 |
"கேள்வி என்பது தன்னைத் தானே
தேடிக்கொண்டிருக்கும் பதில்"
நேர்காணல்: ஆனந்த்
தொடர்ச்சி...
மோகனரங்கன்: மனித மனத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் இருளையும் கசப்பையும்
கரிப்பையும் அழுத்தம் தந்து எழுதுவது என்று ஒரு இலக்கியக் கோட்பாடு உள்ளது. நீங்கள்
உங்கள் எழுத்தில் இத்தகைய மனத்தின் கீழ்மைகளை முற்றிலும் ஒதுக்கிவிடுவதாகத்
தோன்றுகிறது. ஏன்?
ஆனந்த்: வாழ்க்கை அனுபவம் என்பது பெரியதொரு
canvas. அதில் என்னென்ன அம்சங்கள்
இருக்கு, என்னென்ன விஷயங்கள் இருக்கென்று பட்டியல் போட்டு முடிக்கவே முடியாத
அளவுக்கு அவ்வளவு பெரிய
infinite canvas அது. அந்த canvas
எல்லாருக்கும் கிடைக்குது. ஒவ்வொரு மனிதனுடைய
canvas-உம் அந்த infinite canvasதான். ஒவ்வொரு கலைஞனும் அந்த மாபெரும் சித்திரத்திலிருந்து சில
அம்சங்களைத் தன் கலை வெளிப்பாட்டிற்கான மையமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். எதைத்
தேர்ந்தெடுக்கணும் என்பதில் ஒரு கலைஞனுக்குப் பூரண சுதந்திரம் இருக்கிறதென்று
நினைக்கிறேன். ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் மற்றதை விலக்கிடறதாக அர்த்தமில்லை. எதாவது
ஒன்றில் focus செய்தால் மற்ற விஷயங்கள் மங்கலாகிவிடுவதைத் தவிர்க்க முடியாது.
ஆக, மற்ற விஷயங்களைப் பற்றின வெறுப்பு இருக்கிறதென்று எடுத்துக்க வேண்டாம்னு படுது.
கீழ்மை நிலைகள்னு சிலதை நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் சொல்லாத சிலவற்றையும் அந்தப்
பட்டியலில் சேர்த்துக்கறேன். அசட்டுத்தனங்கள், பைத்தியக்காரத்தனங்கள்,
limitations இதெல்லாம் எல்லாரிடமும் இருக்கிற அளவுக்கு என்னிடமும் நிறைய
இருக்கு. ஆனால் என் மனம் இதையெல்லாம் கலை வெளிப்பாட்டிற்கான விஷயமாக ஏனோ
தேர்ந்தெடுக்கலை. இதைக் கலை வெளிப்பாட்டில் ஒதுக்குவதன் மூலமாக இதெல்லாம் என்னிடம்
இல்லைன்னு வெளிப்படுத்துவதாகிவிடாது. அப்படியெல்லாம் சொன்னதுகூடக் கிடையாது.
எனக்கென்னமோ இதைச் சொல்வதற்குப் பிடிக்கிறது. நீங்க சொல்லும் கீழ்நிலைகளையெல்லாம்
நான் வாழ்ந்துகிட்டிருக்கேன். ஆனால் இவை கலை வெளிப்பாட்டிற்கு உகந்த அம்சங்களாக
எனக்கென்னவோ தோன்றலை. சொல்லக் கூடாதுன்னு கிடையாது, ஆனால் அதைச் சொன்னால்தான்
இலக்கியம்னா நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். இந்தச் சுதந்திரம் நிச்சயமாக ஒரு
கலைஞனுக்கு இருக்கு. இது யாராலும் மறுக்க முடியாத சுதந்திரமென்று தோன்றுது.
மற்றதெல்லாம் முக்கியமில்லைன்னோ உள்ளதிலேயே முக்கியமானதை நான் தேர்ந்தெடுத்தேன்னோ
சொல்லலை. எனக்கு இதைப் பற்றிப் பேசுவதில் ஏதோ ஒரு ஆழ்ந்த விருப்பம் இருக்கு.
தேவதச்சன் கவிதைகளோடு சேர்ந்து ஒரே புத்தகமாக வெளிவந்த என்னுடைய முதல் கவிதைத்
தொகுப்பான "அவரவர் கை மணல்" தொகுப்பிற்கு, என் கவிதைகள் உள்ள பகுதிக்கு
ஞானக்கூத்தன் ஒரு மூன்று வரி முன்னுரை எழுதினார். அதில் அவர், "விரோத பாவம்
பாராட்டாமல் லௌகீக உலகை ஒதுக்கிவிட்டவை இவருடைய கவிதைகள்" என்று எழுதுகிறார். இதில்
முக்கியமான விஷயம் விரோத பாவம் பாராட்டாமல் இருப்பதுதான். எனக்குப் 'பச்சை' மிகவும்
பிடிப்பதால் 'சிகப்பு' பிடிக்காது, 'மஞ்சள்' பிடிக்காது என்பதல்ல. தேர்வு இருக்கு.
அது ஒருவரோட மன அமைப்பைப் பொறுத்த விஷயம். இதையெல்லாம் விலக்கிவிட்டுத்தான்
எழுதணும், இதைவிட நான் எழுதுவது உயர்வானதுன்னு விவாதம் செய்யணும்னா செய்யலாம்.
ஆனால் இது வெறும் லாஜிக்கோட விஷயம். நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால்
உள்ளுக்குள் அப்படி நான்
mean பண்ணவில்லை. நீங்கள் சொல்லும் கீழ்மைகள்
அத்தனையும் எனக்குள்ளேயும் அருமையாக இயங்கிக் கொண்டிருக்கு. அவற்றை என்னிடமும் என்
சக மனிதர்களிடமும் பார்க்கிறேன். கதை, கவிதையில் எனக்குப் பிடித்ததை நான்
எழுதுகிறேன். நான் விலக்கினது முக்கியமல்ல. இது தேர்வு, அவ்வளவுதான்.
மோகனரங்கன்: உங்களோட வாசிப்பு சார்ந்த ஈடுபாடு எத்தகையது?
ஆனந்த்: கிட்டத்தட்ட இலக்கியக் களத்தில் உள்ள எல்லாரையும் போலவே தி. ஜானகிராமன்,
ஜெயகாந்தன் இவங்களை எல்லாம் படித்துவிட்டுத்தான் வந்திருக்கேன். இருபது
வருடங்களுக்கு முன்னால் புத்தகங்களைத் தேடிப் போய்ப் படிச்சிருக்கேன். அதற்குப்
பிறகு என்னைத் தேடி வரும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதை
அக்கறையின்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று தோன்றுகிறது. இது வயது
சம்பந்தப்பட்டதா அல்லது அக மாறுதல்கள் சம்பந்தப்பட்டதா என்று தெரியலை. ஆனால்
புத்தகங்கள் படிக்கிற ஆர்வம் எந்த விதமாகவும் குறைந்திருப்பதாகச் சொல்ல முடியாது.
தமிழ்ப் புத்தகங்களின் அளவுக்கு ஆங்கிலப் புத்தகங்களும் ஆங்கிலம் வழியாக மற்ற
மொழிகளிலிருந்து வரும் புத்தகங்களும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு. இந்தப் புத்தகம்
நல்லாருக்குன்னு நண்பர்கள் சொன்னால் அதையெல்லாம் ரொம்பப் பொறுப்பாகப்
படிச்சுக்கிட்டிருக்கேன். இலக்கியம் தவிரன்னு பார்த்தால் எழுபதுகளிலும் எண்பதுகளின்
முதல் பாதியிலேயும் கையில் கிடைத்ததை எல்லாம் படிச்சிருக்கேன். இயற்பியலில் ஆழ்ந்த
ஈடுபாடு உண்டு. ஆனால் 85க்குப் பிறகு இயற்பியல் படிப்பதும் குறைந்திருப்பதாகத்தான்
சொல்லணும். ஆனால் அதில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிக் குறைந்தபட்ச
கவனம் இன்னும் இருக்கு. மற்ற துறைகளான
biology, botanyசம்பந்தமாகவெல்லாம் ஆர்வம் உண்டு.
இரண்டு வருடங்களுக்கு முன்னால்
Secret Life of Plants என்று ஒரு
புத்தகம் கிடைத்தது. இந்தப் புத்தகம் நிறைய வாசல்களைத் திறந்துவிட்டது என்று
சொல்லணும். Science,
economics, managementன்னு எல்லாவிதப்
புத்தகங்களையும் இன்னும் படித்துக்கொண்டுதான் இருக்கேன். எல்லாமே மனித மனத்துடன்
சம்பந்தப்பட்டது என்கிற அணுகுமுறையில்தான் படிக்கிறேன். இந்த அணுகுமுறை
இல்லையென்றால் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஒருவேளை நடைமுறைத் தேவைகளுக்குப்
போதுமானதாக இருக்கலாம். ஆனால் எனக்கு இலக்கியப் புத்தகம் படிப்பதற்கும்
management புத்தகம் படிக்கிறதுக்கும் உள்ளுக்குள் பெரிய வித்தியாசம்
தெரியலை. இரண்டிலும் மனித மனத்தின் இயக்கம், மனித மனம் பற்றிய புரிதல் தொடர்பான
விஷயங்கள், மனத் தளத்தில் ஏற்படும் மாறுதல் தொடர்பான விஷயங்கள் என்று இந்தப்
பின்னணியில் பார்க்கும்போது
management புத்தகம்கூட நாவல் படிப்பது
போலத்தான் இருக்கு. நல்ல தீர்க்க தரிசனத்துடன், புரிதலுடன் எழுதப்படும் எந்தப்
புத்தகமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு. ஆக, புத்தகம் படிப்பதென்பது ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இல்லாமல், கிடைக்கும் புத்தகம் நல்ல புத்தகமாக இருந்தால் அது
விரும்பிப் படிப்பதாகத்தான் இருக்கு.
மோகனரங்கன்: ஒரு எழுத்தாளனுக்குச் சமூகப் பொறுப்பு இருக்கணும்கறது
வலியுறுத்தப்படுது. உங்க எழுத்துக்கள் பெரிதும் மனம் சார்ந்த விஷயங்கள்ல கவனத்தைக்
குவிக்கிறதாத்தான் இருக்கு. ஆக, உங்களோட சமூகப் பொறுப்பு என்னவா இருக்கு? உங்க
எழுத்துல அது பிரதிபலிக்கிறதா? உங்களுக்கு ஏதாவது அரசியல் இயக்கங்கள், கோட்பாடுகள்ல
மனச் சாய்வு இருக்கிறதா? உலக அளவில் பல இயக்கங்கள் நடந்துகொண்டிருக்கு. அதைப் பற்றி
உங்கள் கருத்து என்ன? இந்த இயக்கங்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகின்றனவா?
ஆனந்த்: நான் 'அக உலகம்'னு சொல்லப்படற விஷயத்தைச் சார்ந்துதான் அதிகமா
எழுதிகிட்டிருக்கேன்னு ஒரு பொதுவான அபிப்ராயம் இருக்கு. சமீபத்துலகூட ஒருத்தர் ஒரு
நண்பர்கிட்ட அவர் 'காலம், வெளி'ன்னு எழுதுவாருப்பான்னு சொல்லியிருக்கார்.
மேலோட்டமான அளவுல அவர் சொல்றதை நான் ஏத்துக்கத்தான் வேணும். ஆனா ஆழத்துலேருந்து
பார்க்கும்போது அது குற்றச்சாட்டாகச் சொல்லப்பட்டால் அதை நான் மறுக்கிறேன். இந்த
அகம் என்பது புறத்தை விலக்கிய அகம் அல்ல. இந்த அகம், புறம்கிற பிரிவு ஒரு வசதிக்காக
ஏற்படுத்திக்கிட்ட பிரிவு. கொஞ்சம் ஆழ்தளத்துல உள்ள பிரிவு. ஆனாலும்
ஏற்படுத்திக்கிட்ட பிரிவுதான். ஒவ்வொரு கணமும் புறத்துக்குள்ள அகமும் அகத்துக்குள்ள
புறமும் பாய்ந்துகொண்டிருக்கு. ஆனா சொல்ற விஷயத்துல இல்லை, சொல்முறை இருக்கில்ல,
அதில் நான் அகத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். மேலோட்டமா பார்க்கும்போது சமூகம்னு
சொல்றாங்களே, அதைச் சார்ந்த விஷயம், அக உலகம் சார்ந்த விஷயமாக இல்லாத மாதிரித்
தோற்றத்தை ஏற்படுத்துது. கொஞ்சம் ஆழமாகப் போய்ப் பார்த்தா, புற உலகை விலக்காமல்
அதையும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சொல்றேன். நாம எதைப் புறம்னு
சொல்றோமோ அதுக்கு அடிப்படையா இருந்து இயங்குறது அகம்தான்னு நான் தீர்க்கமா
நம்பறேன். இதை என்னோட வாழ்க்கைப் பார்வை சார்ந்த விஷயமாகக்கூட எடுத்துக்கலாம்.
இரண்டு விதமான நம்பிக்கைகள் இருக்கு: புறத்தை மாற்றி அமைக்கிறது மூலமா மனிதனோட
அகத்தை மாற்றி அமைச்சுடலாம்னு ஒரு
school of thought. கம்யூனிசமெல்லாம்
இதுலேருந்து வர்றதுதான். வெளியில் இருக்கிறதை மாற்றிட்டா, பொருட்களைப்
பகிர்ந்தளிக்கிறது இதுலெல்லாம் மாற்றத்தைக் கொண்டுவந்துட்டா, அரசியல் அமைப்பை
மாற்றிட்டம்னா அது மனத்தை மாற்றிடும்கிறது. இதுக்குப் பின்னாடி இருக்கிற விஷயம்
என்னன்னா, மனிதனோட அகம் புறத்தால் கட்டப்பட்டதுங்கற நம்பிக்கை. அதனால்தான் புறத்தை
மாற்றிட்டா சரியாகிடும், புறம்தான் காரணம், அகம் அதனோட விளைவுன்னு பார்க்கிறது.
நான் இதுக்குத் தலைகீழாகத்தான் பார்க்கறேன். அகம்தான் அடிப்படை. அதுதான் புறத்தைக்
கட்டமைக்குது. புறம்னு சொல்றதை அனுபவம்கிற வார்த்தையா உபயோகிக்க விரும்புறேன்.
அனுபவம்கிறதுல அகம், புறம்கிற பிரிவுக்கு அர்த்தம் இல்லாம போயிடுது. அனுபவம்கிற
முழுமைக்குள்ள இரண்டும் அடங்கிடுது. அனுபவத்தோட கட்டமைப்பை அகம்தான் பெருமளவுக்குக்
கட்டமைக்குதுன்னு நான் தீர்க்கமாக நம்பறேன். அகம் அப்படின்னு சொல்லப்படறதைப் பத்தின
தீவிரமான ஆலோசனை,
exploration, அதைப் பத்தின புரிதல், அந்தப்
புரிதலினால அகக் கட்டமைப்புல ஏற்படற சில மாற்றங்கள், பிரக்ஞைக் கட்டமைப்புல ஏற்படற
சில மாற்றங்கள், இதுதான் உண்மையில புற உலகம்னு நாம சொல்றதுல நிரந்தரமான
மாற்றுங்களைக் கொண்டுவர முடியும், ஒரு
lasting change ஐக் கொண்டுவர
முடியும்னு நினைக்கிறேன். முழு மனிதச் சரித்திரத்தைக் கணக்கிலெடுத்துக்கிட்டுப்
பார்த்தாலும் அகம் சார்ந்து சொல்லப்பட்ட விஷயங்கள்தான் புறத்துல நிலையான
மாற்றங்களைக் கொண்டுவந்திருப்பது தெரியுது.
அரசியல் இயக்கங்களில் மனச் சாய்வு, ஈர்ப்பு இருக்கான்னு கேட்டீங்க. என்னோட எழுத்துல
அரசியல் சம்பந்தமான எந்தக் குறிப்பும் இருக்காது, அநேகமா எந்தக் காலகட்டத்தைச்
சேர்ந்ததுங்கற குறிப்புக்கூட இருக்காது. ஆனா இதை வைத்துக்கொண்டு அரசியல் தொடர்பான
விஷயங்களைப் பத்தி எனக்கு அக்கறை கிடையாதுங்கற முடிவுக்கு வந்திட வேண்டாம்னு
கேட்டுக்கிறேன். பிரக்ஞைக்குப் பல தளங்கள் உள்ளது போல அரசியல்ங்கறது பல தளங்கள்
உள்ள விஷயம். அரசியல்னு மேலோட்டமா நடந்துகிட்டிருக்கிறதுல எனக்குக் குறைவான
அக்கறைதான் இருக்குன்னு சொல்லணும், அதை விலக்கறேன்னு அர்த்தமில்லை. அதனோட ஆழமான
தளங்கள்ல இருக்கிற அரசியல்ங்கறதோட தொடர்புடையதுதான் இதுவும். இதையும்
கணக்கிலெடுத்துக்கிறேன், ஆனா நான் கவனம் செலுத்தறது ஆழமான விஷயங்களில். ஆழங்கள்ல
நடக்கறதுதான் மேலோட்டமா என்ன நடக்குதோ அதைத் தீர்மானிக்கிறதால அதுல கவனம்
செலுத்துறேன். உலக அரசியல் சரித்திரம் பல கட்டங்களைக் கடந்து வந்துருக்கு.Greek
City Stateன்னு ஆரம்பிக்குது, பதினேழு பதினெட்டாம்
நூற்றாண்டுலதான் தேசியம்ங்கறது வருது, அநேகமா
feudal set up தான். ஜமீன்தார்,
பண்ணையார் மாதிரி
feudal lords இருந்திருக்காங்க. அவங்ககிட்ட
படையெல்லாம் இருந்திருக்கு. ராஜா இருந்திருக்கார். ஆனா அவர்கிட்டே பெரிய அளவு
படையெல்லாம் இருந்திருக்கலை. அப்பவே தேசங்கள் இருந்திருக்கு, தேசியம்னு இல்லை. அப்ப
இருந்த தேசங்கள்
geographical divisionsதான்,
political divisions கிடையாது. ஒரு தேசம்னு பார்த்தா அதுக்குள்ள பல
பகுதிகள் இருக்கும். ஒவ்வொண்ணுக்கும் ஒரு ராஜா, பக்கத்து தேசத்தோடு சண்டை
நடக்கறப்போ feudal
lords படையெல்லாம் கடன் வாங்கிப்பான்; அந்த
ராஜாக்களுக்குப் படையும் குறைவு, அதிகாரமும் குறைவு.
Feudal lords கிட்டதான் நிறைய அதிகாரம் இருந்திருக்கு.
17-18ஆம் நூற்றாண்டு வாக்கில் ஏதோ ஒரு கட்டத்துல தேசியம்கிற விஷயம் ஐரோப்பாவில்
ஆரம்பிக்கிறது. நமக்கு 1947க்கு முன்னாடி இந்தியான்னே ஒன்று கிடையாது. இந்தியா,
பாரதம்கிறது
geographical division ஆகத்தான் இருந்திருக்கு.
1947லதான் தேசத்துக்கு
political entry கிடைக்குது. ஐரோப்பாவில்
French nationalism, British nationalism ஆரம்பிக்கும்போது
feudal lordsஇன் முக்கியத்துவம் குறையுது. சின்னச்
சின்னப் பிரதேசங்களை இணைச்சு ஒரு தேசமா ஆக்கணும்னு வருது. அப்போ என்ன
செய்யறாங்கன்னா மக்களோட மனத்துல தேசியம்ங்கற கருத்தை, விதையை நடற மாதிரி நடறாங்க;
உணர்வுகளைத் தூண்டற மாதிரிப் புத்தகங்கள் எழுதறாங்க; பேச்சுகள் பேசறாங்க. இப்படியா
தேசியம்ங்கற உணர்வு பரவலா ஏற்பட ஆரம்பிச்ச பிறகு அதனோட விளைவாத்தான் நாடுங்கறது
வருது. ஆக, அந்தக் காலத்துலேருந்தே ஒரு மாற்றம் வேணும்னா மக்களோட மனத்துலதான்
மாற்றத்துக்கான வித்தை நட்டு, அதனோட விளைவாக மக்களோட மனத்துல இருந்துதான்,
அகத்துலேருந்துதான் அதனோட விளைவுகள், புற மாற்றங்கள் நிகழுது. இதை நாம கவனம்
குடுத்துப் பார்க்கறதில்லைன்னு சொல்லலாம்.
சுதத்திரத்திற்கு முன்னாடி இங்கேயே இரண்டு நூற்றாண்டுகளுக்கு ஆங்கிலேய ஆதிக்கம்
இருந்திருக்கு. பெரும்பாலானவங்க அதை இயல்பா எடுத்துக்கிட்டுதான் இருந்திருக்காங்க.
நிறையே பேர் ஆதரவே குடுத்திருக்காங்க. யாருக்கெல்லாம் ஆதாயம் இருந்ததோ அவங்க ஆதரவு
குடுத்திருக்காங்க. அவனோட பிரதிநிதியா இருந்திருக்காங்க. ஒரு சாதாரண மனிதனுக்கு
அவனோட தினசரி வாழ்க்கை பெரிய பிரச்சினை ஏதுமில்லாம போய்க்கொண்டிருக்கிற வரைக்கும்
அவனுக்கு ஆளறவனைப் பத்திக் கவலையே இல்லை, அக்கறையே இருந்ததில்லை. இந்தப்
பின்னணியிலேதான், இந்தியாங்கறது அரசியல் ரீதியான ஒரு தேசமாக,
nationalistic concept ஆக வரணும்ங்கறது இந்திய மனத்துல நடக்குது,
அகத்துலதான் நடக்குது. காந்தி தென் ஆப்பிரிக்காலேருந்து திரும்பறதுக்கு முன்னாடியே
அடித்தளத்துல இது ஆரம்பிச்சாச்சு. காந்தி இதோட
full potentialஐப்
பார்க்கிறார். இது எந்தளவுக்குச் சாத்தியம்னு பார்க்கிறார். அப்போ துண்டு துண்டா
நடந்துக்கிட்டிருந்ததை ஒரு மையப் புள்ளியா இருந்து தனித்தனி ஓடையா
ஓடிக்கிட்டிருந்ததை ஒண்ணுசேர்த்து
integrate பண்ணி ஒரு நதிபோல் ஆக்கின
முக்கியமான வேலையை காந்தி பண்ணினார்னு சொல்லலாம்.
தேசம் முழுக்கப் பல கவிஞர்கள் அதை மையக் கருத்தா வச்சு நிறைய கவிதைகள்
எழுதியிருக்காங்க. இங்கே பாரதியார், வங்காளத்தில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி 'ஆனந்த
மடம்'னு நாவல் எழுதுறார். அதுல வர்ற பாட்டுதான் 'வந்தே மாதரம்'. சுதந்திர
இயக்கத்துக்கு மிக முக்கியமான ஆயுதமா ரெண்டே ரெண்டு வார்த்தை, 'வந்தே மாதரம்'.
பெரிய அர்த்தமெல்லாம் கிடையாது. ''தாயே வணங்குகிறேன்'ன்னு அர்த்தம். அவ்வளவு
சக்திவாய்ந்த ஆயுதமா பயன்பட்டிருக்கு. அந்தச் சமயத்துல இருந்த தேசிய இயக்கத்தின்
எழுச்சியின் முழு உணர்வும் சக்தியும் அந்த வார்த்தைகள்ல ஏற்றும்போது அது
ஆயுதமாயிடுது, வெறும் இரண்டே சொல். சொல் ஆயுதமாயிட முடியும். இன்னிக்கு பாரதியாரோட
தேசபக்திப் பாடல்களை நுட்பமான இலக்கிய அளவைகளை வெச்சுப் பார்த்தா, கவிதைகளே
இல்லேன்னு கூடச் சொல்லிடலாம். சரித்திர முக்கியத்துவத்தைத் தாண்டி, மிகவும்
கவித்துவமான சில வரிகள் இருக்கு. அதைத் தாண்டிக் கவிதையில்லன்னு சொல்லிடலாம்.
அவற்றோட நோக்கம் கவிதை கிடையாது. ஆனா ரொம்ப சக்தி வாய்ந்த பாடல்கள் அவரோட
தேசபக்திப் பாடல்கள். அப்போ எந்த அளவுக்கு மக்களோட உணர்வுகளைத் தூண்டி இருக்கும்னு
இப்பப் படிச்சாக்கூடத் தெரியுது. இப்படியெல்லாம் பெருமளவுக்குப்
பங்களிச்சிருக்காங்க.
ஆக, எந்த மாற்றமும் அகத்துலேருந்துதான் தொடங்குது. எந்த ஒரு விஷயம் வெளியில
நடக்கணும்னாலும் அது யாரோட பிரக்ஞையிலாவது ஒரு கருத்தாக, எண்ணமாகத்
தோன்றியிருக்கணும். அப்புறம் அது சொல் வடிவமேற்று வந்து செயலாக நடக்குது. ஒரு
scientific theoryயோ political theoryயோ யாரோ
ஒருத்தர் மனசுல தோன்றியிருக்கும். ரூஸோவோட, வால்டேரோட மனசுலயெல்லாம்
தோன்றியிருக்கு. மாக்கியவெல்லி மனசுல தோன்றினது
Princeஆக வருது. கௌடில்யர்
அகத்துல தோன்றின கருத்துகள், எண்ணங்கள் அர்த்த சாஸ்திரமா வருது. புறத்துல மாற்றம்
ஏற்படுத்தினா அகத்துல மாற்றம் வரும் அப்படிங்கற தத்துவம் மார்க்ஸோட அகத்தில்
தோன்றியிருக்கு. கொஞ்சம் தெளிவா,
objective ஆகப் பார்த்தா மாற்றங்கள்
எப்போதும் அகத்தில்தான் தோன்றியிருக்குன்னு தெரியும். எந்தப் படைப்பும், புதுசா எது
வரணும்னாலும் அது மனத்திலேந்துதான் வந்தாகணும். மாற்றங்கள் அகத்துலதான் தொடங்குது.
மாற்றம்னா என்ன? அடிப்படையாப் பார்த்தா பழசு போயிட்டு புதுசு வர்றதுதானே? அது
எங்கேருந்து வர முடியும்? யாரோ ஒருத்தரோட பிரக்ஞையிலேருந்துதானே முளைவிட்டு
வந்திருக்க முடியும். ஆக இந்த அரசியல் மாற்றம்கிறது பெரிய நதிதான். அதில் இன்னும்
மாறவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. இந்த மாற்றத்துக்காக வெளியில சமூகத்துல பல
விஷயங்கள் செய்யப்பட்டு வருது. இதை முக்கியமில்லைன்னு சொல்லலை. ஆனா அதைவிட அதிக
முக்கியம் உள்ளுக்குள்ள அகத்துல ஏற்படற மாற்றம்னு சொல்லணும்.
Feudal lordsகிட்டேருந்து தேசங்கள் வந்தது. தேசங்களிலேருந்து ஒரு உலக அரசு வேணும்கிற
கருத்து ஏற்கனவே இருக்கு.
Interpolங்கிற உலக அளவிலான போலீஸ், ஐ.நா. சபை
இதெல்லாம் இப்போ இருக்கு. இதுக்கு முன்னாடி முதல் உலகப் போருக்கு அப்புறம்
League of Nations இருந்துருக்கு. இரண்டாம் உலகப் போர்ல அது
effective ஆக இல்லேன்னு தெரியுது; அப்புறம்தான் ஐ.நா. சபை வருது. ஐ.நா.
சபையே பத்தலேன்னு தெரியுது. மனிதர்கள் இன்னும் ஒட்டுமொத்தமா பார்க்க ஆரம்பிக்கலை,
அகத்தில் மாற்றம் நடக்கலை. அதை நோக்கின போக்கும் இருந்துக்கிட்டிருக்கு, அதுக்கு
எதிரான போக்கும் இருந்துக்கிட்டிருக்கு. அரசியல், சமூக அக்கறை எனக்கு மிகவும்
இருக்கு. அரசியலை விரிவான பின்னணியிலே, இன்னும் ஆழமா நிறையப் பேர் பார்க்க
ஆரம்பிக்கணும்கறதுதான் என்னோட ஆசை.
அதெல்லாம் ஏன் கவிதைல வரலேன்னு கேட்கலாம்; நியாயம்தான். ஆனா கவிதையில் ஒருத்தர்
என்ன எழுதணும், எழுத வேணாங்கறது எழுதறவரோட தனிப்பட்ட தேர்வுன்னு நினைக்கிறேன்.
என்னோட வாழ்க்கைல எவ்வளவோ நடக்குது. அதையெல்லாம் எழுதுறதில்லை. என் குடும்பத்துல
எவ்வளவோ நடக்குது, எழுதுறதில்லை. அதையெல்லாம் எழுதக் கூடாதான்னு கேட்டா தாராளமா
எழுதலாம், பிரமாதமா எழுதலாம், நான் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனா இதுக்கெல்லாம்
மிகவும் தொடர்பான விஷயங்கள் என் கவிதைல பேசப்பட்டிருக்கு. பெருமளவுக்குப் பார்வை,
பிரக்ஞை இயக்கங்கள் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கு. அரசியல் மாற்றங்கள், சமூக
மாற்றங்கள் இதனோட மூல வித்துக்கள் எங்கே விளையுதோ அங்கே இருக்கு என்னோட குவிமையம்.
என்னோட அக்கறை எல்லா இடத்திலேயும் இருக்கு. அக்கறையோட குவிமையம் அங்கே இருக்கு.
இந்த மாற்றங்கள் வரணும்ங்கறதுக்காகத்தான், இதனோட மூலக்கூறுகள் விளையற இடத்தைப்
புரிஞ்சுக்கறதுக்காகத்தான் எழுதறேன்.
உங்களோட கவிதைகளில் எந்தக் கவிதையில் இந்த அம்சங்களைப் பார்க்க முடியும்னு நீங்க
கேட்கலாம். உதாரணமா முதல் கவிதை 'யுத்தக் காட்சி'. ஞானக்கூத்தன் இது கவிதைதான்,
குடுங்கன்னு சொன்னார். அதோட முதல் வரியே 'இன்றைய யுத்தத்தில் தம் கட்சியினர்,
பகைவர் என்று இரு பிரிவுகள் இல்லை, ஒவ்வொருவரும் மற்ற அனைவருக்கும் பகைவனாக
இருக்கிறான்'. ஒரு சிறிய வட்டத்துக்குள்ள நடந்த சம்பவங்கள், அதுல ஈடுபட்டிருந்த
மனிதர்கள் எப்படி இயங்கினாங்கங்கறதை வெச்சுதான் அந்தக் குறிப்புகளை எழுதினேன்.
அதுவே என் னோட முதல் கவிதையாகவும் அமைந்தது. இது எழுதப்பட்டது 1971 வாக்கில். இதுல
சுவாரஸ்யமான விஷயம் 1976ல இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்சி டிக்ளேர் பண்றாங்க.
அது அமலில் இருந்தபோது, அப்ப டி.வி. இல்ல, வானொலிதான் முக்கியமான தகவல் தொடர்புச்
சாதனம். அப்ப வானொலியிலேயோ பத்திரிக்கையிலேயோ வர்ற விஷயங்கள் பூராவும் தணிக்கை
செய்துதான் வரும். எமர்ஜென்சி முடிஞ்சு ஓரிரு வருஷத்துக்கு அப்புறம் நான்
கேள்விப்பட்ட விஷயம் என்னன்னா, திருச்சி வானொலியில் யாரோ ஒருவர் - அவர் பெயர்கூட
எனக்குத் தெரியாது - நவீன கவிதையில் இன்றைய போக்குகள் அப்படிங்கிற மாதிரியான
தலைப்புல ஒரு கட்டுரை; அவர் வானொலியில் அந்தக் கட்டுரையைப் படிக்கிறதுக்கு முன்னாடி
தணிக்கை செய்தப்ப இந்தக் கவிதை
anti emergency ன்னு சொல்லித் தணிக்கை
செய்துட்டாங்க. அந்தக் கவிதையை நான் எழுதினப்போ என் மனசுல இந்திரா காந்தி கிடையாது,
சொல்லப்போனா இந்திரா காந்தி மனசுலேயே ஐந்து வருஷம் கழிச்சு
emergency கொண்டுவரணும்கிற எண்ணம் இருந்திருக்காது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னாடி
வேறெதுனாலேயோ எழுதப்பட்ட கவிதை, எமர்ஜென்சிங்கிற அரசியல் நிலையில் அதற்கு எதிரான
கவிதையாகக் கருதப்பட்டு விலக்கப்பட்டதுங்கறது, எந்த அளவுக்கு அதில் சொல்லப்பட்ட
விஷயங்களின் உட்கூறுகள் அரசியல் இயக்கத்தோடு தொடர்புடையதா இருந்து, வானொலி
கேட்கறவங்களோட மனதைத் தூண்டிவிட முடியும்னு அவங்க நினைக்கிற அளவுக்கு
இருந்திருக்குங்கறதைக் காட்டுது. வேற ஏதாவது கவிதையை எடுத்துக்கூடப் பார்க்க
முடியும்.
நான் சமூகம், புறம்னு எதையும் விலக்கலை. எல்லாத்தையும் கணக்கில்
எடுத்துக்கொண்டுதான் எழுதறேன். ஒரு ஏழை விவசாயியைப் பற்றி எழுதினா அது 'சமூக
அக்கறை'ன்னு சொல்றதெல்லாம் ரொம்பச் சிறுபிள்ளைத்தனமானது. ஏழ்மையால ஒருத்தன்
கஷ்டப்படறான், சாப்பாடில்லாம செத்துப்போயிட்டான்னு எழுதறதுதான் சமூக அக்கறைன்னு
சொன்னா, இவங்க சமூகம்ங்கறதையே ஏழ்மையோட மட்டும்தான் சம்பந்தப்படுத்திப்
பார்க்கறாங்களோன்னு தோணுது. இப்படிச் சொல்றவங்க சமூகம்னு சொல்றதோட முழு
அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிஞ்சுக்காம சொல்றாங்களோங்கிற எண்ணம்தான் எனக்கு
இருக்கு.
தொடர்ச்சி...
1
2 3
4
5
6
உள்ளடக்கம் |
|