ஐம்பதுகளில் தமிழ் எழுத்துலகை மிகவும்
பாதித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் த. ஜெயகாந்தன்; மற்றவர், ஜெயகாந்தன் அளவுக்கு
'கிளாமர்' இல்லாவிட்டாலும் அழுத்தமான படைப்புகளைக் கொடுத்த சுந்தர ராமசாமி.
"ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கிக்கொண்டு, ஜன்னல் வழியே உலகைப் பார்த்து, பயணக்
கட்டுரைகள் எழுதுவதற்கு நான் என்ன 'இதயம் பேசுகிறது' மணியனா?" என்று இங்கே
வந்திருந்தபோது எழுத்தாளர் பிரபஞ்சன் கேட்டபோது, 'என்னை வெளியில் கூட்டிப்போய்
உலகத்தைக் காட்டுங்கப்பா' என்பதுபோல் இருந்தது அவரது தொனி. 1985ஆம் ஆண்டு இலக்கியச்
சிந்தனையின் அழைப்பின்பேரில் இங்கே வந்திருந்தபோது, சுந்தர ராமசாமி அதே போன்ற
குரலில்தான் கேட்டார், "எதற்கு மண்டபம், பொதுக் கூட்டம் எல்லாம். நாம ஐந்து பேர்
மட்டும் எங்காவது வெளியில் போய், தனிமையில் உட்கார்ந்து பேசுவோமே." மற்ற நான்கு
பேர் மலேசியாவில் 'இலக்கியச் சிந்தனை' என்னும் அமைப்பைத் தொடங்கி, இலக்கிய உணர்வோடு
அதை இயக்கிவந்த மு. அன்புச்செல்வன், அரு.சு. ஜீவானந்தன், சாமி மூர்த்தி, எம்.
குமாரன் (மலபார் குமார்).
'இலக்கியச் சிந்தனை'யின் நோக்கம், பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை மாதந்தோறும்
கூடி விவாதித்து, அதில் சிறந்த ஒன்றைத் தேர்வுசெய்து இலக்கியம் தெரிந்தவர்களிடம்
பிரகடனப்படுத்துவது. பரிசு என்பதெல்லாம் கிடையாது. ஆனாலும், இலக்கியவாதிகள்
'இலக்கியச் சிந்தனை'யின் ஏற்பாட்டை மதித்தார்கள். எங்களது விமர்சனங்களைப்
பத்திரிகைகள் விரிவாகப் பிரசுரித்து, முடிவுகளை அறிவிப்பதன் மூலம் 'இலக்கியச்
சிந்தனை'க்கு உரிய மரியாதையைக் கொடுத்தார்கள்.
வேண்டியவர்களின் கதையை எப்படியாவது தேர்வு செய்துவிடுவது என்ற அபிலாஷையெல்லாம்
எங்களுக்கு இருந்தது கிடையாது. ஒரு மாதத்தில் வந்த கதைகளில் ஒரு போட்டியில் முதல்
பரிசு பெற்று, மிகவும் பரவலாய்ப் பேசப்பட்ட நாளை என்பது என்ற எனது கதையும்
சிரம்பான் கவிஞர் ஐ. இளவழகுவின் வரப்புகள் கதையும் இறுதித் தேர்வுக்கு வந்தபோது,
நான் குழுவில் இருக்கிறேன் என்ற 'தாட்சண்யம்'கூட இல்லாமல் 'வரப்புகள்' தேர்வு
செய்யப்பட்டது. இப்படி மாச்சர்யங்களின்றி நல்ல சிறுகதைகளை அடையாளம் காண்பது மட்டுமே
நோக்கம் என்று செயல்பட்ட 'இலக்கியச் சிந்தனை' சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த
முடிவுசெய்தது. ஆயிரம் கதைகள் வந்தாலும் ஒரே பரிசுதான். பரிசு ஆயிரம் வெள்ளி.
போட்டிக்கு வந்த கதைகள் இருநூறுக்கும் மேல்.
ஒரு 'தொழில்நுட்ப' சந்தேகத்தால் சித்தியவான் கோ. முனியாண்டியின் யக்ஞ கதைக்குப்
போயிருக்க வேண்டிய ஆயிரம் வெள்ளி, ஐந்து கதைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
போட்டி மட்டும் நடத்தினால் எப்படி? விழாவும் எடுத்தால் பரிசளிப்பு சிறப்பாய்
இருக்குமே என்று திட்டமிட்டபோதுதான், சுந்தர ராமசாமியை நாகர்கோவிலிலிருந்து
அழைத்துவந்தோம். சிங்கையிலிருந்து, அந்நாட்டின் பண்பாட்டு அமைச்சில் மிகப் பெரிய
பொறுப்பில் இருந்த வை. திருநாவுக்கரசுவை அழைத்தோம்.
தமிழகத்திலிருந்து சுந்தர ராமசாமி வந்துவிட்டார். சிங்கையிலிருந்து வை.
திருநாவுக்கரசு வந்துவிட்டார். விழாவுக்குத் தலைமை பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ
சாமிவேலு. விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் பிரிக்பீல்ட்ஸ் கியூபெக்ஸ் மண்டபம்.
ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்குச் சிறப்புப் பேச்சுக்களோடு, பரிசளிப்பு விழா.
"நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோ ம்" என்று வெளியூர் எழுத்தாளர்கள் சிலரிடமிருந்து
தொலை பேசி அழைப்புகள்.
சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியைப் போல சிரித்துக்கொண்டே வந்த சாமி மூர்த்தி, தமாஷ்
போல் அந்த விஷயத்தைச் சொன்னார்: "எல்லாத்தையும் இழுத்து மூடிட்டுப் போங்கப்பா.
போலீஸ் பெர்மிட் கிடைக்கல.."
அந்த அதிர்ச்சிக்கு ஈடாக நான் இன்னொரு அதிர்ச்சியை இன்னமும் சந்திக்கவில்லை.
சனிக்கிழமை இரவு முழுக்கப் போலீஸ் பெர்மிட்டுக்காகத் தலைவர்களின் வீட்டு வாசல்களில்
காத்துக்கிடந்ததை இப்போது நினைத்தாலும், மனம் நொந்துபோகிறது. எப்படியோ விழா
வெற்றிகரமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதில் சிலர் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று
இப்போதும்கூட எனக்குப்படுகிறது. காரணம் இல்லாமலா இருக்கும்.
டத்தோ சாமிவேலு அந்த வேதனைக்கு மருந்திடுவதுபோல் ஜாலான் அம்பாங் மிங் கோர்ட்
ஓட்டலில் ஒரு மதிய விருந்து கொடுத்தார். சு.ரா., வை. திருநாவுக்கரசு, அகில இந்திய
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் விக்கிரமன் எனப் பத்துப் பேருக்கு விருந்து.
சுந்தர ராமசாமி இங்கே தங்கியிருந்த நாட்களில் அவருடன் கிடைத்த அனுபவங்கள்
வாழ்க்கையில் மறக்க முடியாதவை. தாம் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களெல்லாம்
கேட்காமல், "நான் மேடையில் ஏறுவதற்கு எவ்வளவு தருவீர்கள்?" என்று பேரம் பேசாமல்,
மலேசிய இந்து சங்கத்தின் இப்போதைய செயலாளர் சோ. பரஞ்சோதியின் வீட்டில்
தங்கிக்கொண்டார். அருகிலேயே குடியிருந்த பைரோஜி நாராயணன் அவருக்குத் தோன்றாத்
துணையாயிருந்தார். அவர் பெரும்பாலும் இருந்தது பிரிக்பீல்ட்ஸ் ஜாலான்
தம்பாபிள்ளையிலிருந்த எம். குமாரன் வீட்டில்தான்.
'இலக்கியச் சிந்தனை'யின் பொறுப்பாளர்கள், அவரை வரவழைத்தவர்கள் என்ற வகையில் சுந்தர
ராமசாமிக்கு ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து கொடுத்தோம். ஜீவானந்தனின் வீடு ஷா
ஆலாமல். அன்றைக்கு அவருடைய மகளின் பிறந்த நாள். எல்லாருக்கும் பிறந்த நாள் கேக்
கொடுத்த ஜீவா, "இதை உங்களுக்குக் கொடுக்க முடியாது, இதில் முட்டை கலந்திருக்கிறது."
என்றார். சுந்தர ராமசாமி "நான் முட்டையே சாப்பிடுவேனே" என்று சொல்லிக் கேக்கைப்
பிட்டு வாயில் போட்டுக்கொண்டார். டெம்ப்ளர்ஸ் பார்க் அழைத்துப் போனபோது, இப்போது
அடியோடு காணாமல் போய்விட்ட, வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்ட அந்தச்
சாலையோரத்து சீனர் கடையில் மீ ஆர்டர் பண்ணிவிட்டு, 'சீனாதே' சொன்னோம். "என்ன சார்
அது? விஸ்கியா? எனக்கும் சொல்லுங்கள்" என்று குழந்தையைப் போல் கேட்ட சுந்தர
ராமசாமியை மிகுந்த மரியாதையுடன் பார்த்தோம்.
அன்றைக்கு அவர் சொன்னதை மறந்துவிடாமல் இருந்த எம். குமாரன், எங்கள் வீட்டில்
விருந்து நடந்தபோது, "அவர்தான் தண்ணி சாப்பிடுவாரேப்பா, வாங்கிவையேன்" என்றார்.
"எல்லாம் தயாராய் இருக்கிறது" என்றேன். அவர் வீட்டிற்குள் நுழையும்போது எனக்கு
மிகவும் பிடித்தமான கர்நாடக இசைப் பாடகர் எம்.டி. ராமநாதன் என்னுடைய புதிய டேப்
ரெக்கார்டரில் பாடிக்கொண்டிருந்தார். "ராமநாதனா பாடுறான்? தன்னுடைய குரல் இவ்வளவு
இனிமையா இருக்கும்னு அவனுக்கே தெரியாது" என்றார். பாட்டை ரசித்துக்கொண்டே பாடகரும்
எழுத்தாளரும் மிகவும் நெருக்கமானார்கள் என்பதை அவர் ஒருமையில் பேசியதில் இருந்து
தெரிந்துகொள்ள முடிந்தது.
இட்லி, தயிர், சட்னி, சாம்பார் என்று சு.ரா.வுக்குத் தனியாகவும் மற்றவர்களுக்கு
அசைவமாகவும் சாப்பாடு தயாரிக்கப்பட்டிருந்தது. இங்கே தமிழர்கள் இட்லியெல்லாம்
சாப்படுகிறார்களா என்று கேட்கும் அளவுக்கு சுந்தர ராமசாமி மலேசியத் தமிழர்களைப்
பற்றி அக்கறைப்படாதவர் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விஸ்கி இரண்டாம்
பெக் ஊற்றப்போனபோது, போதும் என்று சொல்லிவிட்டார். 'அவர் குடித்திருப்பவர்
என்றாலும் குடிகாரர் அல்ல' என்று கிருஷ்ணன் நம்பி சொன்னதை நினைத்துக்கொண்டேன்.
கோலசிலாங்கூர் போகும் வழியில், சாலையோரங்களில் கொட்டிக்கிடந்த செம்பனைப் பழங்களைப்
பார்த்துவிட்டு, "செல்வம் வீதியில் கொட்டிக்கிடக்கிறது" என்றார். தூரத்தே பச்சைப்
பசுங்கோயிலெனத் தெரிந்த செம்பனை மரங்களைப் பார்த்து, "இறைவனின் பள்ளியறை" என்று
ரசித்தார்.
இப்போது 'இலக்கியச் சிந்தனை' இல்லை.
"திரியை எரித்தது விளக்கு; விளக்கை அணைத்தது காற்று; விரலையும் கரைத்தது குருதி;
எனினும் என்னை அழிக்க யாருண்டு; எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்" என்று சொன்ன சுந்தர
ராமசாமியும் இல்லை.
"மண்டபம் வேண்டாம், பொதுக் கூட்டம் எல்லாம் வேண்டாம், சும்மா ஒரு நாலைந்து பேர்
எங்காவது ஒரு கடற்கரையோரமாய், ஒரு பூமலை பக்கமாய், ஏதோ ஓர் இடத்தில் இலக்கியம்
பேசினால் போதும்" என்று சுந்தர ராமசாமி சொல்லிப்போனதை எப்போது
செயல்படுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை.