|
போலன்ஸ்கியின் 'பியானோ
கலைஞன்'
வாழ்வினுள் அத்துமீறும்
வன்முறை
மலர்மன்னன்
யுத்தம், அது எந்தக் காரணத்திற்காகவானாலும் சரி, பிரச்சினையோடு
கொஞ்சங்கூடச் சம்பந்தப்படாதவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து,
அவர்களின் வாழ்க்கை இயக்கத்தை நொடிப் பொழுதில் உருக்குலைத்துவிடுகிறது.
போலந்தின் தலைநகரான வார்ஸாவில் அரசாங்க வானொலி நிலையத்தின் இசைக் கலைஞர்களுள்
ஒருவரான பியானோ வாத்தியக்காரர் வ்ளாடிஸ்லாவ் ஸ்பில்மன் (Wladyslaw Szpilman), ஷோபின்
(Chopin) இசையமைத்தபடி நாக்டரன் டிமைனர் (Nocturne in D Minor) இசைக்கோவையை
வாசித்துக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மீது ஒரு குண்டு விழுந்து, ஸ்பில்மன்
அமர்ந்திருந்த அறையின் மேற்கூரையிலிருந்தே காரையும் செங்கற் சிதறல்களுமாகப்
பொழிகின்றன. ஸ்பில்மனுக்கு அது இடைஞ்சலாக இருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல்
தொடர்ந்து தமது முயற்சியில் ஈடுபடுகிறபோது மீண்டும் அறைக்குள் இடிபாடுகள் விழுவது
அதிகரித்து பியானோ வாசிப்பு நிரந்தரமாகத் தடைபட்டுப்போகிறது.
ரோமன் போலன்ஸ்கியின் (Roman Polanski) பிரசித்திபெற்ற போலிஷ் திரைப்படம் தி
பியானிஸ்ட் (The Pianist) இப்படித்தான் தொடங்குகிறது. யுத்தம் ஒரு கலைஞனின்
அந்தரங்கமான தருணத்தில் எவ்வித நியாயமோ அர்த்தமோ பிரக்ஞையோ இல்லாமல் வலிந்து
நுழைந்து உருக்குலைத்துவிடுகிறது.
யுத்தம் நிகழ்த்தும் பொருட்சேதங்களும் உயிர்ச்சேதங்களும் பின்விளைவுகளும் தெரிந்த
விஷயங்கள்தாம். அவை நம்மை வந்தடைவது வெறும் புள்ளிவிவரங்களாக. ஒவ்வொரு சேதத்தையும்
பின் விளைவையும் கூறு கூறாகப் பகுத்து ஒரு நுண்ணோக்கியால் காண முடிந்தால் மட்டுமே
ஒவ்வொரு சேதாரத்தின் பிரமாண்டமும் முகத்தில் வந்து அறையும். அப்படிப் பார்க்க
முற்படுகிற ஒரு முயற்சிதான் போலன்ஸ்கியின் பியானோ கலைஞன்.
போலன்ஸ்கி புதிதாக இயக்கிய சார்லஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் திரைக்குவந்துள்ள
இந்தச் சந்தர்ப்பத்தில் அவரது முந்தைய படமான, 2002இல் வெளிவந்த தி பியானிஸ்ட் பற்றி
ஞாபகம் வருவது இயல்பு. மேலும் அதற்கு இசைவாக அண்மையில் போலிஷ் வர்த்தக ஆணையமும்
இன்டர் நேஷனல் சினி அப்ரிசியேஷன் ஃபோரம் (International Cine Appreciation Forum)
என்கிற திரைப்படச் சங்கமும் சென்னை யில் ஏற்பாடு செய்த போலிஷ் திரைப்பட
வாரத்தின்போது மீண்டும் ஒருமுறை 'பியானிஸ்'டை அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியது. (ஆலிவர்
ட்விஸ்ட் செப்டம்பர் 2005இல் திரையிடப்பட்டது.)
19ஆம் நூற்றாண்டு லண்டன் மாநகரின் சூழலில் அனாதைச் சிறுவர்கள் தொழில் முறைக்
குற்றவாளிகளின் உலகத்தால் உள்ளிழுத்துக்கொள்ளப்படும் சமூக நிலவரத்தை விவரிக்கிற
திரைப்படம் ஆலிவர் ட்விஸ்ட் என்றால், தி பியானிஸ்ட் 1939 செப்டம்பரில் தொடங்கிய
இரண்டாம் உலகப் போரின்போது ஒரு கலைஞனுக்கு ஏற்படுகிற பாதிப்பையும் அதிலிருந்து அவன்
அடையும் மீட்சியையும் காட்சிப்படுத்தும் தொகுப்பு எனலாம். முன்னது அப்போதைய சமூக
நிலவரத்தை நிலைக்களனாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். பின்னதோ நிஜமாகவே வாழ்ந்து
யுத்தத்தின் விளைவுகளை எதிர்கொண்ட ஒரு யூதப் பியானோ கலைஞனின் உண்மைக்கதை.
எல்லா உயிர்களிடத்தும் வெகு இயல்பாக அமைந்துள்ள உயிர்த்திருத்தலுக்கான பதற்றத்துடன்
கூடிய முனைப்பு, உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டம், நல்லது நடக்கும் என்ற
நம்பிக்கை, மனிதனுக்குள் இயற்கையாகக் குடிகொண்டிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடு
ஆகியவற்றை உணர்த்துவதாக ஒரு மேலோட்டமான பார்வையில் தி பியானிஸ்ட் புலப்பட்டாலும்
அதன் உள்ளார்ந்த செய்தி வேறு. தனி மனிதனின் சொந்த வாழ்வில் அத்துமீறிப்
பிரவேசிக்கும் ஒரு வன்முறை நிகழ்வு யுத்தம் என்கிற பெயரில் அங்கீகாரம் பெறுவதை
இப்படம் உணர்த்துகிறது.
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் போலந்தில் மட்டும் 35 லட்சம் யூதர்கள்
இருந்தனர். அப்போது தலைநகர் வார்ஸாவில் மட்டுமே மூன்று லட்சத்து அறுபதாயிரம்
யூதர்கள் வசித்துவந்தனர். போர் மூண்ட சமயம் யூதனான பியானோ கலைஞன் ஸ்பில்மன்
இருபத்தெட்டு வயது இளைஞன். அதற்குள் அவனது இசைப் புலமை அங்கீகாரம் பெற்று அரசின்
வானொலி நிலையத்தில் அவனுக்குரிய பணியைப் பெற்றுத் தந்திருந்தது.
போரைத் தொடங்கிய ஹிட்லரின் முதல் இலக்கு போலந்து. சரமாரியான தாக்குதல்களால் தலைநகர்
வார்ஸா விழுந்ததும் அங்கு வசித்த போலிஷ் மக்கள் அனைவருமே பாதிப்புக்கள்ளானார்கள்
என்றாலும் திட்டமிட்ட கொடுமைகளுக்கு ஆளானது யூதர்கள்தாம். 'யூதர்' என
இனங்காட்டுவதற்கான அடையாளப்பட்டியை ஒவ்வொரு யூதரும் தம் புஜத்தில் கட்டிக்கொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டதோடு யூதர்களனைவரும் ஆட்டு மந்தையைப் போலத் திரட்டப்பட்டு
பட்டியில் அடைக்கப்பட்டும் பின்னர் நிச்சயமான சாவை நோக்கிச் சரக்கு ரயில்
பெட்டிகளில் ஏற்றி அனுப்பப்பட்டும் ஓர் அநீதி பகிரங்கமாக நிகழ்ந்தது. ஸ்பில்மனின்
குடும்பத்தாரும் இவ்வாறு அனுப்பப்பட்டபோது அவன் மட்டும் தனிமைப்பட்டுத் தப்பிவிட
முடிந்தது. ஜெர்மன் ராணுவத்திடம் மீண்டும் சிக்கிவிடாமலிருக்க ஸ்பில்மன் இடிந்துபோன
கட்டிடங்களுக்கிடையே பதுங்கிப் பதுங்கி ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டியதாயிற்று.
விலங்கினங்களைப் போல வயிற்றுக்கு இரை தேடுவதும் இரையாகாமல் தப்பிப்பதுமே வாழ்க்கை
என்றாயிற்று.
இவ்வாறாகப் பசியும் பட்டினியுமாய் ஒவ்வொரு நாளும் கழிகையில் பாழடைந்த ஒரு வீட்டின்
அறையில் தூசு மண்டிய பியானோ நிராதரவாகக் கிடப்பது ஸ்பில்மேனின் கவனத்தை ஈர்த்தது.
பியானோ தூசு படிந்திருந்தாலும் சேதமுறவில்லை. அடக்கமாட்டாத ஆர்வத்துடன் ஸ்பில்மன்
அதன் கட்டைகளை அமுக்கியதும் எழுந்த ஓசை, அவன் இருப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
பாழடைந்துபோன நகரைக் கண்காணிக்கும் பணியில் இருந்த ஜெர்மன் ராணுவ அதிகாரிகளில்
ஒருவனான வில்ஸம் ஹோஸன்ஃபெல்ட் (Wilm Hosenfeld) பதுங்கியிருக்கும் ஸ்பில்மனைக்
கண்டுகொண்டதோடு அவன் ஒரு பியானோ இசைக் கலைஞன் என்பதையும் தெரிந்துகொண்டான்.
ஸ்பில்மன் பியானோவை வாசிக்கக் கேட்டு அந்த இசையை அனுபவித்தான். எவர் கண்ணிலும்
படாதவாறு ஸ்பில்மனை ஒளித்து வைத்து, வேளை தவறாமல் அவனுக்கு உணவளித்தும் பராமரித்தான்.
போலன்ஸ்கியின் தி பியானிஸ்ட் இத்துடன் முற்றுப் பெற்றுவிட்டபோதிலும், பியானோ கலைஞன்
ஸ்பில்மன், அவனை ஒளித்துவைத்துப் பராமரித்த ஜெர்மன் ராணுவ அதிகாரி ஹோஸன்ஃபெல்ட்
ஆகியோரின் உண்மைக் கதை மேலும் தொடர்ந்தது.
போர் முடிவுக்கு வந்து வார்ஸா வானொலி நிலையத்தில் மீண்டும் பணியை மேற்கொண்ட
ஸ்பில்மன், யுத்தத்தின்மீது வன்மம் தீர்த்துக்கொள்வது போன்ற ஆவேசத்துடன் பாதியில்
தடைபட்டுப்போன நாக்டர்ன் இசைக்கோவையை முழுவதுமாக வாசித்து முடிப்பதில் முனைந்தான்.
இயல்பாகவே மனித நேயம் கொண்ட ஜெர்மன் ராணுவ அதிகாரி ஹோஸன்ஃபெல்ட் ஸ்பில்மனை
மட்டுமின்றி வேறுபலரையும் நாஜிப் படைகளின் பிடியிலிருந்து காப்பாற்றினான். ஆனால்
போரில் ஜெர்மனி தோல்வியடைந்ததையொட்டிச் சோவியத் ராணுவத்திடம் சிக்கிப் போர்க்
கைதிகள் முகாமில் சித்திரவதை செய்யப்பட்டான். ராணுவ நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை
விதித்தது. போரின்போது தான் மனித நேயத்துடன் நடந்துகொண்டதாக வாதிட்ட ஹோயன்ஃபெல்ட்,
அதற்குச் சாட்சியாகத் தன்னால் காப்பாற்றப்பட்ட சிலரை வாக்குமூலம் அளிக்க வேண்டினான்.
அவர்களும் ஹோஸன்ஃபெல்ருக்கச் சாதகமாகச் சாட்சியமளித்துங்கூட அவனுக்கு விடுதலை
மறுக்கப்பட்டது. மரணதண்டனை இருபத்தைந்து ஆண்டு கடின உழைப்புச் சிறையாகக்
குறைக்கப்பட்டது. 1952இல் கடின உழைப்பு முகாமில் சோவியத் யூனியனின் கைதியாகவே உயிர்
துறந்தான் ஹோஸன்ஃபெல்ட்.
ஸ்பில்மன் 1946இல் தன் போர்க்கால நினைவுகளை ஒரு நகரத்தின் மரணம் என்ற தலைப்பில் ஒரு
நூலாக வெளியிட முற்பட்டபோது, அதற்குள் சோவியத் யூனியனின் துணைக்கோளாக
மாறிவிட்டிருந்த போலந்தின் பொதுவுடமை அரசாங்கம் அந்த நூலுக்குத் தடை விதித்தது (ஒரு
நாஜி ராணுவ அதிகாரி மனித நேயத்துடன் நடந்துகொண்டதைப் பதிவு செய்தமைக்காக). பின்னர்
அந்த நூல் தி பியானிஸ்ட் என்ற பெயரில் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தபோது
அதன் அடிப்படையில் திரைப்படத்தை எடுக்கும் தூண்டுதல் போலன்ஸ்கிக்கு ஏற்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது ஆறு வயதுச் சிறுவனாக அதன் பாதிப்புக்கு போலன்ஸ்கி உள்ளாக
நேர்ந்தபோதிலும், அந்த வயதில் போரின் முழுத் தீவிரத்தையும் உணர்ந்திருக்க முடியாது.
வளர்ந்து, நடிகனாகவும் இயக்குநனராகவும் முறையான பயிற்சியும் அங்கீகாரமும் பெற்ற
போலன்ஸ்கி பியானோ கலைஞர் ஸ்பீல்மனை நேரில் சந்தித்துப் பேசியும் தகவல்களைத்
திரட்டியும் தி பியானிஸ்ட் திரைப்படத்தை எடுத்து முடித்தார். ஸ்பில்மன் 2000ஆம்
ஆண்டு தமது 88வது வயதில் மரணமடைந்தார். அவரது உண்மைக் கதையைச் சொல்லும்
போலன்ஸ்கியின் தி பியானிஸ்ட் 2002இல் திரையிடப்பட்டு, மூன்று அகாடமி விருதுகளை
மட்டுமின்றி கான் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேசத் திரையிடல்களின்போதும்
பல விருதுகளைப் பெறும் கவுரவத்தை அடைந்தது.
போலன்ஸ்கியின் தி பியானிஸ்ட் திரைப்படத்தில் பியானோ கலைஞர் ஸ்பில்மன் பாத்திரத்தை
ஏற்றிருப்பவர் ஆட்ரியன் ப்ரோடி (Adrien Brody). பதினான்கு வயதிலேயே நாடக மேடையேறி,
அதன்பின் நாடகப் பள்ளியிலும் பயிற்சி பெற்றுத் தேர்ந்த நடிகர். ஸ்பில்மனைக்
காப்பாற்றிய ஜெர்மன் ராணுவ அதிகாரி ஹோஸன்ஃபெல்ட் பாத்திரத்தை ஏற்றவர் தாமஸ்
க்ரெட்ச்மான் (Thomas Kretschmann). அப்போதைய கிழக்கு ஜெர்மனியில் பிறந்து, தனது 18
வயதில் அப்போதைய மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிவந்து சுதந்திரக் காற்றை சுவாசித்த
இவரும் நடிப்பில் முறையான தேர்ச்சி பெற்றவர்தாம். பாத்திரமுணர்ந்தும் வரலாற்றுப்
பின்னணி தெரிந்தும் இவ்விருவரும் ஓர் உண்மைக் கதையைத் திரையில் மீண்டும் நிகழ்த்திக்
காட்டுகின்றனர். போலன்ஸ்கியின் கலைத்திறனால் இந்த உண்மைக் கதை ஒரு திரைச்சித்திரமாக
உருவாகியிருப்பதால் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் ஒவ்வொரு செய்தியைத் தெரிவிப்பதாக
அது தோற்றங்கொள்கிறது. இதன் காரணமாகவே ரோமன் போலன்ஸ்கியின் தி பியானிஸ்ட் உலக
சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
உள்ளடக்கம்
 |