Google   www kalachuvadu.com

"கேள்வி என்பது தன்னைத் தானே தேடிக்கொண்டிருக்கும் பதில்"

நேர்காணல்: ஆனந்த்

தொடர்ச்சி...

ரவி: இன்றைய தேதியில் தலித்தியம், பெண்ணியம் போன்ற கருத்தாக்கங்கள் சமூக அளவில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றைப் பற்றி உங்களோட கருத்து என்ன?

ஆனந்த்: தலித்தியம், பெண்ணியம் ரெண்டும் ரொம்ப முக்கியமான சமூகப் போக்குகள். ஆனா இதுக்குப் போறதுக்கு முன்னாடி சமூகப் போக்குகள்னா என்ன, நான் இதை எப்படிப் பார்க்கறேன்னு சுருக்கமா சொல்லிடறேன். ஏற்கனவே சொன்ன மாதிரி புறம்கிற பரிமாணத்துல நடக்கிற எல்லாமே அகத்துல தோன்றினதுதான்னு பேசியிருக்கோம். சமூகப் போக்குகள்னு நாம சொல்றதைப் பிரக்ஞையோட போக்குகள்ங்கிற கோணத்தில் பார்த்தோம்னோ இன்னும் சில விஷயங்கள் தெளிவுபடும். பரிணாம வளர்ச்சின்னு பேசும்போது உடனே சார்லஸ் டார்வினும் இன்னும் பல அறிஞர்களும் நினைவுக்கு வருவாங்க. ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றி வளர்வதைப் பற்றிய பதிவுகளாத்தான் இருக்கு. அதாவது evolution of forms - உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமம் தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக் காலகட்டத் தேவைக்கு ஏற்பப் புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது.

மோகனரங்கன்: அரவிந்தரெல்லாம் இதைப் பத்திப் பேசியிருக்கார், நீட்ஷே பேசியிருக்கார்.

ஆனந்த்: ரொம்ப விரிவாகவும் ஆழமாகவும் பார்த்தவங்க எல்லாரும் இதைப் பத்திப் பேசியிருக்காங்க, நீட்ஷே Superman அப்படின்னு ஒன்றைச் சொல்றார். இன்றைக்கு உள்ள சில சிந்தனையாளர்கள் மனித குலத்தைத் தாண்டி ஒரு புதிய இனம் உருவாக ஆரம்பிச்சாச்சு, Homo Sapiensலேருந்து Homo Noeticus அப்படின்னு ஒன்று தோன்ற ஆரம்பிச்சாச்சு, இன்னும் பெருமளவுக்கு வரல, பெருமளவுக்கு வரும்போது உலகத்தில் காணக்கூடிய மாற்றங்கள் இருக்கும்னு சொல்றாங்க - John White நினைக்கிறேன். Edgar Mitchellனு ஒரு astronaut இருந்தார். அவர் விண்வெளிக்கு - Apolloனு நினைக்கிறேன் -போயிட்டு வந்தார். அவர் அந்த மாதிரி விண்வெளிக் கலத்துல போகும்போது அவருக்கு ஒரு அக அனுபவம் ஏற்பட்டு, அவர் பூமிக்கு வந்த பிறகு அவரோட வாழ்க்கைக் கோணமே மாறிப்போச்சு. அவர்தான் இந்த Homo Noeticusங்கிற கருத்தாக்கத்தை முதல்ல தோற்று வித்தவர். எட்கர் மிட்செல்தான் இதுக்காக ஒரு நிறுவன அமைப்பையே ஆரம்பிச்சார். ஜான் ஒயிட் inspire ஆகி அதுல போய் சேர்ந்தார். இவர் இது பற்றி சில கட்டுரைகள் எழுதியிருக்கார். இணையத்தில் Homo Noeticusனு போட்டு search போட்டா கிடைக்கும். ஆர்வமிக்க வாசகர்கள் படிச்சுக்கலாம். நீட்ஷே Supermanனு சொல்றார். அரவிந்தர் Supermind, Supramentalனு சொல்றார். இதுலேருந்து அடிப்படையா என்ன தெரியுதுன்னா பரிணாமம்கிறது முடிஞ்சிடலை, நடந்துக்கிட்டிருக்கு. இன்னும் பல காலகட்டங்கள் இருக்கு. முடிஞ்சு போயிட்ட மாதிரி analyse பண்றோம்; அது தொடர்ற ஒரு விஷயம். நேற்றும் இன்னிக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கு. இந்தக் காலத்துல ஒரு பரிணாமம் நடந்துக்கிட்டிருக்குன்னு பாக்கணும். அப்போதுதான் அதன் ஆழத்தையும் விரிவையும் நாம பார்க்கவே ஆரம்பிக்க முடியும்.

பரிணாமம்ங்கற இயக்கம் பிரக்ஞையில்தான் தன்னோட அனைத்து நாடகத்தையும் நடத்துது. பெரிய பிரம்மாண்டமான நாடகம் அது. அதோட scriptக்கு வெளியிலபோய் நாம் நடிக்கிறோம்னு சொல்லலாம். இந்தக் கோணத்துல பார்க்கும்போது, அங்கே பிரக்ஞைங்கிற தளத்துல என்ன நடக்குது, அதனோட தன்மைகள், போக்குகள் என்னன்னு நாம தெளிவாகப் பார்த்தால், தலித்தியம், பெண்ணியம் போன்ற சமூகப் போக்குகளைப் பத்தியும் நாம ஆழமான கோணத்தில் பார்க்க முடியும்னு தோணுது. பிரக்ஞையோட இயக்கத்துல ரொம்ப அடிப்படையான ஒரு விஷயம் இருக்கு - அதுல எப்பவுமே ஒரு சமன்படுத்தல் இருந்துகிட்டே இருக்கு, ஒரு கழைக் கூத்தாடி மாதிரி. பிரக்ஞையோட இயக்கத்துல முக்கியமான விஷயம் இந்த balancing. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, எந்தப் பக்கம் சாயுதோ அதுக்கு எதிர்ப் பக்கம் சாயணும். நோக்கம் வலது பக்கம் சாய்வதில்லை, நோக்கம் நடுவில் போவதுதான். ஒரு காலகட்டத்தில் பார்க்கும்போது ஒரு பக்கமா ரொம்பவும் சாய்வதுபோல் இருக்கும், ஆனா நோக்கம் சமநிலையை அடைவதுதான். இந்தப் பிரக்ஞை ஓட்டங்கள்தான் சமூக இயக்கங்களா நமக்கு வெளியில காணக்கிடைக்குது. தலித்தியம், பெண்ணியம் இவை சமூக சக்திகளோட சமன்படுத்தும் செயலாக இருக்கிறதா மனசுல படுது. தலித்தியம்கிறது இந்தியாவுக்கே உரித்தானது. வேறெங்கேயும் இதுக்குத் தேவை கிடையாது. ஆனா பெண்ணியம்கிறது உலக அளவுல இருக்கிறது. ரெண்டையும் தனித்தனியாவும் பார்க்கலாம், ஓரளவுக்கு ஒன்றாகவும் பார்க்கலாம்.

தலித்தியம்ங்கிறதை எடுத்துப்போம். வர்ணாசிரமத்தால ஏற்பட்டுதுங்கிறாங்க. சிலர் அப்படி இல்லைங்கிறாங்க. அது ஏன் ஏற்பட்டுதுங்கிறது இப்போ தேவையில்லை. ஏற்கனவே நடந்ததோட விளைவுதான் இன்னிக்கு இப்போ நடக்கிறதுன்னா, இப்போ என்ன நடக்குதுங்கிறதப் பார்த்தாலே அடிப்படைக் காரணிகள் என்னன்னு தெரிஞ்சுடும். நமது முழு கவனத்தையும் இப்ப நடக்கிறதுல வைத்தோம்னா, அந்த சமன்படுத்தும் செயலுக்கு நம்மால முடிந்ததைச் செய்யலாம். ஆதிகாலத்துல என்ன நடந்ததுங்கிறதுல தலைமுடியைப் பிச்சுக்காம, இப்போ சமீபத்துல இந்த ஐம்பது ஆண்டுல, நூறு ஆண்டுல என்ன நடந்ததுன்னு பார்த்தாலே சில விஷயங்கள் தெளிவாத் தெரிஞ்சுடும். இந்தப் பிரக்ஞையோட இயக்கம்கிறது static ஆனது கிடையாது. வலதுல சாய்ந்து இடது சாய்ந்துன்னு ஒரு dynamic ஆன இயக்கம். தலித்தியம், பெண்ணியத்தை எல்லாம் தெளிவாப் பார்க்கணும்னா, எந்த சைடும் எடுக்காம பார்க்கணும், சிந்திக்கணும். என்ன செயல்பாடு தேவையோ அதைச் செய்யணும். பலரும் ஏதோ ஒரு சார்பெடுத்து ஒட்டியும் வெட்டியும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு செயலாற்றும் போது, நாம சார்பெடுக்காம objective ஆக, unemotional ஆக, unsentimental ஆக கவனம் குடுத்துப் பார்க்க முடிந்தால் நிச்சயமா சமநிலையை அடைவதுக்கு நாம பெரிய உதவியா இருப்போம். இப்படி சார்பெடுத்து உணர்ச்சி வசப்படுவது சமநிலை அடையறதை, equilibrium  வர்றதைத் தாமதப்படுத்தும்; இன்னும் பல வருடங்களாக்கிடும்.

தலித்துகள்னு பிரிக்கப்படற இனத்தைச் சேர்ந்த மனிதர்களும் நம்மைப்போலவே ஆசாபாசங்கள், சுக துக்கங்கள், பசி, துன்பம், துயரம் இருக்கிற மனிதர்கள்தான், ஒரு வித்தியாசமும் கிடையாது. நமக்கு இப்ப ரொம்பத் தெளிவாத் தெரியற இந்த விஷயம், பல நூற்றாண்டுகளா புரிஞ்சுக்கவே முடியாம இருந்திருக்கு. ஒரு பக்கம் idiotic ஆகத் தெரியுது, கூடவே ரொம்ப வருத்தமாவும் இருக்கு. சமூகப் போக்குகள்னு போனோம்னா எந்தக் காலகட்டத்துலேயும் எந்தக் கலாச்சாரத்திலேயும் ஒரு சாரார் சக்தி மிகுந்தவர்களாகவும் ஒரு சாரார் சக்தி குறைந்தவங்களாகவும் இருக்காங்க. இங்க தலித்துகள், வேற ஒரு நாட்டுல வேற ஒரு இனக் குழு, ஒரு அடக்கியாளும் சக்தி, ஒரு ஒடுக்கப்படும் சக்தி ரெண்டும் இருக்கும்.

வாழ்க்கைல எந்தத் தளத்துல பிரச்சினை எழுகிறதோ, அதே தளத்துல தீர்வு கிடைக்காது. அதைவிட உயர்ந்த அல்லது ஆழமான தளத்திலேருந்துதான் அதற்குத் தீர்வு கிடைக்கும். தீர்வுகாண நினைக்கிறவங்க அதே தளத்தில் தீர்வுகாண முயல்வதால் பிரச்சினை குழப்பப்படுது, தீர்வை நோக்கிப் போகலைன்னு தோணுது. தெளிவான பார்வையும் சிந்தனையும் வேறொரு தளத்திலேருந்து பார்த்தாத்தான் வர முடியும். தெளிவான பார்வையும் சிந்தனையும் இருந்தால் தீர்வு தாமதப்படாமல் விரைவில் வந்துவிடும். ஒரு காலகட்டத்துல ஒரு குழு அடக்கி ஆள்றதாகவும் ஒரு குழு ஒடுக்கப்பட்டதாகவும் இருக்குன்னா பிரக்ஞையோட போக்குல அந்த சமன்படுத்தும் செயல் வந்தே தீரும். ஒடுக்கப்பட்ட குழு நிச்சயம் கிளர்ந்தெழுந்தே தீரும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இடது பக்கம் விழுந்துவிடற மாதிரி இருக்கும்போது வலது பக்கம் சாய்ந்தாகணும். பார்க்கறப்போ ஒடுக்கப்பட்டவங்க அதிகமா என்னமோ பண்ற மாதிரி இருக்கும். தப்பெல்லாம் ஒண்ணுமில்லை. Balancing நடக்கிறப்போ ஒரு பக்கம் சாய்கிற மாதிரிதான் இருக்கும். சொல்லப்போனா ஒரு காலகட்டத்துக்கு ஒடுக்கப்பட்டவங்களே ஒடுக்கக்கூட முயற்சி செய்வாங்க. தலித்துகளைச் சொல்லலை, உலக அளவில் சொல்றேன். எந்த ஒரு போக்கும் சமநிலைக்காக நடக்குதுன்னா அதை நாம எதிர்க்கக் கூடாது, வரவேற்கணும்னே தோணுது. ஆரோக்கிய சிந்தனை உள்ளவங்க, இதுக்கான இடத்தைக் குடுக்கணும்னுதான் படுது. Balancing சரியா வரும்போது சமநிலை வந்தே தீரும்.

ரவி: தலித்தியம்கிறது சமூக இயக்கமா, சக்தியா சமீபத்துல ஆரம்பிச்சு இப்போ அரசியல் இயக்கமா ஆகத் தொடங்கிருச்சு. இவ்வளோ வருஷமாகியும் பெண்ணியம்கிறது உலகம் பூராவுமே இன்னமும் அரசியல் இயக்கமா ஆகலை. இரண்டுக்கும் வித்தியாசமிருக்கா இல்லையா?

ஆனந்த்: இரண்டுமே மனிதப் பிரக்ஞையில் ஏற்படற இயக்கம்னு ஏற்கனவே பேசினோம். தலித்தியம்ங்கிறது பிரக்ஞையோட சமூகத் தளத்துல வெளிப்படற சமூகப்போக்கு. இது இப்பதான் அரசியல்ல effective ஆக வர ஆரம்பிச்சிருக்கு. இலக்கியத்துலே ஏற்கனவே வந்தாச்சு. உண்மையான போக்காக இருந்தா, மனித சக்திகள், மனித மனோசக்திகள் தொடர்பான போக்காக இருந்ததுன்னா, அது சமூகப் போக்காக ஆரம்பித்து வாழ்வோட எல்லாத் தளத்திலேயும் தன்னை வெளிப்படுத்தியே தீரும். இலக்கியத்துல, அரசியல்ல எல்லாத் தளத்திலேயும் தன்னை வெளிப்படுத்திக்கும். அந்த சக்தி விரிந்து பரவறதுக்கான இடத்தைக் குடுக்கணும். அதில் அளவுக்கு அதிகமா இருக்கிற சக்தி உபயோகப்படுத்தப்பட்டு சரியான நிலைக்கு வந்துடும். இது இந்தியச் சமூகம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை, சர்வதேசச் சமூகம் சார்ந்தது. பெண்ணியம் அரசியல் சக்தியாக ஆகலையேன்னு கேட்கறீங்க. பெண்ணியம்ங்கிறது மனித சமூகம் சார்ந்த விஷயம். அது அரசியல் சக்தியாக ஆகறதுக்கான அத்தனை சக்தியையும் சாத்தியக்கூறையும் தன்கிட்டே வைத்துக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கு. விரைவிலோ அல்லது தாமதமாகவோ அது அரசியல் சக்தியாகவும் ஆகியே தீரும். நீங்க எழுதி வெச்சுக்கோங்க, இன்னும் பத்து வருஷமோ இருபது வருஷமோ தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த அரசியல் சக்தியாக ஆகித்தான் தீரும். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. 33% குடுக்கணும்கிறது அரசியல் கூறில்லாமல் வேறென்ன? வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் பெருமளவுக்கு வரும். உலக அளவுல வரும். இந்த விஷயத்தையும் மேலோட்டமாகப் பார்க்கிறபோது தவறான முடிவுகளுக்குப் போய் அதன் அடிப்படையில் பிரச்சினைகள் வரும். ஆனால் அதையெல்லாம் மீறி சமநிலைக்கு வரும். பெண்ணியம்கிறது கால அளவுல ஆண், பெண் தோன்றினதுலேருந்து இருக்கும் விஷயம். அதனால இதில் மாற்றங்கள் மெதுவாகத்தான் வரும்.

ஆண்கள் பெண்களை ஒடுக்கறாங்கன்னு சொன்னா ஒரு அளவுல இது உண்மைதான். ஆனா ஆழமாகப் போய்ப் பார்த்தால் இது வெறுமனே இப்படியில்லை, இது வேற விஷயம். இப்ப இருக்கிற சமூக அமைப்பு இரண்டு சாராரோட ஓப்புதலோடதான் தோன்றிச்சு. ஆனா நமக்கு அது மறந்துபோயாச்சு. ஏன்னா இது ரொம்ப காலத்துக்கு முன்னாடி, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னாடி ஏற்பட்ட ஒப்புதல். இன்னிக்கு இருக்கிற ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது தெரியாது. அந்த ஆழத்துக்குப் போய்ப் பார்க்காம, இன்னிக்கு நடக்கிறதை மட்டும் பார்த்துட்டு ஏற்பட்டிருக்கிற எழுச்சி, இது இயல்பான எழுச்சிதான், இதைத் தவிர்க்க முடியாது. அரசியல் வரலாற்றை மட்டும் பார்க்காம, கலாச்சார வரலாற்றையும் சேர்த்துப் பார்த்தோம்னா, சமுதாயச் செயல்பாடுகளைப் பிரிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. பிரிக்கிறதுங்கறது கமிட்டி போட்டுப் பேசறதில்லை, இயல்பா நடந்திருக்கும். இது இயல்பா வாழ்தலோட இயக்கத்துல வர்ற ஒப்புதல். இந்த அமைப்பு தோன்றினபோது இருந்த அன்றைய பிரக்ஞை அமைப்பின்படி ஆண்கள், பெண்கள் எல்லாரோட முழு ஒப்புதலோட ஏற்பட்ட அமைப்பு இது. சமூக அமைப்பு static; பிரக்ஞையோட இயக்கம் dynamic. ஒரு காலத்துல சரின்னு நினைச்சு உருவாக்கின சமூக அமைப்பைத் தாண்டி பிரக்ஞை போய்க்கொண்டே இருக்கும்; சமூகம் கூட வராது, ஏன்னா அது static. ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அந்த சமூக அமைப்பு போதாமல் பிரச்சினைகள் வரும். பிறகு அதை உடைச்செறிஞ்சுட்டு பிரக்ஞை புது அமைப்பைக் கொண்டுவரும். பல நூற்றாண்டுகளுக்குப் பிரச்சினையே இல்லாமல் இருக்க முடியும். ஒரு கட்டத்துல பிரக்ஞை பெருமளவுக்கு முன்னேறிப்போயும் சமூக ஸ்தாபனங்கள் பெருமளவுக்குப் பின்தங்கிக் கிடக்கும். அதுக்கு வளர்ச்சி கிடையாது. உடைந்து திரும்ப மாறணும். இதுல evolution இல்லை, revolutionனு தான் பார்க்கணும்.

இப்போ சமூகச் செயல்பாடுகள்ல ஆண், பெண் balance ரொம்ப radical ஆக மாற்றமடைய வேண்டிய கட்டாயம் இருக்கு. ஏன்னா இந்த சமூக ஸ்தாபனங்கள் இயக்கபூர்வமா உபயோகப்படற காலகட்டத்தைத் தாண்டியும் அப்படியே இருக்கு. பிரக்ஞை எங்கேயோ போயிடுச்சு, சமூக அமைப்பு இன்னும் அங்கேயே இருக்கு. வெளியில இருந்து பார்க்கும்போது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தறாங்க, பெண்கள் கஷ்டப்படறாங்கங்கிற மாதிரிதான் நடக்குது. அதை மறுக்கலை, ஒரு வரையறுக்கப்பட்ட அளவுல அது உண்மைதான். ஆழமாகப் பார்க்கும்போது உண்மை அதில்லை. அடிப்படையான பிரக்ஞை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கு. புதிய தளங்களையும் புதிய நிலைகளையும் தன்னோட பரிணாம வளர்ச்சியில் பிரக்ஞை கண்டடைந்துகொண்டிருக்கிற காலகட்டத்துல நாம் இருக்கோம். மனித சரித்திரத்தில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கோம். புத்தம் புதியதான காலகட்டம். பிரக்ஞையின் புதிய பிரதேசங்கள், இதுவரை மனித சமுதாயம் ஊடுருவாத, உள்ளே நுழையாத புதிய பிரக்ஞை நிலைகளுக்குள்ளே, புதிய பிரக்ஞைத் தளங்களுக்குள்ளே மனிதப் பிரக்ஞை இப்போ நுழைய ஆரம்பிச்சிருக்கு. எனவே அடிப்படையான மாற்றங்கள் எல்லா நிலைகளிலேயும் தளங்களிலேயும் நிகழும். சமூக அமைப்பு மிகவும் அடிப்படையான மாற்றங்களுக்கு உட்படும். ஆண், பெண், ஜாதிகள் எல்லாமே அடிப்படையான மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கு. தனி மனிதர்களாலோ தனிக் குழுக்களாலோ யாராலேயும் தடுத்து நிறுத்தவே முடியாது. குறுக்கே புகுந்து தாமதப்படுத்தலாம், கொஞ்சம் தள்ளிப்போடலாம், தடுத்துவிட முடியாது. பெண்ணியம்கிறது புதிய சமநிலைக்கான சமன்படுத்தும் செயல். பிரக்ஞை புதிய தளங்களுக்குள் போகும்போது நமக்கு வேறொரு balance தேவைப்படுது. ஒரு புதிய balanceஐ attain பண்ண வேண்டிய நிர்பந்தத்துல இன்னிக்கு மனித சமுதாயம் இருந்துகொண்டிருக்கு. இதனோட விளைவாகத்தான் ஏதோ ஒரு imbalance எல்லாருக்குள்ளேயும் இருக்கு. இதுக்குக் காரணம் பிரக்ஞையிலேயே இருக்கிற lack of balance தான். இது முழு மனித சமூகத்துக்கே சோதனையான கட்டம்தான். இதனால ஆண், பெண்ங்கிற விஷயங்கள்ல social function முழுக்க review பண்ணித் தன்னுடைய functions, function-உடைய வெளிப்பாடான social rules எல்லாம் முழுமையா rearrange ஆகி புதிய சமநிலைக்கு வரணும். இந்த மாதிரி கால கட்டங்கள் வெளியில மிகவும் குழப்பமாகத்தான் இருக்கும். குழப்பமும் - பிறப்புன்னு சொன்னா அதுக்கான வலி இருக்குமில்லையா - அந்த வலியும் இருக்கும். நாம் எல்லாருமே தனியாவும் ஒட்டுமொத்தமாவும் இந்த வலியைத் தாங்கிக்கிட்டுதான் அடுத்த கட்டத்துக்குப் போயாகணும். சமூகப் போக்குகளோட அடிப்படையைப் பிரக்ஞையோட பின்னணியில பார்க்க ஆரம்பிச்சா தேவையில்லாத எதிர்ப்புகளைத் தெரிவிக்காமல், தடைகளை ஏற்படுத்தாம, தாமதப்படுத்தாம இருக்கலாம்; சீக்கிரம் போயிடலாம். ஆனா அப்படியெல்லாம் பார்க்கமாட்டோ ம், தடைகளை ஏற்படுத்துவோம், தாமதப்படுத்துவோம் என்றால் அதையெல்லாம் மீறிப் புதிய தளங்கள் விரிய ஆரம்பிக்கும்.

தொடர்ச்சி...   1   2   3   4   5   6

உள்ளடக்கம்

Google Ads.....


Google