Google   www kalachuvadu.com

"கேள்வி என்பது தன்னைத் தானே தேடிக்கொண்டிருக்கும் பதில்"

நேர்காணல்: ஆனந்த்

சந்திப்பு: க. மோகனரங்கன், ரவி
புகைப்படங்கள்: புதுவை இளவேனில்

க. மோகனரங்கன்: கலை, இலக்கியம் போன்றவற்றின் அறிமுகம் இல்லாமலே ஒரு சராசரி மனிதன் தன்னளவில் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாதா?

ஆனந்த்: வாழ்க்கைங்கிறது அடிப்படையில் உறவு சார்ந்த விஷயமாகத்தான் இருக்கு. உறவுங்கறதுக்கு மூன்று தளம் இருக்குன்னு சொல்லாம். ஒரு மனிதன் மற்றவங்களோடேயும் மற்றதோடேயும் (புத்தகம், இசை போன்றவற்றோடு) வைத்துக்கொள்கிற உறவு; அப்புறம் தனக்குள்ளே தனக்குத் தானே வைத்துக்கொள்கிற உறவு; இன்னொன்று, தான் அறியாததோடு தனக்கு இருக்கிற உறவு - அதாவது தனக்குத் தெரியாததோடு தனக்கு இருக்கும் உறவு. 1. அறிந்தது - வெளியில் உள்ள விஷயங்கள் 2. தனக்குத் தானே வைத்திருக்கிற உறவு 3. தன்னை மீறிய தனக்குத் தெரியாத ஏதோ ஒன்றோட- பிரபஞ்சமென்றால் என்ன என்று தெரியாது - அதாவது unknown கிட்ட உள்ள தொடர்பு - இப்படி மூன்று தளங்கள்ல இருக்குன்னு சொல்லலாம். இதில் முதலாவதும் கடைசியும் ரொம்பத் தெளிவான விஷயங்கள். தன்னோட தனக்கு இருக்கிற உறவில் இந்த இரண்டு விஷயங்களோட கலவையும் இருக்கு. ஏன்னா ஒரு மனிதனுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்த பகுதிகள், தெரியாத பகுதிகள் இரண்டுமே இருக்கு. முதலாவதையும் மூன்றாவதையும் தெளிவாகப் பிரிக்க முடியும், இரண்டாவதைத் தெளிவாகப் பிரிக்க முடியாது. தனக்குத் தானே வைத்திருக்கும் உறவுங்கிறது ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மூன்று தளங்களுக்கும் மையமாகச் செயல்படுவதாகச் சொல்லணும். ஆக தனக்குத் தானே இருக்கிற உறவில் எந்த அளவுக்குத் தெளிவிருக்கோ அந்த அளவுக்குத்தான் பிறரோடும் பிறவற்றோடும் -சக மனிதர்களோடு, படிக்கும் புத்தகத்தில் வரும் ஒரு கருத்தோடு, கவிதையோ நாவலோ எழுப்பும் அலைகளை எதிர்கொள்வதில், மேலும் அறியாததோடு உள்ள உறவில் தெளிவு இருக்கும். அதைவிட அதிகமாக இருப்பதற்கு சாத்தியமே கிடையாது.

இப்போ உங்க கேள்வியைத் தன்னோடு இருக்கும் உறவில், தனக்குத் தானே இருக்கிற உறவில் தெளிவு ஏற்படுவதற்கு கலை, இலக்கியமெல்லாம் உதவி செய்ய முடியுமான்னு கேட்பதாக எடுத்துக்கொண்டால் பெருமளவுக்கு உதவி செய்ய முடியும். ஆனா இதெல்லாம் இல்லாமல் ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ முடியாதா என்றால், அப்படியெல்லாம் எதைச் சார்ந்தும் இல்லை. நிறைவான வாழ்க்கைங்கிறது உள்ளுக்குள் தன்னைப் பற்றித் தனக்கே ஏற்படும் தெளிவு. இந்தத் தெளிவு ஏற்படுவதுங்கிறது வாழ்வு முழுக்கவே நடந்துகொண்டிருக்கும் ஒரு முறைபாடு (process). எதுவொன்றையும் நம்பி இல்லை. உங்க கேள்விக்குப் பதில் ஆமாம்னு இருந்தால், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் நிறைவான வாழ்க்கை வாழவில்லைங்கிற மாதிரி விபரீதமான அர்த்தத்துக்குக் கொண்டுபோய்விடும். நல்ல காலமாக அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எழுதப் படிக்கத் தெரியாமல் ரொம்ப நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் இருக்காங்க. கலை, இலக்கிய ஈடுபாடு, ரசனை இதுவெல்லாம் நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு உதவிகரமாக இருக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் இந்த விஷயங்கள் தன்னைத் தானே புரிந்துகொள்வதற்குப் பெரும் தடையாகவும் இருக்க முடியும். இதுவரை நான் சந்தித்த மனிதர்களில் இதெல்லாம் தடையாக இருப்பவர்கள்தான் அதிகம். இதில் கலை, இலக்கிய உலகத்திற்கு உள்ளே இருப்பவர்களும் இருக்காங்க, வெளியில் இருப்பவர்களும் இருக்காங்க. ஆக இதைச் சார்ந்து, இதை நம்பி நிறைவு என்பது இல்லவே இல்லை.

ரவி: நீங்கள் சொன்னதில் இருந்து எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக் கலை, இலக்கியம் கிடையாதுங்கிற முடிவுக்கு ஒருவர் வந்துவிட முடியும். எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் மிகச் செழுமையான கலை, இலக்கிய வடிவங்கள் இருந்திருக்கு. நம்மோட வாய்மொழி மரபில் தாலாட்டு, ஒப்பாரியெல்லாம் இருந்திருக்கு. சொல்லப்போனால், இன்றைக்கு இருப்பதைவிட அதிக நேர்மையோடும் பாசாங்கில்லாமலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கலை இலக்கியத்தோடு வாழ்ந்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாகத் தோன்றுகிறது. இங்கே எழுத்து வடிவ இலக்கியத்தை மட்டும்தான் குறிப்பிடுகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆனந்த்: என் பதிலில் கலை, இலக்கிய ஈடுபாடு என்பதோட அர்த்தத்தைக் குறுக்கிவிட்டேன்னு தெளிவாகத் தெரியுது. எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் இருந்த கதை மரபையும் இலக்கியத்தில் சேர்த்துக்கணும். எழுதப்படிக்கத் தெரிவதை ஒரு தகுதியாக எடுத்துக்கணும்ங்கிற அவசியமில்லை. ஆனால் நான் சொன்ன பதிலின் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. இதை நம்பி இருக்கிறதா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. முதன்முதலாக நிறைவை உணர்ந்த மனிதனுக்கு யார் கதை சொல்லி இருப்பார்கள்? எங்கேயோ ஆரம்பித்திருக்கிறதில்லையா பரிணாம வளர்ச்சியில் யாரோ ஒரு மனிதன் முதன் முதலாக நிறைவான வாழ்க்கையை அனுபவித்திருப்பான் என்று எடுத்துக் கொண்டால், அவனுக்கு யாரும் கதை சொல்லியிருக்கமாட்டார்கள். சொல்லப்போனால் அவன்தான் முதல் கதாசிரியனாக இருந்திருப்பான், முதல் கலைஞனாக இருந்திருப்பான் என்றும் சொல்லலாம். ஆனால் நிறைவான வாழ்க்கையின், நிறைவான பார்வையின் வெளிப்பாடாக உன்னதமான கலை, இலக்கியங்கள் உருவாக முடியும். நிறைவான வாழ்க்கை என்பது கலை, இலக்கியத்தை நம்பி இல்லை. கலை, இலக்கியம் நிச்சயம் உதவிகரமாக இருக்க முடியும், அவரவர் மனப்பாங்கைப் பொறுத்துத் தடையாகவும் இயங்க முடியும்.

ரவி: நிறைவான பார்வை, நிறைவான வாழ்க்கை என்பதைக் கலைஞனுக்கான அடிப்படைத் தேவை, தகுதி என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஆனந்த்: நிறைவான பார்வை, நிறைவான வாழ்க்கை இருந்தாத்தான் ஒரு உன்னதமான கலைப் படைப்பை உருவாக்க முடியும்கிற மாதிரி நிச்சயமாகக் கிடையாது. ஆனால் நிறைவான பார்வை, நிறைவான வாழ்க்கை இவற்றுக்கும் கலைப் படைப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா என்று கேட்டால், நிச்சயம் ரொம்ப ஆழமான ஒரு தொடர்பு இருக்கு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நிறைவான வாழ்க்கை இல்லைன்னுதான் சொல்லணும். ஆனால் அதி உன்னதமான கலைப் படைப்புகளும் வந்திருக்கு. என்ன தொடர்பென்று பார்த்தால், நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் பல பேரும் இந்த நிறைவான வாழ்க்கை என்பதைப் பற்றிய பிரக்ஞையேகூட இல்லாமல் இருக்கிறார்கள் இல்லையா, அந்த மாதிரியான மனப்பாங்கிலிருந்து ஒரு உன்னதமான கலைப் படைப்பு என்றைக்குமே வராதுன்னு சொல்லலாம். நான் நிறைவான வாழ்க்கை வாழாமல் இருக்கலாம், ஆனால் நிறைவான வாழ்க்கை என்கிற குறிக்கோளோடு வேலை செய்துகொண்டிருக்கணும். என்னோட நிறைவற்ற வாழ்க்கையை அந்தக் குறிக்கோளின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தும்போது, நிறைவற்ற வாழ்வின் நிஜமான வெளிப்பாடு உன்னதமான கலைப் படைப்பாக ஆவதற்குச் சாத்தியமிருக்கிறது. நிறைய படைப்புகள் அந்த மாதிரி வந்திருக்கின்றன. ஐரோப்பியப் படைப்புகளில் பயங்கரமான மனோரீதியான பிரச்சினைகளெல்லாம் அற்புதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ப்ளெய்ஸ் ஸெண்ட்ராஸ்னு ஒரு எழுத்தாளர்; அவருடைய சில புத்தகங்களை 1970களில் படித்தபோது மிக ஆழமாகப் பாதிச்சிருக்கு. அதையெல்லாம் நிறைவான வாழ்க்கை என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைவான வாழ்க்கை என்கிற குறிக்கோள் இருந்து, அதனோட வெளிச்சம் உள்ளே இருந்தால், அது மங்கிய வெளிச்சமாக இருந்தால் கூட, அந்த வெளிச்சத்தில் நிறைவற்ற வாழ்க்கை பற்றி ஒரு நிறைவான பார்வை இருக்க முடியும். இந்த நிமிடம் என்னோட வாழ்க்கை நிறைவான வாழ்க்கை அல்ல. ஆனால், இந்த நிறைவற்ற வாழ்க்கையை இந்த நிமிடம் நிறைவான ஒரு பார்வையோடு பார்க்க முடியும். பார்வை நிறைவான பார்வையாக இருந்தால், நிறைவற்ற வாழ்க்கை பற்றிய பதிவுகள் நிச்சயமாக உன்னதமான கலை வெளிப்பாடாக வர முடியும். நிறைவு என்பதற்கும் உன்னதமான கலை வெளிப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. நிறைவு என்பதைப் பற்றிய அக்கறையே இல்லாதவர்கள் அநேகமாகக் கலை, இலக்கியத்திற்கெல்லாம் வரவேமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிக்கைகளைப் படித்துவிட்டுத் தப்பித்துப் போய்க்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் வருகிறார்கள் என்றாலே பிரக்ஞைபூர்வமாகவோ பிரக்ஞையின் அடித்தளங்களிலோ ஒருவிதத் தேடல் இருக்கும்.

மோகனரங்கன்: சமூகத் தளத்தில் லௌகீக விஷயங்களில் அதிருப்தி இருக்கிறது. எல்லோரும் ஏதோ பிரச்சினையோடுதான் இருந்துகொண்டிருக்கிறோம். இதோடு சந்தோஷங்களும் இருந்துகொண்டிருக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதாக இல்லாமல், இந்தச் சிக்கல்களோடும் பிரச்சினைகளோடும் வாழ்க்கையைச் செழுமைப்படுத்திக்கொள்ளக் கலை, இலக்கியம் நமக்கு ஏதோ ஒரு பாதையைக் காட்டுகின்றன. ஏதோ ஒரு நிறைவுக்கு உதவுகின்றன. கலை, இலக்கிய அறிமுகம் இல்லாத ஒருவருக்குத் தன்னோட வாழ்விலிருந்தே ஒரு உந்துதல் ஏற்பட்டு வேறெதன் மூலமாகவாவது கலை, இலக்கிய அறிமுகம் உள்ளவர் போய்ச் சேரக்கூடிய இடத்தை அடைய முடியுமா?

ஆனந்த்: நிச்சயமாக முடியும். நிறைவை அடைதல் என்பது எந்தவொரு குறிப்பிட்ட துறையையும் சேர்ந்ததல்ல. நாம் பேசினது லௌகீகத் தளத்தோடு குறுகிடற விஷயமல்ல. உங்க கேள்வியில் 'அதிருப்தி'ங்கிற சொல்லை உபயோகிச்சீங்க. அது ரொம்ப முக்கியமான சொல். மேலோட்டமான அளவில் நிறைய அதிருப்தி இருக்க முடியும். எனக்குக் கார் வாங்கணும்னு ஆசை, ஆனால் வசதியில்லை என்கிற மாதிரி அதிருப்தியைப் பற்றி நாம் பேசவில்லை. 'அக வளர்ச்சி', 'அக முதிர்ச்சி' இதிலெல்லாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி, முதிர்ச்சி ஏற்படும்போதுதான் ஒருவருக்கு 'அதிருப்தி'யே ஏற்பட முடியும். அதிருப்தி ஏற்படுவது பாதகமான அம்சம் கிடையாது. ஒருவருக்கு நிஜமான அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் தனது வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறார் என்று அர்த்தம். மேலோட்டமான அதிருப்திக்கும் ஆழமான, உண்மையான அதிருப்திக்கும் வேறுபாடு உண்டு. மேலோட்டமான அதிருப்திகள் அனைத்தும் திருப்தியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும். கார் வாங்கும் வசதி வந்தால் அந்த அதிருப்தி போய்விடும். அழகான மனைவி வேண்டும் என்று ஒரு இளைஞன் நினைக்கிறான்; அழகான பெண் கிடைத்தால் திருப்தி வந்துவிடும். ஆனால் அந்த அதிருப்தி வேறொன்றுக்குப் போய்விடும்; மேனேஜராகணும்னு நினைப்பான். இப்படியே இந்த அதிருப்தி மாறி மாறிப் போய்க்கொண்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு குறிப்பிட்ட அதிருப்தியும் திருப்தியடைந்துவிட முடியும்.

இந்த மேலோட்டமான அதிருப்தியெல்லாம் ஆழமான அதிருப்தியோட பிரதிபலிப்புகள்தான். ஒருவருக்கு ஒரு அளவுக்கு 'அக முதிர்ச்சி' ஏற்படும்போதுதான் உள்ளேயிருக்கிற அதிருப்தியை நேரடியாக உணரவே ஆரம்பிக்கிறார். உணர ஆரம்பித்துவிட்டால் பிரக்ஞையோட அகவிரிதலில் முக்கியமான கட்டத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லலாம். அந்த அதிருப்தியை உணர ஆரம்பித்த பிறகு, அந்த அதிருப்தி திருப்தியை நோக்கிப் போவதில்லை. கார் கிடைத்துவிட்டால் அந்த அதிருப்தி திருப்தியாகுது இல்லையா, அந்த மாதிரி இந்த அதிருப்தி திருப்தியாக ஆவதில்லை. அக வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களில் இந்த அதிருப்தி இல்லாமல் போய்விடும். 'அதிருப்தி' ஏன் அக வளர்ச்சியில் முக்கியமான கட்டம் என்றால், அந்தக் கட்டத்துக்கு முன்னாடி வரையிலும் புற உலகை நோக்கி, புற உலகின் விஷயங்களை நோக்கிப் போய்க்கொண்டிருந்த பிரக்ஞையோட்டம் இந்த அதிருப்தியை உணர ஆரம்பித்த உடனே உள்நோக்கிப் பாய ஆரம்பிக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் ஒருவருக்குத்தான் இருக்கிறோம் என்பதே தெரியும். இதில் ஒரு துன்புறுதல் இருக்கு. இது எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சார்ந்த துன்புறுதல் இல்லை. யாரோ என்னை விட்டுப் போயிட்டாங்க, என்னை யாரோ ஏமாத்திட்டாங்க, சொத்து போயிடுச்சு, இதனாலெல்லாம் வருகிற குறிப்பிட்ட துன்பம் அல்ல.

மனித இருப்பிலேயே, மனித இயல்பிலேயே ஒரு அடிப்படையான துன்பம் இருக்கு. நாம் யார்? இது எந்த இடம்? நாம் ஏன் இங்கே இருக்கோம்? இதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது இல்லையா, இதுதான் பெருமளவிற்கு இந்தத் துன்பத்தின் அடிப்படை. நிறைய லேபிளெல்லாம் ஒட்டிக்கொண்டு தெரிந்த மாதிரிப் பாசாங்கு செய்துகொண்டிருக்கோம். நிஜமாக இந்த இடத்தைப் பற்றின பிரக்ஞை உணர்வு வர ஆரம்பிக்கும்போது, குறிப்பிட்ட எந்தக் காரணமும் இல்லாத, நேரடியாக இருப்பு சம்பந்தப்பட்ட துன்பம் ஒன்று இருப்பது தெரிய ஆரம்பிக்கும். இது தெரிய வந்தப்புறம்கூட ஒருவர் இந்தத் துன்பத்திலிருந்து பல வருடங்களுக்குத் தப்பித்துத் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் அங்கே வந்து சேர்ந்துதான் ஆகணும். சீக்கிரமாக வருவதும் தாமதமாக வருவதும் அவங்கவங்களோட மனப் பக்குவம் சார்ந்தது. அங்கே வந்து சேரும்போதுதான் இந்த இருப்பைப் பற்றிய, தனது சுயத்தைப் பற்றிய, பிரபஞ்சத்தோட இருப்பைப் பற்றிய, அதில் தன்னுடைய இருப்பைப் பற்றிய அடிப்படையான கேள்விகள் வர முடியும். புத்தகத்தைப் படித்துவிட்டோ மத குருமார்கள் பேசுவதைக் கேட்டுவிட்டோ வருகிற கேள்விகளைப் போலல்லாமல், நிஜமாக உள்ளுக்குள் உணர்வுபூர்வமாக இந்தக் கட்டத்தில்தான் இந்தக் கேள்விகள் வர முடியும்.

'அதிருப்தி' வருவது அக வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம். அதுக்குப் பிறகுதான் அவனுக்குள் ஒரு 'அக மலர்ச்சி' ஏற்படுவதற்கான சாத்தியமே ஆரம்பிக்கிறது. இதற்குப் பிறகுதான் அவனுக்குள் வெளிச்சம் நுழைய முடியும். அப்போதான் இருட்டு இருக்குங்கறதே தெரிய ஆரம்பிக்கும். இருட்டில் கண்களை மூடிக்கொண்டு மன வெளிச்சத்தில் வாழ்ந்தது போய், நிஜமான இருட்டு இருக்கு, வெளிச்சம் இல்லையென்று தெரிந்து, அந்த இருட்டைப் பயமில்லாமல், துக்கமில்லாமல் நேரடியாக எதிர்நோக்கி, ஆமாம், இருட்டு இருக்குன்னு ஒத்துக் கொண்டால்தான் வெளிச்சம் வருவதற்கான சாத்தியமே தொடங்கும். கலை, இலக்கியம் இதெல்லாம் இந்த அதிருப்தியைத் தூண்ட முடியும். ஒரு உன்னதமான நாவல் ஒருவருக்குள் இந்த அதிருப்தியைத் தூண்ட முடியும். ஆழமான ஒரு தேடலைத் தொடங்கிவைக்க முடியும். ஆனால் அந்த நாவலைப் படிக்கிற எல்லோருக்கும் அது நிகழ்ந்துவிட முடியுமா என்றால், இல்லை. ஏனென்றால் ஒரு கட்டம்வரைக்கும் இந்த அக வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் ஏதோ ஒரு தூண்டுதலில்தான் அடுத்த கட்டத்திற்குப் போகிறது. தூக்கம் கலைந்து தட்டி எழுப்பக்கூடிய பக்குவத்தில் ஒருத்தன் இருப்பான்; ஆனால் அவன் தூங்கிக்கொண்டுதான் இருப்பான். உள்மனம் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கு. தயார் நிலையில் இருக்கிற மனத்தை, அதாவது மேலோட்டமாக அதிருப்திப்பட்ட விஷயங்கள் பலதும் கிடைத்திருக்கு. இதைத் தாண்டியும் ஏதோ ஒரு அதிருப்தி இருப்பது அவனுக்குத் தோன்றிக்கொண்டு இருக்கும்போது, ஒரு நாவல் அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தால், இருப்பிலேயே இருக்கிற, நனவிலியில் உள்ள இந்த அதிருப்தியைப் பிரக்ஞைபூர்வமாக ஆக்கிவிட்டுடும். இப்படி நனவிலியில் உள்ளதைப் பிரக்ஞையின் தளத்துக்குக் கொண்டுவருவதற்கு ஒரு நல்ல நாவலோ ஒரு இரண்டு வரிக் கவிதையோ டக்கென்று வாசலைத் திறந்துவிட்டுவிட முடியும். நல்ல எழுத்தினாலோ நல்ல ஓவியத்தினாலோ நல்ல சிற்பத்தினாலோ இந்த எழுச்சி உள்ளுக்குள் ஏற்பட முடியும். அந்தக் கட்டத்தில் தயாராக இருக்கும் மனங்களை ஒரு மோசமான புத்தகம் ஒன்றும் செய்யாது.

ஆக, தயாராக இருக்கும் மனப் பக்குவம், உன்னதமான கலைப் படைப்பு இரண்டும் சேரும்போது ஏதோ ஒரு எழுச்சி, ஏதோ ஒரு விழிப்பு ஏற்படுகிறது. இந்த எழுச்சியை ஒரு வகையில் ஒரு தனிமனிதனுக்குள் ஏற்படும் எழுச்சியாகவும் பார்க்க முடியும். இன்னொரு விதத்தில் பிரபஞ்சத்தில் ஏற்படும் எழுச்சியாகவும் பார்க்க முடியும். தனிமனிதனுக்குள் ஏற்படும் எழுச்சி பிரபஞ்சத்தில் ஏற்படுகிற எழுச்சிதான். பரிணாமத்தில் அடுத்த கட்டத்திற்குப் போகிற எழுச்சி முதலில் ஒரு குரங்குக்கு ஏற்பட்டு இரண்டு கால்களில் நிற்பது அந்தக் குரங்குக்கு மட்டும் ஏற்படுகிற எழுச்சிதான் என்றால் அந்தக் குரங்கு செத்துப்போன உடனே அந்த விஷயம் முடிந்துபோயிருக்கணும். ஆனால் அது பிரபஞ்ச ரீதியான வளர்ச்சி. அது ஒரு தனிப்பட்ட குரங்கு மூலமாக நடக்கிறது. ஆக, அது பிரபஞ்ச ரீதியானதும்தான், தனிப்பட்டதும்தான், இரண்டும்தான். அந்தப் பக்குவம் உள்ள மனம், அது சந்திக்கும் உன்னதமான கலைப் படைப்பு இந்த இரண்டும் சந்திப்பதை ஒரு பிரபஞ்ச நிகழ்வென்றேகூடச் சொல்லலாம்.

தொடர்ச்சி...   1   2   3   4   5   6

உள்ளடக்கம்

Google Ads.....


Google