 |
திரை
:
இம்சை அரசன்
எள்ளலின் அழகியல்
ப்ரஸன்னா ராமஸ்வாமி
'நீங்க நல்லவரா கெட்டவரா?' மழலையில்
குழந்தைப் பையன் 'நாயகனி'டம் மிழற்றும்போது பார்வையாளனுக்குள்
தண்டவாளங்கள் பிரிந்தன, இணைந்தன. 'கெட்ட' சட்டகத்துக்குள்
முழுக்க முழுக்க இயங்கிய 'நல்ல' கதாநாயகனை ஜனத்திரளுக்குள்
இறக்கியபோது மேற்கொள்ளப்பட்ட கூர்மையான தொழில் தந்திரம் அந்த
வசனம்.

நீங்களும் நானும் ஆண்டாண்டுக் காலமாகப்
பார்த்து பிரமித்த, கண்ணீருகுத்த, கொண்டாடிய வார்ப்புகள்
இவையெல்லாம்; 'கதை'யாடல்கள் இப்படியிப்படி... என்று தனது 'கதை
கூறலை' ஒரு நேரடிப் படக் கதையும் தெருக் கூத்தும் பார்ஸி நாடக
வகையும் என்று ஒவ்வொன்றின் தன்மையையும் தமிழ் சினிமாவின்,
குறிப்பாக நாயக நடிகர்களின் படங்களின் அழகியலை மையப்படுத்தித்
தனது திரைக்கதை, வசனத்தை அமைத்திருக்கிறார். பேய் முழியும்
கூச்சல் வசனங்களுமாக 'என் ராசாவின் மனசிலே' படத்தில்
அறிமுகப்பட்டு, ஆண்டாண்டு காலமாக உடன்கொண்டு நடந்த செந்திலை
ரஜினிகாந்த் நகர்த்திவிட்டுத் தன்னைப் பொருத்தும்படியான ஓர்
இடத்தைப் பிடித்தது வரை வந்திருக்கும் வடிவேலுதான் நாயகன்(கள்).
70களில் நாயகி வேஷங்களையும் கதைக் களன்களையும் புரட்டி மாற்றி
நாட்டுப்புற வாழ்வியலின் காட்சி, இசை, ஓசைகளுக்கெல்லாம் கொஞ்சம்
அரிதாரம் பூசி, மெய்யும் பொய்யுமாகப் பிறந்த ஒரு புது சினிமா
தமிழ்த் திரைச் சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயம் என்றால்
பொழுதுபோக்கு சினிமாவின் அம்சங்களை அப்படியே எடுத்துக்கொண்டு
அவற்றுக்கு 'நம்பகத்தன்மை'யூட்டுவதற்காக மேற்கொள்ளப்படும்
எல்லாத் தந்திரோபாயங்களையும் தூரத் தூக்கிப் போட்டுவிட்டுத்
தடதடவெனப் படத்தை நகர்த்தியிருக்கும் சிம்புதேவன்
முன்மொழிந்திருப்பது இன்னொரு அத்தியாயம்.
டென் கமாண்ட்மென்ட்ஸ் மட்டுமில்லை,
மெக்கன்னாஸ் கோல்ட், தொடங்கி பிரேவ்ஹார்ட் வரை தான் பார்த்து
ரசித்த சகல படங்களின் அம்சங்களையும் ஒரு குழந்தையின்
குதூகலத்தோடு தனது களத்துக்குள் எள்ளலும் துள்ளமாய்ச் சோழி
உருட்டியிருக்கிறார் சிம்பு. யாரையோ யாரோ எள்ளல் செய்வதாக அன்றி,
தானும் நாமும் உள்ளடங்கிய ஒரு தொனியைக் கண்டடைந்திருப்பது
வியப்பூட்டுகிறது. கூத்திலே ஒரு பாத்திரம் தோன்றியவுடனே
சரசரவென்று நம்முடைய மனசு அதை வண்ணங்களால் நிரப்பிக்கொண்டு
நாடகத்துக்குத் தயாராகி 18 நாள் போரை முதற்கொண்டு சகல
நடப்புகளையும் நம்புவது போலவே இம்சை அரசனும் நகர்கிறது. கோட்டை
இருக்கிறது, ஊரெங்கே என்று யாரும் கேட்பதில்லை. கதை
சுதந்திரமாக, விளையாட்டாக, கிண்டலாக என்று நகர்ந்தபோதும்
திரைக்கதையின் தருக்க நியாயங்களிலும் பாத்திரப் படைப்பிலும்
உள்ள கச்சிதமான வேலைப்பாடும் துணிச்சலும் வியக்கவைக்கின்றன.
மலைக்கள்ளன், உத்தமபுத்திரன், எங்க வீட்டுப்
பிள்ளை ஆகிய படங்கள் சாயல்களைக் கொடுத்திருந்தாலும் புலிகேசி
சிம்புதேவனுடையவன்தான். அவன் அறியாதவன்தான். ஆனால் 'நல்ல'வனோ 'அப்பாவி'யோ
அல்ல. கட்டுடைத்து, கட்டுமானம் செய்து, மீண்டும் லாகவமாகக்
கட்டுடைத்திருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் கொஞ்சம்
அவர்களையெல்லாம் நினைத்து, நினைவில் கொண்டுவந்து, தனக்கே உரிய
'உஸ்,' 'முடியலே' போன்ற வசனங்களைப் பொதிந்து, இவை இரண்டையும்
தாண்டிய ஒரு பாத்திர வார்ப்பைத் தருகிறார் வடிவேலு. ஒரு
தேர்ச்சி பெற்ற ஷேக்ஸ்பியர் நாடக நடிகனைப் போல் பிரமிப்பூட்டும்
நடிப்பை நாசர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் வாயிற்காவலன்,
அமைச்சர் என்று துணைப் பாத்திரமேற்கும் ஒவ்வொரு நடிகரும்
எள்ளலின் அழகியல் தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ள
விதம் நினைவில் நிற்கிறது.
திராவிட இயக்கத்தினருக்குரிய அரசியல் மேடைப்
பேச்சின் அம்சங்களை அரசனின் வசனங்களுக்குப்
பொருத்துவதிலாகட்டும்; எம்.ஜி.ஆரின் சமூக பிம்பத்தின் கூறுகளான
மக்களின் அன்பு, முதிய பெண்களின் தாய்மைப் பிம்பம்
போன்றவற்றையும் அழகு, கம்பீரம், ஆண்மை நிறைந்தவரான சினிமா
நாயகச் சித்தரிப்பையும் இணைத்திருப்பதிலாகட்டும் - கூர்மையான
விமர்சனங்களையே தனது சினிமா மொழியில் பொதிய வைக்கிறார்
இயக்குநர்.
இதுதான் அரண்மனைப் பல்லி என்று வரைபடத்தில்
வட்டம் போட்டுக் காட்டித் தொடங்குவது முதல் நையாண்டி மேளத்தின்
ஒவ்வொரு முத்தாய்ப்பும் செம்மையாக, செய்நேர்த்தியுடன்
நகர்த்தப்படுகிறது. 'சரித்திர'ப் படப் பாடல் ஆடலின்
அழகியலையொட்டி நகர்ந்தபடி, 'உலக அதிசய'ங்களை உடையில்
காட்டிவிட்டால் போச்சு என்று இயங்கியிருப்பது இன்னும் மனமாறச்
சிரிக்கவைக்கிறதென்றால் செந்தமிழோடு இன்று அன்றாட
வழக்கிலிருக்கும் மதுரைப் பேச்சை இசைத்து வசனங்களை
நெய்திருப்பதும் சில சொற்களுக்கு அவ்வப் போது விளக்கம் தருவதும்
படத்தின் பாஷையில் சொன்னால், அதி பயங்கர ஜாலி!
வைட் ஆங்கிளில் நிகழும் ஆர்ப் பாட்ட டில்ட்
அப், டில்ட் டவுன் (tவீறீt uஜீ, tவீறீt பீஷீஷ்ஸீ) தொடங்கி
கேமராவின் இயக்கத்திலும் இந்தக் கட்டுடைப்பும் கட்டுமானமும்
தோதாகச் செயல்படுகின்றன என்றால் அசுர வேலை செய்திருக்கிறார் கலை
இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி. ஆடை வடிவமைப்பிலிருந்து
வெளிப்புறப் படப்பிடிப்பிடங்கள், நிர்மாணம்வரை பொறுப்பேற்றுக்
கொண்டு முன் தோற்றமும் உள் அரங்கமுமாகச் செதுக்கியிருக்கிறார்.
செஞ்சி, திண்டிவனம் பகுதியின் நிலப்பரப்பைத் தேர்வுசெய்ததும்
பயன் கொண்டுள்ள விதமும், எல்லாம் தாண்டிப் படத்தின் சிக்கன
பட்ஜெட்டும் வியப்பிலாழ்த்துகின்றன. விஜிக்ஷியின் பிம்பத்தோடு
போட்டி போட்டுக்கொண்டு பாடல் காட்சியைக் குழப்பி மண்டை காயும்
முயற்சிகள் ஒருபுறம், ஒரு சூத்திரம் வெற்றி கண்டுவிட்டால் அதைப்
பிடித்துத் தொங்கும் நோய் மறுபுறம், ஒரு பாடலுக்கு ஒரு கோடி
ரூபாய் செலவு என்றெல்லாம் தறிகெட்டுச் சூதாடிக்கொண்டிருக்கும்
தமிழ்த் திரையுலகில் பொழுதுபோக்கு சினிமாவுக்கு இப்படியும் ஒரு
முகம் கொடுக்கலாம் என்று எள்ளலுக்கு ஓர் அழகியல் அதிகாரம்
அமைத்திருக்கிறார் சிம்புதேவன்.
உள்ளடக்கம் |
|
Google Ads..... |
|
Google


|
|