|
கட்டுரை: மும்பை குண்டு வெடிப்பு
முற்றுகைக் காலம்
அம்பை
என் குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு
ஆண்டுகள் மும்பையில்தான் கழிந்தன. அதன் பின்புதான் பெங்களூர்,
சென்னை,
தில்லி எல்லாம். பதினோரு வருடங்கள் டெல்லியில்
கழித்துவிட்டு, 1978இல் மீண்டும் மும்பை வந்தபோது ஒரு விடுதலை
உணர்வு ஏற்பட்டது. உடலெல்லாம் லேசாகிப் பறக்கும் உணர்வு. எந்த
நேரத்திலும் எங்கும் செல்லக்கூடிய சுதந்திரம். தில்லியில்
அகன்ற வீதிகள் உண்டு. ஆனால் இரவில் நடக்க முடியாது. ஏழரை
மணிக்குப் பிறகு தனியாகவோ துணையுடனோ வெளியே பயமில்லாமல் போக
முடியாது. மும்பை அப்படி அல்ல. மின்சார ரயிலில் எந்த
நேரத்திலும் எங்கும் போக முடியும். அடாது மழை பெய்தாலும்
மும்பையின் பேருந்துகள் விடிகாலையில் தெருவில் ஓட
ஆரம்பித்துவிடும். எதற்கும் நிற்காத நகரம் மும்பாய். தூங்காத
நகரம். மும்பையில் வசித்தவர்கள் வேறெங்கும் வசிப்பது சிரமம்.
ஒரு முறை திருநெல்வேலி அருகே ஒரு சிற்றூரில் பேருந்து ஒன்றில்
பயணித்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி என்னருகே வந்து
அமர்ந்துகொண்டார். நான் மும்பையிலிருந்து வருகிறேன் என்றதும்
பரவசமானார். "நானும் மும்பைதான். தாராவியில இருந்தோம். பாருங்க,
இங்க கூட்டிட்டு வந்துட்டாரு. மனசே ஒட்டல" என்று தவித்தார்.
பாரீஸ் பற்றி ஒரு கதை சொல்வார்கள். பாரீஸில் ஒரு சாதாரண நபரிடம்
ஒருவர், "நீங்கள் உலகம் சுற்ற விரும்பவில்லையா?" என்று
கேட்டபோது, "நான் எதற்காக உலகம் சுற்ற வேண்டும், நான் பாரீஸில்
இருக்கும்போது?" என்று பதில் சொன்னாராம். மும்பையில்
இருப்பவர்களின் உணர்வும் கிட்டத்தட்ட அது போன்றதுதான்.
ஆம்சி மும்பை (எங்கள் மும்பை) என்று
பெருமையுடன் எல்லோரும் கூறிக்கொள்ளும் மும்பையில் இந்தியாவின்
அனைத்து மொழிகளும் ஒலிக்கின்றன என்று கூறலாம். மகாராஷ்டிர மண்,
மண்ணின் மைந்தர்கள் என்று சிவசேனா போன்ற இயக்கங்கள் தொடர்ந்து
மும்பையின் இயல்பைக் குறுக்கி அதை ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின்
நகரமாக்க முயன்றபோதும் மும்பையின் திறந்த கதவுகளை மூட
முடியவில்லை. ஓர் ஆட்டோ ஓட்டுனரிடம் ஒரு முறை
பேசிக்கொண்டிருந்தபோது, "உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்து
மகாராஷ்டிரத்தில் இருக்கிறீர்களாக்கும்?" என்றபோது, ஓமன்னிக்க
வேண்டும். நான் மும்பையில் இருக்கிறேன். மகாராஷ்டிரத்தில்
அல்லஔ என்று பதில் சொன்னார். மும்பை நாட்டின் வியாபாரத்
தலைநகரம். அது அனைவருக்கும் உரியது; மகாராஷ்டிரத்துக்கு மட்டும்
அல்ல என்ற உணர்வு இங்கு கால் பதிக்க வரும் அனைவருக்கும்
இருக்கிறது. சிவசேனாவின் கூச்சல்களையும் போராட்டங்களையும் புறம்
தள்ளிவிட்டு மும்பை அனைவருக்குமான நகரமாக இயங்கி வந்திருக்கிறது.
எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் இந்தச்
சித்திரம் குலையத் தொடங்கியது 1992 டிசம்பர் ஆறாம் தேதி பாபர்
மசூதி இடிபட்ட பிறகுதான். இதற்கு முன்பும் புகைச்சல்களும் சில
கலவரங்களும் இல்லாமல் இல்லை. பீவன்டியில் 1984இல் பெரிய
இனக்கலவரம் வெடித்தபோது மத நல்லிணக்கக் குழுக்களும்
மற்றவர்களும் விரைந்து செயல்பட்டு அரசாங்கத்துடன் உழைத்து,
பீவன்டியை ஒரு முன்மாதிரி ஆக்கிக் காட்டினர். 1992இல்கூட
பீவன்டி தன் அமைதியைப் பாதுகாத்தது.
பாபர் மசூதி இடிப்பும் 1992இல் மும்பையிலும்
குஜராத்திலும் நடந்த கலவரங்களும் விபரீதமாகவும் அபத்தமாகவும்
பேசியவர்களின் பேச்சுகளை லட்சியம் செய்யாமல், அவற்றைப்
புறக்கணிப்பதே அவற்றுக்கான பதில் என்று எண்ணிய என்னைப்
போன்றவர்களை உலுக்கிவிட்டன. ஜனவரி மற்றும் பிப்ரவரி 1993இல் இனி
மௌனம் பயன் தராது என்று பல குழுக்கள் களத்தில் இறங்கிச்
செயல்படத் தொடங்கின. அப்படியும் மார்ச் 1993இல் நடந்த தொடர்
குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து மும்பை ஒரு பாதுகாப்பான நகரம்
என்ற பிம்பம் சிதையத் தொடங்கியது. மார்ச் 1993இல் மும்பை
பங்குச் சந்தைக் கட்டடம் முதலில் தாக்கப்பட்டபோது நான் சற்று
அருகே ஃப்ளோரா ஃபவுன்டன் பகுதியில்தான் இருந்தேன். ஸ்பாரோ
வேலைக்காக ஆடிட்டரைப் பார்க்க வந்திருந்தேன். அந்தப் பகுதியே
கொந்தளிப்பில் இருந்தது. அடுத்த குண்டு ஏர் இந்தியா கட்டடத்தில்
வெடித்தபோது அதன் ஒலி இதுவரை கேட்டது. கூட்டம் சர்ச்கேட் ரயில்
நிலையத்துக்கு எல்லோரையும் தள்ளியது.
நானும் தள்ளப்பட்டு ரயில் ஏறி வீடு வந்து
சேர்ந்தேன்.
1993க்குப் பிறகு மும்பையில் பதினோரு குண்டு
வெடிப்புகள் நடந்துள்ளன.
மின்சார ரயிலில் ஏற்பட்ட ஒரு
குண்டுவெடிப்பில் என் தோழி ஒருத்தி தன் முப்பது ஆண்டுத் தோழனை
இழந்தாள். ஒவ்வொரு குண்டு வெடிப்புக்குப் பிறகும் மும்பை மீண்டு
வந்தது. மறு நாளே எல்லோரும் அலுவலகங்களில் ஆஜர். விடிகாலையில்
வழக்கம்போல் தெருவில் பேருந்துகள். தெருவோரங்களில் கறிகாய், பழ
விற்பனை. 2002இல்கூட குஜராத்தில் வெடித்த இனக் கலவரம் எல்லை
தாண்டி மகாராஷ்டிரத்துக்குள் நுழையக்கூடாது என்பதில் மும்பை
கவனமாக இருந்தது. தொடர் குண்டு வெடிப்புகள் போன்ற சம்பவங்களோ
வேறு மாதிரிச் சம்பவங்களோ இனி நிகழக் கூடாது என்பதில் தீவிரக்
கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு முறை அமைதி குலையும்போதும்
மும்பை மீண்டும் புண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து நிற்கும்;
வெட்ட வெட்டத் தலை முளைக்கும் அசுரனைப் போல.
2005இல் இயற்கையின் சீற்றம் மும்பையைத்
தாக்கியது. வெள்ளம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளை மூழ்கடித்தது.
ஸ்பாரோ அலுவலகம் உள்ள பகுதி தீவிரமாகப் பாதிக்கப்பட்டது. அன்று
நாங்கள் ஒரு பத்து பேர் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு வீடு
செல்ல முடியாமல் அலுவலகத்திலேயே தங்கினோம்.
அதில் ஒரு பெண் எட்டு மாதக் கர்ப்பிணி.
அவளைப் பற்றிய கவலையில் இரவெல்லாம் உறங்க முடியவில்லை. மறு நாள்
காலை வடிந்திருந்த வெள்ளத்தினூடே மிதந்த எருமைகள், பசுக்கள் (அந்தேரிப்
பகுதியில் பால் பண்ணைகள் அதிகம். வெள்ளம் அதிகமானபோது பல
எருமைகளும் பசுக்களும் மூழ்கிப்போயின), பள்ளியிலிருந்து
அப்பாவின் முதுகிலும் வெள்ளத்தில் தடுமாறியபடியும் வந்த பள்ளிச்
சிறுமியர், சிறுவர், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்
இவற்றைத் தாண்டிப்போய் வீடு சேர்ந்தோம். ஒன்பது மணிக்கு ஸ்பாரோ
அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு - எல்லோரும் வேலைக்கு
வந்திருப்பதாக. துவண்டுவிடாத இந்தக் குணம் என்னைத் தொட்டது.
வெள்ளத்திலிருந்து மீண்டதைக் கொண்டாடினோம். மறு நாளே மும்பை
மீண்டும் அதன் தடத்தில்.
இந்த ஆண்டும் இந்த மாதம் வெள்ளம் வந்தது.
ஆனால் மும்பாய் சமாளித்துவிட்டது. அதன் பிறகு கடந்த ஞாயிறு
சிவசேனா, தான் செத்த பாம்பு அல்ல என்று நிரூபிக்கவோ என்னவோ ஒரு
கலவரத்தை உண்டாக்கியது - பால்தாக்கரேயின் மனைவி மீனாதாயியின்
சிலை மேல் யாரோ சேற்றைப் பூசி அவமதித்துவிட்டதைக் காரணம் காட்டி.
பேருந்துகள் எரிக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. இந்த
நிகழ்ச்சியைத் துச்சமாக ஒதுக்கினர் மும்பைவாசிகள்.
இரண்டே நாட்களுக்குப் பின் செவ்வாய் மாலையில்
மீண்டும் தொடர் குண்டு வெடிப்புகள். மும்பை நகரின் முக்கிய
உயிர் இணைப்பான மின்சார ரயிலில் ஏழு குண்டு வெடிப்புகள். ஸ்பாரோ
அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் பயணிப்பது மின்சார
ரயிலில்தான். அன்று வழக்கம்போல் தாமதம் செய்யாமல் சீக்கிரமாகவே
கிளம்பியிருந்தார்கள். நானும் வழக்கம்போல் ஜோகேஷ்வரி அருகே
உள்ள ரயில் பாலத்தின் கீழ் உள்ள பாதையில் சென்றிருந்தேன். வீடு
வந்து சேர்ந்ததும் குண்டு வெடிப்புச் செய்தி. எல்லோரும்
நலம்தான் என்பதைத் தெரிந்துகொள்ள இரவு பனிரெண்டு மணி வரை
ஆயிற்று. மறு நாள் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் எவையும்
மூடப்படவில்லை. விடிகாலையிலேயே மின்சார ரயில்கள் ஓடத்
தொடங்கிவிட்டன. மும்பை தீவிரவாதத்துக்குத் தலை வணங்காமல்,
வம்புப் பேச்சுகளுக்குச் செவி சாய்க்காமல், மீண்டும் தலையைத்
தூக்கியது. ஆனால் இந்த முறை முற்றுகையிடப்பட்ட ஓர் உணர்வு
மனத்தில்.
கிரேக்க நாட்டு இறந்தெழும் ஃபீனிக்ஸ்
பறவையைப் போல் மீண்டு வந்திருந்தாலும் இறக்கைகள் தளர்ந்த உணர்வு.
மும்பையில் இருக்கும் பல பிரதேசத்தவர்களுக்கு
அவரவர் ஊர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உள்ள தொடர்பு மிக
முக்கியமானது. அவர்கள் ஆம்சி மும்பைவாசிகள்தாம். ஆனாலும்
மொழியின் வேர்கள் ஆழமானவை. பல முறை காலையில் எழுந்ததும் தமிழ்
பேசவே நான் சில நண்பர்களைத் தொலை பேசி மூலம் எழுப்பியதுண்டு.
இலக்கியம் பேசவென்று பலருக்குத் தொல்லை தந்ததுண்டு.
ஆனால் 1992க்குப் பிறகு நான் இதைக்
குறைத்துக்கொண்டேன். காரணம் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ்
எழுத்தாளர்களைப் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை என்பது
புரியவந்ததால்தான். மும்பையில் எத்தனை பயங்கர குண்டு
வெடிப்புகள் நடந்தாலும் சீரழிக்கும் வெள்ளம் வந்தாலும்
புரட்டிப்போடும் கலவரங்கள் ஏற்பட்டாலும் உள்ளத்தை உலுக்கும்
நிகழ்வுகள் நேர்ந்தாலும் அவை என் தமிழ் இலக்கிய நண்பர்களை
எதுவும் செய்ய மாட்டா. மிக்க அன்புடன் கடிதம்
எழுதுபவர்களைக்கூட அவை தொடாது. நெருங்கிப் பழகிப் பேசி,
சேர்ந்து உணவுண்டு, சிரித்து மகிழ்ந்து, இரவெல்லாம் இலக்கியம்
பற்றி விவாதித்து, வாழ்க்கை பற்றிய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட
நண்பர்களைக்கூட இதெல்லாம் பாதிக்காது. அவர்கள் உலகம் வேறு.
அவர்கள் தொலைபேசியை இதற்கெல்லாம் வீணடிப்பவர்கள் அல்லர்.
செவ்வாய்த் தொடர் குண்டு வெடிப்புகளுக்குப்
பிறகு பாரீஸிலிருந்தும் லண்டனிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும்
பலர் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாச் செய்திகளும் கிணற்றில் போட்ட
கல்தான். ஒரே ஒரு தோழியைத் தவிர யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.
இந்த உதாசீனத்தை எனக்கானதாக மட்டுமல்லாமல் நாட்டின் ஒரு நகரத்தை
உதாசீனம் செய்யும் ஒரு செயலாகவே கொள்கிறேன்.
மறுநாள் காலையில் பேசிய கண்ணன், ஓநீங்கள்
இருக்கிறீங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான் கூப்பிட்டேன்ஔ
என்றார் சிரித்தபடி. மன்னித்துக்கொள் கண்ணன்; சாவுடன்
கண்ணாமூச்சி விளையாடும் மும்பைவாசிகளுக்கு இப்போது இதையெல்லாம்
ரசிக்க முடிவதில்லை; சிரிக்க முடிவதில்லை. உயிருடன்தான்
இருக்கிறேன்; மும்பை பற்றிய கதைகளையும் மற்ற கதைகளையும் எழுத.
கட்டுரை கேட்டாய். அனுப்பிவிட்டேன். இப்போதைக்கு அவ்வளவுதான்
செய்தி.
உள்ளடக்கம் |