Google   www kalachuvadu.com

கட்டுரை : இலங்கை: போர்க் களம்

யுத்தமின்றி ரத்தம்

எஸ்.கே. விக்னேஸ்வரன்

n யுத்தமின்றி ரத்தம்

n இந்தியாவின் நேரடித் தலையீடு

n 1806 ஜூலை, வேலூர்

n ஆப்பிரிக்காவில் சாதிமுறை

வவுனியாவிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கின்ற ஒரே தரைவழிப் பாதையான கி 9 பாதை மூடப்பட்டுவிட்டது. யாழ்குடா நாட்டுப் பகுதியை நோக்கி விமான மூலப் பயணங்களோ கடல்வழிப் பயணங்களோ எதுவும் நடக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக வடக்கில் ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கிறது. பலாலி விமான நிலையத்தில் விமானங்கள் இறங்க முடியாதெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத் தீவுப் பகுதியில் இன்றுவரை தொடர்ச்சியாக விமானங்கள் குண்டு வீசுகின்றன. குடாநாட்டிக்குள் நுழையும் கண்டிவீதியூடாகத் தென் மராட்சிப் பகுதியில் உக்கிரமான மோதல்கள் நடக்கின்றன. வடமராட்சியில் நாகர்கோயில் பகுதியிலிருந்து செல் வீச்சுகள் நடக்கின்றன. யாழ் தீவகப் பகுதியில் நடந்த பெரும் சமர் ஒன்றில் மண்டைத் தீவுப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. முல்லைத் தீவு அனாதைச் சிறுவர்களை (சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுவர்கள்) பராமரிக்கும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முல்லைத் தீவு மாவட்டப் பாடசாலை மாணவிகளுக்கென நடத்தப்பட்ட இரண்டு நாள் முதலுதவிப் பயிற்சி நடந்துகொண்டிருந்த வேளையில் வீசப்பட்ட விமானக் குண்டு வீச்சு அறுபதுக்கும் மேற்பட்ட மாணவிகளைப் பலிகொண்டுள்ளது. இந்த மாணவிகளை ஆயுதம் ஏந்திய புலிகள் என அரசாங்கம் அடித்துக் கூறுகின்ற போதும் யுனிசெப் நிறுவனமும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் அவர்கள் பாடசாலை மாணவிகளே என்று உறுதிப்படுத்தியுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கில் மாவிலாறு அணையைத் திறப்பது தொடர்பாகப் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் ஏற்பட்ட இழுபறியை அடுத்து மூண்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மூதூர் கல்லாறுப் பிரதேச மக்கள் அறுபதாயிரம் பேர் அளவில் வீடுவாசல்களை விட்டு உயிரைக் காப்பதற்காக வெளியேறி அகதிகளாக உள்ளனர். இடம் பெயர்ந்த இந்த மக்களின் அன்றாட வாழ்வுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது இன்னமும் சீரடையவில்லை.

இவ்வளவு விடயங்களையும் வாசிக்கும் ஒருவருக்கு இங்கே நடந்துகொண்டிருப்பது என்ன என்பதை ஊகித்துக்கொள்வது ஒன்றும் சிரமமானது அல்ல. ஆனால் இலங்கை அரசாங்கம் இங்கு நடந்து கொண்டிருப்பது யுத்தம் அல்ல, புலிகளின் தாக்குதலுக்கு நாம் நடத்தும் பதில் தாக்குதல் மட்டுமே என்று அறிவித்துள்ளது. புலிகள் தரப்பிலிருந்தும் இலங்கை அரசாங்கம் எம்மீது தாக்குதல் நடத்துவதால் தேர்ந்தெடுத்த இலக்குகள்மீது நாம் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

ஆக, குண்டுகள் வீசப்படுவது, கிளைமோர்கள் வெடிப்பது, மக்கள் கொல்லப்படுவது, வீடு வயல்களை இழந்து மக்கள் அகதிகளாவது, முன்னரங்கிலிருந்து முன்னேறிப் படை நகர்வது போன்ற நடவடிக்கைகள் யுத்தத்தின் அடையாளங்கள் அல்ல. நடப்பது யுத்தமும் அல்ல. நாம் வேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு யுத்தம் நடப்பதாகக் கூறி வெளியேறலாம். ஆனால் நடப்பது யுத்தம் அல்ல; ஒரு தற்காப்புச் செயல் மட்டுமே. சமாதானத்தைப் பாதுகாக்கவும் பேணவுமான நடவடிக்கை மட்டுமே. இந்த நடவடிக்கைகளின்போது யாராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் யார் எவர் என்பது முக்கியமல்ல. அவை தவிர்க்க முடியாதவை. அரசு தரப்புப் பாதுகாப்புப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவின் வார்த்தைகளில் சொல்வதானால் பாதிக்கப்பட்டவர்களை இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்களா பெண்களா என்று பார்க்க முடியாது. அவர்கள் என்ன நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது அரசுத் தரப்பு கருதுவதைப் பொறுத்தது. அரசுத் தரப்பு மாணவர்கள் அல்ல, புலிகள் என்றால் அவர்கள் புலிகள். அகதிகள் அல்ல, புலிகள் என்றால் அவர்கள் புலிகள். அப்படிக் கருதும் அரசு தேவாலயத்தின் மீதோ அல்லது சிறுவர்கள் இல்லத்தின் மீதோ விமானத் தாக்குதல் நடத்தினால் அது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் இந்த நடவடிக்கை யுத்தம் அல்ல. யுத்தத்திற்குத்தான் சர்வதேச விதிகள் செல்லுபடியாகும் அல்லவா?

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது' என்று கவிமணி பாடியுள்ளார். இலங்கையில் ரத்த ஆறு ஓடுகிறது. யுத்தம் இல்லாமலே! இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இந்த நிமிடம்வரை எனக்குப் பிடிபடவில்லை. ஹெகலிய ரம்புக்வெல அவர்கள் அறிவிக்கும்வரை உலகுக்கே முன்னுதாரணமாக அமையும் இந்நடவடிக்கையின் பெயருக்காக நாம் காத்திருப்போம்.

n n n

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்தப்படி யுத்தத்தை நோக்கிச் செல்ல விரும்பும் தரப்பு 14 நாட்கள் முன் நோர்வே அரசுக்குத் தெரிவித்துவிட்டே யுத்தத்தில் இறங்க வேண்டும். இந்தக் காலக்கெடுவை அதிகாரபூர்வமாக வழங்காமலே இப்போது யுத்தம் தொடங்கப்பட்டுவிட்டது. யுத்தத்தை முதலில் தொடங்கியவர் யார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகாமல் இருப்பதற்காக இரு தரப்பும் பதில் தாக்குதலையே தொடர்வதாகக் கூறிவருகின்றன. ஆயினும் யுத்தம் ஒரு முழு அளவிலான யுத்தமாகத் தொடங்கி இப்போது நான்கு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் புதிது புதிதாகப் போர்முனைகள் உருவாகின்றன. இதற்குப் பல நியாயங்கள் கூறப்பட்டாலும் யுத்தத்தின் விளைவுகளை மக்கள் அனுபவிக்கத் தொடங்கி நான்கு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதே உண்மை.

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது ஜனாதிபதி ஊடகவியல் நிறுவனங்களைக் கூட்டிவைத்து அறிவித்தது வெளியாகிக்கொண்டிருக்கிறது. செய்தித் தணிக்கையை அமல்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவருடைய அறிவிப்பு கூறுகிறது. பொறுப்புணர்வு என்ற பதத்தை ஊடகங்கள் எவ்வாறு இலங்கையில் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு நிலையான விதி எழுதப்படாததாக இருந்து வந்திருக்கிறது. அதாவது அரசாங்கம் ஒரு சம்பவம் தொடர்பாக என்ன சொல்லவருகிறதோ அல்லது சொல்கிறதோ அதை அப்படியே சொல்வதுதான் பொறுப்புணர்ச்சி மிக்க ஊடகவியளாளர்களது பணி. இந்தப் பொறுப்புணர்ச்சியைக் கடைப்பிடிப்பது என்றால் செஞ்சோலையை இராணுவ நடவடிக்கைள் நடக்கும் இடம் என்றும் அல்லைப்பிட்டித் தேவாலயத்தைப் புலிகள் பதுங்கும் இடம் என்றும் குறிப்பிட வேண்டும். மாவிலாறு அணைக்கட்டைத் திறந்துவிட்டவர்கள் அரசப் படையினரே என்று அறிவிக்க வேண்டும். எங்காவது குண்டு வெடித்தால் அல்லது கிளைமோர் தாக்குதல் நடந்தால் அதைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்கும்போதே இது பயங்கரவாதிகளின் அல்லது புலிகளின் கைவரிசை என்று அறிவிக்க வேண்டும். அதன் பின்னரான விசாரணைகளின்போது அது வேறு விதமாக நடந்ததாகத் தெரியவந்தாலும் முதற்கூறிய செய்தியை மறுக்கக் கூடாது. மாவிலாற்று அணையை இராணுவமே திறந்தது என்பது உண்மையல்ல என்று தெரியவந்தாலும், அவர்களே அதைத் திறந்தார்கள் என்று சாதிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டித் தர வேண்டும்.

இந்தப் பொறுப்புணர்ச்சி உண்மையில் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகளில் ஏற்கெனவே பெருமளவிற்கு இருக்கிறது. ஐ.தே.க.வுடன் உடன்பாடான ஷிuஸீபீணீஹ் லிமீணீபீமீக்ஷீ பத்திரிகையும் தமிழ்ப் பத்திரிகைகளும்தாம் இந்தப் பொறுப்புணர்ச்சியைச் சற்றுக் குறைவாகக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆக ஜனாதிபதியின் இந்தப் பொறுப்புணர்ச்சிக் கோரிக்கையைத் தமிழ் ஊடகங்களுக்காக விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கை என்றே கொள்ள வேண்டும். ஏனென்றால் அவைதாம் பொறுப்பற்று அரசாங்கத்தின் குண்டுகள் விழுந்து வெடிக்குமிடமெல்லாம் பொதுமக்கள் சாவதாகவும் அகதிகளாவதாகவும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஊடகங்களைப் பயன்படுத்துவதில் பெரிய கில்லாடி எனப் பெயர்பெற்றவர். தான் விரும்புவதை நடந்துவிட்டதாகவே ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இன்று அவர் ஊடகங்களுடன் நடத்திய உரையாடலை இப்போது நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தைப் பற்றி அவர் காட்ட விரும்பும் படத்தை வெகுஜனப்படுத்துவதற்கான ஓர் ஆரம்பமாகக்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே யுத்தம் என்று ஒன்று நடக்காமலே அரசாங்கம் வெற்றிமேல் வெற்றியைக் குவித்துக்கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதம் முற்றாக அழிந்துவிட்டதாகவும் எல்லா மக்களும் நம்பக்கூடிய அளவுக்கு அவரது இனிவரும் ஊடகம் சார் செயற்பாடுகள் அமையப்போகின்றன என்பதற்கு இன்றைய நிகழ்வு ஓர் ஆரம்ப நிகழ்வாக அமைந்திருக்கிறது. சமாதானப் பேச்சுகள் நடத்தப்படாமலே சமாதானம் வந்துவிட்டதை மக்கள் உணரும் நாள் இனி அதிக தூரத்தில் இல்லை என்று இப்போதே துணிந்து கூறலாம்.

ஆனால் ஒரு பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால் சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனாதிபதியாக வருவதற்கும் அக்கட்சியின் தலைவராக வருவதற்கும் ஒத்துழைத்த அவரது இந்த ஊடகத்துறை இப்போது அவர் எதிர்பார்க்கும் 'சமாதான முயற்சி'க்கு உதவப்போவதில்லை. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளராக வேறு யாராவது பிரேரிக்க முடியாத அளவுக்கு அவர் இருந்த கட்சி சிதைந்திருந்தது. அவரது கட்சித் தலைமை விவகாரத்திற்கும் இதுவே காரணமாக இருந்தது. தவிரவும் அவருக்குக் கிடைத்த இந்த வெற்றியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே.

ஆனால் சமாதானம் - யுத்தம் என்பவை தேசியப் பிரச்சினைகள். இது மக்களின் உயிர் வாழ்வதற்கான பிரச்சினை. யுத்தம் என்பது தேசத்தை ஓட்டாண்டியாக்குகிற பிரச்சினை. ஊடகங்களைப் பயன்படுத்தி இதை மூடிமறைத்துவிட முடியாது. ஒரு மாவிலாறு நிகழ்வை, ஒரு செஞ்சோலை நிகழ்வை மூடிமறைத்துவிடலாம். பல்லாயிரக்கணக்கில் அகதி மக்கள் உருவாகுவதை மறைத்துவிட முடியுமா? ஊடகங்கள் 'பொறுப்புணர்வுடன்' நடந்தால் மக்கள் பொறுப்பற்று நடக்கும் அராஜக நிலை உருவாகும் என்பதை ஜனாதிபதி கவனிக்க மறந்துவிட்டார்.

தனது ஆளும் கட்சிக்குள் இருக்கும் பலவீனத்தைக் களைவதற்குப் பதிலாக அரசியல் பிரச்சினைகளையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் மூடிமறைக்க முயல்கிறார் அவர். இது நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக மொத்த அராஜகத்திற்கே இட்டுச் செல்லும். சமாதானத்திற்காக நிற்பதாகக் கூறுவது மட்டும் சமாதானத்தைத் தந்துவிடாது. சர்வகட்சி மாநாட்டை நடத்திப் பேசியதையே திருப்பித் திருப்பிப் பேசுவது தீர்வைத் தராது.

இலங்கையில் இனப் பிரச்சினை இருப்பதாக ஒப்புக்கொள்ள மறுக்கின்ற ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளின் தயவில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் ஜனாதிபதி, ஆட்சியமைப்பு மாற்றம் பற்றிப் பேசவே அஞ்சுகின்ற ஜனாதிபதி, நோர்வேயின் ஒத்துழைப்பை மெல்லவோ விழுங்கவோ முடியாத ஒரு நெருக்கடியாக நினைக்கும் ஜனாதிபதி, யுத்தத்தின் மூலம் புலிகளை முடக்கிவிடுவதே தேசியப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வைக் காண்பதற்கான முன்நிபந்தனை என்று நம்புகிறவர்களைத் தன்னுடன் சேர்த்துவைத்துள்ள ஜனாதிபதி, நாட்டில் பெரும் போர் தொடர்வதைத் தவிர்க்க முடியாது.

அவரால் செய்யக்கூடியதெல்லாம் யுத்தம் நடக்கவில்லை என்று சாதிப்பது. சமாதானத்திற்குத் தயார் என்று தொடர்ந்து அறிவிப்பது. இதன் மூலமாக மக்களுக்கு அரசு நியாயமாக நடப்பதாகச் சொல்லிக்கொண்டே இருப்பது மட்டுமே. ஆனால் யுத்தம் தன்பாட்டுக்கு வளர்ந்து முழு நாட்டையும் விழுங்கிவிடும் வரை அவர் இதைச் செய்துகொண்டிருக்கப்போகிறாரா?

யுத்த நடவடிக்கை, பிற நாடுகளும் சர்வதேசச் சமூகமும் தலையிட்டுச் சுமுகப்படுத்தாவிட்டால், இன்னும் ஓரிரு வாரங்களில் மிகத் தீவிரமான கட்டத்தை நோக்கி நகரும். அரசியல் ரீதியாக இலங்கை அரசு மிகவும் பலவீனமடைந்துவருகிறது. அது இந்த யுத்தத்தால் மேலும் மோசமான நிலைக்குப் போகும். இராணுவ ரீதியான வெற்றி எப்படி இருப்பினும் அதற்கான விலையை மக்களே கொடுக்க வேண்டியிருக்கும்.

மாவிலாறு அணைத் திறப்பு விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படுவதற்கான நிலைமை கைகூடி வந்தபோது, அதை ஹெல உறுமய எம்.பி.க்கள் தமது அரசியலுக்குப் பயன்படுத்த முயன்றனர். யுத்தம் வெடித்தது. மனிதாபிமானம், இறைமை என்ற வார்த்தைகளால் யுத்தம் நியாயப்படுத்தபட்டது. அரசு - புலிகள் மோதலில் பலநூறு உயிர்கள் பலியாகின. கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தமது வீடு வாசல்களை இழந்து அகதிகளாயினர். அந்த அகதிகளின் நிலை இன்றுவரை மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. அணைக்கட்டு திறக்கப்பட்டது. புலிகளா இலங்கைப் படையினரா என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் இன்று அது திறக்கப்பட்டுவிட்டது. நடந்து முடிந்த யுத்தத்தால் இரு தரப்பும் பெற்றுக்கொண்ட வெற்றி என்ன? புலிகளின் பலத்தை இலங்கை அரசு புரிந்துகொண்டதா? இலங்கை அரசின் இயல்பைப் புலிகள் புரிந்துகொண்டனரா? இரண்டும் இல்லை. புதிதாக எந்த வெற்றியும் இருவருக்கும் கிடைக்கவில்லை. அரசியல் ரீதியாகப் புலிகள் அரசைவிட நியாயமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வந்தன. மக்களின் குரல்கள் வானொலிகளில் வெளிவந்தன. ஆனால் இது வெற்றிதானா? 60 ஆயிரம் மக்களின் சகஜ வாழ்வை விலையாகக் கொடுத்துத்தான் ஓர் அணை திறக்கப்பட வேண்டுமென்ற நிலைக்கு என்ன நியாயத்தை யார் சொல்ல முடியும்?

பயங்கரவாதத்திற்கு அடிபணிய முடியாது என்ற வீரவசனத்தைக் கூறியபடி மாவிலாறுக்குப் படைநடத்தியது அணைக்கட்டைத் திறக்கத்தான் என்றால் அதனால் சாதித்த வெற்றி என்ன? பயங்கரவாதம் அடிபணிந்துவிட்டதா? அரசாங்கம் இதற்கு என்ன நியாயம் சொல்லப் போகிறது? ஷெல் வீச்சில் வீழ்ந்திறந்த நூற்றுக்கணக்கான அகதி மக்களின் இழப்புக்குப் பின் கிடைத்த வெற்றி, இழப்பேதும் இல்லாமலே திறந்துவிடக் கிடைத்த அணைக்கட்டு திறப்புத்தானா?

மாவிலாறு ஓர் உதாரணம் மட்டுமே. அரசியல் தீர்வு பற்றிய அக்கறை இல்லாதவரை இப்படிப் பல மாவிலாறு நிகழ்வுகளை நாம் காண வேண்டிவரும். இன்றைய நிலையில் பலாலி விமான நிலையத்தில் விமானங்கள் இறங்க முடியவில்லை என்பதாக இருக்கிறது. பலாலி அடுத்த மாவிலாறாக மாறப்போகிறது.

மாவிலாறுகள் மட்டுமல்ல; மக்களின் இரத்த ஆறு பெருகுவதும் தொடரப் போகிறது. மஹிந்த சிந்தனைக்கு அரசியல் நிலைமை புரியும்வரை இலங்கை மக்களின் நிலைமை குறித்து அதிர்ச்சியடையக்கூடிய செய்திகள் எதுவும் வரப்போவதுமில்லை.

எல்லாமே எதிர்பார்த்த செய்திகளாகவே இருக்கும்!

உள்ளடக்கம்

Google Ads.....


Google