Google   www kalachuvadu.com

கடிதங்கள்

பக்கங்களை அதிகரித்ததோடு இதழைப் பெரிய அளவில் மாற்றிக் கண்களையும் மனத்தையும் கவர்ந்துவிட்டீர்கள். வெகு ஜன இதழ்கள் வர்த்தக நோக்கில் தங்கள் சுயத்தைத் தொலைத்துவிட்டதால் தரமான சிறுகதைகளையோ ஆழம் பொதிந்த கட்டுரைகளையோ வாசிக்க முடியாமல் போய்விட்டது. அந்த மாபெரும் குறையைக் காலச்சுவடு போக்கிவருகிறது. காலச்சுவடு போன்ற இதழ்கள் வெகுஜன இதழாக அந்தஸ்து பெற்றால் நலிந்து கொண்டிருக்கும் இலக்கிய உலகைத் தூக்கி நிறுத்த முடியும். தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி.

ப. ராமகிருஷ்ணன்
காயக்காடு 614 624

இலக்கியத்தோடு நெருக்கமுள்ளவர்கள் அதிகப் பரிச்சயமில்லாதவர்களிடம் தாங்கள் கூற வேண்டியவற்றை முன் வைக்கும்போது சில நெருடல்கள் உண்டாகும்; அல்லது கேட்போரின் நக்கலை எதிர்கொள்ள வேண்டிவரும். கருத்துகளின் தெளிவும் படைப்பில் காட்டும் அக்கறையும் ரவிக்குமாருக்கு அவருடைய உரையை எழுதியதில் கைகொடுத்துள்ளதெனலாம். அரசியல் பற்றிய பத்திகள் கூடுதலாக உள்ளமை, ஆறுதலாக உள்ளது.

நா. சிவசுப்பிரமணியன்
பாளையங்கோட்டை 627 002

ஈழப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் இன்றைய அரசியல்வாதிகள் மற்றும் ஒரு சில தமிழ் ஆர்வலர்களுக்குச் சரியான பாடம்புகட்டி அரசின் கவனத்தைத் திசை திருப்பிய ரவிக்குமாருக்கும் 'தொலைந்த திசை'களை வெளியிட்ட காலச்சுவடுக்கும் நன்றி.

து. நம்பி
சுத்துக்குளம் காலனி

ஆகஸ்ட் இதழின் தலையங்கம் நடு நிலையுடனும் யதார்தத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. ஈழத் தமிழர்களின் கண்ணீர்ப் பயணமாகிப்போன அகதிகளின் அவலத்தை உலகறியச் செய்த ரவிக்குமாரின் அறிக்கை மனத்தைத் தொட்டது. இவ்வளவு களேபரத்திற்கும் இடையே இட ஒதுக்கீட்டைப் பற்றியும் அய்யப்பன் கோவிலுக்குப் பெண்கள் வந்தால் தீட்டு என்றும் செயற்கைப் பனி லிங்கத்தால் பக்தர்கள் அவதி என்றும் சிதம்பரம் நடராசர் ஆலய அர்த்த மண்டபத்தில் திருவாசகம் பாடத் தடை என்றும் ஆகம விதிகளுக்கு மாறான எதுவும் லோகத்தை அழித்துவிடும் என்றும் ஆதிக்க சக்திகளின் அறிவுஜீவிகளாகத் தங்களை நினைத்துக்கொள்ளும் சோ. ராமசாமி, சிகாமணி, நடிகர் எஸ்.வி. சேகர் போன்றவர்கள் வர்ணாசிரமத் தர்மத்தைக் காக்கும் எண்ணத்துடன் செயல்படுவதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனானப்பட்ட சங்கராச்சாரிகளும் சந்திராசாமிகளும் தந்திரிகளும் பணிக்கர்களும் தரம்கெட்டு சாஸ்திர சம்பிரதாயங்களை மீறுகிறார்கள்.

கு. சின்னதுரை
சாக்காங்குடி 608 201

இலக்கியக் களத்தில் உயர்சாதிக் கூட்டணி என்னும் பொ. வேல்சாமியின் கட்டுரை தமிழ் இலக்கியப் பரப்பின் மீது ஒரு பருந்துப் பார்வை பார்த்துத் தமிழுக்குப் புதிய திசைவழியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தலித்தியத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும்படியாகக் கட்டுரை அமைந்துள்ளது. பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதிக் கூட்டு என்றைக்கும் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரானதாவே இருந்து வந்துள்ளது. பொத்தாம் பொதுவாகப் பார்ப்பனிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு என்று பேசுகிற இடைநிலைச் சாதித் தமிழறிஞர்கள் ஒருபோதும் தாங்கள் எவ்வளவு தூரம் சாதிப் பண்பற்றவர்கள் என்பதைச் சுய விமர்சனம் செய்து கொள்வதேயில்லை. பூணூல் போட்டுக்கொண்டே மார்க்சியம் பேச முடிகிறபோது சமூகத்தில் சாதி வெறியுடனேயே தமிழ், தமிழன், தமிழ்த் தேசியம், தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றையும் பேச முடியும் என்பதற்கு மறைமலையடிகள் தொடங்கி அறவாணன் வரை எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல் பார்ப்பனியம் பார்ப்பனர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது ஒவ்வொருவர் மனநிலையிலும் ஊடுருவிக் கிடக்கிறது. குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் சைவ மதம் சார்ந்த கருத்தியல்கள் உடையவர்களிடம் அது கூடுதலாக வெளிப்படுவதைக் காண முடிகிறது. திராவிட இயக்கங்கள் செய்த தவறுகளில் மிக மோசமான ஒன்று எல்லாத் தவறுகளுக்கும் பார்ப்பனர்களை மட்டுமே குற்றம்சாட்டியது. பார்ப்பனர்களுக்குக் கொஞ்சம்கூடச் சளைக்காத பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் தலித்துக்களின் மீது திணிக்கிற வன்கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் காப்பது திராவிட இயக்கத்தின் இயல்பான பண்பு. இந்தத் திருட்டுத்தனத்தை இலக்கியத்திலிருந்தும் இலக்கிய வரலாற்றிலிருந்தும் பொ. வேல்சாமி அம்பலப்படுத்துகிறார். பார்ப்பன - சூத்திரர்களின் கூட்டு சாதிய அடிமைத்தனத்தை வலுப்படுத்தத்தான் செய்யும். சமயமற்ற சமூகத்தை உருவாக்க ஒருபோதும் பயன்படாது. குறிப்பாக, சமூக அடித்தளத்தில் ஒடுக்குண்டு கிடக்கும் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரானதாகத்தான் போய் முடியும். அவ்வகையில் இவரது ஆய்வுக் கட்டுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கான தொடக்கத்தை அயோத்திதாசப் பண்டிதரின் நூல்களிலேயே அறிய முடிகிறது. இக்கட்டுரையை வெளியிட்ட 'காலச்சுவடு' பாராட்டுக்குரியது.

இராச. செயபாண்டியன்
கிராமத்துமேடு

அகதிகளின் நிலைகளைக் கண்ட பின் 26 பரிந்துரைகளை ரவிக்குமார் தந்துள்ளார். இவற்றிற்கு அப்பால் மிக முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது, அகதிகள் என்று ஆக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே பத்துப் பத்துப் பேராகக் குடும்பம் என்பதுபோல் கூட்டுறவு அமைப்புகளை ஒன்று திரட்டி அதன் மூலம் தமது வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில்தான் இந்திய அரசிடம், தமிழக அரசிடம் உரிய உதவி பெற வேண்டும். அவ்வாறின்றிச் சர்வதேசச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்கான உதவி பெற வேண்டுமென்று காத்திருக்கும் நிலை மாற வேண்டும்.

தி. ரங்கசாமி
மதுரை 625 016

இன்று வளர்ந்துவரும் இளைய கர்நாடக இசைக் கலைஞர்களில் சஞ்சய் சுப்ரமணியன் அவர்களின் வளர்ச்சி, முறைப்படி இருந்துவருவதற்குச் சாட்சி அவரது 16 பக்க நேர்காணல்தான்.

இதில் அவரது குருபக்தி, குருவந்தனம், குருவினிடம் கற்றறிந்த இசைப் பட்டறிவுப் பயிற்சி ஆகியவை முன்னிற்கின்றன. முதுபெரும் வயலின் கலைஞரான நாகை முரளிதரனிடம் எத்துணை விஷயங்களை அடக்கமாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்பதற்கு யாருமே பாடாத, தொடாத, பயப்பட்டுக் கொண்டிருந்த ராகமான விவாதியை அவரது உந்துதலால் பாடிப் பெயர்பெற்றதைச் சொல்லலாம்.

மூத்த வித்வான்களை எந்தளவுக்கு மதிக்கிறாரோ அப்படியே தன் சமகால இசைக் கலைஞர்களான ஷேக் சின்ன மௌலானாவின் பேரனான காசிம் பாபுவையும் நெய்வேலி சந்தான கோபாலன் போன்றோரின் திறமை, சேவை ஆகியவைகளையும் பாராட்டியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஸ்ரீ ராமநவமியில் ராமனைப் பற்றியும் விநாயக சதுர்த்தியில் விநாயகரைப் பற்றியும் பாடுவதில்லை என்ற நோக்கம் சற்றுத் தவிர்க்கப்பட வேண்டும். ரசிகப் பெருமக்கள் ஆர்வத்தைக் கருதியும் சில பாடல்களைப் பாட சஞ்சய் முன்வர வேண்டும்.

ஆரம்பக் காலத்தில் சாகித்தியங்களைச் சுத்தமாகச் சொல்வதில்லை என்று உண்மையைப் பேசியது அவரது நேர்மைக்கும் முதிர்ச்சிக்கும் அறிகுறி.

எஸ். முரளி
ஸ்ரீரங்கம்

'பொறுப்பற்ற ஆவேசம்' (இதழ் 79) உன்னதமிக்க தலையங்கம். முற்பட்ட வகுப்பினர் மட்டும்தான் திறமை மிக்கவர்கள்; பிற்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தகுதியில், திறமையில் குறைந்தவர்கள் என்று காலங்காலமாகத் தள்ளிவைத்தும் ஒதுக்கிவைத்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமலே அவர்களைத் தகுதியற்றவர்களாக்கி வைத்துள்ளது இந்த வர்ணாசிரமச் சமூகம். உயர்சாதியினர் தங்கள் கல்விப் பயனை வெளிநாடுகளுக்கே பயன்படுத்துகின்றனர்; அர்ப்பணிக்கின்றனர் என்ற கருத்தைத் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி உணர்த்தியுள்ளீர்கள். இதே கணக்கில்தான் பெண்கள் படிப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் ஒதுக்கிவைத்ததால் பெண்கள் வரதட்சணை என்ற மகா கொடுமையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோலச் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு இல்லாததால் வேலைவாய்ப்பில் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசு இம்முறை உறுதியாக இருக்க வேண்டும்.

ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்
கோவை - 8

இதழ் 79இல் வெளியான தலையங்கம் குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்டிருந்து 1988, 89 காலப் பகுதிகளில் நிகழ்ந்த அத்துமீறல்களைச் சராசரியாகப் பதினைந்து பக்கங்களில் காலச்சுவடு அப்போது பதிவுசெய்திருந்தது. பிறகு 1995இல் வலிகாமத்திலிருந்து நாங்கள் இடம்பெயர நேர்ந்தபோது அந்த இடம்பெயர்வு பற்றிய குறிப்புகளும் காலச்சுவடில் வந்ததாக ஞாபகம். இன்றிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையின் தீவிரத்தன்மையை உணர்ந்து இப்போதும் வந்திருப்பது என் போன்றவர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

பழனிவேள் ஒரு தேர்ந்த படைப்பாளி, நல்ல விமர்சன நோக்குடையவர் என்பது எனது அபிப்ராயம். அப்படியிருக்க, புதுப்பேட்டை இந்தியக் கறுப்பர்களின் திரைப்படம் எனச் சறுக்கியது ஏனோ? மூன்றாந்தரக் குப்பையான புதுப்பேட்டையைப் பழனிவேள் இந்த வகையில் பகுப்பாய்வு செய்வது வாசகர்களின் நல்ல சினிமா ரசனையை மேம்படுத்த உதவுமா? இது போன்ற திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை விடுத்து ஜானகி விஸ்வநாதன் போன்றோரது வித்தியாசமான சினிமா முயற்சிகள் பற்றி எழுதுவது பயன்தரக்கூடியது.

க. அகிலேஸ்வரன்
யாழ்ப்பாணம்

வகுப்புவாத அரசியல் மற்றும் வன்முறை காரணமாகக் கடந்த காலங்களில் பெற்ற காயங்களின் வடு இன்னமும் அங்கு மறையாமல் நின்றது இத்தகைய கொடுந்தாக்குதல்களை மன உறுதியோடு எதிர்கொள்ள வழி வகுத்தது. குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தவுடன் அரசாங்கம் மற்றும் இதர மீட்புக் குழுவினர் களமிறங்கும் முன்பே பெருமளவில் மும்பை மாநகரச் சேரிகளின் விளிம்பு நிலை மக்கள் அசாத்தியமான துணிச்சல் மற்றும் மனிதாபிமானத்தோடு மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டிருந்தனர்.

சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை வளர்த்து அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்பவர்களையும் இந்துத்துவ எதிர்ப்பு என்கிற போர்வையில் சிறுபான்மை மத அடிப்படைவாதத்தைச் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த போலி அறிவுஜீவிகளையும் தலைகுனியச் செய்திருக்கும் மும்பைச் சமூகம், ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கும் முன்னுதாரணமாக இருப்பதற்கான முழுத் தகுதியையும் பெற்றுள்ளது.

இரா. முருகானந்தம்
தாராபுரம்

உள்ளடக்கம்

Google Ads.....


Google