Google   www kalachuvadu.com

அஞ்சலி: அய்யப்பப் பணிக்கர் (12.09.1930 - 23.8.2006)

நவீன அழகியலின் பிதாமகன்

சுகுமாரன்

கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தவர்; சமீபத்திய சில மாதங்களாக நோய் முற்றி அவ்வப்போது மருத்துவமனையைப் புகலிடமாகக் கொண்டிருந்தவர்; மரணத்துக்குச் சில நாள்களுக்கு முன்னர் உயிர்காப்புச் சாதனங்களின் துணையுடன் உடலியக்கம் தரித்திருந்தவர். இந்த மூன்று கட்டங்களிலும் டாக்டர் ஐயப்பப் பணிக்கர் தனது இயல்பான நகைச்சுவையையும் நுட்பமான கவனிப்புகளையும் பிடிவாதமாகத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். காலச்சுவடு இதழுக்காக நீல. பத்மநாபன் மொழிபெயர்த்திருந்த பணிக்கரின் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது.

தொல்காப்பியத்தை மையமாகக் கொண்ட திறனாய்வுக் கட்டுரை அது. அதில் சில இடங்கள் விளக்கமாக இல்லை எனத் தோன்றியதால் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். ஒரு நாளின் பெரும் பகுதியான நேரம் ஆக்சிஜன் கருவியின் உதவியுடன் இயங்கிக்கொண்டிருந்த அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது கட்டுரைத் தொகுப்பில் எனது சந்தேகத்துக்கு விடை இருக்கிறது என்று சுருக்கமான வார்த்தைகளில் முடித்துக்கொண்டார். அவருடைய பெயரை எப்படிக் குறிப்பிடுவது என்னும் அற்ப சந்தேகத்தையும் கேட்டேன். 'ஐயப்ப பணிக்கரா? அய்யப்ப பணிக்கரா?' இரண்டுமில்லை. 'இப்போது நான் வையாப்பா பணிக்கர்' (இயலாத பணிக்கர்) என்றார். கடைசி நாள்களில் அவரை விசாரித்த எல்லாரிடமும் இந்த நகைச்சுவைக் கீற்றை வீசியிருக்கிறார்.

சென்ற மாதம் இருபத்தி மூன்றாம் தேதி அய்யப்பப் பணிக்கர் காலமானபோது மலையாளக் கவிதையில் நவீன யுகத்தைத் தொடங்கிவைத்த ஆளுமை மறைந்தது என்ற வாசகங்களை எல்லா ஊடகங்களும் ஒப்பித்தன. இது ஓரளவு உண்மை. கவிஞர் என்பதையும் மீறிய ஓர் ஆளுமையாக அவர் இருந்தார். திறமையான ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், இதழாசிரியர், இலக்கியப் பரிந்துரையாளர் என்ற நிலைகளிலும் அய்யப்பப் பணிக்கரின் பங்களிப்புகள் முக்கியமானவை.

'குருக்ஷேத்திரம்' என்ற பணிக்கரின் கவிதையிலிருந்துதான் மலையாளக் கவிதையின் நவீனத்துவம் நோக்கிய பயணம் ஆரம்பித்தது. பணிக்கரின் சமகாலத்தியக் கவிஞர்கள் சிலர் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் குருக்ஷேத்திரத்தின் வெளியீட்டுக்குப் பின்னர்தான் மலையாளக் கவிதையில் நவீனத்துவம் ஓர் இயக்கமாக உருவம்பெற்றது. டி.எஸ். எலியட்டின் பாதிப்பில் உருவான நெடுங் கவிதை குருக்ஷேத்திரம். எனினும் அசல் மலையாளத் தன்மை கொண்டது. மகாபாரத யுத்தத்தின் பின்புலத்தில் சமகாலக் கேரள வாழ்க்கையை அல்லது இந்திய வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது. அதுவரை மலையாளக் கவிதையில் பயின்றுவந்திருந்த அழகியலுக்கு எதிரான புதிய நோக்கை அந்தக் கவிதை முன்வைத்தது.

அய்யப்பப் பணிக்கர் என்ற ஆளுமையின் சாரமே தொடர்ந்து புதுமையை நாடுவதாகத்தான் இருந்தது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதையில் இயங்கியவர் அவர். ஆனால் ஒரு கட்டத்தில் எழுதிய கவிதையைப் போல இன்னொரு கட்டத்தில் எழுதியது இருக்கக் கூடாது என்று உறுதியாகச் செயல்பட்டிருக்கிறார் என இப்போது கருதத் தோன்றுகிறது.

மரபை நிராகரிக்கும் வகையில் எழுதியவர்; ஒரு கட்டத்தில் மரபைப் புதுப்பிக்கும் எண்ணத்திலும் எழுதியுள்ளார். 'குருக்ஷேத்திரம்' எழுதிய அதே கவிஞர் பின்னர் அந்தக் கவிதையின் இறுக்கமோ இருண்மையோ இல்லாத, அந்தக் கவிதைக்கு எதிரானது என்று சொல்லத் தகுந்த 'கோத்திரயானம்' என்ற கவிதையை எழுதியிருப்பதைக் குறிப்பிடலாம். குருக்ஷேத்திரம் மனிதனின் தனிமையை விவரிக்கும் கவிதை என்றால் கோத்திரயானம் மனிதனின் ஐக்கியத்தை வியாக்கியானம் செய்யும் கவிதை.

கவிஞராக மட்டுமல்லாது கவிதையின் நடைமுறையாளர் என்ற வகையிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அய்யப்பப் பணிக்கர். 'நவீனத்துவம்' என்ற போக்கைப் பரவலாக்கியவர் அவர். அதன் உச்ச கட்டத்தில் நவீனத்துவம் காலா வதியாகிவிட்டது என்று உணர்ந்து பின்நவீனத்துவம் குறித்துப் பேசியவரும் அதற்கான விளக்கங்களை ஒருங்கமைத்தவரும் அவரே. கேரள கவித என்ற இதழைத் தொடர்ந்து நடத்தினார். அதன் வெளியீடு ஓர் இலக்கிய உற்சவமாகவே கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களில் அதன் வெளியீடு நடக்கும். எழுத்தில் தேர்ந்தவர்களும் எழுதத் தொடங்கியவர்களுமாகப் பெரும் கவிஞர் கூட்டம் அதில் பங்கேற்கும். கேரளக் கவிதை இதழை அவர் பெரும்பாலும் எடிட் செய்ய மாட்டார். புதியவர்களை ஊக்குவிப்பதற்காக அந்த நடவடிக்கை. சச்சிதானந்தன் முதல் பவித்திரன் தீக்குனி என்ற புதிய தலைமுறைக் கவிஞர்வரை அவரது கரிசனத்துக்குப் பாத்திரமாகாத மலையாளக் கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். பலரது முதல் தொகுப்புக்கும் முன்னுரையாளர் ஐயப்பப் பணிக்கர்தான்.

உலகக் கவிதையை மலையாளத்தில் விரிவாக அறிமுகப்படுத்தியவர் பணிக்கர். கோட்பாடுகளை வரித்துக்கொள்ளாத கவிஞராக இருந்தபோதும் இடதுசாரிக் கவிஞர்களை அவர் விலக்கியதில்லை. மாயாகோவ்ஸ்கி, பாப்லோ நெரூதா, நிக்கலஸ் கியென், லோர்க்கா ஆகிய கவிஞர்களை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த உற்சாகம் காட்டியவர். தானே மொழிபெயர்த்ததோடு தகுதியான கவிஞர்களைகொண்டும் பல மொழிபெயர்ப்புகள் வெளிவரக் காரணமாக இருந்தார். உலகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலருடன் அவருக்கு நெருக்கமான தொடர்பும் இருந்தது.

பணிக்கர் சிறந்த ஆசிரியர் என்று புகழப்பட்டவர். அவரது விமர்சனங்களை ஆசிரியத் தொழிலின் நீட்சியாகவே கருதுகிறேன். வெறும் பாண்டித்தியமல்ல; கலையின் உள் துடிப்புகளை ஓட்டமாகக் கொண்ட விமர்சனப் பார்வை அவருடையது. குமாரன் ஆசானைப் பற்றியும் தகழியைப் பற்றியும் அவர் உருவாக்கிய விமர்சனங்கள் ஒரே சமயத்தில் புலமையின் பொறியும் கலையின் சுடரும் மிளிர்பவை. இந்திய இலக்கியத்தில் சொல்லாடலைப் பற்றி அவர் எழுதிய நூல் இந்திய இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பு.

மேற்கத்திய விமர்சன அளவுகளை மட்டுமே பெரும்பான்மை விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டபோது ஒரு திராவிட அழகியலை உருவாக்க அய்யப்பப் பணிக்கர் முயன்றார். தொல்காப்பியத்தின் திணை, துறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய விமர்சனப் போக்கை முன்வைத்தார். திருவனந்தபுரம் நகரத்துக்கு வேலை நிமித்தம் வந்து வசிக்கத் தொடங்கிய நாள்களில் மலையாளத்தின் தந்தையான எழுத்தச்சனின் 'அத்யாத்ம ராமாயணம்', 'அத்யாத்ம மகாபாரதம்' ஆகிய நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். கவிதையின் உள்ளோட்டம் பிடிபட மறுத்தது. காரணம் எழுத்தச்சன் அந்தக் காவியங்களை கிளிப்பாட்டு' என்ற வடிவில் எழுதியிருக்கிறார். மலையாளத்தின் இன்று நடை முறையிலுள்ள சமஸ்கிருத அடிப்படை கொண்ட இலக்கணத்தின் போதாமை அதைப் புரிந்துகொள்வதைக் கடினமாக்கியது. கிளிப்பாட்டு என்பது தமிழின் கவிதை மரபில் வேர் கொண்டிருப்பது. எனவே தமிழாய்ந்த சிலரை அணுகினேன். அவர்கள் சொன்னது, 'மலையாளத்தில் கவிதை எழுதுகிற ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவருக்குத்தான் திணை, துறை, இந்த விஷயங்கள் அத்துபடி. அவர் பெயர் டாக்டர் ஐயப்பப் பணிக்கர்.'

உரையாடலிலும் உரை நிகழ்த்துவதிலும் பணிக்கர் சமர்த்தர். மெல்லிய நகைச்சுவையும் குறும்பு இழையோடும் அங்கதமும் அவர் பேச்சில் சரளமாகப் பின்னியிருக்கும். அந்த அங்கத இயல்பு அவரது கார்ட்டூன் கவிதைகளில் பளிச்சிடுவதைக் காணலாம். கவிதை பற்றி சீரிய அக்கறை இல்லாத சாதாரணர்களின் நாவில் அவரது நெருக்கடி நிலை விமர்சனக் கவிதையொன்றின் வரி புரள்வதைப் பல சந்தர்ப்பங்களில் காண முடிந்திருக்கிறது.

அரசியல் மேடைகளிலும் திரைப்படங்களிலும் கூட அந்த வரி இடம் பெற்றது.

'வெறும் ஒரு திருடனான என்னை
கள்ளனென்று அழைத்தீர்களே - நீங்கள்
கள்ளனென்று அழைத்தீர்களே'

என்னும் வரியை உச்சரிக்காத மலையாளி இல்லை என்றே தோன்றுகிறது.

அய்யப்பப் பணிக்கர் சுதந்திரமான இலக்கியவாதி. சார்புகள் எதுவும் இல்லாதவர். அதனாலேயே அவருக்குப் பெரும் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவரும் அதில் விருப்பமில்லாதவர். மாநில சாகித்திய அக்காதெமி, மத்திய சாகித்திய அக்காதெமி முதல் பல அமைப்புகளின் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. அவற்றிலெல்லாம் அவர் மயங்கியதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன் 'வயலார் விருது'க்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தன்னை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மரணத்திடம் அவரால் அப்படிக் கேட்டுக்கொள்ள முடியாமல் போயிற்று.

உள்ளடக்கம்

Google Ads.....


Google