Google   www kalachuvadu.com

ஈழத் தமிழ் அகதி முகாம்களின்
நிலைகுறித்த அறிக்கை

ரவிக்குமார்

தமிழக முதல்வரிடம் 04.07.2006 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை முழுமையாகப் பிரசுரிக்கப்படுகிறது0

இலங்கை அகதிகள் நிலை பற்றி ஆனந்த விகடனுக்காக (18.06.2006 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை எழுதியபோது அகதிகள் வாழ்வில் மாற்றமேற்பட அது தூண்டுகோலாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்குமென்று எண்ணவில்லை. ஆனந்த விகடன் இதழ் கடைகளுக்கு வருவதற்கு முன்பே காலையில் அதைப் படித்துவிட்டுத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவரை விமர்சிக்கும் விதமாக நான் எழுதியிருந்த வரிகளைக் குறிப்பிட்டு வருத்தப்பட்டதோடு ஈழப் பிரச்சினைக்காகத் தான் செய்தவற்றையும் வரிசைப்படுத்தினார்.

அவரைக் குற்றம்சாட்டுவதல்ல எனது நோக்கம். அகதிகள் பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதே எனது எண்ணமாயிருந்தது. இதனை அவரும் உணர்ந்ததால்தான் "நீங்களே அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு ஒரு அறிக்கை கொடுங்கள்" என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என எண்ணுகிறேன். முதல்வர் அவர்கள் கூறியதை ஏற்று நானும் பல்வேறு அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு அங்கே கண்டவற்றையும் விசாரித்து அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அறிக்கை தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையே இது.

அகதிகள் நிலை குறித்து ஆனந்த விகடனில் எனது கட்டுரையை வெளியிட்ட திரு. இரா. கண்ணன், ஞானவேல் ஆகியோருக்கும் ஜூனியர் விகடனில் வெளியிட்ட திரு. அறிவழகனுக்கும் நன்றி.

சில முகாம்களுக்கு என்னுடன் வருகை புரிந்ததுடன் சில பரிந்துரைகளையும் முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் எனது நன்றி.

"கண்ணீர்த் துளிகள்
சிறைக்கூடங்களாக மாறியது
எப்படி என்பதை
அகதிகளிடம்
... ... ...
கேள்"

என்கிற சேரனின் கவிதையை 1998இல் படித்தபோது அது ஒரு கட்டளையாகவே என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தது. இன்று இந்த முகாம்களை நோக்கி என்னைச் செலுத்தியது அந்த வரிகளாகவும்கூட இருக்கலாம்.

- ரவிக்குமார்

தொலைந்த திசைகள்

உலகின் ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களை மட்டுமின்றிப் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளையும் கொண்டுள்ளது. உலகப் போருக்குப் பிறகு தீவிரமடைந்த அகதிகள் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி ஐக்கிய நாடுகள் சபை 1951ஆம் ஆண்டில் அதற்கென்று ஒப்பந்தமொன்றை (1951 Convention Relating to the Status of Refugees) உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டில் உடன்படிக்கையொன்றும் (1967 Protocol Relating to the Status of Refugees)  ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்டது. 1995 அக்டோ பர் மாத நிலவரப்படி உலகில் உள்ள நூற்று முப்பது நாடுகள் இவற்றில் கையெழுத்திட்டுள்ளன. 1951 உடன்படிக்கையின் அடிப்படையில் அகதிகளுக்கென்று ஹைகமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டார் (United Nations High Commissioner for Refugees - UNHCR) அகதிகள் பிரச்சினையை மேற்பார்வையிடுவது, பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் பணிகளை ஒருங்கிணைப்பது இந்த ஹைகமிஷனின் வேலையாகும். 1951ஆம் ஆண்டு ஐ.நா. ஒப்பந்தத்தில் அகதி என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.1

நமது நாட்டில் சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் உள்ளனர். அகதிகளுக்கான அமெரிக்க கமிட்டி (U.S. Committee for Refugees and Immigrants - World Refugees Survey 2005) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2005ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுமார் 3,93,000 அகதிகள் இருந்தனர். அதில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் சுமார் 80,000 பேர்.2

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள்

1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே நின்றிருந்தது. 31.1.2005 நிலவரப்படி தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கென 103 அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பு முகாம்களாகும். மொத்தம் 14,031 குடும்பங்களைச் சோந்த 52,322 பேர் இந்த முகாம்களில் தங்கியிருந்தனர்.3

முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் மட்டுமல்லாது மேலும் பலர் தனியே தமது சொந்தப் பொறுப்பில் தங்கியுள்ளனர். புனர்வாழ்வுக் கழக அதிகாரிகளின் அனுமதி பெற்று முகாம்களுக்கு வெளியே தங்கியிருக்கும் அகதிகளுக்கு அரசு உதவி ஏதும் கிடைக்காது. ஆனால், கல்வி உள்ளிட்ட பிற சலுகைகள் அவர்களுக்குத் தரப்படும். 2003 பிப்ரவரி நிலவரப்படி 20,184 பேர் இப்படி முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்தனர்.

1985 முதல் 2005 வரை தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை அறிக்கையின் இறுதியில் உள்ள அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

2003ஆம் ஆண்டுக்குப் பிறகு நின்றிருந்த அகதிகளின் வருகை தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக மீண்டும் தொடங்கியுள்ளது. 12.01.2006இல் மீண்டும் இலங்கையிலிருந்து அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர். 25.06.2006 வரை 3,349 பேர் புதிய அகதிகளாக இப்போது வந்துள்ளனர்.4 அவர்களில் 1,284 பேர் ஆண்கள், 1,160 பேர் பெண்கள்; ஆண் குழந்தைகள் 470, பெண் குழந்தைகள் 435 பேர். அகதிகளாக வரும்போது கடலில் படகு கவிழ்ந்து 5 பேர் இறந்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் அகதிகளின் நிலை

ஐ.நா. சபையின் 1951 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் (Convention and Protocol) இந்தியா கையெழுத்திடாத காரணத்தால், உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் இங்குக் கொடுக்கப்படவில்லை. 1996ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம், அகதிகளுக்கு உயிர் மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அகதிகளின் விருப்பத்துக்கு எதிராக அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என உச்சநீதி மன்றம் கூறியுள்ளபோதிலும் தமிழ் அகதிகள் பலர் கட்டாயப்படுத்தித் திருப்பி அனுப்பப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதுபோலவே தமிழ் அகதிகள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையே உள்ளது. பூடான் நாட்டைச் சேர்ந்த அகதிகளை எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ள இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது.

ஈழத் தமிழ் அகதிகளிடையே சென்று பணியாற்றுவதற்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தன. 1992 ஜூன் மாதத்துக்குப் பிறகு "பாதுகாப்பு காரணங்கள்" எனக் கூறித் தொண்டு நிறுவனங்கள் தடுக்கப்பட்டன. UNHCR அலுவலர்களைக் கூடச் சட்டபூர்வமாக அகதி முகாம்களில் அனுமதிப்பதில்லை5.

அகதிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவிகள்

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் ஒவ்வொருவருக்கும் பணம் மற்றும் பிற உதவிகள் அரசால் வழங்கப்படுகின்றன. மாநில அரசு இவற்றை வழங்கி விட்டு அந்தச் செலவுத் தொகை முழுவதையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. எனவே மாநில அரசுக்கு இதில் செலவு எதுவும் கிடையாது.

குடும்பத்தின் தலைவர்/தலைவிக்கு மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாயும், வயது வந்த உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 144 ரூபாயும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முதல் குழந்தைக்கு 90 ரூபாயும், பிற குழந்தைகளுக்கு 45 ரூபாயும் பணக் கொடை (cash dole) வழங்கப்படுகிறது. இது தவிர எட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 400 கிராம் வீதமும், அதற்குக் கீழே வயதுள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் வீதமும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி ஒரு கிலோ 57 பைசா விலையில் வழங்கப்படுகிறது.

பணம், அரிசி ஆகியவை தவிர ஆண்டுக்கு ஒருமுறை உடை மற்றும் பாய், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு போர்வை ஆகியவை தரப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுக்குச் சமையல் பாத்திரங்கள் கொடுக்கப்படுகின்றன6.

அகதி முகாம்களைப் பார்வையிட்ட விவரம்

அகதி முகாமென்றால் மண்டபம் முகாம் மட்டுமே எல்லோரது நினைவுக்கும் வருகிறது. 1990 முதல் இங்கே வந்து பல்வேறு முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளது நிலையே அதிகம் கவனிக்கப்பட வேண்டியது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய நான்கு ஊர்களில் மொத்தம் 1,182 பேர் முகாம்களில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமில் பதிவுபெற்ற அகதிகள் 949 பேரும் பதிவுக்காக விண்ணப்பித்து இதுவரை பதிவு கிடைக்காத அகதிகள் 325 பேரும் உள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் முகாமை 15.06.2006 மற்றும் 24.06.2006 தேதிகளிலும், குறிஞ்சிப்பாடி முகாமை 19.06.2006 மற்றும் 24.06.2006 ஆகிய தேதிகளிலும், அம்பலவாணன் பேட்டை, விருத்தாசலம் முகாம்களை 19.06.2006ஆம் தேதியும், கீழ்புத்துப்பட்டு முகாமை 16.06.2006 ஆம் தேதியும், மண்டபம் முகாமை 25.06.2006ஆம் தேதியும் பார்வையிட்டோ ம். முகாம்களிலுள்ள அகதிகளை விசாரித்துப் பொதுவான பிரச்சினைகளையும், அந்தந்த முகாமிலுள்ள குறிப்பான பிரச்சினைகளையும் கேட்டறிந்தோம். நாங்கள் பார்வையிட்டதிலேயே காட்டுமன்னார்கோயில் முகாம்தான் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது.

அகதி முகாம்களின் அவல நிலை

அ. குடியிருப்புகள்

தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் மண்டபம் மற்றும் கொட்டப்பட்டு (திருச்சி) முகாம்களில் மட்டும்தான் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற முகாம்கள் யாவும் தற்காலிக வீடுகளால் ஆனவையே. மண்டபத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டதன் பின்னணி சுவாரசியமானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனத் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானவர்களை அழைத்துச் சென்றனர். அவர்களைப் பரிசோதித்து அனுப்புவதற்கென்று (quarantine) கட்டப்பட்டதுதான் மண்டபம் முகாம். 1917இல் இலங்கை அரசாங்கம் 107 பிளாக்குகள் கொண்ட 304 குடியிருப்புகளை அங்கே கட்டியது. 235.5 ஏக்கர் நிலப் பரப்பில் (சர்வே எண்: 430/1) அமைந்துள்ள அந்த முகாமை 1965ஆம் ஆண்டில்தான் இலங்கையிடமிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கியது. (வருவாய்த் துறை அரசாணை எண்: SMS 2725 dated 23.9.1965) பத்தொன்பது லட்சம் ரூபாயை அப்போது விலையாகத் தமிழக அரசு இலங்கை அரசாங்கத்துக்குச் செலுத்தியது. சிறீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்துக்குத் திரும்பிய மலையகத் தமிழர்கள் தங்கிச் செல்லும் முகாமாக (transit camp) மண்டபம் முகாம் செயல்பட்டது. 1983க்குப் பிறகுதான் தமிழ் அகதிகளுக்கான முகாமாக அது மாற்றப்பட்டது. கொட்டப்பட்டு முகாமும் தாயகம் திரும்பியோருக்கென (repatriates) கட்டப்பட்டதுதான்.

மண்டபம் முகாமில் மொத்தம் 1955 வீடுகள் உள்ளன. அவற்றில் 92 வீடுகள் பழுதடைந்துள்ளன. மீதமுள்ள 1863 வீடுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளன.

காட்டுமன்னார்கோயில் முகாம் ஒரு தானியக் கிடங்கில் அமைக்கப்பட்டிருப்பதால் வீடு எனக் கூறிக்கொள்ள அங்கு எதுவுமில்லை. அம்பலவாணன்பேட்டை முகாமில் 79 குடும்பங்கள் உள்ளன. அவை குடியிருப்பது சிதைந்த கூரைகளைக் கொண்ட மண் குடிசைகளில். குறிஞ்சிப்பாடி முகாமில் 126 வீடுகள் உள்ளன. அவை கூரைகள் சிதைந்து மோசமாகக் காணப்படுகின்றன. விருத்தாசலம் முகாமில் 60 வீடுகள் உள்ளன.

எல்லா முகாம்களிலும் கூரைகள் சிதைந்து மிகவும் மோசமான நிலையில்தான் வீடுகள் உள்ளன. எல்லாவற்றிலும் கேடான நிலையில் காட்டுமன்னார்கோயில் முகாமில் பிளாஸ்டிக் சாக்குகளைக் கொண்டுதான் வீடுகள் போன்ற தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் ஒழுகுவதாலும் வெயில் காலத்தில் தாங்க முடியாத வெக்கையின் காரணத்தினாலும் வீடுகளுக்குள் மனிதர்கள் தங்க முடியாத நிலையே உள்ளது.

ஆ. கழிப்பிடங்கள்

பெரும்பாலான முகாம்களில் கழிப்பிட வசதி சரியாக இல்லை. இதனால் பெண்கள் சொல்லவொண்ணா அவதிக்கு ஆளாகின்றனர். மண்டபம் முகாமில் மொத்தம் 1,013 கழிப்பறைகள் பழுதடைந்துள்ளன. 182 கழிப்பறைகள் மட்டும்தான் பயன்படுத்தக்கூடியனவாக உள்ளன. அம்பலவாணன்பேட்டை முகாமில் 17 கழிப்பறைகளில் 10 மட்டுமே பயன்படுத்தத் தகுதியானவையாக உள்ளன. குறிஞ்சிப்பாடி முகாமில் உள்ள 28 கழிப்பறைகளில் 20 பயன்பாட்டில் உள்ளன. விருத்தாசலம் முகாமில் 12 கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் அவை பழு தடைந்து கிடக்கின்றன. கீழ்புத்துப்பட்டில் 26 கழிப்பறைகள் இருந்தும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை.

இ. குடிநீர்

நான் பார்வையிட்ட முகாம்களில் காட்டுமன்னார் கோயில் தவிர பிற முகாம்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை. காட்டுமன்னார்கோயிலில் மாவட்ட ஆட்சியரின் தலையீட்டால் தற்போது அவசரமாகக் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. மண்டபம் முகாமில் 434 குடிநீர்க் குழாய்கள் உள்ளன. அவற்றில் 284 குழாய்கள் பழுதடைந்துள்ளன. முகாமுக்குள் 73 கிணறுகள் உள்ளன. அவை நான்கு தாய்க் கிணறுகளோடு இணைக்கப்பட்டு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. அம்பலவாணன் பேட்டை முகாமில் பஞ்சாயத்துக் குடிநீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் தரப்படுகிறது. குறிஞ்சிப்பாடி முகாமிலும் இரண்டு பம்ப்புகள் பழுது நீக்கப்பட வேண்டும். விருத்தாசலத்தில் முனிசிபாலிட்டியிலிருந்து தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

ஈ. மின்சாரம்

முகாம்கள் எல்லாவற்றிலும் மின்சார வசதியென்பது மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை மின்சார 'சப்ளை' நிறுத்திவைக்கப்பட்டு, பொழுதுசாயும் நேரத்தில்தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு நாளொன்றுக்கு ஒரு யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு உள்ளது. முகாமில் உள்ள வீடுகளுக்கு ஒரே மீட்டர் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் அதிகபட்ச யூனிட் தொகையைக் கட்ட வேண்டியுள்ளது. நாலைந்து மீட்டர்கள் மூலம் விநியோகித்தால் செலவு குறையும். தனி மீட்டர் பொருத்திக்கொள்ளும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அதற்குச் செலவிடப் பணமில்லாத காரணத்தால் தனி மீட்டர்கள் பொருத்தப்படவில்லை. முகாம்களில் மின்விசிறி, மிக்ஸி போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் மின்சாரம் நிறுத்தப்படுவதால் கைக்குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றன.

உ. கல்வி

அகதிக் குழந்தைகளின் படிப்புக்காகக் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவர்கள் படித்த பள்ளிகளிலிருந்து இடமாற்றச் சான்றிதழ் (transfer certificate) பெற்று வரவில்லையென்றாலும்கூட அகதிக் குழந்தைகள் தமது படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக அந்தந்த வகுப்புகளிலேயே சேர்ந்து படிக்க வகைசெய்யப்பட்டுள்ளது. சீருடை, நோட்டுப் புத்தகங்கள், சத்துணவு, இலவச பஸ் பாஸ் முதலானவையும் அகதிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் கட்டணங்களில் எந்தச் சலுகையுமில்லை. பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிகளுக்குச் செல்லும்போது கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது.

தொழிற்கல்வியில் அகதி மாணவர்களுக்குச் சில இடங்கள் முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த வசதியைப் பயன்படுத்தி மருத்துவம், பொறியியல் கல்வியை அவர்களில் பலர் பெற்றனர். இப்போது அந்த ஒதுக்கீடு இல்லாததால் அகதி மாணவர்கள் தொழிற்கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊ. வேலை வாய்ப்பு

அரசு கொடுக்கும் பண உதவியைக் கொண்டு அகதிகள் வாழ்க்கை நடத்த முடியாது என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்கின்றனர். முகாமை விட்டு வௌதயூருக்குச் செல்ல வேண்டுமென்றால் வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். எனவே, அவர்கள் உள்ளூரிலேயே வேலை தேட வேண்டியுள்ளது. வேறு இடத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படாததால் தினக்கூலி வேலை மட்டுமே செய்ய முடிகிறது. ஆகையால் பெரும்பாலும் கட்டுமானத் தொழிலில்தான் அவர்கள் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள்கூடக் கட்டட வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. தனியார் நிறுவனங்கள் அகதிகளைச் சந்தேகத்தோடு பார்த்து வேலைதர மறுக்கின்றன.

சுயதொழில் செய்வதற்கான உரிமங்களைப் பெறுவதிலும் அவர்களுக்குச் சிரமங்கள் உள்ளன. அதிகபட்சம் மீன் வியாபாரம், ஐஸ் வியாபாரம், காய்கறி வியாபாரம் எனத் தெருக்களில் சென்று வியாபாரம் செய்கிற (street vendors) நிலையில்தான் அவர்கள் உள்ளனர். ஒப்பீட்டளவில் பெண்கள் குறைவாகத்தான் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களும்கூடச் சித்தாள் வேலையில்தான் ஈடுபட முடிகிறது. பெண்களுக்குக் கைத்தொழில் பயிற்சி ஏதும் இல்லாததால் அவர்கள் வேலை செய்ய விரும்பினாலும் இயலாத நிலை உள்ளது.

சில முகாம்களில் ஓட்டுனர் பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்ளனர். தொடக்க காலத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் சிக்கல் இல்லை. தற்போது உரிமம் பெற முடிவதில்லை. உரிமம் பெற்ற சில இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர்.

பதிவு நீக்கம் என்னும் தண்டனை

தமிழ்நாட்டுக்குள் நுழையும்போதே அகதிகள் பதிவுசெய்துகொண்டாக வேண்டும். முகாம்களில் அவர்களுக்குக் குடும்ப அட்டையும் அகதிகளுக்கான அடையாள அட்டை ஒன்றும் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில்தான் உதவித் தொகை. ரேஷன் வினியோகம் போன்றவை நடக்கின்றன. ஒரு முகாமில் தொடர்ச்சியாகச் சில நாட்களுக்கு இல்லாவிட்டாலோ அனுமதி பெறாமல் வேறு முகாமுக்குச் சென்றாலோ அவரது பெயர் பதிவிலிருந்து நீக்கப்படும். பதிவு இல்லாது போனால் அவருக்கு அகதி என்ற அடையாளம் பறிபோய்விடும். அதன்பின் அவர் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அயல் நாட்டவராகிவிடுகிறார்.

பெண்கள் திருமணமாகி வேறு முகாம்களுக்குப் போகும்போது, அவர்கள் முன்பிருந்த முகாம்களில் பதிவு நீக்கப்படுகிறது. ஆனால் புதிதாகச் சென்ற முகாம்களில் அவ்வளவு எளிதாகப் பதிவுபெற முடிவதில்லை. பதிவுக்காக விண்ணப்பித்துப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. கீழ்புத்துப்பட்டு முகாமில் உள்ள பதிவு பெற்ற குடும்பங்கள் 263, பதிவில்லாத குடும்பங்கள் 102. பதிவு பெற்ற நபர்கள் 949, பதிவுக்கு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்காத நபர்கள் 325.

பதிவு நீக்கம் என்பது அகதிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவும் உள்ளது. உரிமைகளைக் கேட்பது உட்பட ஒருவர் எதைச் செய்தாலும் அது குற்றம்தான். அதற்குத் தண்டனை பதிவு நீக்கம். கணவனால் கைவிடப்பட்டு மீண்டும் தனது பெற்றோர் இருக்கும் முகாமுக்கு வருகிற பெண்ணுக்குப் பதிவு கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன. தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் சுமார் முப்பதாயிரம்பேருக்குப் பதிவு இல்லை என்கிறார் OFERR என்னும் தொண்டு நிறுவனத்தின் திரு. சந்திரஹாசன்7.

பிற முகாம்களில் உள்ள உறவினர்கள் இறந்துவிட்டால் கூட வட்டாட்சியர் அனுமதி பெற்ற பிறகுதான் செல்ல வேண்டும். வட்டாட்சியரைப் பார்த்து அனுமதி பெறுவது எளிதான காரியமல்ல. ஏற்கனவே பணிச் சுமைகளால் நசுங்கிக்கொண்டிருக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அகதிகள் பிரச்சினையைக் கையாளுவது தேவையற்ற கூடுதல் சுமையாகவே தெரிகிறது. வட்டாட்சியர் தலைமை நிலையத்தில் இல்லாதுபோனாலோ அவர் விடுப்பில் இருந்தாலோ அகதிகள் அனுமதி பெறுவது மேலும் சிக்கலாகிவிடும். குறைந்தது இரண்டு, மூன்று நாட்களாவது இதற்கு ஆகிறது. எனவே இறப்பு முதலான நிகழ்ச்சிகளுக்கும்கூட உரிய காலத்தில் போக முடிவதில்லை.

பதிவு நீக்கப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மணமாகி வேறு முகாமுக்குப் போகும் பெண்ணின் பெயர் அவர் இருந்த முகாமில் உடனடியாக நீக்கப்படுகிறது. ஆனால், அவர் சென்றுசேரும் புதிய முகாமில் எளிதில் பெயரைச் சேர்க்க முடிவதில்லை. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்கெனப் பெற்றோர் இருக்கும் முகாமுக்கு வந்தாலோ அல்லது மகளின் பிரசவ காலத்தில் உடனிருப்பதற்காகத் தாயானவர் வேறு முகாமுக்குச் சென்றாலோ அவர்களது பெயர்கள் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டுவிடும். மீண்டும் அவர்கள் பதிவு பெறுவது அவ்வளவு சுலபமல்ல.

'பதிவு நீக்கம்' என்னும் அச்சுறுத்தல் காரணமாகப் படித்த இளைஞர்கள் தனியார் கம்பெனிகளில் வேலை தேட முடியவில்லை. வெளியூர் சென்று வேலை பார்ப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக அகதிகளுக்கு உள்ளது. இதனால் பட்டப்படிப்பு முடித்தவர்கள்கூடக் கட்டட வேலைக்குக் கூலிகளாகச் செல்ல வேண்டியுள்ளது. பதிவுக்காக விண்ணப்பித்துப் பல ஆண்டுகளாகியும் கிடைக்காத பலர் முகாம்களில் உள்ளனர்.

அனாதரவான முதியோர்

தங்கள் நாட்டிலிருந்து வரும்போதே உறவினர்களின்றித் தனியாக வந்த ஆண்/பெண், இங்கு வந்தபின்தம் உறவினர்கள் இறந்துபோனதால் தனித்துவிடப்பட்ட ஆண்/பெண் நிலை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் கூலி வேலைக்குச் செல்லக்கூடிய உடல் வாகு உள்ளவர்களாக இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் அவர்களது நிலை மிகவும் மோசமாகிவிடும். தங்களுக்குத் தரப்படும் பணக்கொடை மற்றும் ரேஷன் அரிசியைக் கொண்டு அவர்கள் சாவை ஒத்திப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி அகதிகளிலும் அகதிகளாக ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது பத்து விழுக்காட்டினர் உள்ளனர்.

உடல் ஊனமுற்றோர்

அனாதரவானவர்களைப் போலவே ஒவ்வொரு முகாமிலும் உடல் ஊனமுற்றோரும் கணிசமாக உள்ளனர். அகதிகளின் உணவில் ஊட்டச் சத்து இல்லாதிருப்பது இதற்கு முக்கியக் காரணமாகும். மானிய விலையில் அரிசி மட்டுமே கொடுக்கப்படுகிறது. பருப்பு வகைகளும் கொடுக்கப்படுமேயானால் உதவியாக இருக்கும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்துள்ள உணவு வழங்குவதற்கு வகை செய்யப்பட வேண்டும். அதுபோலவே பால் கொடுக்கும் தாய்மார்களின் ஆரோக்கியமும் பிறந்த குழந்தையின் நலனும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் முகாம்களை அணுகுவதற்குத் தடையில்லாத நாட்களில் ஊட்டச் சத்து உணவு வழங்கும் பணியைச் சில நிறுவனங்கள் செய்துவந்துள்ளன. OFERR தொண்டு நிறுவனம் மாலை நேரங்களில் முகாம்களில் நடக்கும் போதனா மையங்களுக்கு வரும் பிள்ளைகளுக்குப் பால், அவித்த பயறு முதலியவற்றை வழங்கிவந்துள்ளது. அதுவும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது.8 இப்படியான காரணங்களால் குழந்தைகள் பிறவி ஊனத்தோடு காணப்படுகின்றனர். ஊமை, குருடு, முடம் முதலான ஊனங்கள் அவர்களைப் பாதித்துள்ளன. ஊனத்தைத் தடுப்பதற்காக ஊட்டச் சத்து மிக்க உணவைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிப்பது, தற்போது முகாம்களிலுள்ள ஊனமுற்ற பிள்ளைகளுக்கும் தனிக் கவனம் எடுத்துக்கொண்டு அவர்களது கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு வழிசெய்வது என இருவிதமான நடவடிக்கைகள் இதில் தேவைப்படுகின்றன. பொதுவான விகிதத்தைவிடக் கூடுதலான விகிதத்தில் ஊனமுற்றோர் காணப்படுவது கவலைக்குரியதாகும்.

கலப்பு மணம்

வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதைத்தான் நாம் கலப்பு மணம் என்று கூறுவோம். ஒரு அகதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்துகொள்வதையும்கூட நாம் கலப்பு மணம் என்றே குறிப்பிடலாம்.

அகதி முகாமிலுள்ள ஓர் ஆண் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாலும் அகதியாக உள்ள ஒரு பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆணைத் திருமணம் செய்துகொண்டாலும் அவர்கள் அகதி முகாம்களில்தான் பெரும்பாலும் குடும்பம் நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் பதிவு கிடையாது.

ஒரு குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் அந்தக் குழந்தையை அகதியாகக் கருத முடியாது எனச் சட்டமிருப்பதால் இந்த நிலை உள்ளது. ஒரு இந்தியக் குடிமகனைத் திருமணம் &