 |
பதிவு: இயல் விருது 2005
தமிழ் உலகை இணைக்கும்
தோட்டம்
என்.கே. மகாலிங்கம்
கனேடிய இலக்கியத் தோட்டம் 2001 ஆம் ஆண்டிலிருந்து
டொரான்டோ வில் இயங்கி வருகிறது. அது தன் செயற்பாடுகளை டொரான்டோ ப் பல்கலைக்கழகத்
தென்னாசிய மையத்துடன் இணைந்து நடத்தியது. ஆரம்பத்தில், தமிழுக்காகத் தன்னை
அர்ப்பணித்து உழைத்துவரும், ஆனால் அதிகம் கவனிக்கப்படாத அல்லது
பெருமைப்படுத்தப்படாத ஒருவருக்கு, அவருடைய வாழ்நாள் சாதனைக்காக இயல் விருது
வழங்குவற்குத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில் 2001ஆம் ஆண்டு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் கடந்த வருடம் மறைந்த, தமிழ் இலக்கிய உலகு நன்கறிந்த நாவல்,
சிறுகதை, கட்டுரை ஆசிரியர், கவிஞர், விமர்சகர், காலச்சுவடு நிறுவனர் திரு. சுந்தர
ராமசாமி அவர்கள். கனேடிய இலக்கியத் தோட்டம் அவரை அழைத்து டொரான்டோ
பல்கலைக்கழகத்தில் விழா நடத்தி, இயல் விருதும் 1500 டாலர் பணமுடிச்சும் அளித்துக்
கௌரவித்தது.
அடுத்து ஆண்டு, திரு. கே. கணேசு கௌரவிக்கப்பட்டார். அவர் 1940களிலேயே முற்போக்கு
இயக்கத்தை ஸ்தாபித்து அதன் செயலாளராக இயங்கியவர், பல நூல்களைத் தமிழுக்கு
மொழிபெயர்த்தவர். மணிக்கொடி காலச் சிறுகதை எழுத்தாளர். பயணப்பட முடியாத முதுமை
அடைந்த நிலையில் அவர் இருந்ததால் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில், இலக்கியத்
தோட்டத்தின் சார்பாக, பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவரைக் கொழும்பில் கௌரவித்து
இயல் விருதும் பணமுடிச்சும் வழங்கினார்.
2003ஆம் அண்டு இயல் விருது நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக விமர்சனக் கட்டுரைகள்
எழுதிவரும் திரு. வெங்கட்சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இலக்கிய விமர்சனத்தை,
நாடகம். சினிமா, இலக்கியம், ஓவியம், நூல் விமர்சனம், அரசியல் முதலிய பல கலைகளையும்
தன் பார்வைப் பரப்புக்குள்ளடக்கிச், சமூகம் சார்ந்த, கலா ரீதியான, கறாரான
விமர்சனத்துக்கு உட்படுத்தியவர் அவர். அதனால் பலராலும் புறக்கணிக்கப்பட்டவர். அவரை
இலக்கியத் தோட்டம் இயல் விருதும் பணமுடிச்சும் கொடுத்து, டோ ரான்டோ வில்
கௌரவித்தது.
சமகால ஈழத் தமிழர்களின் படைப்புகளுக்கும் தமிழ்நாட்டுப் படைப்புகளுக்கும் இடையே
இருவழிப் பாதை அமைத்தவர், நாற்பது வருடங்களாக அயராது உழைத்துச் சீரிய
வாசகர்களுக்குப் பாலமாக அமைந்தவர். ஈழத்து இலக்கிய நூல்கள் பலவற்றைத் தமிழ்நாட்டில்
பதிப்பித்துத் தமிழ் நாட்டினருக்கு அறிமுகம் செய்தவர். இன்று உலகெங்குமுள்ள தமிழ்
நூல்களைக் கணினியில் கிடைக்கச் செய்யும் பணியை அயராது செய்து வருகிற, தற்போது
லண்டனில் வசித்து வரும் திரு. பத்மநாப ஐயர் 2004ஆம் ஆண்டு இலக்கியத் தோட்ட இயல்
விருதைப் பெற்றார்.
பெர்க்லிப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர். ஆங்கிலேய அமெரிக்கர். இந்தியாவில்
தமிழ் செம்மொழியாகப் பிரகடனப்படுத்தவற்கு உதவியவர், புறநானூறு, கம்பராமாயணம் ஆரண்ய
காண்டம் போன்ற பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர், தமிழை பெர்க்லிப்
பல்கலைக் கழகத்தில் கற்பித்து உயர்மட்ட ஆய்வுகளில் மாணவர்களை உருவாக்கிவருபவர்,
திரு ஜோர்ஜ் எல் ஹாட் அவருக்கு 2005 ஆண்டு இயல் விருது அளித்து இலக்கியத் தோட்டம்
கௌரவித்தது, அத்துடன் இவ்வாண்டு இலக்கியத் தோட்டம் இரண்டு புதிய பரிசில்களையும்
அறிவித்ததது. ஒன்று, புனை விலக்கியத்திற்கும் மற்றது அபுனைவுக்கும்
(Fiction and non-fiction) அபுனைவுக்கான 500 டாலர் பரிசைத் தன்னலங் கருதாது சேவை
செய்யும் உலக ஆசிரியர்களின் சார்பாக, டொரான்டோ வை வாழ்விடமாகக் கொண்ட
லலிதா-ஜெயராமன் தம்பதிகள் அளித்தனர். அப்பரிசு க்ரியா ராமகிருஷ்ணனுக்கு, அவர் தலைமை
ஆசிரியராக இருந்து உருவாக்கிய க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிக்காக இலக்கியத்
தோட்டம் வழங்கியது. பரிசு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலித்துகளின் வாழ்வை இலக்கியமாக்கிய சோ. தர்மனுக்கு, புனை விலக்கியத்திற்கான பரிசு
கிடைத்தது. கூகை நாவல் காலச்சுவடு வெளியீடு. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின்
பெயரால் அப்பரிசு வழங்கப் பெற்றது. அதை அன்பளிப்புச் செய்தவர் பேராசிரியரின் மகன்
டொக்ரா ஒப்பிலாமணி.
பலரது நிதி உதவியுடனும் ஒத்துழைப்புடனும் இதுவரை நான்கு பேர் அடங்கிய ஸ்தாபக
அங்கத்தவர்களைக் கொண்டியங்கிய இலக்கியத் தோட்டம், 2006ஆம் தொடங்கி, மேலும்
வெளிப்படையாகவும் ஒளிவு மறைவற்றும் நீதியாகவும் புறநிலையாகவும் தீர்மானிப்பதற்குரிய
எண்ணத்துடன்
(Open, Transparent, Just, fair and objective) தன் அங்கத்துவப் பரப்பை விரிவாக்கியுள்ளது. அதற்காக, தமிழ்
பேசும் உலக நாடுகளிலுள்ள அறிஞர்களின் கூர்மையான வாசிப்பு அறிவையும் நடுநிலையான,
நீதியான தீர்ப்பையும் பெற அது தீர்மானித்துள்ளது. அதன்படி 15 பேர்களைக் கொண்ட ஒரு
குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் உள்ளவர்களில் சுழல் முறையில் நான்கு பேர்
ஒவ்வொரு ஆண்டும் விருது பெறுபவர்களை சிபாரிசு செய்வார்கள் டொரான்டோ வில் இயங்கும்
இலக்கியத் தோட்டத்திற்கு அனுப்பப்படும் முன் மொழிவு விண்ணப்பங்களிலிருந்து
(Nomination Application) விருது பெறுபவர்கள்
தெரிவுசெய்யப்படுவர். முன் மொழிவுப் படிவத்தை இலக்கியத் தோட்ட இணையத்தில் பெற்றுக்
கொள்ளலாம். தகுதியானவர் எவரையும் எவரும் அதற்கான காரணங்களைக் காட்டி, எழுதி
முன்மொழியலாம். மேலும் பல தகவல்களை அறிவதற்கு, அதன் இணைய முகவரி:
www.tamilliterarygarden.ca
உள்ளடக்கம் |
|