Google   www kalachuvadu.com

பதிவுகள்: அற்றைத் திங்கள் ஜூலை 16, 2006 - கோவை

ஜெயகாந்தன்

ந. கவிதா

n  புதிய புத்தக விற்பனை மையம்

ஜூலை மாதம் நடைபெற்ற அற்றைத் திங்கள் நிகழ்வில் கூடியிருந்த பெருந் திரளுக்கிடையில், தனது கடந்தகால நினைவுகளை மகிழ்வோடு நினைந்துகொள்ளும் தருணத்தை வழங்கியிருக்கும் இந்த கோயம்புத்தூர்தான் தன் இளமைக் காலத்தில் மேடைப் பேச்சினை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புத் தந்த இடமாக இருந்தது என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார் ஜெயகாந்தன்.

நீதி உயர்ந்த மதி கல்வியுடையோராய் இருத்தல் யாவர்க்கும் வாய்க்காவிட்டாலும், அன்பு நிறைய உடையோராய் வாழுதல் சாத்தியம்தான். ஒட்டுமொத்த மனித குலத்தின் துயரினை, தாகத்தைத் தனியொரு மனிதனின் துயராய் எண்ணி வருந்திடும் உள்ளத்திலிருந்து பிறப்பது கவிதை. அங்கிருந்து பிறப்பது இலக்கியம். இவை தாம் படைப்புள்ளத்தின் உயரிய வெளிப்பாடு என்று தொடர்ந்த ஜெயகாந்தனின் பேச்சு அவரது இளமைக்காலம், வாசிப்பு, படைப்பாளியான விதம் என்று பல தளங்களிலும் விரிந்தது:

ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செலுத்தும் அன்பு, மற்றொரு மனிதனோடு கொள்ளும் உறவு, அவனுக்காகப் படும் துயர் - இதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது கடவுள் சம்பந்தப்பட்டதல்ல. அது மனிதனோடு தொடர்புடையது. மாக்சிம் கார்க்கி சொல்வதுபோல, புதிய கடவுளர்கள் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அடிமைத்தனமும் பேடிமையும் தந்த வலி பாரதியை சுதந்திர தேவியைப் படைக்கச் செய்தது போலத்தான். சமூகத்திலிருந்து பிறக்கும் இலக்கியமும் கலையும் மனிதர்களைப் பற்றியும் அவர்களது உறவு, துயர், பரிவு, இன்பம், சமத்துவம் என்பவற்றையெல்லாம் பேசுவதால் அவையும் ஆன்மீகத்தன்மை உடையவைதான் என்று தனக்கே உரிய உணர்ச்சிபூர்வமான பாங்கில் உரையினை நிகழ்த்தினார் ஜெயகாந்தன்.

அச்சுத் தொழிலாளியாக இருந்த தான் ஒருபோதும் படைப்பாளியாவோமென்று நினைத்திடாதபோது, தமிழ் தன்னை நாடிப் படைப்பாளியாக்கிவிட்டது என்று ஜெயகாந்தன் கூறினார்.

'ஒவ்வொரு எழுத்தையும் எழுதும்போது, புதியதாய் எழுதத் தொடங்கும் எழுத்தாளனுக்குரிய பரவசத்தோடும் நடுக்கத்தோடும் எழுத அமர்கிறேன். சமூகத்தில் கழிக்கப்பட்டவர்கள், புறக் கணிக்கப்பட்டவர்கள் என்று இந்தச் சமூகம் யாரைக் கருதுகின்றதோ அவர்களோடு நான் கொண்ட நேசம் வாழ்வின் பல பாடங்களை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார்.

படைப்பாளிகளின் போக்குகள் பலவாக இருந்தாலும் நோக்கு ஒன்றாக இருத்தல் பல வண்ண மலர்கள் நிரம்பிய நந்தவனத்தைப் போல அழகானது. இந்த அழகு அவர்களது இலக்கியத்தின் வழி வெளிப்பட்டு நிற்கும். ஒரு மனிதனுக்கு 'சுயம்' மிக முக்கியமானது. ஆனால் இன்றைய சூழல், சுயத்தை இழந்து நிற்பவனை வாழ்வில் வெற்றிகண்டவனாக முன்னிறுத்துகின்றது என்ற வருத்தத்தைத் தெரிவித்தார். பேதங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மற்றெந்த சமூகத்தையும்விட அதிகம் பெற்றிருக்கும் சமூகமென்பதால், இச்சமூகத்தில் ஒருமைப்பாடும் அதிகம் வேண்டப்படுகிறது. இவ்வொருமைப்பாடு ஆன்மீக நேயத்தால் சாத்தியமாகும். மனிதர்களால் மனிதர்களுக்காகக் கடவுளர்களற்ற ஆன்மீகம். இது நல்ல இலக்கியத்தின் வழியும் கலையின் வழியும் வெளிப்படக் காண்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டினார் ஜெயகாந்தன்.

கம்யூனிசம், சோவியத் ருஷ்யா, கண்ணகியின் கற்பு, சபரிமலைச் சர்ச்சை, உலக அழகிப் போட்டி, செம்மொழி, தமிழக அரசியல், பிடித்த அரசியல் தலைவர்கள், சக படைப்பாளிகள் என்று பல்வேறு தளங்களிலிருந்து எழுந்த கேள்விகளுக்கும் அவருக்கே உரிய நடையில் பதிலளித்ததோடு, தான் தமிழனாக இருப்பதால் தமிழை விமர்சிக்கும் உரிமையும் தனக்கு உண்டு என்றார்.

சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, தி. ஜானகிராமன், விந்தன், தொ.மு.சி., வல்லிக்கண்ணன் போன்ற படைப்பாளிகளோடு தமக்கிருந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஜெயகாந்தன், அரசியல் தலைவர்களில் பெரியாரையும் தோழர் ஜீவானந்தத்தையும் பெருந்தலைவர் காமராசரையும் நினைவுகூர்ந்தார். ஒரு கம்யூனிஸ்ட்டாக இன்றும் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை இந்த உரையின் பெரும் பகுதியில் வெளிப்பட்டது.

இலக்கிய உலகில், வாசக மனப் பரப்பில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்துகொண்ட இந்த அற்றைத் திங்கள் நிகழ்வு வழக்கத்திலும் மாறான பெரும் திரளாக வந்த பார்வையாளர்களாலும் அவர்களது கேள்விகளாலும் சிறப்புற அமைந்திருந்தது.

இந்நிகழ்வைக் கண்ணன் ஒருங்கிணைத்தார். ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google