கவிஞர் ஆனந்தின் நேர்காணல்போல் ஒரு நேர்காணலை என் வாழ்க்கையில்
எந்த இதழிலும் படித்ததில்லை. ஒரு படைப்பாளியிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளும்
பெற்றுக்கொண்ட பதில்களும் முழுமையுற்றிருக்கின்றன. அவரைச் சந்தித்த க. மோகனரங்கன்
மற்றும் ரவிக்கும் புகைப்படங்கள் எடுத்த புதுவை இளவேனிலுக்கும் பாராட்டுகள்.
ரவி உதயன்
ஈரோடு
செழியனின் 'விட்டு
விடுதலையாகி' கட்டுரை படித்தேன். தமிழ் சினிமாவின் வணிகத்
தன்மையின்மீது அதிருப்திகொண்ட ரசிகர்களும் கலைஞர்களும் மாற்றுச் சிந்தனையின் பரப்பை
விஸ் தீரணப்படுத்திவருகின்றனர். இது தரம் நாடலின் ஆர்வத்தையும் சினிமா மீதான
அக்கறையையும் பிரதிபலிக்கிறது. வெகுஜன சினிமாவில் முற்றாகத் தொலைந்தும் அரிதாகியும்
உள்ள இலக்கியப் படைப்புகளை வரவேற்கும் கதவைக் குறும்பட அமைப்பினர் திறந்து
வைத்திருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
பா. செல்வவிநாயகம்
சென்னை 600 082
புளியம்பூஒ சிறுகதையில், தன் பெண்ணின் மேற்படிப்புக்குத் தடை விதித்து அவள்
திருமணத்துக்கு வற்புறுத்தும் ஊராரின் தீர்ப்புக்கு உடன்படும் தந்தையின் பரிதாப
நிலையையும் பண வெறிக்கு ஆளாகிப் பாசத்தை மறந்த அண்ணனின் ஆளுமையும் அருமையாகச்
சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மனிதனை எப்படியெல்லாம்
கவலைப்படவைக்கிறது என்பதை அப்பாவின்
'சுவாசத்தில் புளியம் பூ
வாசம்' என்ற வரிகளில்
உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.
நாகை சந்திரா
நாகப்பட்டினம்
ஒரு சிறு செய்தியைத் தாங்கிக்கொண்டு தாத்தா, அப்பா, மகன், பேரன் ஆகிய மூன்று
தலைமுறைப் பாத்திரங்களின் யதார்த்த உணர்வுகளை உயி ரோட்டத்தோடு கிராமத்தின்
ரம்மியமான இயற்கைச் சூழலோடு, கிராமத்தின் வாசனையைச் சிறுகதை முழுவதும்
வியாபிக்கவைத்திருக்கிறார்
'புளியம் பூ' கதையின் ஆசிரியர். தன் சந்ததி பொருளாதாரச்
சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்னும் நல்லெண்ண நோக்கோடு தன் குருதியை
வியர்வையாய்ச் சிந்தி, புளிய மரங்களை வளரச் செய்த தந்தையின் கனவுகளைத் தன் ஆடம்பரக்
கனவுகளால் மகன் காலி செய்துவிடும்போது மாயாண்டியின் உதிரத்தைப் போலவே வாசிப்பவரின்
மனமும் உறைந்துவிடுகிறது.
எஸ். முரளி
ஸ்ரீரங்கம் 620 006
ஆகஸ்ட் இதழில் சஞ்சய் சுப்பிர மணியன் நேர்காணலைப் படித்தேன். கர்நாடக சங்கீதத்தைப்
பற்றி அதிகம் அறியாதவர்கள் பார்வையில் மேம்போக்காகவும், ஒன்றுமே தெரியாதவர்கள்
பார்வையில் தான்போக்காகவும் அமைந்த கேள்விகள் எந்த அரிய இசைத் தகவல்களையும்
வெளிப்படுத்தவில்லை. காலச்சுவடு வாசகர்களின் ஓகட்டமைக்கப்பட்டஔ மனச் சட்டங்களுக்கு
வெளியே அமைந்த இசை நேர்காணல் எல்லா வாசகர்களுக்கும் இசைவாக இருந்திருக்குமா என்று
தெரியவில்லை. ஓர் இசைக் கலைஞனின் தனிப்பட்ட ரசனை, விருப்பம், அனுபவங்கள்,
வருத்தங்கள், ஆர்வங்கள் போன்றவற்றைத் தாண்டி இசைப் பிரியர்கள் எல்லோரும் பயனடையும்
வகையில் இசை நேர்காணல்கள் அமைவது விரும்பத்தக்கது. காலச்சுவடின் ஓபன்முகஔ
அடையாளத்தைப் பறைசாற்றும் விதமாக அமைந்ததன் அடிப்படையில் மட்டும் இது
பாராட்டப்படலாம்.
கிருஷ்ண பாகவதர்
சென்னை
செப்டம்பர் மாத இதழ் கண்டேன். தரமான இதழைப் படித்த திருப்தி கிடைத்தது. ஒரு
தாவரவியல் ஆசிரியர் என்ற முறையில் என்னை அசர வைத்தவை ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள்
'தமிழர் வழக்காறுகள்' என்ற தலைப்பில் அளித்திருக்கும் ஆவாரையைப் பற்றிய
செய்திகள்தான். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. எடுத்து பத்திரப்படுத்தி
வைத்துக் கொண்டேன்.
திருமதி க.த. சாந்தி
விழுப்புரம் மாவட்டம்
காந்தியை மிகப் புனிதமானவராகக் கருதிக்கொண்டு காந்தியக் கண்ணோட்டத்தில்
தாழ்த்தப்பட்டோ ர் நிலை குறித்து வருத்தப்படுகிறார் கிருஷ்ணன் (ஒரு களிறு போதுமா?).
இன்றைக்கும் தாழ்த்தப்பட்டோ ர் அடைந்துவருகிற வன்கொடுமைகளுக்கும் வறுமைக்கும்
அடித்தளமிட்டவர் காந்திதான் என்பதைத் திட்டமிட்டு மறைத்துவருகிறார். தாழ்த்தப்பட்டோ
ர் கால காலத்திற்கும் ஆதிக்கச் சாதியினரையே (அதாவது இந்துக்களை) நம்பி வாழும்படியான
ஒரு கொடுமையான ஏற்பாட்டைச் செய்தவர் காந்திதான். தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளைத்
தாழ்த்தப்பட்ட மக்களே தேர்ந்தெடுக்கும் முறையான இரட்டை வாக்குரிமை முறையைத் தனது
உண்ணாவிரதத்தால் காலிசெய்து தாழ்த்தப்பட்டோ ர் விடுதலைக்கு எதிரான நிலையை எடுத்தவர்
காந்தி (இது பற்றி விரிவாக அறிய வேண்டுமாயின்
'காந்தியும் காங்கிரசும் தீண்டத் தகாத
மக்களுக்குச் செய்தது
என்ன' என்கிற அறிஞர் அம்பேத்கர் எழுதிய நூலை வாசிக்கவும்).
ஹரிஜன், அதாவது கடவுளின் குழந்தை என்று காந்தி பெயரிட்டதை அம்பேத்கர் மிக வன்மையாக
எதிர்த்தார். காரணம், குஜராத்தி நாவலாசிரியர் நர்சி மேத்தா கடவுளின் குழந்தை என்று
யாரை அழைத்தார் என்றால் கோயில்களில் பொட்டுக் கட்டிவிடப்பட்ட பெண்களுக்குப் பிறந்த
குழந்தைகளைக் குறிக்கவே. அதாவது தந்தை யாரென்று அறிய முடியாது பிறந்த குழந்தைகளையே
ஹரிஜன் என்று தனது நாவலில் குறிப்பிடுகிறார். இதை மனதில் கொண்டுதான் காந்தி
தாழ்த்தப்பட்டோ ரை ஹரிஜன் என்று அழைத்தார். தீண்டத்தகாதோர் கடவுளின் குழந்தை
என்றால் சாதி இந்துக்கள் சாத்தானின் குழந்தைகளா என்று அம்பேத்கர் கேள்வி
எழுப்பினார்.
யாருடைய இரக்கத்தாலும் பெறுவதல்ல தலித் மக்களின் விடுதலை. தொடர்ந்த போராட்டமே
எங்களுக்கு விடுதலையளிக்கும். இது அம்பேத்கர் தொடங்கித் திருமாவளவன்வரை நீள்கிறது.
காந்தீயம் சர்வரோக நிவாரணியல்ல என்பதைக் கிருஷ்ணன் போன்றோர் உணர வேண்டும்.
ஓஆடுகளாய் இருந்தால் பலியிடப்படுவீர்கள்; சிறுத்தைகளாகுங்கள்ஔ என்றார் அம்பேத்கர்.
திருமாவளவன் களிறு அல்ல; சிறுத்தை. அவர் பின்னால் கோடிக் கணக்கில் சிறுத்தைகள்.
பேரா. அரச. முருகுபாண்டியன்
பொறையாறு
பி.ஏ. கிருஷ்ணனின் பதிவு எளிமையான சொல்லமைப்பால் கட்டப்பட்ட கவித்துவமான வரிகள்.
சகஜானந்தரைப் பற்றி எழுதியிருந்த பகுதிகள் எனக்குள் நெகிழ்வை உண்டாக்கிவிட்டன.
தலித் மக்களால் நினைவுகூரப்பட வேண்டிய மகத்தான ஆளுமை அவர்.
சில ஆண்டுகளில் நூற்றாண்டை நிறைவு செய்ய இருக்கும் அவரின் கல்விப் பணியால்
தீண்டப்படாத மக்கள் பெருவாரியாகக் கல்வி அறிவினைப் பெற்றனர். ஆனால் தமிழ் நாட்டுத்
தலித் மக்களுக்கு அவரை அவ்வளவாகத் தெரியாது என்பதுதான் துரதிர்ஷ்டமானது. தலித்
மக்களுக்குக்காகப் பாடுபட்டவராக யாருமே அவரைச் சொன்னதில்லை. கடந்த பத்தாண்டுகளாக
தலித் எழுத்தாளர்களும் இயக்கங்களும் உருவான பின்பே ஓரளவாவது அவர் தெரிகிறார்.
கடவுள் மறுப்புதான் தலித் மக்கள் விடுதலைக்கான வழி என்று பிரச்சாரம் செய்யப்பட்டு
வந்த நம் சூழலில் கடவுள் நம்பிக்கையோடிருந்த ஒரே காரணத்திற்காக தலித் மக்கள்
பார்வையிலிருந்து அவரை மறைத்துவிட்டனர். இந்த மோசடியில் திராவிட இயக்க
வரலாற்றாளர்கள் ஈடுபட்டுவிட்டனர். அதையே தம் வரலாறாக எண்ணி மயங்கிய தலித்துகளும்
அவரைக் கைவிட்டுவிட்டனர்.
தலித்துகளிடம் சாமி இல்லை என்று சொல்லி மேடையைப் பயன்படுத்திக்கொண்டவர்களைக்
காட்டிலும் கடவுளை நம்பிய சகஜானந்தர் போன்றோர் ஆற்றிய பணிகளே அம் மக்களுக்கு
உண்மையான விடுதலையைத் தரக்கூடிய கல்வியினை வழங்கியுள்ளன. இங்கு சாமி இல்லை என்று
சொன்னவர்களைக் காட்டிலும் சாதி இல்லை என்று சொன்னவர்கள் சொற்பமே. திராவிட இயக்கக்
கடவுள் மறுப்பாளர்கள் தங்கள் வாழ்நாளில் தலித்துகளிடம் வாய் உபச்சாரத்தைத் தவிர
வேறு எதையும் செய்ததில்லை.
சகஜானந்தரையும் காந்தியையும் சிலாகிக்கும் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு
செய்தியை நினைவுபடுத்துவது என் பொறுப்பு. காந்தியின் நடவடிக்கைகள் மீது நல்ல
மரியாதை வைத்திருந்த சகஜானந்தர், காந்தியைக் கடுமையாக மறுத்த சம்பவங்களும்
நடந்திருக்கின்றன. பூனா ஒப்பந்தத்தின்போது காந்தியைக் வன்மையாக விமர்சித்தவர்களுள்
சகஜானந்தரும் ஒருவர். இரட்டை வாக்குரிமைக்கு ஆதரவாகவும் பூனா ஒப்பந்தத்திற்கு
எதிராகவும் சிதம்பரத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். காந்திக்கு எதிராகப்
பேசினார் என்பதைக் காட்டிலும் தலித் மக்களுக்கான எதிர்காலத்தின் மீது உண்மையான
வேட்கை கொண்டுழைத்தார் என்பதையே அது காட்டுகிறது. இந்த வேட்கையே அவர் கல்விப்
பணியாற்றவும் காந்திக்கு எதிராகப் பேசவும்வைத்தது.
ஸ்டாலின் ராஜாங்கம்
திருப்பத்தூர்