Google   www kalachuvadu.com

விவாதம்

நூலகங்களால் தமிழுக்குப் பயன் உண்டா?

தி. அ. ஸ்ரீனிவாசன்

மதவாதிகளும் நடுநிலையாளர்களும்

காலச்சுவடு ஜூன் 2006 இதழில் தமிழகச் சட்டமன்றத்தில் ரவிக்குமார் ஆற்றிய முதல் உரை வெளியாகியிருந்தது. உரையின் முத்தாய்ப்பாக, நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகப் படிகளின் எண்ணிக்கையை 750இலிருந்து 1500 ஆக உயர்த்தும்படி அவர் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரும் இக் கோரிக்கையை ஏற்று 1000 படிகளாக உயர்த்தி அறிவித்ததாக முன் குறிப்பும் இதழில் வெளியாகியுள்ளது.

'தமிழ் எழுத்துலகம் மட்டுமின்றி, தமிழ் மொழிக்கும் வாழ்வளிக்கும்' ஒரு முயற்சியாக ரவிக்குமாரால் சுட்டப்படும் இதனால் உண்மையில் பயனடையப் போகிறவர்கள் யார்? எழுத்தாளர்களா, வாசகர்களா இல்லை நூலக அமைப்பா? தற்போதுள்ள தமிழ்ப் பதிப்புச் சூழலையும் பொது நூலகங்களில் வந்து குவியும் புத்தகங்களையும் வைத்துப் பார்த்தால், உண்மையில் பயனடையப்போகிறவர்கள் பண்பாட்டு அக்கறையோ பதிப்பு நேர்மையோ எழுத்தாளர்மீது வணிகம் அறிவுறுத்தும் குறைந்தபட்ச மதிப்போ இல்லாத, புத்தகங்களை நுகர்வுப் பண்டங்களைப் போல வெளியிட்டுத் தள்ளிக்கொண்டிருக்கும் புத்தக வணிகர்கள்தான். புல்லுக்குப் பாய்ச்சியது நெல்லுக்குப் புசிவதைப் போல நல்ல நூல்களை வெளியிடும் நேர்மையான பதிப்பாளர்கள் ஓரளவு பயனடையலாம். சில பதிப்பாளர்களின் பதிப்பு நேர்மை பற்றிக் காலச்சுவடு இதழ்களிலேயே பெருமாள்முருகனால் எழுதப்பட்டுள்ளது. நூலகங்களில் கும்பாரமாகப் புத்தகங்கள் குவித்துவைக்கப்படுவதன் மூலம் தமிழ் மொழி வாழுமா?

பொது நூலகங்களின் இடநெருக்கடி காரணமாகவோ நூலகப் பொறுப்பாளர்களின் ஈடுபாட்டுக் குறைவினாலோ பிழையான அரசு விதிகளின் காரணமாகவோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நல்ல நூல்கள் கழித்துக் கட்டப்பட்டுப் பழைய புத்தகக் கடைகளுக்கும் காகிதக் கூழ்த் தொழிற்சாலைகளுக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் சென்றுகொண்டிருக்கின்றன. உ.வே.சா., வையாபுரிப் பிள்ளை, மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற தமிழறிஞர்களின் பல நூல்கள் நாள்தோறும் வந்து குவியும் கடைச் சரக்குகளுக்கு வழிவிட்டு உயிர்விடும் நிலை உருவாகிவருகிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் நூல்களின் அவசரப் பதிப்புகள், வாழ்வும் வழக்கும் இழந்து கேட்பாரற்றுப்போன பழைய நூல்களின் திருட்டுப் பதிப்புகள், போலித் தமிழாய்வு நூல்கள், பொய்யான மருத்துவ நூல்கள், ஆங்கில நூல்களின் அகப்பைப் படையல்கள் - இவையே இன்று நூலகங்களின் அலமாரிகளை நிறைத்துவருகின்றன. இதே நிலை தொடருமானால், ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே. ரங்கராஜு போன்றோரின் சாகாவரம் பெற்ற படைப்புகளுக்காகப் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் மற்றும் பல நல்ல படைப்பாளிகளும் வழிவிட நேரிடலாம்; 1950களில் வெளியான நல்ல நூல்களின் மூலப் பிரதியைப் பார்ப்பதற்குக்கூட விமானம் ஏறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதை எப்படித் தடுக்கப்போகிறோம்? நூலகங்கள் வாசிப்புச்சாலை மட்டுமல்ல, ஆவணக் காப்பகங்களும்தான் என்ற உணர்வை எப்படி உருவாக்கப் போகிறோம்?

சூப்பர் மார்கெட்டுகளைப் போலப் பதிப்பகங்கள் பெருகிவிட்டிருக்கும் இன்றையத் தமிழ்ச் சூழலில், நூலகங்களுக்கான புத்தகங்கள் வாங்குவதில் 'தரக்கட்டுப்பாடு' சாத்தியமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம், மாவட்ட மைய நூலகங்களிலிருந்தும் கிராம நூலகங்களிலிருந்தும் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் கழித்துக் கட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு நூலக அமைப்போடு பல் கலைக்கழகங்களும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.

நூலகத்தையும் அரசு எந்திரத்தின் இன்னும் ஒரு துறையாகக் கருதி, புத்தகங்களைப் பராமரிப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் மெத்தனமாகச் செயல்படும் நூலகப் பணியாளர்களின் அலட்சியப் போக்கும் மாற வேண்டும். அரசு நூலகங்களின் அமைப்பிலும் செயல்பாட்டிலும் மாற்றங்கள் நிகழாதவரை நூலகங்களால் தமிழ் மொழி பயனடையப் போவதில்லை.

உள்ளடக்கம்

Google Ads.....


Google