Google   www kalachuvadu.com

உரைப் பதிவு: நெய்தல் அரங்கு

கூட்டு மௌனங்கள் கலையட்டும்

கண்ணன்

n கூட்டு மௌனங்கள் கலையட்டும்

n தமிழ் உலகை இணைக்கும் தோட்டம்

n ஒரு களிறு போதுமா?

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிக்குமாருக்கு நாகர்கோவில் நெய்தல் அமைப்பு சார்பாக 14.07.2006 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. சுகுமாரன், பொன்னீலன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, அ. ராமசாமி, சின்னசாமி, கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கண்ணனின் உரை இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.

நண்பர் ரவிக்குமாருக்கு வாழ்த்தும் வரவேற்பும் அளிப்பதற்காக, நாகர்கோவில் நண்பர்கள் சார்பாக, 'நெய்தல்' ஒழுங்கு செய்திருக்கும் இன்றைய நிகழ்ச்சியில், நான் பேசுவதில் ஒரு முரண்பாடு உள்ளது.

ரவிக்குமாரின் தேர்தல் அரசியல் பிரவேசத்திற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். அரசியல் அவரோடு இரண்டறக் கலந்திருப்பது எனக்கும் உவப்பானதுதான். ஆனால், அவரது தேர்தல் பிரவேசத்தால் அவரது கருத்துச் சுதந்திரம் பாழ்பட்டுவிடும் என்னும் பயமும் காலச்சுவடு ஆசிரியர் குழுவிலிருந்து அவர் விலக நேரிடுமே என்ற கவலையும் அந்த எதிர்ப்பிற்குப் பின்னிருந்தன.* தமிழகச் சமூக யதார்த்தங்கள் தொடர்பான பல கூட்டு மௌனங்களைத் தன் கருத்துகளால் தொடர்ந்து கலைத்துவருபவர் அவர். இனிச் சட்டமன்ற உறுப்பினராகப் பல அரசியல் யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டு அவர் செயல்பட வேண்டியிருக்கும். இதைத் தமிழ்க் கருத்துலகிற்கு ஓர் இழப்பாகத்தான் இப்போதும் கருதுகிறேன்.

இருப்பினும் ஒரு மாற்றத்தை அதனால் ஏற்படும் இழப்புகளின் அடிப்படையிலேயே அளக்க முடியாது. அதனால் ஏற்படும் சாதகங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தேர்தல் முடிந்த இந்த இரு மாத காலத்தில் ரவிக்குமாரின் செயல்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் நல்ல தாக்கங்கள், முந்தைய தயக்கங்களையும் மீறி மகிழ்ச்சி அளித்திருக்கின்றன. தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையில் ஓர் அறிவுஜீவியால் அரசியலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்ற எனது வலுவான எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய மகிழ்ச்சியான ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ரவிக்குமாருக்கு மட்டுமல்ல, அவரது கருத்துகளைக் கவனத்தில் கொண்டு எதிர்வினை ஆற்றிவரும் கலைஞருக்கும் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

குறிப்பாக ஈழத்திலிருந்து வரும் அகதிகள் பற்றி இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கவனத்திற்கான பெருமை ரவிக்குமாருக்கு உரியது. கடந்த தேர்தலின்போது யாருமே ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசவில்லை. ரவிக்குமாரின் முதல் சட்டமன்ற உரை இந்தக் கூட்டு மௌனத்தைக் கலைத்திருக்கிறது. அகதிகளின் அவல நிலையைக் கவனப்படுத்திய அவரது செயல்பாடுகள், நமது மனிதாபிமானமற்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஈழத் தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் துடித்துக்கொண்டிருக்கும் நமது வீரத் தமிழர்கள் எவருமே கடந்த சுமார் 25 ஆண்டுகளில் ஓர் அகதி முகாமைக்கூடச் சென்று பார்த்ததில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அரசியல் பிரச்சினைகளோடு மனித உரிமை, மொழி, பண்பாடு போன்ற பலதரப்பட்ட தளங்களிலும் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படவேண்டும் என்று எனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரவிக்குமாரிடம் அன்பு பாராட்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்று ரவிக்குமார் வெற்றி பெற்ற செய்தியை சன் டி.வி. இறுதிவரை இருட்டடிப்புச் செய்தது. ரவிக்குமாருக்கு எதிராகப் போட்டியிட்ட வள்ளல் பெருமானின் ஆதரவாளர் ஒருவர், வள்ளல் அவர்கள் தோற்றுவிட்டதில் ஏற்பட்ட துக்கத்தை என்னோடு பகிர்ந்துகொண்டபோதுதான் ரவிக்குமார் வெற்றி பெற்ற, மகிழ்ச்சிகரமான அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது. இருப்பினும் தோல்வியின் ஆற்றாமையால் இருந்த நண்பரின் துக்கத்தை நானும் பகிர்ந்துகொண்டேன். நண்பர்களுக்குத் துக்கம் தரும் விஷயம் சில சமயங்களில் நமக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துவிடுகிறது.

சி.பி.எம். வேட்பாளராக நின்ற நண்பர் சு. வெங்கடேசும் தி.மு.க. வேட்பாளராக நின்ற தோழி சல்மாவும் தோல்வி அடைந்துவிட்ட வருத்தமான செய்திகளுடன் ரவிக்குமார் வென்ற செய்தியும் கிடைத்ததில் மனம் மகிழ்ச்சி, வருத்தம் என்ற இருநிலைகளுக்கிடையிலும் அன்று ஊடாடிக்கொண்டிருந்தது.

பல எழுத்தாள நண்பர்களும் தொலைபேசியில் அழைத்து இவ்விரு நிலை உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். தற்போது மௌனி வேஷம் பூண்டிருக்கும் எழுத்தாள முனிவர் ஒருவர் அன்று எல்லோருக்கும் ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்பிக்கொண்டிருந்தார். நண்பரொருவர் அதை எனக்கு அனுப்பிவைத்தார்.

அந்தச் செய்தி இதுதான்:

All writers defeated. Fate is hunting (sic) Tamil literature. They will come back to writing.

"எல்லா எழுத்தாளர்களும் தோல்வி அடைந்துவிட்டார்கள். விதி தமிழ் இலக்கியத்துடன் விளையாடுகிறது. அவர்கள் இப்போது மீண்டும் எழுத வந்துவிடுவார்களே."

சக எழுத்தாளர்களின் தோல்வியில் மகிழ்ச்சி காணும் இந்த அற்ப மனோபாவத்திற்குத் தக்க பதிலாக, ரவிக்குமாரின் வெற்றி அமைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தது.

தமிழக எழுத்தாளர்களின் வெகு ஜனப் பண்பாட்டு நுழைவு என்பது பொதுவாக ஆபாசமானது. மெட்டுக்கும் துட்டுக்கும் தமது ஆன்மாவைக் கழட்டிவிட்டு ஆடும் ஆளுமைகளையே நாம் இதுவரை அதிகமும் பார்த்துவருகிறோம்.

ரவிக்குமாரின் அரசியல் நுழைவு என்பதும் ஒரு வகையில் வெகுஜனப் பண்பாட்டிற்குள் அவர் ஆழமாக இறங்கியிருக்கும் விஷயம்தான். ஆனால் அவர் தனது ஆன்மாவின் துடிப்புகளைத் தமிழக மக்களின் துடிப்பாக மாற்றும் முயற்சியில் தனது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் சிந்தனையையும் இப்போது ஈடுபடுத்தி வருகிறார்.

அவரது முயற்சிகள் வெற்றி பெற இங்கே வந்திருக்கும் நண்பர்களில் வாழ்த்துபவர்கள் வாழ்த்த வேண்டும், பிரார்த்தனை செய்பவர்கள் பிரார்த்திக்க வேண்டும். தமிழிலோ வடமொழியிலோ ஆங்கிலத்திலோ லத்தீனிலோ அரபியிலோ இறைவனை வேண்டலாம். நேர்ச்சை எடுப்பவர்கள் நேர்ச்சை எடுக்கலாம். தேங்காய் உடைக்கலாம். ஆடு, கோழி பலியிடலாம். முடி இறக்கலாம். இப்போது 'டை' அடித்துக்கொண்டு வந்திருக்கும் ரவிமீது கண்பட்டுவிடாமல் இருக்கத் திருஷ்டி கூடக் கழிக்கலாம்.

அவர் நமது ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெற நாம் எல்லோரும் இயன்ற எல்லா விதத்திலும் அவருடன் நின்று பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

* வங்கி ஊழியராக இருந்த ரவிக்குமாரின் புனைப்பெயர் 'ஆதவன்'

உள்ளடக்கம்

Google Ads.....


Google