Google   www kalachuvadu.com

"கேள்வி என்பது தன்னைத் தானே தேடிக்கொண்டிருக்கும் பதில்"

நேர்காணல்: ஆனந்த்

தொடர்ச்சி...

ரவி: பிரக்ஞையோட பரிணாம வளர்ச்சியாலதான் எல்லாம் நடக்குது. தாமதப்படுத்தலாம்; தள்ளிப்போடலாம்; யாராலேயும் மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாதுன்னு சொல்றீங்க. ஒரு சிலரால் மாற்றத்தைத் தள்ளிப் போட முடியும்னா, ஒரு சிலரால் துரிதப்படுத்தவும் முடியும்தானே?

ஆனந்த்: இன்றைக்கு அரசியல்ங்கிற வட்டத்துக்குள்ள மட்டுமே இயங்கறவங்கள்ல பெரும்பாலானவங்க தாமதப்படுத்தற பங்களிப்பை மட்டுமே செய்யறாங்க. வெகு சிலர் அப்படிச் செய்யாம இருக்கலாம். அப்படி இருந்தா அவங்களோட சிந்தனை அரசியல்ங்கிற எல்லையைத் தாண்டியும் இயங்குதுன்னு சொல்லலாம். தாமதப்படுத்தக் கூடாது, விரைவுபடுத்தணும்னு நினைக்கிறவங்க இந்த எல்லைக்கு வெளியிலதான் இருப்பாங்க. எந்த அடிப்படையான சமூக மாற்றமும் வெளியாளால்தான் நடந்திருக்கு; மனரீதியா வெளியாளாக இருக்கிறவங்களாலதான் நடந்திருக்கு. மன அமைப்பும் சமூக அமைப்பும் ஒன்றை ஒன்று ஒவ்வொரு கணமும் பாதிச்சுக்கிட்டிருக்கிற ஒரே விஷயம்தான். ஒருத்தன் தன்னோட மன அமைப்பை நிராகரிச்சுட்டா சமூக அமைப்பையும் நிராகரிச்சுட்டான்னு அர்த்தம். சமூக மாற்றமும் மனிதனின் மன மாற்றமும் இந்த மாதிரி வெளியாட்கள்கிட்டேருந்துதான் நடந்துருக்கு. இந்த மாதிரியான பயங்கரப் புரட்சியாளர்கள் இருந்திருக்காங்க. அவங்கள சமூகம் என்ன பண்ணிச்சு? மதத் தலைவர்களாக்கி frame போட்டு மாட்டிருச்சு. அந்தக் காலகட்டத்து அமைப்புலேருந்த பல தளைகளையும் தடைகளையும் உடைத்தெறிந்திருக்கிறார்கள். எல்லோருமே iconoclasts ஆக இருந்திருக்காங்க. எதையும் பிரச்சினையில்லாம பண்ணிடறதுக்காக அந்த மாதிரியானவங்களை சமூக மனம் frame போட்டு குங்குமப் பொட்டு வைத்து மாலை போட்டுடுது.

புத்தர், ஜீசஸ், ஆதிசங்கரர், ராமானுஜர், இவங்க எல்லாம் பயங்கரப் புரட்சிக்காரங்க. அந்தக் காலத்திய சமூக மன அமைப்பைத் தூள் தூளாக்கியிருக்கிறார்கள். பெரிய புரட்சியாளர்களைப் பார்த்தீங்கன்னா தெரியும். அவங்க வெளியில மட்டும் செயல்படமாட்டாங்க. மக்களோட மனத்திலேயும் மாற்றம் வர்றதுக்கு செயல்படுவாங்க. கேரளாவில் நாராயண குரு இருந்திருக்கார். இவங்களெல்லாம் iconoclastதான். உருவங்களை, விக்கிரகங்களை உடைச்சவங்கதான். அந்த மனவியல் ரீதியான செயல்பாட்டைத்தான் செய்திருக்காங்க. இப்ப காந்தியைக்கூட அழகா மகாத்மான்னு அழைக்கிறதின் மூலமா அவரோட புரட்சி மனப்பான்மையை மூடி மறைக்கிறோம். ஏன்னா அந்தப் புரட்சி மனப்பான்மை நமக்கு ஒவ்வாததா இருக்கு. அந்தப் புரட்சி மனப்பான்மை இருந்ததுன்னா இன்னிக்கு இருக்கிற அமைப்புக்கு ஆபத்து. அதனால முடிஞ்ச வரைக்கும் போட்டோ வைப் போட்டு காந்தி ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, இப்படிக் கொண்டாடிட்டா அந்த அபாயத்துலேருந்து விடுபட்டுடலாம். அவங்கள்லாம் நாசம் பண்ணியிருக்காங்க. அவங்களோட நாசம் பௌதீகமானதில்லை, அதனாலதான் எல்லாக் காலத்திற்குமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்காங்க. ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த தளத்துக்கு இந்தியா திரும்பவும் போகவே முடியாது. சில மாற்றங்கள் கொஞ்ச நாளில் திரும்பிப் பழைய இடத்துக்கே போயிடும் பாருங்க, அந்த மாதிரியான மாற்றமில்லை. திரும்பிப் பழைய இடத்துக்குப் போகவே முடியாத மாதிரியான மாற்றங்கள் இந்த அமைப்பை உள்ளும் புறமுமாக மறுத்து ஒரு வெளியாளாக இருந்து அத்தனையையும் உள்ளே உடைச்ச அந்த மாதிரியானவங்களாலதான் நடந்திருக்கு.

ஒரு திருக்குறள் இருக்கு - "இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக உலகியற்றியான்". இந்த உலகியற்றியான் என்கிற வார்த்தையைக் கடவுள்னு சொல்றாங்க. அவர் அதைச் சொல்லலை, சமூக அமைப்பு ஒன்னு இருக்கில்லையா, வாழ்வு அமைப்பு இருக்கில்லையா, அதை ஆரம்பிச்சவனை இந்த வார்த்தை மூலமா சொல்றார். பிச்சை எடுத்துதான் உயிர் வாழணும்னா இந்தச் சமூக அமைப்பை நிறுவினவனைக் காலி பண்ணச் சொல்றார். இந்த சமூக அமைப்பு, சமூக ஒழுங்கு, எப்பவோ நிறுவப்பட்டிருக்கும். ஆனா இந்தச் சமூக அமைப்பு மூலமா இதை நிறுவினவன் இன்னும் இருந்துகிட்டு இருக்கான். இந்த அமைப்பைக் காலி பண்ணறது மூலமாதான் அவனைக் காலி பண்ண முடியும். இதையே பாரதியார் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்"னு சொல்றார். ஜகம்னா அவர் மரத்தையும் மலையையுமா சொல்றார்? அவரும் இந்த சமூக அமைப்பைத்தான் சொல்றார். ஒவ்வொருவரும் வேறொண்ணோட உறவு வைத்துக்கொண்டிருக்கிறார். உலக அமைப்பு, வாழ்வு அமைப்பு (world order) இதுதான். வாழ்வு அமைப்புங்கிறது உறவுகள்லேருந்து கிளர்ந்து எழுவதுதான். உறவுகளின் தன்மைதான் உலக அமைப்பை, வாழ்வு அமைப்பை உருவாக்குது. அதைத்தான் உடைக்கணும்.

இன்னிக்கு மறுபடியும் வள்ளுவர் சொன்ன 'உலகம்', பாரதியார் சொன்ன 'ஜகம்' உடைய ஆரம்பிச்சாச்சு. ஆனால் வெளிப்படையா அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் இயங்கறாங்களே, அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள், இவங்க எல்லாம் அவங்க அளவுல ஏதோ செய்துகிட்டிருக்காங்க. ஆனால் உண்மையான மாற்றம் வேற இடத்துல நடந்துக்கிட்டிருக்கு. உண்மையான மாற்றம் எப்பவும் ஒரு வெளியாளாலதான் நடக்கும். அமைப்புக்கு வெளியில் இருந்துதான் அந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவன் மாற்ற விரும்பறது மனிதப் பிரக்ஞையையும் அது பார்க்கிற பார்வையையும். ஏன்னா வெளியில் நடக்கிற அத்தனை விஷயங்களுக்கும் தோற்றுவாய் அங்கே இருக்குன்னு அவனுக்குத் தெரியும். அதுபோல் தனக்குள்ளே மாற்றம் செய்துக்கிட்டவன் அடுத்து வரப்போற உலகத்தோட பிரதிநிதியா நம்பகூட வாழ்ந்துக்கிட்டிருக்கான். நம்மகூட உலவிக்கொண்டிருக்கிறான். அவன்தான் நீட்ஷே சொன்ன Superman, அரவிந்தர் சொன்ன Supermind. மனிதப் பிரக்ஞையோட வளர்ச்சியின் அடுத்த கட்டப் பிரதிநிதிகள் இன்னிக்கே இருந்துக்கிட்டு மனிதனோட எதிர்காலத்தில் வாழ்ந்துகொண்டு எதிர்காலத்தோட வித்துகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். எப்படி கோதுமை மாவில் ஈஸ்ட் கலந்துட்டா ரொட்டியாகுதோ, அது மாதிரி அவங்களோட இருப்பு யார் கண்ணுக்கும் தெரியாம மாற்றிக்கொண்டே இருக்கு. நம்மில் பெரும்பாலானவங்களுக்கு ரொட்டியா ஆனாத்தான் தெரியும். ஒரு நிலையான மாற்றம் ஏற்படுதுன்னா பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடியே அதனோட வித்துகள் தோன்றிடுச்சுன்னுதான் அர்த்தம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்'கிறது வெறும் பழமொழி கிடையாது. பயங்கரமான அர்த்தத்தோட நடந்துக்கிட்டிருக்கிற விஷயம்.

ரவி: நீங்க கவிதை எழுதியிருக்கீங்க, சிறுகதை எழுதியிருக்கீங்க, நாவலும் எழுதியிருக்கீங்க. உங்களைப் பொறுத்தவரை எது ஒரு நல்ல கவிதை? எது ஒரு நல்ல சிறுகதை? எது ஒரு நல்ல நாவல்?

ஆனந்த்: நான் கொஞ்சம் படிக்கிறேன், கொஞ்சம் எழுதறேன். இலக்கியத்துல எனக்கு ஈடுபாடு உண்டு. நான் இலக்கியவாதியான்னு எனக்குத் தெரியாது. ஒரு நல்ல கவிதை எப்படி இருக்கணும்? ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கணும்? ஒரு நல்ல நாவல் எப்படி இருக்கணும்கிறதுக்கு ஒரு அறுதியான பதிலை யாரும் சொல்லிவிட முடியாது. நிறைய பதில்கள் சொல்லப்பட்டிருக்கு. காலம் எல்லாத்தையும் மறுத்துட்டு புதிய பதில்களைத் தோற்றுவித்துக்கொண்டேவருகிறது. நான் என்ன பதில் சொன்னாலும் இப்போதைக்கு மட்டுமே உரித்தான பதிலா இருக்கும். கொஞ்ச காலம் கழிச்சு அர்த்தமே இல்லாம போயிடும். 'கலை வெளிப்பாடுகள்' எல்லாமே பிரக்ஞையோட வெளிப்பாடுகள்தான். ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தக் காலகட்டம் பிரக்ஞை மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படற காலகட்டம். புதுப் புது பிரதேசங்களுக்கு உள்ளேயெல்லாம் நுழைஞ்சுக்கிட்டிருக்கும் காலகட்டம். எனவே உள்ளடக்கத்துலேயும் வெளிப்பாட்டு முறையிலேயும் புதுசு புதுசா கலை வெளிப்பாடுகள் வந்துகொண்டேயிருக்கும். சாதாரணமா இருபத்தஞ்சு முப்பது வருடங்கள் இருக்கக்கூடிய பதில்கள் எல்லாம் இப்போ இரண்டு வருடம் தாங்கறதே கஷ்டம். அந்த வேகத்துல போயிக்கிட்டிருக்கு. இதுதான் நல்லதுன்னு அறுதியாகச் சொல்லிட முடியாது. ஆனா இதுவரைக்கும் நான் படித்ததில் எனக்கு எதெல்லாம் பிடிச்சதுன்னு சொல்லலாம். நாளைக்கு புதுசா படிக்கிற ஒண்ணு பிடிச்சுப்போயிடலாம். அந்தச் சாத்தியத்தையும் உள்ளடக்கிச் சொல்லலாம்.

உலக அளவில் எடுத்துக்கிட்டா கான் ஸ்டான்டின் கவாஃபியோட கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சிலதை மொழிபெயர்க்கக்கூட முயற்சி செய்தேன். ஜென் கவிதைகள், ஜென் தொடர்பான கவிதைகள் (இது ஜென் துறவிகள் எழுதினவையில்லை, வேறு சிலர் எழுதினது); சில கவிதைகளை மொழிபெயர்த்து 'ழ'ல வந்தது; ஆலன் கின்ஸ்பர்க் கவிதைகள் சிலது; அதுல ஒண்ணு தேவதச்சன் மொழிபெயர்த்து 'ழ'ல வந்தது - ரொம்ப அற்புதமான கவிதை; ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதைகள். நிறைய படிக்கணும்னு ஆர்வமிருக்கு. படிப்பு கம்மிதான். தமிழ்ல சின்ன வயசுல பாரதியார் ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. இன்னிக்கு இருக்கிற மனநிலைல பாரதியார்ல கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்தான் மிஞ்சுது. திருவள்ளுவரோட காமத்துப் பால்ல சில கவிதைகள் மிகவும் கவித்துவமானவை. சங்க இலக்கியத்துல அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, அப்புறம் முக்கியமா முத்தொள்ளாயிரம். முத்தொள்ளாயிரத்துல மனக் கோணங்கள் ரொம்ப நுட்பமாகவும் ரொம்ப எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கு. சொற்கள் இப்போ புழக்கத்தில இல்லாம பரிச்சயமில்லாததால கொஞ்சம் கஷ்டமா இருக்கும். தமிழ் - தமிழ் அகராதி ஒன்றைக் கையில் வெச்சுகிட்டுப் படிச்சா ரொம்ப எளிமையா இருக்கும். அதுலெல்லாம் 'அளவன்'னு இருக்கும், நண்டுன்னு போட்டா நமக்குப் புரிஞ்சுடும். வெறுமனே நமக்கு அந்தச் சொற்கள் பரிச்சயமாயிட்டா போதும். மிகவும் எளிமையான, நேரடியான கவிதைகள்; பெருமளவுக்கு அகநானூறுலயும் ஓரளவுக்குப் புறநானூறுலேயும் ரொம்ப அற்புதமான கவிதைகள் இருக்கு. காலக் கிரமமா வரணும்னா சங்கக் கவிதைகள், பாரதியார் - பாரதியார்ல வசன கவிதைகளைச் சேர்த்துக்கணும், ரொம்ப அற்புதமான கவிதைகள். 'காற்று' கவிதையில் கந்தனும் வள்ளியும் உறவாடறது, 'ஜகத் சித்திரம்' கவிதையெல்லாம் கவிதையோட உச்சம். பறவைகளோட குரல்களை, ஓசைகளை பாரதியாரைத் தவிர வேறு யாராவது இவ்வளவுக்குப் பதிவு செய்திருக்காங்களான்னு தெரியல. ஏதோ ஒரு பறவையோட ஒலியை 'எங்கோவாழ், எங்கோவாழ்'னு எழுதறார். அந்த 'ஜகத் சித்திரம்'ங்கிற வசன கவிதையில வெறுமனே பறவைகளோட குரலை மட்டுமே பதிவு செய்யறார். 'எங்கோவாழ், எங்கோ வாழ்'ங்கிறதுக்கு அர்த்தம் வேற வருது.

ஒரு விஷயத்தைப் புதுசா ஒரு கோணத்துல பார்க்கிறது எந்தக் கவிதையில் இருந்தாலும் அது பிடிக்குது. புதிய பார்வைக் கோணங்களை நான் தேடறேன்னு வெச்சிக்கலாம். அதுமாதிரி கவிதைகள் அறுபதுகள்லேருந்து இன்னிவரைக்கும் எனக்குக் கிடைச்சுக்கிட்டிருக்கு. ரொம்பப் பிரபலமான கவிஞர்களோட சில கவிதைகள் எனக்குப் பிடிக்குது. அவங்களோட எல்லாக் கவிதைகளுமே ஒரு தளத்துக்கு மேலே தரத்தோடதான் இருக்கு. அதுனாலதான் அவங்க இத்தனை நாள் நிக்கறாங்க. அதுலயுமே சில கவிதைகள்தான் எனக்கு நெருக்கமா இருக்கு. புதுசா வர்றவங்களோட சில கவிதைகள், சில கவிதைகளோட சில வரிகள்ல பளீர்னு ஒரு புதிய பார்வைக் கோணம் வருது; அது முழுக் கவிதையிலயும் வராம போயிடுது. நம்பிக்கை அளிப்பவர்கள்னு சொல்லப்பட்டதுல பல பேர் நம்பிக்கையை நிறைவேற்றாமல் போய்ட்டாங்க. பெண் கவிஞர்களில் சில கவிஞர்கள்கிட்ட புதிய பார்வைக் கோணங்கள் இருக்கு. பெண்களுக்கே உரித்தான பார்வைக் கோணங்கள் இருக்கு; நான் புதிய பார்வைக் கோணங்களைத் தேடிக்கிட்டிருக்கேன். எது அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யுதோ அதெல்லாம் எனக்குப் பிடிக்குது. இதெல்லாமே subjective. எது நல்ல கவிதைங்கறதுக்கு நான் பதில் சொல்லத் தயாராயில்லை. யார் சொன்னாலும் அது கொஞ்ச காலத்துக்குத்தான் தங்கும். இதே logicதான் சிறுகதை, நாவல் எல்லாத்துக்கும்.

தொடர்ச்சி...   1   2   3   4   5  6

உள்ளடக்கம்

Google Ads.....


Google