|
பதிவுகள்
ஒரு களிறு போதுமா?
பி.ஏ. கிருஷ்ணன்
1
1927ஆம் ஆண்டு சிதம்பரத்திற்கு அருகே உள்ள பள்ளி ஒன்றில் காந்தி பேசினார். இந்தப்
பேச்சு Collected Works of Mahatma Gandhi, Volume 40இல் பதிவாகி இருக்கிறது.
இந்தப் பேச்சை நான் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். பேச்சிலிருந்து சில
பகுதிகள்:
உங்களது வரவேற்புரையில் நான் ஒன்று கவனித்தேன். எனக்கு மகிழ்ச்சி தந்தது அது.
இந்நாட்களில் மற்றைய இடங்களில் நடப்பதுபோல, இந்து மதத்தையே நீங்கள் அழிக்க
விழையவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்து மதத்தின் பாரம்பரியங்களை- மோசமானவையோ
அல்லது இரண்டும்கெட்டான்களோ - காலடியில் போட்டு நசுக்க நினைக்காத உங்கள் எண்ணங்களை
நான் மதிக்கிறேன். பகுத்தராய்ந்து, நல்லதை அழிக்கமால் மோசமானதையே அழிக்க முற்பட்டு,
உங்களது திறமையின் வலிமையால் மட்டுமே உயர்நிலை அடைய நினைக்கும் உங்களது உறுதிக்கு
என்னுடைய பாராட்டுகள். நீங்கள் இந்தப் பழமையான மண்ணின் மூத்தகுடிகளின் வாரிசுகள்
என்று சொல்வது சரியானது. இந்த மண் ஒருவருக்குச் சொந்தம் என்ற உரிமையிருக்குமானால்,
அந்த உரிமை நிச்சயமாக உங்களுடையது. முதன்மையாக உங்களுடையது.
2
இந்த உரையை சுவாமி சகஜானந்தா என்ற பெரியவரின் முன்னிலையில் காந்தி நிகழ்த்தினார்.
நிகழ்த்திய இடம் நந்தனார் பள்ளி, சிதம்பரம். சுவாமி சகஜானந்தாவின் (1890 -1957)
வாழ்க்கைக் குறிப்புகள் சமீபத்தில் நண்பர் ரவிக்குமார் தயவால் படிக்கக் கிடைத்தது.
சுவாமி இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். துறவியாக இருந்தும் தீண்டத்தகாதவர் என்ற
பட்டத்திலிருந்து விடுதலை பெற அவர் பல ஆண்டுகள் பாடுபட வேண்டியிருந்தது. கல்விதான்
தீண்டத்தகாதவர்களை முன்னேற்றும் என்ற திடமான நம்பிக்கையால் சிதம்பரம் அருகே ஒரு
பள்ளியை அவர் துவக்கினார். 1916இல் சிதம்பரத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் உள்ள
தலித் குழந்தைகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி இன்று இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட மாணவர்களைக் கொண்டிருக்கிறது.
சுவாமி முதலில் நெற்றியில் வீபூதி பூசிக்கொண்டு சிவப்பழமாக இருந்தவராம். அவருக்குச்
சைவ மாநாடு ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வைணவத்திற்கு மாறிவிட்டார். அவரது
பிந்தையப் படங்களிலெல்லாம் அவர் நெற்றியில் தென்கலைத் திருமண் அணிந்து
துலங்குகிறார். என் தந்தைக்கு இவரைப் பற்றித் தெரிந்திருந்தால் 'வலந்தாங்கு
சக்கரத்தண்ணல் மணிவண்ணற் காளென்று உட்கலந்தார் அடியார் தம் அடியாரெம் அடிகளே' என்று
சொல்லிக்கொண்டு அவர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியிருப்பார்.
காந்தியின் மீது தீராத பற்றுக்கொண்ட சுவாமியின் ஆசிரமத்திற்கு காந்தி இரு முறை
வருகை தந்திருக்கிறார் என்று தெரிகிறது. 1934ஆம் ஆண்டு அவர் வந்தபோது, காந்தி தலித்
மக்களோடு கோவிலுள்ளே நுழைந்துவிடுவார் என்ற பயத்தில் தில்லை நடராஜர் கோவிலை மூடியே
வைத்திருந்தார்களாம். ஊரெல்லாம் 'காந்தியே நீர் போம்! ஊர் ஊராகப் பணம் பறிக்கும்
காந்தியே நீர் போம்!' என்று சுவர்களில் எழுதியிருந்ததாக சகஜானந்தாவின் வாழ்க்கைக்
குறிப்புகள் கூறுகின்றன. 1934இல் காந்தி இந்தப் பள்ளியில் பேசியதாகத் தெரியவில்லை.
1933ஆம் ஆண்டு காந்தியைச் சென்னையில் சந்தித்துப் பேசிய ஒடுக்கப்பட்டவர்களின் கழக
(Depressed Classes Federation) உறுப்பினர்களில் சுவாமியும் ஒருவர். இந்தச்
சந்திப்பில் காந்தி தமிழ்ப் பழமொழி ஒன்றைக் கூறுகிறார்:
என்றும் பழிசுமக்கும் ஒரு பெயரால் நாங்கள் அழைக்கப்பட வேண்டாம் என்று ஒரு
தீண்டத்தகாதவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஒடுக்கப்பட்டவர் அழுத்தப்பட்டவர் போன்ற
பெயர்கள் அடிமைத்தனத்தை நினைவுறுத்துகின்றன என்று அவர் சொன்னார். எனக்கு ஒரு
பெயரும் தோன்றவில்லை. உங்களுக்குத் தோன்றுகிறதா என்று நான் கேட்டேன். அவர் சொன்ன
பெயர் ஹரிஜன். குஜராத்திக் கவிஞர் நரசிங் மேத்தா இப்பெயரைத் தன் படைப்புகளில்
பயன்படுத்தியிருப்பதாக அவர் மேற்கோள் காட்டினார். உடனே தாவி அந்தப் பெயரைப்
பிடித்துக்கொண்டேன். தமிழில் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்ற பழமொழி இருப்பது
எனக்குத் தெரியும். ஹரிஜன் என்பது அதன் சுருக்கம் இல்லையா? (Collected Works of
Mahatma Gandhi Volume 62.)
காந்தியோடு இத்தனை நெருக்கமாக இருந்த சுவாமி சகஜானந்தாவைப் பற்றிப் படிக்கப் படிக்க
வியப்பாக இருந்தது. இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இல்லாதது ஒரு
பெருங்குறைதான்.
3
காந்தி கால்பட்ட இந்தப் பள்ளிக்குச் செல்ல சென்ற மாதம் எனக்கு ஒரு வாய்ப்புக்
கிடைத்தது.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற
மாணவ மாணவியரில் முதலாக வந்தவர்களுக்கு (பள்ளி வாரியாக, முதலாக வந்தவர், முதலாக
வந்த மாணவி, முதலாக வந்த தலித் என்ற வகையில்) கணினிகள் வழங்குவதற்காக ஒரு நிகழ்ச்சி
நடந்தது. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நண்பர் ரவிக்குமாரின் பெரு
முயற்சியாலும் அவுட்லுக் இதழின் ஆனந்த் அவர்களின் பேருதவியாலும் இக்கணினிகள்
பெறப்பட்டன. சென்னையிலிருந்து நானும் தில்லியிலிருந்து நமது குடியரசுத் தலைவர்
கலாம் அவர்களின் அருமை நண்பர் ய.சு. ராஜன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில்
கலந்துகொண்டோ ம். அழைப்பிதழில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்
அவர்களும் கலந்துகொள்ளப் போகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம்
ஓர் அரசியல் கூட்டமாக இருக்குமா அல்லது பரிசு வழங்கல் கூட்டமாக இருக்குமா என்று
எனக்கும் ராஜன் அவர்களுக்கும் சந்தேகமாக இருந்தது.
மெலிந்த கால்களுடனும் கசங்கிய சீருடையிலும் இருந்த என்.சி.சி. மாணவர்கள் இரு
வரிசைகளில் நின்று எங்களை வரவேற்றார்கள். கடற்படைப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்
அவர்கள். கடற்படையில் சேர அதிக வாய்ப்பு இல்லாதவர்கள். உடல் தகுதியின் அடிப்படையில்
அவர்கள் நிராகரிக்கப்பட்டுவிடுவார்கள். ஏழை மக்கள், குறிப்பாக தலித் மக்கள்
எதிர்கொள்ளும் பல இடர்களில் இளமையில் ஊட்டச்சத்து இல்லாமையும் ஒன்று. பதிமூன்று
வயதில் எனது மகன் என்னைவிட உயரமாக இருந்தான். இந்தப் பள்ளியில் படிக்கும் பதிமூன்று
வயது மாணவர்கள் பலரின் உயரம் தில்லிப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்
மாணவனின் உயரத்தைவிடக் குறைவாக இருக்கும்.
தலைமை ஆசிரியர் அறையில் சுவாமி சகஜானந்தாவின் படம் இருந்தது. தீக்குளித்து
வெளிவரும் நந்தனாரின் ஓவியம் இருந்தது. பணி புரிந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களின்
பட்டியல் இருந்தது. அம்பேத்கர் இருந்தார் என்று நினைவு. காந்தி இருந்ததாக
நினைவில்லை. ஜன்னல்களுக்கு வெளியே விரிந்த கண்களுடன் எங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இருந்தார்கள். சிறிது நேரத்தில் திருமாவளவனும்
ரவிக்குமாரும் வந்துவிட்டார்கள். திருமாவளவனைப் பார்த்ததும் எனக்கு அல்லிக்கேணி
அழகனான பார்த்தசாரதியைத் திருமங்கை மன்னன் 'கோதில் கனியை நந்தனார் களிற்றை' என்று
பாடிய பாடல் நினைவிற்கு வந்தது. இவரும் நந்தனார் களிறுதான். அடங்கிய அடிமைக் களிறு
அல்ல. தளைகளை உடைத்து வந்து பிளிறும் களிறு. கண்ணனின் நிறம். கண்ணன் இவரைவிடச்
சிறிது உயரமாக இருந்திருக்கலாம். ஆனால் கண்கள் கண்ணனுடையவை. துளைத்து உட்சென்று
ஆராயும் கண்கள்.
சாதாரண மக்கள் அதிகாரத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேராகக் காண இந்த
அறையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நானும் ராஜன் அவர்களும் தலைமை ஆசிரியரிடம்
பேசிக்கொண்டிருந்தபோது, எதிரில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் என்னைப் பார்த்து
எந்திரிங்க, எந்திரிங்க, சேர் வேணும் என்றார். எனக்குப் புரியவில்லை. திரும்பிப்
பார்த்தால் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நான்
எழுந்திருக்கமாட்டேன் என்பது தெரிந்ததும் ராஜனிடம் எந்திரிங்க சப்-இன்ஸ்பெக்டர்
வந்திருக்காரு. அவரு தலைவரிடம் பேசணும். பின்னாலே உட்காருங்க என்றார். ராஜனுக்கும்
ஒன்றும் புரியவில்லை. இதற்குள்ளாக ராஜன் குடித்துவிட்டு வைத்திருந்த காப்பிக்
கோப்பையை எடுத்து, 'காப்பி சாப்பிடறீங்களா சார்' என்று அந்த இளைஞர் கேட்டார்.
பதற்றத்தில் அவருக்கு அது எச்சிற்பட்டது என்பதுகூடத் தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர்
அவருக்கு ஓர் அதிமானுடன். இத்தகைய அதிமானுடர்களை எளிய மக்கள் அன்றாடம் எதிர்
கொள்கிறார்கள். மற்றவர்களை எதிர்கொள்ளும்போது அவர்களிடம் அன்றாட நாகரிகங்கள்
மிஞ்சுவதில்லை.
4
கூட்டம் சுவாமி சகஜானந்தா அவர்களின் திருவுருவச் சிலை முன்னால் நடந்தது. அவருக்குப்
பின்புறம் காட்டிக்கொண்டு மக்கள் அமர விரும்பவில்லை. திருமாவளவன் சென்று
கேட்டுக்கொண்ட பின்பே அவர்கள் சிறிது தயக்கத்தோடு அமர்ந்தார்கள். கீழே எவ்வளவு
கூட்டமோ அதற்குச் சிறிது குறைவாக மேடையில் கூட்டம் இருந்தது. திருமாவளவன் இது
விடுதலைச் சிறுத்தைகள் கூட்டம் என்று நினைத்துக்கொண்டீர்களா என்று சீறிய பிறகுதான்
மேடைக் கூட்டம் சிறிது குறைந்தது. எங்களுக்கும் அது விடுதலைச் சிறுத்தைகள்
கூட்டமல்ல என்பது தெரிந்தது.
படிப்பைப் பொருத்தவரை பெண்கள் ஆண்களுக்கு முன் நிற்கிறார்கள் என்பதை இந்தக் கூட்டம்
உறுதி செய்தது. பரிசு வாங்கிய பெண்களில் பர்தா அணிந்த பெண், ராஜனிடம் கை குலுக்கத்
தயங்கிய பெண், அவர் கை சுளுக்கும்வரை கை குலுக்கிய பெண், மெல்லிய குரலில் தன்
சாதனைகளைச் சொன்ன பெண், எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம்
காட்டிய பெண், கேட்ட கேள்விகளுக்குப் பளீரென்று பதில் சொன்ன பெண் என்று பலர்
இருந்தார்கள். ஆண்கள் ஆண்களாக இருந்தார்கள்.
முன்வரிசையில் சிறுவர்கள். பள்ளி விடுதியில் இருக்கும் சிறுவர்கள். விடுதியில் 100
பேருக்கு ஒரு குழாய். அது தானாக விருப்பப்பட்டால் தண்ணீர் தரும் குழாய் என்று
ரவிக்குமார் சொன்னார். சிறுவர்கள் அந்தக் குழாயை மறந்து இங்கு வந்திருந்தார்கள்.
திருமாவளவனின் ஒவ்வொரு அசைவையும் விடாமல் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்
தலைவர்தான்; ஆனால் தங்களோடு நெருக்கமான தலைவர் என்பது அவர்களுக்குத்
தெரிந்திருக்கிறது.
கூட்டத்தில் ரவிக்குமார் சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவ
வேண்டும் என்று சொன்னார். நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றிப்
பேசினேன். ஆனால் குழந்தைகளைக் கவர்ந்தவர் ராஜன். பிராமணத் தமிழில் பேசிய அவரும்
ஆங்கிலத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பாரதியின் விடுதலை நாடகத்தில் வரும் இந்த
வரிகளைக் கூறிக் குழந்தைகளைத் திருப்பிச் சொல்லச் சொன்னார். குழந்தைகள்
மகிழ்ச்சியோடு உரத்த குரல்களில் சொன்னார்கள்.
உண்மையே தெய்வம். கவலையற்று இருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன் வரும் செய்கையே
அறமாம். அச்சமே நரகம்; அதனைச் சுட்டு. நல்லதை நம்பி நல்லதே செய்க.
திருமாவளவன் பேசுகையில் தான் ஆங்கிலத்திற்கு எதிரியில்லை என்று சொன்னார். எனக்கும்
ராஜனுக்கும் ஆறுதலாக இருந்தது.
கூட்டத்தில் தமிழக அரசியல் கூட்டங்களில் நடக்கும் எல்லாச் சடங்கு முறைகளும் நடந்தன.
ஆனால் திருமாவளவன் மக்கள் தலைவன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவருக்கும்
தலித் மக்களுக்கும் உள்ள நெருக்கம் அடிமனத்தின் ஆழத்திலிருந்து வரும் பாசாங்கு
இல்லாத நெருக்கம். இந்த நெருக்கம் சடங்குப் புகையின் ஊடே தெரிந்தது. புகை
இல்லாவிட்டால் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்கலாம். திருமாவளவன் நினைத்தால்
திராவிட இயக்கங்களிலிருந்து பெறப்பட்ட பல பொருளற்ற சடங்குகளிலிருந்து தலித் மக்களை
விடுதலை பெறச் செய்ய முடியும்.
இக்கட்டுரையை எழுதுவதற்காகக் காந்தியின் பேச்சைப் படிக்கும்போது எனக்குத்
தோன்றியது, காந்தி கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் பேசியதையே நாம் சில
சிறிய மாறுதல்களுடன் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. தலித் மக்கள் இன்னும்
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், நடந்து நடந்து களைத்திருக்கும் அவர்கள்
கோபத்திற்குக் காரணங்கள் என்ன என்பதும் எனக்கு ஓரளவிற்குப் புரிந்தது.
ஒரு களிறு அவர்களுக்குப் போதுமா?
உள்ளடக்கம்
 |