவருமான செபஸ்டியன் ஆகிய நால்வர்தான் அவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, இச்செய்தி கிடைத்த ஏழு மாதங்களுக்கு முன்பே ஓவியர் கலிய பெருமாள் பணிக் காலத்திலேயே எங்கள் பள்ளிக் கூடத்தில் பிப்ரவரி 2, 2004இல் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் மாரடைப்பில் இறந்துவிட்டிருந்தார். செபஸ்டியனைத் தவிர இது சம்பந்தப்பட்ட இருவரும் இறந்துவிட்டிருந்தார்கள்.

செபஸ்டியன் தற்போது மும்பையில் 'பாம்பே டையிங்'கில் டிசைனராகப் பணிபுரிவதாகவும் தில்லையாடி அம்பலத்தில் 'பாம்பே டையிங்'கின் விளம்பரப் பலகையையும் சென்னை விளம்பரத்தையும் முதன் முதலாக செபஸ்டியன்தான் வடிவமைத்ததாகவும் ஆர்.கே. கூறினார். ஆர்.கே., செபஸ்டியன், கலியபெருமாள் இருவரோடும் நெருங்கிப் பழகியவராகவும் அவர்களைவிட ஓரிரு வயது சிறியவராகவும் இருந்தார். 1956இல் வெளியிடப்பட்ட Ten Commandments திரைப்படத்தைத் தாங்கள் மூவரும் தில்லையாடி அம்பலத்தில் தற்போது பல முதலாளிகளின் கைகளுக்கு மாறிவிட்ட தில்லை டாக்கீஸில் 70களில் பார்த்ததாகக் கூறினார். தற்போது எல்லாத் திரைப்படங்களுக்கும் திரையரங்கினுள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து ஒட்டப்படும் வால் போஸ்டர்கள் அப்போது ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே இருந்ததாகவும் பொதுவாகவே இந்தியத் திரைப்படங்களுக்கு அப்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்போல டபுள் கலர் போஸ்டர்களே அதிகமிருந்தன எனவும் தெரிவித்தார். ஆர்.கே. பார்ப்பதற்கு வாலிபத் தோற்றம் தராதவராக இருந்ததால் திரையரங்கினுள் அனுமதிக்கப்படாமல் பிறகு வயதையும் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பேசிய விவாதத்திற்குப் பின்பு அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

வரலாறுக்கும் புனைகதைக்குமான இடைவெளி நெருக்கமானது. பழங்கால வரலாறுகள் இன்று புனைவுகளின் தோற்றத்திலே நின்றுவிடுவதிலிருந்து இதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நெடிய வரலாற்றின் பிரம்மாண்டத்தின் முன்பு காலச் சுழற்சியில் பலர் காணாமல் போய்விடுவதும் உண்டு. இருப்பினும் கறுப்பு வரிகள் உருவாக்கும் வாசகக் கற்பனைகளில் அவை மீட்டுருவாக்கம் செய்யப்படும்போது அவர்களின் இதயத் துடிப்பைக்கூட வாசகர்கள் துல்லியமாகக் கேட்க முடியும்.

II

ஓவியக் கல்லூரி குறித்து எனது தேடல்களாக அமைந்தவைகளில் எனக்குக் கிடைக்கப்பெற்றவை Martin Williams எழுதித் தொகுத்த The Hundred Painters எனும் புத்தகத்தில் உள்ள கருணாகரனின் வாழ்க்கைக் குறிப்பும் செபஸ்டியன் மூலமாகக் கேட்டறிந்தவைகளும் உள்ளுணர்வு அடிப்படையில் எனக்குத் தோன்றிய சம்பவக் கனவும்தான். இவற்றை அப்படியே வாசகர்களுக்கு என் கதை மொழியில் விவரிக்கிறேன்.

Martin Williams எழுதித் தொகுத்த The Hundred Painters எனும் புத்தகத்திலிருக்கும் கருணாகரன் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் (இதில் ரவிவர்மாவும் கருணாகரனும் கேரள ஓவியர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்):

ஓவியர் கருணாகரன் தேவாலயங்களும் மசூதிகளும் நூற்பாலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள, வாஸ்கோடகாமா முதன்முதலில் வந்திறங்கிய வரலாற்றுத் துறைமுகத்தைக் கொண்ட கோழிக்கோட்டில் 1916ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரும் ஓவியர் மற்றும் மரச் சிற்பக்காரர்; மரக்கடைசல் வேலைகளில் கைதேர்ந்தவர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணிசெய்துகொண்டிருந்தார். கருணாகரன் தந்தை வழியாகவே ஓவியம் பயின்று லண்டனில் 1837இல் தொடங்கப்பெற்ற பெருமைக்குரிய ஓவிய, சிற்பக் கல்லூரியான The Royal College of Artsஇல் ஓவியம் பயின்றவர். 1940இல் 'Dance on Water'ஐ வரைந்தபோது திருவிதாங்கூர் சமஸ்தானம் தன்னுடன் அவரை இணைத்துக்கொண்டது. 'Dance on Water' ஓவியம் ரவிவர்மாவின் ஓவியத்திற்கு இணையாகப் பேசப்பட்டது.

இவர் விலாசினி என்ற தனது தந்தைவழி உறவுப் பெண்ணை மணந்தார். அவரது மண வாழ்வு எந்தத் தடையுமின்றி இறுதிவரை சென்று முடிந்தது. இரண்டு மகள்கள். இருவரும் சிறு வயதிலேயே குடும்பச் சூழலிலிருந்து விலகியே அதிகமும் விடுதிகளில் தங்கிப் படிக்கவைக்கப்பட்டனர். பிற்பாடு இவர்கள் கோயில் கட்டடக் கலைஞர்களான இரட்டைச் சகோதரர்களுக்கு மணம் முடித்துத் தரப்பட்டனர்.

கருணாகரன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது அங்கு அதிகமும் தந்தைவழி வந்த புரவலர்கள் மற்றும் அரசுத் தரப்பினர்களின் குடும்ப உருவ ஓவியங்களையே வரைய நேர்ந்தது. ஓர் ஓவியனின் சுதந்திரம் நிறுவனங்களின் கீழில்லை என்னும் கருத்தை அவர் உணர்ந்திருந்தபோதும் தன் வாழ்வின் தேவைகளுக்காகவும் சமஸ்தானத்தை விட்டு வெளியேறிச் சென்ற பின்னர் தந்தையின் அரச விசுவாசம் குறித்த மனச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவுமே அவர் தொடர்ந்து அங்கே இருக்க நேரிட்டது.

நவீனமும் பாரம்பரியமும் பிணைந்த ஆன்ம எழுச்சிதான் கருணாகரன் பாணி ஓவியங்கள். பிரதேசம் சார்ந்த, நிலம் சார்ந்த ஒரு ஓவியன் அப்படித்தான் இருக்க முடியும் என்பதைத் தொடர்ந்து பேசிவந்தவர் அவர். அப்போதுதான் ஓர் ஓவியன் வாழ்வின் வேர்ப் பிடிப்புக் கொண்ட ஓவியங்களை வரைய முடியும். அதில் மிளிரும் மண்சார்ந்த அசைவுகளும் கலாச்சார முகங்களும் ஓவியன் வளர்ந்ததன் ஆழ்மனப் பதிவுகளோடு அவனையறியாமல் வெளிப்படும். பிறகு அதுவே அவனது ஆளுமையாக மலரும் என்றார். கேரளத்து வையநாட்டில் எடக்கல் குகையில் மரபை ஒட்டி வரையப்பட்ட ஓவியங்களை உள்வாங்கித் தனது ஓவியத்தை உருவாக்கக் கருணாகரன் திட்டமிட்டிருந்தார்.

அவர் எழுதிய 'வண்ணங்களால் ஒரு உலகம்' புத்தகத்தில் கூறியுள்ளபடி காலத்தில் நவீனப் பொருட்கள் என்று கூறப்பட்ட யாவும் தற்போது பழமையேறிப் போயிருக்கின்றன. ஆனால் அவை தற்போது மேலும் நவீனமானவை. ராய் சௌதிரி கூறியதுபோல ஓர் அறையை நவீனமாக்க வேண்டுமெனில் அங்கு ஒரு புராதனப் பொருளைக் கொண்டுபோய் வையுங்கள் என்பதில் உள்ள அர்த்தம்தான் அது. அவை உண்மையிலேயே பழைய காலத்தின் வரலாற்றைப் புதிய இடத்தில் வலியுறுத்துபவை. ஒருநாள் இவை எனது தனிமையிலிருந்து வேறொரு தனிமைக்குள்ளோ அல்லது வேறொரு வசிப்பிடத்திற்கோ நகர்த்தப்படும். அப்போது அவை பழமையின் சின்னங்களாக அல்லது குறைந்தபட்சம் ஓர் ஓவியக்காரனின் உடமைகளாக இருக்கக்கூடும். என் விரல்கள் தடவிய, உடல் உரசி அழுந்தி எழுந்த பகுதிகளும் என் உணர்ச்சி படிந்த கணங்கள் உறைந்த அம்மரப் பொருட்களும் தம்மை உணர்ந்த ஒருவனிடம் மௌனமாகப் பேசத் தொடங்கிவிடும். அவை உயிர்ப் பொருட்கள், கண்டிப்பாக எனக்குத் தெரியும்; ஆன்ம எழுச்சியில் பங்கெடுத்துக்கொள்ளும் எல்லாமும் கால ஓட்டத்தில் தங்கள் பயணங்களை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை என்று கூறுவது கருணாகரனுக்கு மிகவும் பொருத்தமான கூற்றுதான்.

உலகம் முழுதும் அரசர்கள் காலத்தில் ஓவியர்கள் அவர்களோடு நெருக்கமாக இருந்ததுடன் கௌரவமாகவும் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அரசாட்சி முடிந்தும்கூட அரசர்கள் தங்களுக்கான ஓவியர்களைக் கடைசிவரை கௌரவ ஊதியத்துடன் வைத்திருந்த நிகழ்வுகள் இருக்கின்றன. கருணாகரனும் அவ்வாறே நடத்தப்பட்டிருக்கிறார் எனினும் ஓவியத்தின் வெளியை அவர் மிக நவீனத்துவமாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவே சமஸ்தானத்துடன் உள்ளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடாகும்.

வான்கோவைக் கருணாகரனுக்கு மிகவும் பிரத்யேகமாகப் பிடித்திருந்தது. ஓவான்கோவின் ஓவியத்திலிருக்கும் மஞ்சள் நிற வெயில் நம் முகத்தில் பாய்கிறது. அவன் நிஜமாகவே வெயிலின் உயிரை வண்ணத்தால் கைப்பற்றிவிட்டான். என்னால் அதன் வெப்பத்தைக்கூட உணரமுடிகிறதுஔ என்றார். ஓஉங்களுக்குத் தெரிகிறதா அவையனைத்தும். ஒரு ஓவியனின் ஆன்மா. அதனுள் ஊடுருவிச் செல்லுங்கள். அவன் இதயமும் வண்ணங்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கும்ஔ என்கிறார்.

ஓவியம் வரைவது பற்றிய பழமையான நூலான விஷ்ணு தர்மோத்திரத்தில் உள்ள 'சித்திர சூத்திர'த்தை அடியொற்றிக் கருணாகரன் எழுதிய நூல்தான் 'வண்ணங்களால் ஒரு உலகம்'. ஆனால் இது நவீனப் பாணி ஓவியங்களுக்கானதும் இன்றைய நிலவரப்படி எழுதப்பட்டதுமாகும். இதில் ஓவிய உருவாக்கம், ஓவியர்கள் பற்றிய குறிப்புகள் உள்படப் பல விஷயங்களை அவர் தொகுத்துள்ளார்.

இதில் இவர் ஓவியக் கலையின் தோற்றத்திற்கு முன் மாதிரியாகக் கருதப்படும் நாராயண முனிவரை மறுத்து எழுதியுள்ளார் (தன் தொடையில் ஓர் அழகிய உருவை வரைந்து வனப்புமிக்க தேவமங்கையான ஊர்வசியை உருவாக்கியவர் நாராயண முனிவர்). மனிதன் கண்டுணர்ந்த எல்லாவற்றுக்குமே ஆன்மீகச் சாயம் பூசி மீண்டும் மனிதனுக்கே அறிமுகப்படுத்தும் மதத் தந்திரம் மட்டுமே இதில் உள்ளது. குகைகளில் தான் பார்த்த காட்சிகளையும் தன் பயத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்திய அறியாமை நிரம்பிய அக்கோடுகளிலிருந்துதான் நம் ஓவியப் பாரம்பரியம் தொடங்குகிறது என்கிறார் இவர்.

தன் தந்தைக்கான பல பணிகளை ஏற்றுக்கொண்டிருந்த கருணாகரனைத் தந்தையின் இறப்புதான் விடுதலை செய்தது. நவீனம் முழுதாக அவரைத் தழுவிய காலகட்டம் அது என்று இந்திய ஓவியம் பற்றி எழுதிய ரவிசங்கரன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அக்கால கட்டத்தில் தந்தையார் ஒப்புக்கொண்டு முடிக்காமல் விட்ட பல பணிகளை முடித்துத் தரும் நிர்ப்பந்தத்தில் கருணாகரன் இருந்தார். இது முழுக்க முழுக்கத் தந்தை மீதான மரியாதையால்தானே தவிர அவரை யாரும் கட்டுப்படுத்தவில்லை என்கிறார்கள் சமஸ்தானத்து ஊழியர்கள். அச்சமயங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பல நபர்கள் முயன்றிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தான் நம்பிய ஓவிய வெளியைப் புரியவைக்க வேண்டிய உத்வேகமும் ஓவியம் பற்றிய புரிதலற்ற முட்டாள் பணக்காரர்களுக்கு விளக்கவுமே அவர் அதிலிருந்து விரைவிலேயே வெளியேறினார்.

ரவிசங்கரன் இவரைத் தத்துவங்களும் வண்ணங்களும் இணைந்த கலைஞன் என்று குறிப்பிடுகிறார்.

1940களுக்குப் பிறகு கருணாகரனின் ஓவியங்களில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழத் தொடங்கின. ஒரு கலைஞனின் சுய தேடலைப் பொறுத்து அவை மாறுபடுகின்றன. தேடலற்ற எந்த ஒரு கலைஞனின் வாழ்விலும் புதிய படைப்புகள் வருவதில்லை. இவைகளைத் திட்டவட்டமான தத்துவ ஒழுங்குகள் அல்லது முழுமையான புரிதல்களைக் கொண்ட வண்ணக் கோடுகள் என்கிறார்கள் விமர்சகர்கள்.

இதில் முக்கிய ஓவியங்களாக Water Colour (1942), Shadows on the Mountain (1944) போன்ற ஓவியங்களைக் குறிப்பிடலாம். இரண்டு ஓவியங்களுமே எண்ணெய்ச் சாய ஓவியங்கள். Water Colour எனும் இவ்வோவியம், நீர் செல்லும் இடம் பொறுத்துத் தன்னை மாற்றிக் கொள்ளும் எளிமையான தத்துவத்தைப் பின்பற்றி அமைந்துள்ளது. இப்பண்பில் இவ்வுலகின் மாபெரும் தத்துவமும் மானுட வாழ்வுமே அடங்கிவிட்டதாக அவர் வியந்துள்ளார். இந்த எண்ணமே இவ்வோவியத்தை வரையவைத்ததாகக் குறிப்பிடுகிறார் கருணாகரன். ஒரே சட்டகத்தில் உயிர்பெறும் பல்வேறு உணர்ச்சி நிலைகளில் அழுத்தம் தரும் வண்ணங்களால் வரையப்பட்டிருக்கிறது இவ்வோவியம். பளிங்கு நீரில் தெரியும் கூழாங்கற்கள், அதன்மேல் நிற்கும் மர மேசை, மேசைமேல் வண்ணங்களாலான கண்ணாடி டம்ளர்கள், ஜாடிகள், கூஜாக்கள் இருக்கின்றன. நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிப் பொருள்களில் நீர்நிலைக் கோடுகள் சூரிய ஒளிக்கு ஏற்றாற்போல் அடர்த்தியும் வெளிர்த் தன்மையும் கொண்டதாக இருக்கின்றன. பொருள்களின் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் தோற்றமும் தெரியும்படி வரைந்துள்ளார். அதனுள் அடியாழத்தில் வெய்யிலின் ஒளியில் வைரங்கள் மினுங்குகின்றன. சமஸ்தானத்துக்காரர்களில் சிலர், கருணாகரன் இதை ஒரு வைர வியாபாரிக்காக வரைந்ததாகக் கூறுகிறார்கள்.

பொதுவாகவே கருணாகரனைத் தாண்டிய அவருக்குள் உறங்கும் தத்துவப் பண்பே Dance on Waterஐ வரைய வைத்திருக்கிறது. கருணாகரன் தன் பிரதேசம் வெளிப்படும் உலகத் தரமான பார்வையைத் தொடும் ஓவியத்தையே பிறகான காலங்களில் விரும்பியுள்ளார். அதன் வழியாகத் தான் தொடர்ந்து வரைந்தவற்றில் கேரளாவின் கலாச்சாரம் தெரியும் பல்வேறு நுட்பங்களை அவர் தனது ஓவியத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதனுடைய ஆகச் சிறந்த வண்ண ஓவியமான Dance on Waterஐ சில கதகளி நடனக் கலைஞர்கள் கதகளியின் 'உள்ளும் புறமும்' என்பவற்றைக் குறிப்பதாகவும் கூறுகிறார்கள். கதகளி பற்றிய அவரது ஆரம்ப ஓவியம் ஒன்றில் நடனத்திற்கு முன், நடனம், நடனத்திற்குப் பின் என்று மூன்று நிலைகளை வரைந்துள்ளார். இதில் நடனத்திற்கு முன் எனும் தலைப்பிட்ட ஓவியத்தில் ஒப்பனைக்கான வண்ணங்களை முகத்தில் ஆரம்பப் பூச்சுகளை விளக்குவதுபோன்று ஸ்ட்ரோக்குகளில் வரைந்துள்ளார். பின்னர் ஆகாயத்தின் நீல வண்ணத்தையும் மேகங்களையும் பின்னணியாகக் கொண்டு கதகளியின் உச்ச வேகத்தை வெளிப்படுத்தும் விதமாக வெறும் கோடுகளை ஒப்பனை வண்ணங்களையே தேர்வுசெய்து நடுக்கமுறும் கோடுகளாகவும் அழுத்தமான கோடுகளாகவும் சாதாரணக் கோடுகளாகவும் வரைந்துள்ளார். அதை உற்றுப் பார்க்கும்போது ஒரு நடனக் கலைஞனின் ஆத்மா, வண்ணங்களால் நிரப்பப்படுகிறது என்கிறார்கள் கதகளியில் ஆழ்ந்த அனுபவமுள்ள கலைஞர்கள்.

இறுதியாகத்தான் அவரது Dance on Water ஓவியம் வரையப்பெறுகிறது. அதற்கான சம்பவம் சிறு சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கிறது. கதகளி நடனம் பார்ப்பதற்குச் சென்ற கருணாகரன், மூத்த கலைஞர் ஒருவர் நடனத்திற்குப் பின் அங்குள்ள அரண்மனையில் கற்படிக்கட்டுகள் நிறைந்த குளத்தில் நீராடும்போது நீரில் கரைந்த வண்ணங்கள், அவரைச் சுற்றிலும் அவர் எழுப்பும் நீரலைகளின் மடிப்புகளில் நடனமாடியபடியே படிக்கட்டுகளை நோக்கிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். நீரில் முங்கி எழும் அரிதாரம் பூசப்பட்ட கலைஞனின் ஒப்பனைகள் அவர் எழுப்பும் அதிர்வலைகளில் வண்ணங்கள் கரைந்து தத்தளிக்கின்றன என்கிறார். அந்தக் கணம் தன்னை இனம் புரியாத கிளர்ச்சிக்கு ஆட்படுத்தியது என்று எழுதியுள்ளார்.

இவ்வோவியத்தை அவர் வரைந்தபின்பு ஒப்பனை பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக முக்கியமான தத்துவப் பண்பைப் பெற்றிருக்கிறது. ஒப்பனை என்பது வேறொரு நிஜத்தைத் தரும் கற்பனை. ஒரு நிஜத்தின்மேல் வேறொரு நிஜம் பூசப்பட்ட பின்பு அந்தக் கற்பனை நிஜம் கொள்கிறது. அது தரையிறங்கும் நேரத்தில் நாடகமோ நாடக ஆசிரியனோ நடிகனோ முடிந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வோவியம் திருவனந்தபுரம் அரசு கலைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மற்ற ஓவியங்களில் சில எம்.சி. சாலையிலுள்ள கே.வி. மேனன் ஓவியக் கூடத்திலும் உள்ளன.

கலைஞனின் தற்காலத் தனிமை என்பது முழுக்க முழுக்கக் கலையும் தூய ஆன்மீகமும் சம்பந்தப்பட்டதாகும். அவனது ஆன்மாவின் தனிமை, பேரண்டத்தோடு மட்டுமே பொருந்திப்போவதாகவும் மற்றவைகளில் தன்னை இணைத்துக்கொள்ள முடியாதபடி துண்டிப்பு மனநிலையில் உள்ளதாகவும் இருக்கிறது. கருணாகரன் ஆன்மீகம் மற்றும் கடவுள் பற்றிய தனது கருத்துகளைப் பெரிதாக வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அவரது ஆன்மா அவரது கலையை மீறி அவரைத் தனியாக உணரவைத்திருக்கிறது. இது இப்பிரபஞ்சத்தோடு தன்னை ஆழமாகப் பிணைத்தும் பிரித்தும் பார்க்கும் ஆன்மீக நிலையாகும்.

ஓவியர் கருணாகரனைப் பற்றி சுவாரஸ்யமான புனைவு ஒன்று தமிழகத்தில் உலவுகிறது. இவர் ஒரு பல்கலைக்கழகத்தில் தனது கடைசி நாட்களில் ஓவியப் பேராசிரியராக இருந்ததாகவும் தனது எஞ்சியுள்ள நாள்களை அங்குக் கழித்ததாகவும் கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்கக் கருணாகரனைப் பற்றிய புனைவு. கருணாகரனைப் பொறுத்தவரை அவரது கடைசிக் காலம் கேரளாவில் அவரது சொந்த வீட்டில் மிக மகிழ்ச்சியுடன் கழிந்தது.

III

மார்ட்டின் வில்லியம்ஸ் கூறுவதை என்னால் ஆதார பூர்வமாக மறுக்க முடியும். ஏனெனில் கருணாகரனின் மாணவர்களாகத் தில்லையாடி அம்பலத்தில் ஓவியக் கல்லூரியில் பயின்ற ஆர்.கே. கூறிய இரண்டு நபர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

செபஸ்டியனை நான் பாம்பே டையிங் முகவரிகளைப் பிடித்துத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கல்லூரி மூடப்பட்டதற்கான பொதுத் தகவல்களையே கூறினார். ஓநீங்கள் 'கலி'யுடைய ஸ்டூடண்ட்டா?ஔ என்றார். கருணாகரன் மாஸ்டரைப் பற்றி என்ன எழுதப்போகிறீர்கள் என்று விசாரித்தார். செபஸ்டியனின் அம்மா இன்னும் திருச்சியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீண்டும் விசாரித்தபோது செபஸ்டியன், திருச்சிராப்பள்ளிக்கு வர வேண்டும், ஆனால் எப்போது என்று தெரியவில்லை என்றார். பூனாவுக்கு வர முடியுமா என்று கேட்டார். முடிந்தால் வருவதாகவும் வரும்போது கட்டாயம் சந்திப்பதாகவும் கூறி முடித்துக்கொண்டேன்.

நான் விரும்பியபடியும் எதிர்பாராதபடியும் செபஸ்டியனைச் சென்ற மாதம் பூனாவின் கிழக்குப் பகுதியில் தமிழ்க் கோவிலுக்கு அருகேயுள்ள கோ ஆப்ரேடிவ் காலனியில் அவர் தங்கியிருந்த வீட்டில், எனது நண்பர் சண்முகம் வீட்டிலிருந்து காரில் அரைமணி நேரப் பயண தூரத்தில் சந்தித்தேன்.

செபஸ்டியன் உற்சாகமாகத் தோற்றம் தரக்கூடிய வெள்ளை முடிக்காரராக இருந்தார். ஒல்லியான, திடகாத்திரம் தெரியும் உடலில் கை நரம்புகள் பிதுங்கி வெளியே தெரிந்தன. சற்றே பெரிய கண்களும் கத்தையாக ஒழுங்கமைக்கப்பட்ட சாம்பல் வெள்ளையில் வெளுத்த மீசையும் நீளவாகு முகத்திற்குப் பொருத்தமாக இருந்தன. கேள்விகளுக்குப் பதிலாகச் சட்டென அவருக்கு ஹிந்தியும் மராட்டியுமே வந்தன. பல சமயங்களில் மொழிதாவிச் செல்லும்போது அவருக்கு நான் தமிழை நினைவுறுத்த வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவர் அக் காலத்தோடு பயணப்படும்போது குதூகலமும் துக்கமுமான எங்கள் கிராமங்களின் மொழிப் பிரயோகங்களின் பச்சை வாசனை மிளிரப் பேசிக்கொண்டு சென்றார். பெருநகர வாழ்வு அவரைப் பலவாறாகப் பண்படுத்தியிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அவர் தோற்றத்தில் இல்லாத கவித்துவம் அவர் பேச்சில் இருந்தது. அவரை நான் மிகவும் இணக்கமாக உணர்ந்தேன். அவருடன் பேசியது, விவாதித்தது போனவையும் சுருக்கியும் கருத்துப் பிறழாமலும் தந்துள்ளேன். அவருடையதும் என்னுடையதுமான குரல்கள் தன்மை ஒருமையிலேயே இருந்தாலும் இப்பகுதி அவர் குரலுக்குரியதுதான்.

அடர்ந்த மரங்கள் சூழ்ந்த எங்கள் ஓவியக் கல்லூரியும் எப்போதும் நிழல் படிந்த எங்கள் வகுப்பறைகளும் இன்னும் என் கண்களில் இருந்து மறைந்துவிடவில்லை. கனவுகள் உண்மையிலேயே நிரந்தரம் பெற்றுவிட்ட ஓவியங்களைப்போலும் வரைந்ததால் வரலாற்றினைக் கூறிக்கொண்டு நூலகத்தின் புத்தக அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்களாக எண்ணி முடிக்கப்படாத பக்கங்கள்கொண்ட பிரதிகளுடையதுபோலும் எனக்குள்ளே காத்திருக்கின்றன. அவைகளை அசைபோடுவதுதான் இவ்வயதான பருவத்தில் எனக்குத் துன்பத்தையும் ஒரு வகையான ஆறுதலையும் தருகின்றன.

எங்களது பெயரெழுத்துகள் வெட்டப்பட்ட டெஸ்க்குகளிலும் மரப்பெஞ்சுகளிலும் எங்கள் ஞாபகங்கள் தூசுபடிந்து கிடக்கின்றன. பல்கலைக்கழகத்திற்குக் கூட்டிச்செல்லும் தற்போது உள்ள பகட்டு மிகுந்த சைக்கிள்களையும் பாதசாரிகளையும் கேலி செய்யும் சாலைகள் அப்போது இல்லை. திருத்தப்பட்ட காட்டிற்குள் செல்லும் வண்டிப் பாதைகள் போல் சாலைகள் நகர்ந்துசென்று மறைந்து திரும்பிக்கொண்டிருந்தன. வண்டிகள் முறுக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் நிலக் காட்சிகளை மிதித்தபடி கிராமங்களுக்குச் சென்றன. லாந்தர் விளக்குகளில் பெரிய நிழல்கள் அசைய நிலவொளியில் காட்டைக் குடைந்து நகர்வதுபோல் எல்லா நகர்வுகளும் இருந்தன. அவை ஒரு புதிய பிரதேசத்தின் அரூபத் தன்மையினுள் தம்மைக் கொண்டிருந்தன. வளர்ச்சி பெறும் எந்த நோக்கத்தையும் நேரிடையாகத் தெரிவிக்காமல் படிப்பு ஏறாத மாணவனைப் போல் அசைவற்றுக் கிடந்தன நிலப் பகுதிகள். வேட்டி கட்டிக்கொண்டுகூட நாங்கள் வகுப்பறைக்குச் சென்றோம். எங்கள் ஆடைகளில் வண்ணக் கறைகள் மகிழ்ச்சியுடன் வசித்துக்கொண்டிருந்தன. கான்வாஸில் வண்ணங்கள் நிறைந்து கிடந்த அந்நாட்கள் இந்நேரத்தில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்பவை.

நான் கோவில் சுவரிலும் பள்ளிக்கூடச் சுவரிலும் கிறுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து நான் தமிழ் படிக்க வேண்டும் என்று விரும்பிய எனது தமிழய்யா சந்திரசேகரன்தான் என்னைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். உயர்ந்தோங்கிய தூண்கள் கொண்ட அக்கட்டிடமும் உள்ளிருந்த ஓவியங்களும் என்னைப் பரவசப்படுத்தின.

நான் உள்ளே அழைக்கப்பட்டபோதுதான் முதன்முதலாகக் கருணாகரன் மாஸ்டரைப் பார்த்தேன். சந்தன கலர் ஜிப்பாவும் கழுத்தில் ஜிப்பாவை மீறித் தெரியும் துளசி மாலையும் குறுந்தாடியுமாய் இருந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் கை நீட்டினார். கைகொடுப்பதற்காக எனது கையை நீட்டினேன் ஆச்சர்யத்துடன். நான் படம் வரைந்து வைத்திருந்த நோட்டை அவர் கேட்டார். நான் சிறிது வெட்கத்துடன் சுதாரித்தவாறு நோட்டைக் கொடுத்தேன். அவர் எங்கள் ஊரின் சித்திரங்களை, உருவங்களை ரசிக்கும் எந்த முகபாவமும் இல்லாமல் பார்த்தார். நோட்டை மூடித் திருப்பிக்கொடுத்தபோது என் பெயரைக் கேட்டார். புறப்பட்டபோது அவர் எழுந்து கை கொடுத்தார். இந்த முறை நான் தயங்கி என் கையை நீட்டியதில் சிரித்தபடி சில வினாடிகள் அவர் கையை நீட்டிக்கொண்டிருந்தார்.

கருணாகரன் மாஸ்டர் எங்களைப் போன்ற குள்ளர் வகையல்லர். சற்று நிமிர்ந்து பார்த்துப் பேச வேண்டும். குறுந்தாடியும் சற்றே சூன்யத்தில் நிலைத்திருக்கும் கண்களுமாய்ச் சலவை செய்யப்பட்ட ஆடைகளையே அணிந்திருப்பார். வீட்டிலும் கட்டப்படும் பட்டுக்கரை அடித்த பருத்தி வேட்டிகளும் அவ்வாறே இருந்தன.

அவருக்குச் சிற்பத்தின் மீதும் ஈடுபாடு இருந்தது. அவரது ஈசலை (ஓவியம் வரைய பயன்படும் ஸ்டேண்ட் [drawing stand]) அவரே செய்துகொண்டார். எங்கள் ஓவியக் கல்லூரியில் பயிற்சிக்கான வகுப்புகள் என்னவோ ஓவிய ஆசிரியருக்கானதுதான் என்றாலும் கருணாகரன் மாஸ்டரின் விரிவான படிப்பும் விருப்பமும்தான் எங்களுக்கு நிறைய விஷயங்களைப் பாடத் திட்டமாக அமைக்க உதவியிருந்தன.

தற்போது ஓவியம் விரிவாகப் படிக்கும் பல பாடத் திட்டங்கள் அந்த ஓராண்டுக்குள்ளாகச் சுருக்கப்பட்டும் விலக்கப்பட்டும் இறுக்கமாக இருந்தன. கலி பல்கலைக்கழகத்துக்குச் சிறிது தொலைவிலேயே இருந்தான். நான் சைக்கிளில் வந்து சென்றேன். பத்து மணிக்கு நாங்கள் ஓவியத் துறையில் இருந்தோம். மொத்தமே 22 பேர்தான். காலையிலே ஒரே ஒரு வகுப்பு நடைபெறும். அது free hand drawing designs மற்றும் sketching work பற்றியதாக ஆரம்பத்தில் இருந்தது. மதிய உணவுக்கு மேல் ஒரு வகுப்பு. அதில் உருவப்பட மாடல்கள், பழங்கள், பொருள்கள் வரைவது தொடர்ந்தது. அதில் தேர்ச்சி பெற்ற பலரை மேனன் தனியாக sketch எடுப்பதற்கு அவரவருக்குப் பிடித்த இடங்களுக்கு அனுப்பினார். நானும் கலியும் நடராஜர் சன்னதியில் சுற்றிக்கொண்டிருந்தோம். நான்கு கோபுரங்கள் வெவ்வேறு கோணங்களில், நந்தவனத்தில் மேயும் கோயில் மாடுகள், தெருக்களில் போஸ்டர்கள் தின்னும் வீட்டு மாடுகள், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட 'குதிரை' வண்டிகள், தேர் மற்றும் தேருக்குள் உள்ள சித்திரங்கள், தேர்களின் வெவ்வேறு கோணங்கள் என வரையத் தொடங்கினோம். கோவில் மாடுகள் மூக்கணாங்கயிறு போடப்படாதவை. அவற்றின் கொழுத்துத் திமிறிய அழகும் சாதுத் தன்மையும் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என்னுடையதும் கலியினுடையதுமான இவ்வகையான அந்நகரத்து ஸ்கெட்ச்சுகள் மாஸ்டருக்குப் பிடித்துப்போய் பல சமயங்களில் அதில் திருத்தங்கள் செய்தார். முகத்தின் அளவும் உடல் அளவும் எண்ணிக்கையும் போட்டுக் காட்டினார். கட்டிடங்களுக்கு மேலே கோடுகளை இழுத்தும் பிணைத்தும் அவற்றைச் செம்மையாக்கினார். மாஸ்டரின் விரல்கள் பென்சிலைப் பிடித்து இழுக்கும் கோடுகள் அனாயாசமாகவும் மந்திரம் நிரம்பியவையாகவும் இருந்தன. இவை அடுத்த நாள் பாடங்களாகப் பள்ளியில் சொல்லிக்கொடுக்கப்பட்டன. சோமசுந்தரம், கிருபாசங்கரன் என்ற இரண்டு ஓவிய ஆசிரியர்கள், எங்களை மாஸ்டருக்குப் பிடித்திருப்பதாகவும் எங்களை ஒழுங்காக இருந்து படித்து முன்னேறும்படியும் ஓவியம் எங்களுக்கு இயல்பாகவே நன்றாக வருவதாகவும் மாஸ்டர் குறிப்பிட்டதாகச் சொன்னார்கள்.

சுற்றிலும் உள்ள சமவெளியிலிருந்து தங்கு தடையற்று வீசும் மாலைத் தென்றலில் எங்களைப் பறிகொடுத்தபடி நாங்கள் ஓவியக் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் மஞ்சள் நிறச் சாயங்கால வேளைகளில் மாஸ்டர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகை வழியே சைக்கிளை நடத்திக் கொண்டு செல்வோம். மாளிகைக்குச் செல்லும் வழி சிமிண்ட் சாலையில் இருந்தது. கார் நுழைந்து செல்லும் கேட்டின் முன்பு எங்களின் நிறம் கொண்ட காவலாளி எப்போதும் எங்களைப் பார்ப்பான். அவனுக்கு அங்கே வேறு அதிக நடமாட்டங்கள் எப்போதாவது இது போன்றுதான் இருக்கும். நாங்கள் பார்த்திராத வினோதச் செடிகள் வெவ்வேறு வண்ணங்களில் இலைகள், குருத்துகள் ஒரே இலையில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட தன்மைகள் அவற்றை லேசாக நின்று பார்த்தவாறு நகருவோம். பொடி வண்ணக் கார் ஒன்று போர்டி கோவில் அமைதியாக நின்றுகொண்டிருப்பது செடிகளின் உயர்ந்தோங்கிய மறைப்பினூடாகத் தெரியும். மாஸ்டரை ஒருநாளும் நாங்கள் முன் பால்கனியில் பார்த்ததில்லை, பின்னாளில் நாங்கள் அவருடன் கழித்த ஒரு மாலைப் பொழுதில் தெரிந்துகொண்டோ ம். பின்பக்கத்துப் பால்கனியில் உள்ள பிரம்புக் கூடையில் அமர்ந்து மரங்கள் அடர்ந்த தோட்டத்தைப் பார்த்தபடியோ ஊருக்குத் தொலைபேசியில் பேசியபடியோ அல்லது மணிக்கணக்காக அப்படியே உறைந்த நிலையில் அமர்ந்தபடியோ வேடிக்கை பார்த்தபடியோ நின்றிருப்பார். பகலில் தெரியும் விவகாரங்களை இரவு தன் ரகசியத்தால் பூட்டிவிடுகிறது. ரகசியத்தின் நிறம் எப்போதும் கறுப்பு வகைகள்தானே என்றார்.

ஒரு கதையைப் போல் வகுப்பறையில் வின்சென்ட் வான்கோவை அறிமுகப்படுத்தியது மாஸ்டர்தான். வான்கோவின் தீவிரம் எங்களுடைய வகுப்பறையைச் சில்லிடச் செய்திருந்தது. வான்கோ இறந்தது பற்றிக் கிழக்குப் பகுதியிலிருந்து வரும் ஒரு மாணவன், வரலாற்றில் பேசப்பட வேண்டுமென்பதற்காகவே அப்படித் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்றான். அவனை வகுப்பறையை விட்டு வெளியே போகச் சொன்னார் மாஸ்டர். அவனுக்கு ஓவியம் வராது என்றார். வான்கோவைப் பைத்திய நிலைக்கு இட்டுச் சென்றவனும் நள்ளிரவில் கைவிட்டுப் போனவனுமான அவனைக் கொலைசெய்ய வேண்டும் என்று ஒருவன் கூறினான். எனக்கு அது அப்போதுதான் நிகழ்ந்த தற்கொலையைப் போல, இன்னும் துப்பாக்கியின் சூடு ஆறாதிருக்கும் அக்கணத்தைப் போல, தோன்றிக்கொண்டிருந்தது. என் கண்கள் தளும்பிக்கொண்டிருந்தன.

மாஸ்டர் கேட்டபோது கலி கூறினான், வான்கோ புரிந்துகொள்ளப்படாத உலகில் பைத்தியமாயிருப்பதைவிட அவன் இறந்தது ஆறுதலாக இருக்கிறது என்று. மாஸ்டர் அவனை ஆழமாகப் பார்த்தார். நான் என் டெஸ்க்கில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன்.

பிழைப்புக்காக ஓவியம் பயில வந்தது வெட்கமாக இருந்தது.

எங்கள் கிராமங்களிலிருந்து நாங்கள் எங்கள் சைக்கிள்களில் ஓவியத் துறைக்கு வந்துகொண்டிருந்தோம். பெரும்பாலும் ஏழைகள் பயின்ற இடம். எங்கள் பெற்றோர்கள் கூலிக்கு விவசாய வேலைகளைச் செய்தபடி கால்நடைகளை வளர்த்துக்கொண்டு எங்களையும் வளர்த்தார்கள். நாங்கள் தப்பித் தவறி விழுந்தவர்கள் போல் இக்கல்லூரிக்கு வந்தோம். ஓவிய ஆசிரியப் பணி என்பதால்தான் எங்கள் வீட்டார் எங்களை ஓவியம் பயிலவே அனுமதித்தார்கள். வான்கோவைப் போலவோ ரபேலைப் போலவோ ஓவியப் பின்னணி கொண்ட வாழ்க்கை எங்களுக்கு இல்லை. நாங்கள் ஓவியத்தில் முன்னேறிப் போகாததற்கு இது மட்டும் காரணம் அல்ல; முயற்சி, ஆன்ம எழுச்சி, தொலைநோக்கு இலக்கு ஆகியவை இல்லாததும்தான் காரணம். இருப்பினும் அந்நிலையில்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது.

நாங்கள் வரலாற்றை எதிர்நோக்கிய எந்த வாழ்க்கையையும் வாழவில்லை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் பெற்றோர்களை எங்கள் உத்தியோகப் பணத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். கோவணத்தின் மேல் கட்டும் வேட்டியே எங்களுக்குத் துண்டுபோலத்தான் இருந்தது. மாற்றுப் புடவைக்காகப் புடவையை இரண்டாகக் கிழித்து அம்மா தனித்தனியாக உடுத்திக்கொண்டாள். அவர்களுக்குக் கவுரவமான ஆடைவேண்டும் என்று நினைத்தோம். மரத்திலிருந்து உதிரும் வேப்பங்கொட்டைகளைப் பொறுக்கிச் சேகரித்து விற்றுத்தான் நாங்கள் வரைவதற்கான பென்சில்களை வாங்கினோம். மழைக் காலங்களில் எங்கள் கால்நடைகளிடமிருந்து தனித்துப் படுக்கவும் வெள்ளப் பெருக்கில் எங்கள் வீடுகள் ஏரிகளில் மிதந்துபோவதை நாங்கள் பார்க்க வேண்டாமென்றும் ஒரு கல் வீட்டுக்கு ஆசைப்பட்டோ ம். அப்போது ஓர் ஏழை மனிதனுக்கு நீராகாரத்தைப் போல் இருக்கும் இந்த அடிப்படைக் கனவுகள்தாம் எங்களை வளைத்துச் சுழற்றின.

எங்களைப் போன்ற ஏழைகளுக்குக் கிடைத்த கலைகள் எங்கள் வயிற்றுப்பாட்டுக்கு ஏதேனும் செய்யும். எங்கள் மானங்களைக் காக்கவும் வளர்த்த பெற்றோர்களுக்கும் உதவும் சகோதரர்களுக்கும் பின்னாளில் உதவிசெய்யும் என்றே நம்பினோம். அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அம்மா கேட்டதெல்லாம் எப்போது வேலைக்குச் செல்வாய் என்பதுதான். அவளுக்கான மூன்றுவேளைச் சோற்றைத் தராத எந்த ஒரு கல்வியையும் வேலையையும் நான் புறக்கணிக்கத் தயாராக இருந்தேன்.

தில்லையாடி அம்பலத்தைத் தாண்டிய சில ஊர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பள்ளிக்கூடச் சுற்றுலாவின்போதும் திரைப்படங்களிலும்தான் கடலைப் பார்த்திருந்தோம். கருணாகரன் மாஸ்டர் உலக நாடுகள் பலதும் சுற்றியிருந்தார். இதை என் அம்மாவிடம் கூறியபோது, அவர் ஏன் ஊர் சுற்றி ஊதாரியாக இருக்கிறார், வீட்டில் தங்கமாட்டாரா என்று கேட்டாள். அவர் தன் படிப்புக்காகவும் உலக அறிவுக்காகவும் அவ்வாறு இருப்பதாகக் குறிப்பிட்டபோது பணம் சம்பாதிக்கின்ற அளவுக்கு இன்னும் படிக்கவில்லையா என்றும் கேட்டாள். அவ்வளவுதான் எங்கள் வாழ்க்கை. என் அம்மாவும் டூரிங் டாக்கீஸில் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில்தான் நீலக் கடலைப் பார்த்திருப்பாள். என் அம்மாவுக்கு சைக்கிள் பஞ்சர் என்றாலோ காற்றடிக்க வேண்டும் என்றாலோ காசு கேட்கும் காரணம் புரியும். உடல் நிலை சரியில்லையென்றால் அரசு மருத்துவமனை இருக்கவே இருக்கிறது. நோட்டுப் புத்தகங்கள் வாங்கவோ மற்ற வரைபொருள்கள் வாங்கவோ கேட்டால் 'பள்ளிக்கூடத்தில் தர மாட்டார்களா' என்று கேட்பாள். மீறிக் கேட்டால் தன்னை ஏமாற்ற முடியாது என்பாள். இதற்காக அவள் கணக்கற்ற சொத்துகளும் அரசனுக்கு இணையான அந்தஸ்தும் உள்ள, நாம் சந்திக்கவே முடியாத பல்கலைக்கழகத்தின் தோற்றுநரைச் சந்தித்துப் பேசுகிறேன், சைக்கிளில் கூட்டிப் போ என்பாள். எங்கள் ஆயா சற்று விவரமானவள். திரைப்படத்தில் மழை பெய்தபோது வீட்டில் சட்டிப் பானைகளும் ஆடுமாடுகளும் வெளியில் கிடக்கிறதென்று வீட்டுக்கு நடந்தோடி வந்தவள். எங்கள் ஊரிலிருந்து நான்கு கிராமங்கள் தள்ளிதான் எங்களுக்கான தபால் நிலையம் இருந்தது. எங்கள் வாழ்வுக்குள் யாருக்கும் கடிதம் எழுதும் தேவையோ ஸ்டாம்புகள் வாங்கவோ எனது பாதி வாழ்க்கையிலும் எங்கள் முன்னேற்ற வாழ்விலும் நேர்ந்ததுமில்லை.

m m m

எங்கள் மாஸ்டர் ஒத்துக்கொண்ட செட்டியார் குடும்பத்தின் ஓவியப் பணிக்காக நானும் கலியும் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறோம் எனும் செய்தி எங்களுக்கு அவருடைய ஈசலை எடுக்க விருந்தினர் மாளிகையில் சென்று காத்திருந்தபோது தெரியாது.

காரின் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் ஏழையையும் பரம்பரைப் பணக்காரனைப் போல் உட்கார வைத்துவிடும். கருணாகரன் மாஸ்டர் கலிய பெருமாளை 'கலி' என்று அப்போதுதான் அழைத்தார். 'க' வுக்கு ஆங்கில எழுத்து 'ஜி'-ஐ உபயோகிக்கும்படிக் கூறினார். எங்களுக்குக் கூச்சமாக இருந்தது. பின்னாளில் நான் அவனைப் பெருமாள் என்றாலோ கலியா என்றாலோ முறைப்பான். அவனே 'கலி' என்று கூப்பிடச் சொன்னான்.

கார்க் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு ஏ.சி. பரவிய இருக்கைகளில் இந்துஸ்தானி என்று சொல்லிக் கேசட்டை நுழைத்துப் பட்டன்களைத் தட்டினார்.

ஒரே இடத்தில் மூவருக்கான தனிமையையும் சந்தோஷத்தையும் தரும் திறன் அந்த இசைக்குத்தான் இருந்தது.

தந்திக் கருவிகள் இழைந்து ஒன்றைப் போல் குழைந்து குபீரென எழும்பியும் அமிழ்ந்தும் இனம் புரியாத ஒரு பரவசத்தை எங்களுக்கு அந்த இசை அளித்தது. மாஸ்டர் அவ்வப்போது கசியும் குரலுடன் இணைந்து முணுமுணுத்தார். ஒரு சுரத்தால் தானே பாடுவதுபோல் தலையசைத்து வந்தார். பல்கலைக்கழக முத்துத்தாண்டவர் ஹாலில் பிரம்மாண்டமான படிக்கட்டின் வளைவுகளில் பதினைந்தடிக்கும் மேலாகச் சட்டமிடப்பட்ட ஆயில் பெயின்டிங்கில் நிற்கும் மூத்த செட்டியார்களின் உருவங்கள் படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் என்னைப் பல முறை அதிர்ச்சியுறவும் பிரமிக்கவும் செய்திருக்கின்றன. யாரோ உண்மையிலேயே படிக்கட்டில் வருபவர்களைக் கவனித்தபடி இருப்பதாக அவ்வோவியங்கள் தோற்றம் தந்திருக்கின்றன. அவற்றைக் கருணாகரன் மாஸ்டர்தான் வரைந்தார் என்று தெரிந்தபோது அவர்மீது எழுந்த மரியாதை அளவற்றுப் போனது. அவ்வோவியத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள்யாவும் நிஜமான கறுப்பு மனித வண்ணத்தின் சேர்க்கைகளில் நிரம்பியிருந்தன. ஓவியத்தில் பின்னணி வண்ணமும் மர மேசைகளும் புத்தகங்களும் பூக்கிண்ணமும் அடர்த்தியான இருள் வண்ணங்களில் சேர்க்கப்பட்டிருந்தன.

இது போன்ற பணிகள் மிகச் சாதாரணம் என்று அவர் குறிப்பிட்டபோது மேலும் வியந்துதான் போனோம். அதில் தொழிற்பயிற்சிதான் இருக்கிறது. கிரியேட்டிவிட்டி இல்லை என்றார்.

இடம், பொருள், உருவங்களை நகல்செய்வது ஒரு விஷயமேயில்லை. அதற்கான வெளியை வண்ணங்களில் உருவாக்குவதுதான் கிரியேட்டிவிட்டி என்றார். அதை எங்களுக்கு விரிவாக விளக்கவும் செய்தார்.

வண்ணங்களால் படைக்கப்பட்டது உலகம். இவ்வுலகின் முதல் ஓவியனும் கடைசி ஓவியனும் ஒரே ஒருவன்தான். அது இந்த இயற்கைதான். அது இவ்வாறு வண்ணங்களால் இவ்வுலகை உருவாக்கவில்லையெனில் இங்கு எதுவுமே முழுமைபெற்றிருக்காது. நாம் அவற்றின் ஒளிச் சிதறல்கள். நாம் எத்தனை அறிவுஜீவிகளாக இருந்தாலும் எத்தனை சக்திமிகுந்த கலைஞர்களாக இருந்தாலும் இயற்கையைத்தான் சொல்வதற்கு முயற்சிக்கிறோம். உருவ ஓவியங்களிலிருந்து அகமன வெளியை வரைவதுவரை எதுவானாலும் நாம் இயற்கையில் உள்ளதைத்தான் வெளிப்படுத்துகிறோம். மக்களுக்குள் மக்களாக இருக்கும் நம்மவர்களில் ஒருவன் அதைத் தீட்டும்போது நமக்கு அதைப் பாராட்டத் தோன்றுகிறது. அவன் சிந்தனையும் வண்ணங்களும் நம்மிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டுகின்றன. எனவே மக்கள் குழுவில் அவன் குறிப்பிடத் தகுந்தவனாகிறான். அவன் கண்டுபிடித்த அகமன வெளிப்பாட்டையும் அவனையும் அந்தராத்மாவாக விசாரித்தால் அவன் இங்குள்ள வண்ணங்களை எடுத்து அவன் படும் வாழ்வைத் தூரிகையால் ஓர் ஊமையைப் போல் தொட்டும் வரைந்தும் காண்பிக்கிறான். அவ்வளவுதான் இங்கு கலைஞனின் இடம். சிறிது இயற்கையை உற்றுப் பார்த்தால் நமக்குத் தெரியும் இயற்கையின் எல்லா உருவாக்கங்களிலும் ஓவியமும் சிற்பமும் ஒளிந்திருப்பது. ஆதிகாலம் தொட்டே மனிதன் தான் கண்ட காட்சிகளை மனத்தில் நிறுத்தித் தனது வசிப்பிடங்களான குகைகளில் கிறுக்குவதிலிருந்து தொடங்கும் நமது ஓவியப் பாரம்பரியம் இன்று எத்தனை வளர்ச்சிகளைக் கண்டடைந்துவிட்டது. உலகம் முழுதும் எண்ணற்ற ஓவியர்கள் வண்ணங்களால் சிந்தனைகளை மறு உருவாக்கம் செய்கிறார்கள். விமர்சகர்கள் மற்றும் அழகியலைப் பேசுபவர்கள் பலவிதமான கோட்பாட்டுத் தத்துவங்களை உருவாக்கிவைத்துவிட்டார்கள். இது வரைக்குமான ஓவிய உலகம் சந்தித்த விஷயங்களிலிருந்து இன்றைய ஓவியனின் நிலை மிகுந்த சவாலுக்குரியதாகும். இதுவரை வரையப்படாத பல உணர்ச்சிகளும் தத்துவங்களும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் சோர்ந்துபோவதற்கு எதுவுமில்லை. எத்தனை முறை வாழ்ந்து பார்த்தாலும் ஒவ்வொரு நிமிடமும் வினாடியும் வாழ்க்கை புதிதாக இருப்பதுபோலவே கலைகளும் இருக்கும். இதை உணர்பவனுக்கே இந்தச் சவால்கள் புரியும்.

நான் கூறிக்கொள்வதெல்லாம் எந்தத் தூரிகையும் தேர்ந்தெடுக்காத அந்தத் தருணங்களைத் தேட வேண்டும். வேர்ப் பிடிப்பும் உலகத் தன்மையும் இணையும் அவ்விடங்களைத் தீட்ட வேண்டும். நம் சிந்தனைகளை, மரபுகளைச் சதா புதுப்பித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான். உறுதியான கோடுகளும் வண்ணத்தின் கவர்ச்சியும் ஆழங்களை வேறுபடுத்திக் காட்டும். நிற பேதங்களைத் தாண்டி மற்ற துறைகளின் அறிவும் புரிதலும்தான் ஒரு ஓவியனை மிளிரச் செய்கின்றன. கோடுகள் எப்போதும் யார் வரைந்தாலும் கோடுகள்தான். டா வின்சியின் சிந்தனைகள் உருவாக்கும் கோடுகள், பிகாசோவின் சிந்தனைகள் உருவாக்கும் கோடுகள் என்று பிரித்தறிந்து பார்த்தால் அவர்கள் ஏன் வரலாறாக உருமாறியிருக்கிறார்கள் என்று தெரியும்.

எனக்குத் தெரிந்த பல ஓவியர்கள் இஸங்களுக்கும் கோட்பாட்டிற்கும் உள்ளூற பயந்தபடியே தூரிகையை வண்ணத்தில் தோய்க்கிறார்கள். இவர்களைப் போன்றோரும் பல கலை ஓவிய விமர்சகர்களும் ஓவியத்தைப் பதற்றத்தோடுதான் புரிந்துகொள்கிறார்கள். இவர்கள் வாழ்வின் இருப்பும் அறிவும் ஓவிய வரலாற்றில் தங்களைத் திணித்துக்கொள்ளப் பயன்படுத்தப்படும் குறுக்குப் புத்தியில் உழல்கின்றன.

கலை எப்போதுமே காலத்தையும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் பிரதிபலிக்கிறது. இருப்பது, இருந்தது, எதிர்ப்படுவது, எதிர்ப்படப் போவது, மறந்தது, துறந்தது என இதன் பணிகள் ஏராளம். இன்னும் சொல்வதானால் காலம் தன் முகத்தைச் சிற்பத்தின் வழியாகவும் ஓவியங்களின் வழியாகவும் இலக்கியங்களின் வழியாகவும் பதிவுசெய்தபடி தன் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இதில் இஸங்கள் என்பவை ஒரு பெயரின் அடிப்படையில் குறிக்கப்பட்ட ஒரு வகைமையைப் புலப்படுத்தும் பெயர்தான். வகைமையே கலையின் சாரமல்ல. வகைமை வகைமைகளில் மட்டுமே அடங்கும். இஸங்களாலும் நவீனக் கோட்பாடுகளாலும் அர்த்தமற்றுப் புறக்கணிக்கப்படும் பழைய ஓவியங்களிலிருந்துதான் ஓவியர்கள் தங்கள் புதிய ஓவியங்களைக் கண்டடைந்தார்கள். இதற்காகப் பழைய ஓவியங்கள் விடைபெற்றுக்கொண்ட ஓவியங்கள் என்று கூற முடியாது. அவை மிகவும் கௌரவத்திற்குரியவை.

'செலஸ்டின்', 'முதிய யூதர்' போன்ற யதார்த்த ஓவியங்களை வரைந்த பின்புதான் பிகாசோ உருவச் சிதைவு ஓவியங்களை உருவாக்க முனைந்தார்.

முக்கியமாக நான் கூறுவது, யதார்த்தமாக வரையவேண்டும். அவற்றில் தேர்ச்சி அடையும்போது நீங்களே அதைவிட்டு விலகிச் செல்வீர்கள். யதார்த்தத்திலிருந்து நகரும் அரூபத்தன்மைதான் மிகவும் சக்தி வாய்ந்தது.

கலைமனத்திற்கு எப்போதுமே ஓர் உத்வேகம் உண்டு. அது இன்றியமையாததும்கூட. ஏனெனில் அது கருக்கொண்ட கற்பனையையும் யதார்த்தத்தையும் வண்ணச் சிந்தனைகளால் வெளிப்படுத்துகிறது. இதில் அவர்கள் தங்களை இம்பிரஷனிஸ்ட்டுகள் என்றோ ஏதோ ஒன்றின் பெயராலோ குறிப்பிட்டுக்கொள்ளலாம். இப்படிப் பணிபுரிவது தவிர்க்க முடியாததும்கூட.

உலகின் உயிர்ப் பொருள்களின் தத்துவத்தையும் மரணத்தையும் இடைப்பட்ட வசித்தலையும் ஆழமாய்ப் புரிந்துகொள்ளும் கலைஞனுக்கே கலைகள் தங்கள் கதவுகளைத் திறக்கின்றன. தூங்குபவர்களுக்கும் தூங்குபவர்கள்போல இறந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எந்த ஓர் ஓவியன் உருவாக்குகிறானோ அவன் இவ்வாழ்வை ஓவியம் வழியே புரிந்துகொள்கிறான், வெளிப்படுத்துகிறான் என்பேன் என்றார்.

பழங்காலத்தில் ஓவியம் பெற்றிருந்த முக்கியத்துவம் இப்போது பெற்றிருக்கிறதா? அப்போது அரசர்களும் அரசருக்கு இணையானவர்களும் ஓவியர்களைக் கொண்டாடினார்கள். நமது கிநிஸி போன்றோர் இல்லையெனில் இங்கு பள்ளிகளும் இல்லை; கல்வியுமில்லை; நானுமில்லை என்றார்.

ஓவியன் அக்காலத்தில் வரைவதற்காகப் பத்துக் கிராமங்களைப் பெற்றிருக்கிறான். வரைவதற்கு முன்னே வெகுமதிகள் தரப்பட்டிருக்கின்றன. இன்றைய நிலையில் ஓவியன் பரிதாபமான ஆடுகளைப் போன்றிருக்கிறான். இந்தியாவின் அரசர்களும் ஓவியர்களும் எனும் பாரம்பரியத்தின் கடைசி மனிதர்களில் நானும் ஒருவன் என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றார்.

ஓர் இரவு பயணம்செய்த பின்பு நாங்கள் அந்த வெப்பப் பகுதியை அதிகாலையில் அடைந்திருந்தோம். யாருமற்ற தெருக்கள் கனவுலகம்போல் இருந்தன. கருணாகரன் மாஸ்டர் அவ்வப்போது வந்து தங்கியிருந்த அந்த அரண்மனையை வீடு என்றார். அது கிழக்குப் பார்த்து இருந்தது. AGR அவருக்கு ஓவியங்கள் வரையவும் ஓய்வெடுக்கவுமெனக் கொடுத்த இடம். அந்த வீட்டை ஓர் ஓவியன் தன் கற்பனையில்கூட அத்தனை பிரம்மாண்டமாக வரைய முடியாது. வரவேற்பு அறைகள் இரும்புத் தூண்களாலும் மரத் தூண்களாலும் தாங்கிக் கட்டப்பட்டிருந்தன. முற்றத்தை ஒட்டிய தனி அறைகளில் வண்ண அலங்கார ஓவியங்கள் இருந்தன. பெரும்பாலும் ரவிவர்மா பாணி ஓவியங்கள், வெண்ணெய் திருடும் கண்ணன், யசோதை மடியில் கண்ணன், ராமாயணக் காட்சிகள், நடனக் காட்சிகள் போன்றவை இருந்தன. சில கதவுகளில் எல்லா வீடுகளிலும் உள்ளதுபோல் யானை, புலி, சிங்கம், யாளி எனப் பலதரப்பட்ட சிறு சிற்பங்களைச் செய்திருந்தார்கள். கோவிலா வீடா எனும் திகைப்பு இருந்தது. வீட்டின் முகப்பில் மேல் உயரத்தில் சிற்ப அலங்காரம் மற்றும் சுதை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்னை மூச்சடைக்கவைத்தது சுற்று நடைபாதைகொண்ட அந்த முற்றம்தான். அத்தனை பெரிய முற்றம் உள்ள வீட்டை என் வாழ்நாளில் அதற்குப் பின்பும் எங்கும் பார்த்ததில்லை. இதில் என்ன வியப்பென்றால் அதைப் போல் மூன்று முற்றங்கள் இருந்தன. விவசாயம் செய்யும் எங்கள் ஊரின் மொத்த வயல்களின் அளவில் அவர்களின் ஒரு வசிப்பிடம் இருந்தது.

செட்டியார் குடும்பத்தின் பிறந்தநாள் விழாக்கள், திருமண வைபவங்கள், இறப்புச் சடங்குகள் போன்றவை முன் முற்றத்தில் நடைபெறும் என்று மாஸ்டர் கூறினார். முதல் முற்றத்தின் பகுதியை 'அட்டளி' என்று அழைப்பார்கள் என்றபோது ஒரு கேரளக்காரர் தெரிந்துகொண்ட தமிழ் வாழ்வுக்கு முன் எங்களின் தமிழ் வாழ்வு மிகப் பலவீனமாக இருந்தது. அட்டளி, பெண்களின் உரையாடல் பகுதிக்கானது எனவும் வணிக வேலைகளைக் கவனிப்பதற்கானது எனவும் கூறினார்.

இரண்டாம் முற்றம் அத்தனை வேலைப்பாடுகளோ ஓவியங்களோ சுவர் அலங்காரங்களோ அதிகமற்று இருந்தது. அது குடும்பப் பெண்கள் புழங்குவதற்கான இடமென்றார். அதனுடன் சமையலறை இணைக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முற்றம் வேலைக்காரர்கள் புழங்குமிடமாகவும் சுற்றுச்சுவருடன் திறந்த வெளியில் நேரிடையாக வெய்யில் விழும் இடமாகவும் இருந்தது. மூடப்பட்ட கம்பிகளால் ஒரு கிணறும் இருந்தது. நான் அவற்றை முதலாவது இரண்டாவது எனக் குறிப்பிட்டபோது இவைகளைப் பின்முற்றம், முன்முற்றம், நடுமுற்றம் என்று கூற வேண்டுமென்றார்.

நடுமுற்றத்தை ஒட்டியிருந்த ஒரு பகுதியை மாஸ்டர் dining hall என்றார். அவ்வறையைப் புரிந்துகொள்ள எங்களுக்கு நேரம் பிடித்தது. சுவர்களின் இரு பக்கங்களிலும் சலூனில் உள்ளது போன்று இரண்டிரண்டான மிகப் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் - சுவர் அளவுக்குப் பெரியவை - பொருத்தப்பட்டிருந்தன. அது ஒப்பனை செய்யும் அறையாகவோ திருமண வைபவங்களுக்கானதாகவோ இருக்கும் என எண்ணினேன். ஏதோ ஆட்கள் உள்ளிருப்பது போன்ற அச்சத்துடன் நாங்கள் அவ்வறையை எட்டிப் பார்த்தோம். மாஸ்டர் அவ்வச்சத்தை ரசித்திருக்க வேண்டும். பந்தி பரிமாறும்போது பந்தி இலையில் சாப்பிடுபவர்களின் தேவையைக் கண்ணாடி வழியாகக் கண்டுகொள்ளும்படி பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

இந்த வீட்டில் நமக்காகச் சமைப்பதற்கு வந்திருக்கும் சமையல்காரரைத் தவிர்த்து யாருமே இல்லை என்றார். அந்தச் சமையல்காரர் AGR ராமலிங்கத்தின் குடும்பச் சமையல்காரர்களில் ஒருவராவார். தன் வீட்டு விருந்துக்குக் கருணாகரன் மாஸ்டரை AGR அழைத்து வந்தபோது அவரது சமையல் மிகவும் பிடித்துப்போனதாகப் பாராட்டிச் சென்றுவிட்ட பல வருடங்களுக்குப் பிறகு மாஸ்டரின் ஓய்வுக்காகவும் மன அமைதிக்காகவும் தனது வீடு ஒன்றைத் தங்கிக்கொள்ள AGR அளித்தபோது அவர் அங்கு தங்கும் காலம்வரை சமையல் பணி செய்வதற்காகக் கூடவே அவரையும் அனுப்பியதாகக் கூறினார். AGR தன் மேல் கொண்ட பிரியத்திற்கும் மதிப்பிற்கும் இது ஒரு சாதாரண எடுத்துக்காட்டுதான் என்று மாஸ்டர் கூறினார்.

அவ்வீட்டில் உள்ள திட்டவட்டங்கள், கட்டிட அமைப்பு முறைகள், வாழ்க்கை முறைகளைப் பார்த்தபோது முதன்முறையாய் எங்களை வேறு நபருடன் மிக அழுத்தமாக ஒப்பிட்டுப் பார்க்க நேர்ந்தது. அவ் வீடுகளில் உள்ள முன்திண்ணை, பின்திண்ணை, வரவேற்பறை, முன்முற்றம், நடுமுற்றம், வெளிமுற்றம், உள்ளறை, வெளியறை, தூங்கும் அறை, அமரும் இடம், பால்கனி, சமையலறை, உணவு அறை, பகல் பொழுதுக்குரிய இடம், இரவுப் பொழுதுக்குரிய இடம் என எப்படிப்பட்ட வாழ்க்கை. நான் உண்மையிலேயே மலைத்துப்போனேன்.

எங்கள் வீடு கரும்புச் சருகுகளால் வேயப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது அதற்கு இடையிலோ காற்று, மழை சேதாரத்தாலோ அது திரும்பத் திரும்ப வேயப்படும். அவை அமைக்கப்படும்போது எங்கள் பொருள்களைச் சாக்குப் போட்டு மூடியோ அல்லது தோட்டத்திலோ வாசலிலோ எடுத்துவைக்க வேண்டும். எங்கள் வீட்டின் அல்லது கூரையின் கீழே சுவர்களால் தடுக்கப்பட்ட உள் பகுதியை வீடு என்றோம். அதில் அம்மா ஒருபுறம் சட்டி பானைகளை வைத்துக்கொண்டு விறகுக் குச்சிகளில் சமைத்து, கரி படிந்த ஆட்சிசெய்துகொண்டிருந்தாள்.

மிச்சமிருக்கும் இடத்தில் சுவரில் சாமி படங்களும் தரையில் நாங்களும் இருந்தோம். பின்பக்கம் திறந்தால் தோட்டம். அது வயல்வெளியைக் காட்டிற்று. முன்பக்கம் தெருவாசலைக் காட்டிற்று. கோடைக் காலங்களில் நாங்கள் இரவுநேர வானத்தைப் பார்த்தபடி வாசலிலேயே படுத்துக்கொண்டோ ம். வாசலிலே உணவு உண்டோ ம். பொங்கலுக்கு மண்ணால் செய்து உருவாக்கிய அடுப்பில் கோடைக் காலங்களில் சாக்கு மறைப்புக் கட்டி அம்மா சமைத்தாள். மழைக் காலங்களில் எங்கள் ஆடுமாடுகளும் எங்களுடன் வீட்டினுள் படுத்துக்கொண்டன. மலையும் மடுவுமான இவ்வாழ்க்கை முறை என்னை மிகச் சிறியவனாக உணரவைத்ததுடன் பயங்கரம் நிரம்பிய அமைதியைத் தருவதாக உள்ள சூழலில் என்னைத் தள்ளியது.

மூடியிருக்கும் அத்தனை பெரிய வீட்டினுள் கவியும் வெளிச்சத்தையும் குளிர்ச்சியையும் எங்களைக் கவனிக்கச் சொன்னார் மாஸ்டர். Air and light என்று குறிப்பிட்டார். அப்போது அவர் சில நிமிடங்கள் அமைதியாக எதையோ சிந்தித்தவராய் இருந்தார். அவர் ஓர் ஓவியத்தின் ஒளியை உணர்ந்ததுபோலும் அதை வரைவதற்கான நிதானத்திற்குள் இருந்ததுபோலும் இருந்தது. தனது தோல் பையை எடுத்து ஸ்கெட்ச் நோட்டில் சிலவற்றைக் குறித்துக்கொண்டார். பேன்டின் இரண்டு பாக்கெட்களிலும் கைகளை நுழைத்து உதடுகளை மடித்துத் திறந்து லேசாகத் தலையாட்டினார். பின்பு மீண்டும் சிறிது மேலெழும்பியவரைப் போல முன் பாதங்களை அழுத்திக் குதிகால்களைத் தூக்கி அமர்த்தி air and light என்று மீண்டும் உச்சரித்தார்.

அந்த வீடு எங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டார் மாஸ்டர். நாங்கள் இருவரும் பெரிய தவறு செய்துவிட்டவர்களைப் போல விழித்தோம். அவருக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார். இத்தனை பெரிய வீட்டில் - வீடா? அரண்மனையில் - ஒரு மனிதன் அல்லது குடும்பம் இருந்தாலும்கூட அவை பிசாசுகளைப்போல இந்தக் கட்டடத் தனிமையில்... கிடந்து சாகவேண்டும். எதற்கு இத்தனை பெரிய வீடு என்றுதான் தோன்றியது. எங்கள் ஊர் இதில் தாராளமாகப் புழங்கும். கிடைத்தால் குதூகலமாய்க் கும்மாளமிடும். கும்பல் இல்லாமல், கொண்டாட்டம் இல்லாமல் இவ்வீட்டில் என்னால் வசிக்கவே முடியாது. பெரிய இடங்களை வளைத்துக் கட்டியிருக்கும் இக்கட்டடங்கள் ஒரு மனிதனைப் பயங்கரத் தனிமையில் ஆழ்த்தும். இக்கட்டிடம் தரும் தனிமையைத் தாங்கும் சக்தி கொண்ட மனிதனுக்குத்தான் இக்கட்டடம் பிடிக்கும். நிச்சயம் வீடற்றவர்களைப் பார்க்கும்போதோ மழை நேரத்தில் தவிக்கும் மனிதர்களைப் பார்க்கும்போதோ இவ்வீட்டில் இருக்கும் மனிதனாக நான் இருந்தால் குற்ற உணர்ச்சியால் இறந்துபோவேன். ஆனால் அக்கட்டங்களுக்கு அப்பால் அவர்கள் வாழ நினைத்த வாழ்க்கைமேல் இயற்கையை ஒரு வீட்டின் திட்டவட்டங்களுக்குள்ளாக எதிர்கொண்ட முறைகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்தன. சூரிய ஓளி, காற்று மழையைக்கூட அவர்கள் ரிப்பன் சன்னல்கள் வழியே எதிர்கொண்ட விதம், இயற்கையைத் திட்டமிடுவது, அதில் உள்ள பாங்கு கச்சித உணர்வைத் தருவதாக இருந்தன.

இறுதியாய் அன்றிரவு, ஒரு மனிதனுக்கு எதற்கு இத்தனை பெரிய வீடு என்று நான் மாஸ்டரிடம் கேட்டுவிட்டேன். மேனனுக்குத் தமிழ் வாழ்வு பற்றி இருந்த அறிவு எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இல்லையென்றால் கேரளாவிலிருந்து தில்லையாடி அம்பலத்திற்கு வந்து சொந்த ஊர்போல் வசித்துக்கொண்டிருக்க முடியுமா என்றான் கலி. மாஸ்டருக்கு இவை மட்டும் அல்ல அவருக்குப் பூகோளம் பற்றியும் பிறநாடுகளில் உள்ள பணக்கார இனங்கள், கலாச்சாரங்கள் குறித்தும் உணவு வகைகள் குறித்தும் தெரிந்திருந்தன.

சிலப்பதிகாரம் படிக்கவில்லையா என்று கேட்டார். நாங்கள் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தோம். அந்தக் கதைதான் எங்களுக்குத் தெரியுமே என்பதுபோல். அதிலே இவர்களின் வாழ்க்கை முறை, வணிகம், தெருக்கள், விவரணைகள் உள்பட எல்லாமும் இருப்பதாகக் குறிப்பிட்டார். சிலப்பதிகாரத்தை அவர் ஆங்கிலத்தில் படித்ததாகக் கூறினார். பிறகு அவர் சொல்லத் தொடங்கினார்: அக்காலத்தில் அரசர்களைவிட வணிகர்கள்தான் செல்வம் மிகுந்தவர்களாக இருந்தார்கள். அதிகாரம் பொருட்டும் செல்வம் பொருட்டும் மோதல்கள் வலுத்துக்கொண்டிருந்தன. அரசர்களும் கோயில்கள் கட்டினார்கள். அதற்குச் சமமாக வணிகர்களும் கட்டிக் காட்டினார்கள். அரசர்களுக்கு அடுத்தும் அருகிலும் நிகராகவும் உள்ள பொருளாதார பலம் அவர்களுக்கு இருந்தது. இதன் நீட்சியாகவும் தங்களுடைய வணிக செல்வ, அதிகாரத்தின் இருப்பின் பொருட்டும் கடல் கடந்த வணிகத்தால் பெற்ற வாழ்வும் அறிவும் இவர்கள் இயல்பாகவே இவ்விடத்திற்கு வர நேர்ந்திருக்கிறது.

ஒருமுறை நான் செட்டியார் கொடுத்த விருந்துக்குச் சென்றிருந்தபோது அவர் பூம்புகாரின் வளர்ச்சியே எங்களின் மூதாதையர்களும் சோழ மன்னர்களும் இணைந்து உருவாக்கிய முயற்சிதான் என்றார்.

செட்டியாரின் பாரம்பரியமும் அவரது குடும்ப முன்னேற்ற வாழ்வும் வணிகத்தால் அமைந்தவைதாம். ஆசியாவில் முதன்முறையாக 'வங்கி' என்ற அமைப்பை ஏற்படுத்தியதும் செட்டியார்கள்தான். வட்டி முதலீட்டைக் கொண்டுவந்தவர்களும் இவர்கள்தாம்.

வட்டியின் மூலமாகவும் தங்களின் புத்திசாலித்தனத்தின் மூலமாகவும் பர்மாவில் கிட்டத்தட்ட 800 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை வைத்திருந்தார்கள்; அதுவும் 1929-30களிலேயே. கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுக்க இயலாத பர்மா மக்களின் நிலங்கள் நிலவுரிமையுடன் இவர்களிடம் வந்துசேர்ந்தன. இவர்களின் வங்கிக் கடனால் பெறப்பட்ட நிலம் பர்மாவில் 25 லட்சம் ஏக்கர் ஆகும். இலங்கையிலும் காபி, தேயிலைத் தோட்டங்களுக்கு வட்டிக் கடன் கொடுத்து அங்கும் தங்கள் செல்வாக்கை ஆங்கிலேயருக்கு இணையாக வைத்திருந்தனர்.

தமிழ்நாட்டு அரசர்களின் அரண்மனை அந்தப்புரங்கள், சயன அறைகளை ஓவியங்கள் அலங்கரித்ததுபோன்று, அயல்நாட்டு வணிகத்திற்கானதும் குறிப்பாக ஐரோப்பாவின் கலாச்சாரப் பண்பாட்டு விரும்பியாகவும் இவர்கள் இருந்த சூழலில் அரச குடும்பத்திற்குச் சமமான அக்காலத்தில் வாழ்வதற்கான அடையாளத்திற்காகவும் இவர்களின் வீடுகளில் ஓவியங்கள் வர ஆரம்பித்தன. எல்லோரும் ரசனையோடுதான் இதைச் செய்தார்களா என்பது வெட்ட வெளிச்சமான விஷயம். பணம் வந்தால் எல்லாம் வரும் என்றார் மாஸ்டர். எங்களுக்குக் கதை கேட்பதுபோல் இருந்தது.

ஓவியக் கலையும் சிற்பக் கலையும் புகழ்பெற்ற கட்டடங்களுடைய அலங்காரமாக இருந்தவைதாம். பிற்பாடு அவை தம்மை அகவெளியாக நிறுவிக்கொண்டபோது அவற்றின் நிலைமை இன்றுவரை இதுதான். மைக்கேலாஞ்சலோவோ டா வின்சியோ இன்று இருந்தால் அவர்களுடனும் செட்டியார் தொடர்புகொண்டு அவர்களின் படைப்பாக எதையாவது ஒன்றை இங்கு கொண்டுவந்து சேர்ப்பார் என்றார் மாஸ்டர். எந்த ஒரு கலைஞனும் தானும் தன் படைப்பும் மதிக்கப்பட வேண்டுமென்றுதான் விரும்புகிறான்; கனவு காண்கிறான். ஓவியமும் ஓவியனும் விலைமதிக்க முடியாதவை போன்ற ஒரு தோற்றத்தைச் சில பணக்காரர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் செட்டியார் அப்படியல்ல; அவர் ஒரு ரசனைவாதி என்றார். சமஸ்தானத்திலிருந்து மாஸ்டர் இங்கு வந்ததை எங்களால் அப்போது தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது.

ஆனாலும் எனக்கு மூச்சடைத்துப்போன விஷயம் செட்டியார் தற்போது வாழும் வீட்டில் விமானம் வந்திறங்கும் ஓடுதளம் இருப்பதாகச் சொன்னதுதான். சிறுவயதில் எங்கள் வயல்களின் குறுக்கே வானத்தில் பறந்துசெல்லும் விமானங்கள். அவிழும் கால் சட்டைகளைக் கைகளில் பிடித்துக்கொண்டோ நிர்வாணமாக ஓடிக்கொண்டோ 'கெட்ட' வார்த்தைகளில் திட்டியபடி கல்லை எடுத்து உயரே வீசியபடி துரத்திக்கொண்டு விமானத்தின் திசையில் ஓடுவோம். என்னவோ நாங்கள் துரத்துவதைப் பைலட்டுகள் பார்த்தவுடன் எங்கள் ஊர் ஏரிக்கரைக் களத்துமேட்டில் விமானத்தைத் தரையிறக்கி எங்களை நலம் விசாரித்துவிட்டுப்போவார் என்பதுபோல். 'அது போன்ற விமானம்' அவர் வீட்டின் மேலேயே தரையிறங்கும் வாழ்க்கையென்றால் எப்படி ஒரு வாழ்க்கை!

நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களிலும் நன்றாகச் சாப்பிட்டுத் தூங்கினோம். மாஸ்டர் அவரது வேலையை அவரே செய்துகொண்டார். அவருடைய அப்படியான வாழ்வையும் எங்களை அவருக்கு லேசாகப் பிடித்திருப்பதையும் உணர்த்துவதற்குக் கூட்டி வந்திருக்கிறார் என்று அன்றிரவே தெரிந்துகொண்டோ ம். அவருக்குப் பிடித்த பலரை அங்குக் கூட்டி வந்திருப்பதாகச் சமையல்காரர் கூறினார்.

அவர் சைவ உணவு உண்டார். ஆனால் நல்ல காரசாரமான உணவு. இரண்டு சாயங்காலமும் மரவள்ளிக் கிழங்கை அவித்துப் பசையாய்க் கடைந்து குழம்பைத் தாளிப்பது போலவே பக்குவம் கூறிச் செய்யச் சொல்லிச் சாப்பிட்டார். அது ஸ்ரீலங்காவில், குறிப்பாக முஸ்லிம் குடும்பங்களிடம் பிரபலம் என்றார்.

ஒரு portraitஇல் மார்பளவு ஸ்கெட்ச் செய்து கண்களுக்கு மட்டும் வண்ணம் தீட்டியிருந்தார். அவர் ஓவியத்தை எப்போதுமே கண்களில் இருந்து ஆரம்பித்தார். அதில் வரையப்படும் ஆத்மாவை அவர் கண்டுகொள்வதாக நம்புகிறார். பிறகு அதனுடன் அவருக்கு ஒரு ஆத்மப் பிணைப்பு ஏற்படுகிறது. கோட்டுச் சித்திரத்தில் உள்ள கண்களே பேசத் தொடங்கிவிடும்போது வண்ண ஓவியம் நிச்சயம் பாஷையைக்கூடப் பரிமாறிக்கொள்ளும். நடு முற்றத்தில் அவர் உயரமான அந்த ஈசலை நிறுத்தியிருந்தார். அவர் இல்லாத நாட்களில் வெள்ளை நிறத் துணியால் ஓவியம் மூடப்பட்டு மரக்கிளிப்புகள் போடப்பட்டிருந்தது.

அவர் வண்ண டியூபுகள், லின்சிட் ஆயில் மற்றும் தூரிகைகளை அருகில் பரப்பிவைத்துக்கொண்ட விதம் சிறு குழந்தையின் அடுக்கல்களைப் போல் இருந்தது. முதலில் அவர் வண்ணங்களைக் கலக்கும்போது கண்களை அகல வைத்துக்கொண்டு கவனித்த நாங்கள் பிற்பாடு சாதாரணமாகிவிட்டோ ம். எல்லோருக்கும் அப்படித்தான். பழகப் பழகத்தான் வண்ணங்களின் பேதமும் அளவீடுகளும் படியும் என்று அவர் விளக்கினார். உண்மையிலேயே நாங்கள் அவருடன் எப்போதும் இருக்க விரும்பினோம். குறிப்பாக மாஸ்டர் இவ்வாறு பழகினாலும் அடிப்படையில் தனிமை விரும்பியாக இருந்தார். அனுபவங்களின் வழியாக அவர் எல்லோரை விட்டும் தனித்து இருந்ததால் வரலாற்றை உருவாக்குபவர்கள்மீது அவருக்குத் தனிப் பிரேமை இருந்தது. இதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். ஒன்று, வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல் தனக்குப் பிடித்ததைச் செய்து வரலாறாக மாறுபவர்கள். உதாரணத்திற்கு வான்கோவைக் குறிப்பிடலாம். வான்கோவிற்கு ஓவியம் வரைவது தவிர்த்து வேறு எதைப் பற்றியுமே கவலையிருந்ததில்லை (ஓவியம் வரையத் தொடங்கிவிட்ட பின்னர்). இரண்டாவது நபர்கள் வரலாற்றை உணர்ந்து அதில் தன் இடத்தைத் தீர்மானித்து அதை நோக்கி நகர்பவர்கள். இந்த இரண்டாவது வகையில் அறிவுஜீவித் தனமும் கலையும் இணைந்தவர்கள்தாம் பெரும்பாலும். இதில் அடக்கமான கலைஞர்கள் மிகவும் குறைவு. மாஸ்டர் இதில் இரண்டாவது வகையில் அடங்குபவர்தான். இதில் டா வின்சியும் அடங்குவார்.

நாங்கள் திரும்பி வரும்போது கருணாகரன் மாஸ்டரைப் பிடித்துப்போனதற்கான காரணத்தைக் கூறினார். அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மனிதனை ஒருவருக்கு ஏன் பிடிக்கிறது என்பதற்குத் திருத்தமான காரணங்கள் சிலதுதான் இருக்க முடியும். அப்படி இதை வைத்துக்கொள்ளலாம். AGR தனது பெற்றோரின் முழு உருவப்படத்தைக் கருணாகரன் மாஸ்டரின் தகப்பனாரிடம் வரைவதற்குக் கொடுத்திருந்தார். அந்த ஓவியங்கள் மிகச் சிறப்பாக வரையப்பட்டு, தனது வீட்டில் பொருத்தப்பட்டு அவ்விஷயமே மறக்கப்பட்டுவிட்ட காலத்தில் கருணாகரன் மாஸ்டரின் தந்தையார் AGRக்கு ஒரு கடிதம் எழுதினார். உடல்நிலை சரியில்லாததாலும் தன் கைகள் தூரிகையைத் தொட்டாலே நடுக்கமுறுவதாலும் அவ்வோவியங்களைத் தன்னால் வரைய முடியாமல் போய்விட்டது. எனது மகன் கருணாகரன்தான் அவ்வோவியங்களை வரைந்தான். இதைத் தாங்கள் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டும் என்று உண்மையை ஒப்புக்கொண்டிருந்தார். கிநிஸிக்குக் கருணாகரன் மாஸ்டரின் திறமையும் அவர் தந்தைமேல் வைத்த பிரியத்தால் ஓவியத்தில் தந்தையின் கையெழுத்தையே போட்டிருந்ததாலும் உள்ளூற வியந்துபோனார். அடுத்த முறை சமஸ்தானத்திற்கு வருகை தந்த AGR, மாஸ்டரை அவர் வீட்டுக்கு வந்து சந்தித்ததாகக் கூறினார். இந்தச் சம்பவத்திலிருந்துதான் AGRக்கும் மாஸ்டருக்குமான நெருக்கம் அதிகரித்ததாகக் கூறினார்.

பிற்பாடு சமஸ்தானத்தோடு கழித்துவிட்ட தனது பெரும்பகுதி வாழ்வு குறித்தும் அவரது கடைசி காலத்தில் மனரீதியாகப் பல சங்கடங்களை அனுபவித்துக்கொண்டிருந்த கருணாகரன் மாஸ்டரின் அப்போக்குகளுக்காகவும் மனமாற்றத்திற்காகவும் AGR அவருக்காகவே தனது பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறையைத் தொடங்குவதாகக் கூறினார். அது மட்டுமல்லாது இசைத் துறைக்குப் பிறகு மற்றொரு கலைத் துறையான ஓவியமும் தன் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவது குறித்துப் பெருமையும் நிறைவும் AGRக்கு இருந்தது. அதை அவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் மாஸ்டர் சொன்னார். 'உங்களால் என் பல்கலைக்கழகத்தில் ஒரு குறை தீர்ந்தது. ஓவியத் துறையை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் கூறியும் எனக்குத் தோன்றவில்லை. தற்போது தங்களால் அது தொடங்கப்படுவது எனக்குப் பெருமையாகவும் மனநிறைவைத் தருவதாகவும் உள்ளது' என்று கூறினார்.

கருணாகரன் மாஸ்டர் விருப்ப ஓய்வுபெறும் அந்த வருடத்தில் நாங்கள் சேர்ந்தது எங்கள் அதிர்ஷ்டம். அதன்பின் காலத்தின் துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும். கடைசியாக நான் கருணாகரன் மாஸ்டரைப் பார்த்தது இசைத் துறையின் முப்பெரும் விழாவிலும் அவர் விருப்ப ஓய்வுபெறுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராட்டு விழாவிலும்தான்.

அரண்கள் அமைக்கப்பட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டும் கிடந்த முத்துத்தாண்டவர் ஹாலின் நுழைவாயிலில் செட்டியார் கறுப்பு மற்றும் வெள்ளை நிறக் கார்கள் இரண்டும் ஒரே மாதிரி இருந்தவைகளில் வெள்ளை நிறக் காரை எதிர்பார்த்தும் கறுப்பு நிறக் காரை எதிர்பார்த்தும் கூட்டம் அலைமோத அவர் கறுப்பு நிறக் காரிலிருந்து இறங்கிவந்தார்.

கறுப்பு உருவமும் மழமழப்பான கறுப்புக் கோட்டுமாய் லேசான தொந்தியுமாய் எண்ணெய்த் தன்மைகொண்ட முகமுமாய்ச் செட்டியார் இறங்கினார். மாலை ஒளியில் அவர் ஷூ பளபளத்தது. அந்த ஷூவுக்குப் போடப்படும் பாலிஷ் நாங்கள் தேய்த்துக் குளிக்கும் சோப்பைவிட இருபது மடங்காவது உயர்ந்ததாகத்தான் இருக்கும்.

கருணாகரன் மாஸ்டர் பற்றி டெல்லியில் இருந்துவந்த அவரது ஓவிய நண்பர்கள் மேடையில் பேசி முடித்த பின்பு எங்களது ஆசிரியர்களும் பேசினார்கள். செட்டியார் காலரியில் இருந்து இறங்கிவந்து ஆளுயர மாலை அணிவித்துக் கொஞ்சம் பேசினார். அது கருணாகரன் மாஸ்டரின் 'வண்ணங்களால் ஒரு உலகம்' எனும் புத்தகத்தைப் பற்றிதான்.

இறுதியாகக் கருணாகரன் விடைபெறும் பொருட்டும் எங்களைப் போன்ற மாணவர்களுக்கான அறிவுரையாகவும் பேசினார். நிகழ்ச்சி முடிந்து கருணாகரன் மாஸ்டர் செட்டியாரின் காரில் ஏறிச் சென்றபோது பார்த்தேன். அப்போது அவர் முகம் மிகப் பிரகாசமாக இருந்தது. பின்னர் அவர் கேரளா சென்றிருக்கக்கூடும். அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை.

(மேற்கண்ட தகவல்கள் யாவும் செபஸ்டியன் கூற நான் பதிவுசெய்து எழுதியவையாகும். மற்றபடி ஓவியக் கல்லூரி மூடப்பட்டதற்கான காரணங்கள் பொது யூகங்களாகவே இருந்தன. கருணாகரன் மாஸ்டர் சென்றுவிட்ட பிறகு AGRக்கு அத்துறையை நடத்துவதற்குப் பிரியமில்லாமல் இருந்திருக்கலாம் என்றார் செபஸ்டியன். ஒரு கல்வித் துறையை அப்படித் தொடங்கி முடித்துவிட அது ஒன்றும் பெட்டிக் கடையல்ல என்று நான் கூறினேன். அதை அவர் புரிந்துகொள்ளவும் செய்தார். மேலும் ஒரு கலைத் துறையைத் தொடங்கி மூடுவது AGR ஐப் பொறுத்தவரை அவர் வாழ்நாள் முழுவதற்குமான இழுக்காகும். AGR இன் வாழ்க்கை முறை தெரிந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் ஆச்சரியம் இருக்க முடியாது.)

IV

இங்கு நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு பொருளை, ஒரு நிகழ்வை நாம் உண்மையாக விரும்பித் தொடர்ந்தால் அது நம்மைத் தொடரத்தொடங்கிவிடும் என்பதுதான். நாம் செய்ய வேண்டியது அதற்கான தகுதியும் அதைத் தீவிரமாக விரும்புவதும் அதை உணரக் கூருணர்வுத் தகுதி (sensitivity) பெற்றிருக்க வேண்டும் என்பதும்தான். பிறகு காலம் நாம் விரும்பியவைகளைப் பெறுவதற்கான கண்ணிகளுக்கு மாய வலைகள் விரிக்கிறது. கடைசியில் அது நமது வழித் தடங்களில் நமது அடிமையைப் போலும் நண்பனைப்போலும் நமக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறது. இவ்வுலகின் பொருட்களும் உயிர்களும் இம்மாய நகர்தலின் பொருட்டே காதலையும் நட்பையும் துரோகத்தையும் சந்திப்புகளையும் விபத்துகளையும் கொலைகளையும் உருவாக்குகின்றன என்பதில் நான் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஒரு விஷயத்தின் திறப்பு என்பது ஒரு காலத்தினுள் ஒரே ஒரு முறை நடந்தேறுகிறது. பின்னர் அது பல்வேறு நபர்களாலும் மொழியாலும் உச்சரிப்பாலும் சொல்பவர்களின் இச்சையாலும் தத்துவங்களாலும் மேலும் உருமாற்றம் பெறுகிறது (அவற்றில் நானும் விதிவிலக்கல்ல எனினும் சம்பவத்தை மாற்றும் எண்ணமோ குயுக்தியோ எனக்கில்லை. என் மொழியும் யூகிப்பும் இதைப் பன்முகம் கொண்ட உரையாடலாக மாற்றிவிடலாம்).

இதை நான் ரூபத்திலிருந்து அரூபம், அரூபத்திலிருந்து ரூபம் என்றோ அல்லது உண்மையிலிருந்து பொய், பொய்யிலிருந்து உண்மை என்றோ கூறுவேன். இவையாவும் கடைசியில் ஒரு புள்ளியுள் புள்ளி. புள்ளிகள் கடைசியில் கோடுகள். முழுமை பெற்ற கோடுகள் காலத்தின் நிரந்தரச் சித்திரம்.

அந்த வருடமும் நண்பர்கள் கேரளா செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். என்னை விரும்பிக் கூப்பிட்டார்கள். நாங்கள் தேவிகுளம் வழியாக மூணாறு செல்லும் திட்டத்துடன் சென்றுகொண்டிருந்தோம். மலைப்பாதைகளில் ஏற்றம்கொள்ளும்போது லேசாகத் தூறல் கொள்ள ஆரம்பித்தது. அது தூறல்தான் எனும் அலட்சியத்தின்மேல் விழுந்த அடியாகக் கருமேகங்கள் சூழ்ந்து மழை பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே பகலிலேயே இரவுபோல் ஆகிவிட்ட மலைப்பாதைகளில் காரில் வைப்பர்கள் வழித்துக்கொட்டும் மழையைத் தாண்டிக் கண்ணாடி வழியே அறைந்து பெய்யும் மழையைத்தான் எங்களால் பார்க்க முடிந்தது. எதிரில் தொடர்ந்த ஹாரன் சப்தத்துடன் வந்த ஒரு வாகனத்தைப் பார்த்து இவர்களும் பதற்றத்துடன் ஹாரன் அடிக்கத் தொடங்கினார்கள். ஏதோ இக்கட்டில் நுழைந்ததுபோல் நாங்கள் அனைவருமே கலவர முகத்தில் இருந்தோம். எதிரே வந்த வாகனத்தின் டிரைவர் எங்கள் காருக்கு நேரே நின்று எங்களைக் கடந்துபோனபோது எங்களைத் திரும்பிப் போகுமாறு கைகாட்டினான். நாங்கள் வேறு வழியின்றி வாகனத்தை ஓரம்கட்டி நிறுத்திக்கொண்டோ ம். கீழே பள்ளத்தாக்குகளும் சாலைகளும் மழை வண்ணத்தில் பிணைந்திருந்தன. சுதாரிப்பில்லாத எந்த வாகனத்தையும் நொடிகளில் மரணத்தைத் தொடும் அபாயம் சூழ்ந்திருந்தது. சிலர் உள்ளிருந்தபடியே வெட்கத்தை விட்டுப் பிரார்த்திக்கத் தொடங்கினார்கள். மழை நேரங்களில் மலைப் பாதைகளில் எப்போதும் பயணம் மிகமிக ஆபத்தானதுதான். கொட்டிய மழை நின்றபோது நாங்கள் திரும்பிச் செல்வது என ஒருமனதாக முடிவெடுத்தோம்.

தேவிகுளம் வந்தபோது மழை எங்களுக்காகவே நின்றதுபோல் மீண்டும் காற்று மழையுடன் பெய்யத் தொடங்கியது.

நானும் நண்பன் ரவியும் காரிலிருந்து இறங்கவும் லாட்ஜ் போர்டுகளைப் பார்த்து விசாரிக்கவுமாய் இருந்ததில் தொப்பலாய் நனைந்துவிட்டிருந்தோம்.

ஓர் இளைஞன் எங்களை மழையில் நனைந்தபடி விசாரித்தான். நாங்கள் மூணாறு செல்ல முடியாத சூழலைக் கூறி மறுநாள் காலை வரை தங்க வேண்டுமென்றோம். அவன் எங்களுடன் காரில் ஏறிக்கொண்டான். நல்ல தமிழில் அவன் உச்சரிப்பு இருந்தது. ஒரு திரையரங்கமும் ஒயின் ஷாப்பும் ஒட்டிய பிரதான சாலையில் காரைத் திருப்புமாறு அவன் வழி கூறிக் கொண்டு வந்தான். எங்களுக்கு அவன்மேல் சந்தேகம் வந்துகொண்டிருந்தது. கடைசியாக அவன் ஒரு வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தச் சொன்னான். கிட்டத்தட்ட அது ஒரு அரண்மனைபோல இருந்தது.

நாங்கள் யாரும் இறங்கவில்லை. இங்கே தங்கலாம் இறங்குங்கள் என்று எங்கள் அச்சத்தைப் பார்த்துச் சிரித்தபடி கூறினான் அவன்.

அவன் இறங்கிச் சென்று மூடியிருந்த கேட்டை இரண்டு முறை தட்டினான். வயதான ஒருவர் முக்கால் வேட்டியும் முழுக்கை வட்டக் கழுத்துப் பனியனுமாய்க் குடை பிடித்தபடி கேட்டைத் திறக்க வந்தார். அவன் எங்கள் பதிலை எதிர்பார்க்காது அவருக்குக் கேட்டைத் திறக்க உதவி செய்துகொண்டிருந்தான். அவன் ஆடைகள் அவன் தோலைப் போல அவன்மேல் ஒட்டிக்கொண்டு மழையில் அடிவாங்கிக்கொண்டிருந்தன. விபரீதம்தான் கைகளை மழையின் ரூபத்தில் விரித்துவிட்டது என்று எண்ணினேன். அவ்வயதானவர் ஒட்டுமொத்தமாகக் காரைப் பார்த்துப் புன்னகைத்தார். தவறிழைக்காத முகமாய்த் தெரிந்தது. அவர் குடை பிடித்தபடியே காரின் இடதுபுறம் வந்து கண்ணாடியைத் தட்டினார். எனது பக்கக் கண்ணாடியை இறக்கினேன். 'பயப்படாதீர்கள், இது எங்கள் முதலாளியுடைய பேலஸ். அவர் வெளிநாட்டில் இருக்கிறார். நீங்கள் தாராளமாகத் தங்கிப்போங்கள்' என்று மலையாளத்திலும் தமிழிலுமாகக் கூறினார். எவ்வளவு பணம் வேண்டும் என்றபோது, தங்குங்கள், முடிந்ததைக் கொடுத்துச் செல்லுங்கள் என்றார்; சாப்பாடுகூடச் செய்து தருகிறோம் என்றார்.

அந்த அரண்மனையில் அவ்வயதானவருடன் அவரது மனைவி இருந்தார். எங்களுக்குச் சுடு கஞ்சியும் கிழங்கும் செய்து தருவதாகக் கூறினார்கள். நாங்கள் தேங்காய்த் துவையலையும் சேர்த்துக் கேட்டோ ம். மழைக்கு எங்களனைவருக்குமே அது பிடித்தமானதாக இருந்தது. கண்டிப்பாக மதுவருந்தக் கூடாது என்று சொல்லிவிட்டிருந்தார். வீட்டுக் காவலாளிகளின் புழக்கம் தவிர்த்து எல்லா அறைகளும் பூட்டப்பட்டுத் திறக்காமல் இருப்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. குளிப்பதற்கு இடதுபுறம் இருந்த அறையை (கிட்டத்தட்ட அது ஒரு பெரிய ஹால்) எங்களுக்குக் கொடுத்தார். கல்யாண ஜமுக்காளம் ஒன்றை விரித்துத் தலையணைகள் தந்தார். மழைக் காலத்தில் நீங்கள் சுற்றிப் பார்க்க வந்திருக்கக் கூடாது என்றார். வயிறு நிறையச் சாப்பிட்டு நாங்கள் படுத்ததும் அயற்சியில் உறங்கத் தொடங்கினோம்.

எனக்கு ஏதோ அரவம் கேட்பது போலிருந்தது. இவ்வீட்டில் அனைத்தும் சகஜமாக நடப்பதுபோலிருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று அருவிக்கொண்டிருந்தது. ஏதோ உலோகப் பொருள்கள் ரகசியமாக முனகும் சப்தம்போல் இருந்தது. நாங்கள் படுத்திருந்த அறையின் உட்புறக் கதவைக் கிழவர் கிட்டத்தட்ட கையில் ஒரு முழு நீளமுள்ள ஆயுதத்தைப் போலிருந்த சாவியால் அந்த அறையைத் திறக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். அதில் அவரிடம் ரகசியமும் ஒளிந்திருந்தது. ஆனால் அவர் என்னைப் பார்த்தாரா எழுப்பினாரா என்று தெரியாமல் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னை மட்டும் விழித்தெழச் செய்திருக்கவேண்டும் அல்லது எதேச்சையாக இந்தச் சப்தம் என்னை எழுப்பியிருக்கக் கூடும். அவரை நான் பார்த்ததில் திடுக்கிட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அவர் கதவைத் திறந்து உள்ளே சென்று கதவைச் சாத்திச் சிறு இடைவெளிவிட்டுச் சென்றார். நான் நண்பர்கள் யாரையாவது எழுப்ப வேண்டுமென்று நினைத்தேன். சென்றவர் திரும்பி வராத காரணத்தால் நான் சிறு துணிச்சலுடன் எழுந்து அக்கதவுக்குப் பக்கம் சென்றேன். திறந்த சிறு இடைவழி பார்த்தேன். மிக நீளமான ஒரு ஹால் சோபாக்கள் போடப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. என் தயக்கங்களை மிதித்து நசுக்கியபடி கதவைத் திறந்து உள்ளே சென்றேன். மஞ்சள் ஒளியும் வெளியிலிருந்து கசியும் நிலவொளியுமாய் அவ்விடத்தில் ஒரு மயக்கம் நிறைந்திருந்தது. நான் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என நினைத்தேன். அந்த ஹால் முடிந்து படிக்கட்டுகள் மேலேறி உப்பரிகையை அடைந்தன. உப்பரிகையில் கைநீட்டும் தூரத்தில் உள்ளது போல நிலா முழுமையடைந்து ஒளிர்ந்துகொண்டிருந்தது. உப்பரிகையின் நடுவில் ராஜ வம்ச நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. விதானத்திலிருந்து தொங்கும் வெண்ணிறத் திரைச் சீலைகள் காற்றிலாடிக்கொண்டிருந்தன. வீட்டின் வெளியே வந்ததுபோல் குளிர்காற்று தழுவிச் சுழன்றுகொண்டிருந்தது. அங்கே நான் கண்ட காட்சி என்னை லேசான அதிர்ச்சியில் ஆட்படுத்தியது. அந்நாற்காலிகளில் இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் கிழவரை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன். இன்னொரு நபர் பூட்டிய வீட்டுக்குள் எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த உருவங்களை உற்றுப் பார்த்தேன். அது கிழவர் இல்லை. இரண்டு பேருமே வேறு நபர்கள். அவர்கள் என் வருகை தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் அருகிலிருக்கும் பெரிய தூணிற்குச் சென்றால் துல்லியமாகக் கேட்க முடியும் என்றிருந்தது. இனிமேல் எனது ஒரு அடி நகர்வுகூட என்னைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற பயம் இருந்தது. காற்று வாக்கில் அவர்கள் குரல்கள் என் திசையில் வரும்போது ஒலி கூடியும் குறைந்தும் ஒலித்தன.

அந்தச் சந்திப்பில் அவர்களது முதல் சந்திப்பின் உற்சாகம் இருந்ததாகக் கூறுகிறார்கள். எதிரில் உள்ள உருவம் வெண்கலத் தன்மையிலான குரலில் ஒலித்தது.

"உங்கள் வாழ்வில் இன்னும் என்ன குறை இருக்கிறது"

"நான் எல்லாமும் பெற்றவனாகத் தெரிகிறேன். எதுவும் இல்லாதவனாக உணர்கிறேன். ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இவ்வுலகின் சரித்திரத்தில் என் இறப்புக்குப் பிறகு நான் எப்படி இருப்பேன்?"

அந்த ஒரு நொடிதான். மெழுகுகள் உருகி வழிகின்றன. அவரது முகம் மீளாத தத்தளிப்பில் இருக்கிறது. அவர் கண்கள் நிலவொளியில் பனித்திருப்பது துல்லியமான கண்ணாடிச் சில்லின் மினுக்கல்போல மின்னி மறைகிறது.

"உங்கள் 'நீர் மேல் நடனம்' ஓவியம் ஒன்று போதும். சந்தோஷமாக இருங்கள். நீங்கள் ஒய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு என் பரிசாக என்ன வேண்டும்?"

என் உள்ளுணர்வு கருணாகரனுக்குப் பிடித்த அந்த மாளிகையை நினைவுபடுத்தி ஓடியது. பேச்சறுந்ததுபோல் இருந்த அந்த கனத்த மௌனங்களுக்குப் பிறகு துறுதுறுத்த கண்களுடன் அவர் கூறினார்.

"எனக்குப் பிறகு அந்த நாற்காலியில் யாரும் உட்காரக்கூடாது."

அந்த வயதானவர் என் பாதத்தை மிதித்துச் சென்றார். விளக்கு எடுக்க வந்தேன் என்றார் அவர். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். அவர் கதவைச் சத்தமிடாமல் மூடிவிட்டுச் சென்றார்.

சித்திரங்கள்: ரெம்ப்ராண்ட், ட்ராட்ஸ்கி மருது
 

ஜே.பி. சாணக்ய

என் வீட்டின் வரைபடம்,
கனவுப் புத்தகம்

ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகள் காலச்சுவடு வெளியீடாக
வெளிவந்துள்ளன.
புகைப்படம்: செழியன்

உள்ளடக்கம்

Google Ads.....


Google