Google   www kalachuvadu.com

"கேள்வி என்பது தன்னைத் தானே தேடிக்கொண்டிருக்கும் பதில்"

நேர்காணல்: ஆனந்த்

தொடர்ச்சி...

ரவி: பெண்களுக்கே உரித்தான பார்வைன்னு சொன்னீங்க, அப்படின்னா என்ன?

ஆனந்த்: ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் மூன்று தளம் இருக்கு. உடல்னு ஒரு தளம், மனம்னு ஒரு தளம், நான் இருக்கேங்கிற உணர்வு இருக்கில்லையா, அது ஒரு தளம். உடல்ங்கிற தளத்துல ஆண், பெண்ணுங்கிறதுக்கு ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கு. அது ரொம்ப அடிப்படையான வேறுபாடுகூடக் கிடையாது. மனித உடல்ல ஏழு வகையான system இருக்கு; அதுல மறு உற்பத்திக்கானது மட்டும் வேறுவேறா இருக்கு. எல்லா systemஉம் ஆணா, பெண்ணான்னு சொல்லிடற அளவுக்கு வேறுபாடு இருந்தாலும் மறு உற்பத்திக்கானதுல மட்டும் அடிப்படையான வேறுபாடு இருக்கு. மனம்னு எடுத்துக்கிட்டா அது பெருமளவுக்கு, முழுமையான்னு சொல்ல முடியாது, பெருமளவுக்குக் கலாச்சாரம் கட்டிய கோட்டை. Social functions and roles-ஐக் கலாச்சாரம்தான் நிர்ணயிக்குது. இன்னிக்குப் பிறக்கிற ஆணோ பெண்ணோ எந்தக் கலாச்சாரத்தோட தொடர்ச்சியில் பிறக்கிறோமோ அதை முற்றிலுமா விடுத்து எதையும் பண்ணிட முடியாது. சில அடிப்படையான கட்டமைப்புகளுக்குள்ளதான் இயங்கியாக வேண்டியிருக்கு. அந்தக் கட்டுப்பாடுகள் நிர்பந்தங்களோடதான் இயங்கியாக வேண்டியிருக்கு. அதைத் தாண்டித் தனித்துவமா எதையாவது சொல்ல முடியுதா, செய்ய முடியுதான்னு பார்க்க வேண்டியிருக்கு.

மூன்றாவதான 'நான் இருக்கேன்'கிற உணர்வுல ஆண், பெண்ணெல்லாம் கிடையாது. நான்னு நினைச்சுதான் எல்லாருமே இயங்கறோம். ஆக இதுல மாற்றம் தேவையில்லை. உடல் ரீதியாக்கூட ஆண் பெண்ணா மாறிடறது, பெண் ஆணா மாறிடறது இதுக்கெல்லாம் அறுவை சிகிச்சையெல்லாம் செய்யறாங்க. அரவாணிகளுக்குச் சமூக முக்கியத்துவம் இருக்கணும்னு பேசப்படுது. ஆமாம், இருக்கணும். ஆண், பெண், அரவாணிகள்னு மூன்று வகையான பாலியல் ரீதியான பிரிவுகள் இருக்குன்னு நாம சமூக ரீதியா அங்கீகரிக்கலாம். அதுக்கு சமூகத் தேவை இருக்கு. அவங்களுக்கான இடம் தரப்படணும். அதுக்கான இயக்கம் ஆரம்பிச்சாச்சு; அவங்களுக்கான இடம் கிடைச்சே தீரும், நாம வழங்க வேண்டாம். இன்னொருத்தருக்கான சுதந்திரத்தை வழங்கறதுக்கு நாம யாரு? நாம பெண்களுக்கே உரித்தான பார்வை பத்திப் பேசறோம். கலாச்சாரம்கறது அனுபவத்தோட அமைப்பை நிர்ணயிக்குது. கலாச்சாரம்கிறது assumptions, beliefs சேர்ந்து உலகம் எப்படிப் பார்க்கப் படணும்னு கட்டமைக்கப்படுவது. இந்தத் தளத்துலதான் ஆண், பெண்ணோட functions, roles வரையறுக்கப்படுது. எந்த ஒரு ஆணும் பெண்ணும் நூறு சதவீதம் அந்த functions, roles ஓட identify பண்ணிக்கவே முடியாது. ஒருத்தராலகூட முடியாது. பெருமளவுக்கு செய்துக்கலாம், முழுசா யாராலயும் முடியாது. இது ஏதோ ஒரு அளவுல ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றிக் கொள்ளக்கூடிய functions, rolesதான். எந்த அளவுக்கு மாற்றிக்க முடியுதுங்கறது கலாச்சாரக் கட்டுப்பாடுகள், அதன் அடிப்படையிலான சமூகக் கட்டுப்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தனிமனிதர்கள் தமக்குத்தாமே விதிச்சுக்கிற கட்டுப்பாடு, குடுத்திருக்கற சுதந்திரம், எடுத்துக்கொள்ளும் உரிமைகள், எடுத்துக்கொள்ளாத உரிமைகள்னு கலவையாத்தான் இருக்கு. தன் வயித்துக்குள்ள ஒரு குழந்தை வளர்கிற அனுபவம் ஒரு ஆணுக்கு எப்படி ஏற்பட முடியும்? அந்த ஒன்பதரை மாதத்துல ஏற்படற சில நுட்பமான உணர்வுகளைப் பெண்ணால மட்டுமே எழுத முடியும். இதெல்லாம் இன்னுமேகூடத் தமிழ்ல வரலைன்னுதான் சொல்லணும்.

ரவி: நீங்க சொன்ன பதில்லேருந்து பெண்ணுக்கே உரித்தான பார்வைங்கிறது கர்ப்பம் தரித்தல், மாதவிடாய்னு உடலியல் ரீதியா மறு உற்பத்தி சார்ந்ததுங்கறது மாதிரி இருக்கு. பெண்கள் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறாங்க, மலையை எப்படிப் பார்க்கிறாங்க, ஒரு ஆட்டை எப்படிப் பார்க்கிறாங்க, என்னை எப்படிப் பார்க்கிறாங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாது. மனித வரலாற்றுல அநேகமா இதுக்கெல்லாம் பதிவே கிடையாது. பெண்ணுக்கே உரித்தானதுன்னா என்னன்னு தெரிஞ்சே ஆகணும்.

ஆனந்த்:மூன்று தளங்கள் இருக்குன்னு பேசினோம். மூன்றாவது தளத்தில் வித்தியாசமே இல்லேங்கறதால நாம் அதைப் பத்திப் பேச வேண்டாம். கர்ப்பமும் மாதவிடாயும் முதல் தளத்துக்கு மட்டுமே உரித்தான விஷயங்கள். அதை என்றைக்குமே எந்த ஆணுமே தன்னனுபவமா உணரவே முடியாது. அந்த அளவுல இவை பெண்களுக்கே பிரத்யேகமான விஷங்கள். கர்ப்பம், மாதவிடாய் தொடர்பான மனவியல் ரீதியான சில விஷயங்கள் இருக்கு. Human psyche female levelல எப்படி function பண்ணுது, மாதவிடாய் காலத்துல psycheயோட சில ஏரியாக்கள் எப்படி activate ஆகுதுங்கிறது போன்ற விஷயங்கள்.

இரண்டாவது தளத்துல கலாச்சாரம் பெருமளவுக்கு மன அமைப்பை, அக அமைப்பை நிர்ணயம் பண்ணிடுச்சு. உடலை அடிப்படையா வெச்சு கலாச்சாரம் மன அமைப்பை நிர்ணயம் பண்ணிடுச்சு. உடல் அமைப்பு மாற்றப்படக்கூடியதல்ல; மன அமைப்பு மாற்றப்படக் கூடியது. மன அமைப்பிலேயே பல தளங்கள் இருக்கு. சில விஷயங்களைச் சீக்கிரமா மாற்றிடலாம்; சில விஷயங்களை மாற்றுவதற்கு சில காலம் ஆகும். புடவையை விட்டுவிட்டு சுடிதார், சுடிதார்லேருந்து ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு மாறியாச்சு. மேலோட்டமானதை எல்லாம் சுலபமா மாத்திடலாம். பெண்களோட சில பார்வைகளைச் சுலபமா மாத்திட முடியாது. சமீபத்துல மனித வள மேம்பாடு தொடர்பான குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். அதுல ஒரு ஆண் ஐந்தாறு பெண்களோட விவாதம் பண்றார். அதுல இரண்டு மூன்று பேர் பெண்ணியக் கருத்துகளைப் பேசறாங்க. ஒரு உரையாடலை அப்படியே பதிவு பண்ணியிருக்காங்க. ஒரு கட்டத்துல ஆண் கேட்கறார், ஆண்களால்தான் மோசமாச்சு, ஆண்களைவிடப் பெண்கள் உயர்ந்தவர்கள்னு பேசறீங்கள்ல, உங்களைவிட ஒரு அடி குள்ளமான ஆணைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க தயாரான்னு கேட்கறார். ரெண்டு மூன்று நிமிஷத்துக்கு சத்தத்தையே காணோம், இது கலாச்சாரம் பெண்களோட நனவிலி மனத்துல ஏற்படுத்தி வெச்சிருக்கிற கட்டுப்பாடு. இந்த மாதிரி விஷயங்கள்லேருந்து விடுபடணும். தான் தன் கணவனைவிடக் குள்ளமா இருக்கலாம்னா தன் கணவனும் தன்னைவிடக் குள்ளமா இருக்கலாமே?

சமூகத்துல எல்லாருக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் இருப்பதில்லை. ஒவ்வொரு இனக் குழுவிலும் ஒவ்வொரு குடும்பத்திலேயுமே வேற வேற மாதிரியான கட்டுப்பாடுகள். ஒட்டுமொத்தமா எல்லாப் பெண்களுக்கும்னும் கட்டுப்பாடுகள் இருக்கு. சமூக விடுதலை மட்டுமில்லாம உள்ளுக்குள்ள தங்களுக்குள்ள இருக்கிற கட்டுப்பாடுகள்லேருந்தும் விடுதலை அடையணும்கிறது வர ஆரம்பிக்கும்போதுதான் நிலையான, முழுமையான ஆரோக்கியமான மாற்றங்கள் வர முடியும். இந்தக் கட்டுப்பாடுகளுக்குள்ளே இருந்து பார்க்கிற பார்வைகூடப் பெண்களுக்கே உரித்தான பார்வைதான். இது மாற்றக்கூடியதுதான். ஔவையார், காக்கைப் பாடினியார் எழுதினதெல்லாம் பொதுவான மனிதப் பார்வையாகத்தான் இருக்கு. பெண்ணோட தனிப்பட்ட பார்வையா இல்லை.

ரவி: இன்னிக்கு எழுதறவங்களேகூட அவங்களோட அசௌகரியங்களை, சங்கடங்களை எழுதறாங்க. சங்கடங்கள் இல்லாம இருந்தா நல்லாருக்கும் என்பதுபோல் எழுதறாங்கன்னு விமர்சனம் இருக்கே?

ஆனந்த்: அவங்க தான் பெண்ணா இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை எந்த அளவுக்கு உணர்றாங்களோ அந்த அளவுக்குத்தான் எழுதுவாங்க. இப்போ தமிழ்ல பெண்கள் எழுதற கவிதைகள் வெறும் தொடக்கம்தான். இப்ப சில விஷயங்களை சங்கடமா உணர்றாங்க; இன்னும் ஆழமாப் போய் வேற விஷயங்களை சங்கடமா உணரும்போது வேற விஷயங்கள் வரும். இப்பவேகூட சங்கடங்களை மட்டுமே எழுதாத பெண்களோட கவிதைகள் வர ஆரம்பிச்சுருக்கு. தைரியமா சில பெண்கள் எழுத வந்துருக்காங்க. இதெல்லாம் அந்தக் கட்டத்தைத் தாண்டறதுக்கான அறிகுறிதான். ஒரு தொடக்கம்கிற அளவுல ரொம்ப அருமையா இருக்கு. பாலியல் அடக்கு முறையைப் பத்தி சிலர் எழுதியிருக்காங்க. இதுக்கான இடமெல்லாம் இருந்தாதான் இந்த விஷயங்கள் முடிஞ்சு ஆழமான விஷயங்கள் வர ஆரம்பிக்கும். இதுக்கான இடத்தை மறுக்கிறது மூலமா ஆழமான விஷயங்கள் வருவதைத் தாமதப்படுத்தறோம். பெண்ணியம் மட்டுமில்ல, தலித்தியம், இன்னும் வளர்ச்சியை நோக்கிய, புதிய சமநிலைகளை நோக்கிய எந்த ஒரு போக்குக்குமே அதற்கான இடம் தரப்படணும். எந்தப் போக்கிலும் முதல்ல மேலோட்டமான விஷயங்கள் வந்து முடிஞ்சு, அப்புறம்தான் ஆழமான விஷயங்கள் வர ஆரம்பிக்கும்.

ரவி: நீங்க ஏன் எல்லாக் கேள்விக்கும் விஷயங்களோட அடிப்படைக்குப் போறீங்க? அப்படித்தான் போகணுமா?

ஆனந்த்: நீங்க மலரைப் பத்தி ஒரு கேள்வி கேட்கறீங்க. மரத்தைப் பத்திப் பேசாம மலரைப் பற்றிப் பேச முடியும்னு நினைக்கிறீங்களா? வேரைப் பத்திப் பேசாமல் மரத்தைப் பத்திப் பேச முடியுமா? மண்ணைப் பத்திப் பேசாமல் வேரைப் பத்திப் பேச முடியுமா? மலரைப் பத்தி மட்டும் பேசணும்னா botanists இருக்காங்க. அவங்க கூட எல்லாத்தையும் கணக்கிலெடுத்துக்கிட்டுதான் பேசறாங்க. ஒரு உண்மையான botanis மலரைப் பத்திப் பேசும்போது மண்ணோட சேர்த்துத்தான் பேசுவான். மலர் பத்திக் கேள்வி கேட்டா, அது மலர்வதற்கான காரணத்தைக் கேட்டா மண்ணுலேர்ந்துதான் ஆரம்பிச் சாகணும். வேற வழி கிடையாது. Persian carpetனு ஒரு உதாரணம் உண்டு. அது ஆங்கிலத்துல idiom, அதாவது அணியிலக்கணத்துல ஒரு அணியே இருக்கு. அந்தக் காலத்துல பாரசீகத்துலேருந்து பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பாரசீகக் கம்பளங்கள் வரும். வெவ்வேறு நிறம், வெவ்வேறு டிசைன், வெவ்வேறு பேட்டர்ன்ல ஒரே கம்பளத்துல நெய்திருப்பாங்க. ஒரே கம்பளத்துல நெய்யப்பட்டுள்ளதால எந்த ஒரு டிசைனைப் பிடித்துத் தூக்கினாலும் முழுக் கம்பளமும் வரும். ஒரு துணியில் வெவ்வேறு டிசைன் இருக்குன்னு வைங்க, அதுல ஒரு டிசைனை மட்டும் உங்களால தூக்க முடியுமா? எந்த டிசைனைத் தூக்கினாலும் முழுத் துணியும்தான் வரும். அதனால நீங்க வாழ்தல் சம்பந்தமான, பிரக்ஞை சம்பந்தமான எந்த விஷயத்தைப் பத்திப் பேசணும்னாலும் எல்லாத்தைப் பத்தியும் பேசித்தான் ஆகணும். எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டாத்தான் ஒரு சின்ன விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியும்.

நாம சௌகரியமா எல்லாத்தையும் தனித் தனியாப் பிரிச்சுப் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். இன்னிக்கி உலக அளவுல specialisationகிறது பெரிய விஷயமாக ஆகிட்டிருக்கு. ஒரு பௌதீகத் துறை வல்லுநருக்கு உயிரியல்ல என்ன நடக்குதுன்னு தெரியாது. ஒரு வானியல் நிபுணருக்கு அரசியல்ல என்ன நடக்குதுன்னு தெரியாது. ஆனா அனுபவ ரீதியா அப்படியில்ல, எனக்கு வாழ்வோட முழுமை புரியற வரைக்கும் ஒரு சின்ன மலரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னுதான் நினைப்பேன். தெரியாதுதான். வாழணுங்கறதுக்காக ஏதோ தற்காலிகப் புரிதலோடதான் நாம எல்லாரும் வாழ்ந்துகிட்டிருக்கோம். நம்ப யாருக்கும் ஒன்றுமே தெரியாது. ஒரு அழகான ஆங்கிலக் கவிதை உண்டு - You cannot pluck a flower without troubling a star - ஒரு நட்சத்திரத்தைத் தொல்லைப்படுத்தாமல் உன்னால் ஒரு மலரைப் பறிக்க இயலாது. ஏன்னா அதெல்லாத்துக்கும் ஒரு உறவு இருக்கு, ஒரு ஒட்டுமொத்தமான network இருக்கு. பிரபஞ்சத்தின் முழுமை ரொம்பவும் ஒருங்கிணைந்ததா இருக்கு. ஒரு துரும்பைத் தூக்கி வெளியில போட்டீங்கன்னா முழுப் பிரபஞ்சமும் மாறிப்போச்சுன்னு அர்த்தம்.

ஆக, எந்தக் கேள்வியாக இருந்தாலும் மனிதனைப் பத்தி, வாழ்தலைப் பத்தி, பிரபஞ்சத்தைப் பத்தின்னு எதைப் பற்றி இருந்தாலும் அதைப் புரிஞ்சுக்கணும்னா அதனோட அடிப்படைகளைப் புரிஞ்சுக்கிட்டே ஆகணும். இல்லேன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கவே முடியாது. அதனால எந்தக் கேள்வியாக இருந்தாலும் அடிப்படைகளிலேருந்து தொடங்க வேண்டிய கட்டாயம், அத்தியாவசியம் இருக்குன்னுதான் படுது. கேள்விங்கறது எங்கேருந்து வந்துருக்கு? எல்லாக் கேள்விகளும் அடிப்படைகள்லேருந்துதான் வருது. ஏன்னா ஏற்கனவே உள்ள பதில்கள் போதாமல்தான் புதுசா ஒரு கேள்வியே வருது இல்லியா? ஆக, பதிலோட தொடக்கத்துக்குப் போகணும்னா கேள்வியோட தொடக்கத்துக்குப் போயே ஆகணும். அங்கேருந்துதான் பதிலே ஆரம்பிக்குது.

ரவி: கேள்வியைப் புரிஞ்சுக்கிறதுதான் பதில்னு சொல்ல வரீங்களா?

ஆனந்த்: ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு நண் பருக்கு எழுதின கடிதத்துல கேள்வி என்பது தன்னைத் தானே தேடிக்கொண்டிருக்கும் பதில்னு எழுதினேன். கேள்வி தன்னைத்தானே புரிஞ்சுக்கும்போது பதில் புரிஞ்சுபோயிடுது.

1   2   3   4   5   6

உள்ளடக்கம்

Google Ads.....


Google