|
பார்வை
சபரிமலை சர்ச்சை
சக்கரியா
முதலில் அடிப்படைகள். சபரிமலை ஆலயம்
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமானது. அதன் மிகப்
பெரிய பண உற்பத்திக் கேந்திரமும் அதுவே. அந்தப் பணம்
சந்தேகமின்றிப் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் இன்ன
பிறவற்றுக்குமாகக் கேரள அரசுக்குச் செல்கிறது. ஒரு வழிபாட்டுத்
தலம் அங்கே வரும் பார்வையாளர்கள்மீது என்ன விதமான
கட்டுப்பாடுகளை விதிக்கலாமெனக் கருதுகிறதோ அவற்றை
நடைமுறைப்படுத்த உரிமை கொண்டது. சபரிமலையைப் பொறுத்த வரை,
மாதவிலக்குப் பருவத்திலுள்ள பெண்கள் புனிதமான மலையில் ஏறுவதோ
கடவுளைத் தரிசிப்பதோ கூடாது என்பது விதிகளில் ஒன்று.
இந்த விதி தளர்வானதும் எழுதப்படாததுமாகும்.
1989ஆம் ஆண்டு ஒரு திரைப்படக் குழு பகவானின் திருவடியிலுள்ள
புனிதமான பதினெட்டுப் படிகளில் நடனக் காட்சியொன்றைப்
படமாக்குவதுவரை இந்த விதி பாதியளவு பின்பற்றப்பட்டது; பாதியளவு
மீறப்பட்டது. சினிமாக்காரர்கள் மிகையாக நடந்து கொண்டார்கள்
என்பது உண்மை. உடனடியாகப் பெரும் கூச்சலும் பிலாக்கணமும்
எழுந்தன. கேரள உயர்நீதிமன்றம் பத்துக்கும் ஐம்பதுக்கும்
இடைப்பட்ட வயதுள்ள பெண் பக்தர்கள் மலையேறக் கூடாது என்று
தீர்ப்பளித்தது. சாதாரணமாகச் சொன்னால் அது பெண்களுக்கான
உயிரியல் பாடம்.
ஆனால் அந்த வழிபாட்டுத் தலத்தின்
உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இந்த நிபந்தனைகளைத்
தளர்த்துவதுமுண்டு என்பதும் ஓர் உண்மை. எனவே, கேரளத்திலுள்ள
வெவ்வேறு வகையான வி.ஐ.பி.க்களின் பெண்பால் உறவினர்கள்
காலங்காலமாகப் பகவான் ஐயப்பனைத் தரிசிக்கப் பல முறை
சென்றிருக்கிறார்கள் என்பது சபரிமலை பற்றிய பொது அறிவாகும்.
அதில் உயிரியல் வேற்றுமையில்லை. என்ன இருந்தாலும் அரசாங்கக்
கோவில்; என்ன இருந்தாலும் அரசாங்கம் என்பது நாம்தானே.
புரிந்துகொள்ளக் கூடியதுதான்.
கன்னட நடிகை ஜெயமாலாமீது கூறப்படும்
குற்றச்சாட்டு உரிமையாளரின் பிரவேச நிபந்தனைக்குக்
கீழ்ப்படியவில்லை என்ற பாவமே. ஆனால் உரிமையாளர்களே அந்தக் காலப்
பகுதியில் தனக்காக விதியைத் தளர்த்தினார்கள் என்கிறார் ஜெயமாலா.
பல ஆண்டுகளாகச் செய்துவருவதுபோல என்றும் அவர்
சொல்லியிருக்க வேண்டும். ஜெயமாலா கோவிலுக்குச் சென்றது
1987இல். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1989இல் நாட்டியப்
பெண்கள் புனிதப் படிக்கட்டுகளில் நடனமாடினார்கள்; சந்தேகம்
வேண்டாம், உரிமையாளர்களின் விருப்பப்படிதான் இது நிகழ்ந்தது.
அது நீதிமன்ற உத்தரவுக்கும் சபரிமலையின்
நுழைவாயிலான பம்பையில் பெண் போலீசை நிறுத்தும் நடவடிக்கைக்கும்
இட்டுச்சென்றது. பெண் போலீசார் உயிரியல் நிபுணர்களா என்பது
சந்தேகத்துக்குரியது. உடல் வேதியியலைப் பார்வையாலேயே நீங்கள்
தீர்மானிக்க முடியுமல்லவா, அதுதான் இது. ஐயப்பனின் மலைக் கோவில்
பழங்குடியினரின் தீர்த்தாடன கேந்திரமாகவோ புத்த விகாரமாகவோ
இருக்கலாம் என்று புராணச் சார்பற்ற வரலாறு குறிப்பிடுகிறது.
இது சரியாக இருக்குமானால் நூற்றாண்டுகளுக்கு
முன்பு வருகை தந்த இந்துக் கடவுள்களும் புராணங்களும் கேரளத்தில்
உடைமையாக்கிக் கொண்ட நூற்றுக்கணக்கான ஆலயங்களில் இதுவும் ஒன்று.
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஐயப்பன் கேரளத்தின் இந்து மத
நீரோட்டத்தில் கலந்திருக்கிறார். அவர் வீற்றிருக்கும் அடர்ந்த
கானகத்தைப் போலவே புராணக் கதைகளும் பெருகி அதை ஓர் ஈர்ப்பு
மையமாக்கியிருக்கின்றன. பக்தி, அபாயம், சாகசம் ஆகியவை இணைந்த
ஒரு கலவைதான் மக்களை அங்கே இழுக்கிறது. சபரிமலைப் பயணம்
மரணத்துக்கு ஒப்பானது என்பதால் அநேக பக்தர்கள் ஈமச் சடங்கைச்
செய்துவிட்டுத்தான் புறப்படுவார்கள். திரும்பி வருவார்கள்
என்பதற்கான உத்தரவாதம் இல்லாமலிருந்தது.
புனித யாத்திரையிலிருந்து பெண்கள்
விலக்கிவைக்கப்பட்டதன் காரணங்களில் இதுவும் ஒன்று. இன்னொரு
காரணம் உயிரியல் சார்ந்தது, மேலும் வலுவானது: கடும்
பிரம்மச்சரியம் உள்பட நாற்பத்தியொரு நாட்கள் விரதமிருந்துதான்
ஆண்கள் மலையேறுகிறார்கள். பொறுமையற்ற பிரம்மச்சாரிகளின்
மத்தியில் பெண்களைக் காட்டுக்குள் நுழைய அனுமதியாமலிருப்பது
புத்திசாலித்தனமான, இயற்கையான முடிவுதான். அப்படி அனுமதிப்பது
தொல்லையை வரவழைப்பது என்பதன்றி வேறில்லை.
காலப்போக்கில், பாலியல் ரீதியாகச்
செயலூக்கமுள்ள பெண்களைப் பிரம்மச்சாரியான ஐயப்பனுக்குப்
பிடிக்காது என்றே முடிவு கட்டப்பட்டது.
ஐயப்பன் தாயற்ற அநாதை, அவனது வளர்ப்புத் தாய்
அவனை மோசமாக நடத்தினாள், தன் தோழியை அவன் கைவிட்டான் என்பன
போன்ற கதைகள் அடங்கிய ஐயப்பப் புராணம் பெண்ணெதிர்ப்பு மனோபாவம்
கொண்டது. பெண்ணுக்கு விலக்குக் கற்பிப்பதும் இதனோடு
தொடர்புகொண்டதாக இருக்கலாம். மாதவிலக்கு என்பது கேரளத்தில்
எல்லாருக்கும் அச்ச மூட்டக்கூடிய மகா பாவமொன்றுமல்ல. தேவியின்
மாதவிடாய் உதிரத்தைப் பிரசாதமாக மதிக்கும் ஆலயமே இங்குள்ளது.
சபரிமலை ஆலயத்தின் கருவறை வரைபடத்தை வைத்துப்
பார்க்கும்போது ஐயப்ப விக்ரகத்தை ஜெயமாலா நிஜமாகவே தொட்டாரா
என்பது சந்தேகத்துக்கு உரியது. அவர் அப்படிச் செய்யவில்லை என்று
நம்புவதற்கான வாய்ப்புகள் உண்மை என்பதுபோலவே அவரது மனத்
தோற்றத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாம் என்று கொள்வதற்கான
வாய்ப்பும் உண்மை. ஜெயமாலாவையும் மற்ற பெண் பக்தர்களையும்
தேவப்ரஸ்னம் நடத்திய ஜோதிடருக்குத் தெரியும். அதனால் ஆரூடப்
பட்டியலில் அதனையும் ஓர் அம்சமாகச் சேர்த்திருக்கவும்
வாய்ப்புண்டு. அதுவே ஜெயமாலாவின் ஒப்புதலையும் பிற
விஷயங்களையும் தற்போதைய ஊடகத் திருவிழாவுக்கு இட்டுச்
சென்றிருக்கிறது.
கேரளத்தின் ஆன்மீகத் தளத்தில் அதிகமான பணப்
புழக்கமுள்ள மையம் சபரிமலை. நூற்றுக்கணக்கான அக்கறைகள் அங்கு
செயல்படுகின்றன. குறுக்கும் நெடுக்குமான நோக்கங்களாக
இருந்தாலும் அவற்றின் ஒரே குறிக்கோள் - சபரிமலை மூலையில் உள்ள
தேன்குடத்தில் தோள்வரை கைபோடுவதுதான். தேவப்ரஸ்னம் என்பதே
முன்கூட்டிப் பயிற்றுவிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நான்
சந்தேகப்படமாட்டேன்.
ஜெயலலிதாவின் அந்தரங்க ஆலோசகராகப் புகழ்
பெற்றுள்ள ஜோதிடரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பட்டியலில்
ஆன்மீகமானவையும் லௌகீகமானவையுமான ஏராளமான முறைகேடுகள் உள்ளன -
ஜெயமாலா ஐயப்ப விக்கிரகத்தைத் தீண்டினார் என்ற அற்ப விவகாரம்
உட்பட. ஆனால் ஊடகங்கள் ஜெயமாலா விவகாரத்தைக் கொண்டாடத்
தீர்மானித்தன. ஏனெனில் அதிக விற்பனையாகக் கூடிய சரக்கு அதுதான்.
கேரளத்திலுள்ள பெருவாரியான இந்துக்கள் இந்தப் 'பாவத்'துக்கு
எதிர்வினை ஆற்றவில்லை; ஆனால் ஆலயக் கமிட்டியின் பிரமுகர்கள்
அம்பலப்பட்டுப்போனதையும் சினிமா பாணியிலான மற்ற
நிகழ்ச்சிகளையும் நிச்சயமாக ரசித்துப் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். களங்கப்பட்டுப்போன புனிதத்தைப் பற்றி,
சாத்வி ரிதம்பரா வெட்கப்படும் அளவுக்கு ஊடகங்கள் ஆக்ரோஷமாகக்
கொந்தளிக்கின்றன. புது தில்லியிலிருந்து ஒளிபரப்பாகும்
சி.என்.என்.-ஐ.பி.என். சானலின் கேரளச் செய்தியாளரான ஒரு இளைஞர்,
ஜெயமாலா எப்படி ஐயப்பனை நாசப்படுத்தினார், சனாதன இந்து
மதிப்பீடுகளைக் குலைத்தார் என்று வாயில் நுரை தள்ளப் பேசிக்
கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
சாதாரண மலையாளியையும் இந்துவையும் பொறுத்தவரை
இந்த முழு விவகாரமும் ஊடகம், புராணிகர்கள், அரசியல்வாதிகள்
ஆகியோரின் கூட்டணி விற்பனைத் தந்திரங்களில் ஒன்றுதான்.
இந்தக் கதையின் துக்ககரமான பகுதி
கேரளத்திலுள்ள புகழ்பெற்ற பெண்ணியவாதிகளின் நிலை பற்றியது.
பெண்கள்மீது அவதூறைப் பொழியாமல், அவர்களைச் சிதைக்காமல் ஜெயமாலா
- ஐயப்பன் பேரால் பெண்களின் ஆன்மீக மரியாதையைக் கற்பழிக்காமல்
ஊடகங்களின் ஒருநாள்கூடக் கடந்து போகவில்லை. ஆனால் நம்புங்கள்,
சக்திவாய்ந்த பெண்ணியவாதிகளின் மௌனம் என் காதைக் கிழிக்கிறது.
முன்னாள் நக்சலைட்டும் பெண்ணியவாதியுமான அஜிதா போன்றவர்கள்கூட
அந்தப் பாவத்தைச் செய்ய இருவரின் பங்கு வேண்டும் என்றபோதும்
விபச்சாரத்தை மட்டுமே பெண்ணுக்கு எதிரானதாகப் பார்க்கிறார்கள்.
ஜெயமாலா டைப் குறுக்கீடுகளால் நிச்சயமாக
ஐயப்பன் மகிழ்ந்திருப்பார். தங்களது பாவங்களை அவர்மீது
போட்டுவிட்டு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதற்காக
அவசரப்படும் கறுப்பாடை அணிந்த, தாடி வளர்த்த, இறுக்கமும்
மங்கலானதுமான ஆண் பிரம்மச்சாரிகளின் ஓயாத கூட்டத்தைப் பார்த்து
அவருக்கும் பெரும் அலுப்புத் தோன்றியிருக்கும்தானே?
தெஹல்கா
15.07.2006 இதழில் வெளியானது.
ஆசிரியரின் இசைவுடன் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழில்: சுகுமாரன்
உள்ளடக்கம் |