|
கட்டுரை :
ஆப்பிரிக்காவில் சாதிமுறை
தொடர்ச்சி...
எத்தியோப்பியா
எத்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் கேமோ (Gamo) இனக் குழுவுக்குள் சாதி
அமைப்பு உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகப்
பேராசிரியர்கள் ஜான் ஆர்த்தர் மற்றும் காத்ரின் ஜே. வீட்மேன் ஆகியோரும் ஃப்ளோரிடா
பல்கலைக்கழகத்தின் மேத்யூ கர்ட்டிஸும் இணைந்து மானுடவியல் அகழ்வாய்வு
மேற்கொண்டுள்ளனர். இந்தச் சமூகத்தில் காணப்படும் பிரிவினைகளையும் அவற்றின்
எச்சங்களாக உள்ள பொருள்களையும் அடையாளங்காண அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
விவசாய சமூகத்தினரான கேமோ மக்களின் சாதிகள் குறித்து இவர்கள் கூறுவதாவது:
ஆப்பிரிக்க மற்றும் தெற்காசியச் சாதியமைப்பின் பல தன்மைகளுடனும் கேமோ சாதி முறை
ஒத்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம். முதலாவதாக, கேமோ சமூக அமைப்பு முறை, சமூகத்தின்
வெவ்வேறு அடுக்குகளைப் பாரம்பரியத் தொழில்களுடன் இணைத்துள்ள இறுக்கமான சமூகக்
கட்டமைப்பு. கேமோ அமைப்பு முறை மூன்று சாதிக் குழுக்களைக்கொண்டது.
1. குடிமக்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பாரம்பரியமான தலைவர்கள்,
விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், 2. குயவர்களை உள்ளடக்கிய குடிமக்கள் அல்லாதோர், 3.
தோல் தொழிலாளர்கள், கருமார் மற்றும் கல் இயந்திரம் செய்வோரை (கல்தச்சர்) உள்ளடக்கிய
குடிமக்கள் அல்லாதோர். இரண்டாவதாகக் குறிப்பிட்ட சாதியில் உறுப்பினராவது பிறப்பால்
நிர்ணயிக்கப்படுகிறது. மூன்றாவதாக, ஒவ்வொரு சாதிக் குழுவும் அகமண முறையைக் கொண்ட
குழுவாகவும் உள்ளது. நான்காவது, கைவினைஞர்கள் கேமோ சமூகத்தின் முழு உறுப்பினர்கள்
தாங்கள் மட்டுமே அறிந்த ஆர்கோ
(argot) அல்லது ஒரு சடங்கு மொழியை வைத்துள்ளனர்.
இறுதியாகக் கைவினைஞர்கள் விவசாயிகளுடன் உறவு வைத்துக்கொள்வதைத் தூய்மையின்மை, தீட்டு
என்ற கருத்தாக்கங்களின் மூலம் தடுத்துக் கைவினைஞர்களைத் தாழ்த்திவைப்பதை கேமோக்கள்
வலுப்படுத்துகின்றனர். விவசாயிகளோ கைவினைஞர்களோ பண்பாட்டுத் தடை எதையேனும்
மீறுவாராயின் அவர்கள் முன்னோர்களை நொந்துபோகச் செய்து நிலம் மற்றும் மக்களின்
உற்பத்திப் பெருக்கத்தைத் தடுத்துவிடுவர் என்பது கேமோக்களின் நம்பிக்கை.
விவசாயிகளையும் கைவினைஞர்களையும் தனித் தனிச் சாதிக் குழுக்களாகச் சமூகப் பொருளாதார
ரீதியில் பிரிப்பது அவர்களின் குடியிருப்புகள், இடுகாடுகள் மற்றும் அவர்கள்
தங்களுக்குரியதாக வைத்திருக்கிற பொருள் சார்ந்த பண்பாட்டிலும் தெளிவாகத் தெரிகிறது.
எத்தியோப்பிய மக்களை இனக் குழு ரீதியாக வகைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர்
அறிஞர்கள். அதாவது இந்தியாவைப் போல் பல்வேறு இனக் குழுக்கள் பல விதங்களிலும்
கலந்துள்ளன. கேமோ இனக் குழுவுக்குள் இருப்பதைப் போலவே ஓமோடிக் (Omotic) மொழிக்
குடும்பத்திற்குரிய மக்களின் டாவ்ரோ (Davro) ஆட்சிப் பகுதியில் காணப்படும்
சாதி முறை பற்றிச் சுருக்கமாகக் காண்போம். டாவ்ரோவின் முந்தைய அரசாட்சியில் சமூக
அடையாளங்கள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தொழில் சார்ந்ததாக இருந்தன. இப்போது அவையே
பொருளாதாரம், திருமணம், சடங்குகள், இருப்பிடம் போன்ற பல்வேறு துறைகளிலும் அன்றாட
வாழ்க்கையில் பரஸ்பர வினையாற்றுதலுக்கான அடிப்படைக் கொள்கைகளாக அச்சமூகத்தில்
இருந்துவருகின்றன. மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சமூக
அடையாளங்கள் வருமாறு: 1. மல்லா (Malla) எனப்படும் குடிமக்கள், விவசாயிகள்
மற்றும் ஆட்சியாளர்கள், 2. இரும்புக் கருவிகள் தயாரிக்கும் வோகாட்சே (Wogatche) மக்கள், 3. டெகெல்லே (Degelle) எனப்படும் தோல் பதனிடுவோர், 4. கிடாமனா (Gitamana) எனப்படும் இரும்பு உருக்குபவர்கள், 5. மன்ஜா (Manja) எனப்படும் கரி தயாரிப்போர்,
காட்டுக் குடிகள் மற்றும் வேட்டையாடுவோர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இரும்பு
உருக்குவோர் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்பு தாங்களே உரிய சடங்குகளைச்
செய்துகொள்கின்றனர். மேலும் ஓமோடிக் மொழி பேசும் சமூகங்கள் பொதுவான ஒரு சடங்கு
மொழியைக் கொண்டிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவையன்றி எத்தியோப்பியா முழுவதும் 60-70 சாதிக் குழுக்கள் பரவியுள்ளன. சமூகத்தின்
பிற பிரிவினரிடமிருந்து தீட்டு, தூய்மையின்மை என்ற காரணங்களால் இவர்கள்
பிரிக்கப்பட்டுள்ளபோதிலும் இவர்களில் ஒரு பிரிவினர்தான் சமூகத்தின் மற்ற
பிரிவினருக்குச் சடங்குகளைச் செய்துவைக்கும் பூசாரிகளாக உள்ளனர்.
நைஜீரியா
நைஜீரியாவில் ஓசு சாதி முறை நடப்பில் உள்ளது. இந்த மக்கள் இக்போ (Igbo) நிலங்களில் இருக்கின்றனர். இக்போ மொழி பேசுகின்ற சமூகத்தினர் புவிக் கடவுள், சிலைக்
கடவுளர்கள் மற்றும் மூத்தோர் ஆவிகளிலும் ஒரு படைப்புக் கடவுளரையும் சுக்வு (Chukwu),
ஓபஸி (Obasi), சி (Chi) அல்லது சினெகெ (Chineke) என்ற உயர்ந்த
கடவுள்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இக்போ மக்களின் முன்னோர்கள் முறைமை, நேர்மை
மற்றும் கடும் உழைப்புக் கொண்டவர்கள் என்ற சமூக விழுமியங்களைக் கொண்டிருந்தனர்.
இக்போக்கள் தவிர இபிபோக்கள் (Ibibo), யோருபாக்கள் (Yoruba) மற்றும் இதர
நைஜீரியக் குழுக்களிடத்திலும் ஓசு எனும் தீண்டாமைச் சாதி முறை நிலவுகிறது. பிற
நாடுகளிலிருந்து மாறுபட்ட வகையில் ஓசுக்கள் கடவுளர்களுக்கு உரியோராகக்
கூறப்படுகின்றனர். இன்னும் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள சில தாழ்ந்த சாதிகளைக்
கடவுளுக்கான பலியாடுகள் என்று சொல்கின்ற மரபு இன்றுவரை நிலவிவருகிறது. இதில்
குறிப்பிடத்தக்க அம்சம், ஓசுக்களும் அவர்களை ஓடுக்குவோரும் ஒரே இனக் குழுவினர்
என்பதுதான். ஓசுக்களுடன் மற்றவர்கள் உடனமர்ந்து உண்பதும் மண உறவும் கடுமையாகத் தடை
செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஓசுக்களைத் தொடுபவர்களும் ஓசுக்களாகிவிடுவர். ஓசுக்கள்
தம்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும்போதெல்லாம் அவர்கள்மீது கடும் வன்முறை
பிரயோகிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் முன்னோர்கள் விட்டுச் சென்ற கோயில்களுடன்
பிணைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில்கள் சிலவற்றில் உள்ள கடவுளர்கள் மிகவும் சக்தி
வாய்ந்தவர்களாக இருப்பதால் பூசைகளையும் சிக்கல் நிறைந்த சடங்குகளையும் தொடர்ந்து
செய்தாக வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயில்களை அப்புறப்படுத்துவது
வீட்டில் உள்ள அனைவரின் இறப்புக்கும் காரணமாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. அல்லது
சிலை வழிபாட்டில் உள்ளவர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்னும்
அச்சமும் உள்ளது.
இவர்களில் ஒரு சிறு பிரிவினர் தாய்க் கடவுளாக மலைப் பாம்பை
வணங்குகின்றனர். மலைப் பாம்புகளை நிலத்தின் பாதுகாவலர்கள் என்று கூறுகின்ற மரபும்
உள்ளது. இந்த ஓசுக்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒரூ (Oru), அடு-எபோ (Adu-ebo), ஒருமா (Oruma),
உமே (Ume), ஓஹு (Ohu), ஓமோனி (Omoni) என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
மாந்தர (Mandara) என்ற பகுதியில் மட்டும் கருமார்களும் குயவர்களும்கூட ஓசுக்களாகக்
கருதப்படுகின்றனர். இந்த ஓசுக்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்ற நம்பிக்கையால்
தொடக்கத்தில் மதிப்புடனும் மாண்புடனும் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; பின்னாளில் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிவிட்டனர்
என்கின்றனர். ஓசு சாதி முறை இக்போக்களின் மரபான மதங்களின் செயல்முறையிலிருந்து
தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
தென் மேற்கு நைஜீரியாவில் ஓஷோக்போ (Oshogbo), ஓக்போமோஷோ (Ogbomosho) என்ற இரு குழுவினர் ஒருவரையொருவர் பாரபட்சத்துடன் நடத்துகின்றனர். இருப்பினும்
அவர்கள் ஒரே புவியியல் நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஓடுடுவா (Oduduwa) என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சோமாலியா
சோமாலியச் சமூகத்தைக் குலக் குழுக்களின் கூட்டமைப்பு எனச் சொல்லுமளவுக்கு அங்கு
குலங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் குலங்கள் குடும்பங்களாகவும் துணைக்
குடும்பங்களாகவும் பிரிந்துள்ளன. இந்தக் குலக் குடும்பங்கள் வரையறுக்கப்பட்ட அரசியல்,
பொருளாதார அல்லது சமூகச் செயல்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இங்கே இருக்கின்ற
தாழ்ந்த சாதிகள், சாப் (Sab) எனப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் இவர்களின்
விழுக்காடு ஒரு சதவீதம் மட்டுமே. இவர்களுக்கு நிலப்பரப்பு அல்லது மரபு வரிசை அல்லது
இன அடிப்படைகள் இல்லை. இவர்கள் ஆட்சி அதிகாரத்திலுள்ள சோமாலி இனக் குழுக்களின்
அடிமைகள் போலிருக்கின்றனர். இவர்கள் மிட்கன், டுமல், யிபிர் என்ற பெயர்களிலும் கபோயே
(Gaboye), மிட்கன், ரஹன்வெய்ன் (Rahanwein), லெ கிட்டான் (Les
Gitanes) என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்களில் டுமல் என்போர்
கருமார்களாகவும் யிபிர், மிட்கன் ஆகியோர் முறையே வேட்டையாடுதலிலும் தோல் தொழிலிலும்
உள்ளனர்.
ருவாண்டா
மூன்றாம் வகையான இச்சமூகம் ருவாண்டா, புருண்டி, காங்கோ, உகாண்டா ஆகிய நாடுகளில்
உள்ளது. ஒட்டுமொத்தச் சமூகமும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இதில்
அடித்தட்டில் உள்ள ட்வா பிரிவினர் மட்டுமே கிட்டத்தட்ட தீண்டத்தகாதோரின் நிலைக்கு
ஒப்பான நிலையில் உள்ளனர். இவர்களின் தொழில்களாக வேட்டை, உணவு சேகரிப்பு, பானை வனைதல்,
கோமாளித் தொழில் ஆகியவற்றைக் கூறலாம். இச்சமூகத்தில் முதல் நிலையில் டுட்ஸிகள்
ஆளுவோராகவும் மக்கள் தொகையில் 90 விழுக்காடு உள்ள ஹுடுக்கள் பண்ணையாட்களாகவும்
இருந்தனர். இந்த மூவருக்கும் இடையிலான சாதிப் பிரிவினை இறுக்கமாகக்
கடைப்பிடிக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் மணவுறவு இல்லை. இங்கு இருந்த அனைத்து இனப்
பிரிவினர்களும் பழமொழிகள், பாடல்கள் மற்றும் மந்திரங்களை அதிகமும் கொண்டிருந்தனர்.
டுட்ஸிகளின் காவியப் பாடல்கள் புகழ்பெற்றவை. அவை டுட்ஸிகளின் அரச வம்சத்
தொடர்ச்சியைக் கூறுவதாக உள்ளன. இவற்றில் வழி வழியாக வந்த மரபுக் கதைகள்
பாதுகாக்கப்பட்டுள்ளன.
உகாண்டா
19ஆம் நூற்றாண்டில் உகாண்டாவின் அங்கோல் அரசாட்சிப் பகுதியில் இருந்த சாதிகள் இனக்
குழுச் சாதி முறைக்குச் சிறந்த உதாரணம். ஹமிடிக் (Hamitic) இனக் குழுவினைச்
சேர்ந்த பஹிமாக்கள் (Bahima) ஆயர்களாகவும் போர்க் குடிகளாகவும் இருந்தனர்.
இவர்களுடன் பெய்ரு (Bairu) என்ற மற்றோர் இனக் குழுவினரும் ஒரு சாதியாக
வாழ்ந்தனர். தோட்டப் பயிர்செய்துவந்த இவர்கள் தங்களின் அறுவடை மொத்தத்தையும்
பஹிமாக்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மறுபங்கீடு செய்வதைத்தான்
பெற்றுக்கொள்ளவேண்டும். பஹிமாக்களுக்கும் பெய்ருக்களுக்கும் மண உறவு இல்லை. ஆனால்
பஹிமா தலைவர்கள் பெய்ரு பெண்களைக் காமக் கிழத்திகளாக வைத்துக்கொள்வர். இவ்வாறு
கலப்பில் பிறந்தவர்கள் அபாம்பரி (Abambari) எனப்பட்டதுடன் இவர்கள்
பெய்ருக்களுக்கு இணையாகவே கருதப்பட்டனர். மேலும் இச்சமூகத்தின் விரிவாக்கத்தில்
அண்மையில் வசித்துவந்த அபத்தோரோ (Abatoro) என்ற இனக் குழுவையும்
சேர்த்துக்கொண்டனர். ஆனால் அவர்களுடன் பஹிமாக்கள் மட்டுமே மணவுறவு கொண்டனரேயன்றி
பெய்ருக்கள் மணவுறவு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அனைவருக்கும் கீழே
அபக்குகள் (Abahku) என்ற அடிமைகள் இருந்தனர்.
உகாண்டாவில் பாண்ட்டு (Bantu) மொழி பேசுவோர் விவசாயிகளாக இருந்து குலக் குழுத்
தலைமை கொண்ட நிர்வாகத்தை உருவாக்கினர். இன்னொரு புறத்தில் நிலோடிக் (Nilotic) மொழி பேசிய மேச்சல் கூட்டத்தினர் இந்தப் பண்பாட்டு மொழி பேசுவோரின்
பாதுகாவலர்களாயிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் தலைமையில் ச்வெஸி
(Chwezi) என்ற ஆட்சியாளர்ளை நிறுவினர். உகாண்டாவில் உருவான இந்த மூன்றாம்
வகை அரசுதான் புகாண்டா என்பது. இதன் அரசர்கள் கபகா (Kabaka) எனப்பட்டனர்.
இந்த அரசர்கள் தாய்வழிக் குலங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். அனைத்துக்
குலங்களுமே அரசனுக்கு மனைவிகளை வழங்கின. கொம்போலா (Gombola) எனப்படும் அரசத்
தீ, கபாகாக்களின் அரண்மனை வாயிலில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. அரசன்
இறக்கும்போது மட்டுமே இது அணைக்கப்படும்.
தொழில் சாதிப் படிநிலைகள் - சமூகப் பாரபட்சங்கள்
ஆப்பிரிக்காவில் உள்ள சாதியமைப்பின் மூன்று வகைகளுக்கும் உதாரணங்களாக வகைக்கு இரு
நாடுகளைப் பார்த்தோம். இது மட்டுமின்றி பர்க்கினா ஃபாஸோ, மாலி, நைஜர் ஆகிய
நாடுகளில் ட்வாரெக் (Twareg) மேச்சல் சமூகத்தில் மூன்றாவது பிரிவாக பெல்லா
(Bella) என்ற அடிமைச் சாதியையும் கென்யாவில் வாட்டா (Watta) என்ற
சாதியையும் மருஷியானாவில் ஹராடின் (Haratin) என்ற சாதியையும் இன்னும் பல
சாதிகளையும் காண்கிறோம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் தொழில்நுட்பம்
சார்ந்த தொழில்களில் உள்ள மக்கள் பிரிவினர் மட்டுமே சாதி மக்கள் எனப்படுகின்றனர்.
ஒவ்வொரு தொழிலிலும் உள்ளவர்கள் ஒரு சாதியினராக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது
கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள எகிப்து உதாரணத்துடன் பொருந்துவதாக உள்ளது. இந்த
சாதிக் குழுக்கள் அடிப்படையில் தொழில் சாதிகள். இவர்களது தொழில்கள்: கருமார்,
குயவர், நெசவு, தோல் பதனிடுதல், மருத்துவம், பாணர்கள், கோமாளித் தொழில், வெட்டியான்
தொழில், காயடித்தல், வேட்டை, உணவு சேகரிப்பு போன்றவை.
எத்தியோப்பியாவில் ஓசாகா டென்ச்சா (Osaka
Dencha) என்ற இடத்தில் இரும்பு
உருக்குவோர் குறித்து ஆய்வு செய்த குன்னார் ஹாலண்ட் (Gunnar
Haaland) மற்றும் சிலர், சாதிக் குழுக்களிடம் உள்ள படிநிலையை அவர்கள் வசிக்கின்ற பகுதிகளே
வெளிப்படுத்துகின்றன என்கின்றனர். உதாரணமாக, மன எனப்படும் குயவர்கள் வசிக்கும்
பகுதி பள்ளத்திலும் சாதிப் படிநிலையில் மேலே இருப்பவர்கள் வசிப்பது மேட்டுப்பாங்கான
பகுதியிலும் உள்ளது. மேலும் சந்தை போன்ற இடத்திலும்கூட அவர்கள் கடை வைக்கின்ற
இடத்தில் அல்லது கடையில் வந்து அமருபவர்களில், சாதிப் படிநிலையில் மேலே
இருப்பவர்கள் உயரமான இருக்கைகளிலும் கீழே இருப்பவர்கள் தாழ்ந்த இருக்கைகளிலும்
அமர்கின்றனர். அவர்கள் போகிற வழியில் சந்தித்துப் பேசிக்கொண்டாலும் படிநிலையில்
மேல் இருக்கின்ற சாதியைச் சேர்ந்தவர்கள் உயரத்தில் நின்றுகொண்டுதான் தாழ்ந்த
சாதியினரிடம் பேசுகின்றனர் என்கின்றார்கள்.
இத்தகைய தொழில் சாதிகள் உள்ளாகின்ற ஒடுக்கு முறைகள் மற்றும் பாரபட்சங்கள் குறித்து
அலெக்ஸாண்டர் ஸ்டீவன்ஸ் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு சாதி உறுப்பினராக இருப்பதன்
விளைவுகளில் பாரபட்சத்தின் அளவிலும் தன்மையிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
குறிப்பான விஷயங்கள் பலவும் புவியியல் மற்றும் பண்பாட்டுச் சூழல் சார்ந்துள்ளன.
பாரபட்சத்தின் வடிவங்கள், சமூக விலக்கு, உள்ளுக்குள்ளேயே பிரித்துவைப்பது, சமூகப்
பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கத் தடை, குடியிருப்புகளைத் தனியே பிரித்து வைத்தல்,
இடுகாடுகளைப் பிரித்துவைத்தல், இடுகாடுகளுக்கு இடம் தர மறுப்பது, ஆயுதங்கள்
வைத்துக்கொள்ளத் தடை, அரசியல் அமைப்புகளில் அங்கம் வகிக்கத் தடை அல்லது கீழ்நிலைப்
பொறுப்புகள் மட்டும் தருவது, தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுவது, நீதி வழங்குதல்
சார்ந்த (நீதிபதியாக அல்லது சாட்சியாக) பொறுப்புகளை மறுப்பது, கல்வி மறுப்பு அல்லது
கல்வி நிலையங்களுக்குள் பிரித்துவைத்தல் என்பன."
தொடர்ச்சி...
1 2
3
4
உள்ளடக்கம் |