Google   www kalachuvadu.com

கட்டுரை : இலங்கை: அரசியல் களம்

இந்தியாவின் நேரடித் தலையீடு

எஸ்.கே. விக்னேஸ்வரன்

n யுத்தமின்றி ரத்தம்

n இந்தியாவின் நேரடித் தலையீடு

n 1806 ஜூலை, வேலூர்

n ஆப்பிரிக்காவில் சாதிமுறை

கடந்த ஒரு மாத காலத்துள் இலங்கையின் அரசியல் சூழலில் பல முக்கிய, பின்னால் முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு வழிகோலக்கூடிய நிகழ்வுகள் மிக வேகமாக நடந்து முடிந்துவிட்டன. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தனது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று இலங்கை அரசாங்கமும் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவும சந்தோஷப் பட்டுக்கொள்கின்றபோதும், உண்மையில் அது வேறு பல உள்நோக்கங்களைக் கொண்ட ஒரு முடிவாகும். தடைசெய்யும் முடிவு எடுக்கப்படுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்புவரையும் அந்தக் கோரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் பெரிய ஆதரவு இருக்கவில்லை. ஆனால் இந்த நிலைமை திடீரென மாறித் தடைசெய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான நிமித்தக் காரணமாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்புக் கொடுத்து அழைத்துச் சென்ற கடற்படைக் கப்பல்மீது கடற்புலிகள் தாக்குதல் தொடுத்த சம்பவம் கூறப்பட்டாலும் அதை ஒரு பலமான காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த முடிவு புலிகளை வேறு வழியின்றிப் பேச்சுவார்த்தையை நோக்கித் தள்ளுவதற்கு உதவும் என்றும் அதற்காகவே இது செய்யப்பட்டது என்றும் கூறப்படுகின்றன. ஆனால், இதைவிடவும் வேறு முக்கிய பூகோள அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்றும் குறிப்பாக அமெரிக்காவின் தலையீட்டினாலேயே இது நடந்திருக்கிறது என்றும் வெளிப்படுத்தப்படும் ஊகங்களை முற்றாக மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவிற்கு இந்த விடயத்தில் இருக்கும் அக்கறைக்கான காரணங்கள் ஒருபுறமிருக்க, அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைக் கவனிப்பது இலங்கையின் உள்நாட்டு அரசியலின் போக்கு எவ்வாறு அமையப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஜெனிவாவில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் போக்குவரத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாகக் குழம்பிப்போனது. இதை அடுத்து, கண்காணிப்புக் குழுவுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைப் பற்றிப் பேசுவதற்கு நடந்த ஒஸ்லோ பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்துடன் புலிகளைப் பேசவைக்க எடுத்த முயற்சிகளும் குழம்பிப்போயின. புலிகளுடன் பேச ஒஸ்லோவில் கிடைத்த சந்தர்ப்பத்தை அரசு விணடித்தது. தகுதி வாய்ந்த பிரதிநிதிகளை அனுப்பிவைக்காததால் அந்த வாய்ப்பு குழம்பிப்போகும் நிலையை ஏற்படுத்திவிட்டிருந்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் புலிகள் தம்மை மிகவும் கவனமாக அரசியல் ரீதியில் பாதுகாத்துக்கொண்டதுடன் ஐரோப்பிய நாடுகளுக்கும் உலக அரங்கில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தனர். தம்மைத் தடைசெய்த ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை வடக்கு, கிழக்கிலிருந்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டுமென்று ஒஸ்லோவில் வைத்துப் புலிகள் அறிவித்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களினூடாகப் புலிகளை இலங்கை அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் சமாதானப் பேச்சுவார்த்தையை நோக்கி இழுப்பதற்குப் பதிலாக யுத்தத்தை நோக்கித் தள்ளிவிட்டிருந்தன. ஒருவகையில் இலங்கை அரசுக்கும் அதுதான் தேவையாக இருந்தது. அதனால்தான் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாமீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து கடற்படையினர் மன்னார் பேசாலை வாழ் தமிழ் மக்கள்மீது நடத்திய தாக்குதல் மற்றும் வன்னியில் நடந்த விமானப்படையின்

குண்டு வீச்சுக்கள் என்பன தொடங்கின. இதனால், முழுமையான ஒரு யுத்ததம் வெடிக்கின்ற ஒரு நிலைமை உருவானது. கெப்பற்றிக் கொல்லாவையில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 150 சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டது இந்த யுத்த உணர்வலைகளை மேலும் வளர்த்துவிட்டிருந்தது. இக்கொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிவித்திருந்த போதும் அந்த மறுப்பு ஊடகங்கள் மத்தியில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை கலந்த பலமான சர்வதேச அழுத்தங்கள் பல கொடுக்கப்பட்டன. தாம் சமாதானத்திற்கான கதவை இன்னமும் திறந்துதான் வைத்திருக்கிறோம் என்று ஜனாதிபதி திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் இராணுவத்தின் மூன்றாம்மட்ட உயர் அதிகாரியான மேயர் ஜேனரல் பாரமி குலதுங்க மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்தது. இது உடனடியாக இராணுவத்தைத் தலைமையற்ற ஓர் அமைப்பாக மாற்றிவிட்டிருந்தபோதும் யுத்தத்தை நோக்கிச் செல்வதற்கான இராணுவத்தின் விருப்புக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது. ஆயினும் இராணுவத் தளபதிமீதான தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலையடுத்து வடக்குக் கிழக்கில் நடைபெற்றது போன்ற ஒரு பழிவாங்கும் நடவடிக்கையை அரசப்படைகள் கட்டவிழ்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை பல நாடுகளினதும் தூதுவராலயங்களிலிருந்து அரசாங்கத்திற்கு வந்து குவிந்ததை அடுத்து இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டன. படையினரின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் சர்வதேச அரங்கில் தமது அரசு அம்பலமாகிவிடும் என்று ஜனாதிபதிக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏற்கெனவே அவருக்கு இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்குத் தோன்றிய ஒரே மாற்று வழிதான் புலிகளுடன் நேரடியாகப் பேசப்போவதாக அறிவிப்பது. அப்படித் தோன்றியவுடன் இவ்வளவுக்குப் பிறகும் புலிகளுடன் தாம் நேரடியாகவே பேச விரும்புவதாகவும் இடையில் தரகர்கள் தேவை இல்லை என்றும் பகிரங்கமாகவே அறிவித்தார். அறிவித்ததுடன் நில்லாது, அதற்கான இரகசிய முயற்சியிலும் இறங்கியிருந்தார். ஆனால் அதேவேளை படையினர் யுத்தத்திற்கான நகர்வுகளைத் தொடர்வதை அவர் கண்டும் காணாததுபோல நடந்துகொண்டார். படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதன் காரணமாகப் பெருமளவு அகதிகள் நாளுக்கு நாள் பல ஆபத்துகளுக்கு மத்தியிலும் இந்தியாவிற்குச் சென்று தஞ்சம் கோரத் தொடங்கினர். படையினரின் யுத்த நோக்கிலான நகர்வுகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தன.

இந்தத் தந்திரோபாயத்தினை மேலும் உறுதிப்படுத்தும் யுத்த சம்பவமொன்றின் செய்திகள் இக்குறிப்பை எழுதத் தொடங்குகின்றபோது கிடைத்துள்ளன. மட்டக்களப்பு வாகனேரியிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்ற மோதல் ஒன்றில் புலிகள் தரப்பில் அறுவரும் இராணுவத்தினர் தரப்பில் பன்னிருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஓர் இராணுவ அதிகாரி புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் பெருந்தொகையாக இராணுவத்தினர் ஊடுருவ முற்பட்டிருக்காவிட்டால் இவ்வளவு பெரிய இழப்பை நேரடி யுத்தத்தில் சந்தித்திருக்கச் சாத்தியமில்லை. ஆக, இராணுவத்தினர் ஒரு பெரும் படை நகர்வைப் புலிகளின் பகுதிக்குள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இவ்வளவு காலமும் கடைப்பிடித்த, அடையாளம் தெரியாதபடி புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்கிவிட்டுப் பின்வாங்கும் தந்திரோ பாயத்திற்கு மாறாக இந்தப் படை நகர்வு நடந்திருக்கிறது.

இந்த ஒருமாத காலத்திய நடவடிக்கைகளினால் வழமைபோல் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. கொல்லப்பட்டது, சொத்திழந்தது, காயமடைந்தது, அகதிகளானது, கைதுசெய்யப்பட்டது எல்லாம் அவர்கள்தான். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் அரசு எந்த அக்கறையையும் காட்டவில்லை எனப் பல ஊடகங்கள கருத்து வெளியிட்டுள்ளன. உண்மையில் இந்த அரசுக்கு உள்ள அக்கறையெல்லாம் இந்த நிலையை மாற்றியமைப்பது அல்ல. மாறாக அதைப் பேணி வளர்ப்பதுதான். இந்த அரசு பதவியேற்ற நாள்முதலாக அதன் செயற்பாடுகள் அனைத்தும் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில் அல்ல; அவற்றை அபிவருத்தி செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. நாட்டில் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி, இதன் காரணமாக மக்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்புணர்வு என்பவற்றால் வரக்கூடிய நெருக்கடிகளைத் தடுக்க யுத்த நெருக்கடி அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த சிந்தனையாளர்கள் தெளிவாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் என்ன, அவற்றைத் தீர்க்கக் குறைந்தபட்சம் என்ன செய்ய வேண்டும் என்பவற்றில் ஒரு திட்டவட்டமான அபிப்பிராயம்கூட இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி எல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதற்கு நல்ல உதாரணமாக இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆட்சியைப் பிடிப்பதற்காக ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளைக் கொண்டவர்களைக் கூட்டி ஓர் ஆட்சியை அமைத்தால் என்ன நடக்கும்? ஒரு சாதாரண பிரச்சினைக்குக் கூட இவர்களால் ஒரு தீர்வை ஒருமித்துக் கண்டுவிட முடியாது. எல்லா விடயத்திலும் ஆளும் கூட்டணிக்குள் பலத்த இழுபறிகள் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக ஜே.வி.பி.யின் எதிர்ப்பு வெறுமனே இனப்பிரச்சினையில் மட்டுமல்ல, அனைத்து விடயங்களிலும் வெளிப்படையாகவே நிலவிவருகிறது. குறைந்தபட்சம் இலங்கை மின்சாரச் சபையைச் சீர்திருத்தும் சட்ட மூலத்தைக்கூடப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது அது. நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிச் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மஹிந்த சிந்தனைக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அக்கறையோடிருப்பதாகத் தெரிவித்துக்கொண்டே புலிகளை யுத்தத்தில் இழுத்துவிடுவதற்கான அனைத்து வழிகளையும் அது மேற்கொண்டது. ஆனால் புலிகளோ எதிர்பார்த்தபடி யுத்தத்தில் இறங்காமல் வெறும் பதிலடிகளைக் கொடுப்பதுடன் நிறுத்திக்கொண்டுவிடுகின்றனர். அதேவேளை அந்தப் பதிலடிகளும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஊட்டும் பதிலடிகளாக அமைந்துவிடுவது அரசாங்கத்திற்குப் பெரிய தலையிடியாக உள்ளது. கடந்த ஒருமாத காலத்துள் நடந்த நிகழ்வுகள் அரசாங்கத்தைப் பெரும் சர்வதேச அழுத்தத்துக்கு உள்ளாக்கிவிட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரின் மன்னார் தாக்குதல்கள் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிற்குச் சென்று தஞ்சம் கோரியது அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தை விட்டுவிட்டுப் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு நேரடியாகவே அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

நோர்வே இல்லாமல் நாமே நேரடியாகப் பேசுவோம் என்று புலிகளுக்கு இரகசியமாகத் தூது அனுப்பிப் பார்த்தார் ஜனாதிபதி. ஜே.வி.பி.யைத் தாஜா செய்யவும் பேச்சுவார்த்தையை நடத்துகிறோம் என்று உலகை நம்பவைக்கவும் அவர் அம்முயற்சியை மேற்கொண்டார். அவரது இந்த இரகசியக் கோரிக்கையைப் புலிகள் மறுத்தது மட்டுமன்றி அப்படிப் பேசுவதானால் அதனைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினர். பேசுவதற்கான சில முன்நிபந்தனைகளாக அரசப் படைகளாலும் துணைப் படைகளாலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும், துணைப் படைகளாகச் செயற்படுவோரின் ஆயுதங்களை உடனடியாகக் களைவதுடன் அவர்களை வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் செயற்படாமல் தடுக்க வேண்டும் யாழ் குடாநாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் போன்றவற்றையும் புலிகள் முன்வைத்திருந்தனர். இந்தப் பதிலினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து அவர் ஒரு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அனைத்துக் கட்சிகளதும் அபிப்பிராயத்திற்கமைவான ஒரு தீர்வை முன்வைக்கப்போவதாக அறிவித்ததுடன் இம்மாநாட்டில் புலிகளும் கலந்துகொள்ள வேண்டுமென்று அவர் அழைப்புவிடுத்திருந்தார். இந்தச் முயற்சி ஒன்றும்

புதிய முயற்சி அல்ல. தவிரவும் ஜனாதிபதி இந்த விடயத்தில் எவ்வளவு உறுதியாக இருப்பார் என்ற சந்தேகமும் பலராலும் எழுப்பப்படுகிறது. புலிகள் காலம் கடத்தும் செயலாகவே இதை நோக்குகின்றனர். ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டினுள் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று விடாப்பிடியாகச் சாதிக்கும் கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து பேசித் தமிழ் மக்களின் நலனுக்காக என்னத்தைச் செய்யப்போகிறார்கள் என்ற அவ நம்பிக்கையே பரவலாக எழுகின்றது.

இதற்கிடையில் இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் அவர்களின் வடிவில் இன்னொரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

ஜனாதிபதியை அவரது மாளிகையில் இந்தியப் பிரதமரின் செய்தியுடன் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர், இலங்கைப் படைகள் தமிழ் மக்கள்மீது நடத்தும் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் யுத்தத்தைக் கைவிட்டுவிட்டுச் சமாதானப் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த முன்வருதல் வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாகத் தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலரின் இந்தத் திடீர் விஜயமும் சமாதானப் பேச்சில் இலங்கை அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய விதமும் இனிமேலும் இந்தியா வெறும் பார்வையாளராக இருக்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

சியாம் சரண் அவ்வளவுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரு படி மேலே போய்ச் சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவல்ல ஆட்சிமுறையை, அதாவது இந்திய சமஷ்டி முறையையொத்த ஓர் ஆட்சியமைப்பு முறையைத் தீர்வாக வழங்க முன்வர வேண்டும் என்றும் ஒற்றை ஆட்சிக்குள் தீர்வைக் காண முடியும் என்ற விடாப்பிடியான நடைமுறைக்கொவ்வாத கருத்தை விட்டுவிட வேண்டும் என்றம் அவர் தெரிவித்திருந்தார். கூடவே, இந்திய முறைமையினை ஒத்த ஒரு முறைமையைக் கொண்டுவருவதாக இருந்தால் அதற்கு வேண்டிய நிபுணத்துவ உதவியை வழங்கவும் முன்வந்தார். அதை நடைமுறைக்குக் கொண்டுவர எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சியின் உதவியைப் பெற்றுத் தருவதில் தாம் உதவ முடியும் என்றும் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இந்த விடயத்தில் அரசுக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசின் இந்த வார்த்தைகள் எவையும் மிகவும் தெளிவாக, எந்தச் சந்தேகத்திற்குமிடமில்லாத விதத்தில் கறாராகவே தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வெளிநாட்டுச் செயலரின் வலியுறத்தலை அத்துமீறிய தலையீடு என்று கண்டித்த ஜே.வி.பி. எமது நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எமக்கு முடியும். இந்தியாவின் ஆலோசனை எமக்குத் தேவையில்லை என்று அறிக்கைவிட்டது. ஆனால் ஜனாதிபதியோ இந்திய மாதிரியிலான ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று இப்போது பேசத் தொடங்கியுள்ளார்.

ஆயினும் வழமைபோல அவர் தனது கபடத்தனமான அரசியலை விட்டுவிடத் தயாரில்லை என்பதை ஐ.தே.க.வின் உதவியைக் கோரிக்கொண்டே அதன் காலை வாரிவிடும் செயலில் இறங்கியதன் மூலம் உறுதிப்படுத்திவிட்டிருக்கிறார் என்று எதிர்க் கட்சியான ஐ.தே.க அறிவித்திருக்கிறது. தம்மோடு பேசிக்கொண்டிருக்கும்போதே தமது உறுப்பினர்களை மந்திரிப் பதவி தருவதாக ஆசை காட்டித் தமது கட்சிக்குள் இழுத்துக்கொணடிருக்கிறார் என்றும் இதனால் ஒப்புக்கொண்டபடி தம்மால் இலங்கை அரசுக்கு உதவ முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதிநிதியாக மிலிந்த முறகொடவை இந்தியாவிற்கு அனுப்பி இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்திய அரசிற்கு இலங்கை விவகாரத்தில் புதிதாக இப்படி ஒரு திடீர் அக்கறை ஏற்படக் காரணம் என்ன? இந்தியாவுக்குள் பெருந்தொகையில் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும் இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பெருகிவரும் அகதிகளின் எண்ணிக்கையுமே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகின்றது. ஆனால் உண்மையில் அதைவிடவும் முக்கியமான பிராந்திய அரசியல் காரணங்கள் இந்தியாவை இப்படியான ஒரு நிலைக்குத் தூண்டியிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கை அரசு ஆயுதக் கொள்வனவுக்காகப் பாகிஸ்தானுடன் மேற்கொண்டுள்ள நெருக்கமான உறவு மற்றும் பேசாலையில் இருக்கும் எண்ணை வளத்தை ஆராய்வதற்கான உரிமை ஒப்பந்தத்தைச் சீன நிறுவனம் ஒன்றிற்கு கையளித்தமை ஆகிய காரணங்கள் இந்தியாவை இலங்கை தொடர்பாக 'உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கும்' நிலையைவிட்டு நெருங்கி வரச்செய்திருக்கின்றன.

இந்தக் குறிப்பின் தொடக்கத்திலே குறிப்பிட்டபடி, பின்னால் பல முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்ட ஒரு காலமாக இக்காலத்தை எந்தத் தயக்கமுமின்றிச் சொல்வதற்கான அடிப்படைகளின் பிரதான அம்சம் மௌனம் கலைத்த இந்தியாவின் நேரடிப் பிரசன்னம். ராஜீவ் கொலை தொடர்பான அன்ரன் பாலசிங்கத்தின் கருத்துகளை இந்தியா எப்படி எடுத்துக்கொண்டாலும் இலங்கை அரசின் இழுத்தடிப்பு, கடந்த மாவீரர் தின உரையில் பிரபாகரன் தெரிவித்த யுத்தத்துக்கான காலக்கெடுவை இலேசாக எடுத்திருக்கவில்லை என்பதை இந்தப் பிரசன்னம் குறிகாட்டி நிற்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் குறித்துவைத்துக்கொள்ளலாம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google