|
சிறுகதை
புளியம் பூ
சந்திரா
தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை
வாங்கும் வட்டிக்கடைப் பாண்டியன் பணத்தை அப்பாவிடம் நீட்டினார். 'அவங்ககிட்டயே
கொடுங்க' என்று அப்பா அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை
வாங்கிக்கொண்டு, 'நீங்க பஸ்ல வந்திருங்க' என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக
வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டான்.
நான், அம்மா, அக்கா மூவரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். அம்மாவுக்கு
அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டாள். அக்கா,
அம்மாவைத் திட்டிக்கொண்டே வந்தாள். 'அழுகையை நிறுத்து! உன் பையனுக்கே சொத்து
வேணாங்கிறப்ப உனக்கென்ன வந்தது? போறப்ப தூக்கிட்டா போகப்போற?' என்றாள் அக்கா.
அவளுக்கென்ன தெரியும்! அப்பா எங்கள் எல்லோரையும்விட அதிகமாக நேசித்தது புளியந்தோப்பை!
புளியந்தோப்பு அப்பாவுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு நிறைவேறிவிட்டது என்று கண்ணை
மூடித் திறக்கும் முன் அது வெறும் கனவுதான் என்றாகிவிட்டது. வாழ்க்கையில் அனேகக்
கனவுகள் இருக்கலாம். முதன்முறையாக அப்பாவுக்குப் புளியந்தோப்புக் கனவு வாழ்க்கையானது.
அப்பாவுடன் முதன்முதலாக நான் காட்டுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டது எனக்கு
இன்னும் நினைவிருக்கிறது. அது நிலக்கடலை பிடுங்கும் சீசன். பஸ்ஸில் பயணம் செய்துதான்
அந்தக் காட்டுக்குப் போக வேண்டும். பஸ் பயணத்திற்காகவே அந்தக் காடு எனக்கு ரொம்பப்
பிடிக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மூன்று மைல் நடந்து காட்டுக்குப் போக வேண்டும்.
அம்மா தலையில் கூடையும் இடுப்பில் என்னையும் வைத்துக்கொண்டு, 'ஆமா, நீதான் எல்லாக்
கடலைச் செடியையும் புடுங்கி ஆயப்போற. எனக்கு இருக்கிற வேலை பத்தாதுன்னு உன்னை வேற
தூக்கிட்டுப் போறேன் பாரு' என்று திட்டிக்கொண்டே வந்தது.
அந்த விடிகாலை எங்களுக்கு முன்பே அப்பா காட்டுக்குக் கொத்தாள்களைக் கூட்டிக்கொண்டு
போய்விட்டார். ஆங்காங்கே நிலக்கடலைச் செடியைப் பிடுங்கி, வீடுபோலச் சுற்றி
அடுக்கிவைத்து, ஒவ்வொரு குவியலுக்கும் எதிரெதிராக இருவர் உட்கார்ந்து, நடுவில் குழி
தோண்டிக் கம்பு வைத்துக் கடலைச் செடியைக் கையில் அடங்கும் மட்டும் எடுத்து
அடித்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் உதிக்காத அந்தக் காலை நேரத்தில் ஆளில்லாத
அந்தக் குவியலுக்கு அப்பாவை அழைத்துப் போய்க் கடலைச் செடியை அடித்துக்கொண்டிருந்தேன்.
வேலை செய்பவர்களைப் போல் முடி தெரியாமல் இருக்க நானும் தலையில் துண்டு
கட்டியிருந்தேன். அப்பா சரி செய்ய அது ஒரு பக்கமாக அவிழ்ந்து கொண்டே வந்தது.
'கடலை வீடு வந்துசேர ரெண்டு நாளாகும். நீ பெரியம்மாகூட வீட்டுக்குப் போ. அம்மாவும்
நானும் கடலையைக் காவக் காக்க இங்கேயே இருக்கோம்' என்று அப்பா சொன்னதைக் கேட்காமல்
அடம்பிடித்து நானும் இரவில் அங்கேயே தங்கிவிட்டேன். வாய்க்கால் ஓரத்தில்
செடியிலிருந்த ஆய்ந்த கடலையைக் குவித்துக் களம் செதுக்கியிருந்தார்கள். வாய்க்காலின்
இருபுறமும் தென்னை மரங்கள் சாய்வாக வளர்ந்திருந்தன. அப்பா கம்புகள் வைத்துக்
குட்டியாய் ஒரு குடிசை போட்டிருந்தார். குடிசைக்குள் வைக்கோலும் சாக்கும்
விரிக்கப்பட்டிருந்தன. அந்தக் குடிசை நான் தட்டாங்குச்சியில் செய்யும் பொம்மை
வீடுபோல இருந்தது. காட்டை இருள் மூடியதும் எனக்குப் பயம் வந்தது. வெள்ளாவி மணக்கும்
அப்பாவின் போர்வைக்குள் பூனைக் குட்டியைப் போல ஒளிந்துகொண்டேன். ராத்திரியில்
சங்கீதமாய்க் குரல் எழுப்பிக்கொண்டு அந்தச் சமவெளியெங்கும் காற்று போன திசையெல்லாம்
நானும் சேர்ந்து போனேன். காற்றோடு தூக்கக் கனவில் அந்த இருள் இரவில் அப்பாவைப் போல்
காடு என்னையும் மறக்கடித்தது.
மறுபடியும் அப்பா என்னைக் காட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. பிறகுதான்
தெரிந்தது, அது தற்காலிகமான 'ஒத்திக்காடு' என்பது. ஒரு காட்டுக் கனவு
சிதைந்துபோயிருந்த வேளையில், அப்பா திரும்பவும் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும்
இன்னொரு காட்டை வாங்கினார். 'இந்தக் காடு உனக்குத்தாண்டா' என்று அப்பா சொன்னதும், 'பொட்டப்புள்ளைக்கு
என்னைக்கின்னாலும் நகை, நட்டுதான் சொந்தம். காடு, வீடெல்லாம்
ஆம்பளப்பிள்ளைக்குத்தானே சேரும்' என்ற பக்கத்து வீட்டு நல்லம்மா பாட்டியை முறைத்தார்
அப்பா.
அப்பா வாங்குகிற காடுகளுக்குப் பக்கத்தில் அருவி, குளம், வாய்க்கால் இப்படி எனக்குச்
சந்தோஷம் தருகின்ற விஷயங்களாகவே இருந்தன. புதுக் காடு வாங்கியதிலிருந்து
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே மனவருத்தம். 'மணல் காட்டை வாங்காம இப்படி
இறுகிப்போன சவெளைக் காட்டை வாங்கினால் வெள்ளாமை விளங்குமா?' என்ற அம்மாவின் வருத்தம்
அப்பாவுக்கும் இருக்கத்தான் செய்தது.
'பருத்தி விதைச்சா பணம் அதிகமாகச் செலவாகும். ஒரு பூச்சி புழு இல்லாமல்
பார்த்துக்கணும். இப்ப பூச்சி மருந்து விக்கிற வெலையில அது நடக்கிற காரியமா? எள்ளு
விதைக்கலாம்னா அது நொச்சு புடிச்ச வேலை. அவசரப்பட்டு இந்தக் காட்டை வாங்கிட்டோ ம்!'
என்று அப்பா குழம்பிப்போயிருந்த வேளையில் காடு காவல் காக்கும் நொண்டி மாயாண்டித்
தாத்தா வீட்டுக்கு வந்தார்.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். அன்றைக்கு அதை அவரிடமே கேட்டேன். 'ஏன் தாத்தா
நீங்க நல்லா நடக்கும்போதே எல்லோரும் உங்களை நொண்டி மாயாண்டின்னு கூப்பிடுறாங்க?'
'இந்த மூளிப்பய புள்ளைக்கு வேற வேலையே இல்லை' என்று செல்லமாகக் கடிந்துகொண்டே
சொல்லத் தொடங்கினார். 'எங்க அப்பன் எம்புட்டு அடிச்சுச் சித்ரவதை பண்ணியும் நான்
பள்ளிக்கூடம் பக்கம் போகவே இல்லை. கால்ல விலங்க மாட்டிப் பள்ளிக் கூடத்துல
போட்டுவிட்டு வந்திடுவாரு. நான் கால் விலங்கை இழுத்துட்டே போறதப் பார்த்த
பயலுகளெல்லாம் "நொண்டி மாயாண்டி"ன்னு அன்னைக்கிருந்து கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
அதுவே எனக்குப் பேராப் போச்சு' என்று நீட்டி முழக்கினார்.
தாத்தாவுக்குக் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் பள்ளிக்கூடத்தில்
அடைந்துகிடப்பது பிடிக்கவில்லை. அவருக்கு விதவிதமான பறவைகளை வேட்டையாடித்
திரிவதுதான் ஆனந்தமாய் இருந்திருக்கிறது. அதற்கு மேல் எதுவும் பண்ண முடியாமல், 'உன்
பொழப்பு அம்புட்டுத்தாண்டா' என்று சொல்லித் தாத்தாவின் அப்பாவும் அவரைத் தன்னோடு
காவல் காக்க அழைத்துக்கொண்டு போய்விட்டாராம்.
'அப்போ இருந்து சோளக்காட்டுக்குள்ளேயும் கம்பங்காட்டுக்குள்ளேயும் பரண்மேல்
உக்காந்து இஷ்டத்துக்கு வேட்டையாடிக்கிட்டிருக்கேன். அதுவும் பறவை பயிர்மேல
உக்காந்ததும் அடிக்கமாட்டேன். அது இரை மேல கவனமா இருக்கிற சமயமாப் பார்த்துக் குறி
தவறாம ஒரே போடா போட்ருவேன்' என்று தன் வேட்டையாடும் சாகசத்தை அளந்தார். 'மனசுக்குப்
புடிச்ச வேட்டைக்கு வேட்டையுமாச்சு, பொழப்புக்குக் காடு காக்கிற
வேலையுமாச்சுன்னுதான் இந்த வேலையை விருப்பமா செய்யுறேன். சாமர்த்தியக்காரன்ல நான்'
என்றார்.
என்னிடம் பேசிக்கொண்டிருந்த தாத்தா, 'என்னடா தங்கம், புதுக் காடு வாங்கியிருக்க போல.
உன் காட்டை நான் காவக் காக்குறேன்டா' என்று அப்பா பக்கம் திரும்பிக் கேட்டார். 'அட
போப்பா, காட்ல இன்னும் என்ன விதைக்கிறதுன்னே தெரியல. அதுக்குள்ள காவக்காக்குறதப்
பத்தி பேசிக்கிட்டு. எள்ளு வெதைச்சா தொல்லைன்னு பேச்சி சொல்றா. பருத்தி நட்டா
அவ்வளவு பணம் செலவு பண்ண முடியாது. இந்தக் காட்டை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே
தெரியல,' அப்பா அலுத்துக்கொண்டார்.
'பொண்டாட்டியும் புருஷனும் இப்படி ஆளுக்கொரு யோசனையைப் பண்ணினா எப்படி விவசாயம்
பார்க்க முடியும்? உன் காட்டுக்குக் கீழக்காட்டுக்காரனப் பார்த்தியா? மாங்கா மரம்
நட்டு ரெண்டு வருசந்தான் ஆச்சு. இப்ப எப்படி வளந்து நிக்குது. உன் காட்டுக்குப்
பக்கத்திலேயே குளம் இருக்கு; தண்ணிக்குக் கவலையில்லை. பேசாம புளியங்கண்ணை நட்டுப்
போடு. நாலஞ்சு வருசத்திலே அது உனக்கு சோறு போடும்' என்றார் தாத்தா.
'அதெப்படி? புளியங்கன்னு வளரப் பத்து வருசமாகுங்குறாங்களே?' அப்பா பேசி முடிக்கும்
முன்பே மாயாண்டித் தாத்தா கோபமானார். 'எந்த லூசுப் பய சொன்னான்? இப்பதான் ஒட்டு மா,
ஒட்டு புளியங்கான்னு நாலஞ்சு வருசத்தில பலன் தர்ற மாதிரி தேனி கூட்டுறவு சந்தையிலே
விக்கிறாங்கள்ல, அதை வாங்கி வந்து நடு.' தாத்தாவின் பேச்சு அப்பாவுக்குள்
புளியந்தோப்புக் கனவை மீண்டும் ஏற்படுத்திவிட்டது.
அப்பா அந்த விதைப்புக் காலத்தில் கொஞ்சம் புளியம் விதைகளும் புளியங்கன்னும்
கொண்டுவந்தார். அம்மாவுக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. அவர்களின் நீண்ட நாளைய
உழைப்பில் வாங்கிய இந்தக் காட்டில் புளியங்கன்று வைத்துவிட்டால் விவசாயம் சரிவரச்
செய்ய முடியாமல் கஷ்டப்படுவோம் என்று அம்மா மறுத்தாள். அதுவும் சின்னஞ்சிறு
செடிகளும் இன்னும் முளைக்காத புளிய விதைகளும் மரமாகும் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு
இல்லை.
அம்மாவின் உதவியை எதிர்பாராமல், அப்பா பிடிவாதமாக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்துச் சென்று காட்டில் நட்டு முடித்தார். நடுவதற்கு முன் மரம் நட்ட
அனுபவமுள்ளவர்களிடம் எவ்வளவு ஆழத்தில் குழி தோண்ட வேண்டும், எப்படிச் செடிக்கு மண்
அணைக்க வேண்டும், எத்தனை நாளைக்கு ஒரு தரம் தண்ணீர் விட வேண்டும் என்பதையெல்லாம்
தெளிவாகக் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு புளியங்கன்றையும் பச்சைக் குழந்தையைப் பார்த்துக்கொள்வதுபோல்
பார்த்துக்கொண்டார். ஒரு கன்று வாடினாலும் மனசு பொறுக்காது அப்பாவுக்கு. வெயில்
ஏறுவதற்கு முன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அதிகாலை நான்கு மணியிலிருந்து புளியங்
கன்றுகளுக்குக் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்துவிடுவார்.
கோடைக் காலத்தில் குளத்தில் தண்ணீர் வற்றிப் பூமி பிளந்து கிடக்கும். அந்தச்
சமயங்களில் கீழே இரண்டு மைல் தூரம் தள்ளியிருக்கும் தோட்டத்திலிருந்து தண்ணீர்
எடுத்துவர வேண்டும். 'இப்படி மேல இருக்கிற காட்டுக்காரங்களெல்லாம் எங்க தோட்டத்தில்
வந்து தண்ணி எடுத்துட்டுப் போனா யாருய்யா மோட்டாருக்குக் கரண்ட் பில் கட்டுறது?'
என்று தோட்டத்துக்காரர் கத்தினாலும் என்ன செய்வது, வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.
தண்ணீர் இல்லையென்றால் செடி வாடிவிடுமே.
அண்டா போன்ற பானையைத் தலையில் வைத்துக்கொண்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்பா
தண்ணீர் எடுத்து வருவதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். அப்பாவின் உழைப்பில்
புளியங்கன்றுகள் எல்லாம் மரமாகிக்கொண்டிருந்தன. சில நாட்களில் அப்பா திடீரென்று
காணாமல்போய்விடுவார். மதியம் இரண்டு மணிக்குப் பசி மயக்கத்தில் திரும்பி வருவார்.
'காலையிலிருந்து சாப்பிடாம எங்க போனீங்க?' என்று அம்மா கேட்டால், 'சும்மா டீ
சாப்பிடத்தான் கடைப் பக்கம் போனேன். "புளிய கன்னு சும்மா தளதளன்னு வளர்ந்துருக்கு,
தண்ணீ ஊத்துறத மட்டும் விட்டுராதண்ணே"ன்னு நம்ம சிவனாண்டி சொன்னான். அதான் நேத்துத்
தண்ணி ஊத்தியிருந்தாலும் இன்னைக்கும் தண்ணி ஊத்தணும்னு தோணுச்சு. அப்படியே
காட்டுக்கு ஓடிட்டேன்' என்பார்.
தொடர்ச்சி...
1
2
உள்ளடக்கம் |