|
பத்தி
: ஒரு புத்தகம் ஒரு பார்வை
அமெரிக்காவின் முட்டாள்கள்
பி.ஏ. கிருஷ்ணன்
1
மனித குலத்தின் பொதுச் சொத்துக்களில்
முட்டாள்களும் அடங்குவர் என்பதைப் பற்றி நான் மிகத் திடமாக
இருக்கிறேன். முட்டாள்கள் இல்லையென்றால் வாழ்க்கை தனது
சமன்பாட்டை, சிரிப்பை, மெல்லிய
தருணங்களை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனக்கு
முட்டாள்களைப் பிடிக்கும். பல வருடங்கள்
நினைவில் பொதிந்து வைத்து அசை போட்டுச் சிரிக்கவைக்கும்
இன்பத்தைக் கொடுப்பவர்கள்
அநேகமாக அவர்கள் மட்டுமே.
நான் வேலை சேர்ந்த புதிதில் நான் பணிபுரிந்து
கொண்டிருந்த கடற்படைத் தலைமையகத்தில் ஒரு
கடற்படை கமாண்டர் இருந்தார். நல்ல உயரம். கருகருவென்ற தாடி.
கடற்படைச் சீருடையில் அவர் அணிந்தால்
அமையும் மிடுக்கு நான் இன்று வரையாருக்கும் அமைந்து
பார்த்ததில்லை. பேசுவதற்கு மிக இனிமையானவர்.
அந்த ஆண்டு கடற்படை 1947ஆம் ஆண்டைச் சார்ந்த
ஒரு 'அதி ரகசிய (Top Secret)
ஆணை'யின்
பாதுகாப்பு நிலையை (Security
Classification) குறைத்து, அதைத் திரும்பப் பெறத்
தீர்மானம்
செய்தது. இந்த முடிவை நிறைவேற்றும் விதமாக எல்லா
அலுவலகத்திற்கும் ஒரு குறிப்பு
அனுப்பப்பட்டது. குறிப்பு இது:
"எங்களது பதிவுகளிலிருந்து, இந்த 'அதி ரகசிய
ஆணை' 1947ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் மூன்றாம் நாள்
உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக அறிகிறோம். இந்த ஆணைக்கு
இப்போது எந்தப் பயனும்
இல்லாததால் இதன் பாதுகாப்பு நிலையைக் குறைத்து இந்த ஆணையை
திரும்பப் பெற்றுக்கொள்ளத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் கோப்பில் இருக்கும் இந்த
ஆணையை அழித்துவிட்டு,
அழித்துவிட்டோ ம் என்று ஒரு சான்றிதழைக் கொடுக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது."
என்னுடைய பதிவுகளிலிருந்து இந்த ஆணை
கமாண்டரின் பிரிவில் இருப்பதாகத் தெரிய வந்தது.
கமாண்டரிடம் குறிப்பைக் கொடுத்துத் தக்க பதில் அளிக்குமாறு
கேட்டுக்கொண்டேன். ஒரு வாரம்
கழித்து என் இயக்குநர் என்னைக் கூப்பிட்டார்.
"அனந்த், நான் எத்தனை தடவை
சொல்லியிருக்கிறேன், இந்த முட்டாளை ஒரு குறிப்பும் எழுத விடாதே
என்று?"
"அவரிடம் அப்படி முக்கியமானது ஒன்றும்
கொடுக்கவில்லையே."
"இது என்னது?" இயக்குனர் 1947 ஆணையைப் பற்றிய குறிப்பை என்னிடம்
நீட்டினார்.
"இதில் என்ன முக்கியம் சார்?"
"ஆணை முக்கியம் இல்லை அனந்த். அனுப்பும்
பதில் முக்கியம். இவன் என்ன பதில் அனுப்பியிருக்கிறான் என்று
பார்."
பதிலைப் படித்ததும் எனக்கு அடக்க முடியாமல்
சிரிப்பு வந்தது.
"எங்கள் பதிவுகளின்படி, நீங்கள்
குறிப்பிட்டிருந்த ஆணையின் நகல் எங்களுக்குக் கிடைத்ததாகத்
தெரியவில்லை. எனவே ஆணையின் நகலை உடனடியாக அனுப்பும்படி
கேட்டுக்கொள்கிறோம். நகல்
கிடைத்தவுடன் அது உடனடியாக அழிக்கப்பட்டு, அழித்துவிட்டோ ம்
என்ற சான்றிதழும் தரப்படும்."
கடற்படை அதிகாரிகள் தங்கள் கீழே
வேலைபார்க்கும் அதிகாரிகளுடன் பேசும் விதமே தனி.
"கமாண்டர் ....... , இது என்ன? உன் மூளை
எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறது? கால்களுக்கு இடையில் ஒரு
துவாரம் இருக்கிறதே, அங்கேயா?"
"எனக்குப் புரியவில்லை, சார்."
"That is the problem.
புரிகிறது என்ற வார்த்தையே உன்னுடைய அகராதியில் கிடையாது."
இயக்குனரின் அறையிலிருந்து திரும்பி
வரும்போது கமாண்டர் என்னிடம் கேட்டார்.
"நான் என்ன தவறு செய்துவிட்டேன் கிருஷ்ணன்?
எனக்கு உண்மையாகவே புரியவில்லை."
அவருக்கு என்ன பதில் சொல்ல என்று எனக்குத்
தெரியவில்லை.
2
திரு. இந்திரா பார்த்தசாரதி, தான் அமெரிக்கா
சென்றபோது சுங்க அதிகாரிகளிடம் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை
என்னிடம் சொன்னார்.
குடியேற்ற
(immigration) அதிகாரிகளின் தொந்தரவு தாங்க முடியாமல்
அவர் கேள்வி கேட்கும் பெண்ணிடம்
இவ்வாறு கேட்டார்.
'Why are you treating me
like this? Am I a convict?"
(என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்? நான்
என்ன சிறை சென்றவனா?)
அந்தப் பெண் இவரை அதிர்ச்சியுடன் பார்த்தார்.
உடனே தனது உயர் அதிகாரியை அழைத்தார்.
"இந்தப் பெரியவர் சொல்வதைக் கேளுங்கள். இவர்
சிறை சென்றவராம்."
அதிகாரி இ.பா.வைப் பிடித்துக்கொண்டார்.
"சிறை சென்றீர்களா? எங்கே? எப்போது? இங்கே
அமெரிக்காவிலா? இந்தியாவிலா? வேறு எங்கே? எத்தனை
வருடம்? எப்போது விடுதலை செய்தார்கள்? ஒரு தடவை சிறை
சென்றீர்களா அல்லது பல தடவையா?"
இ.பா.விற்குத் தனது உண்மையான நிலையை
விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
நமது பத்தியின் புத்தகம் இத்தகைய அதிகாரவர்க்க முட்டாள்களையும்
அமெரிக்காவின் பல தரப்பட்ட
முட்டாள்களையும் பற்றி.
3
Unusually Stupid
Americans என்ற புத்தகத்தை அமேசான்.காம் வலையகத்தில்
பார்த்ததும் அதைப்
படித்தாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. புத்தகத்தின் பெயர்
The Usually Stupid Americans
என்று
இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் உடனே வந்தது. காத்ரின்
மற்றும் ராஸ் பெட்ராஸ் எழுதிய இந்தப்
புத்தகம் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு உலகின் சில மிகப்
பெரிய முட்டாள்களையும்
கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.
அமெரிக்காவில் வாங்கும் பொருட்கள்
எல்லாவற்றிலும் ஒன்று அல்லது பல எச்சரிக்கைகள் இருக்கும்.
உணவுப் பொருளிலிருந்து வீட்டில் நாம் சாதாரணமாக உபயோகிக்கும்
பொருட்கள் வரை. இந்தப் புத்தகம்
குறிப்பிடும் சில எச்சரிக்கைகள்:
கழிப்பிடத்தைக் கழுவ உபயோகிக்கப்படும்
பிரஷில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை:
Do not use orally - வாயால் (வாயைக் கழுவுவதற்கு)
உபயோகிக்காதீர்கள்.
மடக்கும் குழந்தைத் தள்ளி ஒன்றில் காணப்படும்
எச்சரிக்கை: குழந்தையை வைத்து
மடக்கிவிடாதீர்கள்.
மெழுகுவர்த்திப் பெட்டியில் காணப்படும்
எச்சரிக்கை:
மெழுகுவர்த்தியைக் காது அடைப்பானாகவோ அல்லது
உடலில் எந்தத் துவாரத்தையும்
அடைப்பதற்காகவோ பயன்படுத்தக் கூடாது.
ஹேர் டிரையரில் எழுதப்பட்டிருக்கும்
எச்சரிக்கை: தூங்கும்போது உபயோகிக்காதீர்கள்.
தொலைக்காட்சி ரிமோட்டில் கண்ட வாசகம்:
கழுவும் எந்திரத்தில் போட்டுக் கழுவாதீர்கள்.
கையால் உபயோகிக்கும் தீயணைக்கும் கருவி
ஒன்றில் கண்ட எச்சரிக்கை இது: தீ அருகிலோ தீப்பொறி
பறக்கும் இடங்களிலோ உபயோகிக்கக் கூடாது.
அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு மிக
அதிகம் என்பது அங்கே விமானங்களில் பயணம்
செய்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். செப்டம்பர்
11க்குப் பிறகு பாதுகாப்புக் கெடுபிடி
எல்லா இடங்களிலும் மிக அதிகமாகிவிட்டது. அத்தகைய சில
கெடுபிடிகள்:
JFK விமான
நிலையத்தில் ஒரு கைக் குழந்தையின் தாய் விமான நிலையத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டார். காரணம்
அவரிடம் மூன்று பால் பாட்டில்கள் இருந்தன. அந்தத் தாய்
பாட்டில்களில் இருப்பது ரசாயனப் பொருள்கள்
அல்ல, தாய்ப் பால்தான் என்று சொல்லியும் அதிகாரிகள் நம்பவில்லை.
தாய் பாட்டில்களில் இருந்து பால்
துளிகளைத் தன் கைகளில் பீய்ச்சித் தானே நக்கிக் காட்டுவதாகச்
சொன்னார். ஆனால் அதிகாரிகள்
ஒப்புக்கொள்ளவில்லை. பாட்டில்களில் இருக்கும் பால் முழுவதையும்
குடித்துக் காட்டிய பிறகுதான் அவர்
விமானத்தில் ஏறலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
சவுதி அரேபியாவிலிருந்து ஒரு பயணியின்
பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்த அதிகாரிகள், 'இது என்ன?'
என்று
கேட்டார்கள். அவர் 'கொலோன்' என்றார். அடுத்த கேள்வி: 'எப்படி
நம்புவது?' அவர் அந்த பாட்டிலிருந்த
திரவத்தைத் தன்மீது அடித்துக்கொண்டார். அதோடு நின்றிருக்கலாம்.
எதிரே நின்ற அதிகாரிகள்மீதும் அடித்தார்.
அவ்வளவுதான். உடனே ரசாயனப் பொருள்களைப் பரிசோதிக்கும் திஙிமி
படை வரவழைக்கப்பட்டது.
விமான நிலையத்தின் அந்தப் பகுதியில் வருகையாளர்களுக்குத்
தடைவிதிக்கப்பட்டது. அதிகாரிகள்
மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். பாட்டிலும்
சோதனைக்கு
அனுப்பப்பட்டது. சோதனைக்குப் பிறகு பாட்டிலில் இருந்தது கொலோன்
என்பது தெரியவந்தது.
4
அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் நமது
அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை என்பதை
இந்தப் புத்தகம் நிறுவுகிறது.
அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் தலைசிறந்த
அங்கத்தினருக்கான விருது மார்க் க்ரெட்சென் என்பவருக்கு
வழங்கப்பட்டது. அதற்காக வைக்கப்படும் விருந்திற்கு அவரை
அழைத்துக் கடிதமும்
அனுப்பப்பட்டது. ஒரே ஒரு சிக்கல். அவர் விருந்திற்கு வரும்
நிலையில் இல்லை. பாலியல் குற்றம் ஒன்றிற்காக
26 வருடம் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருப்பவர்
விருந்துக்கு வருவது சிறிது கடினம்தான்.
"என்னுடைய வெற்றிக்கு உங்கள் துணை நிச்சயம்
தேவை" - இது அல் கோர் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு எதிராக 2000
தேர்தலில் நின்றவர்) - தனது வாக்காளர்களுக்கு அனுப்பிய கடிதம்.
கடிதத்தில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கடிதம்
தவறான விலாசத்திற்கு அனுப்பபட்டுவிட்டது. கடிதத்தைப் பெற்றவர்
கோரின் வெற்றிக்குத் துணை நிற்கும்
வாய்ப்பு சற்றுக் குறைவாக இருந்தது. விலாசத்திற்கு உரியவரின்
பெயர் ஜார்ஜ் புஷ்.
ஜான் கெரி - 2004 தேர்தலில் புஷ்ஷிற்கு
எதிராக நின்றவர் - தனது வாக்காளர் ஒருவருக்கு 22 ஜனவரி 1991ஆம்
ஆண்டு
எழுதிய கடிதத்தின் சுருக்கம்:
"உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.
இராக்மீது ராணுவத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் அல்ல."
அதே வாக்காளருக்கு 31 ஜனவரி 1991ஆம் ஆண்டு
எழுதிய கடிதத்தின் சுருக்கம்:
"உங்களோடு கருத்தோடு உடன்படுகிறேன். இராக்
மீது தாக்குதல் நடத்த நான் முழு சம்மதம் தருகிறேன்."
5
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அதிசயமான
நிகழ்வு எனது பார்வைக்கு வந்தது. எங்களது சோதனைச்
சாலைகள் ஒன்றில் ஒரு நண்பர் 25 ஆண்டுகள் வேலை பார்த்துப் பதவி
உயர்வும் பெற்றுக்கொண்டிருந்தார்.
ஆனால் அவர் கூடவே மாநில அரசுப் பணியில் கெஜட் பதிவுபெற்ற
அதிகாரியாக 20 ஆண்டுகள் வேலை
பார்த்ததுதான் தவறு. இந்த வழக்கு சிஙிமிஇடம் ஒப்படைக்கப்பட்டு
நண்பருக்கு எதிராக வழக்கும்
பதிவுசெய்யப்பட்டது.
இந்தியாவிற்தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்
என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன் - இந்தப்
புத்தகத்தைப் படிக்கும்வரை.
அமெரிக்காவில் ஒக்லஹோமாவின் ஒராபானா என்ற
சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்தார்.
ஊதியம் வருடத்திற்கு ஒரு லட்சம் டாலர்களுக்கும் மேல். 79 வருடம்
அரசுப் பணிபுரிந்ததற்காக. ஒராபானாவின்
வயது 52. அவரது ஓய்வூதியம் இரு அரசுப் பணிகளில் ஒரே சமயத்தில்
இருந்ததற்காகத்
தரப்பட்டுவந்தது. ஆராய்ந்து பார்த்ததில் தெரியவந்தது, இத்தகைய
ஊதியங்களை அனுமதிக்க ஒரு
சட்டம் ஒக்லஹோமா மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று.
சட்டத்தைத் தனிநபராகக்
கொண்டுவந்து, அதன் சார்பாகப் பேசி அதை நிறைவேற்றியவர் வேறு
யாரும் இல்லை, ஒராபானாதான்.
மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் (ஒக்லஹோமாவில்தான்)
ஒரு தனிநபர் சட்டம் ஒன்று கொண்டுவந்து
பெண்ணியத்தை மற்றொரு தளத்திற்குக் கொண்டுசெல்ல முயன்றார்.
அந்தச் சட்டம்
கொண்டுவரப்பட்டிருந்தால் எந்த ஆண்மகனும் ஒரு பெண்ணுடன் உடலுறவு
கொள்ளும் முன்னால் அவள்
சம்மதத்தை எழுத்து மூலம் பெற வேண்டியிருக்கும். உடலுறவு
உடலுக்குத் தீங்கானது, அதன்
அபாயமான பின்விளைவுகளில் ஒன்று கருத்தரிப்பதாக இருக்கலாம் என்ற
எச்சரிக்கையையும் எழுத்து மூலம்
அவளுக்குத் தர வேண்டியிருக்கும்.
6
அமெரிக்க அரசாணைகள் சிலவற்றைப் படித்தால் தலை
சுற்றுவதைத் தவிர்க்க முடியாது. அவற்றில் சில:
தீயணைப்பு முறைகளைப் பற்றிய சுற்று
ஒன்றில் காணப்படும் வாசகம்:
வெளியே செல்லும் வழி என்பது எந்த வழி
வெளியேகொண்டு செல்கிறதோ அது.
தபால் துறையிலிருந்து வந்த கடிதம்:
தீவிர விசாரணைக்குப் பிறகு உங்களுக்குக்
கடிதம் தாமதமாகக் கிடைத்ததற்குக் காரணம் அது
வருவதற்குத் தாமதமானதால்தான் என்று தெரியவந்தது.
ராணுவ ஆணை ஒன்று. எனது நண்பர் கமாண்டர்
படித்தால் மகிழ்ச்சியுற்றிருப்பார்:
இந்த ஆணை உங்களுக்கானது இல்லை என்றால்,
நீங்கள் இதன்மீது இட்டிருக்கும் கையொப்பத்தை
அழித்துவிட்டு, அழித்துவிட்டேன் என்று கையொப்பம் இடவும்.
வருமானவரித் துறையின் சில ஆணைகள்:
சட்டத்திற்குப் புறம்பாகச் சம்பாதித்த பணம்,
குறிப்பாக திருட்டு மூலமாகவோ அலுவலகத்தை
ஏமாற்றியோ சம்பாதித்த பணம், உங்களது மொத்த வருமானத்தில்
சேர்க்கப்பட வேண்டும்.
அரசாங்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும்
லஞ்சம் மற்றும் இதர 'கொடுப்பு'களுக்கு வரி விலக்கு
உண்டு -அவர்கள்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு
அவர்கள் தண்டிக்கப்படும் வரை.
வரி விலக்கு என்றதும் ஒரு கில்லாடியைப்
பற்றிக் குறிப்பிட்டாக வேண்டிவருகிறது:
ஒருவருக்கு ஐந்து லட்சம் டாலர்கள் வருமானம்
கிடைத்தது. அதிலிருந்து அவர் தனது 'தொழில்
ஆலோசகர்' ஒருவருக்குக் கொடுத்த பத்தாயிரம் டாலர்களுக்கு வரி
விலக்குக் கேட்டார். இருவரும் சிறை
சென்றனர். காரணம்? ஐந்து லட்சம் டாலர்கள் அவரது தொழிற்சாலை
தீயில் அழிந்ததற்காகப்
பெறப்பட்டது. ஆலோசகர் பத்தாயிரம் டாலர்கள் பெற்றது தொழிற்
சாலைக்குத் தீ வைக்க ஆலோசனை
தந்ததற்காக.
7
இந்திய முட்டாள்களைப் பற்றி இப்படி ஒரு
புத்தகம் எழுத முடியுமா என்று நினைத்துப் பார்க்கிறேன்.
சாத்தியம்
இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாம் எல்லாவற்றையும் சாதி, மதம்,
இனம், மொழி கண்ணாடி
போட்டுக்கொண்டு பார்ப்பவர்கள். இந்தக் கண்ணாடி நகைச்சுவை
வடிகட்டி.
நான் இந்தப் புத்தகத்தைத் திருப்பதி செல்லும்
வழியில் படித்துக்கொண்டு வந்தேன். திருமலை
சென்றுவிட்டுத் திருச்சானூர் வந்தோம். அங்கு கோவில்
மதிற்சுவரில் பார்த்த ஒரு ஆங்கில அறிவிப்பு:
Urinals strictly
prohibited.
கழிப்பறைகள் ஏன் நமது நாட்டில் அதிகம் இல்லை
என்பது எனக்குச் சற்று விளங்கியது.
கோவில்களே கழிப்பறைக்குத் தடை விதித்தால் மக்கள் கழிப்பறைகளை
உபயோகிக்கச் சிறிது
தயங்கத்தான் செய்வார்கள்.
உள்ளடக்கம் |