|
கட்டுரை :
ஆப்பிரிக்காவில் சாதிமுறை
தொடர்ச்சி...
தீட்டும் அதன் காரணங்களும்
இவ்வாறு பாரபட்சமாக நடத்துவதற்குத் தீட்டு மற்றும் தூய்மையின்மை என்ற கருத்துகளும்
உடல் சார்ந்த துர்நாற்றம் மற்றும் உணவுப் பழக்கம் போன்றவையும் கூறப்படுவதுடன் சாதி
மக்களின் தோற்றம் தொடர்பான விந்தையான கதைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பிறந்தவர்களே சாதி மக்கள் எனப்படுகிறது.
ஆப்பிரிக்கச் சமூகங்கள் அனைத்திலும் இரும்பு உருக்குவோரை இழிவாகக் கருதுகின்றனர்.
இது தொடர்பாக வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கதைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
உதாரணமாக, பர்க்கினா ஃபாஸோவில் கூறப்படும் கதை. தொடக்கத்தில் கருமார்களும்
நினோனோன்செஸ் (Ninononses) என்ற ஆட்சியாளர்களும் நட்பாக இருந்தனர்.
இவர்களில் ஓர் ஆட்சியாளர் ஒரு கருமாரின் மனைவியின் மீது காதல் கொண்டுவிடக் கருமார்
அந்த அரசனைத் தாக்கினார். நினோனோங்கா (Ninononga) எனப்படும் கருமார் தான்
காய்த்துக்கொண்டிருந்த உலோக வளையத்தை அந்த ஆட்சியாளரின் கழுத்தில் மாட்டிவிட்டார்.
அப்போதிலிருந்து கருமார்கள் கீழோராகிவிட்டனர் என்கிறது அக்கதை. கதையின் மூலங்கள்
கால ஓட்டத்தில் மறைந்துவிட்டாலும் கருமார்கள் இன்று தனிக் குடியிருப்புகளில்
வசிக்கும் நிலை நீடிக்கிறது. சமூகத்தில் உள்ள மற்ற அனைவரும் அவர்களை வெறுப்புடன்
பார்க்கின்றனர். இது ஒரு பக்கம் எனில் இச்சாதியினர் தங்களின் முன்னோரான பமாங்கோ
(Bamango) என்போர் தொப்பூழ்க் கொடி அறுப்பதற்கான கத்தியையும் மரத்தைத்
துண்டாக்கக் கோடரியையும் குழி தோண்டுவதற்கான கருவிகளையும் தயாரித்ததற்காகப்
பெருமைப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும்
ஆதாரமாகத் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.
இது இப்படியிருக்க, உணவுப் பழக்கம் சார்ந்தும் தீட்டு எனக் கருதும் போக்கும்
உள்ளது. இதற்கு உதாரணமாக, எத்தியோப்பியாவில் சாரா (Sara) மொழி பேசுகின்ற
மக்களிடம் உள்ள சாதி அமைப்பில் கடைநிலையில் வைக்கப்பட்டுள்ள மன எனப்படும் குயவர்கள்
குறித்து அவர்களுக்கு அடுத்த மேல்நிலையில் உள்ள இரும்பு உருக்குபவர் ஒருவர்
கூறியது: "மனாக்கள் இறந்த விலங்குகளின் புலாலைப் புசிக்கின்றனர். இது மட்டுமின்றிச்
சடங்கு வகையிலும் அவர்கள் தூய்மையின்றி உள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் இரும்பு
உருக்கிக் காட்டுவதற்காக நாங்கள் ஒரு நகரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தோம். அங்குச்
சென்று அனைத்தையும் நாங்கள் சிறப்பாக முடித்துவிட்டுத் திரும்பி வரும்போது
எங்களுடன் வந்த மன சாதியைச் சேர்ந்தவர்கள் வழியில் இறந்த விலங்கு ஒன்றின் உடலைக்
கண்டு அதன் புலாலையும் சாப்பிட்டனர். இதன் பின்னர் அந்த மக்கள்மீது கிராமத்தில்
படிந்திருந்த கறை மேலும் வலுப்பட்டது." இத்தகைய அதீதக் காரணங்கள்
கூறப்படும்போதிலும் சமூகத்திற்கு இன்றியமையாததாக இருந்த தொழில் பிரிவினர் வீழ்ச்சி
அடைந்த பின்னரே இவ்வாறான தீட்டு சார்ந்த காரணங்கள் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும்
எனவும் நாம் கருதலாம்.
தோல் தொழிலில் உள்ளவர்களின் வீழ்ச்சி குறித்த ஒரு உதாரணத்தை இந்தியாவில் நாம்
காணலாம். வேத காலத்தில் யாகக் கருமங்கள் செய்யும்போது கொல்லப்பட்ட விலங்குகளின்
தோல்களைத் தனியே உரித்தெடுத்துப் பதப்படுத்திப் பாதுகாப்பது சர்மகார எனப்பட்ட
செம்மார்களின் கடமையாகும். ஆடைகள், கவசம், கேடயம், இருக்கைகள் மற்றும் பிற தயாரிக்க
விலங்குத் தோல்கள் பயன்பட்டன. மேலும், முதல் மூன்று வர்ணத்தார் தாம் அணிந்த
பூணூலில் கிருஷ்ணா சினம் எனப்படும் கருத்த மான் தோலைச் சேர்த்துக் கட்டுவர்.
இவ்வாறு வாழ்க்கையிலும் சடங்குகளிலும் தோல் முக்கியப் பொருளாக இருந்ததால் அதைப்
பராமரித்தவர்களின் நிலையும் உயர்ந்ததாகவே இருந்தது. பின்னர் யாக மரபுகள் வீழ்ச்சி
அடைந்து, அரசு அதிகார அமைப்புகள் சிக்கலானவையாக மாறியதன் விளைவாகச் சர்மகாரர்கள்
எனும் தோல் தொழிலாளர்களின் நிலை வீழ்ச்சியடைந்தது. கம்மாளர்கள் போன்ற கைவினைஞர்
களின் நிலையையும் நாம் இதனுடன் ஒப்பிடலாம். ஆப்பிரிக்கச் சமூகத்திலும் இப்படியான பல
மாறுதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என நாம் யூகிக்கலாம்.
தீ - புவி - புனிதம் - தீட்டு
எத்தியோப்பிய இனங்கள் அனைத்திலும் கைவினைஞர்களை - குறிப்பாக, புவியின் மீது தீயை
நேரடியாகப் பயன்படுத்திச் செய்யப்படுகின்ற இரும்பு உருக்குதல், மட்பாண்டம் வனைந்து
சூளையிடுதல் ஆகியவற்றைச் செய்வோரை - கீழானவர்களாகப் பார்க்கின்றனர். ஆப்பிரிக்கப்
பகுதிகள் அனைத்திலும் கருமார் தொழில் செய்வோர் அழுக்கானோராயும் தூய்மையற்றோராயும்
கருதப்படுகின்றனர். இதற்கு மத ரீதியான காரணங்கள் கூறப்பட்டாலும் அரசியல் காரணங்களே
முதன்மை யானவையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
மனிதச் சமூகத்தில் மதங்களின் பங்கு மிகவும் தொன்மையானது. பரிணாம வளர்ச்சியில்
மனிதனுக்கு முந்தைய ஹோமோஹேபிலிஸ் (Hamohaebilis) கட்டத்தி லேயே மதச்
சடங்குகள் இருந்ததைத் தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். தொடக்கக் கட்ட
சமூகத்திலேயே தீ, வழிபாட்டுக்குரியதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. நெருப்பு குறித்த
மாறுபட்ட இரு மரபுகள் உண்டு. முதலாவது, தீ புனிதமானது, எனவே அதில் வேறெதையும்
போடுவது அதன் தூய்மையைக் கெடுப்பது என்னும் மரபு. இரண்டாவதிலும் தீ புனிதமானதாகக்
கருதப்பட்டாலும் அதில் புகுந்து வருவது அழுக்குகளையும் பாவங்களையும் போக்கிவிடும்
என்கிற நம்பிக்கை சார்ந்த மரபு. நெருப்பின் புனிதம் தொடர்பான ஒரு சான்றாக உகாண்டா
நாட்டில் வழக்கத்தில் இருந்த ஒரு முறையைக் குறிப்பிடலாம். தலைநகரில் உள்ள அரசனது
அரண்மனை வாயிலில் கொம்போலோ எனப்படும் அரச நெருப்பு எப்போதும் எரிந்துகொண்
டிருக்கும். கபகா எனப்பட்ட அரசன் இறக்கும்போது மட்டுமே அது அணைக்கப்படும். புதிய
கபகா தேர்ந் தெடுக்கப்பட்டதும் மீண்டும் தீ மூட்டப்படும். நெருப்பைப் புனிதமாகக்
கருதுகின்ற மரபு, அடிப்படையில் உலோக நாகரிக மக்களின் மரபாகும். பண்டைய மேற்காசிய
மரபுகள் இதற்குச் சான்றாக உள்ளன.
ஆனால் இம்மரபிற்கு மாறாக, உலோக நாகரிகம் வளர்ச்சியடைந்துவிட்ட பின்னரும் விவசாயக்
குடிகள் நிலத்தையே புனிதமாகக் கருதுகின்றனர். அதன் உற்பத்தித் தன்மையைக்
குலைக்கின்ற எந்தச் செயலையும் இழிவாகப் பார்க்கின்றனர். உலோக நாகரிகம் தோன்றிய
பின்னர் இவ்விவசாயக் குடிகள், பொதுவாக அடிமைகளாகவே அல்லது கீழ்ச் சாதியினராகவே
கருதப்பட்டனர். இதற்கு இந்திய (தமிழ்ச்) சமூகத்தில் ஒரு உதாரணத்தைக் காட்டலாம்.
உலோக நாகரிகப் போர்க் குடிகளான வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் உழவுத் தொழிலில்
இருந்துவந்த வேளாளர்கள் கீழோராகக் கருதப்பட்டதைத் தொல்காப்பியம் காட்டுகிறது. ஆனால்
உழுகுடிகளான இம்மக்கள் தங்களை பூமி புத்திரர்கள் என்று கூறிக் கொண்டதுடன் புவியைப்
புனிதமாகவும் கருதினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய விவசாயக் குடிகளே தற்போது ஆட்சியதிகாரத்தில் உள்ளனர்.
அவர்களிடம் புவியின் உற்பத்தித் தன்மையே அடிப்படை அக்கறையாக உள்ளது. ஆப்பிரிக்க
ஓமோடிக் சமூகங்களில் அவர்களின் புராணங்களிலும் சடங்குகளிலும் இவ்விஷயம் குறியீட்டு
வடிவில் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் ஓமோடிக் பகுதியைச் சேர்ந்த
கஃபா (Kafa) என்ற அரசாட்சிப் பகுதியில் வழங்கப்படும் புராணக் கதை இப்படி
அமைந்திருக்கிறது: தொடக்கத்தில் புவி கருவுற்றிருந்து பல இனக் குழுக்களையும்
தோற்றுவித்தது. அவ்வாறு தோற்றுவிக்கையிலேயே தயாரான தொழிற்தேர்ச்சியுடன் தோற்றுவித்
தது. முதலில் கையில் ஒரு வலையுடன் மஞ்சோக்கள் (Manjo) எனப்படும் கால்நடை
வளர்ப்போர் கையில் பால் குவளையுடன் தோன்றினர். இவர்களிலிருந்தே அரசர்களும் வந்தனர்.
இறுதியாக மாட்டோ (Matto) எனப்படும் பூசாரிகள் டையோ (Dio) மரத்தின் அடியில்
தோன்றினர். கையில் ஒரு முரசுடன் பிறந்த இவர்கள் யேரி (Yeri) கடவுளுக்கு ஒரு
கன்றைப் பலிகொடுத்தனர் என்கிறது அக்கதை. புவியிலிருந்தே அனைத்தும் தோன் றியதாக
இக்கதை குறிப்பிடுகிறது. புவி, மனிதர்களைத் தோற்றுவித்ததாக நம்புவது பெண்கள்
தனிநபர்களைத் தோற்றுவிப்பதற்கு இணையாகக் கருதப்படுகிறது.
எத்தியோப்பியாவின் டாவ்ரோ பகுதியில் நிலத்திற்குப் பலிகொடுப்பது உரிமை சார்ந்த
விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான பழங்கதைகளில் அனைத்தின் தோற்றத்துடனும் புவி
தொடர்புபடுத்தப்படுகிறது. முன்னோர்கள் அனைவரும் புவியின் ஓட்டையிலிருந்து
தோன்றியதாக நம்பப்படுகிறது. இத்தொடர்பை அவர்களின் புனிதப்படுத்தும் சடங்குகளும்
காட்டுகின்றன. உதாரணமாக, உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் தாழ்ந்த சாதிப் பெண்ணுடன்
உறவு கொண்டுவிட்டால் அவரைப் புனிதப்படுத்துவதற்காகப் புவியில் குழாய் போன்ற பாதை
ஏற்படுத்தப்பட்டு அதில் நுழைந்து தவழ்ந்து அவர் வெளியே வரவேண்டும். அவ்வாறு
நுழைந்து வருமுன்பாக ஒரு கோழி அல்லது சேவலைப் பலி கொடுத்து அதன் ரத்தத்தை அந்தக்
குழாயின் வாயிலில் தெளிக்கின்றனர். இதன் மூலம் மீண்டும் அந்த மனிதன் புதிதாகத்
தோன்றியவனாகிறான். இப்படி அனைத்தையும் தோற்றுவித்ததாகக் கருதப்படும் புவியின் மீது
உலோக நாகரிக மக்கள் உலோகங்களை உருவாக்குவதற்காகவும் குயவர்கள், பானைகள் வனைந்து
அவற்றைச் சுடுவதற்காகவும் நேரடியாகத் தீயை வைத்துப் பயன்படுத்துகின்றனர். இதனால்
அந்த இடத்தின் உற்பத்தித் திறன் குலைந்துவிடுகிறது. எனவே புவியைப் புனிதமாகக்
கருதும் விவசாயக் குடிகளான ஆட்சியாளர்கள், கருமாரும் குயவரும் அந்த இடங்களைத்
தீட்டுப்படுத்திவிட்டதாகக் கருதுகின்றனர். செனகல் நாட்டில் தீண்டத்தகாதோராகக்
கருதப்படும் கிரியாட்டுகளின் பிணங்களைப் புதைக்க இடுகாடுகள் மறுக்கப்படுகின்றன.
தீட்டுக்குரிய அவர்களின் பிணங்கள் நிலத்தில் புதைக்கப்பட்டால் புவி தாங்காது;
அழிவுகள் ஏற்படும் என்று நிலவுடைமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் கிரியாட்டுகள்
தங்களின் பிணங்களை மரத் தண்டின் நடுவில் வைத்துப் புதைக்கும் பழக்கம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழில் சாதிகளும் ரகசியச் சமூகமும்
எத்தியோப்பியாவிலிருந்து செனகல் வரை சமூக ஒழுங்கமைப்புக்கான ஒரு கட்டமைப்பு
என்பதாகச் சாதியைக் கருதுகின்றனர். குறிப்பிட்ட தொழில் அல்லது பணியில் தேர்ச்சி
இருக்கிற இடங்களிலெல்லாம் அந்தக் கலையின் ரகசிய அறிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
குழுவின் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளது. இந்த
ரகசியங்கள் காப்பாற்றத் தகுதி படைத்தவர்களிடமே மாற்றித் தரப்பட்டுள்ளன என்கிறார்
டிடியான் காஸ்ஸே என்ற பத்திரிகையாளர். இவர்களை ரகசியச் சமூகம் என்று சொல்கின்ற
வழக்கம் உள்ளது. இத்தகைய ரகசியச் சமூகங்கள் 150க்கும் மேல் மேற்கு ஆப்பிரிக்காவில்
இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஈடுபட்ட தொழில்களின் தொழில்நுட்பம்
சார்ந்த முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இதை விளக்குகின்ற வகையில்
ருஷ்ய அறிஞர் செர்ஜி டோ கரேவ் இவ்வாறு கூறுகிறார்:
ஆப்பிரிக்காவில் கருமார்களின் நிலை மத ரீதியில் பூசாரிகளுக்கும்
மந்திரவாதிகளுக்கும் இணையாக சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க மக்கள்
நெடுங்காலமாக இரும்பைப் பிரித்து எடுத்துவருகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள பல வகை
மக்களில் கருமார் தொழிலில் உள்ளவர்கள் தங்களின் தொழில்நுட்பங்களைப் பரம்பரை
பரம்பரையாகத் தம் குடும்பத்திற்கே மாற்றித் தருகின்ற வழக்கத்தை விதியாகக்
கடைப்பிடிக்கின்றனர். கருமார்களின் அறிவையும் தொழில் நுட்பத்தையும் எல்லோரும் அறிய
முடியாததாகையால் இனக் குழுவில் உள்ள மற்றவர்களின் மத்தியில் அவர்கள் குறித்த ஒரு
புதிரான பார்வை உள்ளது. ஒருபுறத்தில் அவர்களைத் தூய்மையற்றவர்களாக, இழிந்தவர்களாகக்
கருதுகின்றபோதிலும் அவர்களிடம் மாந்திரிக சக்தி இருப்பதாக அச்சமும் கொள்கின்றனர்.
கருமார்களும்கூடத் தாங்கள் அசாதாரணமானவர்கள் என்கிற கருத்தை வளர்க்கின்றனர். ஒரு
கருமார் தனது கருவிகளை, குறிப்பாகச் சுத்தியலை, தனது எதிரிகளுக்கு நோய்
ஏற்படுத்துவதற்காக அனுப்ப முடியும். வேறெந்த வகையான மந்திர, தந்திரச் செயல்களைவிட
இதைக் கண்டு மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்த இடத்தில் மேற்காசிய வரலாற்றிலிருந்து ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது
அவசியமாகிறது. இரும்பு உலோகத்தைக் கண்டுபிடித்த ஹிட்டைட் மக்கள் அத்தொழில்நுட்பத்தை
400 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக வைத்திருந்ததாக வரலாற்றறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தங்கள் ரகசியத்தைக் காத்துக்கொள்ளும் பொருட்டுத்
தம்மீது ஒரு அச்சமூட்டுகிற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கான
வாய்ப்புகள் இருந்ததாகத் தோன்றுகிறது. இரும்பு உருக்கும் தொழில்நுட்பம்
மேற்காசியாவிலிருந்தே ஆப்பிரிக்காவுக்குப் பரவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சி...
1 2
3 4
உள்ளடக்கம் |