|
மதிப்புரை
டி.எஸ். சொக்கலிங்கம்
ஏ.என். சிவராமனின் பத்திரிகை உலகம்
பொன். தனசேகரன்
வெளியீடு:
டி.எஸ். சொக்கலிங்கம்
சாகித்திய அகாதெமி,
குணா பில்டிங்ஸ்,
443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை -18
(பக். 132 + 8, ரூ. 25)
வெளியீடு:
ஏ.என். சிவராமனின் பத்திரிகை உலகம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
2வது முதன்மைச் சாலை,
மையப் பல்தொழில்நுட்ப வளாகம்,
தரமணி, சென்னை - 113
(பக். 96 + 8, ரூ. 30)
பா. மதிவாணன்
இந்திய விடுதலைப் போராட்டத்தின் காந்தியடிகள் காலத்தில் -
1920களில் - அரசியல் இதழாளர்களாகத் தமிழ் இதழ் உலகில் அடியெடுத்து வைத்தவர்கள்
டி.எஸ். சொக்கலிங்கமும் (1899-1966) ஏ.என். சிவராமனும் (1904-2001).
சொக்கலிங்கம்தான் நண்பர் சிவராமனை இதழியல் உலகிற்கு அழைத்துவந்தவர். தம் காந்திய
அரசியல் நிலை நின்று இருபதாண்டுக் காலம் இணைபிரியா நண்பர்களாய் அக்காலத்தில்
தலையெடுத்த வணிக இதழியல் போக்கை எதிர்த்துப் போராடிய அவர்கள் 1940களில் இதழ்த் துறை
பெருந் தொழில்மயமானபோது இருவேறு நிலை நின்று எதிர்கொண்டார்கள்.
இவ்விருவரையும் பற்றி 'டி.எஸ். சொக்கலிங்கம்', 'ஏ.என். சிவராமனின் பத்திரிகை உலகம்'
எனும் இரு நூல்களை எழுதியுள்ளார் பொன். தனசேகரன். சொக்கலிங்கம் பற்றிய நூல்
சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காகவும் சிவராமன் பற்றிய
நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைச் சொற் பொழிவு
நிகழ்த்தவும் எழுதப்பட்டவை.
டி.எஸ். சொக்கலிங்கம் மணிமலர் (1959), டி.ஜி. ஏகாம்பரத்தின் 'பேனா மன்னர்
சொக்கலிங்கம்'(1961), பா. மதிவாணனின் 'டி.எஸ். சொக்கலிங்கம் - அரசியல், இதழியல்'
(1998) ஆகியவை சொக்கலிங்கம் பற்றிய குறிப்பிடத்தக்க நூல்கள். இவற்றைப் பயன் கொண்டு
புதிய தகவல்களையும் தேடித் தந்திருக்கிறார் தனசேகரன்.
வாழ்க்கைச் சித்திரம், இதழியல் பணிகள், புத்தகப் பணிகள், இலக்கியப் பணிகள் எனும்
நான்கு பிரிவுகளோடு சொக்கலிங்கத்தின் வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய நூல்களின்
பட்டியல் ஆகியவற்றைப் பின்னிணைப்புகளாகக் கொண்டு துணை நூற்பட்டியலுடன் நிறைகிறது
நூல்.
அடிப்படையில் சொக்கலிங்கம் ஓர் இதழியலாளரேயாதலின் நூலின் சரிபாதி அவருடைய இதழியல்
பணிகளைப் பற்றியதாயிருப்பது இயல்பானதே.
வெளிப்படையாகவும் நேரடியாகவும் விஷயத்தைச் சொல்ல வேண்டும் என விரும்பிய
சொக்கலிங்கத்திற்கு அத்தகைய இதழியல் நடையை உருவாக்கி எழுதிய சேலம் வரதராஜுலு
நாயுடுவின் 'தமிழ்நாடு' இதழில் பணியாற்றக்கிடைத்த வாய்ப்பு நல்ல தொடக்கமாயிற்று.
இத்தொடக்கக் காலகட்டத்திலேயே தனித்தன்மை மிக்க பத்திரிகையாளராகத் தம்மை
ஸ்தாபித்துக்கொண்டாரென்பதைத் தனசேகரன் சுட்டிக் காட்டுகிறார்.
நாயுடுவின் அரசியல் நிலைப்பாட்டில் கருத்து வேறுபட்ட சொக்கலிங்கம் 1931இல் 'காந்தி'
எனும் காலணா இதழைத் தொடங்கினார். கருத்துப்பரப்பலே அடிப்படை நோக்கம் என்றாலும்
இதழியல் கூறுகளோடும் உத்திகளோடும் அதனை நடத்தியவர். 'தினமணி'யின் முதல் ஆசிரியராகப்
பொறுப்பேற்று, துணையாசிரியர்களுக்கு உரிமை தந்து பயிற்றுவித்தார்;
காங்கிரஸ்காரராயினும் ஜனநாயகத்துடன் கட்சி நடவடிக்கைகளை விமர்சிக்கத் தயங்குவதில்லை
என்பவற்றையெல்லாம் பொருத்தமான மேற்கோள் நிரல்களால் புலப்படுத்தியிருக்கிறார்
தனசேகரன்.
ஜனநாயகம் நடைமுறையில் செயல்படும் விதம் (ப. 44) பொதுக் காரியங்களில் நம் மக்களிடம்
காணும் நாணயக் குறைவு (ப.45), சாதி வேறுபாடுகளின் தன்மை (பக். 45-46), மதம்
தொடர்பான கேலிக்கூத்துகள் (பக். 46-47), அம்பேத்கர் மதம் மாற விடுத்த அழைப்புப்
பற்றிய அபிப்ராயம் (ப. 48) தமிழ்த் திரைப்படங்களின் குறைபாடுகள் (ப.50) முதலியன
பற்றிய பகுதிகளை விரிவாக எடுத்துக்காட்டியிருப்பதும் சொக்கலிங்கம் கால 'தினமணி'ப்
போக்கின் முன்னோட்டப் படம்போல் அமைந்துள்ளது.
1943இல் உதவி ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைக்காகப் போராடி, உதவி ஆசிரியர் பலருடன்
வெளியேறிய சொக்கலிங்கம் 'எனது ராஜினாமா' எனும் நூலில் தமது நிலைப்பாட்டை
நியாயப்படுத்தினார். 'தினமணி' நிர்வாகமும் தன்னிலை விளக்கப் பிரசுரம் ஒன்றை
வெளியிட்டது. 1944முதல் 1952 வரை 'தினசரி' எனும் நாளேட்டை நடத்தினார்; அதில் உதவி
ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் தந்தார். தொழிலாளர் போராட்டத்தால் அது நின்றுபோயிற்று.
'தினசரி'க்குப் பிறகு முக்கியப் பத்திரிகைகளில் அவருக்கு இடமிருக்கவில்லை. "'தினமணி'யிலிருந்து
வெளியேறிய சொக்கலிங்கம், சில காலம் கழித்து சிவராமன் மூலம் மீண்டும் அங்கு பணிபுரிய
வந்தபோது அவருக்கு அலுவலக நிர்வாகத்திலேயே இடம் அளிக்கப்பட்டதையும் கருத்தில்கொள்ள
வேண்டும்" என்று சொக்கலிங்கத்தின் வாழ்க்கையிலும் தமிழ் இதழியல் வரலாற்றிலும்
நேர்ந்துவிட்ட கால மாற்றத்தைத் தாம் கலவாமல் வாசகர் முன்வைத்து நகர்கிறார் தனசேகரன்.
'தினசரி'க்குப் பின்னர் அவர் ஆசிரியராயிருந்த 'ஜனயுகம்', 'பாரதம்', 'நவசக்தி' ஆகியவை
கட்சி / கட்சிக் குழு இதழ்களாகும்.
தம் நூல்களை வெளியிடுதல், பிறர் நூல்கள், நிறுவனங்கள் உருவாக்கல் எனும் இரு
நிலைகளில் சொக்கலிங்கத்தின் புத்தகப் பணிகளை விளக்கியிருக்கிறார் தனசேகரன்.
சொக்கலிங்கம் இதழியல் எழுத்துக்களோடு சிறுகதை, நாவல், நாடகம், பா எனப் பிற
வடிவங்களிலும் எழுதிப் பார்த்திருக்கிறார். இவற்றின் இயல்பைப் புலப்படுத்தும்
வகையில் மாதிரிக் காட்டுகள் தரப்பட்டுள்ளன.
"இதற்கு முன் நவீனங்கள் எழுதியவனுமல்ல; தமிழ் பாஷையில் தேர்ச்சியும் கிடையாது;
எல்லாவற்றிற்கும் பிரதானமாய் வேண்டிய கற்பனா சக்தியும் கிடையாது" என்று தம் 'பாய்
பரமானந்தன்' நாவல் முன்னுரையில் சொக்கலிங்கம் குறிப்பிடுவதையும் "சொக்கலிங்கம் தான்
ஒரு படைப்பாளி என்று சொல்லிக்கொண்டதில்லை" என்று சி.சு செல்லப்பா
சொக்கலிங்கத்திற்கான இரங்கலுரையில் எழுதியதையும் பொருத்தமான இடங்களில் காட்டுகிறார்
தனசேகரன்.
சொக்கலிங்கத்தின் குடும்பப் பின்னணி, அரசியல் ஆர்வமும் செயல்பாடுகளும், இதழியல்
நுழைவும் எழுச்சி வீழ்ச்சிகளும், இதழாளர்களை உரிமை தந்து உருவாக்கல், இதழியல் நெறி
பேணல், மொழி இலக்கிய நோக்கு, தனிமனித ஆளுமை என அவரது எழுத்துலகத்தைச் சற்று விரிவாக
அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.
தகவல் பதுக்கல் மனப்பான்மை மேலோங்கியுள்ள தமிழாய்வுச் சூழலில், கடினம்தான் எனினும்
இருப்பவற்றோடு அவ்வப்போது கிடைத்துவருகிற புதியவற்றையும் சேர்த்துச் சொக்கலிங்கம்
வரலாற்றை விரித்தெழுத வேண்டிய தேவை உள்ளது.
'ஏ.என். சிவராமனின் பத்திரிகை உலகம்' சிறு நூலாயினும் முதல் நூல். சிவராமனின்
வாழ்க்கைக் குறிப்பை அடுத்துப் பத்திரிகையுலகம் பற்றி மூன்று பகுதிகள் உள்ளன. முதல்
பகுதி பெரிதும் அவரது இதழியல் கொள்கை பற்றியதாகவும் இரண்டாம் பகுதி அரசியல், சமூக,
பொருளாதாரப் போக்குகள் பற்றிய அவருடைய தலையங்கங்களையும் கட்டுரைகளையும்
மாதிரிக்காட்டாகத் தருவதாகவும் மூன்றாம் பகுதி அவருடைய நூல்கள் பற்றியதாகவும்
அமைந்துள்ளன. பின்னிணைப்புகளாகச் சிவராமனின் சிறுகதை ஒன்றும் நூற்பட்டியலொன்றும்
தரப்பட்டுள்ளன.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அறிவிப்பை ஏற்றுக் கல்லூரிப் படிப்பை விட்டு
அரசியலில் ஈடுபட்ட சிவராமன், சொக்கலிங்கத்தால் இதழியல் உலகிற்குக் கொண்டுவரப்பட்டார்.
'தமிழ்நாடு, 'காந்தி', 'ஹரிஜன்' (தமிழ்ப் பதிப்பு) இதழ்களில் பணியாற்றிய பின்னர்
1934 முதல் 1943 வரை 'தினமணி' துணையாசிரியராயிருந்தார். இடையில் சொக்கலிங்கம்
தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றபோது 25.11.1940 முதல்
18.081941வரை 'தினமணி' ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். மீண்டும் 1943 முதல் 1987வரை
'தினமணி' ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 'அவர் போன்று 83 வயதுவரை ஒரே
பத்திரிகையில் பணிபுரிவது இக்காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம்'
என்கிறார் தனசேகரன். இவர் இதழாசிரியர்-உரிமையாளர் உறவின் தன்மை மாறிய காலப்போக்கை
உணர்ந்து தம்மை முன்னிறுத்திக்கொள்ளாமல் நிதானமாக இயங்கியதே இதற்குக் காரணம் என்பதை
உணரமுடிகிறது.
இந்நூல், தேர்ந்தெடுத்து நிரல்படுத்தப்பட்ட நெடிய மேற்கோள்களால் நிரம்பியிருக்கிறது.
சிவராமனின் இடையறாத படிப்பு, இதழியல் கொள்கையும் நடைமுறையும், தமிழ் இதழியல் மொழி
பற்றிய அவரது தெளிவு, அவரது அரசியல், சமூக, பொருளாதாரப் பார்வை, ஆங்கில ஏடுகளுக்கு
இணையான உள்ளடக்கத் தரம், வாசகரை மேன்மேலும் உயர்த்த முற்படுகிற, வாசகரின்
சிந்தனைக்கும் முடிவுக்கும் இடம் தருகிற அவரது எழுத்து முறை, உத்தி, நடை, நேரடியாக
உற்றறிந்து எழுதும் முயற்சி, இதழ்த் துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள்,
அவற்றைப் பயன்படுத்திக்கொண்ட விதம் என சிவராமனின் பத்திரிகை உலகம் பற்றி ஒரு
படத்தைத் தாம் குறுக்கிடாமல் வாசகர் முன் வைக்கிறார் தனசேகரன்.
சிவராமனின் கருத்துகளோடு வேறுபட வாய்ப்பிருப்பதை ஆங்காங்கு (பக். 3, 9, 55) சுட்டும்
தனசேகரன் கீழ்வெண்மணிப் படுகொலைகள் பற்றி சிவராமன் 'மேலோட்டமான கண்ணோட்ட'த்தில்
தலையங்கம் எழுதியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது என்கிறார். தனசேகரனின் இந்தக்
குறிப்புரைதான் ஆச்சரியப்படுத்துகிறது. அத்தலையங்கத்தின் 'கண்ணோட்ட'த்தை விடச்
செய்தித் திரிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. "கிஸான்களிடையே மோதல்: 42 பேர்
வெந்து மரணம்" (27.12.1968) என்ற தலைப்பில் செய்தி. மறுநாள் 'பரிதாபமான கோர
நிகழ்ச்சி' என்கிற தலைப்பில்,
... கீழ்வெண்மணி சம்பவம் ஒரு குறிப்பிட்ட கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கும்
அதை எதிர்த்த தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட சண்டை. இதை நிலச் சுவானுக்கும்
கிஸான்களுக்கும் நடந்த சண்டை போல கம்யூனிஸ்டுகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்...
வன்செயல்களைத் தூண்டுவோரை சர்க்கார் பார்த்துக்கொள்ளும். (28.12.1968)
எனத் தலையங்கம் (நல்ல வேளை தனசேகரன் இவற்றை அப்படியே மேற்கோளாகத் தந்துவிட்டார்).
சிவராமனைப் பற்றிய கடுமையான விமரிசனங்களை முன்வைக்க முடியு மென்றாலும் ஒதுக்கிவிட
முடியாது; கூடாது. "பத்திரிகையின் சகல பரிமாணங்களிலும் சிவராமனுக்கு நல்ல அனுபவம்
உண்டு. பத்திரிகையுலகில் அவரைப் போல எண்ணற்ற துறைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை
அரை நூற்றாண்டுக்கு எழுதிக் குவித்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்" என்பதைக்
கணக்கிலெடுத்துக் கொண்டால் சிவராமனின் வரலாறே ஏறத்தாழ அறுபதாண்டுத் தமிழ் இதழியல்
வரலாறாகிவிடும். சிவராமன் (சொக்கலிங்கமும்) தம் பத்திரிகையுலக அனுபவங்களை எழுதாமல்
விட்டுவிட்டதும் செய்தி, சொற்பயன்பாடு ஆகியன பற்றிய அவரது வழிகாட்டல் குறிப்பேடு
மறைந்து போனதும் பற்றித் தனசேகரன் அவலவுணர்வை வெளிப்படுத்துகிறார் (தமிழ்
வரலாற்றில் இத்தகைய அவலங்கள் பல, மறைந்தவையாகக் கருதப்படுபவை, எதிர்பாராமல்
கிடைத்ததும் உண்டு). போனவை போகச் சொல்லாட்சி, நடை, இதழியல் நெறி முதலியன குறித்து
அவ்வப்போது அச்சில் வந்த குறிப்புகளையாவது தமிழ் இதழியல், இலக்கிய ஆய்வாளர்கள்
தொகுக்க முற்படலாம்.
இவ்விரு நூல்களும் கால, பக்க, பொருள் வரையறைகளுக்குட்பட்டுக் கச்சிதமான
அறிமுகங்களாக அமைந்துள்ளன.
தனசேகரன் தமக்கு நூல்கள் தந்துதவியோர்க்கு உரிய முறையில் நன்றி சொல்லியிருப்பதை -
இயல்பானதென்றாலும் தமிழாய்வுலகில் அருகி வருவதால் - பாராட்டியாக வேண்டும்.
உள்ளடக்கம் |