Google   www kalachuvadu.com

கட்டுரை :

ஆப்பிரிக்காவில் சாதிமுறை

ப்ரவாஹன்

n யுத்தமின்றி ரத்தம்

n இந்தியாவின் நேரடித் தலையீடு

n 1806 ஜூலை, வேலூர்

n ஆப்பிரிக்காவில் சாதிமுறை

இந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்துவருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றன. இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக்கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதற்குக் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட, தற்போது நடப்பில் உள்ள, மனுதர்ம சாஸ்திரம் அடிப்படை எனக் கூறப்படுகிறது. ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும். இந்தோ- ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பதையும் உய்த்துணர்ந்துகொள்கிறோம். சாதி அமைப்பு இந்தியச் சமூகத்திற்கு - குறிப்பாக இந்து மதத்திற்கு - உரியது என்ற கருத்துடன் இந்து மதத்தின் சாரமே சாதிதான் என்றும் சாதி இன்றி இந்து மதம் இல்லை என்றும் கருதப்படுகிறது. இந்து மதத்தின் வழிபாட்டு நெறிமுறைகளையும் சமூகச் சட்டங்களையும் சாஸ்திரங்கள் வகுத்து நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரத்தைத் தம்மிடத்தில் வைத்துள்ள பார்ப்பனச் சாதி, இந்து மதத்தின் தலைமைச் சாதியாக இருப்பதால் இந்து மதமே பிராமண மதம் என்றும் அழைக்கப்படுகிறது. வர்ணாஸ்ரம அமைப்பு, வர்ணம் அல்லது நிறம் சார்ந்தது என்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்தக் கருத்தின் அடிப் படையில் பார்த்தாலும் பார்ப்பனரின் நிறம் வெள்ளை என்பதுடன் அதுவே உயர்ந்த குணமாகிய சத்வ குணத்தின் நிறமும் எனவும் இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதுவும் இந்து மதத்தைப் பிராமணிய மதம் எனக் குறிப்பிடுவதற்கான தர்க்கவியல் அடிப்படையை நிறுவுகிறது.

வர்ணாஸ்ரம அமைப்பின் அடிமட்டத்தில் உள்ள சூத்திரர் மற்றும் இதற்குள் அடங்காத பஞ்சமர்களின் நிறம் கருப்பு என்பதும் இந்து மதத்தின் ஆதார நூல்களில் கூறப்பட்டுள்ளது. எனவே வந்தேறிகளாகிய இந்தோ -ஐரோப்பிய வெள்ளை நிற இனக் குழுவினர் கருப்பினப் பூர்வகுடிகளை (திராவிடர் என்றோ பகுஜன் என்றோ அந்தந்தப் பிரதேசங்களின் சிறப்புக் கூறுகளின்படி அழைத்துக்கொள்வது அரசியல் ரீதியில் சரியானதாகக் கருதப்படுகிறது) நயவஞ்சகமாக அடிமைப்படுத்தித் தமது சாதிய மேலாண்மையை நிலைப்படுத்திக்கொண்டனர் என்றொரு வரலாற்றுச் சித்திரம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் வரலாற்று அறிஞர்கள், மானுடவியல் அறிஞர்கள், சமூகவியல் அறிஞர்கள் ஆகியோராலும் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கருத்தின் பலவீனங்களை ஆய்வாளர்கள் இதுவரையில் விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக, பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணங்களின் பெயர்களுக்கான வேர்ச் சொற்கள் இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல.

ஆப்ரஹாம் அல்லது இப்ராஹிம் என்ற தொன் மூதாதையரின் பெயர்கள் செமிட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஹீப்ரூ மொழிக்குரியவை. ஆப்ரஹாம் என்பதை அல் ப்ரஹ்மா என்று பிரிக்கலாம். அல் எனும் சொல் ஆங்கிலத்தில் உள்ள the என்ற முன்னொட்டு ஆகும். எனவே 'பிராமண' என்ற சொல்லுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு வெளிப்படையானது. எவ்வாறெனில் பப்பா (bappa), வாப்பா (vappa), பாபு (bapu) போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கும். இவையெல்லாம் ப்ரஹ்மா, பம்மா (bamma) என்ற சொல்லுடன் தொடர்புடையவை. 'க்ஷத்ரிய' என்ற சொல் 'கத்தி' என்ற சொல்லுடன் தொடர்புடைது. க்ஷத்ரியவாடா என்ற பகுதி குஜராத்தில் கத்தியவார் எனப்படுகிறது. க்ஷத்ரியர்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 'கத்தியர்' எனக் குறிப்பிடப்படுகின்றனர். துருக்கி நாட்டில் வழங்கிவந்த பண்டைய ஹிட்டைட் மொழியில் கத்தி என்பது பொது ஆயுதப் பெயராகும். 'க்ஷத்ர' என்பதும் சம்ஸ்கிருதத்தில் ஆயுதத்தைக் குறிக்கும். 'க்ஷத்ரிய' என்னும் இச்சொல் 'கத்தி' என்ற சொல்லின் சமஸ்கிருதமயப்பட்ட வடிவாக இருக்க வேண்டும். எனவே க்ஷத்ரிய என்னும் சொல்லும் இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதல்ல.

அடுத்ததாக, வைசியர் என்ற சொல் 'விஸ்', 'விஸ்வம்' என்ற வேர்ச் சொற்களுடன் தொடர்புடையதாகும். வைசியர் என்ற சொல்லுக்கு உலகப் பொது மக்கள் என்று பொருள். அதாவது அடிமைகளல்லாத சுதந்திர உலகக் குடிமக்கள் வைசியர் எனப்பட்டனர். இச்சொல் வியன் (விரிந்த), வையம் (பரந்த உலகு) என்னும் தமிழ்ச் சொற்களுடன் தொடர்புடையது. எனவே வைசியர் என்ற சொல் திராவிட மொழியைச் சார்ந்த வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம். இறுதியாக, சூத்திர (அ) தஸ்யு என்ற சொல்லுக்கு தசா (அடிமை) என்று பொருள். இச்சொல் 'தாஹா' என்ற வடிவில் ஆப்கான் பகுதியில் வழங்குகிறது. இதன் பொருள் மனிதன் என்பதாகும். ஆரியர்களால் முதன்முதலில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்தத் தாஹா இனக் குழுவினராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு நாம் சொல்ல விழைகின்ற கருத்து என்னவெனில் வர்ணங்களுக்கு உரிய பெயர்கள் நான்குமே இந்தோ-ஐரோப்பிய மொழி வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை அல்ல என்பதுதான். அப்படியானால் வர்ணாஸ்ரம அமைப்பு என்பதும் குறிப்பாக தலைமை வர்ணப் பிரிவினராகிய பிராமணர் என்ற சாதிப் பிரிவும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குழுக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டா என்பதுதான் கேள்வி. மேலும் ஆரியர்களுக்கு உரியதான ரிக் வேதம் காட்டுகிற சமூக அமைப்பு அதிகபட்சமாக இனக் குழுச் சமூக அமைப்புடன் வீரயுக மட்டத்திற்குதான் வளர்ச்சியடைந்திருந்தது எனும்போது அவர்களிடம் வேலைப் பிரிவினை என்பதெல்லாம் அமைந்திருப்பது சாத்தியமா?

இச்சிக்கல் ஒருபுறமிருக்க, நான்காம் வர்ணமாக சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பு நிற இனக் குழுக்களிலும் கடுங்கருப்பு நிற இனக் குழுவினராகிய ஆப்பிரிக்க மக்களிடையே நிலவிவருகின்ற சில சமூக அமைப்புக் கூறுகளையும் வரையறைகளையும் ஆராயும்போது இந்த ஆய்வுச் சிக்கலுக்குப் புதிய பரிமாணமேகிடைக்கிறது. இந்தியச் சாதி அமைப்புக் குறித்து ஆராய்கின்ற அறிஞர்கள் இந்த நிதர்சனமான நிலவரம் குறித்த அறியாமையில் இருப்பது நமக்கு வியப்பாகவே உள்ளது.

ஆப்பிரிக்காவில் சாதிகள்

மனிதச் சமூகம் முதன்முதலில் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல இனக் குழுக்களில் (ethnic groups) சாதி முறை இன்றைக்கும் ஏதோவொரு வடிவில் நிலவிக்கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் அமைந்த தொழிற்தேர்ச்சி பெற்ற தனக்குள்ளேயே மணவுறவைக் கொண்டுள்ள குழுவே 'சாதி' என்று வரையறுக்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக இத்தகைய குழுக்கள் பல்வேறு சமூகத் தடைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் ஆட்படுவது வழமையாக உள்ளது. இத்தகைய சாதிச் சமூகம் தொடக்கக் கட்ட சமுதாயங்களில் காணப்படுகிற வேலைப் பிரிவினை சார்ந்தது என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இது ஓரளவுக்குப் பொருத்தமே எனினும் முழுமையானதல்ல. இதில் பொருளாதார அம்சம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. சாதி ஒரு சமூக அமைப்பு என்பதில் எவரும் கருத்து வேறுபடுவதில்லை. ஒவ்வொரு சமூகமும் தனக்கேயுரிய சமூக அமைப்பைக் குறிப்பிட்ட சமூகப் பொருளாதார நிலைமைகளுக்குத் தக்கப்படி உருவமைத்துக்கொள்கிறது. அந்நிலைமைகள் மாறும்போது புதிய நிலைமைகளுக்குத் தக்க புதிய அமைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. ஆனால் சாதி, பிறப்பு சார்ந்து இருப்பதால் சமூகப் பொருளாதார நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பின்னரும் அவ்வாறே நீடிக்கிறது. ஆப்பிரிக்கக் கிழக்கு எல்லையான எத்தியோப்பியாவில் தொடங்கி சூடான், மாலி, மருஷியானா, கேம்பியா, கினி, பிஸா, ஐவரி கோஸ்ட், நைஜர், பர்க்கினாஃபாஸோ, கேமரூன், கானா, லைபீரியா, சியரா லியோன், அல்ஜீரியா, நைஜீரியா, சாட் என மேற்கெல்லையான செனகல் வரையிலும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் படிநிலைச் சாதியமைப்பு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தச் சாதிக் குழுக்கள் எதிர்கொள்ளும் பல வகை ஒதுக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் பல நேரங்களில் இந்தியாவில் நிகழ்பவற்றைவிடக் கடுமையானவை. இதற்கு அந்தச் சமூகங்கள் வளர்ச்சி பெறாமல் பழைய நிலைமைகளிலேயே நீடித்துக்கொண்டிருப்பதே காரணம்.

ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் சாதி முறைகளை மூன்றாக வகைப்படுத்தலாம். செனகல் நாட்டின் ஓலோஃப் (Wolof) சமூகம், எத்தியோப்பிய கேமோ (Gamo) சமூகம் மற்றும் மேற்கு-மத்திய ஆப்பிரிக்காவின் மண்டே (Mande) மொழி பேசுகிற மக்கள் சமூகம் ஆகியவற்றில் உள்ள சாதி முறையை ஒரு வகையாகவும், நைஜீரிய ஓசு (Osu), சோமாலிய சாப் (Sab) சாதி முறைகளை மற்றொன்றாகவும், ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளின் வகையை மூன்றாவதாகவும் கூறலாம். இவற்றிற்கு இடையில் உள்ள பொதுமைகள் இவை ஒரே அமைப்பு முறையின் மாறுபட்ட திரிந்த வடிவங்களாக இருக்க வேண்டும் எனக் காட்டுகின்றன. இவற்றில் முதல் வகை இந்தியச் சாதி முறையைப் பெரிதும் ஒத்திருக்கிறது. அதாவது ஒரே இனக் குழுவுக்குள்ளேயே இந்தியச் சாதி அமைப்பில் காணப்படும் பிறப்பு, படிநிலை, தொழில், அகமண முறை (தங்கள் சாதிக் குழுவுக்குள்ளேயே மணம் செய்துகொள்வது), தீட்டு, பிரிவினை, சமூக நிகழ்வுகளில் புறக்கணிப்பு, தனிக் குடியிருப்புகள், தனி இடுகாடுகள், இடுகாடு இட மறுப்பு போன்ற அனைத்துக் கூறுகளையும் கொண்ட முதலாம் வகை.

இரண்டாவது, நைஜீரிய ஓசு முறை. சமூகத்தின் மற்ற அனைவரும் ஒரு பிரிவாகவும் ஓசுக்கள் எனப்படும் தீண்டத்தகாதோராகக் கருதப்படும் சாதி ஒன்றுமாகவும் இருக்கிறது. இந்த ஓசு சாதியினர் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் சில நேரங்களில் வேறு இனக் குழுவிலிருந்து ஏதோ வகையில் ஓசுக்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களுமாவர். சோமாலியாவில் மிட்கள் (Medgan), டுமல் (Tumal), யிபிர் (Yibir) என்னும் சாதிகள் தாழ்ந்த சாதிகளாக உள்ளன. சோமாலிய அரச குலங்களுக்கும் இவர்களுக்கும் இடையில் புரவலர் - சார்ந்திருப்பவர் என்ற உறவுநிலை உள்ளது. மூன்றாவது வகை ருவாண்டா நாட்டில் உள்ள இனக் குழுச் சாதி முறையாகும். இதில் ஹுடு (Hutu), டுட்ஸி (Tutsi) என்ற இருவேறு இனக் குழுக்கள் இரண்டு சாதியினராகவும் இவ்விரு சாதிகளின் கலப்பில் பிறந்தவர்கள் ட்வா (Twa) என்ற மூன்றாவது பிரிவாகவும் உள்ளனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ட்வா பிரிவினர் தீட்டு எனக் கருதப்படுகின்ற பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆளுவோராக உள்ள டுட்ஸிக்களும் விவசாயிகளாகவும் வணிகர்களாகவும் உள்ள ஹுடுக்களும் ட்வா பிரிவினரைப் பாரபட்சமாக நடத்துகின்றனர்.

செனகல்

செனகல் நாட்டில் உள்ள இனக் குழுக்களை மூன்று குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். டெக்ரூர் (Tekrur) குடும்பத்தில் ஓலோஃப் (36%), டூக்ளூர் (Tukloor - 9%), செரீர் (Sereer - 17%), ஃபல்பே (Fulbe - 17%), லெபு (Lebu) மற்றும் லாபே (Lawbe) இனக் குழுக்களும், மண்டே (Mande) குடும்பத்தில் மண்டிங்கோ (Mandingo - 6%), மாலிங்கே (Malinke - 4%), பமானா (Bamana) மற்றும் சரகோல் (Sarakole) இனக் குழுக்களும், பாலியோ செனிகேம்பியன் (Paleo - senegambian) குடும்பத்தில் ஜோலா (Jola - 9%), பசாரி (Basari), பேனுக் (Baynuk), நூன் (Noon), பலோர் (Palor) ஆகிய இனக்குழுக்களும் உள்ளன. செனகல் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான (36%) ஓலோஃப் இனக் குழுவிலும் இன்னும் டெக்ரூர் மற்றும் மண்டே குடும்பங்களைச் சேர்ந்த இனக் குழுக்களிலும் தெளிவான சாதிப் படிநிலை உள்ளது. கீர் (Geer - ஆளுவோர்/சுதந்திர மனிதர்கள்), ஜாம் (Jaam- அடிமைகள் மற்றும் அவர்களின் வழிவந்தோர்), நீநோ (Neeno - சாதி மக்கள்) என மூன்றாகப் பிரித்துள்ளனர். ஓலோஃப் இனக் குழுவில் சாதி அடுக்கில் மேல் உள்ள கீர்கள் (மண்டே இனக் குழுவில் இவர்கள் ஹோரோ (Horo) எனப்படுகின்றனர்) நிலவுடைமையாளர்களாகவும் மேன்மக்களாகவும் கருதப்படுகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள நீநோக்களுள் முதலில் கைவினைஞர்களான டெக் (Tegg - கருமார்) ஊடெ (Uude- தோல் பதனிடுவோர்), தச்சர்களான சீனே (Seene), நெசவாளர்களான ராப் (Rabb) என்ற படிநிலையும், இரண்டாவதாக கிவெல் (Gewel) (கிரியாட்ஸ்) எனப்படும் பாணர்களும் இவர்களுக்குக் கீழே மூன்றாவதாக நூலே (Noole) எனப்படும் வேலைக்காரர்களும் கோமாளிகளும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் ஜாம் எனப்படும் அடிமைகள் உள்ளனர். இந்த அடிமைகள் உழுகுடிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் மேன்மக்களான கீர் பிரிவில் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலை, தாழ்ந்த சாதிகளாகக் கருதப்படும் நீநோக்களையும் கிரியாட்டுகளையும் (Griots) விடக் கீழ்நிலையில் இருந்தாலும் சமூக ரீதியில் அவர்கள் மரியாதைக்குரியவர்களாகவே உள்ளனர். செனகல் நாட்டின் மக்கள் தொகையிலேயே 9% உள்ள ஜோலா மற்றும் பசாரி போன்ற பாலியோ செனிகேம்பியன் இனக் குழுக்களில் சாதி முறை இல்லை என்பதும் இந்த இனக் குழுக்கள் மிகப் பழமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

கிரியாட் எனப்படும் பாணர்கள் அவ்வப்போது தீண்டத்தகாதோராக, ஊருக்கு வெளியே வசிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்கள் கிராமத்திற்குள் வசிப்பது கிராமத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது. இவர்களுக்கு இடுகாடுகளும் மறுக்கப்படுகின்றன. நிலவுடைமையாளர்களான கீர்களின் நம்பிக்கைப்படி புனிதமான இந்தப் புவி தீட்டுக்குரிய இவர்களைத் தாங்காது என்பதே இதற்குக் காரணமாகும். இதனால் இவர்கள் பிணத்தை மரத் தண்டின் (Trunk Baobab Tree) நடுவில் உள்ள காலியான இடத்தில் வைத்து மூடிப் புதைக்கின்றனர். இப்பாணர்கள் பரம்பரையாக மேல் தட்டில் உள்ள கீர்களைப் புகழ்ந்து பாடல்கள் பாடி வந்துள்ளனர். மேலும் கீர் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைந்தாற்போலவே ஒரு கிரியாட் குடும்பம் உள்ளது. இந்த கிரியாட்டுகள் மத்தியிலும் மேல்தட்டு கிரியாட்டுகள் என்றும் அடிமை கிரியாட்டுகள் என்றும் பிரிவினைகள் கூறப்படுகின்றன. இதில் ஆளுவோர் சார்ந்த கிரியாட்டுகள் மேல்தட்டினராகவும் மற்றவர்கள் அடிமைகள் என்றும் சில நேரங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

பொதுவாக இச்சாதிப் பிரிவுகள் அனைத்திலும் அகமண முறை நடப்பில் உள்ளது. கீர்கள் தங்களுக்குள்ளேயும் நீநோக்களில் உள்ள டெக், ஊடே, சீன், ராப் ஆகியோர் தத்தம் பிரிவுக்குள்ளேயும் கிரியாட்டுகள் கிரியாட்டுகளுக்குள்ளேயும் அடிமைகள் தமக்குள்ளேயுமே மணவுறவைக் கொண்டுள்ளனர். தார்மீக ரீதியில் சாதியை எதிர்ப்பவர்களும்கூடத் தங்கள் குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால் பிற சாதியிலிருந்து மணந்துகொள்ளத் தயங்குகின்றனர். மேலும் பெயர்களின் பின்னொட்டைக் கொண்டே அவர்களின் சாதியை நாம் கண்டுபிடித்துவிடக்கூடிய நிலைமையும் உள்ளது. உதாரணமாக ம்பே (Mbaye), ம்பௌப் (Mboup), செக் (Seck), தியாம் (Thiam), நியாங் (Niang), ங்கோம் (Ngom), சாம் (Sam) போன்ற ஓலோஃப் சமூக கிரியாட்டுகளின் பின்னொட்டுப் பெயர்கள் அல்லது குலப் பெயர்கள். மண்டிங்கா கிரியாட்டுகளிடம் உள்ள இத்தகைய பெயர்கள் டையாபாட்டே (Diabate), கோன்டே (Konte), கௌயாட்டே (Kouyate), கொனாட்டே (Konate), சோசி (Soce) மற்றும் பிற.

தொடர்ச்சி...   1   2    3   4

உள்ளடக்கம்

Google Ads.....


Google