'தமிழ்நாட்டில் இந்தத் தமிழ் நவீனத்தைப் புரிந்து
படிக்கத் தொடங்க இன்னும் முப்பது ஆண்டுகளாவது பிடிக்கும்.'
எந்தக் கணக்கின் அடிப்படையில் இந்த முப்பது ஆண்டுகள் என்ற கணிப்பை 'ஸமீக்ஷா' எம்.
கோவிந்தன் கூறினார் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. தற்போது அவரிடம் கேட்கவும்
முடியாது. அவர் இன்று இல்லை.
அவசரமாகப் பட்டாம்பி என்னும் ஊருக்குப் போகக் காத்திருந்த அவரைத் திருச்சூர்
நகராட்சிப் பேருந்து நிலையத்தில் தற்செயலாகச் சந்தித்து அளவளாவும் குறைந்த கால
அவகாசத்தில் அவர் கொடுத்த கணிப்பு அது.
எம். கோவிந்தனின் கணிப்புக்கு ஒரு கனம் உண்டு. கவிஞர் என்பதற்கப்பால் அவரது
விமர்சகப் பார்வைக்கு மலையாள இலக்கியவாதிகளிடம் மிகுந்த மரியாதையுண்டு. சற்று அகன்று
நின்றே செலுத்தும் மரியாதை அது. இலக்கியச் சீர்தூக்கலில் தூலமாக உடலளவில் செயல்படாத
அதிவீரராம பாண்டியர் அவர்.
அவரது கணிப்பிற்குட்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட தமிழ் நவீனம் சுந்தர ராமசாமியின்
ஜே.ஜே. சில குறிப்புகள். ஜே.ஜே.வின் தனித்துவம் மலையாளம், தமிழ் ஆகிய இரு இலக்கியக்
கலாச்சாரப் பின் னணியிலான ஒரு பார்வையின் இழையோட்டமாகும்.
மலையாள நாடக அரங்கோடு தொடர்புகொண்ட காரணத்தால் அம்மொழியின் பிற இலக்கிய கர்த்தாக்கள்
பலரோடு நேரில் பழகும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அந்த வாய்ப்பு ஜே.ஜே.வில் உலாவரும்
மலையாள இலக்கியப் படைப்பாளிகள் பலரின் நடை உடை, பாவனை, பழகும் பான்மை போன்றவை சிறு
சிறு அனுபவங்களின் கோர்வைகளாகி ஒரு வகையான நர்த்தனப் படிமங்களின் நுரைகள் போல என்
உள்ளத்துள் நீர்த் திவலைகளாகக் கொப்புளித்துக்கொண்டிருக்கும். இந்த மன ஓட்ட
நுரைகளுக்குள் சி.ஜே. தாமஸ் என்பவரின் உருவம் உடைந்துபோகாத நுரைக் குமிழியாகி
முத்துக் கொதியலாக நினைவு மண்டலத்துள் வரும், போகும். ஈடிபஸ், ஆமனுஷ்யன் நீதன்னே,
பிசுக்கன்றே கல்யாணம், க்ரைம் நம் 27 போன்ற அவரது நாடகங்களை மலையாளத்தில் இயக்கிப்
பாராட்டுகளைப் பெற்றவன் என்ற பேறு எனக்குண்டு. சி.என். ஸ்ரீகண்டன் நாயர், ஜி.
சங்கரப்பிள்ளை, எம். கோவிந்தன், ஐயப்பப் பணிக்கர், என். கிருஷ்ண பிள்ளை, பி.கே.
வேணுகுட்ட நாயர் ஆகியோர் மிகுந்த மரியாதையோடு சி.ஜே.வைப் பற்றிக் கூறக் கேட்ட
தகவல்கள் அவரது ஆளுமையைப் பற்றிய கற்பனைக் கோட்டுருவத்தைத்தான் என்னுள்
அமைத்துக்கொள்ள முடிந்தது. அவரை நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற
ஆதங்கம் என்னிடம் உண்டு. தமது சுவடுகளைப் பதித்து மறைந்த இலக்கிய கர்த்தா அவர்.
என் மனத்துள் உருவாக்கிக்கொண்டிருந்த அவரது கோட்டுருவங்களுள் உயிர்த் துடிப்பான
படிமப் பான்மையுடன் இயங்கத் தூண்டல்களாக 'ஜே.ஜே' அமைந்தது. வெறும் தனிமனித ஆளுமையின்
கோட்டுருவப் படிம இயக்கங்களுக்கப்பால் படைப்பாக்கக் கலாச்சாரத்தின் உயிர்த்
துடிப்புகளையும் பிணைத்து நிற்கும்படியான தூண்டல்கள் அவை.
ஜே.ஜே. பற்றிக் கோவிந்தனின் கணிப்பைக் கேட்கும் சில மாதங்களுக்கு முன்னர்
திருச்சூரில் கேரள சாகித்திய அகாதமி நடத்திய இலக்கியக் கருத்தரங்கிற்கு வருகை தந்த
தமிழ்ப் புதின இலக்கியவாதிகளைக் கூடியாட்டம் காண அழைத்துச் சென்ற சம்பவம் ஒன்றுண்டு.
அது அடிக்கடி இமைகள் கொட்டிக்கொள்வதைப் போல நினைவில் வந்து முட்டும். குறிப்பாகக்
கூடியாட்டம், ஜே.ஜே., கோவிந்தன் போன்ற எண்ண ஓட்டங்களோடு ஒட்டி நினைவில் முட்டும்
சிந்தனைக் கீறல்கள் அவை. விஜயதசமியையொட்டி திருச்சூர் வடக்குநாதர் கோவிலில்
கூடியாட்டம் நடைபெறும். இது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
சாக்கையர்கூத்தின் தொடர்ச்சியாகக் கொள்ள வேண்டிய கூத்துவடிவம். அது செவ்வியல் நாடக
வடிவத்தின் கனம், செறிவு, ஆழம், சக்தி போன்றவற்றைக் கூத்தரின் மனோதர்மப்படி இழைந்து
இழைந்து செல்லும் நெகிழ்வைக் கொண்ட இறுக்கமான கலை வடிவம். பயிற்சி மூலம்
உணர்ந்துணர்ந்து ரசிக்க வேண்டிய கலை வடிவம். வருகை தந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு
இந்தக் கலை வடிவம், சிறிது நேரத்தில் அலுப்புத் தட்டியதில் வியப்பில்லை. "கூத்தம்பலத்திற்கு
வந்ததற்குப் பதில் திரைப்படம் காணப்போயிருக்கலாம்" என்ற மனக் குறையை அதன் தொனியாகப்
புலப்படுத்தி அவர்கள் வெளியேறின சம்பவம் ஒரு வகையில் இயல்பானதாக இருக்கலாம். ஆனால்
அது படைப்பிலக்கியக் கலாச்சாரத்திற்கும் புதியன உட்கொள்ளும் மனத் துருவல்களுக்கும்
இடையே உள்ள நெருடலை உணர்த்தியது. சு.ரா.வின் ஜே.ஜே., அதைப் பற்றிய கோவிந்தனின்
கணிப்பு ஆகியவை இணைந்து சுட்டிக்காட்டும் தேடல் அனுபவத் தன்வயமாக்குதலின் அர்த்தச்
செறிவை நினைவுகூரும் சம்பவம் அது. கொட்டிக் கொட்டிக் காட்டும் நினைவுகூரும்
அச்சம்பவம் ஜதிகளாக என்னுள் குமிழ்ந்து கொண்டிருக்கும். ஜே.ஜே: சில குறிப்புகள்
மலையாளம், தமிழ் ஆகிய இரு கலாச்சாரப் பின்னணிகளிலான இலக்கியத் தளங்களைப் பற்றிய
பார்வைகள் இழையோடி நிற்கும் நவீனமாகும்.
"உங்களுக்கு ராமானுஜத்தை ரொம்பப் பிடிக்குமோ?"
"உங்களை எப்படிப் பிடிக்குமோ அப்படி அவரையும் பிடிக்கும்!"
சு.ரா. வின் சிரித்த முகத்துக்குள் விரியும் உதட்டின் புன்னகைக்குள் விஷயம் முற்றுப்
பெறுகிறது.
தமக்கும் சு.ரா. வுக்கும் நடந்த உரையாடலின் பகுதி இது என்று பத்மநாபன் கூறக் கேட்டது.
அதுவும் சு.ரா. மறைந்த பிறகு கூறக் கேட்டது.
'காகங்கள்' கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது பத்மநாபனைச் சந்தித்தேன். பின்னர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சு.ரா. மைய உரை நிகழ்த்திய கல்லூரி ஆசிரியருக்கான நாடகப்
பட்டறையில் பயிற்சிபெற வந்தபோது அவர் எனக்கு நெருக்கமானார். என்னைவிட மூத்தவர்.
எனினும் 'குருவே' என்றுதான் என்னை அழைப்பார். நட்புக்குள் குரு சிஷ்ய பந்தம்
ஒடுங்கியது என்பதுதான் உண்மை. இந்த பந்தத்திற்குள் அவரது வாசிப்புகளையும்
தன்வாசிப்புகளைப் பற்றிய தெளிவான மனப் பதிப்புகளையும் கொண்டவர் என்பதும்
உணர்ந்துணர்ந்து வரும் ஆவர்த்தனங்களாகும். புரியாத பலவற்றை அவர் மூலம்
புரிந்துகொள்ள முயன்ற முயற்சிகள் பல உண்டு. அதைவிட அவரது நெருக்கம் மறைமுகமாக
சுந்தர ராமசாமியுடன் நெருங்கிப் பழகும் ஓர் உணர்வையும் தரும். சு.ரா.வைக்
குறிப்பிடாத ஓர் உரையாடலும் எங்களுக்குள் நிகழ்ந்ததில்லை. ஆனால் அதுபோல
சு.ரா.வுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களிலெல்லாம் என்னைப் பற்றிக்
குறிப்பிட்டிருக்க நியாயமில்லை. மேலே குறிப்பிட்ட உரையாடலில் உள்ள என்னைப் பற்றிய
இருவரது கணிப்புகளையும் என்னவென்று அறியும் ஆவல் இன்னும் என்னுள் உந்தி நிற்கும்
சுருதியோட்டமாகும்.
இரு கணிப்புகளிடையே அதிர்ந்து செல்லும் பூடகமான நிரூபண விசாரணை அது. சு.ரா.வின்
அர்த்த புஷ்டியான சிரிப்புக்களை நான் பார்த்ததுண்டு. அவற்றுள் பல சிரிப்புகள்
வியாக்கியானங்களுக்குள் சிறைப்படாதவை. களங்கமில்லாது குழந்தைபோலப் பழகும் இவரிடம்
ரசிக்கத்தக்க, ஆனால் அதே சமயம் சுயகணிப்புகள் நிறைந்த எண்ண ஓட்டங்களால் புலப்படாத
குமிண் சிரிப்பு எப்படிச் சாத்தியமாகிறது என்று நான் நினைத்ததுண்டு.
பத்மநாபனுக்கு என்னை எப்படிப் பிடிக்கும் என்பதைவிட சு.ரா.வை எப்படிப் பிடிக்கும்
என்று அறிவதில் எனக்கு ஆர்வம் அதிகம் உண்டு. நியாயம்தானே? சரளமாக உரையாடும் தன்மை
பத்மநாபனுக்கு உண்டு. எனினும் தனது உள்ளப் பதிப்புகளை 'ரேஷன்' பாணியில்
வெளியிடுபவர் அவர். அதாவது யோசித்துக் கவனமாகச் சொல்பவர்.
"சு.ரா.வின் ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு புதிய அணுகலையும் வீச்சையும் காணலாம். ஒரு
படைப்பைக் கொண்டு இது இவருடையது, இவர் இப்படித்தான் படைப்பார் என்ற ஒரே பாட்டையில்
செல்பவரல்ல சு.ரா. ஒரு புளியமரத்தின் கதைக்கும், ஜே.ஜே. சில குறிப்புகளுக்கும்
எத்தனை வித்தியாசம்! எத்தகைய புதிய அணுகல்! இது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது."
ஓர் உரையாடலில் அவர் சற்று அதிகமாகப் படியளந்தபோது கிடைத்த வரிகள் இவை. பத்மநாபனின்
இந்தப் படியளப்பு சு.ரா.வின் ஜே.ஜே. பற்றிய கோவிந்தனின் கணிப்பை அதன்
உள்நோக்கத்தோடு காண மிகவும் தூண்டிவிட்டது. ஜே.ஜே., சு.ரா. வின் 'வீக்ஷ்ணத்தின்'
பட்டைகள் புலப்படும் பரிமாணத்தில் மலர்ந்த ஓர் இலக்கிய அனுபவத்தின் நெடுங்கதை.
ஜே.ஜே. மலையாள எழுத்தாளர்கள் பலரிடம் காணப்படும் 'வீக்ஷ்ணத்தையும்' தமிழ்
எழுத்தாளர்கள் பலரிடம் காணப்படும் 'பார்வைகளையும்' ஒப்பு நோக்கும் ஒரு கண்ணோட்ட
புதினம்.
'வீக்ஷ்ணம்', 'பார்வை' இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் கொண்டு மலையாளம், தமிழ்
ஆகிய மொழிகளில் முறையே காணப்படும் வார்த்தைகள். ஆனால் பார்வையென்ற சொல்லுக்குக்
'காழ்ச்சா' என்ற மலையாளப் பதம்தான் மிகப் பொருந்தும். ஏனெனில் இவ்விரு
சொற்களுக்கும் ஆழம், தொலைநோக்கு போன்ற அடைமொழிகளைச் சேர்த்து வழங்கும்போது உள்ள
சொற்கட்டின் சக்தி 'வீக்ஷ்ணம்' என்ற மலையாளச் சொல்லுக்கு உண்டு. நுண்மாண்நுழைபுலம்
என்ற மதிநுட்பச் சொற்தொடரின் இறுக்கம் வீக்ஷ்ணத்தில் உண்டு. 'Vision' என்ற ஆங்கிலப்
பதத்திற்கு இணையான சொல்லாக அதனைக் கொள்ளலாம். சு.ரா.வின் படைப்புகள் அவரது
'வீக்ஷ்ண'த்தின் புலப்பாடுகள்.
கோவிந்தனின் 'வீக்ஷ்ண'த்திற்கு ஒரு தீர்க்க தரிசனம், அதாவது ஒரு தொலைநோக்குப்
பார்வை உண்டு என்று தெரிகிறது. ஜே.ஜே. பற்றிய அவரது மதிப்பீடு கூறப்பட்டு இருபத்தி
இரண்டு வருடங்களாகின்றன. இன்றைய சிறுபத்திரிகை உலகைக் கூர்ந்து கவனித்து வருபவன்
என்ற முறையில் தமிழ் இலக்கியக் கலாச்சாரத்தின் நோக்கங்கள் அகன்றும் விரிந்தும்
பரந்தும் ஆத்மார்த்தமும் உத்வேகமும் பெற்றும் திகழ்வதைக் காண முடிகிறது. கனமான
ஆத்மார்த்தத் தேடல் நடத்தும் பத்திரிகைகள் அவை. சாளரங்கள் திறந்துவிடப்பட்டு உலகப்
படைப்புகளின் சங்கமமாகப் புத்தாக்க உயிர்த் துடிப்புகள் எல்லாம் சுய மண்ணின்
கௌரவத்தோடு அவற்றில் மிளிர்கின்றன.
இன்னும் எட்டு வருடங்கள் கழிந்த பிறகு சு.ரா.வுக்குக் கிடைக்கும் எதிர்வினைகளை
என்னால் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் அவரது உள்நோக்கமாக உயிர்த் துடிப்பான,
அர்த்தமுள்ள பார்வைகள் செறிவோடு தமிழ் இலக்கியச் சூழலில் வளர்ந்திருக்கும்;
நிச்சயம் வளர்ந்திருக்கும்.