Google   www kalachuvadu.com

மதுரைப் புத்தகத் திருவிழா

விரிவடையும் வாசிப்பு

ராஜசேகரன்

கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாக்கள் எழுத்தாளர்களுக்கு அளித்திருக்கும் நம்பிக்கைகளைக் காட்டிலும் முக்கியமானது வேறு எதுவும் இருக்க முடியாது. தமது படைப்புகளைப் பதிப்பிப்பதற்கும் வாசிப்பதற்குமான ஆட்களைத் தேடித் தமிழ் எழுத்தாளர்கள் அலைந்து திரிந்தது இப்போது வரலாறு. தமிழின் சிறந்த படைப்புகளாக இன்று நம்பப்படும் பல நூல்கள் சென்ற நூற்றாண்டில் ஒரு ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாகத் தகவல் இல்லை.

ஆனால் இப்பொழுது நிலைமை அடியோடு மாறிவிட்டது. பதிப்பாளர்கள் எழுத்தாளர்களைத் தேடி அலைகிறார்கள் என்று உலவும் வதந்திகளைக் கேட்டு யாரும் சிரிக்க முடியாது. ஜனவரியில் நடக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் நூல் வெளியீட்டு விழாக்கள் வெகுசன ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்திருப்பதற்கு அவ்விழாக்களில் நடைபெற்றுவரும் கலகச் செயல்பாடுகளை மட்டும் காரணமாகக் கொள்ள முடியாது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அலைமோதிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு எழுத்தாளர் சென்னைவாசிகளிடையே புத்தகங்களின் மீதான ஈடுபாடு ஒரு காய்ச்சல்போலப் பரவிக் கொண்டிருக்கிறது என்றார்.

இந்தக் 'காய்ச்சல்' தற்போது சேலம், கோயமுத்தூர், ஈரோடு, மதுரை எனப் பல நகரங்களுக்குப் பரவியிருக்கிறது எனச் சொல்லலாம். செப்டம்பர் முதல் தேதி தொடங்கிய மதுரைப் புத்தகக் கண்காட்சி அரங்கினுள் திமுதிமுவென நுழைந்த கூட்டத்தைக் கண்டபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பால் வேறுபாடோ வயது வேறுபாடோ இல்லாமல் அரங்கினுள் நுழைந்த வாசகர்களின் கூட்டத்தைப் பார்த்தபொழுது எனக்கு மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் ஞாபகம்தான் வந்தது. நெருக்கமாக அடுக்கப்பட்ட புத்தகங்களின் வரிசைகளுக்கிடையே தென்பட்ட சிறு சிறு 'ஒற்றையடிப் பாதை'களில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து புரண்டபடி புத்தகங்களைப் பார்வையிட்டார்கள். வந்தவர்களில் குறைந்தபட்சம் பத்து சதவீதத்தினராவது புத்தகங்களுடன் வெளியேறியிருப்பார்கள். மீதியுள்ளவர்களில் பத்துச் சதவீதம் பேராவது புத்தகங்களை உண்மையான அக்கறைகளுடன் புரட்டிப் பார்த்திருப்பார்கள் என நிச்சயமாகச் சொல்லலாம்.

மற்றவர்களுக்குப் புத்தகத் திருவிழாவோடு உறவுகொள்வதற்குப் பல விஷயங்கள் இருந்தன. வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த ஏ.கே. செட்டியார் அரங்கில் நாள்தோறும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பிற்பகல் இரண்டு மணி வரை குழந்தைகளுக்கான திரைப் படங்களும் அதற்குப் பிறகு பைசைக்கிள் தீவ்ஸ், சாருலதா, பூமிகா, எலிஃபன்ட், த சைக்ளிஸ்ட், த கிரேட் டிக்டேட்டர் போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களும் திரையிடப்பட்டன. ரேவதியின் உங்களில் ஒருத்தி, லீனா மணிமேகலையின் பலி பீடம் போன்ற குறும்படங்களும்கூடத் திரையிடப்பட்டன. திரைப்படச் சங்கங்களின் வழியே மாற்று சினிமாவுக்கான இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற 'யதார்த்தா' ராஜன் இத்திரையீடுகளுக்குப் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டார். கடைசி நாள் ஏ.கே. செட்டியாரின் காந்தி திரைப்படம் (அன்று செட்டியாரின் நினைவுநாள்).

சென்னைப் புத்தகத் கண்காட்சியில் தென்படும் பல எழுத்தாளர்களின் முகங்கள் மதுரையிலும் தென்பட்டன. ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், சுரேஷ்குமார இந்திரஜித், அய்யனார், கவிஞர்கள் தேவதேவன், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரை எல்லா நாட்களிலும் காண முடிந்தது. தவிர சல்மா, கனிமொழி, மாலதி மைத்ரி, தமிழச்சி, குவளைக்கண்ணன், திலகவதி, கவிதா, சாரு நிவேதிதா, சி. மோகன், சங்கர ராம சுப்பிரமணியன், முருகேச பாண்டியன் எனப் பலரும் பங்குகொண்டு இப்புத்தகத் திருவிழாவை வாசகர்களோடு உரையாடுவதற்கான வெளியாக மாற்றிக்கொண்டிருந்தார்கள். எங்கும் உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருந்தது. தமிழக பள்ளி மற்றும் நூலகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் தமிழரசி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் இப்புத்தகக் கண்காட்சியின் அரங்குகளில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்த காட்சியைக் காண முடிந்தது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச் சந்திரனும் கவிஞர் தேவேந்திர பூபதியும் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார்கள். அரங்க உரிமையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தேவைப்படும் எல்லா உதவிகளும் உடனுக்குடன் செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள் தமது நூலகங்களுக்குத் தேவையான நூல்களைப் பட்டியலிட்டு வாங்கிச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டுபோனதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.

'எங்கள் நெடுநாளைய கனவு இது' என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் சொல்கிறார் தேவேந்திர பூபதி. 'மதுரை தனது சங்கப் பெருமையை உறுதிப்படுத்திவிட்டது' என்று அவர் சொன்னது வேடிக்கையான கூற்று அல்ல என்கிறார்கள் அரங்க உரிமையாளர்கள். தீவிர இலக்கியப் புத்தகங்களின் விற்பனை, எதிர்பார்ப்பைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்தது என்கிறார்கள் சில பதிப்பாளர்கள். 'சொந்தமாக அரங்கு அமைக்காவிட்டாலும் எங்களுடைய வெளியீடுகளுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது' என்கிறார் 'அடையாளம்' சாதிக். வாசகர்கள் சுந்தர ராமசாமியின் நூல்களை மிக அதிக எண்ணிக்கையில் வாங்கினார்கள். குறிப்பாக ஒரு 'புளிய மரத்தின் கதை'யும் 'ஜே.ஜே. சில குறிப்புக'ளும். புளிய மரத்தின் கதை நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாயின. 'புதுமைப்பித்தன் சிறுகதைகள்', 'மூதாதையரைத் தேடி', 'பொற்காலங்களும் இருண்ட காலங்களும்' போன்ற காலச்சுவடு வெளியீடுகளும் அதிக அளவில் விற்றன. அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் புத்தகம் வாங்குவதற்காக 2500 ரூபாய் கடன் கொடுத்தது கனரா வங்கி. இதற்காக அரங்கினுள்ளேயே தங்களுடைய முகாம் ஒன்றினை அமைத்திருந்தார்கள். 'மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரனின் ஈடுபாடும் ஒத்துழைப்புமே இப்புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம். நாங்கள் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் நேரடியாகப் போனோம். பள்ளி, கல்லூரி முதல்வர்கள் புத்தகங்களின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்களாக இருந்தார்கள்' என்கிறார் பூபதி.

கடைசி நாளில் வாசகர்கள் தீர்மானங்களோடு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து கடைசித் தருணங்களில் அவற்றை வாங்கிச் சென்ற மதுரை வாசகர்கள் புத்தகங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாடு தற்செயலானது அல்ல எனத் தோன்றுகிறது. "இத்தகைய நிகழ்வுகள் எழுத்தாளன் எழுத்தை நம்பி வாழ முடியும் என்கிற நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது" என்றார் அய்யனார். கனவுதான். ஆனால் நிறைவேறவே முடியாத கனவு அல்ல என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது மதுரைப் புத்தகத் திருவிழா. இந்த நம்பிக்கையைச் சாத்தியப்படுத்திய தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (பாபாசி) அமைப்பாளர்கள், தேவேந்திர பூபதி, மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச் சந்திரன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

புகைப்படங்கள்: பாரதி நிலவன்

உள்ளடக்கம்

Google Ads.....


Google