Google   www kalachuvadu.com

கட்டுரை :

ஆப்பிரிக்காவில் சாதிமுறை

தொடர்ச்சி...

உலோக நாகரிக சமூகங்களின் வீழ்ச்சியும் விவசாயக் குடிகளின் எழுச்சியும்

எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செம்பு மற்றும் இரும்பு உலோகப் பண்பாடுகள் மேற்காசியாவிலிருந்தே சென்றுள்ளன. ஆயர் குடியிலிருந்தே அரசர்கள் வந்ததாக எத்தியோப்பியாவில் கூறப்படுகின்ற கதை, முதன்முதலில் செம்பு உலோக நாகரிகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றதாகக் கருதப்படும் கண்ணனின் யது குலத்தைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். உகாண்டாவில் ஹமிடிக் இனக் குழுவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் ஆயர்களாகவும் போர்க் குடிகளாகவும் உள்ளனர். இதுவும்கூட யது குலத்தைக் குறிப்பதாக நாம் கருத இடமளிக்கிறது. மேற்காசியச் சமூக உருவாக்கத்தில் ஹமிடிக் இனக் குழுவினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். செனகல் நாட்டில் இந்தியாவில் வழங்கப்படுவதைப் போலவே கண்ணன்-கம்சன் கதை சிற்சில மாற்றங்களுடன் வழங்கப்படுவதும் கருத்தில்கொள்ளத்தக்கது. பொதுவாகப் போர்க் குடிகள் தங்கள் ஆட்சியதிகாரத்தை நிறுவுவதற்கும் மனித வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் உலோகப் பயன்பாடு உதவுகிறது. இத்தகைய உலோகத்தைத் தயாரிப்பவர் ஆப்பிரிக்கச் சமூகங்களில் கீழோராகக் கருதப்படுவது முரணான ஒன்று. ஆனால் இம்முரண்பாட்டின் தர்க்கத்தைப் புரிந்துகொள்ள நமக்குச் சில குறிப்புகளும் கிடைக்கின்றன.

சாதிகளின் தோற்றம் குறித்து சூடானின் மேற்குப் பகுதியில் ஆய்வு செய்த யோரோ டையாவோ (Yoro Diao) நூலே (கோமாளிகள்) சாதி பற்றி ஆய்வு செய்தபோது, எகிப்திலிருந்து ஜா-ஓகோ (Jaa-ogo) வந்தபோது அவர்கள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். ஜா-ஓகோக்கள் இரும்புத் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்கள் என்பது ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட கருத்து. அவர்களின் தலைவனான கௌம்பா வாலிக்கு (Coumba Wally) இரும்பை உருக்கி விற்கின்ற தனிச் சிறப்புரிமை இருந்ததாகக் கூறுகிறார் கேப்டன் ஸ்டெஃப் (Captain Steff). செய்க் மௌசா கமாராவின்படி (Cheik Mousa Camara), ஜா-ஓகோக்கள் வெறும் இரும்பு உருக்கி விற்பனை செய்வது மட்டுமின்றி ஃபவுட்டா (Fouta) பகுதியை ஆட்சி செய்தும் இருந்துள்ளனர். அப்படியானால் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர்கள், போரில் அவர்கள் வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதையே காரணமாகக் கூறுகின்றனர். "சோசோவின் கருமார் வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசனான சுமாங்குரு காண்டேவை கானாவின் சோனின்க்ஸ் இனக் குழுவைச் சேர்ந்த சவுன்ஜாத கைத, கிரினா போரில் (1220-1235) தோற்கடித்தார். சுமாங்குருவின் இந்தத் தோல்விக்குப் பின்னரே ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திற்கும் கருமார்கள் பரவியிருக்க வேண்டும்" என்கிறார் அப்தௌல்யே பைத்லி (Abdoulyae Baithly).

செனகல் நாட்டில், "வரலாறு முழுவதிலும் கைவினைஞர்களும் நிலவுடைமையாளர்களும் அரசதிகாரத்திற்காகச் சண்டையிட்டுவந்துள்ளனர். 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் நிலவுடைமையாளர்களும் வணிகர்களும் அதிகரித்துவந்த வெளிநாட்டு வர்த்தகத்தின் நிமித்தம் கைவினைஞர்கள்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அதற்கும் முன்பாகக் கருமார்களும் இதரக் கைவினைஞர்களும் பல சமயங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர்" எனக் குறிப்பிடுகின்றனர். சஞ்சதா (Sanjata) புராணமும் இவ்விஷயத்திற்கு வலு சேர்க்கிறது. அதன்படி மாலி நாட்டுச் சக்ரவர்த்தி சஞ்சதாவின் குழந்தைப் பருவ நண்பர். ஃப்ரான் கமாரா (Fran Kamara) கருமார் வம்ச இளவரசராக இருந்துள்ளார்.

சாதி மக்களிடம் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், சாதிக் குழுவைச் சேர்ந்த ஒரு ஆண், அடிமைகள் மத்தியிலிருந்து ஒரு வைப்பாட்டியை வைத்திருந்தான் எனில் அவளது மகன் தன் தந்தையின் வாரிசுரிமையையே கோருகிறான். மேலும் சாதிப் பின்னணி கொண்ட குடும்பத்தில் சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களின் வாரிசுகள் தங்கள் எஜமானனின் குடும்பத்துடன் சேர்ந்துவிடுகின்றனர். இது உயர்குடிக் குடும்பங்களுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இடையில் இருந்த பழக்கத்தை ஒட்டியதாகும். கருமார்களிடத்தில் இவ்வாறேதான் நிகழ்ந்துவந்தது. மேலும் சாதி மக்களை ஒருபோதும் அடிமை நிலைக்குத் தள்ளிவிட முடியாது என்பது நமக்குத் தெரிந்ததுதான் என்கிறார் ஆப்பிரிக்கச் சாதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த தல் தமாரி. இவையனைத்தும் ஒரு கட்டத்தில் இரும்புத் தொழிலில் இருந்துவந்த சாதி மக்கள் மேல்நிலையில் இருந்ததையே காட்டுவதாக உள்ளன.

மண்டே மொழிகள் பேசுவோர் ஆப்பிரிக்கா, ஆசியா மைனர் மற்றும் தொலைக் கிழக்கு நாடுகளை அடிமைப்படுத்தியதாக டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr. Clyde Winters) கூறுகிறார். இவ்வாறாக ஆப்பிரிக்கச் சமூகத்தில் ஒரு கட்டத்தில் உலோக நாகரிக மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளமை தெரியவருகிறது. இத்தகைய உலோக நாகரிக மக்களை வீழ்த்தி, புவியைப் புனிதமாகக் கருதுகிற விவசாயக் குடிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் உலோக நாகரிக மக்கள் கீழ்மைப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள இதே விவசாயக் குடிகளிடம் அடிமை நிலையில் உழு குடிகளாக உள்ள மக்கள், உலோக ஆயுதத் தயாரிப்பாளரான கருமார்களிடம் உறவு வைத்துக்கொள்வதைத் தடுக்கப் பல தடைகள் விதிக்கப்பட்டிருந்ததை எத்தியோப்பிய கேமோ சமூகத்தை விவரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இந்தத் தடையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கின்ற வகையில் தமிழக வரலாற்றில் நடைபெற்ற ஒரு விஷயத்தை நாம் ஒப்பிட்டுக் காணலாம்.

சங்க காலத்தில் இரும்பு நாகரிகப் போர்க் குடிகளான மூவேந்தர்கள் ஆட்சி செய்துவந்த நிலையில் அவர்களை வீழ்த்தி விவசாயக் குடிகளான களப்பிரர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருந்த விவசாயக் குடிகள் ஆட்சிக்கு வர உலோக ஆயுதங்கள் தயாரிக்கின்ற கம்மாளர்களின் உதவி இன்றியமையாதது எனலாம். களப்பிரரின் ஆட்சிக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற பாண்டிய மன்னன் கம்மாளர்களைக் கொன்றதாக ஒரு கதை வழங்கப்படுகிறது. இதன் பின்னணியாக வேறொரு கதை கூறப்படுகின்றபோதிலும் அதற்கு இப்படியான ஒரு விளக்கமும் இருக்கலாம். அதாவது விவசாயக் குடிகளான களப்பிரர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உதவியாக, அவர்களுக்கு ஆயுதம் தயாரித்துத் தந்த கம்மாளர்களைப் பழி தீர்க்கின்ற விதத்தில் களப்பிரரை வீழ்த்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கொற்கையில் நூற்றுக்கணக்கான கம்மாளர்களைக் கொன்றிருக்கலாம். எனவே உலோக ஆயுதம் தயாரிப்பவர்களும் உழுகுடிகளும் ஒன்று சேராமல் பிரித்துவைப்பது ஆட்சியாளர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாகும். அதனால் அத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.

சாதியும் கற்பு நெறியும்

'ஜாதி' என்கிற சம்ஸ்கிருதச் சொல் பிறப்பு சார்ந்தது என்பதை நாம் அறிவோம். ஜனனம், ஜனித்தல் போன்ற பிறப்பு சார்ந்த சொற்களின் அடியாகவே ஜாதி என்கிற சொல் வழக்கில் வந்திருக்க வேண்டும். நடைமுறையிலும் சாதி பிறப்போடு பிணைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஜாதியைக் குறிப்பிடப் போர்ச்சுகீசியச் சொல்லான casta என்பதிலிருந்தே caste என்ற ஆங்கிலச் சொல் வந்துள்ளது. காஸ்ட் என்ற சொல்லும் கற்பைக் குறிக்கின்ற chaste என்ற ஆங்கிலச் சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்தே கிளைத்திருக்க வேண்டும். இவ்வாறாகப் பிறப்புத் தூய்மையைக் குறிப்பிடுவதாக, கற்பு நெறியுடன் தொடர்புடையதாகச் சாதி இருக்கிறது. உலகில் முதன்முதலில் உலோக நாகரிக மக்களிடையே கற்பொழுக்கம் தோன்றியிருக்கிறது என்பதை நாம் மேற்காசிய வரலாற்றிலிருந்து அறிகிறோம். இந்தியாவைப் போலன்றி ஆப்பிரிக்காவில் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் உள்ள மக்களை மட்டுமே சாதி மக்கள் என்று குறிப்பிடுகின்ற மரபு உள்ளது. உலோகம் சார்ந்த தொழில்நுட்ப ரகசியங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் குறிப்பிட்ட குடும்பங்களுக்குள்ளேயே மணவுறவு கொண்டு தங்களின் வாரிசுகளுக்குத் தொழில்நுட்ப ரகசியங்களை மாற்றிக் கொடுத்திருக்கின்றனர் என்பதை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ரகசியச் சமூகங்கள் நமக்குக் காட்டுகின்றன. இவ்வாறு தொழில் ரகசியங்களைக் காப்பதன் பொருட்டு அவர்கள் கற்பு நெறியுடன் ஒழுகியிருந்திருக்க வேண்டுவது அவசியம். சாதியின் ஒரு முக்கிய அம்சமான அகமண முறைக்கான கூறு இதில் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உலோகத்தை மண்ணிலிருந்து பிரித்தெடுத்து உருக்கி ஆயுதங்களாகத் தயாரிப்போர் சமூகத்தில் கம்மாளர்கள் எனப்படுகின்றனர். கம்மாளர்களின் கற்பு நெறியைச் சுட்டுகின்ற பழங்கதைகள் தமிழ்ச் சமூக வழக்காற்றில் நிலவிவருகின்றன. கி.பி. 1247ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆலங்குடிக் கல்வெட்டு, விஸ்வகர்மாக்கள் எனப்படும் கம்மாளர்களின் மெய்க்கீர்த்தியில், "காட்டாவூர் அம்மையாலே கனகமழை பொழிவித்தோர்" என்று குறிப்பிடுகிறது. மூவேந்தர்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிகழ்த்துகலையான வலங்கை மாலை வில்லுப் பாட்டு, கம்மாளர்களின் கற்பு நெறியைப் போற்றிச் சொல்கிறது. சோழ அரசாட்சிக் காலத்தில் ஒரு சமயம் கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டபோது, நாட்டில் கற்புடைய பெண்டிர் இன்மையே மழை இன்மைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. காட்டாவூர் தச்சன் மனைவி மட்டுமே கற்புள்ளவள் என்று சான்றோர்கள் கூற, அரசன் அனுப்பிய தூதுவர்கள் அவளைத் தேடிச் சென்று அழைத்தார்கள். துலாவில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த தச்சன் மனைவி அதை அப்படியே விட்டுவிட்டு வர, அவளது கற்பினால் தண்ணீர்த் துலா பாதியிலேயே நின்றதாக அக்கதை வழங்கப்படுகிறது.

உலோக நாகரிகப் போர்க் குடி அரசர்களுக்கும் தலைமக்களுக்கும் உரியதாகக் கற்பு நெறி கூறப்பட்டாலும் இக்கதையில் கம்மாளப் பெண்ணையே கற்புடையவளாகக் குறித்திருப்பது கவனத்திற்குரியது. மேலும், சோழ அரசர்களின் குலகுருக்கள் தாங்களே எனவும் உண்மையான பார்ப்பனர்கள் தாங்களே எனவும் கம்மாளர்கள் கோருவதும் முக்கியத்துவமுடையது. அரசர்கள்கூடத் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, அரசியல் நெருக்கடிகள் காரணமாக மற்ற குடிகளுடன் உறவுகள் ஏற்படுத்திக்கொள்வதும் தவிர்க்க முடியாதது. கம்மாளர்களுக்கோ அவ்வாறான நெருக்கடிகள் இல்லை. அதனால் அவர்கள் கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதும் வாய்ப்பானதுதான்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள்

கற்பு நெறியைப் போற்றுகிற சமூகம் பொதுவாகத் தந்தைவழிச் சமூகமாகவே இருக்கும். உலோக நாகரிகத்தைத் தோற்றுவித்த கருப்பின மக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்தினர் என்பதை உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட களமான மேற்காசியாவின் வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள உலோக நாகரிக மக்கள் தாழ்ந்த சாதியினராகக் கருதப்படுகின்றபோதிலும் அவர்கள் தந்தைவழிச் சமூகத்தினராக உள்ளனர். ஆனால் அங்கு உள்ள விவசாயக் குடிகள் ஆட்சியாளர்களாக உள்ளபோதிலும் தாய்வழி (மருமக்கள் வழி) சமூகத்தவராவர். இந்தியாவிலும்கூட உலோக நாகரிக மக்கள் தந்தைவழிச் சமூகத்தினராகவும் விவசாயக் குடிகளான வேளாளர்கள் தாய்வழிச் சமூகத்தினராகவும் (மருமக்கள் வழியில்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

n n n

மேலே கூறப்பட்டுள்ள தகவல்களிலிருந்து இந்தியச் சாதி முறைக்கும் ஆப்பிரிக்கச் சாதி முறைக்கும் உள்ள ஒற்றுமைகளை நாம் அறியலாம். இந்த இரு சாதி முறைகளும் வெவ்வேறு சூழல்களில் தற்போக்கில் தோன்றியவை என நாம் கருதிவிட முடியாது. இவற்றுக்கிடையில் காணப்படும் ஒற்றுமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆப்பிரிக்க இனக் குழுக்களின் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்த பிரெஞ்சு மொழியியலாளர் எல். ஹோம்பர்கர், ஆப்பிரிக்க மொழிகளிலும் திராவிட மொழிகளிலும் ஐந்து உயிர் எழுத்துகளை உச்சரிக்கையில் உதடுகள் இணைவதாகவும் ஐந்தை உச்சரிக்கையில் உதடுகள் பிரிவதாகவும், எழுத்துகள் குறில், நெடில் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மண்டே இனக் குழுக்களின் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் மேலும் நெருக்கமான தொடர்புள்ளதென்றும் இவ்விரு மக்களும் அருகருகே வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். திராவிட மற்றும் மண்டே மொழிகள் மரபியல் ரீதியில் தொடர்புடையன என்பதுடன் இம்மொழிகளைப் பேசுவோர் இணைந்து ஆப்பிரிக்கா, ஆசியா மைனர் மற்றும் தொலைக் கிழக்கு நாடுகளை அடிமைப்படுத்தினர் என்கிறார் வின்டர்ஸ். கம்மாளர்கள், செனகல் நாட்டில் கம்மார என்று குறிப்பிடப்படுவதைப் போலவே திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கிலும் கம்மாரா என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளில் தச்சு வேலையில் ஈடுபடுகின்ற கம்மாரா என்ற ஒரு பிரிவினர் நீலகிரி மாவட்ட, கர்நாடக எல்லைப் பகுதியில் வசித்துவருகின்றனர். தென்னிந்திய மக்களுக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கும் இடையில் மொழியியல் ஒற்றுமை மட்டுமின்றி மானுடவியல் ஒற்றுமையும் இருப்பதை ஜெர்மானிய மானுடவியல் அறிஞர்கள் பௌமன் (Hermann Baumann) மற்றும் வெஸ்டர்மன் (Diedrich Westermann) நிறுவியுள்ளனர். தமிழகத்தில் மலைக் கடவுளாக வணங்கப்படும் முருகக் கடவுள், 25க்கும் மேற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க இனக் குழுக்களில் 'முருகு' என்ற பெயரில் மலைக் கடவுகளாக வணங்கப்படுகிறார். இவையன்றி, ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகளைக் காட்டுவதாகக் கண்ணனின் யது குலம் தொடர்பான தொல்பொருள்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து செம்பு மற்றும் இரும்பு உலோக நாகரிகத்தைக் கண்டுபிடித்து அதைப் பல பகுதிகளுக்கும் கொண்டுசென்ற கருப்பின மக்களின் பரவுதலுடனேயே சாதி முறையும் பரவியிருக்க வேண்டும் என்று கூற வாய்ப்பிருக்கிறது. இவர்கள் மேற்காசியாவிலிருந்து இந்தியாவிற்குள் பெருவாரியாகவும் ஆப்பிரிக்காவிற்குள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலுமே குடிபெயர்ந்துள்ளனர். இந்தியாவில் சாதி முறைக்குக் காரணமாகச் சொல்லப்படும் மனுவைத் திராவிட அரசன் என்கிறது விஷ்ணு புராணம். கண்ணன், ராமன் போன்ற இந்துக் கடவுளர்கள் கரிய நிறத்தவர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. தென்னிந்தியர்களுக்கும் எத்தியோப்பியர்களுக்கும் இடையில் காணப்பட்ட ஒற்றுமைகளை வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹிரோடட்டஸ் (Herodotus), டியோடரஸ் சிகுலஸ் (Diodorus Siculus), ஸ்ட்ரோபோ (Strabo) ஆகியோர் பண்டைக் காலத்திலேயே குறித்துள்ளனர்.

இந்தியாவில் கருதப்படுவதைப் போல சாதி முறையை ஆரியர்கள் தோற்றுவித்திருந்தால், அவர்கள் சற்றும் பரவியிராத, வேதங்களோ வர்ணப் பிரிவுகளைக் குறிப்பிடும் புருஷ ஸூக்தமோ இல்லாத ஆப்பிரிக்காவில் இதே போன்ற சாதி முறை இருப்பது ஏன் என்பது விளக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

வர்ணத்திலிருந்துதான் சாதி தோன்றியதெனில் 'வர்ணம்' இல்லாத ஆப்பிரிக்க நாட்டில் சாதி முறை வந்தது எப்படி? சாதிக்கும் இந்து மதத்துக்குமான உறவு என்ன? சாதி முறையை உருவாக்கியதில் பார்ப்பனர்களின் பங்கு என்ன என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்குப் புதிய விடைகளைத் தேடுவதற்கான சுட்டுக் குறிப்புகளைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆப்பிரிக்கச் சமூகத்தில் நிலவுகின்ற சாதி முறை குறித்த விரிவான ஆய்வு, இந்தியச் சமூகத்தில் புதிராகவே இன்றுவரை இருந்துவருகின்ற சாதிகளின் தோற்றம் மற்றும் அதன் தன்மை குறித்த பல ஆய்வுகளை மறுத்துப் புதிய ஓர் ஆய்வுக்கும் புதிய முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும் என நாம் நம்பலாம்.

உதவிய நூல்களும் குறிப்புகளும்

1. K. Marx, Das Capital, Vol. 1, Progress Publishers, Moscow

2. History of Religion, Sergey Tokaraev, Progress Publishers, Moscow 1989

3. Belief in the Past: The Proceedings of the Manchester Conference on Archaeology and Religion, edited by Timothy Insoll, Chapter 8, Smelting Iron: Caste and its Symbolism in South-western Ethiopia by Gunnar Haaland et al, 2002, BAR International series ISBN 1841715751

4. Cultural Unity of the Dravidian and African Peoples by Clyde A. Winters:
http:/www.geocities.com/tokyo/7051/dra2.htm

5. The Dravidian and Sudano-Sahelian Civilisations by Cheikh Tidiane N Diave: http://arutkrual.tripod.com/tolcampus/draw-african2.html

6. Dravidians And africans-5, The Languages of Africans and Dravidians, A bird’s eye view by S.R. Santharam:
http://arutkural.tripod.com/tolcampus/draw-afr-top.htm

7. The ‘Caste System’ in Nigeria, Democratisation and Culture: Socio-political and civil rights implications, by Victor E. Dike: http://www.afbis.com/analysis/caste.htm

8. Our Ancestors and the Oracle they left behind, by Bons O. Nwabueze: http://www.africaneconomicanalysis.org/articles/gen/culturalhtm.html

9. The Osu Caste system in Igboland - Discrimination based on descent, by Victor E. Dike: http://uk.geocities.com/internationaldalitsolidarity/cerd/dikeosu2002.html

10. Tied to the job: Caste remains a curse in many African countries, by Tidiane Kasse. New Internationalist, July 2005

11. Discrimination based on descent in Africa: Summary, paper by Alexander Stevens, IDSN Co-ordinator, July 2002.

12. An Ethnoarchaeological Study of the Gamo Caste System in South-western Ethiopia by Jhon W. Arthur and Kathryn J. Weedman et al: http://www.stpt.usf.edu/arthurj/ArchaeologicalResearchSouthwestern Ethiopia.htm

13. CountryData.com/frds/cs/Uganda
14. Ethiopian society, etc.: http://countrystudies.us/ethiopia/
16. Writings of Herodotus, Diodorus Siculus & Strabo
17. Democracy, Human Rights and Castes in Senegal, by Penda Mbow: http://www.idsn.org/senegalcaste.rtf

18. வலங்கை மாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும், எஸ். இராமச்சந்திரன், எம்.ஏ., IITS சென்னை.

19. பண்பாட்டு மானுடவியல், பகதவச்சல பாரதி, புதுவை மொழியியல் ஆய்வு நிறுவனம் (PIL), புதுவை.

20. செனகல் மற்றும் ஆப்பிரிக்கா குறித்த க.ப. அறவாணனின் நூல்கள்.

ப்ரவாஹன். வயது 39. இயற்பெயர் சௌமிய நாராயணன். அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் ஆழமான ஈடுபாடுகொண்டவர். "சாதிய ஒடுக்குமுறை ஒழிந்தால்தான் இந்தியாவில் முழுமையான மாற்றம் சாத்தியமாகும்" என்று அழுத்தமாக நம்பும் இவர் ஒத்த கருத்துள்ள சில நண்பர்களுடன் இணைந்து சாதிகளின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். 1999இல் திருச்சூரில் நடைபெற்ற கல்வெட்டியல் ஆய்வாளர் சங்க மாநாட்டில் 'பறையர் வரலாறு' என்னும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார்.

அரசியலிலும் தீவிர ஈடுபாடுகொண்டவர். முதலில் சி.பி.ஐ. எம்.எல். இயக்கத்தில் இணைந்து செயலாற்றியிருக்கிறார். தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இவர் பிறகு புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்து மாநில அளவில் பொறுப்பு வகித்துச் செயல்பட்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்திய மக்கள் முன்னணி என்ற கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்துவருகிறார்.

மின்னஞ்சல்: pravaahan@yahoo.co.in

 1    2    3   4

உள்ளடக்கம்

Google Ads.....


Google