மும்பையின் புறநகர் ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து 200 அப்பாவி
மக்கள் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் மீண்டுமொரு
தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது மகாராஷ்டிரா. இம்முறை தாக்குதலுக்குள்ளானது
மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவிலிருக்கும் மலேகான் என்னும் சுமார் 5 லட்சம்
மக்கள் வசிக்கும் ஒரு சிறிய நகரம். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மலேகான்
விசைத் தறித் தொழிலுக்குப் பெயர் பெற்ற ஒரு நகரம். மலேகானின் தர்க்கா ஒன்றில்
வழிபாட்டு நேரத்தில் வெடித்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் முப்பதுக்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டும் கிட்டத்தட்ட 200 பேர் படுகாயமுற்றும் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் மலேகானின் வேறு இரண்டு இடங்களிலும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்
நிகழ்ந்திருக்கின்றன.
குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் யார் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள்
கிடைக்கப்பெறவில்லை. எந்த அமைப்பும் இந்தத் தாக்குதல்களுக்குப்
பொறுப்பேற்றுக்கொள்ளாத நிலையில் பல்வேறு ஊகங்கள் தோன்றியிருக்கின்றன. மத்திய மாநிலப்
புலனாய்வு அமைப்புகள் மந்த கதியில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள்
எழுந்திருக்கின்றன. பலருடைய சந்தேகப் பார்வைகளும் இந்துத்துவ அமைப்புகளின் மீது
குவிந்திருக்கின்றன. சில இந்துத் தீவிரவாத அமைப்புகள் இங்கு ஏற்கனவே சிறிய அளவில்
ஓரிரு தாக்குதல்களை நடத்தியிருப்பதை வைத்துப் பார்க்கும்பொழுது இப்படியொரு சந்தேகம்
எழுவது இயல்பான ஒன்றுதான். இது நிரூபிக்கப்படும் பட்சத்தில் இந்துத் தீவிரவாத
அமைப்புகள் வெடிகுண்டு பயங்கரவாதத்தில் இறங்குவதன் தொடக்கமாகவே மலேகான் கருதப்படும்.
'பயங்கரவாதம் என்பது இருபுறமும் கூரான
கத்தி' என்ற ரீதியில் சிவசேனையின்
அதிகாரபூர்வ ஏடான சாம்னா தனது தலையங்கத்தில் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியதையும்
இணைத்துப் பார்க்க வேண்டும்.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கலவரங்களைத் தூண்டி அவற்றின் வழியாக
முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை நிகழ்த்துவதே இந்துத்துவ இயக்கங்களின் வழக்கமான
நடைமுறையாக இருந்துவந்திருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த முறை முஸ்லிம்
பெரும்பான்மைப் பகுதிகளில் இந்துத் தீவிரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள
இடங்களில் தங்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு உள்ளதாக முஸ்லிம் மக்கள்
நம்பிக்கொண்டிருப்பது ஒரு கற்பனைதான் என்பதை மலேகான் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்
நிரூபித்திருக்கின்றன.
மதவாத அமைப்புகளுக்கிடையே நிலவும் தீராத பகைமைக்குக் குடிமக்கள் தொடர்ந்து பலியாகி
வருவதைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டங்களை இயற்றுவதைக் காட்டிலும் உருப்படியாக
ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. பெரும்பான்மைச் சமூகத்தினரால்
தமது இருப்புக்கு ஆபத்து என நம்பும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினரின் ஒரு சிறு
பகுதியினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவற்றைக் கட்டுக்குள்
கொண்டுவருவது ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால் பெரும்பான்மைச் சமூகத்தின்
'பிரதிநிதிகள்'
சிலர் சிறுபான்மையினர் மீது இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தினால்
விளைவுகள் மிக அபாயகரமானவையாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மலேகானின் மக்களில்
பெரும்பாலானோர் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சைக்கிள்களில் குண்டுகள்
வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தடயங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.
தாக்குதலுக்குள்ளான வழிபாட்டுத் தலத்தின் முன்பாக வழிபாட்டுக்கு வந்தவர்களின்
நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் குண்டு
வைக்கப்பட்டிருக்கலாம் எனக் காவல் துறை சந்தேகப்படுகிறது. மும்பை போன்ற
பெருநகரங்களிலிருந்து மலேகான் போன்ற சிறு நகரங்களுக்குப் பரவிவரும் இது போன்ற
பயங்கரவாதச் செயல்கள் பொது வெளிகளில் கிடைக்கும் பாதுகாப்புணர்வின் மீது
நம்பிக்கைகொள்ள முடியாத அவலத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் சூழல் உருவாகியிருக்கிறது.
மலேகானில் இதற்கு முன்பும் மசூதிகள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. உளவுப்
பிரிவுகளும்கூட மலேகான் தாக்குதலுக்குள்ளாகலாம் என எச்சரித்திருத்திருக்கின்றன.
எனினும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆளும்
காங்கிரஸ் கட்சிக்கெதிரான பிரச்சாரத்தைக் கூர்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை
மேற்கொண்டுள்ள இந்துத்துவக் கட்சிகள் இந்தக் குண்டு வெடிப்பை அதற்குப்
பயன்படுத்திக்கொள்வதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டது முஸ்லிம்களாக இருப்பது
காரணமாக இருக்கலாம்.
நாட்டின் இறையாண்மைக்கும் சாதாரணக் குடிமக்களின் பாதுகாப்புக்கும் பெரும்
அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து
குடிமக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டியது உடனடித் தேவை. இது குறித்த
விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் தெளிவைச் சாத்தியப்படுத்தும் விவாதங்களை
உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களும் தொண்டு
நிறுவனங்களும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மதம் சார்ந்த பயங்கரவாதம் நமக்குப்
புதிதல்ல. சுதந்திரத்திற்கு முன்பு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பரஸ்பரப் புரிதலை
உருவாக்கவும் மேற்கொள்ளப்பட்ட பெரும் முயற்சிகள் அதன் பிறகு நேர்மையோடு
முன்னெடுத்துச் செல்லப்படாததே இன்றைய நெருக்கடிகளுக்கு முக்கியக் காரணம்.
இவ்விஷயத்தில் காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. மதம்
சார்ந்த பகைமைகளுக்கெதிராகத் தீரத்துடன் போராடிய காந்தியை வெறும் வழிபாட்டுச்
சின்னமாகப் பார்க்காமல் அவருடைய போராட்டங்களை அர்த்தபூர்வமாகப் புரிந்துகொண்டு
பின்பற்ற முயற்சிப்பது முக்கியம்.