அய்யப்பப் பணிக்கர் (1930-2006) இவ்வாண்டு சரஸ்வதி
சம்மான் விருதுபெற்ற மலையாளக் கவிஞர். 1951இலிருந்து 40 ஆண்டுகாலம் திருவாங்கூர்,
கேரளப் பல்கலைக்கழக நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் மலையாள
நவீனக் கவிதை, பின்நவீனக் கவிதை உட்பட்ட இலக்கிய விமர்சனத் துறையிலும் தன்
முத்திரையைப் பதித்தவர். இவருடைய புகழ்பெற்ற 'குருக்ஷேத்திரம்'
நெடுங்கவிதை
மலையாளத்தில் வெளியான அறுபதுகளிலேயே நகுலனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 'எழுத்து'வில்
பிரசுரமாயிற்று. தவிர, சாகித்திய அகாதமி விருது பெற்ற 'அய்யப்பப் பணிக்கர் கவிதைகள்'
(1984) இரண்டாம் பாகம் (1999), 'கோத்திரயானம்' (2002) மற்றும் சில கவிதைகள் தமிழில்
வெளிவந்திருக்கின்றன. நாவல், சிறுகதை, புதுக்கவிதை போன்ற நவீன இலக்கியப் பிரிவுகளை
மேல்நாட்டு இலக்கண, விமர்சன அளவைகளில் மட்டும் வரையறைசெய்ய வேண்டியதில்லை, 'தொல்காப்பியம்'
போன்ற தமிழ்மொழி உட்பட்ட இந்திய மொழி, பழமை இலக்கண மரபிலும் நுகர முடியும் என்பதை
'Indian Narratology', 'இந்தியன் சாகித்ய சித்தாந்தம்' போன்ற நூல்களில் மிக
நுட்பமாக ஆய்வு செய்திருக்கிறார்.
சென்ற ஐயாயிரமாண்டு இந்திய வரலாறு சலனமற்று இருக்கவில்லை. பழங்குடி மக்கள்,
திராவிடர், ஆரியர், துருக்கி தேசத்தவர், தாழ்த்தப்பட்டவர் இவ்வாறு பல்வேறு
இனத்தவர்களின் கலப்புக் காரணமாய் நிரந்தரம் மாறிக்கொண்டிருந்த ஒரு மக்கள் சமூகத்தின்
வரலாறு சலனமற்றிருப்பது என்பது சாத்தியமற்றது. குமுறல்களும் போராட்டங்களும்
நிறைந்தது அந்த வரலாறு. அந்தப் பகைப்புலனில் வளர்ந்து வந்த பண்பாடும் ஒரே கல்லில்
அமைந்ததாகவும் ஒரே வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருக்க வழியில்லை. சில
நெறிகள் முக்கிய நெறிகளாகவும் அடிப்படை ஊற்றுக்கண்களாகவும் வர்ணிக்கப்படுவதுண்டு.
இன்றும் பரிபூரணமாகக் கரைந்து சேர்ந்திடாத பல கோத்திரங்கள், இனங்களின் கலப்பு -
ஒருங்கிணைதலுக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் கலப்பு - அதைத்தான் பாரதப் பண்பாட்டில்
நாம் பார்க்கிறோம். Historical Evolution of India (இந்தியாவின் வரலாற்றுப்பூர்வமான
பரிணாமம்) என்ற கட்டுரையில் சுவாமி விவேகானந்தர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இலக்கியப் படிப்பின் முக்கிய விஷயமான அழகியல் - திறனாய்வு (சாகித்திய மீமாம்ஸ),
பல்வேறான வரலாற்றுக் கட்டங்கள் வழி வளர்ச்சி பெற்று வந்திருப்பதாகப் பொதுவாகச்
சொல்வதுண்டு. படைப்பிலக்கியத்தால் ஏற்படுகின்ற சலனங்களைப் போலவே இலக்கியத்
தரிசனத்திலும், அதாவது இலக்கியப் படைப்பைச் சுவைக்க உதவும் தத்துவச் சிந்தனையிலும்
பரிணாமச் செயல்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தந்தக் காலத்தில் உருவாகிற
இலக்கியப் படைப்புகளைப் படிக்கவும் ஆய்வு செய்யவும் விவாதிக்கவும் உதவும்
கோட்பாடுகளும் மாறி மாறி வருகின்றன. புதிய படைப்புகளுக்குப் புதிய அணுகல் முறை
அவசியமாகிறது. தொடர்ந்து புதுப்பித்தல் - சீர்திருத்தம் - படைப்பிலக்கியத்திலும்
இலக்கியப் படிப்பிலும் நடந்துகொண்டேயிருக்கிறது.
இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மாற்றங்களின்
அடிப்படையில்தான், அவற்றின் தாக்கங்களினால்தான் கோட்பாடுகள் புதுப்பிக்கப்படுகின்றன.
புதிய படைப்புகள் உருவாகும்போது புரிந்து கொள்ளலில் வரும் மாற்றங்கள்
கவனிக்கப்படுகின்றன. அதற்குத் தகுந்தவாறு கோட்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.
இந்த மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு புதிய ரீதியில் படைப்புகள் படைக்கப்படுகின்றன.
மீண்டும் சுவைத்தலில் வரும் வேறுபாடு இலக்கியப் படைப்பிலும், தொடர்ந்து ரசனையிலும்
மாற்றங்களுக்குக் காரணமாகிவிடுகிறது. மாற்றங்களுக்குப் பின்னாலுள்ள தத்துவங்கள்,
அவற்றை ஊக்குவித்த தன்மைகள், கவனிக்கவும்படுகின்றன; பிறகு ஒழுங்கும்
படுத்தப்படுகின்றன.
தொல்காப்பியத்தை எடுத்துக்கொண்டால், அது யாரால், எப்போது, எவ்வாறு எழுதப்பட்டது
போன்றவற்றைப் பண்டிதர்களுக்கு விட்டுவிடுவோம். நாம் வாழும் இன்றைய காலத்தில்
இலக்கியப் படைப்புகளைப் படிப்பதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் எந்த அளவுக்கு
உதவும் என்பதைத்தான் இங்கே ஆராய்ந்து பார்க்கிறோம்.
திராவிட அழகியலின் அதிகாரபூர்வமான நிரூபணமாகக் கருதப்படவேண்டிய பொருளதிகாரத்தில்
மானிட வாழ்வை அதன் அடிப்படையும் ஊக்கச் சக்தியுமான இயற்கையுடனும் பருவங்களுடனும்
தொடர்புபடுத்தும் ஒரு முழுமையான தரிசனத்தைப் பார்க்க முடிகிறது. இன்று
பிரபலமாகிக்கொண்டிருக்கும் சுற்றுப்புற அழகியலுடன் ஓர் அளவுக்காவது இந்த
தரிசனத்திற்கு ஒற்றுமை உண்டு.
பல்வேறு நிலப் பிரிவுகளாகக் கணக்கிடப்படுகிற திணைகளை அடிப்படையாகக் கொண்ட திராவிட
இலக்கியத் திறனாய்வில் இரு முக்கியக் கூறுகளாக இலக்கியம் பிரிக்கப்பட்டிருக்கிறது.
உள்ளுணர்தலும் தனித் தன்மையும் உணர்வு முக்கியத்துவமும் ஆன உணர்ச்சிப் பாடல்
விசேஷங்கள் உட்கொண்ட அகக் கவிதைகள் ஒரு பிரிவு; மெய்யுணர்தலும் சமூகப் பிரக்ஞையும்
விவரிப்பு முக்கியத்துவமும் ஆன எடுத்துரைத்தல் விசேஷங்கள் உட்கொண்ட புறக் கவிதைகள்
இன்னொன்று. இவற்றுக்கு அடிப்படையான திணைகள்தான் அகத் திணைகளும் புறத் திணைகளும். இவை
இரண்டையும் பரஸ்பரம் தொடர்பில்லாத, தண்ணீர் நுழைய முடியாத அறைகளாகக் கணிக்க வேண்டிய
தேவையில்லை. திணை மயக்கம் ஒதுக்கப்பட வேண்டியதல்ல.
பொருளதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றை வைத்துப் பார்த்தால், இலக்கியத்
திறனாய்வில் முதலில் முக்கியமாக எழும் கேள்விகள் இடம், காலம் சம்பந்தப்பட்டவையே.
அகத்திணையிலும் புறத்திணையிலும் முதல் பொருளாய் இயங்குவது எங்கே, எப்போது என்ற
கேள்விகளுக்கான விடைதான். படைப்பில் எடுத்தாளப்படும் அனுபவங்களுக்கும்
நிகழ்ச்சிகளுக்கும் ஆதாரமும் பகைப்புலனுமான இயற்கைக் காட்சிகளின் அடிப்படையில்தான்
அகத்திணைகளும் புறத்திணைகளும் ஏழு ஏழாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு
திணைக்கும் தனித்தனிப் பொருத்தமான பருவங்களும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
காலக் குறிப்பீட்டில் ஆண்டின் பாகங்களான ருதுக்களும் (பருவங்கள்) நாளின் பாகங்களான
யாமங்களும் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு செடி அல்லது மரத்தின் பெயர் ஒவ்வொரு
திணையையும் குறிப்பதற்கான குறியீடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இட, கால
நிலைகளின் இணைப்புதான் ஒவ்வொரு திணையும். தொல்காப்பியர் வாழ்ந்த காலகட்டத்தில்
இருந்த தென்னிந்தியப் புவியியல் இயற்கையை ஆதாரமாக்கித்தான் ஏழு அகத்திணைகளும் ஏழு
புறத் திணைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. பூகோளத்தின் ஏனைய பாகங்கள் கவனத்தில்
வரும்போது கூடுதல் திணைகளை ஏற்றுக்கொள்வது, அதாவது திணைப் பெருக்க விரிவு நியாயமானதே.
ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உரிப்பொருள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கால தேச
நிலைகளுக்குப் பொருத்தமான உணர்வு மண்டலத்தை இலக்கியப் படைப்புகளில் தெள்ளத்
தெளிவாகப் பார்க்க முடிவதால், கவிதைப் பகைப் புலனைக் கவிதையின் உள்ளடக்கச்
சாரத்துடன் தொடர்புபடுத்துவது சாத்தியமாகிறது. இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள
பரஸ்பர உறவு இலக்கியத்தில் பகைப் புலனும் உள்ளடக்கமுமாக உள்ள பரஸ்பர உறவு வழியாக
நுட்பமாகக் குறிப்பிடப்படுகிறது என்று மேலோட்டமாகச் சொல்லலாம். இந்த உறவு எப்போதும்
வெளிப்பட்டுத் தோன்ற வேண்டுமென்பதில்லை. இலை மறைவு காய் மறைவுக்குத்தான் இலக்கிய
ரசனையில் கூடுதல் முக்கியத்துவம்.
முதல் பொருளை உரிப் பொருளோடு தொடர்புபடுத்துவதற்கு உதவும் ஆக்கக் கூறுகள்தான் கருப்
பொருள் என்ற குறியீட்டினால் பொருளதிகாரத்தில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கால தேச
நிலைகளின் சூசக அடையாளங்களும் வெளியீட்டு ஊடகங்களும்தான் கருப்பொருள் எனலாம். இரண்டு
திணைகள் இணங்கிச் சேரும்போது உரிப்பொருளில் நிகழ்வதைப் போல் கருப் பொருளிலும் சில
மாற்றங்கள் நிகழலாம். புதிய திணைகளைக் கண்டுபிடிக்கும்போது பொருத்தமான
உரிப்பொருளையும் கருப்பொருளையும் சேர்த்துக்கொள்ள வேண்டி வரலாம். ஒவ்வொரு திணைக்கும்
கருப்பொருளாகப் பதினொரு விதமான பொருள்கள் பொருளதிகாரத்தில் தரப்பட்டிருக்கின்றன.
இவற்றுக்குக் கூடுதல், குறைவு வராது என்பதில்லை. பழைய திணைகளைப் புதிதாய் விளக்கவும்
புதிய திணைகளை இனம் காணவும் முயலும்போது, முதல், உரி, கருப் பொருள்களில் பொருத்தமான
மாற்றங்கள் ஏற்படவேண்டிவருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலக்
கவிதைகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வந்த இலக்கியக் கோட்பாடுகளில்
சமகால இலக்கியத் திறனாய்வுக்குத் தகுந்த நவீனப்படுத்தல் நிகழவேண்டியுள்ளது.
பொருளதிகாரத்தின் பாடங்கள்
இலக்கிய ரசனையை, படிப்பைச் சீரிய முறையில் மனப்பூர்வமாக எடுத்துக்கொள்ளும் நபர் ஒரு
படைப்பை அணுகும்போது முதலில் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்ற கேள்விக்குத்
தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் தரும் பதில் மிக அடிப்படையானது. முதல் பொருள்,
அதாவது முதன்மைத் தத்துவங்கள் என்றால் அவை கால தேச நிலைகள் என்பவையாகும். கால
நிலையையும் தேச நிலையையும் கணக்கில் எடுக்காமல் ஒரு படைப்பைப் பற்றிய ஆய்வை
ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்றுதான் இங்கே சுட்டப்படுகிறது. காலநிலை எவை?
தொல்காப்பியத்தில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள காலநிலைகள் இரண்டு. ஒன்று,
மழைக் காலம், வேனில் காலம் போன்ற பெரும்பொழுதுகள், பருவங்கள். இரண்டு, காலை, மதியம்,
மாலை, இரவு போன்ற சிறு பொழுதுகள். இத்தனை மட்டுமே பொருளதிகாரத்தில் பெயர்
குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கின்றனவென்றாலும் விசாலமான பொருளில் உள்ள காலக்
கணிப்பைக்கூட இதில் உட்படுத்த வேண்டுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக,
வரலாறு, பண்பாடு முதலிய செல்நெறிகள் உட்படுகின்ற காலகட்டங்கள். காரணம், கால நிலை
என்பது வரலாற்று அம்சம் உட்படுகின்ற ஒரு கருத்தாக்கம். வருடமானம் தினமானம் ஆகிய
கணக்குகளைப் போல் யுகமானமும் இதில் உட்படும்; உட்படவேண்டும்; உட்படுத்தவேண்டும்.
இந்த உள்ளுணர்வைத் தொல்காப்பிய வரிகளின் இடையே நாம் வாசிக்க முடிகிறது.
சுற்றுப்புறச் சூழல், சூழ்நிலை என்று சொல்லும்போது பகலும் இரவும்போல், வெளிச்சமும்
இருளும்போல், கோடையும் மழையும்போல் சரித்திரக் காலகட்டங்களும் மாறிக்கொண்டிருக்கும்
மனித வாழ்வின் - சூழலின் முக்கியமான அம்சங்களாகும். இலக்கியப் படிப்பில் கால நிலையை
ஒட்டிக் குறிப்பிடுகிற எல்லா அம்சங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. வரையறை
செய்யப்பட்ட பொருளில் பெரும் பொழுதுகளின் சிறப்புத் தன்மைகளும் மனித வாழ்வின் மீது
அவை செலுத்துகிற சிறப்பும் தீவிரப் பரிசீலனைக்கு உகந்தவை. அதைப் போலவே எதன் கால நிலை
என்ற கேள்விக்கு நாம் பதில் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் விரிவான பொருள் தேடலில்
காலநிலையின் மூன்று அம்சங்களாவது உட்பட்டிருக்கும். ஒன்று, எழுதிய ஆளின் காலம்,
எழுதிய காலம்; இரண்டு, படைப்பில் விவரித்திருக்கிற, சூசகமாக்கப்பட்டிருக்கும் காலம்,
காலகட்டம்; மூன்று, வாசகனின் நிகழ்காலம், வாசிக்கும் காலப் பிரமாணம். முன்பு
எழுதப்பட்ட ஒரு படைப்பை இன்று வாசிக்கும்போது எழுதப்பட்ட காலத்தைப் போல் வாசிக்கிற
காலத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். அவற்றைப் போலவே முக்கியமானவை
படைப்பினுள் விவரித்திருக்கும் காலகட்டம், பெரும்பொழுதுகள், சிறு பொழுதுகள்,
ருதுக்கள், நாள் பிரிவுகள் ஆகியவை.
பொருளதிகாரத்தில் இவ்வாறு குறிப்பிடப்படும் முதல் பொருள், கருப் பொருள், உரிப்
பொருள் இவற்றை ஒரு துவக்கமாய்ப் பார்க்கும்போது, முதல் பொருள்தான் அடிப்படை. அதில்
குறிப்பிடப்படுகிற இடமும் காலமும் மேலே விவரித்திருக்குமாறு சமகாலப் படைப்புகளின்
ரசனைக்கு உதவ வேண்டும்.
இடத்தைக் குறிப்பிடுகிற திணைகள் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டவற்றுக்குள் (அகம் 7
+ புறம் 7 = 14) அடங்கி நிற்க வேண்டும் என்பதில்லை.
தமிழிலும் ஏனைய இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உட்பட்ட திராவிடமல்லாத பிற உலக
மொழிகளிலும் வெளிவந்துள்ள படைப்புகளில் புதிய திணைகளைக் கண்டுபிடிக்கலாம். இதைத்
திணைப் பெருக்கம் என்று அழைப்போம். மலையாளத்தில் கோவிலனின் ஹிமாலயம், முகுந்தனின்
டெல்ஹி' வங்கமொழியில் விபூதிபூஷணின் ஆரண்யக், தமிழில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு,
நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் போன்ற நாவல்கள் - எடுத்துக்காட்டாக இந்தப்
படைப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு, மேலே தொல்காப்பியம்
விதித்திருக்கும் திணைகளிலிருந்து இவை பிறந்திருக்கின்றனவா, எங்கே ஒன்றுபடுகின்றன,
பிறந்திருக்கிறதென்றால் திணைப் பெருக்கத்திற்கு வழிவகுக்குமா என்றெல்லாம் விரிவாக
ஆய்வு செய்வது, திணைப் படிப்பைச் சமகால இலக்கியத்தின் நவீனப் பார்வைகளுக்குச்
சாதகமாக்க வெகுவாகத் துணைபுரியும்.
ஒன்றுக்கு அதிகமான திணைகள் ஒரு படைப்பில் இணங்கிச் சேர்ந்திருந்தால் திணையிணக்கம்,
திணை மயக்கம் என்று அழைக்கிறோம். இணங்காதிருந்தால் திணைப் பிணக்கம் (ஐரனி). இவற்றை
மேலே குறிப்பிட்டிருக்கும் இந்திய மொழிப் படைப்புகளுக்கு மட்டுமல்ல, திராவிடம்
அல்லாத பிற படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக
ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்'தை இங்கே ஆய்வு செய்து பார்ப்போம்.
ஒரு சரித்திரப் பின்னணியுள்ள அரசியல் கதையானதால் ஸ்காட்லாந்தின் அரசியல் வரலாற்றில்
இதிகாச இயல்பான காலகட்டம் இங்கு சித்தரிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் நடப்பது,
யுத்தத்தின் பின்னணியில். டங்கனின் கொலையும் ஆவியின் பிரவேசமும் எல்லாம் நடப்பது
இரவில். மொத்தத்தில் மனிதனின் நல்ல தன்மைகளை நெருக்கிக் கொல்லும் குரூரத்தைத்
தொனிக்கச் செய்யும் இருள்சூழ்ந்த நிசியின் சூழ்நிலை படைப்பு முழுதும் நிறைந்து
நிற்கிறது. பொருளதிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் மாக்பெத்தின் குணத்திலேயே
இருக்கும் முரண்பாடு வெளிப்படுகிற அம்சங்களைப் பார்க்க முடியும். யுத்தக் காட்சிகள்,
கோட்டை முற்றுகை, எதிரிகள் அழிப்பு போன்றவை உட்படும் பகல்களில்கூட மாக்பெத்தின் மனப்
போராட்டமும் வஞ்சனையும் பதவி மோகமும் சூசகமாக்கும் இரவுகளும் சேர்ந்த ஒரு கால அளவு
இங்கே வெளிப்படுகிறது. உள்ளடக்கம் அல்லது கதைக் கருவோடு தொடர்புபடுத்தித்தான்
தொல்காப்பியத்தில் முதல் பொருள் பரிசீலனை செய்யப்படுகிறது. ஒரு முழுநீள நாடகமாதலால்
ஒன்றுக்கு மேற்பட்ட பெரும்பொழுது, சிறுபொழுதுகளை இப்படைப்பில் காணலாம். அக உணர்வுகளை
வெளிப்படுத்த இரவும் சமூகக் காட்சிகளுக்குப் பகலும். அதைப் போலவே, ஒன்றுக்கு
அதிகமான பெரும்பொழுதுகளுக்கு இடமுள்ள முறையில்தான் நாடகத்தின் உணர்வுச் சித்திரிப்பு
செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாகச் சொன்னால் முரண்பாடுகள் கொண்ட இருள் மூட்டமான
சூழ்நிலை 'மாக்பெத்'தில் வெளிப்படுத்தப்படுகிறது. சுருக்கமாக, அதன் கால ஆய்வாக
இத்தனையையும் குறிப்பிடலாம்.
பிரதேச நிலை என்று சொல்லும்போது படைப்பின் சம்பவங்கள் நடக்கிற இடம், படைப்பு
உருவாக்கப்பட்ட இடம், படைப்பை வாசித்துப் புரிந்துகொள்ளப்படும் பிராந்தியச் சூழ்நிலை
இவையெல்லாம் முக்கியமாக வரும். 'மாக்பெத்'தின் புவியியல் பின்புலமான பிராந்தியம்
ஸ்காட்லாந்து. அங்குள்ள கோட்டை, கொத்தளங்கள், அரண்மனைகள், போர் நடக்கும் திறந்த
வெளியிடமெல்லாம் இதில் உட்படும். தனிநபரான மாக்பெத்தின் மனப் போராட்டத்தைத்
தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அகத்திணையில் மருதத்துடன்
தொடர்புபடுத்தலாமெனினும் வெளியில் உள்ள மோதல் -போர்க்காட்சிகள், புறத்திணையில்
உழிஞையோடு தொடர்புப்படுத்துவதுதான் பொருத்தம். 'மாக்பெ'த்தின் உள்ளடக்கம் அக, புறத்
திணைகளில் உட்பட்ட மருதமும் உழிஞையும் சேர்ந்ததாகக் காணப்படுகிறது. டங்கனின்
கொலையும் யுத்தக் காட்சிகளின் கொலையும் வேறுபட்ட உணர்வுகளின் லட்சணங்களைக்
கொண்டிருப்பதால் இரட்டைத் திணையுள்ள படைப்புதான் 'மாக்பெத்' என்று சொல்லலாம்.
இவ்வாறு பொருளதிகார முறையில் பார்க்கும்போது 'மாக்பெத்'தின் உரிப் பொருள்
நம்பிக்கைத் துரோகமும் பதவியைக் கைப்பற்றலுமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட
பெரும்பொழுதுகளின் பின்னணியை இங்கே காண முடியும். சூனியக்காரிகளின்
மந்திரஜபங்களுக்கும் விழாவுக்கும் பரிவாரமாக வருவது இடியும் மின்னலும். இவை
நிகழ்வது சதுப்பு நிலத்தில். காட்சி இன்வேணட் கோட்டைக்கு மாறும்போது சூழ்நிலை
தெளிவற்றதாகிவிடுகிறது. "இது நல்ல இடம், நமது மிருதுவான புலன்களுக்கு இன்பம்
தருகிறது. இங்குள்ள காற்றுக்கூட" என்றெல்லாம் கூறி அந்தியுறங்கும் டங்கன் அதிகம்
தாமதியாமல் கொல்லப்படுகிறான். மாக்பெத்தின் மனத் தடுமாற்றத்திற்கும் இச்சையை
அடக்கும் சக்தியின்றிச் செய்துகொண்டிருக்கும் பாவங்களுக்கும் தவிர்க்க முடியாமல்
தலையில் வந்து விழும் பேராபத்துக்கும் ஏற்ற பகைப் புலனை ஷேக்ஸ்பியர்
தயார்படுத்தியிருக்கிறார். இந்த நேரடி-மறைமுக முரண்பாடு, நாடகத்தில் மொத்தமாய்
நிறைந்து நிற்கும் எதிரிடைப் பண்பாகவும் விதிவிபரீதமாகவும் நமக்கு அனுபவமாகிறது.
இங்குதான் இரு திணைகளின் கூடிச் சேருதல் அல்லது கூடிச் சேராதிருத்தலை நாம்
புரிந்துகொள்கிறோம். இந்த முரண்பாட்டை ஐரனியாகப் பல மேல்நாட்டு விமர்சகர்களும்
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். "நிழலும் ஒளியும் இணைந்து சேர்ந்த வாழ்க்கை,
மரணங்கள் பரஸ்பரமுள்ள முரண்பாட்டை எடுத்தாளுகிறது மாக்பெத்" என்று காலரிட்ஜும்
மூடுதிரையிட்ட சிந்தனைக் குழப்பமென்று ராபர்ட் பிரிட்ஜஸும் மாக்பெத்தின் ஐரனியென்று
க்வில்லர் கவுச்சும் ஐரனி ஒரு செயல் உருவில் என்று மோல்ட்டனும் விவரிப்பது இந்தத்
திணைப் பிணக்கம் கொண்டு வருகிற சிறப்பியல்பாக நமக்குக் காண முடியும். ஒரு திணையின்
கருக்கள் இன்னொரு திணையில் வந்தால் அது திணைமயக்கம். திணைகள் இணங்காமல் நின்றால்
திணைப்பிணக்கம். சூழ்நிலை முரண்பாடு உணர்ச்சி இறுக்கம் வெளிப்படுத்துவதில்
முக்கியப் பங்கு வகிக்கிறது. 'மாக்பெத்' என்ற படைப்பின் பேராபத்து வெளியீட்டின்
மொத்த அழகியல் சுற்றுப்புறச் சூழ்நிலைச் சித்தரிப்புடன் தொடர்புடையது என்று
சுருக்கமாகக் கூறலாம்.
முதல் பொருளையும் உரிப் பொருளையும் உணர்ந்துவிட்டால் அவற்றில் வெளிப்படுத்தப்
பயன்பட்ட கருப் பொருள் கவனத்தில் படும். கால தேச நிலைகளுக்குத் தகுந்தவாறு பறவை,
விலங்கு, மரம், இசைக் கருவி (பறை), பண், மக்கள், உணவு முதலியவற்றையும் தெய்வம்,
தொழில் போன்றவற்றையும் படைப்பில் காணமுடியும். தேவதையின் இடத்தில் இங்கே போர்த்
தேவதையின் பிரதிநிதிகளென்று சொல்லத் தகுந்த சூனியக்காரிகள் முதல் காட்சியிலேயே
தோன்றுகிறார்கள். கட்டுப்படுத்தும் சக்தியாக நாடகாசிரியர்
வெளிப்படுத்தியிருக்கிறார். அழிவின் விதையை அவர்கள் விதைக்கிறார்கள். அவர்களுக்குப்
பொருத்தமான இயல்தன்மைதான் ஆவியின் வருகையும். உழிஞைத் திணைக்குப் பொருத்தமான
யுத்தமும் நாட்டின் ஆட்சியும் கதை மாந்தர்களின் முக்கியத் தொழில்களாக இருக்கின்றன.
பறவைகளின் இடத்தில் அமைதிக் குணம் படைத்த மார்ட்டினுக்கு நேராக ஆந்தை இரவு முழுதும்
உரத்துக் குரல் எழுப்பியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மரத்தின் இடத்தில் பெர்னாம்
மரக் கூட்டம் முழுதும் உண்டு. இந்தக் கருக்களையெல்லாம் திறமையாக ஒன்றிணைத்துத்தான்
பயங்கரமும் கொடூரமுமான துன்பியல் கதையை ஷேக்ஸ்பியர் நாடகமாக்கியிருக்கிறார்.
தொல்காப்பியத்தில் இலக்கியம் முழுமையும் அகம், புறம் என்று
பிரிக்கப்பட்டிருக்கிறது. அகமென்றால் உட்புறம் சம்பந்தப்பட்டது; தனிநபர் சார்ந்தது;
உளவியல் பாற்பட்டது; மென்மை உணர்வு; மோகனம்; சுயசார்புடையது என்றெல்லாம் கூறலாம்.
புறம் என்றால் வெளி; எல்லையற்றது; சமூகவியல் சம்பந்தப்பட்டது; தீவிர உணர்ச்சி
வெளியீடு; பொருள் சார்ந்தது என்றெல்லாம் குறிப்பிடலாம். ஒவ்வொன்றிற்கும் முறையே ஏழு
திணைகள் பொருளதிகாரத்தில் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் எடுத்துக்காட்டு
(மாடல்) மட்டும்தான். இந்தக் கோட்பாட்டை மனித நிலைகளின் காலதேச நிலைகளுடன்
தொடர்புபடுத்தும் அழகியல் கோட்பாட்டை, தேவையான விரிவாக்கல், திருத்தல்களுடன் ஒரு
படைப்பைத் திறனாய்வுசெய்யப் பயன்படுத்தலாம். யந்திரகதியில் எல்லாப் படைப்புகளிலும்
இந்தக் கோட்பாட்டை வலுக்கட்டாயமாகப் புகுத்திப் பார்க்கத் தேவையில்லை.
ஒன்றுக்கொன்று சேர வேண்டியவற்றைத்தானே சேர்க்க முடியும்?
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் திராவிட இலக்கிய இயலின் - ஆய்வுச் சித்தாந்தத்தின்
மூலக் கருவாகும். அதை விரிவாக்கி எடுத்தால் ஒருவேளை உலகத்தில் மிகவும் பழமையான,
மகத்தான ஒரு சுற்றுப்புறச்சூழல் அழகியல் கோட்பாடு நமக்குக் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது. பூமியும் சொர்க்கமும் பாதாளமும் பகைப்புலனாகியிருக்கிற
தாந்தேயின் 'டிவைன் காமெடி'க்கும் மில்ட்டனின் 'பாரடைஸ் லாஸ்ட்'டுக்கும் இந்தக்
கோட்பாடு பயன்பட வேண்டுமெனில் யந்திரத் தன்மையற்ற, கற்பனை எழில்வளம் கொழிக்கும்
ரீதியில் இதை வளர்த்தெடுக்க வேண்டும். நீண்ட படைப்புகளில், மேலே குறிப்பிட்டவாறு
ஒன்றுக்கு மேற்பட்ட திணைகளைக் காணக்கூடும்; அகமும் புறமும் இணைந்தும் வரக்கூடும்.
உரிப் பொருள்கூடக் கலந்து வரலாம். கருப் பொருள்களைக் கால தேச
வேறுபாடுகளுக்கேற்றவாறு திருத்தி அமைக்க வேண்டிவரலாம். இவ்வாறு அகமும் புறமும்
இணையும்போது திணைப் பெருக்கம் என்று அழைக்கலாம். எடுத்துக்காட்டு இராமாயணத்தில்
அயோத்தியும் காடும் அபிஷேகமும் யுத்தமும் வருவதை விரிவாக ஆய்வுசெய்து பொருள்
கொள்ளலாம்.
இதைப் போன்று காலக் கோட்பாட்டை விரிவாக்கலாம். பெரும்பொழுது, சிறு பொழுதுகளைப்
போல், காலகட்டமும் வரலாற்று நிகழ்ச்சிகளும் காலத்தால் சூசகமாகலாம்.
எடுத்துக்காட்டாக, சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், கல்கி, பங்கிம் சந்திரர்,
சி.வி. ராமன்பிள்ளை முதலியவர்களின் நாவல்களை எடுத்துக்கொண்டு ஆய்வுசெய்யலாம்.
தான் கூறுவது எடுத்துக்காட்டுகள் மட்டுமே, அப்படியே எடுத்துக்கொள்ள
வேண்டியதில்லையென்று தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார்: எனவே, தொல்காப்பியரின்
இலக்கிய தரிசனத்தைச் சமகாலத்திற்குத் தகுந்தவாறு மேலே விவரித்தவாறெல்லலம்
வியாக்கியானம் செய்தால் உலக இலக்கியப் படைப்புகளுக்குப் புதிய பரிமாணம் அளிக்க
முடியும்.
இப்போது மேனாட்டு மொழிகளில் ecopoetics என்று அழைக்கும் சுற்றுப்புறச்சூழல்
இலக்கியச் சிந்தாந்தம் உருவாகி வந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க
காலப் படைப்புகளுடன் பின்னிப் பிணைந்து விரிந்து பரந்துவந்த இந்தத் திணைக்
கோட்பாட்டை மாறின இன்றைய சூழ்நிலையில் ஏனைய மொழிப் படைப்புகளுக்கும் சமகால இந்திய
இலக்கியப் படைப்புகளுக்கும் பொருத்தி ஆய்வுசெய்து பார்க்கலாம். வையத்தில் வேறெந்த
மொழிகளிலும் இதைப் போன்ற ஒரு சுற்றுப்புறச் சூழல் இலக்கியச் சித்தாந்தம் பழமைக்
காலத்திலேயே வேர்விட்டு உருக்கொள்ளவில்லையாதலால் இந்தத் திராவிடத் திணைக் கோட்பாடு
இவ்விஷயத்திலும் நமக்குப் பயன்படுத்தத் தகுந்த ஓர் அரிய சித்தாந்தமாகும்.
பயன்பட்ட நூல்கள்
மலையாளம்
தொல்காப்பியர், தொல்காப்பியம் (இளையபெருமாள், சுப்ரமணியபிள்ளை), சரஸ்வதி நிவாஸ்,
திருவனந்தபுரம், 1961.
விஸ்வநாதன் நாயர் பி. (அகநானூறு, 2 பாகம்), கேரள சாகித்ய அகாதமி, திருச்சூர், 1981.
ஆங்கிலம்
Ramanujan A.K., Poems of Love and War. Tr. by A.K. Ramanujan, Delhi, Oxford UP,
1985
Sethuraman V.S. ed., Contemporary Criticism: An Anthology, Madras: Macmillan
India, 1989
Sethuraman V.S. ed., Indian Aesthetics: An introduction, Madras: Macmillan,
India 1992
Kuruntokai, Tr. M. Shanmugham Pillai. Madurai Koodal Publishers. 1976.
Nacchinarkiniyar, Tholkappiyam: Porulatikaram, Vol 2, Annamalai Nagar: Annamalai
University, 1986
பிற்குறிப்பு:
ஐயப்பப் பணிக்கர் திணைக் கோட்பாடு பற்றி எழுதிய கீழ்க்கண்ட கட்டுரைகளும்
குறிப்பிடத்தக்கன:
ஐயப்பப் பணிக்கர் கே, Hardy's Wessex and Tinai Poetics, Lit. Crit. Vol.19 No.142.
June - Dec. 1993 - pp 63 - 72
'திணை சங்கல்பம்' - இந்தியன் சாகித்ய சித்தாந்தம் பிரசக்தியும் சாத்தியதையும்,
ஸ்டேட் இன்ஸ்ட்டியூட் ஆப் லாங்வேஜஸ், திருவனந்தபுரம், 1999 பக். 93-101 (மலையாளம்)
'அகப்பொருளும் புறப்பொருளும்', மேற்படி பக். 102-111.
'திணை விவஸ்தையும் ரூபமஞ்சரியும்', மேற்படி பக். 113-121.
தகழி சிவசங்கரபிள்ளை. 'கயிறு நாவல் - பூமியும் பூ பிரக்ருதியும் தகழியுடெ கயிறில்',
பின்னிணைப்பு பக். 1028-1035, 1985.