 |
நூல்
விமர்சனக் கட்டுரை
இலக்கியக் களத்தில்
உயர்சாதிக் கூட்டணி
மு. அருணாசலத்தின் தமிழ்
இலக்கிய வரலாற்று நூல்கள்
- ஒரு விரிவான பார்வை
பொ. வேல்சாமி
புதுமைப்பித்தனின் வசவுப் பாடல்1
மூலமாக எண்பதுகளில் எனக்கு அறிமுகமானவர் மு. அருணாசலம். தமிழில்
நவீன இலக்கியத்தின் முதல் தரமான குறியீடாக மாறிவிட்ட
புதுமைப்பித்தனால் தூற்றப்பட்டதால் படுபிற்போக்குத்தனமான
தமிழ்ப் பண்டிதராக என்னுள் உருக்கொண்ட மு. அருணாசலம், தன்னுடைய
நூற்றாண்டுவாரியான இலக்கிய வரலாற்று நூல்களின் அறிமுகத்தினால்
கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய கருத்திலிருந்து என்னை மீட்டெடுத்தார்.
இருபதாண்டுகளுக்கு முன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
அவரைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் எழுதியிருந்த இலக்கிய
வரலாறுகளில் 14, 15, 16ஆம் நூற்றாண்டு (16ஆம் நூற்றாண்டு
மட்டும் 3 பாகங்கள்) நூல்கள் மட்டும்தான் கிடைத்தன. இந்த
நூல்களின் செய்திகளால் வியப்புடன் ஈர்க்கப்பட்டிருந்த நான், 'முன்
தொகுதி இலக்கிய வரலாறுகள் கிடைக்குமா ஐயா?' என்று ஆவலுடன்
கேட்டேன். ஆனால் ஆர்வமுள்ள ஓர் இளம் வாசகனிடம்
நம்பிக்கையூட்டும்படி அவர் பேசவில்லை. மற்றைய பேராசிரியர்களிடம்
இவரைப் பற்றி விசாரித்தபோது, திமிர்பிடித்த மனிதர் என்பது
போன்ற பதில்கள்தான் கிடைத்தன. அது உண்மையாகவும் இருக்கலாம்;
ஆனால் இந்தத் திமிர்பிடித்த மனிதரின் எழுத்துகளை வாசிக்காத
ஒருவருக்குப் பல நூற்றாண்டுக் காலத் தமிழ் வரலாற்றின் முகமே
தெரியாமல்போகும் நிலை ஏற்படும் என்பது உறுதி. தமிழிலக்கியம்
மட்டும் அல்லாது வடமொழிப் படிப்பு, ஆங்கிலப் புலமை,
காந்தியத்தில் ஈடுபாடு, தோட்டக் கலை முதலியவற்றில் ஆர்வம்,
சைவசித்தாந்தத் தமிழ் நூல்களில் வியக்கத்தக்க புலமை எனப்
பல்துறைக் கல்வியாளர் இவர். சைவத்திற்கு மட்டுமே 'தமிழ்'
சொந்தமானது என்ற அசைக்க முடியாத கருத்துடையவர். ஆயினும் இதே
போன்ற கருத்துடைய தமிழ்ப் 'பேராசிரியர்'களிடமிருந்து அருணாசலம்
பல இடங்களில் வேறுபட்டுக் காட்சியளிக்கிறார்.
தமிழிலக்கியத்திற்கு ஒரு வரலாற்றை உண்டாக்க
முடியும் என்ற எண்ணமே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்
தமிழர்களுக்கு ஏற்படுகின்றது. தமிழர்களிடையே தேசிய
ஒருங்கிணைப்பு என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதாகக்
கூறிக்கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினர். ஆனால் அந்த
நிகழ்வானது உயர் சாதிச் சூத்திரத் தமிழர்களும் பார்ப்பனர்களும்
தமிழ்க் கருத்தியலுக்குச் சொந்தமானவர்கள் என்பது போலக்காட்டிப்
பெரும்பான்மையான தமிழ் மக்களை இவர்களுடைய கருத்தியலும் அதன்
வழியான அதிகாரமும் இயல்பானவைதான் என்று எண்ணும்படி செய்தது.
தாங்கள் சார்ந்த சாதியின் மேலாண்மையை மற்ற தமிழ்ச்
சமூகத்தவர்களிடம் நிலைநாட்ட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்
என்பதை அது வெளிப்படுத்திவிட்டது. பார்ப்பனர்களும் உயர்சாதிச்
சூத்திரர்களும் மற்ற மக்களின் மீதான தங்கள் மேலாண்மைக்கு வலு
சேர்க்கும் கருத்தியல் நடவடிக்கையாகத்தான் இது இருந்தது.
அரசியல் சார்ந்த இந்த நடவடிக்கை இலக்கியத்தின் ஊடாகச்
செயல்பட்டது. 1930களுக்குப் பின்னர் இந்தக் களத்தில் சூத்திர
உயர்சாதியினர் பார்ப்பனர்களை வென்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இத்தகையவர்களின் எழுத்துகள் சங்க
இலக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் தேவார திருவாசகத்தையும்
அதாவது பன்னிரு சைவத் திருமுறைகளையும் வைத்தே புனையப்பட்டன.
கா.சு. பிள்ளை, இராசமாணிக்கனார், க. வெள்ளைவாரணனார், சதாசிவப்
பண்டாரத்தார் போன்றவர்களின் நூல்கள் இதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டுகள். இதே நேரத்தில் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.
மீனாட்சிசுந்தரனார் போன்றவர்கள் இந்தியத் தேசியம் என்ற
கருத்தியலின் ஊடாகத் தங்கள் எழுத்துகளை முன்வைத்தனர். இதனால்
இவர்களுடைய எழுத்துகளில் சமண, பௌத்த மதம் சார்ந்த
தமிழிலக்கியங்களும் சமஸ்கிருத இலக்கிய, இலக்கணங்களின் சிறப்பும்
முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனால் இவர்கள் தமிழ்த் துரோகிகள்
என்றும் பழிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருடைய எழுத்துகளும்
தமிழிலக்கியப் பரப்பின் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே
பேசின. முழுமையான தமிழிலக்கிய வரலாறு எழுதப்படாமலே கிடந்தது.
அந்தப் பகுதியில்தான் பேராசிரியர் அருணாசலத்தின் பங்களிப்பு
நிகழ்ந்தது.
சதாசிவப் பண்டாரத்தாரால் எழுதப்பட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்த 13, 14, 15ஆம்
நூற்றாண்டு இலக்கிய வரலாறு என்ற நூல் 100 பக்கங்களுக்குள்
உள்ளதுதான். ஆனால் அருணாசலம் அவர்களின் 13, 14, 15ஆம்
நூற்றாண்டு இலக்கிய வரலாறு 1,300 பக்கங்களுக்கு மேற்பட்டது
என்பது கவனிக்கத்தக்கது. இவருடைய நூலாக்க முறைமையும்
மற்றவர்களிடமிருந்து வேறானது மட்டுமல்ல; நவீனமானதும்கூட. அதாவது
இவருடைய நூலின் முன்பகுதியிலே நூலாக்கத்திற்கான காரணங்களாகக்
கூறும் ஒரு விரிவான ஆய்வு, முன்னுரை, இலக்கிய ஆசிரியர், இலக்கண
ஆசிரியர், சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், ஜைன இலக்கியம்,
பௌத்த இலக்கியம், பிரபந்த இலக்கியம், வேதாந்த இலக்கியம்,
சித்தர் இலக்கியம், பிற்சேர்க்கையினுள் சைவப் பரம்பரை, வைணவப்
பரம்பரை, ஆதார நூல்கள், ஆசிரியர் பெயர், கால அட்டவணை, ஆசிரியர்
கால ஒப்புமை அட்டவணை, ஆராய்ந்த நூல்கள் என்று பல பகுதிகள்
குறிப்பிடப்படும். இதுவன்றியும் இவருடைய தொகுதிகள் அனைத்திலும்
நூற்றுக்கணக்கான பக்கங்களில் அடிக் குறிப்புகள்
நிறைந்திருக்கும்.
சைவ மதம் சார்ந்த கண்ணோட்டமுள்ள இவர்,
தன்னுடைய நூல்களை ஒரு தேர்ந்த கல்வியாளர் என்ற நிலையிலேயே எழுத
முயற்சித்திருக்கிறார். அதில் பாதிக்கு மேல் வெற்றியும்
பெற்றுவிட்டார் என்று கூறலாம். இத்தகைய தன்மையிலான நூல்களை
எழுதும் ஆர்வத்தை இவரிடம் தோற்றுவித்தவர் திருவாரூர் சோம
சுந்தர தேசிகர். தேசிகர் எழுதிய 16, 17ஆம் நூற்றாண்டுத்
தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல்களை அவர் தமக்கு
முன்மாதிரியாகக் கொண்டார். முதல் முதலாகப் பதினான்காம்
நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் 1969இல் இவரால்
வெளியிடப்படுகின்றது. அந்த நூலின் பெரும்பகுதி சைவ நூல்கள்
பற்றியதாகவே உள்ளது கவனிக்கத்தக்கது.
மதத்தின் அடிப்படையிலான பார்ப்பன, சூத்திர
உள்ளாட்சி (சிவில்) அதிகாரம் என்பது இஸ்லாமியர் நுழைவால்
(1311) 14ஆம் நூற்றாண்டில் கலகலத்துப் போனது. மதமும் கோவிலும்
சார்ந்த கருத்தியல் நிலையிலான அரசு அதிகாரம் வலுவிழந்துபோன
நிலையில் அதனை எப்படி மீட்டெடுப்பது என்று சிந்தித்திருந்தனர்.
அரை நூற்றாண்டுக் காலத்திற்குப் பின் ஆந்திராவில் உருவான
விஜயநகரத்தைச் சேர்ந்த சூத்திர அரசர்களுடன் இணைந்து
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் உயர்சாதிச் சூத்திரர்களும் தமிழ்
மக்கள்மீதான தங்கள் பழைய அதிகாரத்தை மீட்டுருவாக்கும்
முயற்சியில் ஈடுபட்டனர். (பின்னர் வந்த நூற்றாண்டுகளில் விஜய
நகரம் சார்ந்த சூத்திர அரசர்கள் வலிமை குன்றியபோது மராட்டியச்
சூத்திரர்களுடனும் சந்தா சாகிப் போன்ற இஸ்லாமியர்களுடனும்
இவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டதும் கவனிக்கத்தக்கது. இதனை
மறைத்துவிட்டுக் க.ப. அறவாணன் போன்றவர்கள் தமிழரின் மீதான
அயலவர் படையெடுப்பு என்று தொடர்ந்து கூறிவருவது வரலாற்றைத்
திரித்துப் புரட்டுவதாகும்.)2
கலகலத்துப்போன அரசியல் அதிகாரக் கட்டுமானத்தை
இந்துத்துவக் கூட்டுடன் மீட்டெடுத்துக்கொண்ட இந்தக்
கூட்டாளிகள்3 அரசியல் அதிகாரம் தலைமுறை தலை
முறையாகத் தங்கள் சந்ததியினர் கையிலேயே தொடர்ந்து இருப்பதற்கான
கருத்தியல் கட்டுமானங்களைப் புனைந்து உருவாக்கும்
செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதற்கு சமஸ்கிருதத்தையும்
அத்வைதத்தையும் வைணவ சித்தாந்தங்களையும் கைக்கொண்டு
சூத்திரர்களுக்குச் சைவசித்தாந்தத்தை உரிமையாக்கிச் செயல்பட
ஆரம்பித்தனர். சாதியால் பிளவுண்டு கிடந்தாலும் மொழியால்
ஒருநிலைப்பட்ட தமிழ் மக்களை அணுகுவதற்குப் பழந்தமிழ் நூல்களைத்
தங்களுடைய கருத்தியல் ஆயுதமாக மாற்றினர். இந்தச்
செயல்பாடுகள்தான் பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதும் பணியாகச்
சொல்லப்படுவது.
சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம்,
திருக்குறள் போன்ற நூல்களுக்கான உரைகள் நுட்பமான பல அரிய
செய்திகளைப் பிற்காலத்தவர்களுக்குத் தெரிவிப்பனவாக இருந்தாலும்
அவற்றின் அடிப்படை, அந்நூல்களுக்குப் பூணூல் அணிவித்தலும் சைவ
தீட்சை செய்வதும்தான். இப்பணிகளின் தொடர்ச்சியாகச் சைவ
சித்தாந்த நூல்கள், வேதாந்த நூல்கள், இவற்றின் பொதுமக்கள்
வடிவமான இசையும் தாளமும் சார்ந்த பிரபந்த நூல்கள், கீர்த்தனை
நூல்கள், தலபுராணங்கள் போன்றவை தோன்றின.
இருபதாம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றில்
மேலாண்மை பெறுவதற்குச் சங்க நூல்கள், தொல்காப்பியம்,
திருக்குறள், காப்பியங்களில் சிலப்பதிகாரம் ஆகியவை
மட்டும் இவர்களுக்குப் போதுமானவையாக இருந்தன. ஆகவே 13ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்தைய நூல்களும் இலக்கிய வரலாறுகளும் (அவை
சைவ நூல்களே ஆயினும்) பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன.
தேர்ந்த கல்வியாளரான மு. அருணாசலம் தன்னுடைய ஆரம்பகால நூலான
சைவ சித்தாந்தச் சிறு நூல்கள் என்ற நூலிலேயே இதனை
இனங்காட்டுகிறார். பின்வந்த காலங்களில் தன்னுடைய கடும்
உழைப்பின் துணைகொண்டு பெருநூல்களாக விரித்து எழுதுகிறார்.
அப்பொழுது சைவ நூல்கள் மட்டுமல்லாது ஜைனம், பௌத்தம், இஸ்லாம்
தொடர்பான நூல்களையும் இலக்கணம், மதத் தத்துவம் சார்ந்த
நூல்களையும் உள்ளடக்குகிறார்.4 இதில் அவர் திரட்டித்
தரும் பல செய்திகள் புதுமையாகவுள்ளன. தமிழ் நூல் பரப்பு என்பது
விரிவானது, ஆழமானது, தொடர்ந்த வரலாறு உடையது, என நமக்குப்
புரியவைக்கிறார். இந்தப் பணிகளின் ஊடாக மதம் சார்ந்த ஒருவர்
தமிழ் மொழி சார்ந்த ஒருவராக நமக்குக் காட்சியளிக்கிறார்.
பாடத் திட்ட இலக்கிய வரலாறு என்பது
வரைபடத்தில் (மேப்) நகரங்களைப் பார்ப்பது போன்றதாகும். ஆனால்
தமிழ்ச் சூழலில் உண்மையான தமிழ் இலக்கிய வரலாறு பாடத்
திட்டத்தில் உள்ளதுதான் என்ற எண்ணம் கல்வியாளர்களிடம்கூட
நிலைபெற்று இருக்கிறது. இதன் விளைவாகத் தமிழ் மொழி பற்றியும்
தமிழிலக்கியம் பற்றியும் எதார்த்தத்திற்குப் புறம்பான
கருத்துகளே ஆட்சி செலுத்திவருகின்றன. இந்த நிலையை
மாற்றியமைக்கச் சிலர் முயன்றனர். அவர்களுள் வையாபுரிப் பிள்ளை,
தெ.பொ.மீ. போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால்
இவர்களாலும் அந்தப் பணி முழுமை அடையவில்லை. இந்தப் பணியை
ஏற்றுக் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பகுதியை முழுமை பெறச்
செய்தவர் மு. அருணாசலம் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மற்றவர்கள் யாரும் பார்க்காது விட்ட,
ஆனால் தமிழிலக்கியத்தின் செல்நெறியை வெளிப்படுத்திக் காட்டும்
பல நூல்களைப் பற்றிய தகவல்களை மு. அருணாசலம் சுட்டிக்காட்டும்
முறையில் காணலாம். இவருடைய இலக்கிய வரலாற்று நூல்களுள் முதலாவது
நூலாக ஒன்பதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு இருக்கிறது. ஒன்பதாம்
நூற்றாண்டிற்குரிய சிறப்பம்சங்களாக இவர் குறிப்பிடுபவை: தமிழில்
நிகண்டு நூல்கள் முதல் முதலில் தோன்றியது - சேந்தன் திவாகரம்;
தமிழில் இசை இலக்கணம் இயம்பும் நூல்கள் தோன்றியது - பஞ்சமரபு;
பிரபந்த இலக்கியத்தைச் சார்ந்த கலம்பக இலக்கிய வகையில்
முதன்முதலாக நூல் தோன்றியது - நந்திக் கலம்பகம்; சமண சமயம்
சார்ந்த தமிழிலக்கியத்தில் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற
அமைப்புடைய 'பாவைப் பாட்டு' தோன்றியது. இது திருப்பாவை,
திருவெம்பாவை தோன்றியதற்கு முந்தியதாக அமைந் திருக்கலாம்.
பௌத்தத் தமிழிலக்கியத்தில் விம்பிசாரக் கதை, சித்தாந்தத் தொகை,
திருப்பதிகம், மானாவூர்ப் பதிகம் போன்ற சிறுநூல்கள்
எழுதப்பட்டன. இவ்வாறு சில புதிய வகையான நூல்கள்
தமிழிலக்கியத்தில் முதன்முதலாகத் தோன்றி நிலைபெறுவதை இந்
நூற்றாண்டு வரலாற்றில் நன்கு விளக்குகிறார்.
பத்தாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றின்
சிறப்பு பற்றி ஆசிரியரே முகவுரையில் கூறுவது,
"இந்த நூலில் தரப்பட்ட விளக்கங்களில்,
கண்டராதித்தர் வரலாறும் காலமும், அவர் திருவிசைப்பா
எழுதுவதற்குக் காரணமாயிருந்தமையும் சொல்லப்பெறுவது, தமிழ்
வரலாற்றில் ஒரு புதிய விளக்கம். பதினொராந் திருமுறை பற்றிய
விளக்கமும், அதனுள் நூல் செய்த பட்டினத்தார் வரலாறு, வரகுண
பாண்டியன் வரலாறு என்பனவும் சிறப்பானவை. வைணவ ஆசாரியர் பற்றிய
ஆராய்ச்சி, தமிழ் இலக்கிய வரலாறு கூறுவோர் பொதுவாகச்
சொல்வதில்லை. இருப்பினும், 5-6 நூற்றாண்டுகளில் அந்தாதிகள்
பாடிய முதலாழ்வார் தொடங்கி, பல வைணவ இதிகாசங்கள் எழுந்த 16ஆம்
நூற்றாண்டு வரையில், வளர்ந்த வைணவ இலக்கியத் தொடர்பை
இவ்வரலாற்று நூல்களில் ஆசாரியர் வரலாறு மூலம்
விளக்கியிருக்கிறோம். இம்மரபில் நூல் எழுந்த காலமும் உண்டு,
எழாத காலமும் உண்டு; தொடர்புக்காகவே இவ்வாசாரியரைத் தவறாமல்
குறிப்பிடுகிறோம். நூல் பற்றி இவ்வரலாறு தரும் விளக்கங்களில்
பிங்கல நிகண்டு, பன்னிரு பாட்டியல், பெரும் பொருள் விளக்கம்
என்பன முக்கியமானவை; சூளாமணிக் காப்பிய ஆராய்ச்சி அதிகம்
சிறப்புடையது; கல்வெட்டில் கண்ட திரிசிராமலையந்தாதியும்
சிறப்புடையது. காலம் பற்றிய விளக்கங்களில், நக்கீரதேவர்,
பரணதேவர், பட்டினத்தார், கண்டராதித்தர், சினேந்திரமாலை என்பன
குறிப்பிடத்தக்கவை. தொட்ட இடமெல்லாம் இங்குக் கருத்து பற்றிய
விளக்கம் காணலாம். பிங்கல நிகண்டு ஆராய்ச்சி இப்பகுதியில்
சிறப்பானது. வரலாறு விளங்காத பல சைன நூல்களை ஒரு தொகுப்பாய்
இங்கு ஆராய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உரைநடை வளர்ச்சியை ஆராய்வதற்குத் துணையாக
இந்நூலில் இரு உரைகளிலிருந்தும் பல சோழர் சாசனங்களிலிருந்தும்
எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு உள்ளன." (முகவுரை, பக்-x)
மேலும் ஒன்பதாம் திருமுறையில் உள்ள
திருவிசைப்பா பாடலைப் பாடிய சேந்தனார், நந்தனாரைப் போலப் பறையர்
குலத்தவர் என்ற குறிப்பும் வைணவ ஆசிரியர்களில் ஈசுவரமுனி,
திருக்கண்ண மங்கையாண்டான், வங்கிபுரத்தாய்ச்சி மேலும் சமண
நூல்களான அமிர்தபதி, நாரத சரிதை, பிங்கல சரிதை, வாமன சரிதை
போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் வக்கினக்கிரந்தம் என்ற
வக்கானிக்கிரந்தம் (வக்கானித்தல் - விவாதம் செய்தல்) போன்ற
தருக்க நூல் குறிப்புகளும் திரையக் காணம், தேசிகமாலை போன்ற
நூல்களைப் பற்றிய குறிப்புகளும் பிடவூர் வேளாளர் தந்தை என்ற
புலவர் பற்றிய குறிப்புகளும், தேசபக்தர் வ.உ. சிதம்பரம்
பிள்ளையை சொர்ணம்பிள்ளை என்ற ஒருவர் 'இன்னிலை' என்ற
நூல்சுவடியைக் கொடுத்து ஏமாற்றிய கதையையும் கூறும் பகுதிகள்
குறிப்பிடத் தக்கன.
பதினோராம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்று
முகவுரையில் வேறு எந்தத் தமிழாசிரியரும் கவலைப்படாத தங்கள்
நூல்களின் அச்சு வடிவம், அமைப்புப் பற்றி அருணாசலம் அவர்கள்,
"பொதுவாக பழைய பைகா எழுத்தும் அதுபோன்ற புது
எழுத்துகளும், வலப்புறம் சிறிதே சாய்ந்திருக்கும். இது
கண்ணுக்கு ஓர் ஓட்டங் கொடுத்து, எவ்வளவு நேரம் படித்தாலும்
சோர்வு தோன்றாதபடியும், படிக்க வசதியாயும் இருந்தது.
எழுத்திலுள்ள இயல்பான மென்மை - தடிப்பு ஆகிய கோடுகள் கண்ணுக்கு
இதமாயிருக்கும். இதை விட்டு அனேகர், சிறந்த இலக்கியங்களைக்கூட,
மெலிந்த எழுத்திலும் (தின் டைப்), சுருங்கிய எழுத்திலும் (கண்டென்ஸ்டு
டைப்), தடித்த எழுத்திலும் (போல்டு) அச்சிட்டிருக்கிறார்கள்.
இந்த மூன்றும் படிக்க வசதி தராதவை. தினசரிப் பத்திரிகை எப்படி
வேண்டுமானாலும் அச்சிடலாம்; இது பார்த்த பின் தூக்கி எறிய
வேண்டியது. ஆனால் உண்மை இலக்கியங்கள் இப்படியல்ல; நீண்ட நாள்
சோர்வு அடையாமல் பல முறை படித்தற்குரியவை. படிப்பதற்கு அச்சு
முறையும் துணைபுரிய வேண்டும்.
ஆங்கில எழுத்து செங்குத்தாயிருக்கிறதேயென்று
சொல்லிப் பயனில்லை. ஒவ்வொரு மொழிக்கும் தனியான ஒரு பண்பு உண்டு.
ஒன்று மற்றதற்குப் பொருந்தாது. தமிழ் எழுத்துச் சிறிது
சாய்ந்திருப்பதே அழகு, படிக்க வசதி என்று பெரிய நூல்களைப்
படிக்கின்றவர்களுக்கு அச்சும் அமைப்பும் இடையூறாக இல்லாமல்
வசதியாக இருக்க வேண்டும்" (பக். xiii-xiv)
என்று கவலை கொண்டு எழுதுவது கவனிக்கத்தக்கது.
நம்பியாண்டார் நம்பி, இராமானுஜர், பொன்னவன்
கனாநூல் போன்ற குறிப்புகள் கவனிக்கத்தக்கன. பிற்சேர்க்கையில்
வ.உ. சிதம்பரனார் முதல் முதலாகப் பதிப்பித்த தொல்காப்பியம்
பொருளதிகாரம் இளம்பூரணர் உரையைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் முன்னர் பதிப்பித்தவர்க்கு நன்றிகூடக் கூறாமல்
மறுபதிப்புச் செய்த நியாயமற்ற செயல், அந்தப் பதிப்பில் கழகம்,
சிதம்பரனார் இளம்பூரணர் உரை சிதைந்த இடங்களில்
நச்சினார்க்கினியர் போன்றவர்களின் உரையைப் பகர அடைப்புக்குள்
போட்டு நிறைவு செய்திருந்ததைக் கழக வெளியீட்டில் பகர அடைப்புகளை
நீக்கிவிட்டு அச்சிடப்பட்ட பதிப்பு நேர்மையற்ற செயல்
ஆகியவற்றைக் கண்டித்து எழுதும் பகுதியும் வைணவ குரு பரம்பரை
வரலாறுகள், தொல்காப்பிய உரை பதிப்புகள், வைணவ ஆசாரிய பரம்பரை
போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.
பன்னிரண்டாம் நூற்றாண்டு என்றாலே தமிழ்
இலக்கியப் பயிற்சி உடையவர்களுக்குச் சேக்கிழார், ஒட்டக்கூத்தர்,
ஜெயங்கொண்டார் போன்ற புலவர்கள் நினைவுக்கு வருவார்கள். இரண்டு
பாகங்களாலான இந்த நூற்றாண்டு வரலாற்று நூலில் முழுமையும்
இவர்களைப் பற்றித்தான் பேசப்படுகிறது. சைவ சமயத்தின் மேல்
பற்றுக் கொண்ட அருணாசலம் இந்த நூற்றாண்டைத் தமிழ்நாட்டின்
பொற்காலம் என்பார். தமிழ்நாட்டிற்குப் பொற்காலமோ இல்லையோ,
உயர்சாதிச் சூத்திரத் தமிழர்களுக்கு அது பொற்காலம்தான். அவர்கள்
பார்ப்பனர்களை அடுத்துத் தமிழ்நாட்டின் நிலவுடைமையாளர்களாக இடம்
பெற்றதும் கோவில்களை மையமாகக் கொண்ட உள் நாட்டு ஆட்சி
நிர்வாகத்தில் பங்கு பெற்றதும் இந்தக் காலத்தில்தான் என்பதை
அக்காலக் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. திருவுந்தியார்,
திருக்களிற்றுப்படியார், ஞானாமிர்தம் போன்ற இந்நூற்றாண்டைச்
சேர்ந்த சைவ சித்தாந்தம் பேசும் நூல்கள் உயர்சாதிச் சூத்திரத்
தமிழர்கள் நிலக்கிழமை, ஆட்சியதிகாரத்தில் பங்கு போன்றவற்றுடன்
மத நிறுவனம் சார்ந்த தெய்வீகத் தலைமையைப் பெறுவதிலும் முனைந்து
செயல்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. அடுத்து வந்த
காலங்களில் நடந்த 'குகையிடி'க் கலகங்கள், சூத்திர உயர்சாதித்
தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மீகத் தலைமையகங்கள்மீது
பார்ப்பனர்கள் நடத்திய தாக்குதல்தான் என்று தற்கால
ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவது சரியானதுதான் என்பதைத்
தெரிவிக்கின்றன.
பெருந்தேவனாரின் வீரசோழிய நூலுக்கான உரை,
தண்டியலங்கார நூல் பற்றிய குறிப்புகள், நேமிநாதம், வச்சணந்தி
மாலை, சமண சமய மரபுகளைக் கூறும் அருங்கலச் செப்பு போன்ற நூல்கள்
இந்த நூற்றாண்டிலும் தமிழ் மொழிக் கல்வி என்பது இன்னும் சமண
மதத்தவர் வசமிருந்து சைவ மதத்தவர் கைகளுக்கு முழுமையாக
மாறவில்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றன.5 பதினோராம்
நூற்றாண்டு நூலிலுள்ள 'ஔவையார்' பற்றிய குறிப்புகளும் 'கத்தியார்'
பற்றிய குறிப்புகளும் சமண சமயத்தில் பெண்கள் துறவியாக
ஏற்கப்பட்டனர் என்பதையும் அவர்கள் நல்ல தமிழ்ப் புலமை
பெற்றிருந்ததோடு பல தமிழ் நூல்களை இயற்றியும் இருக்கின்றனர்
என்பதையும் விளக்குகின்றன. கிறிஸ்தவ மதத்தில் பெண் துறவிகளைச்
'சகோதரி' என்று அழைப்பது போன்று சமண மதம் சார்ந்த பெண்
துறவிகளைக் கத்தியார் என்றும் ஔவையார் என்றும்
அழைத்திருக்கின்றனர்.
"நூற்றாண்டு வரையறை என்பது ஒரு செயற்கையான
வரையறையே. சில ஆசிரியர் ஒரு நூற்றாண்டில் பிறந்து வளர்ந்து,
அடுத்த நூற்றாண்டில் வயதில் முதிர்ச்சி பெற்று நூல்கள் செய்து
புகழ் எய்தியிருத்தல் இயல்பே. உதாரணம்: குலோத்துங்க சோழன்
கோவையாசிரியர். இவர் நூல் செய்தது, நிலைமைகளையொட்டி கி.பி.
1205 என்று எழுதுகிறோம். இவர் 12ஆம் நூற்றாண்டிலேயே பெரும்
புலவராயிருந்திருப்பார். எனினும், இவர் செய்த நூலின் காலம்
1205ஐ ஒட்டியிருக்குமென்று கருதுவதால் இவர் வரலாற்றையும்
நூலையும் 13ஆம் நூற்றாண்டு வரலாற்றில் கூறுகிறோம்;
இக்குலோத்துங்க சோழனுக்குரிய ஆட்சிக்காலம் கி.பி. 1178 - 1218
என்பதையும் கருதுக. இதுபோல், நன்னூலார் காலம் கி.பி. 1212 என்று
கூறுகிறோம். இது எதனால் என்றால், இவரை ஆதரித்த சீயகங்கன்
பொறித்த கல்வெட்டொன்று 1212-க்குரியதாய்த் தெரிவதால்; பவணந்தி
முனிவர் நன்னூல் செய்தது இவ் ஆண்டுக்கு முன்னுமிருக்கலாம்,
பின்னுமிருக்கலாம். மிக முன்னாக இருந்தால், 12ஆம் நூற்றாண்டின்
இறுதியாதலும் கூடும். எனினும், தெரிந்த ஓர் எல்லையைக்
குறிப்பிட்டுக் கூறுதலே சாத்தியம் ஆதலால், இவரை 13ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்று கூறுகிறோம்." (பக்.
v-vi)
நூற்றாண்டுவாரியான வரலாற்று நூல்களின் தன்மை
எப்படியிருக்கும் என்பதை மேற்கூறியவாறு பதின் மூன்றாம்
நூற்றாண்டு முகவுரையில் விவரித்துவிட்டு இந்த நூற்றாண்டைப்
பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.
500 ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்துவந்த வைதிகப்
பார்ப்பனியத்திற்கும் சூத்திர நிலவுடைமைக்கும் அடிப்படையான சைவ,
வைணவக் கோவில்கள் இஸ்லாமியர்களால் கொள்ளையடிக்கப்பட்டும்,
மூன்று தலைமுறைக் காலமாகப் பூஜை முதலிய விழாக்கள் இன்றி
மூடப்பட்டும் இருந்த காலம் இது. இந்துத்துவக் கொடுங் கோன்மை
அரசர்கள் தங்களுக்குள் இருந்த போட்டியில் டெல்லியிலிருந்த
இஸ்லாமியரை அழைத்து வந்து தமிழகத்தைக் காட்டிக் கொடுத்ததுடன்,
அதுகாலம் வரை வலுவாக இருந்து இத்தகைய கொடுங்கோலர்களைக்
களிப்புடன் வாழவைத்த சாதிய அமைப்பையும் கலகலத்துப் போகச் செய்த
காலம் இது. அடுத்து வந்த காலங்களிலும் சைவம், வைணவம் சார்ந்த
கொடுங்கோல் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை
மீட்டெடுப்பதற்காகச் சிறிதும் வெட்கமின்றி விஜயநகரத்தைச்
சேர்ந்த இந்துத்துவ தெலுங்கர்களுடன் கும்மாளமிட்ட காலம் இது.
எத்தகைய சிறப்புப் பெற்ற தமிழறிஞராயினும் தன்
சாதி, தன் மதம் என்று வரும்போது வழுக்கி விழுந்துவிடுவார்கள்
என்பதற்கு மு. அருணாசலமும் விதிவிலக்கு அல்ல. தமிழ்நாட்டிற்குள்
இஸ்லாமியர்கள் படையெடுத்து வரவில்லை; பாண்டியர்களால் அழைத்து
வரப்பட்டனர் என்பதை அவரே ஆதாரத்துடன் கூறிவிட்டு, அந்தப்
பத்தியின் இறுதியிலேயே படையெடுத்து வந்து அவர்கள் மதுரையை
அழித்தனர்; பாண்டியரும் அழித்தனர்; தமிழராட்சியும் அழிந்தது
என்று எழுதுவதைப் பாருங்கள்.
"இக்குலசேகரன் பிள்ளைகள் இருவர்;
பட்டத்தரசியின் புதல்வனான சுந்தரபாண்டியனும், காதற்கிழத்தியின்
புதல்வனான வீரபாண்டியனும். இருவருள் இளையவனான வீரபாண்டியனே
நாடாளும் தகுதியுடையவனெனக் கருதி 1296இல் குலசேகர பாண்டியன்
இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். இதனால் கோபமடைந்திருந்த
சுந்தரபாண்டியன் சமயம் பார்த்திருந்து, 1310இல் தந்தையைக்
கொன்று, தான் முடிசூடினான். ஆனாலும் அரசு நிலைக்கவில்லை.
அடுத்த போரில் இவன் வீரபாண்டியனிடம் தோற்றோடி, டில்லியில் அரசு
புரிந்த அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனாய்த் தென்னாடு
வந்திருந்த மாலிக்காபூரின் துணையை நாட, அவன் பாண்டி நாட்டைச்
சூறையாடி, மதுரையை அழித்தான்; இரு பாண்டியரின் செல்வங்களையுமே
டில்லிக்குக் கொண்டு சென்றுவிட்டான். (டில்லிக்குக் கொண்டு
சென்ற செல்வம் 612 யானை; 20 ஆயிரம் குதிரை, 96 ஆயிரம் மணங்கு
பொன் முத்துக்கள் அணிகலன்கள்.) சுமார் கி.பி. 1330 முதல் 1378
வரை மதுரையில் முகம்மதியர் ஆட்சி, கோயில்கள் கொள்ளையிடப்பட்டு,
வழிபாடெல்லாம் நின்றுபோயிற்று. பின்னர் விஜயநகர வேந்தர் தலைவன்
குமாரகம்பண்ணன் படையெடுத்து முகமதியரை ஓட்டி, மதுரையைப்
புனர்நிர்மாணம் செய்தான். இங்ஙனமாக, முகம்மதியர் படையெடுப்பு
ஏற& |