Google   www kalachuvadu.com

தலையங்கம்

முன்தேதியிட்ட அராஜகம்

உரிமைக் குரலுக்கு உரிய கௌரவம்

அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் அரசு அமைப்பு எதிலும் ஆதாயம் தரக்கூடிய வேறு பதவி எதையும் வகிக்கக் கூடாது என்ற சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள மசோதா தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தனது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்தச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சில விளக்கங்கள் கேட்டுத் திருப்பி அனுப்பியிருந்தார். ஆனால், எவ்விதத் திருத்தமும் இல்லாமல் மீண்டும் அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு மைய அரசு அனுப்பியுள்ளது. இதன் மூலம் இரண்டாம் முறை அனுப்பப்பட்டால் ஒப்புதல் அளித்துத்தான் ஆக வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியைக் குடியரசுத் தலைவருக்கு எற்படுத்தியது. அவர் இந்த மசோதாவுக்குத் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் அதிகாரச் சமன்பாடு தரும் பலத்தைத் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குடியரசுத் தலைவரின் ஆட்சேபணைகளைப் புறக் கணித்துவிடலாம். ஆனால், இதை ஒட்டிய சர்ச்சை எழுப்பும் கேள்விகளை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.

காங்கிரஸ் கட்சி இச்சட்டத்தைப் பயன்படுத்தி சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஜெயா பச்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்ததையடுத்து பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதே சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தின. நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகிய இரு பதவிகளை சோனியா காந்தி வகிப்பது குறித்து இவை குரல் எழுப்பின. இந்தச் சர்ச்சையிலிருந்து தப்பிக்க சோனியா ராஜினாமா என்ற தந்திரத்தைக் கையாண்டார். அதனால் அவர் மீண்டும் ஒருமுறை தியாகி ஆக்கப்பட்டார். ஜெயா பச்சனும் சோனியாவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் மக்களவைச் சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி உள்பட சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பது தெரியவந்ததால் தற்போது அரசே கவிழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயந்த காங்கிரஸ் அரசு, இந்தச் சட்டத்தைத் திருத்த முனைந்தது. சில பதவிகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதாவைக் கொண்டுவந்தது. இந்த மசோதாவை முன்தேதியிட்டுச் சட்டமாக்க அரசாங்கம் செய்துள்ள முடிவு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. தங்கள் உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பாற்ற இடதுசாரிக் கட்சிகளும் இந்த ஜனநாயகப் படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட தடா, பொடோ போன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பிறகு வரும் அரசுகள் ரத்துசெய்திருக்கின்றன. ஆனால் அந்தச் சட்டங்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்துசெய்வதோ சாதாரணச் சட்டங்களின் கீழ் கொண்டுவருவதோ நடப்பதில்லை. அடக்குமுறைச் சட்டம் என்று அறிவித்து ரத்து செய்யப்படும் சட்டங்களில்கூட முன்தேதியிட்ட அமலாக்கம் என்னும் நடைமுறை கடைப்பிடிக்கபடுவதில்லை. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதாயம் பாதிக்கப்படும்போது மட்டும் முன்தேதியிட்டு விலக்கு அளிக்க ஆளும் வர்க்கத்தினர் முனைகிறார்கள். சட்டத்தைப் பிறப்பிப்பவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைவிடவும் தங்கள் நலனை எந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இடதுசாரிகள், வலதுசாரிகள் எனப் பல தரப்பினரும் இந்த அவசரச் சட்டத்தால் ஆதாயம் அடைவார்கள். சட்டத்தை உருவாக்கியவர்களின் உணர்வுக்கும் ஜனநாயகப் பண்பிற்கும் எதிரான இந்தப் போக்கிற்குச் சில பத்திரிகைகளும் துணைபோகின்றன. இவை எல்லாம் ஜனநாயகம் குறித்த அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும். வெட்கம்கெட்டத்தனமான இந்த முயற்சி ஜனநாயக மரபுகளையும் பொது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகத்தையும் பரிகசிப்பதாகவே உள்ளது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google