|
விவாதம்
மதவாதிகளும்
நடுநிலையாளர்களும்
கி. இரா. சங்கரன்
காலச்சுவடு இதழ் 79இல் கண்ணன் எழுதிய கோணங்கள் கட்டுரையின் மையக்கரு மதச்சார்பின்மை
பற்றியது. கண்ணன் அவர்கள் அரசியல்வாதிகளையும் அறிஞர்களாக அறியப்படுபவர்களையும்
செகுலரிஸ்ட்கள் என நம்பிக்கொண்டு சில கேள்விகள் வைத்துள்ளார். அவற்றுள்
நிறப்பிரிகைக் குழுவின் அ. மார்க்ஸ் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அடிப்படையில் நான் சிலவற்றைச் சொல்ல விழைகிறேன். நி.பி. குழுவிற்கும் காலச்சுவடு
குடும்பத்திற்கும் பெரியவர் சுந்தர ராமசாமி காலம் முதலே தொடர்ந்து நிகழ்வது கௌரவம்
சார்ந்த ஒருவிதப் பங்காளிச் சண்டையே தவிர, தத்துவம் சார்ந்த கருத்து நிலையின்
முன்னெடுப்பு அன்று. முன்பு மலம் துடைக்கப் பயன்படும் என்ற இந்தியா டுடேயினை
அடையாளம் இட்ட நிறப்பிரிகைக் குழுவின் ஒருவர் அவ்விதழில் முகம்
துடைத்துக்கொண்டுள்ளார் என்பது நாம் அறிந்தது. மற்றொரு முறை, தஞ்சையில் தி.ந.
இராமச்சந்திரன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தபோது மளமளவென்று
அழைப்பில்லாமல் உள்ளே நுழைந்த மார்க்ஸ் அவர்கள் நிறப்பிரிகை சார்பில் காலச்சுவடு
மீது ஒரு கண்டன அறிக்கையைக் கைக்கு எட்டியவர்களிடம் கொடுத்துச் சென்றார்.
நிறப்பிரிகைக் குழுவின் மற்றொருவரான பொ. வேல்சாமி பின்னாட்களில் காலச்சுவடின்
ஆஸ்தான அறிஞராகிப்போனார். மார்க்ஸ் அவ்வளவு சீக்கிரம் காலச்சுவடு வலையத்திற்குள்
வந்துவிடமாட்டார் என்றாலும் எதிர்காலத்தில் ஏதும் நடக்கலாம். செகுலரிச வேடம்
கட்டிக் கண்ணன் இந்துத்துவத்தைக் காக்க முயல்வதும் பெரியாரிச வேடம் கட்டி மார்க்ஸ்
சிறுபான்மையிரைக் காக்க முயல்வதும் புரியாததல்ல. நீங்கள் ஒருவரை ஒருவர்
சாடிக்கொள்வதில் மக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதற்கான குறிப்பு ஞானசம்பந்தனுடையது மட்டுமே.
அக்காலப் பிற இலக்கியங்களில் அது பற்றிய குறிப்பு இல்லை. கல்வெட்டுக் குறிப்புகளும்
இல. அந்நிகழ்ச்சி நடந்திருக்குமானால் பல்லவர் காலத்தில் வந்த சீன யாத்திரிகரின்
குறிப்பில் அது இடம்பெறாமல் போயிருக்காது. பல நூற்றாண்டுகள் ஓடின பின்பு ஆவுடையார்
கோயிலில் உள்ள நாயக்கர் கால ஓவியங்களில் தான் கழுவேற்றும் காட்சி
சித்தரிக்கப்பட்டுள்ளது. உற்று நோக்கினால் அவர்கள் சமணர்தாமா என்ற ஐயம் உண்டாகும்.
தமிழகக் கடற்கரையோர நகரங்களில் பௌத்தம் தழைக்க, உள்நிலை நகரங்களில் மட்டுமே சமணம்
தழைத்தது. எனவே ஆவுடையார் கோயிலின் ஓவியத்தை மறுபார்வை செய்ய வேண்டியுள்ளது.
இச்சூழலில் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என சம்பந்தன் உருவாக்கியிருக்கலாம். சமணரால்
சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட அப்பர் அல்லவா இதனை மேற்கொண்டிருக்க வேண்டும்?
அதுவும் தொண்டை மண்டலத்தில் அல்லவா நடந்திருக்க வேண்டும்? சமணர்கள்
கழுவேற்றப்பட்டது தவறென்றால் அப்பர் மட்டும் காளவாயில் இடப்படலாமா? இவை
மதவாதிகளிடையேயான சண்டை. இதில் பொதுமக்களுக்கு என்ன வந்தது? சமண பௌத்த வருகையினால்
உள்ளூர்க் கடவுள்கள் மறக்கடிக்கப்பட்டனர் என்பது வேறு கதை. பெரும்பான்மை
மதத்தினராலும் நடுநிலையாளர்களுக்குச் சங்கடம் உண்டு. சிறுபான்மை மதத்தினராலும்
உண்டு.
பெரியார் நிர்வாணச் சங்கத்தில் சேர்ந்தது ஒரு கலகந்தானே தவிர அதனை ஓர் இயக்கமாக
இந்தியாவில் உருவாக்கினாரில்லை. சமண நிர்வாணத்தை மட்டுமல்ல, சைவ நிர்வாணத்தையும்
தமிழர்கள் வெறுத்துள்ளனர் என்பதை அப்பர் பாடல்களில் காணலாம். இவ்வாறு இருக்கத்
தமிழர்கள் சமணத் திகம்பரரை மட்டும் விரட்டினர் எனக் கொள்ளலாமா?
கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் துயில் எழுந்து வீரத் தமிழர்கள் ஆட்டம் போடத் தொடங்குவது
வழக்கந்தான். பிராமணப் பத்திரிகைகள் தூற்றத் தொடங்குவதும் உண்மைதான்.
அண்ணாவின் கம்பரசம், கடவுள் அவதாரங்கள், புனிதர்கள் என்னும் மாயையைத் தகர்க்க
உதவியது. அந்நூலை உளவியல், பாலியல், பின்னணியில் பார்க்க வேண்டும். எளிய மக்களுக்கு
அது ஆபாசம்; மேட்டிமையாளர்களுக்கு ரச லீலா/ராச லீலா.
இந்துப் புராணங்கள் திராவிட ராவணர்களை மட்டும் அரக்கர்களாகக் காட்டவில்லை.
திராவிடர் வளர்த்த விலங்குகளைக்கூட அரக்கர்களாகவே சித்தரித்துள்ளன. திராவிடரின்
செல்லப் பிராணியான பெண் எருமையினை மஹிஷியாகக் காட்டி ஆரியப் பசுவினைக் காமதேனுவாக
உயர்த்தியது.
பராசக்தி திரைப்படத்தினை ராஜாஜி தடைசெய்யாமல் போனது அவருடைய செகுலரிசத்தன்மையால்
அன்று. கலைஞர் மக்கள் கடவுளான அம்பாளைத்தான் கிண்டல் செய்திருப்பார். அக்கோயிலின்
குருக்களையோ சாஸ்திரிகளையோ அன்று. அது மக்கள் கடவுளை எதிர்த்த பிரச்சாரம்தானே தவிர
மகா கடவுளர்களை அன்று. அம்பாள் என்றைக்குப் பேசினாள் என்று தமிழ்க் கடவுளைத்தான்
கலைஞர் கிண்டலடித்தார். இதனை ராஜாஜி ஏன் தடை செய்யப்போகிறார்? இதற்காகத்தானே
கலைஞரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.
பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டது சரியன்று. அச்சிலைகள் உடைக்கப்பட்ட காலத்தில்
பிள்ளையார் ஒரு விளிம்பு நிலைக் கடவுளாகவே கருதப்பட்டுவந்தார். வைதீகக் கடவுளாகவோ
அரசக் கடவுளாகவோ பிள்ளையாரைப் பொது மக்களுக்குத் தெரியாது. பிள்ளையார் என்றாலே
Minor Deity என்றுதான் பொருள். பிள்ளையார்ப்பட்டி தவிர எல்லா இடைக்காலக்
கோவில்களிலும் இளைய கடவுள் என்றே இவர் கருதப்பட்டுவந்தார். பெரியாரிஸ்டுகள்
கடவுளர்களின் இருப்பினைப் பண்பாட்டு மானிடவியல் பின்னணியில் பார்க்காதது குறையே;
அதிரடிப் போக்கு மடமையைக் கொஞ்சம் மாற்றியதும் உண்மைதான்.
உள்ளடக்கம் |