மோகனரங்கன்: படைப்பைப் பற்றி ஒரு கோட்பாடு இருக்கு. எந்த ஒரு சாதாரண மனிதனும்
படைப்பு எழுச்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது அவன் வேறொருவனாகிறான்.
அதனால்தான் அவனே திரும்பவும் வாசகனாகும்போது நாம எழுதினதுதானான்னு தோன்றும்.
இதைத்தான் வேறு வேறு மாதிரி சொல்றாங்க; சரஸ்வதி நாக்கில் எழுதியதுன்னு சொல்றாங்க,
நகுலன் 'நான் எழுதவில்லை எனது பேனா எழுதுகிறது'ங்கிறார். படைப்புத் தருணத்தில் தான்
வேறொருவராக ஆயிடறதாத்தான் மேற்கிலும் சொல்றாங்க. ஒரு அபத்தமான, அசட்டுத்தனமான
மனிதனுக்குக்கூட அசாதாரணமான கணங்கள் இருக்க முடியுமா?
ஆனந்த்: ஏற்கனவே நாம பேசினது மாதிரி, பிரக்ஞை பல தளங்களைக் கொண்டது. நம்மோட
விழிப்புத்தன்மை சில கணங்களுக்குப் பரிச்சயமற்ற ஆழங்களுக்குப் பாய்ந்துவிட்டுத்
திரும்பி வர முடியும். அந்த மாதிரி நேரத்தை உள்னதமான கணம்னு சொல்ல முடியும். அந்தக்
கணத்தில் உள்ளுக்குள் இருக்கிற சில காட்சிகளை வெளிப்படுத்த முடியும். அது ஒரு
spell. அந்த spell முடிந்த பிறகு தான் எழுதினது என்னன்னு தனக்கேகூடப்
புரியாமல் இருக்க முடியும். ஆனால் ஒரு தடவை பார்த்திருக்கான் இல்லையா, அது ரசாயன
எதிர்வினைபோல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொஞ்ச நாள் கழிச்சு, கொஞ்ச வருடம் கழிச்சு
அப்ப பார்த்த காட்சி பிரக்ஞைபூர்வமான உணர்தலாகச் சென்று சேர்ந்திடும். தண்ணீருக்குள்
ஒரு பந்தைப் போட்டால் எப்படி இருந்தாலும் மேலே வருவது மாதிரி, உள்ளே பார்த்த அகக்
காட்சி (insight) கொஞ்சம் கொஞ்சமா அவனோட
personality யைப் பாதித்து
எப்பவோ பார்த்த காட்சியாக இல்லாமல், எப்பவுமே இருக்கிறதான, பார்க்கக்கூடியதான
நிலைமையை அவன் அடையலாம். அது அவனை அடைகிறதுன்னுகூடச் சொல்லலாம்.
மோகனரங்கன்: உங்களுடைய படைப்புகளை யாருக்காக எழுதுகிறீர்கள்? உங்களுக்காகவா? அல்லது
உங்களுக்குப் புறத்தே நீங்கள் இன்னும் சந்திக்காமல் இருக்கும் லட்சிய வாசகனுக்காகவா?
ஆனந்த்: நம் எல்லோருக்குள்ளும் 'நான்' என்கிற உணர்வு இருக்கும்; அங்கேதான் நாம்
நம்மை உணர்கிறோம். ஒவ்வொரு நானுக்கு முன்னாலும் ஒரு நீ இருக்கு. நாம் எல்லோரும்
அந்த 'நீ' கூடத்தான் பேசிக்கொண்டிருக்கோம். மற்றவங்ககிட்ட, வெளியில் உள்ளவங்ககிட்ட
பேசும்போதும் அந்த 'நீ'யோட ஏதோ ஒரு அம்சமாக அவங்களைப் பார்த்துத்தான் பேசறோம். ஒரு
அர்த்தத்தில் சொல்வதானால் என் கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிற முழு இருத்தலும்
(existence) என்னுடைய 'நீ'தான், அந்த 'நீ'யிடம்தான் பேசறேன்னு சொல்லணும். அந்த 'நீ'யிலிருந்து
விடுபட்டவங்க யாருமே இல்லை. ஆக, ஏதோ ஒரு அர்த்தத்தில் எல்லோருக்காகவும்தான் எழுதறேன்.
நான் சந்திக்காத லட்சிய வாசகன்னா அவன் எனக்குள்தான் இருக்க முடியும், எனக்குள் ஒரு
கருத்தாகத்தான் அவன் இருக்கான். ஆக, நான் சொல்லும் 'நீ' யாரையுமே, எதையுமே
விலக்கினதல்ல. குறிப்பிட்ட சாராருக்காக எழுதுறீங்களான்னு கேட்டால், அப்படியெல்லாம்
இல்லை. அப்படிப் பார்த்தால் நான் எனக்காகத்தான் எழுதிக்கறேன்னு சொல்லலாம்.
எனக்காகங்கிறதை விரிவான பொருளில் சொல்றேன், மற்றவங்களைப் பற்றி எனக்கு
அக்கறையில்லைங்கிற அர்த்தத்தில் சொல்லலை.
நம் உறவுகள் எல்லாமே ஒவ்வொரு நானுக்கும் ஏதோவொரு 'நீ'க்கும் உள்ள உறவுதான். 'நீ'
என்பது மனிதனாக இருக்கலாம், படிக்கும்போது புத்தகமாக, கேட்கும்போது இசையாக
இருக்கலாம், முழு இருத்தலாகவும்கூட இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நானும் ஏதோ ஒரு 'நீ'யோடுதான்
உறவுகொள்ளுது. அது காதலியாக, மனைவியாக, மகனாக, மகளாக, அப்பாவாக, அம்மாவாக, நண்பனாக
இருக்கலாம், அலுவலகத்தில் அதிகாரியாக இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதில் விஷயம் என்னவென்றால், வருகிற மனச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள் எல்லாமே
இந்த நானுக்கும் 'நீ'க்கும் இடையில் இருக்கும் சிக்கல்தான். இந்த 'நீ'யை எந்தச்
சூத்திரத்திற்குள்ளும் அடக்காமல் வைத்துக்கொண்டிருந்தால் உறவுகளிலெல்லாம் அதிகச்
சிக்கல் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு 'நீ' என்பது
இப்படித்தான் இருக்கணும்னு திட்டவட்டமாக இருக்கு. நாம் பார்க்கிற 'நீ'யில் இதனோட
பொருந்தாதவங்க மேலெல்லாம் நமக்குக் கோபம் வருது, எரிச்சல் வருது. இந்த 'நீ'யை எப்படி
எதற்குள்ளும் அடக்காமல் வைத்துக்கொள்வது? எந்தச் சூத்திரமும் இல்லாத 'நான்'
இருந்தால்தான் சூத்திரம் இல்லாத 'நீ'யை வைத்திருக்க முடியும். அப்பொழுது உறவுகள்
நிச்சயமாகச் சிக்கல்களும் முரண்பாடுகளும் நிறைந்ததாகத்தான் இருக்க முடியும். இந்த
நானோட சாரம் எந்தச் சூத்திரத்திற்குள்ளும் அடங்காது. இதை உணர்ந்துவிட்டால் மனிதனோட
'நீ' மற்ற யாரையும் எந்தச் சூத்திரத்திற்குள்ளும் அடக்கும் முயற்சியை எடுக்காது.
அப்படி இருந்தால் உறவென்பது மிகவும் படைப்பூக்கம் உள்ள இயக்கமாக இருக்கும்.
எதிர்பார்ப்புகள் இருக்காது; அதுக்காக மொண்ணையாக இருக்குமென்று அர்த்தமில்லை.
எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பதென்பது படைப்பூக்க அதிர்வோடுள்ள இயக்கம்.
எது படைப்பூக்கம் என்றால், என்ன நடக்கும் என்பது தெரியாமல், என்ன வரப் போகிறது
என்பது தெரியாமல் இருப்பதுதான் படைப்பூக்கம். சூத்திரங்களெல்லாம் இல்லாமல்
இருக்கும்போதுதான் நிஜமான படைப்பூக்கமுள்ளவையாக இருக்க முடியும். 'நான்' என்பதை
எந்தச் சூத்திரத்திற்குள்ளும் அடக்காத ஒருவர் நண்பனையோ தோழியையோ மனைவியையோ முழு
இருப்பையுமோ எந்தச் சூத்திரத்திற்குள்ளும் அடக்க முயற்சிப்பதில்லை. அப்பொழுது அந்த
உறவு படைப்பூக்கமுள்ளதாக, அதிர்வோடுள்ளதாக, ஒவ்வொரு நாளும் புதியதாக உள்ள ஒரு
இயக்கமாக இருக்கும். இதைப் பரிணாம ஓட்டத்தின் படைப்பூக்க இயக்கத்தைச் சேர்ந்த
விஷயமாகச் சொல்லலாம். யாருக்காக எழுதறேன் என்றால், நானையும் நீயையும் தனித்
தனியாகப் பிரிக்க முடியாது. ஒரு கொம்பு இரண்டு கிளைகளாகப் பிரிவதற்கு முன்னாடி
இருக்கும் கட்டத்தில் இரண்டும் ஒன்றாகத்தானே இருக்கு. அப்படி நானும் நீயும் ஒன்றாக
இருக்கும் இடத்தில்தான் எழுதும் முறைபாடு நடக்கிறது. 'நான்', 'நீ' இரண்டும் பிரிவு
ஏற்பட்ட பிறகு உள்ள தளத்தில் தோன்றிய எதிரெதிர் நிலைகள். சில சமயம் தோணுது -
எனக்குள்ளே இருக்கும் வாசகன் தான் படிக்க விரும்பறதை என் வழியா தானே
எழுதிக்கறான்னு.
மோகனரங்கன்: இலக்கியப் படைப்புகளில் ஆன்மீக நோக்கு என்பது இப்போது பரவலாகப்
பேசப்படுகிறது. உங்கள் எழுத்துக்களில் இத்தன்மை உண்டா? விளக்க முடியுமா?
ஆனந்த்: அக வளர்ச்சியில் பல இழைகளுண்டு. அதில் ஆன்மீகமும் ஒன்று. இந்தப் பல
இழைகளில் ஒன்றைவிட ஒன்று மேலானது, கீழானதுன்னு பார்ப்பது தப்பு. ஒவ்வொரு இழைக்கும்
அதற்கேயான முக்கியத்துவம் இருக்கத்தான் இருக்கு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த
இழைகள் இருக்கு. உண்மையில் இந்த இழைகள் மனிதப் பிரக்ஞை என்கிற பிரபஞ்ச ரீதியிலான
விஷயத்தில் உள்ள இழைகள்தான். சில மனிதர்களிடம் சில இழைகள் தூக்கலாகவும் சில இழைகள்
தொடங்காமலேயும்கூட இருக்க முடியும். ஆக, ஒரு குறிப்பிட்ட மனிதர் பிரபஞ்ச ரீதியிலான
விஷயத்தில் உள்ள பல இழைகளில் ஒரு இழையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றும்
சொல்லலாம். ஆன்மீகம் என்பது ஒரு குறிப்பிட்ட இழை. இலக்கியத்தைவிட ஆன்மீகம்
உயர்ந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த ஒரு இழையோட உச்சகட்ட வளர்ச்சியிலும்
ஒரு உன்னதம் உண்டு. ஆன்மீகத்தோட உச்சகட்டத்திலும் ஒரு உன்னதம் இருக்கு. நாம்
ஆன்மீகமென்று எதைக் குறிக்கிறோமோ அதனோட சுவடே இல்லாமல் சில உச்சங்களை ஒருவர் வேறு
இழைகள் மூலமாக அடைய முடியும். இசை மூலமாக அடைய முடியும். ஆன்மீகம் என்கிற சொல்
இன்றைக்குப் பல தளங்களில் அர்த்தப்படுகிறது. ஆன்மீகமென்றால் நாம் எதைக்
குறிக்கிறோம் என்று தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதனோட உயர்ந்த, விரிவான, ஆழமான
பொருளில் உன்னதத்தைக் குறிப்பதாக எடுத்துக்கலாம். எந்த இழையாக இருந்தாலும் அதனோட
உச்சத்தைக் குறிப்பதாக 'உன்னதம்' என்பதை வைத்துக்கொள்ளலாம்.
என் கவிதைகளில் ஆன்மீகச் சாயல் இருக்கிறதான்னு கேட்டால் எப்படிப் பதில் சொல்றதுன்னு
தெரியலை. யாராவது வந்து உங்கள் கவிதைகளில் ஆன்மீகம் இருக்கிறதுன்னு சொன்னால், அட
அப்படியான்னு கேட்டுப்பேன். விஷயம் என்னவென்றால், ஆன்மீகத்தைப் பின்னணியாகவோ
அடிப்படையாகவோ வைத்து எழுதணும் என்கிற எந்த விதமான முன்முடிவும் எனக்குக் கிடையாது.
சொல்லப்போனால் என் சிந்தனையிலும் என் எழுத்துக்களிலும் அந்தச் சொல்லை நான்
பயன்படுத்தறதே இல்லை. பயன்படுத்தாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அந்தச் சொல்
மிகவும் குறுகிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவதுதான். அந்த அர்த்தத்தில் அதை நான்
மறுக்கிறேன். அதனோட விரிவான, ஆழமான அர்த்தத்தில் சொல்வதானால், பரிணாம வளர்ச்சியில்
மனித இனத்துக்குக் கீழே பல உயிரினங்கள் இருக்கு; அவற்றுக்குத் தான் இருக்கோம்
என்பது தெரியாது, சுயப் பிரக்ஞை கிடையாது. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்துக்கு
வரும்போதுதான் பிரக்ஞை தன்னைத் தானே உணர்கிற கட்டம் வருவதாகச் சொல்றாங்க. பரிணாம
வளர்ச்சியில் இந்தக் கட்டத்தை அடைந்த பிறகு மனிதன் தன்னைச் சுற்றி உள்ளவற்றை அகல
விரிந்த கண்களோடு, ஆச்சரியத்தோடு பார்க்கிறான் என்றால், பிரபஞ்சம் தன்னைத் தானே
பார்த்துக்கொள்வதாகத்தான் அர்த்தம். ஏனென்றால் பிரபஞ்சத்தின் பரிணாமத்தில்தான் மனித
இனம் உண்டாகியிருக்கு.
ஆக, மனிதன் பௌதீக அளவிலும் இயக்கபூர்வமாகவும் பிரபஞ்சத்தோட மிகவும் வளர்ச்சியடைந்த
அங்கம்தான். ஆக, பிரபஞ்சம்தான் தான் இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கு,
பிரபஞ்சம்தான் தன்னத் தானே வியந்து கொண்டிருக்கு என்று சொல்லலாம். அந்த வியப்பு
ஆன்மீகம்தான் என்றால், அந்த ஆன்மீகத்தை நிச்சயமாக நான் வரவேற்கிறேன், அதை
முக்கியமான விஷயமென்று நினைக்கிறேன். ஆன்மீகம் எனும் சொல்லை உபயோகிக்காமலேயே அந்த
வியப்பு இருக்கலாம், எந்த விதமான நம்பிக்கைகளோ மத ரீதியான உணர்வுகளோ இல்லாமலே அந்த
உணர்வு இருக்கலாம். சொல்லப்போனால் இந்த வியப்பு, உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்டதுதான். இந்தக் கருத்துருவங்களில் இந்த வியப்புதான் முக்கியம்.
காலப்போக்கில் சில கருத்துருவங்களின் முக்கியத்துவம் போய் வேறு கருத்துருவங்கள்
வந்துவிடலாம். ஆனால் இந்த வியப்பு அசலானது. இதற்கு என்ன பெயர் சொன்னாலும் அதை நான்
வரவேற்கிறேன். இது குறுகிய வட்டத்திற்குள் இயங்குகிற மத உணர்வு சம்பந்தமானது
கிடையாது. என் கவிதையில் ஆன்மீக உணர்வுகள் இருக்கான்னு வாசகர்கள்தான் சொல்லணும்.
ஆனால் அந்த வியப்பு இருக்கே, அதை நான் பகிர்ந்துகொண்டுதான் இருக்கேன். சக
ஜீவன்களோடும் இந்தப் பிரபஞ்சத்தோடும் இந்த வியப்பைப் பகிர்ந்துகொண்டு இருக்கேன்னு
சொல்லலாம்.
மோகனரங்கன்: படைப்பாளிக்கு மரபோடு ஆக்கபூர்வமான தொடர்பு இருக்க வேண்டியது அவசியமா?
உங்கள் எழுத்தில் மரபை எந்த விதமாக எதிர்கொள்கிறீர்கள்?
ஆனந்த்: ஏற்கனவே வேறு சில விஷயங்களைப் பற்றிப் பேசும்போது பிரக்ஞை என்பது பல
தளங்கள் உள்ள ஒரு அமைப்புன்னு பேசினோம். மரபைப் பற்றியும் அதே கருத்தைத்தான் சொல்ல
விரும்பறேன். மரபென்று ஒரே ஒரு விஷயம் இருப்பதாகச் சொல்ல முடியாது. மரபென்பது பல
தளங்கள் உள்ள விஷயம். ஒரு அர்த்தத்தில் மரபுதான் பிரக்ஞை என்றே சொல்லிடலாம்.
மரபென்பது அடிப்படையில் நினைவுகள் சார்ந்தது. மரபென்பது வெளியில் உள்ள விஷயம்
கிடையாது. நம் பிரக்ஞைக்குள் இருந்து இயங்கிக்கொண்டிருப்பது மரபுதான். மனமும்
மரபும் வேறு வேறு கிடையாது. மரபுக்கும் ஒரு மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால்
அவனுடைய தற்கணத்திற்கும் அவனுடைய இறந்த காலத்துக்கும் அல்லது மனித இனத்தினுடைய
இறந்த காலத்துக்கும் உள்ள தொடர்புதான். இந்தத் தொடர்பு ஒவ்வொரு கணமும்
இருந்துகொண்டே இருக்கிறது. நாமாகத் தேர்ந்தெடுத்து மரபிலேருந்து நான் விடுபடுகிறேன்
என்கிற மாதிரி சொல்றது அர்த்தமில்லாத விஷயமாகப்படுது. மரபுடன் சரியான உறவை நமக்குள்
எப்படி வைத்துக்கொள்வது என்பதுதான் விஷயமே. மரபுடைய அடிமையாக, அதாவது நினைவுகளுடைய
அடிமையாக, இறந்த காலத்தோட அடிமையாக இருக்க முடியும். அப்படி இருக்கும்போது அந்த
மனம் இந்தக் கணத்தில் வாழவே இல்லன்னு சொல்லிடலாம். அந்த மனத்திலிருந்து புதிதாக
ஒன்றுமே வரப்போவதில்லை. ஏற்கனவே இருக்கிற விஷயங்களுடைய மாறுபட்ட அமைப்பாகத்
திரும்பத் திரும்ப எதாவது செய்து கொண்டிருக்கலாம், ஆனால் அதைப் புதியதென்று சொல்ல
முடியாது. மரபை விட்டுவிட்டு ஓடிப் போயிடறதுங்கறது கிடையவே கிடையாது. அது வெறும்
ஒரு idea. ஏனென்றால் மரபை விட்டுட்டு ஓடிப்போகும் ஒருவனுக்குத் தான் இருப்பதே
தெரியாது.
ஒரு மனிதனின் உளவியல் பின்னணியே மரபுதான். அவன் அதனுடன் எப்படி உறவுகொள்கிறான்
என்பதுதான் விஷயம். அது ஆரோக்கியமான, பிரக்ஞைபூர்வமான உறவாக இருக்கிறதா அல்லது அவன்
அதற்குப் பிரக்ஞையற்ற அடிமையாக இருக்கிறானா என்பதைப் பற்றி மட்டும்தான் பேசவே
முடியும். முக்கியமாக எந்த விதமான கலை வெளிப்பாடும் - இந்த இடத்தில் கலை வெளிப்பாடு
என்பதைக் கொஞ்சம் விரிவான பொருளில் எடுத்துக்கொள்ளலாம்; ஆங்கிலத்தில்
artist, artisan என்று இரண்டு சொற்கள் உண்டு; இரண்டையும் எடுத்துக்கலாம். இதில்
கைவினைக் கலை என்பதையும் எடுத்துக்கலாம் - இது மரபு சார்ந்த விஷயமாகத்தான் இருக்கு.
மரபு சார்ந்தது என்பதால் புதியதாக எதுவும் வந்துவிடாது என்பதல்ல. மரபுடன் இந்தக்
கணத்தில் எனக்குள்ள உறவு இயக்கபூர்வமானதாக இருந்தால், அந்த எதிர்கொள்ளலில் புதியதாக
ஒன்று வர முடியும். மரபுடைய வாசனையே இல்லாமல் ஒருவருக்கு ஒரு உள் எழுச்சி வருகிறது
என்றாலும் அதை வெளிப்படுத்துவது - தன் பிரக்ஞைக்குத் தெரிவதற்கும் மற்றவர்களுக்குத்
தெரியப்படுத்துவதற்கும் - மரபின் கட்டமைப்புக்குள் மட்டும்தான் சாத்தியமாகிறது.
இல்லையென்றால் வெளிப்படுத்தவே முடியாது.
ஐசக் நியூட்டன் என்று நினைக்கிறேன், அவரைப் பற்றி எல்லோரும் ஆகா ஓகோன்னு சொன்னபோது,
எனக்கு முன்னாடி இருந்தவங்களுடைய தோள் மேல் நின்றுதான் நான் பார்க்கிறேன்னு
சொன்னார். அவங்களைவிட உயரத்தில் இருந்து அதிக தூரத்திற்கு இவரால் பார்க்க முடியும்,
ஆனால் அவங்க இல்லேன்னா இவரால் இப்போ பார்த்த காட்சியைப் பார்த்திருக்க முடியாது.
விஞ்ஞானத்திற்கும் ஒரு மரபு இருக்கு. எந்த விதமான மனம் சார்ந்த வெளிப்பாடாக
இருந்தாலும் அதற்கு மரபும் அதன் தொடர்ச்சியும் இருக்கும். புதிதுபுதிதாக வர வர மரபு
வளர்ந்துகொண்டே போகிறது. மரபுக்கு எப்பவுமே தொடர்ச்சி இருக்கும். மரபு தொடர்ந்து
வரணும்னா அதில் புதிதுபுதிதாகச் சேர்ந்துகொண்டே இருக்கணும், இல்லையென்றால்
தேக்கம்தான். புதிதாக ஒன்றும் வரலேன்னா அது தேங்கிப்போன குட்டை மாதிரி
இருக்கப்போகுது. தற்கணத்தோட இறந்த காலத்துக்கு ஒரு படைப்பூக்கமுள்ள, இயக்கபூர்வமான
கொடுக்கல் வாங்கல் இருந்தால்தான் மரபென்பது வரும். இதில் மரபென்பது வேண்டுமா
வேண்டாமான்னு விவாதம் பண்றது இந்த விஷயத்தோட தீவிரத்தையும் ஆழத்தையும்
புரிந்துகொள்ளாமல் செய்கிற விவாதமாகப்படுது. உங்கள் கேள்வியின் இரண்டாம் பகுதி,
மரபை நீங்கள் உங்கள் எழுத்துக்களில் எவ்விதமாக எதிர்கொள்கிறீர்கள்? மரபை
எதிர்கொள்வது என்பது திட்டமிட்டுச் செய்வதல்ல. வாழ்தலிலேயே ஒவ்வொரு கணமும் மரபை
எதிர்கொள்கிறோம். மரபோட பல தளங்களை நனவிலி மனத்தில் எதிர்கொள்கிறோம். சில சமயத்தில்
பிரக்ஞைபூர்வமாக மற்றவங்களிடமிருந்து மரபு நம்மை எதிர்கொள்கிறதுன்னு சொல்லலாம்.
எழுதுவதில் மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பாக்க முறைபாட்டிலும் நனவு மனத்தின் பங்குதான்
மிக மிகக் குறைவானது. அந்தப் படைப்பாக்க வெளிப்பாட்டில் நிச்சயமாக மரபுக்கு ஒரு
செயல்பாடு உண்டு. மரபு ஒரு படைப்போட ஊற்றுக்கண்ணாக இருக்க முடியாது. ஆனால் அதனுடைய
வெளிப்பாட்டில் மரபுடைய அங்கம் தவிர்க்க முடியாததுன்னு சொல்லணும். அதனால் நான்
மரபுன்னு தனியா வெச்சிக்கிட்டு பிரக்ஞைபூர்வமா எதுவும் செய்வதில்லை. மரபுங்கறதை
எப்போ discourage செய்யணும்னா, இறந்தகால மனப் பதிவுகளுடைய அடிப்படையில்
மட்டுமே இருக்கிற மரபு, தற்கணத்தோட ஆழத்தையும் விரிவையும் தன் சட்டகத்திற்குள்
அடக்கிட முடியும் என்கிற நம்பிக்கையில் வரும் விஷயமெல்லாம் ஆழமில்லாமலும்
நீர்த்தும் போயிடுது - இந்த அர்த்தத்தில் மரபோட இந்தச் செயல்பாடு தவிர்க்கப்படணும்.
உண்மையில் மரபும் தற்கணமும் சந்திக்கும் புள்ளியில்தான் ஒரு படைப்பாக்க வெளிப்பாடு
வர முடியும். இந்த அர்த்தத்தில் மரபின் பங்கு முக்கியமானதென்று சொல்லணும்.
தொடர்ச்சி...
1 2
3
4
5
6