|
பதிவுகள்
: நவீன நடிப்புப் பட்டறை
படைப்பாக்கம் நோக்கிய பட்டறை
அ. ராமசாமி
எந்த வெளியிலும் எந்த மொழியிலும் சில
நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் அவற்றின் தொடக்கப் புள்ளியிலேயே
அவற்றுக்கான தேவை என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு
தொடங்குவதில்லை. தொடங்கி நடத்திய பின்பு அவற்றின் விளைவுகள்
உண்டாக்கும் தாக்கம் பலன் தரத் தொடங்கும்போது தொடக்கத்திற்கான
காரணகர்த்தாக்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி வரலாறாக
மாறிவிடும். 1978ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் காந்தி
கிராமத்தில் நடந்த 70 நாள் நாடகப் பட்டறை அப்படியானதொரு
மகிழ்ச்சியும் வரலாறும் என அதில் பங்கேற்றுப் பின்னர் நாடகத்
துறையில் செயல்பட்ட சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தப்
பட்டறை நடப்பதற்குக் காரணமாக இருந்தது புதுதில்லியில் இயங்கும்
தேசிய நாடகப் பள்ளியும் அப்போதைய அதன் இயக்குநர் பி.வி.
காரந்த்தும்தான் என்றாலும் தமிழ்நாட்டில் காரணகர்த்தா சே.
ராமானுஜம்.
தன்னிடம் நாடகக் கலையைக் கற்றுவிட்டு
வெளியேறும் மாணவர்களிடம் தொடர்ச்சியான நாடக ஆர்வத்தைத்
தக்கவைக்கும் நோக்கத்துடன் அவரவரது மாநிலங்களில் இத்தகைய
பயிற்சிப் பட்டறைகளை நடத்த உதவி செய்வதைத் தனது கல்வித்
திட்டத்தின் ஒரு பகுதியாகவே வைத்திருக்கிறது தேசிய நாடகப்
பள்ளி. அதன் விரிவாக்கத் திட்டம் என அழைக்கப்படும் அத்திட்டம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல நாடகக் குழுக்களைத்
தோற்றுவித்ததோடு பல திறமையான நாடகக் கலைஞர்களையும்
உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிப்புத் துறையில் இப்பட்டறைகளின்
பங்களிப்பு முக்கியமானது. பட்டறைகளில் பயிற்சி பெற்ற பலர்
பின்னர் அந்தந்த மாநிலத் திரைப்படத் துறையிலும்
குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.
ஆனால் பட்டறைகளின் வழியாக நடிகரையோ
இயக்குநரையோ உருவாக்கிவிட முடியாது என்பதுதான் தமிழ் சினிமாவில்
செயல்படும் பலரின் பொதுவான கருத்தாக இருக்கிறது. முறையான
பயிற்சி பெற்றுவருகின்ற நடிகர்களை உரிய கவனத்துடன்
பயன்படுத்திக் கொள்ளக்கூட முயற்சிப்பதில்லை. நாசர், பசுபதி
போன்ற ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு என்றாலும் அவர்களும்
தமிழ்த் திரை உலகம் குத்தும் முதல் முத்திரையை ஏற்றுக்
கொண்டவர்களாகத்தான் வலம் வர வேண்டியுள்ளது. இந்தச் சூழலை நன்கு
அறிந்தவராகவும் ஆனால் அதற்குள்ளேயே இருக்க விரும்புபவராகவும்
தன்னைக் காட்டிக்கொண்டு வருபவர் நடிகர் சண்முகராஜா.
தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவரான
சண்முகராஜா, அதன் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் சாத்தியமாகும்
பட்டறையொன்றைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என முயன்று அதில்
வெற்றி பெற்றுள்ளார். 2006 மே 10 - ஜூன் 10 வரை புதுவைப்
பல்கலைக்கழக நாடகத் துறை வளாகத்தில் தேசிய நாடகப் பள்ளியின்
நிதி மற்றும் வல்லுநர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற நவீன
நடிப்புப் பட்டறை (Workshop on Modern
Acting), அதில் பங்கேற்ற ஏழு பெண்கள் உட்பட்ட 24
பேருக்குப் புதிய அனுபவமாக இருந்துள்ளது. தமிழ்நாட்டிற்கான
பட்டறை என்றாலும் ஆந்திரத்திலிருந்து ஆறு பேரும் புதுவை நாடகப்
பள்ளியில் மாணவர்களாக இருந்த வங்காளதேச மாணவர் ஒருவரும்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மாணவிகளும் பங்கேற்றனர்.
மற்றவர்கள் அனைவரும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குத் தொடங்கிய
பட்டறை இரவு 9 மணிவரை நடந்தது. காலையில் உடலின் பாகங்களைத்
தளர்வுபடுத்திக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பயிற்சிகள்.
இதற்கு முதல் பாதி நாட்கள் சிலம்புப் பயிற்சி. பின்பாதி
நாட்களில் கண்ணப்ப சம்பந்தத்தை ஆசிரியராகக் கொண்டு தெருக்
கூத்து அடவுகள் கற்றுத் தரப்பட்டன. காலை உணவுக்குப் பின் உடல்,
மனம், குரல் என்னும் மூன்றையும் ஒருங்கிணைக்கும் பயிற்சிக்கான
வல்லுநர்களின் வகுப்புகள் நடைபெற்றன. தேசிய நாடகப் பள்ளியைச்
சேர்ந்த அனுராதா கபூர் (விரிவாக்கத் திட்டத்தின் இயக்குநர்),
நடிகனுக்கான அசைவுகளைக் கற்றுத் தருவதில் சர்வதேச அனுபவம்
கொண்ட நௌஷத், குரல் மற்றும் பேச்சு முறையைப் பயிற்றுவிக்கும்
ஹரீஸ், ஒப்பனைக் கலையைக் கற்பிக்கும் ரோஷன், நடிப்புத் துறைப்
பேராசிரியர் தினேஷ் கன்னா (இவர் இப்சனின் காட்டு வாத்து நாடகக்
காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பயிற்சிகளை வழங்கினார்), குரல்
பயிற்சி வல்லுநரான வீணா பாணி சாவ்லா ஆகியோர் குறைந்தது ஒரு வார
காலம் தங்கிப் பயிற்சிகளை அளித்தனர்.
இவர்களோடு தமிழ் நாடகப் பட்டறைகளின்
முன்னோடிகளான சே. ராமானுஜம், எஸ்.பி. சீனிவாசன் ஆகியோருடன்
பட்டறை ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜாவும் பயிற்சிகளை வழங்கினார்.
புதுவை நாடகப் பள்ளியின் ஆசிரியர்களான கே.ஏ. குணசேகரன், வ.
ஆறுமுகம், அனீஸ், வேலாயுதம் ஆகியோர் அவர்களின் துறை சார்ந்த
பயிற்சிகளை வழங்கினர். திரைப்பட நடிகர் நாசர் பயிற்சி பெற்ற
நடிகனின் சாத்தியங்கள், நாடக நடிப்பிலிருந்து திரை நடிப்பு
வேறுபடும் இடங்கள் பற்றி உரையும் நிகழ்வுமாகப் பாடங்கள்
நடத்தினார். அ. ராமசாமி, செ. ரவீந்திரன், இரா. பிரபாகர்
போன்றோர் மாலை நேரங்களில் நாடகப் பிரதி, ஒளியமைப்பின் பங்கு,
நாடகத்தைப் பார்வையாளன் அணுகும் விதம் போன்ற வகுப்புகளை
உரையாடல் முறையில் நடத்தினர். இப்பயிற்சியாளர்கள் பலர் அவரவர்
துறையில் தேசிய அளவில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில்
பங்களிப்புச் செய்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு உணவுக்குப் பின் பட்டறையின் முதல்
கட்டத்தில் படக் காட்சிகள் காண்பிக்கப்பட்டு விவாதங்கள்
நடைபெற்றன. பின்னர் ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தைக்
காட்சிப்படுத்தி நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டனர். பட்டறை
நிறைவின்போது மாக்பெத் நாடகம், நாடக நிகழ்வாக அல்லாமல்
காட்சிகளின் நிகழ்வாக நடிக்கப் பெற்றது. இதன் பொறுப்பாளராக இரா.
இராசு இருந்தார். அன்றும் பல்கலைக் கழக அதிகாரிகளுடன் நாசரும்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நள்ளிரவு வரை
பங்கேற்பாளர்கள் அடுத்த நாள் பிரிய வேண்டிய நெருக்கடியைத்
தள்ளிப் போட முயன்றனர்.
ஒரு மாத காலம் கச்சிதமாகத்
திட்டமிடப்பட்டிருந்த பட்டறையின் ஒவ்வொரு நாள் பயிற்சி
நேரத்தையும் பாடத் திட்டத்தையும் கவனித்தபோது பட்டறையை
ஒருங்கிணைத்த சண்முகராஜாவிற்கும் பட்டறை இயக்குநர் முனைவர் இரா.
இராசுவுக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆசையும் இருப்பது
புரிந்தது. ஆசைகள்தானே எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.
இவர்களின் ஆசைகள் நவீன நாடகத்திற்குத் திரும்பவும் புத்தெழுச்சி
அளிக்கும் என்றால் வரவேற்கத்தக்கவைதான். ஆனால் நவீன நாடகங்களின்
புத்தெழுச்சி வெறும் நடிகர்களின் கையில் மட்டும் இல்லை என்பதும்
புரிகிறது. அந்த நிலையில் நின்று யோசித்தால் இந்த எதிர்பார்ப்பு
அதிகப்படியான எதிர்பார்ப்புதான். தீவிரமான நடிப்புப்
பயிற்சியோடு சமகாலத்தைப் புரிந்துகொண்டு நாடகங்களை எழுதும்
நாடகாசிரியனும் அவற்றைத் தன் புரிதலுடன் இயக்கும் இயக்குநரும்
இணைகின்ற நிலையில்தான் புத்தெழுச்சி சாத்தியம். தமிழுக்கு முதல்
தேவை சமகாலத்திற்குப் பொருத்தமான நாடகப் பிரதிகள், அடுத்தது,
அவற்றை விருப்பு வெறுப்பின்றி இயக்கும் இயக்குநர்கள். இந்தத்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்டறைகளைத் தேசிய நாடகப் பள்ளியோ
சங்கீத நாடக அகாடமியோ வழங்கினால் சோர்ந்து கிடக்கும் நவீன நாடக
இயக்கம் திரும்பவும் எழுந்து நிற்கலாம். இவற்றை மைய அரசின்
அமைப்புகள்தான் தர வேண்டும் என்பதில்லை. தமிழ் வளர்ச்சியில்
அக்கறைகொண்டதாகக் காட்டிக்கொள்ளும் தமிழக அரசின் துறைகளான தமிழ்
வளர்ச்சித் துறையோ இயல் இசை நாடக மன்றமோ கூட அதனைச் செய்யலாம்.
அவைகளே நேரடியாகச் செய்வது சாத்தியமில்லை என்றால் ஏதாவது ஒரு
பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து செய்யத் திட்டமிடலாம்.
கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் இத்தகைய
முயற்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. தமிழ் நாட்டில் ஏன்
சாத்தியமாகாமல் போகின்றன?
உள்ளடக்கம் |