ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிகாசோ தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான
ஓவியங்கள், சித்திரங்கள், நூற்றுக் கணக்கான சிற்பங்கள் ஆகியவற்றைப்
படைத்திருக்கிறார். ஆன்லைன் பிகாசோ ப்ராஜெக்ட் அவரது படைப்புகளின் முழுப் பட்டியலைப்
படங்களுடன் இணையத்தில் வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
1889இல் அவர் எட்டு வயதில் வரைந்த ஓவியங்களில் தொடங்கி
1973இல் 92ஆம் வயதில் மறைந்த வரையிலான படைப்புகளைப் பட்டியலிடுகிறது இந்த வலையகம்.
அவரது வாழ்க்கை குறித்த விவரங்களும் மிக விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன. 1930 முதல்
2006 வரை பல்வேறு பத்திரிகைகளில் பல மொழிகளில் வெளியான கட்டுரைகள்
'ஆர்க்கைவ்ஸ'
பகுதியில் கிடைக்கின்றன.
இந்தத் தொகுப்பு கலை பற்றிய பிகாசோவின் பார்வையை அவரது
வார்த்தைகளிலேயே எடுத்துச் சொல்கிறது. அவரது கண்காட்சிகளுக்கான பத்திரிகை
விமர்சனங்கள், ஜான் பெர்ஜர் போன்ற முக்கிய கலை விமர்சகர்களின் கட்டுரைகள் ஆகியவை,
ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர்,
இரண்டாம் உலகப் போர் போன்ற வரலாற்று முக்கியத்துவமுள்ள
நிகழ்வுகளுக்கு அவர் எதிர்வினையாற்றிய விதம் குறித்தும் அந்தக் கால கட்டங்களில்
கலையின் போக்குகள் குறித்தும் கூறுகின்றன.
பிகாசோவின் கலையிலும் வாழ்க்கையிலும் முக்கியக் கட்டங்களை
இந்த வலையகத்திலுள்ள படங்களுடன் இணைத்துப் பார்க்கலாம். Guernica போன்ற ஒரு சில
புகழ்பெற்ற படைப்புகளுக்குக் கூடுதல் குறிப்புகளும் விளக்கங்களும்
தரப்பட்டிருக்கின்றன.
ஆன்லைன் பிகாசோ ப்ராஜெக்ட்டின் முகவரி:
http://picasso.tamu.edu