கம்பளத்து நாயக்கர்களின் திருமணம், பூப்புச் சடங்கு, கோவில் விழா ஆகியனவற்றில்
ஆவாரஞ்செடிக்கு முக்கியத்துவம் உண்டு. இந்நிகழ்ச்சிகளின்போது நன்றாக வளர்ந்த
ஆவாரஞ்செடி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றிலும் உள்ள புல்பூண்டுகளைச் செதுக்கி
அப்புறப்படுத்தித் தரையில் தண்ணீர் தெளித்துச் சுத்தப்படுத்தி வைப்பர். பின்னர்
ஆவாரஞ் செடிக்கு முன்னால் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியனவற்றுடன் கூடிய
தாம்பாளத்தை வைத்து வணங்குவர். செடியின் தூருக்கு மேலேயுள்ள தண்டுப் பகுதியில்
சந்தனப் பொட்டு வைத்து அதன்மேல் குங்குமப் பொட்டு வைப்பர். மஞ்சள் தோய்த்த தாலிக்
கயிறை ஆவாரஞ்செடிக்குக் கட்டுவதுடன், மணமகளின் தாலியைக் கொண்டு வந்து அதைச்
செடியின் அடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்வர்.
கம்பளத்தாரின் முக்கியத் தோல் இசைக் கருவியான 'தேவதுந்துபி' (உறுமி) என்ற கருவியை
இயக்கப் பயன்படுத்தும் குச்சிகளுள் ஒன்றாக ஆவாரம் குச்சி அமைகிறது. இடப் பகுதியில்
நொச்சிக் குச்சியாலும் வலப் பகுதியில் ஆவாரம் குச்சியாலும் ஓசை எழுப்பப்படும்.
n n n
தென்மாவட்ட அருந்ததியர்களின் செருப்புத் தைக்கும் தொழில் நுட்பத்தில் ஆவாரஞ்
செடிக்கு முக்கிய இடமுண்டு. செருப்புத் தைப்பதற்காகத் தண்ணீரில் தோலை ஊற
வைக்கும்போது நீரில் ஆவாரம் பட்டைகளையும் உரித்துப் போட்டுவிடுவார்கள். இதனால்
இரண்டு பயன்கள் கிட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர். முதலாவதாக ஆவாரம் பட்டையுடன்
ஊறப்போட்ட தோல் மிருதுவாகி வெட்டுவதற்கும் தைப்பதற்கும் இணக்கமாக இருக்கும்.
இரண்டாவதாக, கிராமப்புறங்களில் வீட்டின் முன்பகுதி என்பது பெரும்பாலும் தெருவாக
இருக்கும். முற்றம் இருந்தாலும் சுற்றுச் சுவர் இராது. இதனால் புதிய தோலின்
வாடையால் ஈர்க்கப்பட்ட நாய்கள் எளிதாகச் செருப்பைக் கவ்விச் சென்றுவிடும். ஆவாரம்
பட்டையுடன் நீரில் ஊறிய தோலால் செய்த செருப்பின் மணம் நாய்களை ஈர்க்காது.
n n nீ
வேளாண்மையிலும் ஆவாரஞ்செடிக்கு முக்கிய இடமுண்டு. இதைக் கிளைகளுடன் ஒடித்து, நெல்
பயிரிடும் வயலில் தொழி கலக்கிய பின்னர் (சேறு கலக்கிய பின்னர்), அடி உரமாகப் போட்டு
நன்றாக மிதித்துச் சேற்றில் அமிழ்த்தி விடுவர். இரண்டு நாட்கள் கழித்துப்
பார்த்தால் காப்பி டிகாஷன் கொட்டியதுபோல் நிலம் காட்சியளிக்கும். நெல்லுக்குத்
தேவையான தழைச்சத்தை வழங்குவதுடன் நெல் மணிகள் நன்றாகப் பிடிக்கவும் ஆவாரை உதவும்.
இதற்கு நேர்மாறாக ஆட்டுகிடை (பட்டி) போடுவதால் கிட்டும் தழைச் சத்து, நெற்பயிர்
பசுமையாக வளர மட்டுமே உதவும். இவ்வுண்மையை வெளிப்படுத்தும் வகையில் 'ஆடு பயிர்
காட்டும். ஆவாரை நெல் காட்டும்' என்ற பழமொழி உண்டு.
n n n
ஆவாரையின் இலை, பூ, விதை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் வாய்ந்தவை.
ஆவாரம் பூவைப் பறித்து மடிப்பகுதியில் செருகிக்கொண்டு வெயிலில் நடந்து சென்றால்
வெயிலினால் ஏற்படும் வயிற்றுச் சூடு குறையும் என்பது நம்பிக்கை.
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து அப்பொடியுடன் கருப்பட்டி அல்லது
பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில்
தொடர்ந்து குடித்து வந்தால் நீர்க் கடுப்பு நீங்குவதுடன் உடல் சூட்டைக் குறைக்கும்.
உடலுக்குப் பொலிவு தரும்.
ஆவார இலையையும் பூவையும் நிழலில் உலர்த்தி நன்றாகக் காய்ந்தவுடன் இரண்டையும்
ஒன்றாகக் கலந்து இடித்துச் சலித்து அப்பொடியைத் தேய்த்துக் குளித்துவந்தால், தோல்
சொரசொரப்பு நீங்கி மிருதுவாய் இருக்கும். தலைமுடியும் மிருதுவாகும். இதைப் பாசிப்
பயிறு பொடியுடன் கலந்தும் குளிக்கலாம். சிலர் நறுமணத்திற்காக வெட்டிவேர்,
சம்பங்கிக் கிழங்கு ஆகியவற்றை இடித்துச் சலித்து இப்பொடியுடன் கலந்துகொள்வர்.
இப்பொடி தயாரிக்கும்போது இறுதியாக மிஞ்சும் சக்கையைத் தொட்டிகளில் வளர்க்கும்
செடிகளுக்கு உரமாகப் போடலாம்.