Google   www kalachuvadu.com

சிறுகதை

புளியம் பூ

தொடர்ச்சி...

கருகருவென்று அடர்த்தியாக இருந்த அப்பாவின் தலைமுடி செம்மண் குளத்து நீர் பட்டுச் செம்பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கியது 'கன்னு வச்சு அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. கன்னிமார் சாமிக்கு நேந்துகிட்ட மாதிரி, சொந்தக்காரங்க நாலு பேரைக் கூட்டிட்டு, சேவல் அடிச்சுப் பொங்க வைச்சிரலாமா?' என்று அப்பா, அம்மாவிடம் சொன்னதைக் கேட்டவுடனே நான் குஷியாகிவிட்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை அப்பா எங்களைப் பள்ளிக் கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு வரச் சொன்னார். எனக்கு லீவு லெட்டர் தப்பும் தவறுமாகத்தான் எழுதவரும். ஒரு தப்பு இருந்தாலும் வாத்தியார் முழங்கால் போட வைத்துவிடுவார். அக்காவிடம் போய் எழுதச் சொன்னேன். அவள் 'வேல இருக்கு போடீ' என்று விரட்டிவிட்டாள். அண்ணனிடம் போனால் அவன் 'நீ பாட்டியோட சுருக்குப்பையில சேர்த்து வச்சிருக்கிற காசையெல்லாம் கொடுத்தாதான் எழுதித் தருவேன்' என்று சொல்லிவிட்டான். அவனுக்கு எப்பொழுதும் காசில்தான் குறி. மந்தையம்மன் கோயில் திருவிழாவில் கல்வளையல், பாசி பலூன், ராட்டினம் போன்ற சின்னச் சின்ன சந்தோசங்களுக்காகச் சேர்த்துவைத்ததை வேறு வழியில்லாமல் அவனிடம் கொடுத்தேன்.

காடு, தோப்பாகி இருந்தது. அடுத்த வாரம் புளியமரம் பூ எடுத்துக் காய்த்துவிடும் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். புளிய மரத்தின் ஊடே பருத்திச் செடி வைத்திருந்தார்கள். இனிப்பாக இருக்கும் பருத்திப் பிஞ்சைப் பிடுங்கப்போய் பருத்திக் கிளை ஒடிந்து தொங்கியது. யாருக்கும் தெரியாமல் அந்தக் கிளையைப் பக்கத்து கிளைமேல் படரவிட்டு நழுவினேன். கொஞ்சம் புளியங்கொழுந்தைக் கிள்ளி முகர்ந்து பார்த்தேன். புளிப்பு வாசனை வந்தது.

பொங்கல் வைத்து முடித்த பின், உச்சி மலைமேல் இருக்கும் கன்னிமார் சாமிக்குப் படையல் வைக்க அப்பா புறப்பட்டார். அவரோடு சேர்ந்து நானும் புறப்பட்டேன். மலைக்குப் போகும் வழியில், நொண்டி மாயாண்டித் தாத்தாவும் எங்களோடு சேர்ந்துகொண்டார். ஒரு பெரிய மலைப் பாறையில் நின்றுகொண்டு தூரத்தில் கைகாட்டி, 'என்ன தெரியுது?' என்றார் தாத்தா. நானும் 'காடுதான் தெரியுது' என்றேன். 'நல்லாப் பாரு' என்று தலையில் ஒரு கொட்டு வைத்தார். வானத்தில் தூரமாய்ப் பறக்கும் பறவை கரும் புள்ளியாய்த் தெரிவதைப் போல் எங்கள் ஊர் தெரிந்தது. ஆனால் அல்லா கோயில் மட்டும் அடையாளம் காணும் அளவில் தெளிவாகத் தெரிந்தது. அல்லா கோயிலை எவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தாலும்கூடத் தெரியும்போல. என்று நினைத்துக்கொண்டேன். அதைப் போல் அல்லா கோயிலில் நின்றுகொண்டு மலையில் இருக்கும் கன்னிமார் சாமி கோயிலையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

எனக்கு எப்போதும் கன்னிமார் சாமிமேல் பொறாமையும் விருப்பமும் ஒருசேர இருந்தன. நான் போக நினைத்த உயரத்தில் எனக்குப் பிடித்த மலையருவியின் மடியில் பன்னீர்ப் பூக்கள் வெண்மையை உடுத்திக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் காரணம்.

மலையருவியின் ஹோவென்ற சத்தம் பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த இடத்தில் கன்னிமார் சாமியின் தனிமையைப் போக்குவதாக இருந்தது. படையல் வைத்து, பத்தி, சூடம் ஏற்றி, இந்த வருஷம் மாதிரியே எல்லா வருஷமும் மழை கொடு தாயி என்று தாத்தாவும் அப்பாவும் வேண்டிக்கொண்டனர்.

தோப்பில் எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டுப் பொங்கல் சாப்பிட்ட பின்பு அக்காவின் திருமணப் பேச்சை எடுத்தார்கள். பாண்டித்துரை பெரியப்பாதான் பேச்சை ஆரம்பித்தார். 'ஏம்ப்பா தங்கம், பெரிய பொண்ணு பன்னெண்டாவது முடிச்சி ரெண்டு வருஷமாச்சுல்ல, கல்யாணம் காச்சி நடத்த வேணாமா!' என்றார். அப்பா பதிலுக்கு, 'இல்லண்ணே, பையனை காலேஜில சேத்தாச்சு. இந்த வருசம் நம்ம ஐஸ்கூல்லேயே டீச்சர் படிப்பு வரப்போகுதாம். பேசாம அந்தப் பிள்ளையை டீச்சருக்குப் படிக்க வைக்கலாம்ன்னு பார்க்குறேன்' என்றதும், 'அடப் போப்பா, பொம்பளைப் பிள்ளையைப் படிக்கவைச்சு அதுக்கு ஏத்தாப்பில மாப்பிள்ளை பாக்க அலையவா முடியும்? பேசாம பேச்சியம்மா அண்ண மகனுக்கே உன் பெரிய பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சிடு' என்று நல்லம்மா பாட்டி சொன்னவுடனே அம்மாவுக்கு சந்தோஷமாகிவிட்டது. சொந்தக்காரர்கள் எல்லாம் கூடிப் பேசி அன்று அக்காவின் திருமணத்தை முடிவெடுத்துவிட்டார்கள்.

புளியமரம் இன்னும் நெடு உயரம் வளர்ந்தது. அதோடு சேர்ந்து அக்காவின் கல்யாணத்திற்கு வட்டிக் கடைப் பாண்டியனிடம் வாங்கிய கடனும் வளர்ந்தது. புளியமரம் பூவெடுத்துக் காய்க்கத் தயாரானபோது அண்ணன் படிப்பை முடித்து வேலைக்குக் காத்திருந்தான். படித்து முடித்தவுடனே அரசாங்க வேலைக்குப் போகலாம் என்று கனவு கண்டவனுக்கு, உடனே வேலை கிடைக்கவில்லை என்றவுடன் அலுப்பு ஏற்பட்டது. அண்ணன் வேலை பார்த்துக் கடனை அடைப்பான் என்று அப்பா நம்பிக்கொண்டிருந்தார். அவன் சுகமாக வாழ ஆசைப்பட்டான். 'அரசாங்க வேலை கிடைச்சாபோறேன். அதை விட்டுட்டு டவுனுக்குப் போய் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் தனியார் கம்பெனியில் அல்லாட முடியாது' என்றான். மொத்தத்தில் அவனுக்கு வேலை தேடப் பொறுமையில்லை.

'வேலை ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது. பைனான்ஸ் போடப்போறேன், பணம் குடு...' என்று அப்பாவைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தான் அண்ணன். 'ஆமாண்டா, செல்வம் சொன்ன மாதிரி தாயி தவிட்டுக்குக் குந்தையில, பிள்ளை இஞ்சிப் பணியாரம் கேட்டானாம். நானே பாண்டியன்கிட்ட வாங்கின கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். நீ வேலை பார்த்துக் கடனை அடைப்பேன்னு பார்த்தா, கொடுத்து வச்சவன் கணக்காப் பணம் கேக்குறியேடா . இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல' என்று புலம்பினார்.

'எதுக்குப் பணமில்லை, பணமில்லைங்குற? தோப்பை விற்க வேண்டியதுதான.' அந்த வார்த்தையை அவன் முடிக்கும் முன்னே, 'அடப் பாவி, கொலைகாரா, நான் உசிரக் கொடுத்து வளத்து வைச்சிருக்கிற தோப்பை விக்கச் சொல்லுறியே, உன்னால ஒரு கையளவு நிலம் வாங்க முடியுமாடா?' என்று அப்பா ஆவேசத்துடன் அவனை அடிக்க ஓடினார்.

அன்றிலிருந்து யாரும் வீட்டில் நிம்மதியாக இல்லை. வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவுமாக இருந்தது. அப்பா இரவில் தூங்காமல் வாசல்படியிலேயே உட்கார்ந்திருந்தார். திரும்பி வர முடியாத தூரத்திற்கு அவரது கனவுகள் தொலைந்துபோயின. அண்ணனை அடித்துவிடலாம். கடன் கொடுத்த பாண்டியனை அடிக்க முடியுமா? கடன்காரர்களிடம் தணிந்துதானே போக வேண்டும். விடிந்தும் விடியாமல் இருக்கும்போதே பாண்டியன் கடனைக் கேட்டுத் திண்ணையில் உட்கார்ந்துவிடுவான்.

அப்பாவுக்கும் மகனுக்கும் தோப்பை விற்பதில் தகராறு என்று தெரிந்தவுடனே பணத்தைக் கேட்டுப் பாண்டியன் நெருக்கடி ஏற்படுத்தினான். தோப்பை வாங்குவதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டது. தளதள என்று தேக்கு மரத்தைப் போல இருக்கிற தோப்பைப் பார்த்துதான் கடனே கொடுத்தான். அது கைக்கு எட்டின தூரத்தில் இருக்கிறது என்றால் சும்மா விடுவானா! நேரங்காலம் தெரியாமல் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். 'இப்படி எல்லாரும் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் வச்சிருந்தா நான் பிச்சை எடுக்க வேண்டியதுதான்' என்றவனின் கையிலும் கழுத்திலும் மஞ்சள் கிழங்குபோல் தங்கம் மின்னியது.

'உடனே புளியமரம் எல்லாம் காய்ச்சுப் பணம் கொட்டப்போகுதாக்கும்.. அது நல்லா காய்க்க நாலஞ்சு வருசமாகும். அது வரைக்கும் கடன் சும்மா இருக்குமா? குட்டி போடாது? அப்புறம் தோப்பை வித்தாலும் கடன்தான் மிச்சமிருக்கும். இப்ப வித்தால் கடனையும் கட்டிரலாம். நானும் பாண்டியன் மாதிரி வட்டிக்குக் கொடுத்துப் பணத்தைப் பெருக்குவேன். அப்புறம் இது மாதிரி எத்தனை தோப்பு வேனுன்னாலும் வாங்கலாம்' என்று அண்ணன் வீட்டிலேயே உட்கார்ந்து முணுக் முணுக்கென்று பேசிக்கொண்டேயிருந்தான்.

மத்தளம் மாதிரி இரண்டு பக்க இடியையும் தாங்க முடியாத அப்பா, தோப்பைப் பாண்டியனுக்கே விற்கச் சம்மதித்தார். தோப்பும் விற்று அண்ணன் கைக்குப் பணமும் வந்தாயிற்று. இருண்ட புளியங்காட்டில் மின்மினிகள் அலைந்தன. கதறியழ முடியாத அப்பாவிற்கு வடிகாலாய் இருந்திருக்க வேண்டும் அவை. அப்பாவை வெகுநேரமாக வீட்டில் காணவில்லை. கடைத் தெருவிலும் இல்லை. நிலா வீட்டு வாசலுக்கு வந்த நேரத்தில் அப்பா அமைதியாக வந்து உட்கார்ந்தார். 'எங்கப்பா போயிருந்த?' என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. அப்பாவின் சுவாசம் முழுவதும் புளியம் பூ வாசம்.

சித்திரங்கள்: பா. இரஞ்சித்

28 வயதான த. சந்திரா அவள் விகடன், குங்குமம் இதழ்களில் நிருபராகப் பணிபுரிந்தவர். ராம் திரைப்படத்தின் உதவி இயக்குநரான இவர், அமீரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவருகிறார்.

காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் படைப்பாளிகளுக்கான புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இவரது இரண்டு கதைகளில் ஒன்று இங்குப் பிரசுரமாகிறது.

1   2

உள்ளடக்கம்

Google Ads.....


Google